Story

யாரந்தச் சிறுமி ? சிறுகதை – வே. சங்கர்

Spread the love

யாரந்தச் சிறுமி ?

  வே.சங்கர்

எந்த ஊருக்குச் சென்றாலும் பேருந்தில் ஏறுவதற்கு முன்பாக வழியில் தென்படும் ஏதாவது ஒரு பாதையோரப் பழைய புத்தகக்கடையில் ஒரு புத்தகத்தையாவது பேரம் பேசி வாங்கி, பயணத்தின் போதோ அல்லது பயண நேரத்திற்குக் காத்திருக்கும்போதோ வாசித்துவிடுவதை ஒரு கொள்கையாகவே வைத்திருக்கிறேன்.

இன்றும் அப்படித்தான்`  ஒரு பழைய புத்தகக் கடையில் ஒரு புத்தகத்தை எடுத்துப் பிரித்துப் பார்ப்பதற்கு முன்னதாகவே நான் செல்லவேண்டிய பேருந்து  நூறடி தூரத்தில் வந்துகொண்டிருப்பது தெரிந்தது. கடைக்காரரும் ஏதோ ஒரு தொகையைத் தோராயமாகச் சொன்னார். நானும் பேரம் பேச நேரமில்லாததால் அவசரமாகப் பணத்தைக் கொடுத்துவிட்டு ஊர்ந்து வந்துகொண்டிருந்த பேருந்தில் தாவி ஏறித் தொற்றிக்கொண்டேன்.

உட்கார இடம் தேடியதில் மூவர் அமரும் சீட்டில் ஒரு இருக்கை காலியாய் இருந்தது.  அதை நோக்கி நகர்ந்தேன், ஒரத்தில் உட்கார்ந்திருந்தவர் என்மேல் கருணை காட்டுவதுபோல் தன் உடலை ஓருவழியாய் ஒருக்களித்து எனக்கு நடு மைய இருக்கையைத் தாரைவார்த்தார்.  இத்தனையும் ஒரு வார்த்தைகூட பேச்சில்லாமல் நடந்துமுடிந்திருந்தது.

நன்றி சொல்ல நான் சினேகமாய் சிரித்தாலும் அதை அவர் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை.  குலுங்கிக் குலுங்கி நெளிந்து சென்ற பேருந்தின் பின் இருக்கையிலிருந்து பேருந்தின் ஆட்டத்திற்கேற்ப சாவகாசமாய் நடந்து வந்த பேருந்து நடத்துனர் நான் செல்லவேண்டிய இடத்தைச் சொன்னதும் எச்சில் தொட்டு டிக்கெட்டைக்  கிழித்துக் கொடுத்துவிட்டுச் சென்றார்.  அவருக்கு இந்த பேருந்து எழுப்பும் லொடலொட சத்தமும்,  குலுங்கல்களும் ஒரு பெரிய பொருட்டே இல்லை போலும்.

அப்போதுதான் கவனித்தேன். நான் கையில் வைத்திருந்த புத்தகத்தில் இருந்து துருத்திக் கொண்டிருந்த ஒரு பழுப்பேறிய காகிதத்தை.  ஏதோ ஒரு பள்ளிக்கூட மாணவனின் பரிட்சைப் பேப்பரைப் போல் இருந்தது.  என்னவாய் இருக்கும் என்ற ஆர்வம் இல்லாவிட்டாலும் அலட்சியப்படுத்தாமல் அந்தக் காகிதத்தைப் பிரித்தேன்.

பெயர் முகவரி எதுவும் இல்லை.  நாள் கிழமை என்று ஏதேனும் இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை.  இது யாருக்காவது எழுதப்பட்ட கடிதமா? அல்லது வேறு ஏதாவதா? என்றும் தெரியவில்லை. ஆனால் அது இப்படித்தான் தொடங்கியிருந்தது.

பள்ளி அளவிலான கட்டுரைப் போட்டிக்கு ‘உனக்குப் பிடித்த பெண்மணி (அரசியல்வாதி தவிர்த்து)’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதச் சொல்லியிருந்தீர்கள்.   என் பெயர் மதிவதனா. நான் ஏழாம் வகுப்புப் படிக்கிறேன்.   சுமாராய்த்தான் படிப்பேன். ஆனால் பெயில் ஆனதில்லை. எனக்குப் பிடித்த பெண்மணி என்றால் அது ”என் அக்காதான்”. அவள்தான் என் உயிர். அவள்தான் என் உலகம்.  அவள் என்னைவிட ஐந்தாறு வயதாவது மூத்திருக்க வேண்டும்.   அவள்   எல்லாவற்றிற்கும் சிரித்துக் கொள்வாள். ஏன் என்று கேட்டால் சொல்லமாட்டாள்.

ஆண்கள் அணியும் அழுக்கேறிய ‘டி-சர்ட்’ம் கணுக்கால் தெரியும்படியான பூப்போட்ட பாவாடையும்தான் அவளது அடையாளம்.  அவளை யாரும் முழுப்பெயர் சொல்லி அழைப்பதில்லை. உண்மையைச் சொன்னால் பலருக்கும் அவள் பெயர் சொல்ல வராது. ’ஏய்.. எலவு’ என்றுதான் அழைக்கிறார்கள். ஆனால், ’அவள் பெயர் இளவழகி’ அவள் பெயர் மறந்துவிடக் கூடாது என்பதற்காகவே   அவளின்  முழுப் பெயரைச் சொல்லி நான் மட்டும் அழைக்கிறேன்.

என் அம்மா நோயில் இறந்துவிட்டதாகவும், எங்கள் இருவரையும் சிறுவயதாக இருக்கும்போது விட்டுவிட்டு என் அப்பா வேறு யாரோ ஒரு பெண்ணோடு ஓடி விட்டதாகவும் அவள் சொல்லித்தான் எனக்குத் தெரியும்.  நாங்கள் இருவரும் சிறு வயதில் சிறகடித்துப் பறந்ததைவிட பசியிலும் பட்டினியிலும் வாடி வதங்கியதுதான் அதிகம்.  முன்பெல்லாம் பசி வந்தால் எனக்கு அழுகை வரும். இப்பொதெல்லாம் வருவதில்லை. பழகிவிட்டது.

அனைவருக்கும் இருப்பதுபோல், எங்களுக்கு உறவு என சொல்லிக்கொண்டு யாரேனும் இருந்திருப்பார்கள்தானே? அவர்கள் எல்லாம் எப்படி மாயமாகிப் போனார்கள் என்பது அதிசயமாய் இருக்கிறது.

இப்பொழுதுகூட நான் என் அக்கா இளவழகிக்காகத்தான் காத்திருக்கிறேன்.  பசி வயிற்றைக் கிள்ளுகிறது. இப்பொழுது காலை ஒன்பது முப்பது நேற்று மதியம் பள்ளிக்கூட சத்துணவு சாப்பிட்டது.  நேற்று இரவு எதுவும் சாப்பிடவில்லை.  அவளும்தான். ஆனால் அவள் வாய் திறந்து சொல்லமாட்டாள்.

தினசரி ஏதேனும் ஒரு அடுக்குமாடி வீட்டில் வாசல் கழுவிச் சுத்தம் செய்யும் வேலைக்குச் செல்வாள்.  கூலியாக அவளுக்குத் தரும் முதல் நாள் மீந்து போன உணவையோ அல்லது வேறெதாவதையோ  எனக்குக் கொண்டு வந்து தந்துவிட்டு மீண்டும் வேலைசெய்யச் சென்றுவிடுவாள்.  ஒரு சில வீடுகளில் அந்தப் பழையசோறும்  இல்லையென்று சொல்லிவிடுவார்கள்.  அதற்குப் பதிலாக அவர்கள் வீட்டுக் குழந்தைகளுக்குப் பத்தாமல் போன துணிமணிகளைக் கொடுப்பார்கள். ஒருசிலர் வீட்டுவாசல் கூட்டவோ கழுவிவிடவோ தேவையில்லை என்று சொல்லிவிடுவார்கள்.  அப்போதெல்லாம். பட்டினிதான்.  அவளுக்கு அதைத் தவிர வெறெந்த வேலையும் தெரியாது.

உங்களுக்கு ஒன்று தெரியுமா? மற்றவர்கள் வீட்டில் இருப்பது போல் எங்கள் வீட்டில் கேஸ் அடுப்போ, ஸ்டவ் அடுப்போ  கிடையாது.  எப்போதேனும் பனம் பழமோ, குச்சிக் கிழங்கோ கிடைத்தால் கற்களில் அடுப்புகூட்டி தீ மூட்டி சுட்டு ஆசைதீரத் தின்போம். அன்று மட்டும் ஆனந்தமாய் தூங்குவோம். எதற்கும் கலங்காதவள். ஒரு முறை நான் கீழே விழுந்து முழங்காலில் அடிபட்டு வீங்கிய போது என்ன செய்வதென்று தெரியாமல் கைகளால் மண்ணைக் கொளித்து பூசினாள். நான் தூங்கும் வரை என் அருகிலேயே இருந்தாள். அன்று முழுவதும் நான் அழுதுகொண்டே இருந்ததாகச் சொல்வாள்.

மற்றவர்கள்தான் சொல்கிறார்கள் அவளுக்கு புத்தி சுவாதின குறைவு என்று.  ஆனால் எனக்குத் தெரியும் அவள் அப்படியில்லை..  அதிகம் பேசமாட்டாளே ஒழிய மற்ற எல்லா விபரங்களும் தெரியும்.  என் மேல் அவளுக்கு அத்தனை பாசம்.  எப்போதேனும் நானும் வீட்டு வேலை செய்ய வருகிறேன்   என்று சொன்னால் விடவே மாட்டாள்.  ’நீ நல்லா படி’ என்பாள். நானும் கஷ்டப்பட்டு படித்து முதல் மதிப்பெண் பெறவேண்டும் என நினைப்பேன்.  கடைசியில் ஜஸ்ட் பாஸ்தான் ஆகிறேன்.  ஏனென்று தெரியவில்லை. அதற்காக எனக்குப் படிக்கவே தெரியாது என நினைத்துவிட வேண்டாம்.

என் உடன் பயிலும் மாணவிகள்தான் அவள் வந்ததும் ஒருவருக்கொருவர் காதுகளுக்குள் கிசுகிசுத்துக் கொள்வார்கள்.  ஆனாலும் அவர்கள் நல்லவர்கள்தான்.  கடைகளில் ஏதேனும் வாங்கிச்சாப்பிட்டால் எனக்கும் கொஞ்சம் கொடுப்பார்கள்.

ஒருமுறை என் அக்கா கொண்டுவந்த உணவுப் பாத்திரத்தைத் திறந்தபோது சுற்றுப்புறமே ’குப்’ என்று கெட்ட நாற்றம் அடித்தது.  அதற்காக அதைக் கீழே கொட்டிவிடமுடியாது. முதல்நாள் மதியம் பள்ளிக்கூடச் சத்துணவு சாப்பிட்டது. பசி காதை அடைத்தது. மற்றவர்களின் ஏளனப்பார்வைகூட பழகிவிட்டது.  பசியோடு சேர்த்து  கண்ணீரையும்  முழுங்கிவிடுவேன். அத்தனையும் பழகியிருக்கிறேன். இது என் அக்காவிற்குச் சொன்னால் புரியாது.

என் கண்ணீர் என் கன்னத்தில் வழிந்தோடிய தாரை இருப்பதாக என்னுடன் பயில்பவர்கள் சொல்கிறார்கள்.  ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக சிரிக்கக்கூடப் பழகிவிட்டேன். ஆனாலும் கண்களில் கண்ணீர் தழும்புவது இயல்புதானே!

இக்கட்டுரைமூலம் நான் தெரியப் படுத்துவது ஒன்றே ஒன்றுதான்.  நான் சீக்கிரமாய் படித்து முடித்து நல்ல வேலைக்குப் போகவேண்டும்.  நிறைய சம்பாதிக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை. ஓரளவுக்காவது சம்பதிக்க வேண்டும். முதல் சம்பளத்தில் ஒரு ஸ்டவ் அடுப்பு வாங்கி எல்லோரையும் போல் சமைக்க வேண்டும்.  என் வாழ்நாள் முழுவது என் அக்காவை ( அழுகையை அடக்க முடியவில்லை) நன்றாகக் கவனித்துக் கொள்ளவேண்டும். தினசரி நல்ல சோறு  போடவேண்டும். அதுவும் சூடாய். அவள் சுடச்சுட சோறு சாப்பிட்டு எத்தனை நாளாகிறது என்று எனக்குத் தெரியவில்லை. அவள்தான் எனக்கு எல்லாமே.  அவள்தான் என் உயிர். அவள்தான் என் உலகம்.

இது  கட்டுரையா அல்லது கடிதமா என்று எனக்குத் தெரியாது. ஆனால், முடிந்தளவு முயன்றிருக்கிறேன்.  தவறாய் இருப்பின் மற்றவர்கள் முன்னிலையில் என்னைக் காட்டி பரிதாபத்தைத் தேடித்தந்துவிட வேண்டாம். உங்களைக் கையெடுத்துக் கும்பிடுகிறேன்.  எனக்குப் பிடித்த பெண்மணி(அரசியல்வாதி தவிர்த்து) என் அக்கா இளவழகி மட்டும்தான்.

ஆங்காங்கே எழுத்துப் பிழைகளுடனும், நுணுக்கி நுணுக்கி எழுதிய வாசங்களுடனும். தொக்கி நிற்கும் வார்த்தைகளுடனும் முடிந்துபோயிருந்தது அந்தக் காகிதம். இதையனைத்தையும் ஒரே மூச்சில் வாசித்து முடித்திருந்தேன்.  இடையிடையே என்னையறியாமல் வழிந்தோடிய கண்ணீரைத் துடைத்துக் கொண்டேன்.  ஏனோ இதயம் வாய் வழியே வந்து விடும்போல் இருந்தது.  இனம் புரியாமல் வயிற்றுக்குள் அமிலம் சுரந்து மேலெழும்பி தொண்டையைக் கவ்விப் பிடித்தது.  இதை எழுதிய அந்தச் சிறுமியைக் கட்டிக் கொண்டு ‘ஓ…வென’ அழவேண்டும்போல் இருந்தது.  உனக்காக நான் இருக்கிறேன் என்று உரக்கக் கத்திக்கொண்டு ஓடவேண்டும் போல் இருந்தது.

யாரந்தச் சிறுமி?. அந்த முகம் தெரியாத சிறுமி என்னுள் சொற்களால் விளக்கிச் சொல்ல முடியாதபடி பாதித்துவிட்டாள்.  கண்மூடும் போதெல்லாம், கையெடுத்துக் கும்பிட்டகோலத்தில் பரிதாபமாக நிற்பது போலவே தோன்றியது.  இந்தக் கட்டுரைப் போட்டியை நடத்தியவர்கள் இதைப் படித்திருக்க வேண்டுமே என்று என் மனம் துடியாய்த் துடித்தது. என் கையறு நிலையை யாரிடம் சொல்வது என்று தெரியாமல் தவித்தவண்ணம் இருந்தது.

எந்த சலனமும் இல்லாமல் பேருந்து லொடலொட சத்தத்துடன் போய்க்கொண்டிருந்தது. நிறுத்தங்களில் சிலர் இறங்கிக் கொண்டும் சிலர் ஏறிக்கொண்டும் இருந்தார்கள். எனக்கு அமர இடம்கொடுத்த புண்ணியவான் சுகமாய் என் தோள்மீது சாய்ந்து உறங்கிக் கொண்டிருந்தார்.

                     முற்றும்…

ஆசிரியர் வே. சங்கர் அவர்களைத் தொடர்புக்கொள்ள…

(sankarhirthik@gmail.com)

9 Comments

 1. அருமை! சிறந்த எழுத்தாற்றல்! கண்முன் பரிதாபமாக இளவழகி இடம்பிடித்தாள் அப்படியொரு சொல் வண்ணம்.

 2. அருமையான கதை… தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தைகள் மற்றும் மொழிநடை சூழ்நிலையை கண் முன்னே நிறுத்தி நெஞ்சை பிழிகிறது கண்ணீர் துளிகளுடன்….

 3. படித்தவுடன் மனம் கனத்துப் போனது. ஆசிரியருக்கு எனது வாழ்த்துக்கள்.
  ஆசிரியர், இன்றைய எத்தனேயோ பெண் குழந்தைகள் நிலையினை நம் கண் முன்னே நிறுத்தி இருக்கிறார்.

 4. சிறுமியின் கதை கட்டுரை …நன்றாக சொன்னீங்க.. ஒரு 90s படம் சீன் மாதிரி கற்பனை பண்ண முடிந்தது.

 5. Story is very good. Might be She is God. Excellent story telling phrase and I can feel the story.
  Name which you select is also good. Keep going like this type of story. All the best.

 6. விளிம்பு நிலை மனிதர்களின் பரிதாபத்தை இயல்பான வார்த்தைகளில் வெளிப்படுத்தி உள்ளீர்கள் !!! அழகிய
  இளவழகி என்ற தூய தமிழ்ப் பெயர் எலவு என்றானது சமூக அவலத்தின் உச்சம். மக்களின் வெடு இயல்பான மனநிலையை இந்த வரிகள் நிதர்சனமாய் காட்டுகின்றன. உண்மையில் இது போன்ற சிறுமிகள் நிறைய இருக்கிறார்கள், இப்படிக் கட்டுரை கூட எழுதத் தெரியாமல்.

 7. விளிம்பு நிலை மனிதர்களின் பரிதாபத்தை இயல்பான வார்த்தைகளில் வெளிப்படுத்தி உள்ளீர்கள் !!! அழகிய
  இளவழகி என்ற தூய தமிழ்ப் பெயர் எலவு என்றானது சமூக அவலத்தின் உச்சம். மக்களின் வெடு இயல்பான மனநிலையை இந்த வரிகள் நிதர்சனமாய் காட்டுகின்றன. உண்மையில் இது போன்ற சிறுமிகள் நிறைய இருக்கிறார்கள், இப்படிக் கட்டுரை கூட எழுதத் தெரியாமல்.

Leave a Response

Top Reviews

Video Widget

gallery