Book Review

நூல் அறிமுகம்: “யாசகம்” – வீரசோழன்.க.சாே.திருமாவளவன்.

Spread the love
யாசகம்…!
—————–
திருநவேலியில் வழக்குரைஞராக இருபத்தியேழு ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிவருபவர். ஏழை எளியோருக்கும் நீதியின் பால் வாதாடும் நல்லொழுக்க சீலர் சீனியர் திரு.எம்.எம்.தீன் சார் அவர்கள்…!
வழக்கறிஞராய் பணியாற்றிக்கொண்டே எழுத்தை மூச்சாக்கியவர். எழுத்தோடு உலாவரும் கதை உற்சவர். யாசகம் எனும் நாவல் எழுதி இருக்கிறார். நாவல்கள் நிறைய படித்திருப்போம். ஆனால் இந்த நாவலின் கதைக்களம் இதில் வரும் மானுடர்கள் நமக்கே ஆச்சர்யமாக.
பிச்சைக்காரர்களின் வாழ்க்கையை சில பெரியவர்கள் பதிவு செய்திருக்கிறார். ஆனால் சீனியர் தீன் சார் பதிவு செய்திருக்கும் யாசகம் எனும் நூல் மொத்தமாக அவர்களின் வாழ்வியலை அகம் புறம் என ஒன்றைவிடாமல் எல்லாவற்றையும் பேசி விட்டுச் செல்கிறது.
யாசகம் புத்தகம் மொத்தம் 38 தலைப்புகளை தாங்கிய மிகப்பெரும் ஆவணம். யாரும் சொல்லாத களம் யாரும் பயணப்படாத வழி என புது முயற்சியோடு வெற்றியடைந்திருக்கிறார்கள்.
யாசகம் தொடங்குவதற்கு முன் கொங்கணச் சித்தர் சட்டை முனிக்கு சொன்ன உபதேசத்துடன் ஆரம்பமாகிறது….
“தாயிடம் பாசப்பிச்சை
தந்தையிடம் அறிவுப் பிச்சை
கருவிடம் ஞானப்பிச்சை
மனைவியிடம் இச்சைப்பிச்சை
பிள்ளைகளிடம் உறவுப்பிச்சை
முதலாளியிஞம் வாழ்வுப்பிச்சை
எல்லோரிடமும் அன்புப் பிச்சை
சாகுகையில் புண்ணியப்பிச்சை
எடுப்பதே வாழ்வின் எச்சை”
“சிந்தாமதார்” எனும் தலைப்பில் தொடங்கி கடைசி தலைப்பான தாழையூற்று வரை நம்மை ஒரு பிச்சைக்காரப் பயணியாக அவர்களோடு பயணமிட வைக்கிறார்கள்.
பிச்சைக்காரர்களுக்கென்ற ஒரு தனி வாழ்வும் மொழியும் இருக்கிறது என்பதை தனது சொல்லாடல்களில் தனது வராகளிலும் அவர்களை ஓவியமாக்கியிருக்கிறார்.
பக்கம் 23 ல் இப்படி பதிவு செய்கிறார்…
“ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஓராயிரம எண்ணங்களும் கவலைகளும் ஒன்றுக்கொன்று எதிர்நீச்சல் போட்டபடிதான் இருக்கின்றன” என்கிறார்.
பிச்சைக்காரர்களின் வாழ்வியலையும் வாழ்ந்த சுவடுகளையும் அவர்களின் மொழியையும் பதிவு செய்கிறது இப்புத்தகம்.பிச்சைக்காரர்களுக்கு சாதி, மதம்,சமுகம் என எதுவுமே இல்லை. அவர்களின் ஒவ்வொரு கிழமையும், ஒவ்வொரு இடத்தில் என்று நிழல் நகர்வதைப்போல நகர்ந்து கொண்டே இருக்கும் என எளிய இதயங்களை பாடம் செய்கிறார்.
என் கிறுக்கல்கள்: யாசகம்
ஒவ்வொரு நாளும் ஒரே இடம் என்று இல்லாமல் நதி வழிப்பயணம் போல எல்லா மக்களையும் எப்படி குளியல் செய்கிறதோ அப்படி எல்லா மதக்கடவுளர்களின் ஆலயம் முன் இவர்களின் யாசகம் தொடர்கிறது என சமத்துவத்துவத்தைப் பற்றி பேசுகிறது இப்புத்தகம்.
இதில் வரும் 8 வது அத்தியாயத்தில் “பத்ரகிரியார்” பற்றியும் பட்டினத்தார் பற்றியும் கூறி துறவறம் என்பது என்ன பிச்சைக்காரன் அதாவது யாசகன் எப்படியானவனாக இருக்க வேண்டும் என்பதை சிறு கதையாடலில் கூறுகிறார்கள்.
ஒரு பிச்சைக்காரனது வாழ்வு என்பது நேற்று இன்று நாளை என்ற ஒன்று இல்லை.  எதிர்காலம் பற்றிய சிந்தனை கிடையாது. ஆனால் மதங்கள் அப்படி விட்டு வைப்பதில்லை என்று நையப்புடைக்கிறார். மதம் என்பதே எப்படி அமையும் என்ற கவலையும், எப்படி வாழப்போறோம் என்ற கவலையும்தான் மதங்களில் நிலைத்திருக்க வைத்திருக்கச் செய்கிறது என்கிறார். ஒரு மனிதன் மதங்களின்பால் தனது வாழ்வை எப்படி அர்ப்பணிக்கிறான் என்பதை விவரிக்கிறார்.
தக்கரை, சோத்துப்பெட்டி, முத்தாச்சி,சூசை, பாத்தும்மா, வள்ளி முத்தாச்சியின் மகன் இவர்கள்தான் கதையின் முக்கிய ஆன்மாக்கள். இவர்களை சுற்றியே நடக்கிறது என்றாலும் குட்டி குட்டி ஆத்மாக்கள் நமது நெஞ்சில் நீங்கா இடத்தை பிடித்து விடுகிறார்கள்.
நாவலினூடே ரயில் நிலையம் அதன் காலை மாலை முகங்களை தன் எழுத்துகளினூடே விவரிக்கிறார். அதிலும் ரயில்நிலையத்தின் பகல் முகம் இரவில் முற்றிலுமாக மாறிவிடுகிறது. அதன் புதிய அமைப்பை காட்டுகிறது என்கிறார். ரயில்நிலையத்து சூழலை சொல்கையில் நாமும் அதனூடே பயணமாகிறோம்.
குளோரிந்தா ஆலயத்திற்கு யாசகம் செல்ல முத்தாச்சி தக்கரை செல்கையில் அதன் வரலாற்றை பேசுகிறது. அந்த ஆலயம் தோன்றிய வரலாற்றை கூறி முக்கியமான கருத்துரையை முன் வைக்கிறது நாவல். முதல் பொதுக்கிணறு அதாவது பாப்பாத்தி கிணறு கொண்டுவரப்பட்டதைப் பேசுகிறது.
பக்கம் 82 ல் முத்தாச்சி தக்கரையின் பின்னால் செல்வதை “மையிருட்டில் அவனுடன் நடந்து போவது ராமனுக்குப் பின்னாடி சீதை நடந்து போவது போல இருந்தது” இப்படி வர்ணனை செய்கிறார். அதன் கதையும் அதைத்தான் பேசுகிறது. அவர்களின் வியர்வை, தட்டு என எதையும் ஒன்றையும் விடாது பேசுகிறது அவரின் வலிமையான  எழுத்துக்குரல்.
ரயிலில் யாசகம் பெறுவோர் ...
பிச்சைக்காரர்களின் ஒவ்வொரு நிமிடமும் அல்லது அடுத்த நேரம் எப்படிப் பட்டது என்று பார்த்தோமேயானால் அவர்களின் ஒரே பெரிய அக்கறை சாப்பாடு பற்றியதுதான். அதுவும் அடுத்த வேளை சாப்பாடு பற்றிய நினைப்புதான் அவர்களின் நினைவில் ஊறிக்கொண்டே இருக்கும். அதுமட்டும் அந்த அக்கறை மட்டும்  இல்லாமல் போனால் அவர்களின் இறப்பு என்பது மிகவும் கொடுமையானதாக இருக்கும் என ஆசிரியர் தெளிவுபடுத்துகிறார்.
சின்ன பாத்திரங்களில்வரும் ஒவ்வொருவரும் நினைவில் நிற்கிறார்கள். எட்டாயிரம் பணத்தை களவாடி பிடுங்கிச் செல்கையில் தக்கரையின் வார்த்தையை நினைவில் வைத்து வந்து பார்க்கையில் கூனிக் குறுகும் சூசை. பாத்தும்மா பிச்சையெடுப்பதை தொழிலாக மாற்றி விடுவாளோ என்ற எண்ணத்தில் பேசும் முத்தாச்சி. பாத்தும்மா அந்த தெருவை அளக்கும்போது ஒவ்வொரு வீட்டிலும் உரிமையாகச் சென்று புடவைகளை வாங்குவதிலும் பணம் பள்ளிச் சிறுவனுக்கு பெரிய இடத்தில் பெறுவதிலும் கண் முன் நிற்கும் பாத்திரமாகிறார்.
முத்தாச்சி தக்கரைக்கும் இடையிலான காதல் மற்றும் முத்தாச்சியின் மகன் தக்கரையை “வாப்பா” என்றழைத்ததும் முத்தாச்சியின் முகமெல்லாம் சிவக்கும் ஆனந்தம். பின் நாம் பிச்சையெடுத்ததுபோதும் என்று தக்கரையிடம் சொல்லி நாம் வேறு ஒரு அற்புத வாழ்வை வாழ்வோம் என்று ஆசுவாசுப்படுத்தி தக்கரையை சம்மதிக்க வைப்பாள். அதை ஏற்று அவனும் நானும் ஏதாவது வேலை தேடுகிறேன் என்றும் சொல்லி அவள் நம்பிக்கையை பெறுகிறான். தக்கரையும் மனசு மாறி வேலை தேட புறப்படுகிறான்.
நடந்து சென்று மண்டபத்தில் உட்காருகையில் ஆயிரம் நினைவலகள் வந்து வந்து செல்கிறது. பிறகு முடிவெடுக்கிறான். இப்படி பிச்சைகாரர்களின் யதார்த்த மனநிலையை வாழ்வை அவர்களின் வாழ்க்கையாகவே பதிவு செய்கிறது நாவல்.
இந்து மதக் கோவில்களையும் அதன் சிற்பங்களையும், கிறிஸ்தவ தேவாலயங்களையும், தர்காக்களையும் என ஒன்று விடாமல் பேசுகிறது. மனிதர்கள் வாழ்வு எப்டிப்பட்டது. அதிலும் இப்படியான பிச்சைக்காரர்கள் வாழ்வு பற்றி சொல்ல சொல்ல நம் கண்கள் விரிகிறது.
ஒரு வழக்கறிஞராக, தனது பணியோடு இப்படியான எளிய மக்களின் வாழ்வியலை அற்புதமாய் பதிவு செய்திருக்கிறார். அவர்களின் வாழ்வியலை வெயிலோடும் படித்துறையோடும் பேசுகிறார். இது முக்கியமாக சமத்துவத்தையும் மனிதத்துவத்தையும் பேசுகிறது. பறவையை, ரயில் நிலையத்து சூழலை, பேரூந்து நிறுத்தங்களை, அஷ்டாங்க யோகத்தை, பார்வையில்லாதவர்களின் வலியை நேரடியாக கண் முன் காட்சியாக  தனது எழுத்துக்களின் வழியே காட்சிப்படுத்துகிறார்..
ஒரு பயணமாக எழுத்தை பரிதவிக்கப்பட்டவருக்கான வாழ்வை படைத்திருக்கிறார்.
நூல் – யாசகம்
ஆசிரியர் – எம்.எம்.தீன்
பதிப்பகம் – ஜீவா
விலை: ரூ.190
வீரசோழன்.க.சாே.திருமாவளவன்.

Leave a Response

Top Reviews

Video Widget

gallery