Book Review

நூல் அறிமுகம்: அழகிய பெரியவன் எழுதிய “யாம் சில அரிசி வேண்டினோம்” – கருப்பு அன்பரசன்

அரசு அலுவலகம் ஒன்றில் எனது நண்பர் ஒருவர் பணிபுரிந்து வருகிறார் அனைவருக்கும் தோழராக.! அலுவலகத்தில் நடைபெறும் எல்லாவிதமான களப் போராட்டங்களிலும், பிரச்சாரங்களை கொண்டு செல்வதிலும்.. தொழிற்சங்கம் வழிகாட்டும் அத்தனை பிரச்சினைகளிலும் முன்நின்று செயல்படக்கூடிய செயல்பாட்டாளர் அவர். தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் தன்னுடைய கருத்துக்களை ஆழமாகவும் காத்திரமாகவும் நையாண்யாகவும் பதிவு செய்து வரக் கூடியவர் அவர். அவருக்கு முகநூலிலும் அலுவலகத்திலும் நண்பராக இருந்து வரக்கூடிய, தீவிர வலதுசாரி  சித்தாந்தத்தின் பால் ஈர்ப்புடைய ஒரு மேலதிகாரி தொடர்ந்து அவரின் பதிவுகளை வாசித்து வருகிறார்.  முகநூலில் பின்னூட்டமாக பதிவிட்டு தன்னுடைய கருத்துக்களை பதிவிடுகிறார். பின்னூட்டத்திலும் எனது நண்பரின் அரசியல் கருத்துக்களுக்கு பதில் கருத்தை மேற்கொள்ள முடியாமல் பின்வாங்க நேர்கிறது தொடர்ச்சியாக. கருத்துக்களை வெற்றிகொள்ள முடியாத அந்த நண்பர் அதிகாரத்தை கை கொள்கிறார் வஞ்சகமாக. தன் கீழ் பணிபுரியும் என்னுடைய நண்பரை தொலைபேசியின் உள்இணைப்பு வழியாக அழைத்து, சமூக வலைதளங்களில் அரசு ஊழியராக இருப்பவர் எப்படி செயல்பட வேண்டும் என்று வழி காட்டுவது போல் மிரட்டத் தொடங்குகிறார். யாரோ ஒருவரின் பதிவிற்கு விருப்ப குறியிட்டதற்காகவும், பதிவினை பகிர்ந்ததற்காகவும் எவரோ ஒருவர் நிர்வாகத்தில் புகார் செய்ய, நிர்வாகத்தால் தான் அழைக்கப்பட்டு எச்சரித்து அனுப்பியதாக ஒரு தகவலை அவருக்கு சொல்கிறார். இதன்மூலம் அவர் யார் என்பதை மறைமுகமாக எச்சரிக்கை விடுக்க, இதை உணர்ந்த எனது நண்பர் பதிலுக்கு அவரிடம் நான் பதியக் கூடிய கருத்துக்களை எவர் நிர்வாகத்திற்கு எடுத்துச் செல்வார் என்பதை என்னால் அறிய முடியும். என்னுடைய பணியில் ஏதேனும் பிரச்சனையை ஏற்படுத்த அந்த நபர் நினைத்தால் எங்கள் இருவருக்குமே வாழ்வின் மீது பெரும் காதல் உண்டு. என்னுடைய வருங்கால சேமிப்பு என்று என்னிடம் எதுவும் கிடையாது, உயிர் மேல் ஆசையும் எனக்கு கிடையாது, ஆனால் என்னை நிர்வாகத்திற்கு காட்டிக் கொடுக்கக்கூடிய நண்பருக்கு வாழ்வின் மீது எத்தனை ஆசை இருந்தால், ஒருவரை போட்டுக் கொடுத்து என் வேதனையில் முன்னேறி தான் சேர்த்து வைத்த சொத்துக்கள் அனைத்தையும் அனுபவித்து உயிர் வாழ ஆசைப்படுவார்.. அந்த உயிர் அவர் வசம் இருந்தால் தானே அவரால் வாழ முடியும், வரட்டும் பார்த்துக் கொள்வோம் என்று சொல்லி வந்துவிட்டார். மிரட்ட ஆசைப்பட்ட அந்த அதிகாரி மிரண்டு ஓடி விட்டார். அரசு அதிகாரத்திற்குள்ளேயே ஒரு பிரிவினர் சாதாரண மக்களுக்காகவும், இன்னொரு பிரிவினர் உழைப்பாளி மக்களுக்கு எதிராகவும் செயல்பட்டு வந்து கொண்டிருக்கும் பொழுதே, இப்படிப்பட்ட ஒரு இழி வேலையை ஆதிக்கத்தில் இருந்தே பழக்கப்பட்ட அதிகாரத்தில் இருக்கக்கூடிய நபர்கள் வஞ்சகத்தோடு தன் கீழ் பணிபுரியும் சக ஊழியர்களிடம் செய்யத் துணிகிற, ஆதிக்கமும் திமிர்த்தனமும் வெகுவாக முகம் காட்டி பற்களை துருத்தி நிற்கும் காலமிதில்..
அரசு துறைகளும் நிர்வாகமும் சட்டமும், நீதித்துறையும், காவல்துறையும் எளிய மக்களுக்காக என்று நினைத்து வாழும் பொது வெளிக்குள் இவைகள் யாருக்காக இங்கே வளர்த்தெடுக்கப்பட்டு இருக்கிறது என்பதை தனது “யாம் சில அரிசி வேண்டினோம்’ என்கிற நாவலின் வழியாக பதிவாக்கி இருக்கிறார் எழுத்தாளர் அழகிய பெரியவன். கனவுலகில் வாழும் எளிய மக்களை வெளியே இழுத்துக் கொண்டுவந்து நிஜம் எப்படி இருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறார் நாவலாசிரியர். நல்லதொரு வடிவான அழகியலோடு வெளியிட்டு இருக்கிறார்கள் நற்றிணை பதிப்பகத்தார் இருவருக்கும் நெஞ்சார்ந்த அன்பு நிறைந்த வாழ்த்துக்கள்.
மனுவின் உடல் அவையங்களில் இருந்து பிறந்தவர்களுக்கும், தாயின் வயிற்றில் சூல் கொண்டு பிறந்தவர்களுக்கான போராட்டங்கள் காலம் எங்கிலும் நெடிதாக இருந்தாலும் இன்றும் எப்படி தாய் வயிற்றுப் பிள்ளைகள் எதிர்கொள்கிறார்கள் என்பதை நாவலுக்குள், அவர்கள் சந்தித்திடும் வலிகளையும் வேதனைகளையும் எதிர்கொள்ளும் சட்டப் போராட்டங்களையும்  அருமையாக பதிவாக்கி இருக்கிறார் நாவலாசிரியர் அழகியபெரியவன்.
Azhagiya Periyavan (Author of அழகிய பெரியவன் கதைகள்)
அழகிய பெரியவன்
கோடிக்கணக்கான கல்வி அறிவு உள்ள தாழ்த்தப்பட்ட மக்களின் குறியீடாக கவசிநாதன் நாவலுக்குள் சித்தரிக்கப்பட்டு இருக்கிறார். கல்வி அறிவுத்தளத்தின் ஒவ்வொரு படிநிலையிலும் தாழ்த்தப்பட்ட மக்கள் எப்படியெல்லாம் பிரச்சனைகளை எதிர்கொண்டு போராடி மேல் வருகிறார்கள் என்பதை கவசிநாதனின் தாய், தந்தையரின் உரையாடல் வழியாக கொண்டு வந்திருப்பார் நாவலாசிரியர். தனது குடும்பத்தின் முதல் பட்டதாரியாக கவசிநாதனை முன் நிறுத்துவதற்கு  தாய் தந்தையர்கள் படும் துயரங்களை அவரின் மேற்படிப்புக்காக குடும்பத்தாரின் அத்தனை பேரின் உழைப்பையும்,
கவசிநாதனின் தந்தையார் தோல் பதனிடும் தொழிற்சாலையில் இன்னுமொரு தோலாக மாறி கிடப்பதிலிருந்தே, பீடி சுற்றுவதற்கு ஏதுவாக நரம்புகள் சீவி தயாரிக்கப்படும் இலைகளின் இன்னொரு இலையாக தாய்.. இப்படியாக நாவலை பெரும் சுமையோடு சோகத்தோடு கொண்டு போயிருப்பார் ஆசிரியர் அவர்கள்.
அரசுப் பள்ளியின் ஆசிரியராக விரைந்து மாறிவிடுவோம் என்கிற கனவோடு இல்லற வாழ்க்கைக்குள் பூரணியை கைபிடித்து நுழைகின்ற காலமதில் இரண்டு பிள்ளைகளை பெற்று எடுத்த பின்னும் நிரந்தர வேலை என்பது கனவாகி வாழ்க்கையின் மூச்சுக்காற்றை நெருக்கிக் கொண்டிருக்க.. அரசின் அறிவிப்பு அவனை இன்னும் ஒரு கனவுக்குள் இழுத்துச் செல்ல.. எப்படியாவது தானும் அரசுப் பள்ளியின் விலங்கியல் துறை ஆசிரியராக மாற்றப் படுவோம் என்கிற எண்ணத்தோடு தன்னுடைய நிலைதனை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சென்று கேட்டிட நினைக்கிறான் தன்னுடைய 37 வயதில். வேலைவாய்ப்பு அலுவலகம் சென்று அவன் தன்னுடைய முஷ்டியை உயர்த்தவில்லை தன்னுடைய குரலை உயர்த்தி கேட்கவில்லை, இதுநாள் வரையிலும் எந்த வருடத்தின் இறுதி வரை வேலைவாய்ப்பினை வேலைவாய்ப்புத்துறை ஒதுக்கி இருக்கிறது என்பதை தெரிவியுங்கள் என்று தாழ்மையோடு மாவட்ட வேலைவாய்ப்புத் துறை அதிகாரியை கேட்க.. தாழ்ந்த சாதியில் பிறந்த ஒருவன், தாயின் வயிற்றிலிருந்து பிறந்த ஒருவன் தன்னை எதிர்த்து கேள்வி கேட்பதையே வன்முறையாக நினைத்து அவன்மேல்
தாக்குதலை நிகழ்த்தி, பொய்யாக வழக்கு புனையப்பட்டு கைது செய்ய ஆட்படுத்தப் படுகிறார் நிர்வாகத்தில் இருக்கும் அதிகாரத் திமிரால். கூடவே சாதி ஆணவமும் சேர்ந்துகொண்டால் சொல்லுவேத் தேவையில்லை.
சாதி வெறி இருக்கும் பெரும்பாலான மனித மனங்களுக்குள், அரசு நிர்வாகத்தையும் காவல்துறையின் பொய்யான வழக்கு ஜோடிப்புகளையும் நேர் எதிர் கொண்டு நல்ல மனங்களின் துணையோடு ஒரு போராளியாக வழக்கிலிருந்து விடுதலை ஆகிறான் என்பதுதான் நாவலின் உயிரே. தன்மரியாதையோடு வாழும் குடும்பம் அதில் கவசிநாதன் எப்படி பள்ளி நிலைகளிலிருந்து கல்லூரி வரையிலும் குடும்பத்தார் அனைவராலும் மெருகேற்றப்பட்டு அழகு படுத்தப் படுகிறான் என்பதுவும், அழகுபடுத்தும் பொழுது  எதுவெல்லாம் அழகுக்கு எதிராக இருக்கிறதோ அதையெல்லாம் ஒதுக்கி தள்ளி தனியாகவும் குடும்பத்தின் மொத்த அடையாளமாகவும் எழுகிறான் கவசிநாதன் என்பதை வடிவமைத்திருக்கிறார் ஆசிரியர்.
தங்கள் குடும்பத்தின் அடையாளமான கவசிநாதனுக்கு பிரச்சனைகள், அரசு நிர்வாகத்தால் ஏற்படும்பொழுது அவனின் மனைவி பூரணியும் அவளின் குடும்பமும் கவசிநாதனின் அப்பா அம்மா ஆகியோரும் எப்படி அவனுக்கு எல்லாமுமாக இருந்து அவனின் வெற்றிகளுக்கு துணையாகித் தொடர்ந்தார்கள்,  இப்படிப்பட்ட குடும்பங்களே இப்பொழுது நாம் சந்திக்கக்கூடிய அரசியல் சமூக பொருளாதார சூழலுக்கு அத்தியாவசியம் என்பதை அழகுற பதிவாக்கி இருக்கிறார் அழகிய பெரியவன்.
வாழ்நிலையின் கீழ் நிலையில் இருக்கும் தாய் வயிற்றிலிருந்து பிறந்த பிள்ளைகள்
இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் துணைகொண்டு மேல் நிலையை நோக்கி வரும்பொழுது எப்படி “இட ஒதுக்கீடு,மெரிட்” என்கிற கேள்விகளால் அவமானப்படுத்தப் படுகிறார்கள் கேள்விக்குள்ளாக்க படுகிறார்கள், கேலி செய்யப்படுகிறார்கள் என்பதை அப்பட்டமாக தோலுரித்து காட்டியிருக்கிறார் நாவலுக்குள்.
ஒரு காட்டுப் பறவையாக பறந்து விரிய தயாரான கவசிநாதனின் சிறகுகளை ஒவ்வொன்றாக வெட்டி எறிய அதிகாரமும் ஆதிக்கமும் முற்படும் பொழுது அரணாக இருந்தவர்களை அறிமுகம் செய்து வைத்திருக்கிறார் நாவலாசிரியர். அரணாக இருப்பவர்கள் அந்த காட்டுப் பறவைக்கு தோழர்களை தவிர்த்து வேறு எவராக இருக்க முடியும்.
தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக சதிராட்டம் ஆடி வரும் ஆட்டத்தை, பெருகிவரும் அரசு நிர்வாகம் எங்கிலும் தன்னுடைய ரத்தம் ஒழுகும் கோரைப்பற்கள் வஞ்சகமாக சிரித்து அமர்ந்திருக்கும் ஆதிக்க சாதிவெறிதனை அப்பட்டமாக வெளிக்கொணர்ந்து, எப்படி எதிர்கொள்ள வேண்டிய மனநிலை ஒவ்வொரு ஒடுக்கப்பட்டவருக்கும் இருக்கிறது என்பதை கவசி நாதனின் நிலையிலிருந்து பொதுவெளிக்கு நாவலாக கொடுத்திருக்கிறார் அழகிய பெரியவன்.
கவசி நாதனின் குடும்பம் வழியாக.. அவர் அப்பா அம்மாவின் வாழ்நிலையாக, பீடி சுற்றி வாழும் குடும்பங்கள், தோல் பதனிடும் தொழிற்சாலையில் வாழ்வினை இழந்த குடும்பங்கள் என எளிய உழைக்கும் மக்களின் அன்றாட வாழ்வியலை பெரும் வேதனையோடு பதிவு ஆக்கியிருக்கிறார் நாவலாசிரியர்.
Thadam Vikatan - 01 February 2017 - அடுத்து என்ன? - அழகிய பெரியவன் | Azhagiya Periyavan interview - What's next - Vikatan Thadam
அழகிய பெரியவன்
அரசு தன் பொறுப்பில் நடத்திவரும் மாணவர் விடுதிகளின் நிலைமை இந்த இருபத்தியோராம் நூற்றாண்டில டிஜிட்டல் இந்தியாவிற்குள் எப்படி இருக்கிறது.. இன்னும் எப்படியெல்லாம் அப்படியே தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பதை நாவலுக்குள் காத்திரமாகப் பதிவாக்கி இருக்கிறார் ஆசிரியர்.
“யாம் சில அரிசி வேண்டினோம்” நாவல் ஏற்ற இறக்கங்களோடு படைக்கப்பட்டிருக்கிறது. நாவலின் வேகத்தை கவசிநாதனின் பின்னோக்கிய பார்வை, பின்னோக்கிய ஓட்டம் பல இடங்களுக்கும் நிகழ்வதால் நாவலின் வேகம் வாசிப்பாளருக்கு தடையை ஏற்படுத்துவதாக உணருகிறேன்..
அழகிய பெரியவனின் நாவல் “யாம் சில அரிசி வேண்டினோம்”. அனைவராலும் வாசிக்கப்பட வேண்டிய மிக முக்கியமான ஒரு நாவல் இந்த காலத்தில் வந்திருக்கிறது.. நாவல் ஆசிரியருக்கும் வெளியிட்ட நற்றிணை பதிப்பகம் மீண்டும் ஒருமுறை அன்பினையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
யாம் சில அரிசி வேண்டினோம்
அழகிய பெரியவன்
நற்றினை பதிப்பகம்
கருப்பு அன்பரசன்.

Leave a Response