Book Reviewஇன்றைய புத்தகம்

எழுத்துலகின் காந்தி அசோகமித்ரனின் “18 ஆவது அட்சக்கோடு” நாவலை முன்வைத்து சிறிய அனுபவ பகிர்வு….!

Spread the love

எழுத்தாளர் ஜெயமோகனின் வீட்டுச்சுவரில் இருவரின் படங்கள் மட்டுமே மாட்டி வைக்கப்பட்டுள்ளதாக கூறுவார்கள். அந்த இருவர்கள். காந்தியும், அசோகமித்ரனும்.

ஒரு விதத்தில் அசோகமித்திரனும் எழுத்துலகில் காந்தியாக வாழ்ந்தவர் தான்.

எளிமையை தன் எழுத்தின் வழியாக கலை ஆக்கியவர்.

ஜீவனம் நடத்துவதற்கு எந்த உத்தரவாதத்தையும் கொடுக்காத தமிழ் இலக்கியத்தில் எழுத்தை கைவிடாமல் தொடர்ந்து அறுபது ஆண்டுகள் எழுதி தன்னை தண்டித்து கொண்டவர்.

பெரும்பாலான தமிழ் எழுத்தாளர்களிடம் அரிதே காணக்கூடிய சொற்செட்டு . புறநிலை உணர்வு,வலிந்து எதையுமே புகுத்தாத போக்கு,வாழ்க்கையின் சலனத்தை உள்ளபடியே பிரதிபலிக்கும் திறன், கலை உணர்வுக்கு அப்பாற்பட்ட நோக்கங்களிலிலிருந்து பூரண விடுதலை இவை அனைத்தும் அசோகமித்திரனின் தனித்தன்மைகள் என்கிறார் எழுத்தாளர் ஜி.நாகராஜன்.

கடந்த மாதம் எழுத்தாளர் நாஞ்சில்நாடன் அவர்களிடம் நான் பேசிக்கொண்டிருந்தபோது அசோகமித்திரன்,சுந்தர ராமசாமி ஆகியோரின் எழுத்துக்களைத் தாண்டி ஏதாவது எழுதி விடவேண்டும் என்ற வேட்கையில் நான் எழுதவே வந்தேன் என்று பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது நெடுஞ்சாலைத்துறையில் பொறியாளராகப் பணிபுரியும் திரு. நரசிம்மன் அவர்கள் அவர் எழுதிய சில கதைகளை,கட்டுரைகளை நாஞ்சில் ஐயாவிடம் காண்பித்தார்.

அதைப் படித்துப் பார்த்த நாஞ்சில் நாடன் அவர்கள் ஐயா உங்கள் மொழி நன்றாக இருக்கிறது. ஆனால் ஒரு கதையையோ நாவலையோ எழுதும் பொழுது கதை நிகழும் புறச்சூழலை,அங்குள்ள மரங்களை, அங்குள்ள வீதிகளை பதிவு செய்யுங்கள் என்று சொன்னார்.

அப்படி முழுக்க முழுக்க செகந்திராபாத் நகரின்,பஜார்கள்,சாலைகள்,சந்துகள் அங்குள்ள ஏரிகள் அங்கு வாழ்ந்த இந்துக்கள் முஸ்லீம்கள்,அங்கு நிகழ்ந்த பிரிவினைகள் பற்றி பேசும் வரலாற்றுச் சித்திரம் தான் 18வது அட்சக்கோடு நாவல்.

ஹைதராபாத் நிஜாம்-இன் ரூ.50,000 கோடி ...

ஹைதராபாத் நிஜாம்

இந்தியா விடுதலை பெறுவதற்கு முன்பான காலகட்டத்தில் தொடங்கி ஹைதராபாத் நிஜாம் இந்தியாவுடன் சேர்த்துக் கொள்ளப்பட்டது வரையிலான காலகட்டத்தை களமாகக் கொண்டது நாவல்.

செகந்திராபாத்தில் வாழும் சந்திரசேகரன் என்ற தமிழ் பையன் பார்வையில் நாவல் சொல்லப்படுகிறது.

ஒருவகையில் இந்நாவலை ஒரு தன் வரலாற்று நாவல் என்றே கொள்ளலாம்.

காரணம் சந்திரசேகரன் என்பவனின் பார்வை வழியாகத்தான் முழு நாவலும் சொல்லப்படுகிறது. சந்திரசேகரன் அசோகமித்திரனாகக் கூட இருக்கலாம். காரணம் அசோகமித்ரன் பிறந்து வளர்ந்தது செகந்திராபாத்தில் தான்.

இந்திய வரலாற்றைச் சொல்லும் ஒருவனின் தன் வரலாற்று நாவல் இது.

நாவல் முழுக்க சந்திரசேகரன் வசிக்கும் பகுதி, அவனது குடும்பம்,அவனது வீடு, லான்சர் பாரக்ஸ் காம்பவுண்ட் , அவனைச் சுற்றி வசிக்கும் இஸ்லாமிய குடும்பங்கள்,அங்கு குடியேறிய அகதிகள், உசேன் சாகர் ஏரி என செகந்திராபாத்தின் குறுக்குவெட்டு சித்தரத்தை நுண் விவரணை மூலம் நாவல் முழுதும் நமக்கு காட்டுகிறார் அசோகமித்திரன்.

சந்திரசேகரனுடைய அப்பா செகந்திராபாத் ரயில்வேயில் பணிபுரிகிறார்.
சந்திரசேகரன் கல்லூரி கிரிக்கெட் டீம் கேப்டன் நாஸிர் அலிகானுடன் கிரிக்கெட் நெட் பிரக்டிஸ் செய்ய கல்லூரிக்கு கிளம்புவதிலிருந்து நாவல் ஆரம்பிக்கிறது.

சந்திரசேகர் அவர்கள் நண்பர்கள் கிரிக்கெட் ஆடுவது,கிரிக்கெட் பற்றி பேசுவது பற்றிய நாவலில் நான்கு அத்தியாயங்களுக்கு மேல் வருகிறது.

அசோகமித்திரன் எழுத்துக்களில் ஒரு மெல்லிய பகடி இருக்கும்.

Ashokamitran: His Secunderabad and Mine – Infrequent Chronicles

எழுத்தாளர் அசோகமித்திரன்

சந்திரசேகரனுடைய நண்பன் சந்தானம் பவுலிங் செய்வதை இப்படி கிண்டல் செய்கிறான்.செகந்திராபாத்திற்கு நேர் வடக்கு டெல்லி. அவன் மட்டையைக் கொண்டு தில்லியின் நின்றால் சந்தானம் செகந்திராபாத்திலிருந்து பவுலிங் செய்ய வேண்டும்.அடித்துப் பிடித்துக் கொண்டு ஓடிவந்து பந்து எறியும் போது அது கல்கத்தா அல்லது கராச்சி திசையில் போகும்.

நாவலின் மையச் சரடு என்பது இந்திய விடுதலைக்குப்பின்னும் இந்தியாவுடன் சேராதிருந்த ஹைதராபாத் நிஜாமை இந்தியா ராணுவம் துருப்புகள் மூலம் “ஆப்பரேஷன் போலோ” நடவடிக்கையால் இந்தியாவுடன் சேர்த்துக் கொள்ளப்பட்ட காலகட்டத்தின் நிகழ்வை பேசுகிறது.

இந்திய சுதந்திர வரலாற்றில், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி, மாணவர்களின் புரட்சியின் பங்கு,காந்தியின் படுகொலை, முகமது அலி ஜின்னாவின் மரணம் ஆகியவற்றை பதிவு செய்கிறது நாவல்.

ஐதராபாத்தை இந்தியாவுடன் இணைக்க இந்திய ராணுவம் முன்னேறிக் கொண்டிருக்கும் போது கலவரங்களால் மக்கள் அங்கும் இங்கும் அலறியடித்து ஓடி கொண்டிருக்கும் போது சந்திரசேகரனும் ஓடிக் கொண்டிருக்கிறான்.

அப்படி ஓடிக்கொண்டிருக்கும் போது சந்திரசேகரன் ஒரு வீட்டுச் சுவர் மீது எம்பி ஏறினான்.

அப்படியே உள்ளே குதித்தான்.

அது ஹைதராபாத் செகந்திராபாத்தில் சர்வ சகஜமாக வறுமை விரித்தாடும் ஆயிரக்கணக்கான முஸ்லிம் வீடுகளில் ஒன்று.

ஒரே ஒரு கோழிமுட்டை விளக்கு.

மூன்று நான்கு ஆண்கள்,மூன்று நான்கு பெண்மணிகள்,மூன்று நான்கு குழந்தைகள்.

தவிர்க்கமுடியாத கிழவி ஒருத்தி.

அந்த மூன்று ஆண்கள் சேர்த்துக்கொண்டு சந்திரசேகரனை கொன்று கூட போட்டு விடலாம்.

ஆனால் அவர்களிருந்த கிலி நிலையில் அவர்கள் சக்கைகளாக இருந்தார்கள்.

அந்த இடம் ஒரேயடியாக நாற்றம் அடித்துக்கொண்டிருந்தது .

சந்திரசேகரன் நிலைமையை புரிந்து கொள்வதற்குள் ஒன்று நடந்தது.

அவர்கள் அப்படி ஒரு திட்டத்தை முன்கூட்டியே பேசி வைத்திருக்க வேண்டும்.

அந்தப் பெண்மணிகளில் பதினைந்து பதினாறு வயது மதிக்க கூடிய ஒரு பெண் சந்திரசேகரன் முன்னே வந்தாள்.

” நாங்கள் பிச்சை கேட்கிறோம் எங்களை ஒன்றும் செய்துவிடாதீர்கள்” என்றாள்.

இதைச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவளுடைய கமீசைக் கழட்டினாள்.

ஒரு நொடிக்குள் பைஜாமா நாடாவையும் அவிழ்த்தாள்.

அந்த மங்கலான வெளிச்சத்திலும் அவளுடைய விலா எலும்புகளை தனித்தனியாக எண்ணி எடுக்கும் வகையில் சந்திரசேகரன் முன் நிர்வாணமாக நின்றாள்.

சந்திரசேகரன் கண் கூசிற்று ஐயோ என்றான்.

அந்தப் பெண் அதை என்ன அர்த்தம் செய்து கொண்டாளோ இன்னும் ஓரடி முன்வந்தாள்.

சந்திரசேகரன் மீண்டும் அய்யோ அய்யோ என்றான்.

அவனுக்கு தலை சுற்றி வாந்தி வந்தது.

வாயில் கொப்பளித்து வந்த கசப்புத் திரளை அப்படியே அடக்கிக் கொண்டு முன்பு உள்ளே வந்தபடியே சுவர் ஏறித் தெருவில் குதித்து வெறிபிடித்தவன் போல் ஓடினான்.

அவனுக்கு ரெஃப்யூஜிகள் பூண்டோடு அழித்து விரட்டப்பட்டது கூட இவ்வளவு குமட்டலை உண்டு பண்ணவில்லை.

அவன் வாழ்க்கையில் அவன் முதன்முதலாக நிர்வாணமாக பார்த்த பெண் அவனை சிதற அடித்து விட்டாள்.

அவனை புழுவாக்கி விட்டாள்.

அவள் வீட்டைக் காப்பாற்ற அவள் எவ்வளவு இழிவு படுத்திக் கொண்டு விட்டாள்.

அவள் இன்னும் ஒரு குழந்தை.

இந்த உலகத்தில் உயிர் காப்பாற்றிக் கொள்ள ஒரு குழந்தை கூட எவ்வளவு இழிவு படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது.

அதற்கு அவனும் காரணமாகி விட்டான்.

இந்தக் கறையை என்று எப்படி அழித்துகொள்ள முடியும்?

இதை அழித்துக்கொள்ளத்தான் முடியுமா?

என ஓடிக் கொண்டயிருந்த சந்திரசேகரன் பொழுது விடிந்திருப்பதையும் உணர்ந்தான் என்பதோடு நாவல் முடிகிறது.

18 ஆவது அட்சக்கோடு நாவல் வழியே இந்திய, ஹைதராபாத் ஒன்றிணைப்பில் நிகழ்ந்த இந்து, முஸ்லீம் இடையே நிகழ்ந்த கலவரங்கள் பற்றி சந்திரசேகரன் என்ற ஒரு இளைஞனின் பார்வையில் எழுதப்பட்ட வரலாற்று நிகழ்வுகள் கலந்த சிறந்த புனைவு இந்நாவல்.

இந்நாவலுடன் இரண்டு நூல்களை ஒப்பிடலாம்.ஒன்று மண்டோ எழுதிய மண்ட்டோ படைப்புகள்.இன்னொன்று குஷ்வந்த் சிங்கின் பாகிஸ்தான் போகும் ரயில்.

இந்தியா, பாகிஸ்தான் பிரிவினை வாதத்தை ஒட்டி எழுந்த மதக் கலவரங்கள்,படுகொலைகள்,
கற்பழிப்புகளின் கோரத்தை சதத் ஹசன் மண்டோ எழுதிய மண்ட்டோ படைப்புகளும், குஷ்வந்த் சிங் எழுதிய பாகிஸ்தான் போகும் ரயில் (Train to Pakistan) நாவலும் நெருங்கி பதிவு செய்திருக்கும்.

18வது அட்சக்கோடு [18vadhu atchakodu] by ...

18 ஆவது அட்சக்கோடு நாவல் வாசிக்கும் போது ஒரு வித அயற்சியை கொடுக்கலாம்.அசோகமித்திரன் கரைந்த நிழல்கள் நாவலும் அப்படிப்பட்டது தான்.
ஆனால் அவரது படைப்பின் உள் ஒரு கலைத்தன்மை ஒளிந்திருக்கும்.

வாசிக்கும் வாசகர்களின் மனங்களில் மனக்கிலேசம் செய்யவும்,
அவர்களை ஆ என்று ஆச்சரியத்தில் ஆழ்த்தவும் செய்யும் கலைத்தன்மையற்ற வேலையை ஒருபோதும் அசோகமித்திரன் எழுத்துக்கள் செய்வதில்லை.

அசோகமித்திரனுடைய எழுத்துக்கள் எளிமையாய் நிகழ்பவை.
நிகழ்த்தப்படுபவை அல்ல.

– ம. வேலு
தருமபுரி

Leave a Response

Top Reviews

Video Widget

gallery