எழுத்தாளர் அறிமுகம்நேர்காணல்

விருதுகளை வெல்லும் எண்ணத்தில் எழுத்தாளர்கள் எழுதுவது இல்லை – எழுத்தாளர் சோ.தர்மன்

தமிழ் படைப்பிலக்கிய வளர்ச்சிக்கு வளம் சேர்த்த, கரிசல்மண் படைபாளர்களில் எழுத்தாளர் சோ.தர்மன் முக்கியமானவர். ஒருங்கிணைந்த நெல்லை மாவட்ட கரிசல்மண் சார்ந்த வேளாண் குடிமக்களின் யதார்த்தமான வாழ்க்கையை, தனது கதைகளில் பதிவு செய்து வருபவர்.

துாத்துக்குடி மாவட்டம்,கோவில்பட்டியின் அருகே உள்ள உருளைக்குடி கிராமத்தை சேர்ந்த இவர், நாவல், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகள் என, 13க்கும் மேற்பட்ட நுால்களை எழுதி இருக்கிறார். இவரது, ‘சூழ்’ என்ற நாவலுக்கு, 2019ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டுள்ளது.

கோவை வந்துள்ள அவருடன் பேசியபோது:கிட்டத்தட்ட, 40 ஆண்டுகளாக எழுதி வருகிறேன். எழுதுவதில் மட்டுமே கவனம் செலுத்துவேன். வேறெந்த பிரதிபலனையும் எதிர்பார்ப்பதில்லை. தமிழக அரசு விருதுகள் உட்பட, 15 விருதுகள் பெற்றிருக்கிறேன். அவை, படைப்புகளை பாராட்டி, அவர்களே அழைத்துக் கொடுத்தவை.சாகித்ய அகாடமி, இலக்கியத்துக்காக மத்திய அரசால் வழங்கப்படும் உயரிய விருது. நல்ல இலக்கிய படைப்புக்கும், படைப்பாளிக்கும் கிடைக்க வேண்டிய மரியாதை கிடைத்தே தீரும் என்பது என் நம்பிக்கை. இதுவரை நான் பெற்ற விருதுகள், பாராட்டுக்கள், படைப்புக்காக கொடுக்கப்பட்டவையே.

விருதுகளை எதிர்பார்த்து எழுதுவதில்லை.இந்த நாவலை, 10 ஆண்டுகள் ஆய்வு செய்து எழுதி இருக்கிறேன். நாம் சுதந்திரம் பெற்றபோது, 40 ஆயிரம் கண்மாய்கள், ஆறு லட்சம் கிணறுகள், பல ஆயிரம் குளம் குட்டைகள் என, ஏராளமான நீர் நிலைகளை பிரிட்டிஷ்காரர்கள் விட்டுச் சென்றனர். தமிழகத்தை ஆண்ட அரசுகள், அவற்றை பாதுகாக்க தவறி விட்டன. நீரின் முக்கியத்துவம் பற்றியே சூழ் நாவல் பேசுகிறது. அதற்கான அங்கீகாரத்தை மத்திய அரசு அளித்துள்ளது, என்றார், கம்பீரத்துடன்!

-நன்றி தினமலர் நாளிதழ்.

Leave a Response