நேர்காணல்

கோழைகள் விளையாடிப் பார்க்கும் களமாக எழுத்து இருக்கிறது : ப.சிவகாமி நேர்காணல்

464views
Spread the love

மிழின் முதல் தலித் எழுத்தாளர் கே.டேனியல் என்றாலும், தமிழ் நாட்டிலிருந்து ‘பழையன கழிதலும்’ எனும் முதல் தலித் நாவலை எழுதியவர் ப.சிவகாமி. ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவர், தலித்தியம், பெண்ணியம் சார்ந்து எழுதியும் பேசியும் இயங்கி வருகிறார். தலைமைச் செயலகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளராக பணியாற்றும் இவரை அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசினேன். தனது பேட்டிகள் திரித்து வெளியிடப்படுவதாக பத்திரிகையாளர்கள் மீது அவருக்கு அதிருப்தி இருந்தது. ஆகவே, ஒவ்வொரு வாக்கியமாக அவர் சொல்லச் சொல்ல எழுதி, சரிபார்க்கப்பட்ட பேட்டி இது.

எந்த நோக்கத்திற்காக எழுதத் தொடங்கினீர்கள்?

நான் எழுத ஆரம்பித்தபொழுது எழுத்தை ஒரு பிரதிபலிப்பாகவே நினைத்தேன் அல்லது அது அப்படித்தான் வெளிப்பட்டது. பிறகு என்னைப் பாதித்த வாழ்சூழலின் சாராம்சமாகவும் இருந்தது. அதற்கும் அப்பால் அனுபவப் பகிர்வு என்ற அளவுக்கு விரிந்தது. பிரதிபலிப்பும் வாழ்சூழலின் பதிவும், அதைப் பற்றிய அசைபோடுதலும், அனுபவப் பகிர்வாகவும், விமர்சனமாகவும், வெளிப்பாடாகவும் அரசியலாகவும், இவையெல்லாமுமாக என் எழுத்து இருக்கிறது.

உங்களது ‘பழையன கழிதலும்’ தமிழின் முதல் பெண்ணிய தலித் நாவலாக கூறப்படுகிறது. அந்த நாவல் தலித் இலக்கிய வரையறைக்குள் எழுதப்பட்டதா? அல்லது இயல்பாக அப்படி வெளிப்பட்டதா?

பழையன கழிதலும் | Buy Tamil & English Books Online ...

தலித் என்ற வகைப்பாடுகள் தமிழ்நாட்டில் அறிமுகமாவதற்கு முன்பாகவே தலித் வாழ்க்கையை, நான் பார்த்த வகையில் விமர்சனக் கண்ணோட்டத்துடன் பதிவு செய்தேன். பிறகு அது தலித் இலக்கிய வரையறைக்குள் விழுந்ததைக் கண்டேன். தலித் இலக்கியம் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற வரையறைகளுக்குள் செல்லாமல் ஒரு சுதந்திரச் செயல்பாடாகவே எனது படைப்புகள் இருக்கின்றன. எனினும் தலித் அரசியலும் அதையொட்டிய கருத்துகளில் உள்வாங்கலும் நிறையவே நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.

தலித் இலக்கியம் என்பது கடைசி மனிதனின் கண்ணோட்டம். அவனது அனுபவம் அவனது நோக்கில் விரியும் உலகம். அவனது கதாநாயகர்கள், நாயகிகள், பாத்திரங்கள் அவனது வாழ்க்கையோடு நெருங்கியவர்கள் அல்லது அவனது பார்வையில் சிருஷ்டிக்கப்பட்டவர்கள்.

‘ஆனந்தாயி’ நாவலில், தலித் பெண்ணை தலித் ஆணே ஒடுக்குவது போல எழுதியிருக்கிறீர்களே…?

விட்டு விடுதலையாகி..: ஆனந்தாயி என்ற ...

ஆனந்தாயி நாவலை இப்படியான வகைப்பாட்டுக்குள் அடக்குவது ஆசிரியர் வாழ்ந்த சூழலையொட்டி (தலித்) எழுதியதால் ஏற்பட்டதாகும். பொதுவாக ஆண் – பெண் உறவுநிலைகள் சமுதாயத்தில் ஏறக்குறைய ஒரே நிலைதான். நுணுக்கமான வேறுபாடுகள் உள்ளன. ஒடுக்குமுறை களங்கள் வித்தியாசப்படுகின்றன. ஆண் – பெண் உறவு நிலைகளை நாவலாக்க விழையும் எழுத்தாளர்கள், தங்களது கதைமாந்தர்களைத் தேர்வு செய்யத்தான் செய்கிறார்கள். அது அவர்கள் கைக்கொண்ட அரசியலும் நோக்கமுமாக இருக்கிறது. இயற்கையாகவே எனது பாத்திரங்கள் தலித் சமூகத்தின் மக்களாயிருக்கின்றனர். தலித் சமூகப் பின்னணியில் ஆண் – பெண் உறவு நிலைகளை எழுதப் புகுந்ததின் விளைவே ஆனந்தாயி. தலித் சமூகப் பின்னணி என்பது எனது அனுபவமாயிருக்கிறது.

எனினும், இதேமாதிரி ஒடுக்குமுறை எல்லாச் சாதி மக்களிடமுமிருப்பதால், யாரும் தங்களை அதில் எளிதில் அடையாளம் காண முடியும்.

தலித் இலக்கியத்தை தலித்துகளால்தான் எழுத முடியும் என்கிறீர்களே… ஏன்?

எழுத்து என்பது கேளிக்கையாகவும், தங்கள் திறமைகளை வெளிக்கொணரும் சவால்களாகவும் கருதப்படுகிறது. எழுத்தைத் தாங்கள் இழைத்தக் குற்றத்திற்குப் பரிகாரமாகவும் பாவமன்னிப்புக் கோரும் இடமாகவும் – எழுத்தையும் வாழ்க்கையையும் வெவ்வேறாக பார்க்கும் மனோபாவமும் பலரில் இருக்கிறது.

எழுத்தாளர்கள் பலரும் தாங்கள் பரிசுத்தமானவர்கள், சாதி மதம் பாராதவர்கள் என்று வெளிப்படுத்திக் கொள்ளும் களமாகவும் எழுத்தைப் பாவிக்கிறார்கள். தமது சொந்த வாழ்க்கையில் சமுதாய நியதிக்குட்பட்டு அதை உடைக்கத் திராணியற்ற கோழைகள், இலக்கியங்களில் வீரர்களாக உருக்கொள்ள நினைக்கிறார்கள். தங்களைத் தாங்களே கிழித்துக் கொண்டு புதிதாக உருப்பெறும் வலுவோ பலமோ அற்றக் கோழைகள் விளையாடிப் பார்க்கும் களமாக எழுத்து இருக்கிறது. வாழ்க்கையும் எழுத்தும் பிரிக்க முடியாது பின்னிப் பிணைந்திருக்கிறது என்பதாலேயே தலித் வாழ்க்கையை தலித்துகளால் மட்டும் எழுதமுடியும் என்று நாம் சொல்ல முடிந்தது.

எழுத்துகளில் ஆண் எழுத்து, பெண் எழுத்து உண்டா? பெண்களின் உணர்வுகளை ஆண்களால் அசலாக எழுத முடியாதா?

ஆண்-பெண் உறவுநிலைகள் அதற்கிசைவான உடற்கூறு தளத்திலும் மனஓட்டத்திலும் கட்டமைக்கப்படுகின்றன. வரலாற்றுப் போக்கில் இந்த இசைவான உறவுநிலைகள் சிதறடிக்கப் பட்டுள்ளன.

அறிவு வளர்ச்சியின் செயல்பாடு பாலுறவை கேளிக்கைக்கும், வன்முறைக்கும் இட்டுச் சென்றுள்ளன. ஆண்-பெண் உறவுநிலையில் முரண்கள் உருவாகியுள்ளன. இந்த முரண்கள் பெண் மீது ஒடுக்குமுறையை கட்டவிழ்த்துள்ளன. இதைப் பரிமாணத்தில் கேள்விக்குள்ளாக்குவதும் பெண்களின் எழுத்துகளில் இயல்பாக, அவரவர் சார்ந்த வாழ்க்கைச் சூழல், எழுத்துகளின் பரிச்சயம் சார்ந்து வெளிப்படுகின்றன. ஆண் இவற்றை உணர்வது என்பது அவனது தேவையை, சுயநலத்தை வீழ்த்துவதால் மட்டுமே இயலும். அந்தச் சாத்தியப்பாடு மிகவும் அரிது என்பதால் பெண் எழுத்து தவிர்க்க முடியாத முத்திரையுடன் வெளிப்படுகின்றது. ஆண்கள் பெண்களைப் போல் உணரமுடியும்; எழுதமுடியும் என்பது இங்கே நிகழும் ஒடுக்குமுறையை கண்மூடித்தனமாக மறுப்பதாக உள்ளது. அந்த முயற்சி திரும்பவும் எழுத்தைச் சவாலாக்குவது என்பதில்தான் ஆண் – பெண் சுதந்திரத்தை நோக்கி இருவரும் அரவரர் இயல்பில் நகர்வதுதான் பொதுத்தளம். ஆண்கள்தான் பெண்களுக் காக எழுதவேண்டும் என்பது யார் வகுத்த விதி? பெண் சார்பு நிலை என்பதும் பெண் நிலை என்பதும் நுணுக்கமாக வேறுபடுகின்றன என்பது பொதுப் புரிதல் உள்ள யாவருக்கும் வெட்ட வெளிச்சமாக உள்ளபோது இம்மாதிரி கேள்விகள் ஆண்கள் பெண் நிலையில் எழுத வேண்டும், எழுதக்கூடும் என்பதை ஏன் கட்டாயமாக்க வேண்டும்? சுதந்திரமற்ற ஆண்களுக்கும் சேர்ந்து கண்ணீர் சிந்தும் வேளையில், நம் கண்ணீரைத் துடைக்க, நம் கைகளே முதலில் விரைகின்றன.

பொதுவாக, இன்றைய தலித் இலக்கிய சூழல் எப்படி இருக்கிறது?

தலித் இலக்கியச் சூழல் இன்று வளர்முகத்தில் உள்ளது. வெறும் பதிவுகள், சுயவரலாறுகள், ஏட்டிக்குப் போட்டி, போராட்ட ஃபார்முலாக்கள் இவற்றை மீறி தலித் வாழ்க்கையனுபவத்திலிருந்து உலகைக் கேள்விக்குள்ளாக்கும் நோக்கும் மெதுமெதுவே பரிணமிக்கிறது. இமையத்தின் சுயக்கேள்விகள், மதிவண்ணன், பிரதிபா இவர் களின் நையாண்டிகள், விழி.பா.இதயவேந்தனின் சில தளம் சார்ந்த கதைகள், சந்ருவின் ஓவியப் பரிமாணங்கள், பாமாவின் காட்டங்கள், பாப்லோவின் மொழிக் கூறுகளுடன் பன்முகப் பரிமாணங்களோடு வெளிப்படுகின்றன. தமிழ் இலக்கியச் சூழலின் தேக்கநிலையில் இவர்களின் பார்வைகள், புதுவகைப் பொலிவையும், ஆசுவாசமான சுதந்திரப் போக்குகள் நம்பிக்கையளிப்பனவாகவும் உள்ளன.

உங்கள் எழுத்துகள் வாசகர்களை எந்த அளவு சென்று சேர்ந்திருக்கின்றன?

என் குடும்பத்தினர்கூட படிக்கவில்லை என்றுதான் நினைக்கின்றேன். படித்தாலும் அதை ஒரு விஷயமாகக்கூட கருதவில்லை. படைப்புலகில், தீவிர வாசிப்பு வட்டங்களுக்குள்தான் இன்னும் நான் உழல்கிறேன். பெரிய பதவியிலுள்ளவர் என்ற அடையாளம் எழுத்தாளர் என்ற அடையாளத்தை மீறி வெளிப்படுவதும் ஒரு காரணம்.

உங்களின் ‘புதிய கோடாங்கி’, தமிழ்ச் சிற்றிதழ் சூழலில் எத்தகைய பங்களிப்பைச் செய்துவருகிறது?

PDF) பெரியார் மீதான தலித்மக்களின் ...

தலித் பெண் பார்வையில் கோடாங்கி வெளிவரத் தொடங்கியது 1995இல். தலித் என்பதை ஒடுக்குமுறை என்ற பொதுப்பெயரால் கட்டமைத்தது பிற்பட்டவர்கள். தலித் பிராமணர்கள் என்று படித்த தலித்துகளை தவிர்த்துவிட்டு, அவர்கள் தலைமையில் தலித்துகளுக்காக சோதாப் போராட்டமுறையைக் கையிலெடுப்பதைத் தவிர்த்து, ஒடுக்கப்பட்ட தலித்துகளே முன்னெடுக்க வேண்டும். ஒடுக்கப்பட்ட பிற்பட்டவர்களையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் துவக்கம் கண்டது கோடாங்கி. மார்க்ஸியப் பெரியாரியப் பாரம்பரியங்கள் தலித்துகளை பின்னுக்குத் தள்ளியதை தலித்தியம் பேசும் (பேசுவது மட்டும்) பிற்பட்டவர்களும் செய்யும் அபாயத்தைக் கணக்கிலெடுத்துக் கொண்டது. இடையில் நின்றது.
ஏப்ரல் 2001 தொடங்கி மாத இதழாக தலித் பிரச்னைகளின் ஆழங்களைத் தொடுவதாக இன்றுவரை தொடர்கிறது. தொடர்ந்து செயலாற்ற முடியும் என்ற நம்பிக்கையும் உள்ளது. மேதாவிகளால் வரையறுக்கப்பட்ட தலித் இலக்கிய வரையறைகளை மீறுவதாகவும் தலித்தியத்தை மைய நீரோட்டமாக்கும் முயற்சியாகவும் செயல்படுகிறது.

சந்திப்பு : சூரியசந்திரன்

இன்தாம் இணையம் (வானவில்)
2002

Leave a Response