Story

சிறுகதை: கண் திறக்கவில்லை – பாவண்ணன்

Spread the love

 

நடுக்கூடத்துக்கு வந்து நின்று ”பெட் நெம்பர் 112 ஆளு யாரு?” என்று சத்தம் போட்டுக் கேட்டபடி அங்கு அமர்ந்திருந்தவர்கள் அனைவரையும் ஒரு பார்வை பார்த்தாள் நர்ஸ். குடத்தை வைத்திருப்பதைப்போல இடுப்பில் க்ளிப் போட்ட அட்டையை வைத்திருந்தாள். மின்விசிறிக் காற்றில் அட்டையில் பொருத்தப்பட்டிருந்த தாள்கள் படபடத்தன.

சாந்தா அண்ணி பதற்றத்துடன் சட்டென எழுந்து நின்றாள்.  எங்கள் கடைமுதலாளியின் மனைவி. அவருக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்த குமரேசனின் மனைவியும் எழுந்து நின்றாள். இருவரையும் மாறிமாறிப் பார்த்த நர்ஸ் “மயக்கம் தெளிஞ்சிடுச்சி. விசிட்டர் டைம்ல போய் பாத்துக்கலாம். ஒருஒரு ஆளா போய் பாக்கணும்” என்று கறாரான குரலில் சொல்லிவிட்டு அடுத்த எண்ணைப் பார்ப்பதற்காக அட்டையை எடுத்தாள். அண்ணி அவசரமாக “111 எப்பிடி இருக்காரு? ரெண்டு பேரயும்தான் ஒன்னா சேத்தம்” என்று கேட்டார். “அவரு இன்னும் கண்ணு தெறக்கலைம்மா” என்றார் நர்ஸ். பிறகு “பெட் நெம்பர் 117 ஆள் யாரு?” என்று கேட்டுக்கொண்டே மறுபக்கம் நடந்து சென்றார்.

கண்ணீர் தளும்பும் விழிகளுடன் சோகமாக உட்கார்ந்த அண்ணியிடம் சமாதானப்படுத்தும் விதமாக “சீக்கிரம் மயக்கம் தெளிஞ்சிடும்ண்ணி. தைரியமா இருங்க” என்றாள் குமரேசனின் மனைவி. “அடி அவருக்கு கொஞ்சம் அதிகமில்லயா, அதான்….” சற்றுமுன்பு வரை கலங்கியிருந்த அவள் முகம் தெளிந்திருந்தது.

விசிட்டர் டைம் வந்ததும் குமரேசனின் மனைவிதான் முதலில் பார்த்துவிட்டு வந்தாள். அவளைத் தொடர்ந்து அவள் பிள்ளைகள் சென்று வந்தனர். பிறகு அண்ணி பார்த்துவிட்டுத் திரும்பினார். கடைசியாகத்தான் நான் உள்ளே சென்றேன்.

குளிர் நிறைந்திருக்கும் அந்த அறைக்குள் அடியெடுத்து வைக்கும்போதே இதயம் வேகமாக துடிக்கத் தொடங்கியது. படுக்கையில் காணப்பட்டவர்கள் அனைவருமே உடலில் ஏதோ ஒரு பகுதியில் அடிபட்டு வந்தவர்கள். சுவரோடு சாய்த்து வைக்கப்பட்ட உலக்கைபோல கட்டில் கால்களுடன் கட்டிவைத்துத் தொங்கவிடப்பட்ட விதவிதமான கால்களைப் பார்க்கும்போது மயக்கமாக இருந்தது.

குமரேசனைப் பார்த்தேன். அவனுடைய தலையிலும் தோள்பட்டையிலும் கட்டுகள் இருந்தன. “சீக்கிரம் வந்துடுடா மாப்பள” என்றேன். அவன் உதடுகளைப் பிரித்து சிரிக்க முயற்சி செய்தான். முடியவில்லை. தாடையில் தையல் போட்டு பிளாஸ்திரி ஒட்டியிருந்தார்கள்.

நான் இயல்பாக இந்திரஜித் அண்ணனின் பக்கம் திரும்பிப் பார்த்தேன். அவர் உடலில் கட்டு இல்லாத இடமே இல்லை. முகம் வீங்கியிருந்தது. நரம்பு வழியாக மருந்து இறங்கிக்கொண்டிருந்தது. அதிக நேரம் பார்க்க முடியவில்லை. மயக்கம் வரும்போல இருந்தது. “அண்ணனுக்கு இன்னும் மயக்கம் தெளியலைடா, பாவம்” என்றேன். “வரன்டா மாப்பள, எதுக்கும் பயப்படாத. நல்லானதும் வீட்டுக்குப் போயிடலாம்.”

அண்ணியை அழைத்துக்கொண்டு ஆஸ்பத்திரியை விட்டு வெளியே வந்தேன். அண்ணி எதுவும் பேசாமல் அமைதியாக வந்தார். எப்படி பேச்சைத் தொடங்குவது என்றே எனக்குப் புரியவில்லை.

எதிர்ப்பக்கத்தில் ஒல்லியான ஒரு தாத்தா பத்துப் பன்னிரண்டு மாடுகளை ஒட்டிக்கொண்டு வந்தார். பள்ளிக்கூடத்துப் பிள்ளைகள்போல எல்லா மாடுகளும் ஜோடிஜோடியாக பாதையோரத்தில் நடந்து வந்தன. அவை கடந்துசெல்ல தோதாக நாங்கள் சில கணங்கள் ஒதுங்கி நின்றோம்.

அந்தக் கும்பலில் ஒரு மாடு மட்டும் தாத்தாவின் சொல்லுக்குக் கட்டுப்படாமல் ஓரத்திலிருந்து தெருவின் நடுப்பகுதிக்கு தடதடவென ஓடிச் சென்று நடக்கத் தொடங்கியது. தாத்தாவும் அதன் பின்னால் போய் வாலை முறுக்கி முதுகில் தட்டி மீண்டும் ஓரமாக ஓட்டி வந்தார். பத்தடி நடப்பதற்குள் மறுபடியும் அந்த மாடு நடுத்தெருவுக்கே சென்றது. தாத்தாவும் சலிப்பில்லாமல் அதை அதட்டி ஓரத்துக்கு இழுத்துவந்தார்.

Image

ஓவியம்: ஸ்ரீரசா 

“அந்த காலத்துல தோப்பும்தொரவுமா கெடந்த எடம்ண்ணி இது. இங்கதான் மாடு மேய்ப்பாங்க. நானே பல தரம் பார்த்திருக்கேன். யாரோ ஒரு ஆளு சதுர அடி முப்பது ரூபாய்க்கின்னு பத்து வருஷத்துக்கு முன்னால வித்துட்டு போயிட்டாரு. சலிசா கெடைக்குதுன்னு இவனுங்க எடத்த வாங்கி ஆஸ்பத்திரி கட்டிட்டானுங்க.”

நான் சொன்னதை அண்ணி காதில் வாங்கியதாகவே தெரியவில்லை.

“அண்ணன்கூட இந்த பக்கத்துல ஒரு தர்ட்டி ஃபார்ட்டி சைட் வாங்கனாருண்ணி.”

அண்ணி சட்டென்று என் பக்கமாகத் திரும்பினார். “அப்பிடியா? அது எனக்குத் தெரியாது. அவருக்கு எதயும் என்கிட்ட சொல்ற பழக்கமில்ல.” சலிப்பில் அவர் உதடுகளைப் பிதுக்கினார். “ஒரு பொம்பளகிட்ட ஆம்பளைக்கு நம்பிக்கை இல்லைன்னா அந்தக் குடும்பம் எப்பிடி உருப்படும் சொல்லு”

“நாலு வருஷத்துலயே அத ஒரு நல்ல வெலைக்கு வித்துட்டாரு. கடலூர்லேருந்து யாரோ ஒரு பார்ட்டி வந்து வாங்கனாங்க. அண்ணனுக்கு நல்ல லாபம் அதுல.”

“என்ன லாபம் சம்பாதிச்சி என்ன பிரயோஜனம்? ஊட்டுல எப்பவும் பஞ்சப்பாட்டுதான் படிப்பாரு.”

“அந்த பணத்த வச்சிதான் தவளகுப்பத்துல ஒரு டபுள் சைட் கெரயம் பண்ணாரு.”

“அது வேறயா? அந்த விஷயமும் எனக்குத் தெரியாது.”

“சம்பாதிக்கற விஷயத்துல அறிவும் தெறமயும் அதிகம்ண்ணி அண்ணனுக்கு. எந்த நேரத்துல எத போட்டு எத எடுக்கணும்னு கணக்கா செய்வாருண்ணி. ஆனா……”

எனக்கு சொல்லத் தயக்கமாக இருந்தது. பேச்சை எதற்காக இந்தத் திசையில் இழுத்துவந்தேன் என்று என் மீதே எனக்குக் கோபம் வந்தது.

“ஏன் நிறுத்திட்ட? சொல்லு. ஒலகத்துக்கே தெரிஞ்ச விஷயம்தான? மத்தவங்ககிட்ட கைநீட்டி வாங்கற பணத்த மட்டும் கணக்குல வச்சிக்க மாட்டாரு. எல்லாம் ஒன்வே. அதான?”

நான் தலையைக் குனிந்துகொண்டேன். பல விஷயங்களைப்பற்றி தெரிந்துகொள்ளாமல் இருப்பவரின் கவனத்துக்கு இந்த மாதிரியான விஷயங்கள் சென்று சேர்ந்திருப்பதை நினைத்து ஆச்சரியமாக இருந்தது. அதனாலேயே எல்லாவற்றையும் கொட்டிவிட வேண்டும் என்று வேகம் மூண்டது.

“எப்படியும் மாசத்துல அஞ்சாறு பேரு கடை வாசலுக்கு வந்து நின்னுடுவாங்ண்ணி. நானும் குமரேசனும் அப்டியே ஒதுங்கி சரக்கு பிரிக்கற எடத்துக்கு போயிடுவோம். சில பேரு வந்த வேகத்துக்கு கன்னாபின்னான்னு திட்டுவாங்க. சில பேரு கெஞ்சுவாங்க. சில பேரு நயமா கேட்டுப் பார்ப்பாங்க. அதெல்லாம் அண்ணன்கிட்ட ஒன்னுமே நடக்காதுண்ணி.  அவுங்க எவ்ளோ கோவமா பேசனாலும் இவுரு கொஞ்சம் கூட கோவப்படமாட்டாரு. சிரிச்சமேனிக்கே பதில் சொல்லி அனுப்பிடுவாரு.”

“அப்பிடிலாம் நெருக்கி புடிச்சி சம்பாதிச்சி என்ன சொகத்த கண்டாரு?  வாய்க்கு ருசியா ஒருநாள் கூட அவரும் சாப்டதில்ல. நம்மளயும் சாப்புட உட்டதில்ல. வாரத்துக்கு ஒருநாள் புள்ளைங்களுக்கு ஒரு கிலோ கறி எடுக்க பத்து தரம் யோசிப்பாரு. இருபது தரம் புள்ளைங்ககிட்டயே வேணுமாடி குட்டி வேணுமாடா குட்டினு கேப்பாரு. அதுக்கப்பறம் வேண்டா வெறுப்பா போயி வாங்கியாருவாரு.”

“கடயில இருக்கற சமயத்துல கூட டீய குடிச்சியே பசிய ஆத்திக்குவாருண்ணி.”

“ஒரு ஆத்தரம் அவசரத்துக்குத்தான் நாம ஒருத்தவங்ககிட்ட கடன் வாங்கறம். அத காலாகாலத்துல திருப்பிக் குடுத்தாதான நமக்கும் மரியாத. அவுங்களுக்கும் மரியாத. அத உட்டு அவுங்கள அலயவச்சி, கலங்கவச்சி, ஆத்தரப்பட வச்சி வேதனப்படுத்தி பாக்கறதுல என்ன இருக்குது?”

“கடைக்கு நடந்து நடந்து கடன் குடுத்தவன் போட்டிருக்கிற செருப்பே தேஞ்சிடும்ண்ணி…”

“கல்யாணம் ஆன புதுசுல எங்க அப்பாவயே அழ வச்சவரு இவரு தெரியுமா? அன்னைக்குத்தான் இவரப் பத்தி நான் முழுசா தெரிஞ்சிகினேன். அப்ப இந்த இரும்பு ஏபாரம் இல்ல. ரெடிமேட் ஜவுளி ஏபாரம். பெங்களூருக்குப் போயி துணிமணிங்க எடுத்தாந்து சேல்ஸ் போடுவாரு. ஒரு தரம் கைமாத்தா ஒங்க அப்பாகிட்ட ஒரு அம்பதாயிரம் ரூபா வாங்கியாந்து குடு. ரெண்டு மாசத்துல வட்டியோட திருப்பிக் குடுத்துடலாம்னு சொல்லி அனுப்பனாரு. நானும் அப்பாவியா போய் கேட்டு வாங்கியாந்து குடுத்தன். சொளயா அம்பதாயிரம் ரூபா. என் தங்கச்சி கல்யாணத்துக்கு அவரு சேத்து வச்சிருந்த பணம் அது. அவுரு சொன்ன ரெண்டு மாசம் ரெண்டு வருஷமாச்சே தவிர, ஒத்த ரூபாய கூட திருப்பித் தரலை. அப்பாவுக்கும் வேற வழி தெரில. போனா போவுது போன்னு உட்டுட்டாரு.”

“அவர் மனசு தாராளம். என்ன இருந்தாலும் மருமவனாச்சேனு நெனச்சிருக்கலாம்.”

“ஆனா சிரிச்சிகினே ஒரு வார்த்த சொன்னாரு. நம்ம மாப்பள திருப்பதி உண்டிமாதிரி சாந்தா. எல்லாத்தயும் வாங்கிக்கும். எதயும் எடுத்துக்க முடியாதுன்னாரு. அதக் கேட்டு நானும் அவர்கூட சேந்து அன்னைக்குச் சிரிச்சேன். ஆனா நெஞ்சுக்குள்ள எதயோ குத்தி கிழிச்சமாதிரி இருந்திச்சி.  நான் என்ன செய்யமுடியும்? அதுல என் தப்பு என்ன இருக்குது?”

“அவரு மறந்துருவாருன்னு நெனைக்கறண்ணி.”

“மறக்கறதா? அதெல்லாம் சும்மா கத. நான் நம்பமாட்டன். யாரு என்ன செய்யமுடியும்ங்கற அலட்சியம். எவ்ளோ தூரம் இழுக்கமுடியுமோ அவ்ளோ தூரம் இழுத்துப் பாக்கலாம்ங்கற குருட்டு தைரியம். எல்லாம் எவ்ளோ நாள் நடக்குமோ பாக்கலாம். அந்த கடவுள்தான் நல்ல புத்திய குடுக்கணும். வல்லவனுக்கு வல்லவன் ஒலகத்துல இல்லாமயா போயிடுவான்?”

“அப்படி ஒருத்தன் பொறக்கவே இல்லைண்ணி. பத்து நாள் முன்னால கூட நம்ம கட ஓனரு கடைக்கு வந்து என்னமா கெஞ்சனாரு தெரிமா? எனக்கே பாவமா இருந்திச்சி. வாடகய ஏத்திக் குடுன்னு கேட்டதுக்காக கேஸ்ல இழுத்து உட்டுட்டு வேடிக்க பாக்கறியே, ஞாயமா இதுன்னு கேட்டாரு. வாடகய ஏத்தி குடு. இல்ல எடத்தயாவது காலிபண்ணி குடுன்னு சொன்னாரு. கேஸ் தீர்ப்பு எப்படி வருதோ அப்பிடி குடுக்கறன் சார்னு சொல்லி அழகா அனுப்பிவச்சிட்டாரு. அவரு அப்படி ஒன்னும் பணத்தேவை இருக்கப்பட்ட ஆளு இல்ல. அவருக்கு நாலு புள்ளைங்க. நாலும் அமெரிக்கா லண்டன்னு இருக்குதுங்க. அதனால அவரும் அமைதியா போயிட்டாரு.”

பாவண்ணன்,
பாவண்ணன்

பேசிக்கொண்டே வந்ததில் மெய்ன் ரோட் வந்துவிட்டது.

“ஆட்டோ புடிக்கட்டுமாண்ணி” என்று கேட்டேன். “அதெல்லாம் வேணாம். இங்கதான, நான் பஸ்லியே போயிடறேன்” என்றார். ”நீதான் பாவம். ராவும் பகலுமா கஷ்டப்படற? என் தம்பிக்கு எக்ஸாம் டைமா இருக்குது. ரெண்டு நாள்ல முடிஞ்சிடும். அதுக்கப்பறம் வரன்னு சொல்லியிருக்கான். நாளைக்கி எங்க அப்பா வந்தாலும் வருவாரு.”

“நானும் ஒங்க தம்பி மாதிரிதாண்ணி. உங்க கையால எத்தன நாள் எனக்கு சோறு போட்டிருக்கிங்க? என்ன ஏன் பிரிச்சி பாக்கறீங்க?”

அண்ணி சட்டென்று கண்கலங்கி தேம்புவார் என்று நான் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. சிறிது நேரம் சாலை நடமாட்டத்தைப் பார்த்தபடி கலங்கி நின்ற பிறகு கண்களைத் துடைத்துக்கொண்டார். அத்தருணத்துக்குச் சரியாக அவர் செல்லவேண்டிய பேருந்து வந்து நின்றதும் “சரி, பாக்கலாம்” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார்.

நான் வீட்டுக்குத் திரும்பிச் செல்ல இரவு ஏழுமணிக்கு மேலாகிவிட்டது. அம்மாவும் அப்பாவும் இந்திரஜித் அண்ணனைப்பற்றி அக்கறையோடு விசாரித்தார்கள். அவர் மீது அப்பாவுக்கு பெரிய மரியாதை உண்டு. “அந்த காலத்துல காயல்பட்டணத்துலேர்ந்து வந்தவங்க செஞ்ச தொழில்டா இது. அதனாலதான் காயலான் கடைனு பேரு. அந்த தொழில இவரு எப்படி தெரிஞ்சிகிட்டாருங்கறதுதான் ஆச்சரியம். ஒன்னுத்துக்கும் ஒதவாத இரும்ப வித்து பணமாக்கறது சாதாரண விஷயமில்ல தம்பி. அதுக்குலாம் ஒரு தனி புத்தி வேணும் தெரிமா?” என்று அடிக்கடி சொல்வார். “ஆனா பணம் கொடுக்கல் வாங்கல் விஷயத்துல அப்படி ஒன்னும் சுத்தமான ஆளு இல்லப்பா” என்று பல முறை இழுத்து வளைத்துச் சொன்னதுண்டு. ஆனாலும் “இருந்துட்டு போவட்டும்டா. அதுவும் சேர்ந்ததுதான் ஒரு ஏபாரம். புரிஞ்சிக்கோ” என்று எளிதாக என் பேச்சை ஒதுக்கிவிடுவார். “கண்ணு தெறந்ததும் சொல்லுடா. நானும் ஒரு நாள் வந்து பாக்கறன்” என்றார்.

மறுநாள் காலை பத்து மணிக்கே மருத்துவமனைக்குச் சென்றுவிட்டேன். குமரேசன் குடும்பத்தார் அனைவருமே வந்து கூடத்தில் உட்கார்ந்திருந்தார்கள். அரைமணி நேரம் கழித்து அண்ணி வந்தார். வந்ததுமே “நர்சம்மா வந்து ஏதாச்சிம் சொல்லிச்சா?” என்று கேட்டார். “ஒன்னும் சொல்லலைண்ணி” என்றதும் சோர்வோடு உட்கார்ந்துவிட்டார்.

அந்தப் பக்கமாக ஒரு நர்ஸ் வருவதைப் பார்த்துவிட்டு அண்ணி அவசரமாக எழுந்து சென்றார். நானும் பின்னாலேயே ஓடினேன். “பெட் நெம்பர் 111, மயக்கம் தெளிஞ்சிட்டுதாம்மா?” என்று ஆவலோடு கேட்டார். அந்த நர்ஸ் தன் அட்டையில் எழுதப்பட்டிருக்கும் தகவல்களைப் புரட்டிப் பார்த்துவிட்டு “இன்னும் இல்லம்மா. செலைன்தான் போயிட்டிருக்குது” என்றார்.

’இருமலா, காய்ச்சலா, உடனே சோதனை செய்யுங்கள்’ என்ற அறிவுரையோடு விதவிதமான கோலத்தில் குழந்தைகளின் படங்கள் அடங்கிய ப்ளக்ஸ்கள் சுவரோடு ஒட்டப்பட்டிருந்தன. வாசகங்களைவிட அந்தக் குழந்தைகளின் தோற்றம்தான் கவனிக்கத் தூண்டியது. நாலுபக்கமும் பறக்கிற தலைமுடி. உருண்ட விழிகள். பளபளப்பான கன்னம். முள்ளங்கித் துண்டுபோன்ற கைகள். உயிருள்ள குழந்தைகளையே அங்கு படுக்கவைத்திருப்பதுபோல இருந்தது.

பன்னிரண்டு மணிக்குச் சரியாக கூடத்தில் இருந்த கடிகாரத்திலிருந்து ஒரு பச்சைக்கிளி வெளியே தலைநீட்டி ’ட்வலோக்ளாக் ட்வலோக்ளாக்’ என்று சொல்லிவிட்டுப் போவதைப் பார்க்க வேடிக்கையாக இருந்தது. அண்ணியின் முகம் அத்திசையில் திரும்பியதும் ஒருகணம் மலர்வதைப் பார்த்தேன். ஒரு சின்ன விபத்து அவருடைய புன்னகையைப் பறித்துவிட்டதை நினைத்ததும் வேதனையாக இருந்தது.

முதலியார்பேட்டைக்கு அருகில் ஒரு பெரிய பங்களாவை இடித்துத் தரைமட்டமாக்கிக் கொண்டிருந்தார்கள். விற்பதற்காக இரும்புகளையும் மரச்சாமான்களையும் தனித்தனியாகப் பிரித்து வைத்திருந்தான் கான்ட்ராக்டர். வேறொரு கான்ட்ராக்டர் வழியாக விஷயத்தைக் கேள்விப்பட்டு மொத்தமாக விலை பேசுவதற்காக குமரேசனை துணைக்கு அழைத்துக்கொண்டு ஸ்கூட்டரில் போயிருந்தார் அண்ணன். அவர்கள் சென்ற வழியில் மேம்பாலம் வேலை நடந்துகொண்டிருந்தது. நேரத்தை மிச்சப்படுத்த குறுக்குவழியில் ஒன்வே பக்கமாக சென்றபோதுதான் அந்த விபத்து நடந்துவிட்டது.

“எல்லாமே செட்டிங்க்ஸ்ண்ணி. குறிப்பிட்ட நேரத்துக்கு சரியா கிளி வெளிய வந்து பேசறமாதிரி ப்ரோக்ராம் செஞ்சிருக்காங்க. ஒரு பொருள விக்கறதுக்கு மார்க்கெட்ல புதுசுபுதுசா எதயாவது செஞ்சிகினே இருக்காங்க. பிசினெஸ்னாவே அதுதான்னு ஆயிடுச்சி.”

அண்ணியின் முகமலர்ச்சி இன்னும் எதையாவது சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும் என்கிற எண்ணத்தைக் கொடுத்தது.

“இந்த கிளிய பாத்தே இவ்ளோ ஆச்சரியப்படறீங்களே. முத்தியால்பேட்டைல ஒரு மணிகூண்டு இருக்குது. நேராநேரத்துக்கு சரியா அது திருக்குறள் சொல்லும்ண்ணி. அப்படியே பள்ளிக்கூடத்துல படிக்கற ஒரு சின்னப்பொண்ணு சொல்றமாதிரியே இருக்கும்.”

“எங்கன்னு சொன்ன?”

“முத்தியால்பேட்டை”

“முத்தியால்பேட்டைலேருந்துதான் ஒரு அம்மா அன்னைக்கு வீட்டுக்கு வந்து இவருகிட்ட பேசனாங்க. ஆக்சிடெண்ட் ஆவறதுக்கு மொத நாள். அந்த அம்மாவ எனக்கும் நல்லாத் தெரியும். ஒரு பாஞ்சி பதனாறு  வருஷத்துக்கு முன்னால நெல்லித்தோப்புல நாலஞ்சி வருஷம் நாங்க ஒரு ஊட்டுல வாடகைக்கு இருந்தம். அப்ப அந்த அம்மாவும் எங்க ஊட்டுக்கு எதுத்த ஊட்டுலதான் வாடகைக்கு இருந்தாங்க. அந்தத் தெருவுலயே அவுங்க ஊட்டுலதான் போனு இருந்திச்சி. ஒரு அவசர ஆத்தரத்துக்கு அவுங்க நெம்பரத்தான் இவரு எல்லார்கிட்டயும் குடுத்து வச்சிருந்தாரு. அதனால போன் வந்தா இவர கூப்புடும் அந்த அம்மா. ஆன்ட்டி ஆன்ட்டின்னு இவுரும் ஓடுவாரு. அதான் பழக்கம். அந்த பழக்கத்த வச்சி  எல்லார்கிட்டயும் கைநீட்டறமாதிரி அந்த அம்மாகிட்டயும் கை நீட்டிட்டாரு. இவரு என்ன சொன்னாரோ ஏது சொன்னாரோ தெரிலை, அந்த அம்மா கழுத்துல இருந்த அஞ்சி பவுனு சங்கிலிய கழட்டி குடுத்துடுச்சி.”

“கழுத்துல போட்டிருந்த சங்கிலியா?” என்னால் நம்பவே முடியவில்லை.

“எதுத்தெதுத்த ஊட்டுல இருக்கற மனுஷனுக்கு ஏதோ ஒரு கஷ்டம்ன்னா நமக்கு ஒரு எரக்கம் வருமில்ல. அந்த எரக்கத்தால இவுரு சொல்ற கதயயும் கண்ணீரயும் பாத்து குடுத்துட்டாங்க……”

“திருப்பிக் குடுக்கலையா?”

“எங்க குடுக்க? குடுத்திருந்தா அந்த அம்மா ஏன் அன்னைக்கு வீட்டுக்கு வரப்போவுது?”

“த்ச். ரொம்ப பாவம்ண்ணி.”

“நெல்லித்தோப்புலேருந்து காவேரி நகர்ல கொஞ்ச காலம் இருந்தம். கரடிகுப்பத்துல நாலஞ்சி வருஷம் இருந்தம். கடைசியாதான் நடேசன் நகர்ல் புது ஊடு கட்டிகினு வந்தம். மூனு மாசத்துக்கு ஒருதரம், ஆறு மாசத்துக்கு ஒரு தரம்னு அந்த அம்மா எங்க இருந்தாலும் தேடி கண்டுபுடிச்சி வந்துடும். ரெண்டு மூனு வருஷமா ஆளயே காணம். சரி திருப்பிக் குடுத்திருப்பாரு போலன்னு நெனச்சிட்டேன். அன்னைக்கு அந்த அம்மா ஊட்டு வாசல்ல வந்து நின்ன சமயத்துல எனக்கு தூக்கி வாரிப் போட்டுடுச்சி. அதவிட அசிங்கம் வேற என்ன ஓணும், சொல்லு. யாரோ மூஞ்சில சாணிய கரச்சி ஊத்தறமாதிரி இருந்திச்சி. இந்த மனுஷன் அப்பயும் புடி குடுக்கலை.”

“என்னதான் சொன்னாரு அப்ப?”

“அந்த சங்கிலிய வச்சி நான் பத்தாயிரம் ரூபாதான் வாங்கனன் ஆன்டி. அந்த பத்தாயிரத்த வேணும்னா குடுக்கறன், வாங்கினும் போங்கன்னு சொன்னாரு. அதுக்கு யாரு ஒத்துக்குவாங்க? நாம அந்த நெலைமையில இருந்து நம்மகிட்ட ஒருத்தன் இப்பிடி சொன்னா நாம ஒத்துக்குவமா? சொல்லு.”

“அது எப்பிடிண்ணி? அது நாயமே இல்லயே.”

“எனக்கு பணமும் வேணாம் கிணமும் வேணாம். நான் ஒனக்கு குடுத்தது அஞ்சி பவுனு செயினு, எனக்கு செயினாவே திருப்பிக் குடுத்துடு. அது போதும்ன்னு அழுதாங்க அவுங்க. இத்தன காலமும் வருவாங்க. கேப்பாங்க. கெஞ்சுவாங்க. கஷ்டத்த சொல்வாங்க. அவ்ளோதான். போயிடுவாங்க. ஆனா அவுங்க அழுத்த மொதமொதலா அன்னிக்குத்தான் பாத்தன். அவுங்களுக்கு என்ன கஷ்டமோ தெரிலை. அவுங்க வயிறும் மனசும் எப்படிலாம் எரிஞ்சிதோ. அந்த ஆண்டவனுக்குத்தான் தெரியும். அந்த வயித்தெரிச்சல்தான் இங்க கொண்டாந்து படுக்க வச்சிடுச்சி போல….”

“கவலப்படாதிங்கண்ணி. தைரியமா இருங்க. இப்ப படுக்கையில இருக்காரில்ல. இது அவருக்கு பெரிய பாடம். தானாவே நல்ல புத்தி வரும். ஒரு மறுபிறப்புமாதிரி ஆளே மாறிடுவாரு பாருங்க.”

அண்ணி ஒருகணம் என்னைத் திரும்பிப் பார்த்தார். என் சொற்களிலிருந்து நம்பிக்கையைப் பெறுவதை அவர் கண்களில் பார்த்தேன். அதைக் கண்டபோது ஆழ்மனதில் எனக்கும் ஒரு நிறைவு எழுந்தது.

ப்ளக்ஸ் குழந்தையின் பக்கமாக பார்வையைத் திருப்பிய சமயத்தில் எதிர்த்திசையில் தேடிக்கொண்டிருக்கும் ஒரு முகத்தை நான் பார்த்துவிட்டேன். எதிர்பார்க்காத முகம்.

“அண்ணி, அங்க பாருங்க. அதோ சந்தனக்கலர் சட்ட. விபூதி குங்குமம்லாம் வச்சிருக்காரு பாருங்க…”

“யாரு?”

“நம்ம கட ஓனருண்ணி.”

அண்ணிக்கு முகம் இருண்டுவிட்டது. ”வேற யாரயாச்சிம் தேடறாரோ என்னமோ……” என்று அவர் குரல் இழுத்தது. அதற்குள் அவரே என்னைப் பார்த்துவிட்டார். கூட்டம் இல்லாத பக்கமாக சுற்றி வளைத்துக்கொண்டு என்னை நோக்கி நடந்துவந்தார்.

“எப்பிடி இருக்காரு தம்பி?” என்றார்.

“நாலு நாளாச்சி சார். இன்னும் கண் தெறக்கலை.”

“நாலு நாளாய்டுச்சா? எனக்கு இன்னிக்கு காலையிலதான் ஒருத்தர் சொன்னாரு. அதான் பாக்கலாம்ன்னு வந்தன்…”

வண்ணநிலவனின் 'அழைக்கிறவர்கள் ...
writer Pavannan

அண்ணி தன்னிச்சையாக எழுந்து அவருக்கு வணக்கம் சொன்னார். அண்ணியைப் பார்த்ததும் அவருக்கு பேச்சு நின்றுவிட்டது. சில கணங்கள் தரையைப் பார்த்தபடி பெருமூச்சு விட்டார். ”கடவுள் எல்லாருக்குமே இப்பிடி ஒரு சோதனய ஏதோ ஒரு கட்டத்துல குடுத்துகினேதான் இருக்காரு. சீக்கிரமாவே நல்லாய்டுவாரு. கவலப்படாதிங்கம்மா” என்று அண்ணியைப் பார்த்துச் சொன்னார். “எத்தன புள்ளைங்கம்மா? என்ன செய்றாங்க?”

“நாலு புள்ளைங்க சார். மூத்தது பொண்ணு. பாரதிதாசன்ல பிகாம் படிக்குது. மத்தது மூணும் ஆம்பள பசங்க. பத்து எட்டு ஆறுன்னு படிக்கறாங்க. பெத்தி செமினார்ல.”

“நல்லா படிக்கவைங்கம்மா. எதிர்காலத்துல படிப்புதான் சோறு போடும்.”

“இப்ப பாக்கலாம்ன்னு நெனச்சிதான் வந்தன். உடமாட்டாங்களா?”

“ஐசியுல இருக்கறதனால விசிட்டர் டைம்லதான் சார் உடுவாங்க.”

“சரிம்மா. நான் வேற ஒரு நாளு வந்து பாக்கறன். கண் முழிச்சிடுவாரு. கவலப்படாதீங்க.”

அவர் திரும்பிப் புறப்படும் நேரத்தில் அண்ணி வேகமாக பின்னாலேயே சென்று “கோர்ட்டுக்கு போனது, கேஸ் போட்டது எதுவுமே எனக்குத் தெரியாது சார். கட தம்பி சொல்லி இப்பதான் தெரிஞ்சிகிட்டேன்.  நீங்க தப்பா நெனச்சிக்காதிங்க சார். அவரு கண்முழிச்சதும் நானும் ஒரு தரம் பேசிப் பாக்கறன்.” என்று இறைஞ்சும் குரலில் சொன்னார்.

“ஐயையோ, நான் அத நெனச்சி வரலை தாயி. எரியற ஊட்டுல புடுங்கறவரைக்கும் லாபம்னு நெனைக்கற ஆள் கெடயாதும்மா நான். மொதல்ல கண்ணு முழிக்கட்டும். மத்ததயெல்லாம் அப்பறம் பாத்துக்கலாம்.” அவர் கைகுவித்து வணக்கம் சொல்லிவிட்டு புறப்பட்டுச் சென்றார்.

அன்றும் இந்திரஜித் அண்ணனுக்கு சுயநினைவு திரும்பவில்லை. மறுநாளும் வரவில்லை. கடன் கொடுத்தவர்கள் மூன்று நான்கு பேர் எப்படியோ செய்தியைத் தெரிந்துகொண்டு ஒவ்வொருவராக வந்து போனார்கள். ஆளாளுக்கு ஒரு தொகையைச் சொன்னார்கள். வட்டியே வேண்டாம், அசலை மட்டும் திருப்பிக் கொடுக்க ஏற்பாடு செய்தால் போதும் என்று சொல்லிவிட்டுப் போனார்கள். அண்ணியின் அப்பாவும் தம்பியும் வந்ததால் அவர்களும் நானும் மாறிமாறி மருத்துவமனையிலேயே இருந்தோம்.

அடுத்த நாள் காலையில் நாங்கள் கூடத்தில் உட்கார்ந்திருக்கும்போது  குண்டாகவும் குள்ளமாகவும் இருந்த ஒரு நர்ஸ் வந்து “பெட் நம்பர் 111 யாரு?” என்று கேட்டாள். நாங்கள் அவசரமாக எழுந்து நின்றோம். ஒரு சீட்டை என்னிடம் கொடுத்து “இந்த மாத்திரைங்களும் ஊசிமருந்தும் அவசரமா வேணும். இங்க ஸ்டாக் இல்ல. ஆர்டர் பண்ணது இன்னும் வரலை. ஆனந்தா மெடிக்கல்ஸ்ல கெடைக்கும். வாங்கிட்டு வந்துடறிங்களா?” என்றார். நான் அந்தச் சீட்டை கைநீட்டி வாங்கிக்கொண்டேன்.

அண்ணி என்னிடம் இரண்டாயிரம் ரூபாய் நோட்டைக் கொடுத்தார். பிறகு என்ன நினைத்தாரோ தெரியவில்லை. இன்னொரு இரண்டாயிரம் ரூபாய் நோட்டைக் கொடுத்தார். நான் கடைத்தெருவுக்குச் சென்று அந்த மருந்துகளை வாங்கிவந்து நர்சிடம் ஒப்படைத்துவிட்டுத் திரும்பினேன். பாக்கித்தொகையை அண்ணியிடம் ஒப்படைத்தேன்.

அண்ணியின் கண்கள் கலங்கியிருந்தன. “நாளைக்கி காலையில அந்த அம்மாவ பாத்துட்டு வரலாமா?” என்று திடீரெனக் கேட்டார். ”ரெண்டு மூனு நாளா ராத்திரியில கெட்ட கெட்ட கனவா வருது. அந்த அம்மா வயித்தெரிச்சல்தான் இவர புடிச்சி ஆட்டுதுன்னு தோணுது.”

“எந்த அம்மா அண்ணி?”

“அதான், அந்த முத்தியால்பேட்டை அம்மா. அஞ்சி பவுனு சங்கிலி.”

”அட்ரஸ் இல்லாம எப்படிண்ணி அவுங்க ஊட்ட கண்டுபுடிக்கறது?”

“ஐனாரு கோயில் தெருனு சொன்னது நாபகமிருக்குது. அங்க போயி விசாரிச்சா சொல்லமாட்டாங்களா என்ன?”

“அவுங்கள பாக்கறதால இப்ப நமக்கென்ன  நடந்துரப் போவுது?”

“அவுங்க நடுவாசல்ல நின்னு அழுது கண்ணீரு விட்ட கோலம் என் கண்லயே இன்னும் இருக்குது. அத இப்ப நெனச்சாலும் ஒடம்பு நடுங்குது. அந்த அழுகைதான் சாபமா எறங்கிடுச்சோன்னு  பயமா இருக்குது. போய் அவுங்க கால்ல உழறன். பெரிய மனசு பண்ணி மன்னிச்சிக்கம்மானு சொல்லி கெஞ்சி கேக்கறன். என் நிம்மதிக்காவுது அத நான் செய்யணும்.”

தாரைதாரையாக அண்ணியின் கண்ணிலிருந்து கண்ணீர் வழிந்தபடி இருந்தது. “இன்னும் எத்தன நாளுக்குத்தான் இவரு இப்பிடி ராத்திரி பகல் தெரியாம சுயநெனவே இல்லாம கெடக்கறத பாத்துகினு சும்மா இருக்கமுடியும்?”

அவர் முடிவை மாற்ற முடியாது என்று தோன்றியது. “நாளைக்கு நிச்சயமா போவலாம்ண்ணி. காலையில ஊட்டுக்கே நேரா வரன். அங்கேருந்து பஸ் புடிச்சி போயிடலாம்.”

மறுநாள் காலை பத்துமணிக்கெல்லாம் அண்ணியின் வீட்டுக்குச் சென்றுவிட்டேன். எங்களோடு அண்ணியின் அப்பாவும் வந்தார். மூன்று பேரும் முத்தியால்பேட்டை மணிக்கூண்டில் இறங்கி ஐயனார் கோவில் தெருவை முதலில் கண்டுபிடித்தோம். அங்கு அரைமணி நேரம் கண்ணில் படுபவர்களிடமெல்லாம் விசாரித்தோம். ஒரு பூவரச மரத்தடியில் இஸ்திரி வண்டியோடு நின்றிருந்த ஒரு பெரியவர் அண்ணி சொன்ன அடையாளங்களையெல்லாம் கேட்ட பிறகு எங்களுக்கு வழி சொன்னார். அது சரியான இடம். அழைப்புமணியை அழுத்தியதும் அந்த அம்மாவே கதவைத் திறந்தார்.

ஒருகணம் எங்கள் மூன்று பேரையும் பார்த்து திகைத்துவிட்டார். “நான்மா சாந்தா. தெரியலையாமா? நடேசன் நகர். போன வாரம் கூட நீங்க வீட்டுக்கு வந்திருந்தீங்களே……” என்று அண்ணி எடுத்துக் கொடுத்ததும் அவர் புரிந்துகொண்டார். “வா வா இந்திரஜித் சாந்தா. திடீர்னு வந்து நின்னதும் ஒரு நிமிஷம் ஒன்னும் புரியல. அதான்…..” என்று அண்ணியின் தோளில் கைவைத்து உள்ளே அழைத்துச் சென்றார். எங்களைப் பார்த்து “வாங்க உள்ள வாங்க” என்றார். எங்களுக்காக தண்ணீர் கொண்டுவந்து கொடுத்தார்.

ஒரு வாய் தண்ணீர் அருந்திய நிலையிலேயே அண்ணிக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது. கண் கலங்க நடந்ததையெல்லாம் சொல்லி முடித்தார். தனக்கு வரும் கெட்ட கனவுகளைப்பற்றியும் சொன்னார்.

“இந்த மாதிரி நேரத்துல மனசு இப்படியெல்லாம் நெனச்சி கொழம்பத்தான் செய்யும். நாமதான் தைரியமா இருக்கணும்.”

“உங்களுக்கு சொன்னமாதிரி இன்னும் எத்தன பேருக்கு சால்ஜாப்பு சொல்லி அலய உட்டாரோ, அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம். அந்த சாபம்தான் இப்பிடி வந்து ஒரேடியா அழுத்திட்டுது.”

அழும் அண்ணியின் தோளைத் தொட்டு அவர் அமைதிப்படுத்தினார். சமையலறையிலிருந்து ஒரு பெண் ஒரு தட்டில் டீ தம்ளர்களை வைத்து எடுத்துவந்து எல்லோருக்கும் கொடுத்தாள்.

“என் பொண்ணு. இவளுக்குத்தான் மதகடிப்பட்டு எஞ்சினீரிங் காலேஜ்ல எடம் கெடைச்சிருக்குது. எண்பதாயிரம் ரூபா கட்டணும். எங்கயும் பொரட்ட முடியலை. இந்த நேரத்துக்கு அந்த செயின் இருந்தா உதவியா இருக்குமேன்னு நெனச்சிதான் அன்னைக்கு வந்தன்……”

அண்ணி அந்தப் பெண்ணிடம் “ஒரு வயசு கொழந்தயா நீ இருந்த சமயத்துல பார்த்தது. ஒன் பேர் என்னம்மா? ஏதோ அல்லினு வரும். மறந்துட்டன்.” என்றார். “இன்பவல்லி” என்றாள் அந்தப் பெண். அண்ணி இன்பவல்லி என்று தனக்குள்ளேயே சொல்லிக்கொண்டார்.

“ஆயிரம் ரெண்டாயிரம்னு அப்பப்ப அவசரத்துக்கு கேப்பாரு. நானும் வீட்டு செலவுக்கு வச்சிருக்கற பணத்துல எடுத்துக் குடுத்து உதவி செய்வேன். அவரும் சொன்னமாதிரி திருப்பிக் குடுத்துருவாரு. அப்பிடி நம்பிதான் இந்த சங்கிலியயும் குடுத்தன். இப்பிடி நடக்கும்னு எதிர்பார்க்கலை. என் கெட்ட நேரம்.”

அண்ணி சட்டென்று எழுந்து தன் கழுத்திலிருந்த சங்கிலியைக் கழற்றி அந்த அம்மாவிடம் நீட்டினார். “தயவு செஞ்சி இத நீங்க வாங்கிக்கணும். புள்ளய நல்லா படிக்கவைங்க” என்றார். அந்த அம்மா “வேணாம்மா” என்றபடி பின்வாங்கினார்.

“மொதல்ல இந்திரஜித் எழுந்து வரட்டும். அப்பறமா அவர் கைலிருந்தே வாங்கிக்கறன்.”

“அவர் புத்திதான் ஒங்களுக்கு தெரியுமே. சரியான கொரங்கு புத்தி. சட்டுனு மாறனாலும் மாறிடும்.”

“எவ்ளோ பெரிய கொரங்கா இருந்தாலும் சரி, என்னைக்காவது ஒரு நாள் அதும் ஆட்டம் அடங்கித்தான் ஆவணும்.”

அண்ணி சட்டென அந்த அம்மாவின் காலில் விழுந்து பாதங்களில் தலையை வைத்து முட்டிக்கொண்டார். ”ஐயையோ, என்னம்மா இது, என்ன காரியம்மா பண்ற நீ?” என்றபடி அண்ணியை தோளைத் தொட்டு எழுப்பி சோபாவில் உட்காரவைத்தார்.

“அவர் கண்ண தெறக்காம படுத்த படுக்கையா கெடக்கறத பாக்கறபோதுலாம் என் அடிவயிறே நடுங்குதுமா”

“நாளைக்கி நான் வந்து பாக்கறேன். எங்க முத்தியால்பேட்டை ஐநாரப்பன் சாமி ரொம்ப சக்தியுள்ள சாமி. காலையில ஒரு பொங்கல் வச்சி பூச பண்ணிட்டு விபூதி கொண்டாரன். அத பூசி பாக்கலாம்.”

மருத்துவமனை விவரங்களை கொடுத்துவிட்டு நாங்கள் வெளியே வந்தோம். பத்தடி தொலைவு நடந்த பிறகுதான் கையில் வைத்திருந்த தினத்தந்தியை அந்த வீட்டு தேநீர் மேசையிலேயே விட்டுவிட்டு வந்தது  நினைவுக்கு வந்தது. ”போய்ட்டே இருங்க. தோ வந்துர்ரேன்” என்று சொல்லிவிட்டு வீட்டுக்குத் திரும்பி வந்தேன். காலணிகளைக் கழற்றும் சமயத்தில் உள்ளே பேச்சுக்குரல் கேட்டது.

”லூசாமா நீ? நீ குடுத்த செயினுக்கு பதிலாதான அந்த அம்மா செயின குடுத்தாங்க? இந்த நேரத்துலயாவது கடவுள் நமக்கு கண் தெறந்தானேன்னு வாங்கிக்காம பேக்கு மாதிரி அனுப்பி வச்சிட்டியே. அறிவிருக்குதா ஒனக்கு? அந்த செயின வாங்கியிருந்தா வட்டிக்கு பணம் வாங்கவேண்டிய நெலம வந்திருக்குமா? அப்பா சொல்றது சரியாதான் இருக்குது. நீ கடஞ்செடுத்த  முட்டாள்தான்….”

அதற்குமேல் அந்தச் சொற்களைக் கேட்டுக்கொண்டு நிற்க எனக்கு மனமில்லை. கனைத்தபடியே கதவைத் தட்டிவிட்டு நின்றேன். சட்டென பேச்சுக்குரல் நின்றுவிட, கூடத்திலிருந்த இருவருமே என் பக்கமாகப் பார்த்தார்கள். “தினத்தந்திய இங்கயே மறந்துட்டு போயிட்டன்….” என்று இழுத்தேன். அந்த அம்மா மேசையிலிருந்த செய்தித்தாளை எடுத்துவந்து என்னிடம் கொடுத்தார். நான் மீண்டும் காலணிகளை அணிந்துகொண்டு தெருவுக்கு வந்தேன்.

ஒருகணம் அண்ணியிடம் நான் கேட்டதைச் சொல்லிவிடலாமா என்றுதான் நினைத்தேன். ஏற்கனவே மனம் நொந்திருப்பவரை மேலும் அது நோகடித்துவிடும் என்று தோன்றியதால் அமைதியாகவே நடந்தேன்.

அங்கிருந்து நேராக மருத்துவமனைக்கே வந்தோம். விசிட்டர் நேரம் வரைக்கும் காத்திருந்தோம். அன்றும் அண்ணனுக்கு நினைவு திரும்பவில்லை. ஒரு பொம்மைபோல சுயநினைவின்றி கிடக்கும் அவரை மெளனமாக தள்ளிநின்று பார்த்துவிட்டுத் திரும்பினோம்.

மறுநாள் அந்த அம்மாவின் வருகைக்காக காத்திருந்தோம். அவர் வரவில்லை. ”அந்த அம்மா வரன்னு சொன்னாங்களே, காணமே ஏன்?” என்று தவித்தார் அண்ணி. நான் எதையும் சொல்லவில்லை. “வருவாங்கண்ணி, பாக்கலாம். இன்னும் நேரமிருக்குதில்ல” என்று சொல்லிவைத்தேன். ஆனால் விசிட்டர் நேரம் முடியும் வரைக்கும் கூட அவர் வரவில்லை. அண்ணனும் கண் திறக்கவில்லை.

அதற்கு அடுத்த நாள் மாலை விசிட்டர் நேரத்துக்குச் சரியாக அவர் வந்துவிட்டார். “நேத்து காலேஜ்க்கு போவ வேண்டிதா இருந்தது. அந்த வேலயே சாய்ங்காலம் வரைக்கும் இழுத்துட்டுது. அதுக்கு மேல எங்க வரதுன்னு நேரா ஊட்டுக்கே போயிட்டம்” என்றார்.

அவர் தன் சிறிய மணிபர்சிலிருந்து ஒரு திருநீறுப் பொட்டலத்தை எடுத்துப் பிரித்து அண்ணியின் முன் நீட்டினார். அண்ணி பயபக்தியோடு தொட்டு நெற்றியில் பொட்டுபோல இட்டுக்கொண்டார்.

நாங்கள் மூன்று பேரும் ஒன்றாகவே ஐசியு வாசல் வரைக்கும் சென்றோம். முதலில் அண்ணி சென்று வந்தார். பிறகு அந்த அம்மா சென்று திரும்பினார். இறுதியாக நான் சென்றேன்.

அண்ணன் இன்னும் சுயநினைவில்லாமலேயே கிடந்தார். உடலில் இருந்த கட்டுகள் மாற்றப்பட்டிருந்தன. சலைன் இறங்கிக்கொண்டிருந்தது. எங்கிருந்தோ பல குழாய்கள் புறப்பட்டு வந்து அவருடைய இரண்டு முன்னங்கைகளில் இணைந்திருந்தன. நான் அவர் நெற்றியை அப்போதுதான் கவனித்தேன். புருவங்களுக்கு நடுவில் ஒரு விபூதிக்கோடு தெரிந்தது.

அடுத்த படுக்கையில் படுத்திருந்த குமரேசன் குழறலாக “யாருடா அது புதுசா, விபூதி வச்சிட்டு போறாங்க?” என்று கேட்டான். “புது ஆளு இல்ல. பழைய ஆளுதான். அவருக்கு சொந்தக்காரங்க” என்றேன்.

4 Comments

 1. பறிகொடுத்தவர்கள் தான் அத்தனை கஸ்டதிற்கு மத்தியிலும் மனித தன்மையை வெளிப்படுத்துகிறார்கள். பரித்தவருக்காக வேண்டிக்கொள்கிறார்கள். கிளைமாக்ஸில் அந்த விபூதி மேட்டர் அழகு.

 2. நன்கு செதுக்கி செய்யப்பட்ட ஒரு சிறுகதை… உரையாடல்களில் நகரும் கதை…. மிக மிகச் சுருக்கமான விவரிப்புகள். மற்றபடி முக்கிய கதாபாத்திரத்தின் அத்தனை குணாதிசயங்களும் அவரது மனைவிக்கும், அவரை அண்ணி என்றழைக்கும் குடும்பத்துக்கு நெருக்கமான ஒரு பாத்திரத்திற்கும் இடையிலான பேச்சிலேயே  சொல்லப்படுகிறது.  
  மருத்துவமனையில் அடிபட்டு மூன்று நாட்கள் ஆகியும் கண் திறக்காமல் இருக்கும் அந்த மனிதரைக் கெட்டவர் என்று யாரும் சொல்லிவிடவில்லை. அவரை ஏமாற்றுக்காரர் என்று யாரும் சபிப்பதில்லை. நம்பிக்கை துரோகம் என்று மண்ணை வாரித் தூற்றுவதும் இல்லை. 
  எல்லோரிடமும் எளிதில் எத்தனை பெரிய தொகையும் கைமாற்றாக வாங்கத்தக்க வசீகர மனிதர்கள் சமூகத்தில் உண்டு. அவர்கள் இடறி விழும்போதும் பாதிக்கப்பட்டவர்கள் அவர் மீது இரக்கமே காட்டுவார்கள். தங்கள் பொருள் நஷ்டத்தையும் மீறி அவரை நேசிக்கத்தக்க அளவில் இந்த மனிதர் அவர்கள் ஒவ்வொருவர் வாழ்விலும் ஏதோ ஒரு விதத்தில் அவர்கள் உள்ளத்தைத் தொட்டிருப்பார். 
  இந்தக் கதையிலும் அப்படியான மனிதர்கள் வந்து போகின்றனர். அவர் குணமாகி வரவேண்டும் என்று பிரார்த்தனை செய்கின்றனர். எதற்கு, அவர் எழுந்துவந்து தங்கள் கடனை அடைத்துவிடுவார் என்றா….தெரியாது. ஆனால் தங்கள் சாபத்தால் அவருக்கு ஏதோ ஆகிவிட்டதாக உலகம் உணர்ந்துவிடக் கூடாது என்ற பதைபதைப்பு அவர்களிடம் இருக்கிறது. வந்து பார்க்கிறார்கள். வந்துவிடுவார் என்கிறார்கள். 
  சங்கிலியை இழந்த அந்த அம்மாள் பாத்திரம் புனைவு போல் தெரிந்தாலும், அப்படியான பெண்மணிகள் உண்டு. அங்கே கதை இன்னும் கம்பீரம் பெறுகிறது. அப்புறம் என்ன நடக்கிறது என்பது வாசகர் கற்பனைக்கு… அது படைப்பாளியின் வேலை இல்லை. ஒரு சிறப்பான ஓவியம் ஒரு புள்ளியில் நிற்கிறது, அங்கே முடிந்துவிடுவதில்லை என்கிறார் ஓர் அறிஞர். ஒரு சிறுகதையும் அப்படித்தான். 
  வாழ்த்துக்கள் பாவண்ணன்.சார் 
  எஸ் வி வேணுகோபாலன் 94452 59691

 3. அழகான, உணர்வுபூர்வமான கதை. இம்மாதிரி மனிதர்களை நான் பலமுறை சந்தித்திருக்கிறேன். எத்தகைய இரக்க குணம் இருந்திருந்தால் அந்தப் பெண்மணி முதலில் தன் கழுத்து நகையை இவருக்குக் கொடுத்திருப்பார்! அந்த உயர்ந்த இடத்தில் இருந்து இறங்கிவர விரும்பாததால் தான்,
  கல்லூரிக் கட்டணம் செலுத்தப் பணம் இல்லாதபோதும், நோயாளியின் மனைவி கொடுக்க முன்வந்த நகையை ஏற்க மறுக்கிறார். அந்தப் பெருந்தன்மையை வெளிப்படுத்த எழுதப்பட்டதே இக்கதை என்று கருதுகிறேன். -இராய செல்லப்பா, சென்னை.

Leave a Response

Top Reviews

Video Widget

gallery