Web Series

போர் சிதைத்த நிலத்தின் கதை (திரும்பிடும் பயணங்கள்….) 7 – மணிமாறன்

116views
Spread the loveசொற்கள் யாவும் ஒரு பொருளுடையவை அல்ல.இயக்கம் என்றால் அது மக்கள் நலன் சார்ந்ததாக இருக்க வேண்டும் என்ற எந்த கட்டாயமும் இல்லை.நம் காலத்தில் வலது கருத்தியலைப் பின்பற்றுபவர்கள் கூட தங்களை இயக்கக் காரர்கள் என்று  அழைத்துக் கொள்ளவே விரும்புகிறார்கள். இப்படித்தான் புரட்சி,போர்க்குணம், நவீனம், ஏன் பின் நவீனம்  என யாவற்றின் மீதும் பன்மைத்துவ உரையாடல்களை நிகழ்த்த வேண்டும் என்பது காலத்தின் கோரிக்கையாக நம்முன் நிற்கிறது.. இதே போல ஏதிலி என்னும் சொல்லிற்கும் ஒற்றைத் தன்மையிலான அர்த்தத்தை எவரும் உருவாக்கிட முடியாது. புலம் பெயர்தல்,ஏதிலி எனும் சொற்கள் இனி ஒருபடித்தான சொற்கள் இல்லை.அவற்றிற்குப் பல அர்த்தங்கள் இருக்கின்றன.பத்து மைல் தொலைவிற்குள் கூட திரும்ப முடியாத பயணங்களைத் தற்காலத்தில் சாதியால் ஏற்படுத்த முடிகிறது.திரும்பவே  சாத்தியமற்ற தொலைதூர பயணங்கள் மட்டுமில்லை புலம் பெயர்தல்.நாடு விட்டு நாடு,கண்டம் விட்டு கண்டம் செல்வதைப் போலவே இன்றைக்கு ஒரே ஊரில் கூட திரும்பவே முடியாத இடத்தை நோக்கிய புலம் பெயர்தலும்  நடக்கவே செய்கிறது…புலம் பெயர்ந்து வாழ்பவர்கள் சொந்த ஊரை,உணவை,குலசாமிகளை  அதன்  மீதான ஞாபகங்களை மறக்க முடியாமல் தடுமாறுகின்றனர் என நம்மில் பலரும் புரிந்து வைத்திருக்கிறோம். ஆனால் நினைக்கவே கூடாத ஞாபகங்களோடும்,சாதி ஏற்படுத்திய துயர வடுக்களைச் சுமந்தும்  மனிதக் கூட்டம் இந்த நிலத்தில் வாழவே செய்கிறது.பின்னைய கருத்தியலுக்குச் சாதியத் துவேஷம் தவிர வேறு எந்தக் காரணமும் இல்லை.

தான் வந்து சேர்ந்த நிலத்தோடு தன்னை மனதளவில் பொருத்திக் கொள்ள முடியாமல் தடுமாறிக் கிடக்கும் மனிதர்களின் கதையைப் பலரும் பேசியிருக்கிறார்கள்.போர் நிகழ்ந்து கொண்டிருந்த நாட்களில் இலங்கையிலிருந்து  லண்டன்,பிரான்ஸ் எனத் தப்பிப் பிழைத்த நாட்களின்  கதைகளை நிறைய வாசித்திருக்கிறோம். அது மாதிரியான வாழ்முறை ஒன்றை குடும்பத்தின் நாட்குறிப்பைப் போல நகரும் மொழியின் வழியாக நமக்குக் கடவுச் சீட்டு எனும் நாவலால்  தந்திருக்கிறார் எழுத்தாளர் வி..ஜீவகுமாரன். குடும்பத்தின் கதை நகரும் கரைகளில் தென்படுவது எது?.பொருந்த முடியாமல் தவிக்கும் தமிழ்க் குடும்பங்களின் வாழ்க்கைப்பாடுகள் தான்..இதற்குள் மொழித்துவேஷம்,நிறவேற்றுமை ,இன ஒவ்வாமை என வேறு வேறு காரணிகள் அரசியல் வடிவம் எடுக்கின்றன.

கடவுச்சீட்டு - வி.ஜீவகுமாரன் - நற்றிணை | panuval.com

                “இன்னும்  இருபது நிமிடங்களில் எமது UL 553 எயர்லங்கா விமானம் பிராங்போர்ட் விமானநிலையத்தை வந்தடைய இருக்கிறது. என்ற முதல் வரியில் துவங்குகிற நாவல் ..இன்னும் இருபது நிமிடத்தில் எமது UL 554 எயர்லங்கா விமானம் பண்டார நாயக்கா விமான நிலையத்தினை வந்தடைய இருக்கிறது….எனும்  கடைசி வரிகளில் நிறைவடைகிறது. இவ்விரண்டு  புள்ளிக்கும் இடையே அல்லாடும் தமிழ்க் குடும்பங்களின் அலைச்சலின் கதையே கடவுச்சீட்டு எனும்  புதிய நாவல்.நாடு கடந்து ரகசியமாகப் பயணித்து வந்த பிறகு சட்டெனத் தடயங்களை அழித்திட வேண்டிய பதட்டம் எவ்வோரையும் தொற்றிக் கொள்கிறது ..அதிலும் விமான நிலைய மலசலக் குழிக்குள் தண்ணீர் பொத்தான் எத்தனை முறை அமுக்கப்படுகிறது என்பதிலிருந்து இங்கே அழித்தொழிக்கப்பட்டது  எத்தனை கடவுச்சீட்டுகள். எத்தனை மனிதர்கள் நாடு கடந்து வந்திருக்கிறார்கள்.தடயங்களை ஏன் காலாவதியாக்கிட வேண்டுமென்பதை நாவல் எளிய சம்பவங்களின் வழியாகப்  புரிந்து  கொள்ள வைக்கிறது.. ஆழ்மன நினைவுகளின் தொகுப்பு தானே இலக்கியம்.மலையிலிருந்து கடலுக்கும்.கப்பலிலிருந்து பாலைவனத்திற்கும் ஒற்றை நொடியில் தாவித் திரியும் ஆற்றல் பெற்றது மனம்.இங்கும் கூட பிராங்க்பர்ட் விமானநிலைய மலசல குழிக்குள் இறங்குகிற நீரின் சத்தம் அவனை இலங்கையின் நிலத்திற்கு இழுத்துப் போகிறது.காதல்,திருமணம்,மரணம் என யாவும் இங்குப் போர்க்களத்தில் தான் நடந்தேறுகிறது.தமிழ்,சுபா எனும் நாவலின் மைய கதாபாத்திரங்களின் காதல் வயப்படும் இடம் யாழ்ப்பாணம் மையவீதி.1981ன் கலவர நாள்.வீதிக்கு நடுவிலிருந்த புத்தக நிலையம் தீயில் எரிகிறது.96000 புத்தகங்கள் எரிக்கப்பட்ட சாம்பல் மேட்டிலிருந்து கிளம்பிய தூசிக்கு நடுவே காதலைக் கண்டடைகிறார்கள் இருவரும்.கலவரத்தின் வெப்பத்தைப் பதிவு செய்திட யாழ்ப்பாணத்தில் ஈழநாடு பத்திரிக்கை கூட இல்லை.எல்லாம் தீயில் பொசுங்கி விட்டது. காட்சிகளின் வழியாகக் காலத்தின் துயரை வாசக மனதிற்குள் கடத்திடும் ஆற்றல் எப்போதும் புனைவிற்கு உண்டு.கச்சிதமாக வரலாற்றின் பக்கத்தைத் திறந்து வைக்கிறார் எழுத்தாளர்.காதல் கைகூடாமல் போவதற்கு சமூகத்திற்கும், பெற்றோர்களுக்கும் பெரிய,பெரிய காரணங்கள் தேவையில்லை.அற்ப காரணங்களினால் கருகிய காதல் கதைகள் லட்சம் தேறும்.இங்கே தமிழும்,சுபாவும் ஒரு சாதிக்காரர்கள் தான்.ஆனாலும் அவர்களுக்கிடையே நிரப்பமுடியாத ஏற்றத்தாழ்வு இருந்து வந்தது.இரவோடு இரவாக இருவரும் தப்பிப் பிழைத்து டென்மார்க் வந்து சேர்கிறார்கள்.புலம் பெயர்தலுக்குப் போர்க் காரணங்கள் மட்டும் இல்லை.போராளிக்குழுக்களிடம்இருந்து தப்பிக்க.என்ன இ.ருக்கு இந்த. நிலத்தில் என எரிச்சலுற்று என விதவிதமான காரணங்கள் இருக்கின்றன.அப்படியே வந்து சேர்ந்தவர்களும் கூட அந்த நிலத்தில் ஆசுவாசப் படுத்திக் கொண்டு வாழ்வதும்,நிலைபெறுவதும் அப்படி ஒன்றும் எளிதாயிருக்கவில்லை…

                      விமானத்திலிருந்து இறங்கி போலிஸ் வாகனத்திற்குப் போவதில் துவங்கிய மன அவஸ்தை வழிநெடுக தொடர்கிறது.ஜெர்மன் அகதி முகாமில் ரகசியமாகத் தப்பி ஸ்காண்டாண்டிநோவிய நாடுகளுக்குச் செல்லவே விரும்புகிறார்கள்.இரவோடு இரவாக ஸ்வீடனுக்கோ,டென்மார்க்கிற்கோ,நார்வேவிற்கோ கடத்திச் சேர்க்க ஏஜென்சிஸ் இருக்கிறது.அந்த நாடுகளின் அகதிகள் சட்டம் இலகுவானது என்பது மட்டும் காரணமில்லை.அகதிக்கான சின்ன சின்ன உரிமைகள்.வாழ்வதற்கான ஏற்பாடுகள் ஜெர்மனியை விட எளிதென்பதால் பல்வேறு நாடுகளிலிருந்து வரும் அகதிகளைப் போலவே தமிழர்களுக்கும் இதுவே எளிதாக இருக்கிறது.சர்வதேச அகதிகளின் சட்டத்தைத் துளியளவு மதிக்காத நாடுகளில் ஒன்று இந்தியா என்பதும்,அதற்காக எந்த குரலையும் எழுப்ப யோசிக்காதவர்கள் என்பதும் கடும் துயர்தான்..ஜெர்மானிய அகதி முகாமிலிருந்து கடத்தப்பட இருக்கிறோம் அல்லது கடத்தலுக்கு உடன்பட்டுப் போகப் போகிறோம் என்பது எத்தனை வலியானது.இரவோடு இரவாக நிலா வெளிச்சம் கூட அற்ற கடும் இருளில் ஊர்ந்து நகர்கிறது மனிதத்திரள். முள்வேலிகளுக்கு நடுவில் பலபத்து வருடங்களைக் கடத்திய கூட்டம் என்பதால் இது மாதிரியான சாகச பயணங்கள் மறுபடியுமா?இங்கேயுமா?எனும் கேள்வியையே அவர்களுக்கும்  ஏற்படுத்துகிறது. நாவலுக்குள் இரட்டைப் பயணங்கள் வருகிறது.நித்தமும் லட்சக்கணக்கில் இதே மாதிரியான துர் பயணங்கள் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கும். அகதிகளின் பயணங்கள் உலகெங்கும் வலி மிகுந்ததாகவே இன்றுவரையிலும் கூட நடந்தேறுகிறது.ஒன்று பெட்ரோல் ஏற்றிச் செல்லும் வாகனம்.மற்றொன்று பன்றிகள் அடைத்துச் செல்லும் வண்டி.பதட்டம் தொற்றிக் கொள்ள நகரும் பயணத்தின் முடிவில் .மரணம் நிகழ்கிறது.நாத்தம் சகிக்காது ஏறிய வண்டி மரணத்திற்குள் தள்ளிவிடும் என ஒரு போதும் நினைத்திருக்க மாட்டார்கள்.இத்தனை அலைச்சல்களும்,அவஸ்தைகளும் எதற்காக?உயிரோடு இருப்பதற்காகத் தானே.மரணத்தைக்கூட மரியாதையாக எதிர்கொள்ள முடியாத பெருந்துயரத்தை அகதி வாழ்வினில் சந்தித்துக் கொண்டே இருந்திருக்கிறார்கள் மனிதர்கள்….

கடவுச்சீட்டு'' ஒரு பார்வை – மேமன்கவி- | Jeevakumaran

போர் எந்த இனத்தைச் சேர்ந்தவராயினும் அவர்களை நிர்மூலமாக்கி விடுகிறது.பிறந்து வளர்ந்த நிலத்தில் வேரின் அடிநுனி வரை அறுத்து வெளியேற்றுகிறது.இத்தோடு அவ்வளவு தான் இனி இந்த வேலிச் சனியன்களைத் தாண்ட அவசியமில்லை என நினைத்து வெளியேறினால்,வழிநெடுக முள்வேலிக்கம்பிகளும்,காவல் தடையரண்களும் அவர்களைத் தடுத்து நிறுத்திக் கொண்டேயிருக்கின்றன. என்றைக்கு வேலிகளைத் திறக்க.இயல்பாயிருக்க எனும் பதட்டம் இன்றுவரையிலும் கூட தீர்ந்தபாடில்லை.

குடியேறிகள் அந்தந்த நிலத்தினோடு பொருந்திடக் கடைசிவரை முயற்சித்துக் கொண்டேயிருக்கிறார்கள். நிலத்தில் எவரும் தன்னை பொருத்திக் கொள்ள அந்த நிலத்தின் மொழி மிகவும் முக்கியக் கருவியாகிவிடுகிறது.டென்மார்க்கில் இருந்து கொண்டு டேனிஷ் மொழியைக் கற்காமல் இருக்க முடியாது. மொழியைக் 

கற்பது என்பது வெறும் மொழியைக் கற்பது மட்டுமல்ல,அந்த பிரதேசத்தின் கலாச்சாரத்தையும் சேர்த்து உள்வாங்கி தன்னையே தகவமைத்துக் கொள்வதாகும்..அது ஒன்றும் அவ்வளவு எளிதாக இருக்காது.ஒருவிதத்தில் இந்த நாவல் உணர்த்தும் குறிப்பு கூட பொருந்த முடியாமல் தடுமாறும் மனிதர்களின் உளச்சிக்கல்களையே.

                          தப்பிப்பிழைத்தவர்கள்,ஏதிலிகள்,காட்டான்கள் என விதவிதமான வசைச் சொற்களால் அழைக்கப்படுகிறார்கள்.அவர்கள் எந்த நிலத்திலும்  முதலில் எதிர்கொள்ளத் தயங்குவது உணவு முறைகளைத்தான்.அதிலும் யாழ்ப்பாணத்து சைவ வெள்ளாள குடும்பங்கள் வெள்ளிக்கிழமையைப் பவித்திரமாக எதிர்கொள்ளும்.ஆனால் ஐரோப்பிய விமானம் அவர்களைப் பன்றிக்கறி தந்தே வரவேற்கிறது.பருப்பு ஆணம் அற்ற வெள்ளிக்கிழமையை ஏற்க மனம் மறுக்கிறது.அப்போது துவங்கிய கசப்பு வழி நெடுக வந்து கொண்டேயிருக்கிறது.

உணவில் மட்டுமல்ல,பேச்சில்,உடையில், நடவடிக்கையில் தொடரும் நேரெதிர் நடைமுறைகளைச் சகிக்க முடியாமல் போய்விடுகிறது.

                          ஞாயிற்றுக்கிழமை கொண்டாட்டங்கள் வேறு வேறு ஆக இருக்கிறது தமிழர்களுக்கும், ஐரோப்பியர்களுக்கும்.கடற்கரை சூரியக்குளியல்களை அசூசையாக எதிர்கொள்கிறது தமிழ் மனம்.கடற்கரை குறுமணலில் உணர்ச்சி மிகுதியில் புரள்கின்றன வெற்று  உடல்கள்.பால்பேதமற்ற அந்த வெற்று உடலங்கள் இலங்கைத் தமிழர்களுக்கு வேறுவேறு ஞாபகங்களைத் திறக்கிறது.எத்தனை மனித உடலங்கள் காயங்கள் கொப்பளிக்கும் வெற்று உடம்போடு விழுந்து கிடந்தது நிலத்தினில்.மனம் வெதும்பிக்  காணச்சகிக்காத அந்த காட்சிகள் திரும்பத் திரும்ப நினைவூட்டுவதால் ஞாயிற்றுக்கிழமை கொண்டாட்டங்களுக்காக அதன் பிறகான நாட்களில் கடற்கரைக்குச் செல்லவில்லை.மாறாக டேனிஷ் மொழி கற்றுக் கொள்வதாக ஆக்கிக் கொள்கிறார்கள்.வெற்று உடலங்களைப் பார்த்த தமிழ் ஆட்கள் எண்ட மக்கள் இனி ஒருபோதும் டென்மார்க் கூட்டி வரவே மாட்டேன் என்கிறார்கள்.இப்பிடியா மனுஷிகள் வெட்கம் கெட்டுத் திரியுங்கள் என ஏசிக் கடக்கின்றனர்.

                        நாடு கடந்த தமிழ் ஈழத்திற்கான வெகுமதியும்,ஈர்ப்பும் சற்றே குறைந்திருப்பதற்கான புள்ளியையும் நாவல் பல இடங்களில் கோடிடுகிறது. செஞ்சிலுவைச் சங்கம் எனும் பெயரில் தமிழர்களைத் திரட்டுகிறார்கள்…தமிழர் அமைப்பு என்றால் அனுமதி மறுக்கப்படும் என்பதால் இப்படியான ஏற்பாடு. இலங்கையில் நடக்கும் சகல அட்டூழியங்களையும் அழித்திட நாம் இங்கிருந்தே முயற்சி செய்கிறோம் எனும் குரலை டென்மார்க்கில் வசிக்கும் தமிழர்கள் ரசிக்கவில்லை.மாறாக ஈழத்தில் நீங்கள் எந்த அரசியல் அமைப்போடு சேர்ந்து இயங்குகிறீர்கள் எனும் கேள்வியைக் கேட்கின்றனர்.அரசியல் நீக்கம் பெற்ற தன்னார்வ குழுக்கள் உணர்ச்சியைத் தூண்டி பணம் சம்பாதிக்கின்றன உலகெங்கும் என்பதற்கான தகவலே நாவல் நகர்த்தும் இந்தக் காட்சி..

வி..ஜீவகுமாரன்

                      தீட்டுக்கழித்தல் எனும் துடக்கு கழித்தல் என்பதைக் குறித்த தர்க்கம் மிகமுக்கியமான பகுதி.கடல் கடந்து,விலகி வெகுதூரம் வந்தபிறகும் விட்டுவிலகச் சாத்தியமற்று மனதோடு சப்பென ஒட்டிக்கிடக்கிறது சாதி எனும் கருத்தியல்.தமிழ்,சுபா எனும் இரண்டு காதலர்கள் தப்பிப் பிழைத்து அகதியாக வந்து டென்மார்க்கில் சொல்லிக் கொள்கிற மாதிரி வாழக்கையை அமைத்துக் கொள்கிறார்கள்.குழந்தை பிறந்த பிறகு இலங்கையில் இருக்கும் இருவரின் உறவுகளும் ஏற்கின்றனர்.ஏற்பதில் அவர்களுக்குத் தடையாக இருந்த பணம் வசதி உள்ளிட்ட பொருளாதார காரணங்கள் காலாவதியாகிவிடுகிறது.பொருளாதார ஏற்றத்தாழ்வைச் சகித்துக் கடக்கும் தமிழர்களால் சாதியைக் கடக்கவே முடியவில்லை.நாவலுக்குள் வருகிற விருந்தொன்றில் சில்வர் டம்ளர்களில் தரப்பட்ட பால் கண்ணாடி டம்ளர்களுக்கு மாற்றப்படுகிறது.வேறு எந்தக் காரணமில்லை.செந்தில் எனும் இளைஞன் முன் இரண்டே கேள்விகள்தான் வீசப்படுகிறது.நீ எந்த ஊரூ?.உங்க. அப்பா என்ன செய்யிறாரு?இவ்வளவு போதுமானதாக இருக்கிறது புழங்கு வெளிகளை முடிவு செய்ய.எல்லாம் சாதிப்படியே நடக்கிறது. .பிறகு ஆத்திரமுற்ற இளைஞன் கண்ணாடி சன்னல்களை உடைக்கிறான்.

      செந்திலும்,சிவாஜினியும் தமிழ்,சுபா போலத்தானே காதலித்தார்கள். பிறகு எதற்காக சிவாஜினியை அழைத்துக் கொண்டு லண்டன் போகிறது குடும்பம்.எல்லோரும் தமிழர்களாக தங்களை உணர்வதைப் போலவே அவரவர் சாதியாகவும் தங்களை அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள். யாழ்ப்பாணத்து தமிழர்களுக்கு எங்கு போனாலும் தன்னைப் பற்றிய பெருமிதமும்,சாதிக் கர்வமும் துளியும் குறைவதில்லை.அதனால் தான் லண்டன் தப்பிப் போகும் போது இது ஐரோப்பாவா இருக்கிறதால இப்பிடி கிடந்து அலைய வேண்டியதாகி போச்சு.இதுவே நம்மூரா இருந்தா இரண்டு பேத்தையும் கொலை பண்ணிட்டு போய்க்கிட்டே இருப்போம் என்கிறாள் சிவாஜினியின் தாய்.இதுதான்  யதார்த்தம் என்பதைப் போல நாவல் நகர்த்தும் காட்சிகளைக் கட்டுடைத்து விமர்சன மன நிலையோடு அணுக வேண்டியுள்ளது.சாதி ஆணவத்தை விட்டு ஒழிக்க முடியாத மனமே நிஜம்..பெட்ரோல் வண்டியில் ஏறி செத்துப் பேபோன பெரியவரும்,உச்சி ராட்டினத்திலிருந்து குதித்து இறந்து போன செந்திலும் கூட போரினால் பலி எடுக்கப்பட்ட மனித உயிரிகள்தான்.

          கடல் கடந்து போன பிறகும் கூட பெண் உடல் குறித்து இயங்கும் யாழ்ப்பாண மனம் விழித்தபடியே இருக்கிறது. தாங்கள் மட்டுமல்ல டென்மார்க்கில் பிறந்து வளர்ந்த தங்களின் குழந்தைகளும் கூட யாழ்ப்பாணம் வாசிகளாக வளர வேண்டும் என விரும்புகிறார்கள். யதார்த்தத்திற்குப் புறம்பான நிலையிது என்பதை ஏற்க மறுக்கிறார்கள். நிஜத்தில் அவர்களால் இலங்கைத்தீவின் வாழ்க்கைக்குள்தான் பொருந்திப் போக முடியாது. தன்னுடைய பெண் குழந்தைகளின் உடலின் மிகச் சாதாரண மாற்றத்தைக் கூட சடங்கு, ஆச்சார கண்கொண்டே பார்க்கிறது தமிழ்மனம். ஆனால் டேனிஷ் கலாச்சாரத்திற்கு இதுவெல்லாம் கிடையாது. மாறாகப் பள்ளிக்கூட சுற்றுலாவிற்குச் செல்லும் போது பன்னிரண்டு வயது பெண்குழந்தை கொண்டு செல்ல வேண்டிய பொருட்களின் பட்டியலில் ஏன் இல்லை கர்ப்பத்தடை மாத்திரை எனப் பள்ளி நிர்வாகமே கேட்கிறது.. எதிர்கொள்ளவே முடியாத கேள்விதான் இது தமிழக்குடும்பத்திற்கு. உங்களை நம்பித்தானே நாங்கள் எங்கட பிள்ளைகள அனுப்பி வச்சோம் என பள்ளிக்கூட முதல்வரைப் பார்த்து கேட்கிறான் தமிழ்த்தகப்பன். இன்னும் எத்தனை நாளைக்கு நீங்கள் இப்படி யூஸ்லஸ் செண்டிமெண்ட் பேசிக் கொண்டே இருக்கப் போகிறீர்கள் என்கிறார். ஒருவிதத்தில் முதல்வரின் இந்த பதில் வழிக் கேள்வி மொத்த தமிழ்ச்சமூகத்தின் மீதும்தான். அதுவரையிலும் தன்னை டென்மார்க் வாழ் தமிழர்களின் பிரதிநிதியாக நம்பிக் கொண்டிருந்த தமிமும், சுபாவும் அதன்பிறகு நொறுங்கிப் போகிறார்கள்.பிள்ளைகள் ஒருவர் பின் ஒருவராக டென்மார்க்கியர்கள் போல நடந்து கொள்வதை இவர்களால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. அது மட்டுமல்ல உலகின் தேர்ந்த உளவியல் நிபுணர் எனப் பெயர் பெற்ற நீங்கள் ஏன் இப்படி உங்கள் குழந்தைகளையே ரகசியமாக கண்காணிக்கிறீர்கள் எனக் கேள்வி கேட்கிறார்கள் குழந்தைகள்.அதிர்ச்சியடைகிறார்கள் பெற்றோர். மனமும் உடலும் அந்த நிலத்தை விட்டு வெகுதூரம் விலகுகிறது.. குழந்தைகளை,வேலையை வசதியை விட்டு சொந்த நிலத்திற்கே திரும்புகிறார்கள். கூடு திரும்பியவர்கள் சொந்தக் கூடுகளை நோக்க முடியாமல் தடுமாறி எங்கெங்கே அலைக்கழிக்கிறார்கள்…. உளவியல் நிபுணரான சுபாவிற்கு அவருக்குக் கைவந்த நிபுணத்துவம் பிறருக்குத்தான். தன்னுடைய குடும்ப வாழ்வு சிதைகிற போது நிபுணத்துவம் பயனற்று போனது ஒரு விசித்திர முரண்தான்.

   ஒரு குடும்பத்தின் கதைதான். ஆனாலும் அகதி வாழ்வின் பெரும் துயரங்கள். ஏதிலி எனச் சொந்த மக்களாலும் ஏளனம் செய்யப்பட்ட வாழ்வின் பகுதிகள் எனச் சாத்தியமானவற்றை எழுதியிருக்கும் நாவல் கடவுச்சீட்டு ….             .

(வி..ஜீவகுமாரனின் கடவுச்சீட்டு எனும் நாவலுக்கு எழுதப்பட்ட வாச்சியம்.)

பெரும் எதிர் பார்ப்போடு உங்களுடன் நானும்….

ம.மணிமாறன்……தொடர் 1ஐ படிக்க:  போர் சிதைத்த நிலத்தின் கதை (ஈழத்துப் படைப்புகள்) 1 – மணிமாறன்

தொடர் 2ஐ படிக்க: போர் சிதைத்த நிலத்தின் கதை (ஈழத்துப் படைப்புகள்) 2 – மணிமாறன்

தொடர் 3ஐ படிக்க: போர் சிதைத்த நிலத்தின் கதை (கடல் கடந்தும் தீராதது) 3 – மணிமாறன்

தொடர் 4ஐ படிக்க: போர் சிதைத்த நிலத்தின் கதை (ஆவணமாகாத துயரங்களின் கதை….) 4 – மணிமாறன்தொடர் 5ஐ படிக்க: போர் சிதைத்த நிலத்தின் கதை (அலைதலின் நிமித்தம்) 5 – மணிமாறன்

தொடர் 6ஐ படிக்க: போர் சிதைத்த நிலத்தின் கதை (நினைவினுள் புரளும் சொற்கள்) 6 – மணிமாறன்

தொடர் 7ஐ படிக்க: போர் சிதைத்த நிலத்தின் கதை (நினைவினுள் புரளும் சொற்கள்) 7 – மணிமாறன்

தொடர் 8ஐ படிக்க: போர் சிதைத்த நிலத்தின் கதை (சிதைவுக் கற்களின் பாரம்) 8 – மணிமாறன்