Book Review

நூல் அறிமுகம்: எழுத்தாளர் இமையத்தின் “வாழ்க வாழ்க” – மதிவதனி இராஜசேகரன்(இந்திய மாணவர் சங்கம்)

68views
Spread the love


அரசியல் வாதிகளின் செயல்பாடுகள் சாதாரண மக்களை எப்படி அலைக்கழிக்கின்றன என்பதை எடுத்துக்காட்டும் ஒரு குறுநாவலாகத் திகழும் “வாழ்க வாழ்க” என்னும் இப்புத்தகம் என்னைப் பேரளவில் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஓர் எழுத்தாளர் தன் எழுத்துக்களால் வாசகரின் உள்ளத்தையும் தாண்டி மூளையையும் எப்படித் தொட முடியும் என்கின்ற வித்தையை நான் இமையம் அவர்களின் ஒவ்வொரு புத்தகங்களிலிருந்தும் ஓயாமல் பெற்றுக் கொண்டே இருக்கிறேன். அவ்வட்டார வழக்குச் சொற்களுள் ஒளிந்திருக்கும் அழகினை என்னவென்று சொல்வேன். இப்படி வட்டார வழக்கு வார்த்தைகளை வைத்து ஒரு எழுத்தாளர் விளையாடுகிறார் எனில் அவரின் சமூக ஆற்றல் எத்தகையது என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
மக்களுள் ஒருவனாக, மக்களின் வாழ்வாதாரங்களை ஆய்ந்தறிந்து, எப்புள்ளியில் மக்கள் தம் அறிவினை இழந்து அறியாமையினுள் புகுத்தப்படுகின்றனர், அரசியல் ஆசைகளுக்காக பாமர மக்களை அரசியல் கட்சிகள் உளவியல் ரீதியாகவும் உடல் ரீதியாகவும் எத்தகைய துன்பத்திற்கு தள்ளப்படுகின்றனர் எனப் பல உண்மை நிலவரங்களை எழுத்துக்களின் வடிவில் நம்முள் காட்சிப்படுத்துகிறார் இமையம். ஒரு பொட்டலம் பிரியாணிக்காகவும் 500 ரூபாய் பணத்திற்காகவும் குடிக்கத் தண்ணீர் இல்லாமல், மண்டைக் காய்ந்து, உடல் சோர்வுற்று, மனதில் வலுவிழந்து, வீட்டில் தனியே விட்டு வந்திருக்கும் பொறுப்பற்ற ஆண் மகனுக்கு வாக்கப்பட்ட தன் மகளையும் பேத்தியும் எண்ணித் துடித்திடும் ஓர் இதயம் கொண்டு, சில நேரம் சொர்ணத்தின் நகைச்சுவைக்குச் சிரித்திடும் தோரணம் கொண்டு, முகம் தெரியாத, எங்கோ விமானத்தில் வானை அளந்து பறந்து கொண்டு வந்திருக்கும் ஒரு கட்சித் தலைவிக்காக உச்சிவெயிலில் காலை முதல் மாலை வரை வெந்து கொண்டிருக்கும் ஆண்டாளின் நிலைமையை என்னால் மிகத் தெளிவாக உணர்ந்து கொள்ள முடிகிறது. காரணம், ஆசிரியர் பயன்படுத்திய நடையும் உரையும். “இப்போலாம் யாரு சார் சாதி பாக்குறா?” எனச் சொல்லும் இந்துமத காவலர்கள் அனைவருமே திரும்பிப் பார்க்க வேண்டிய ஒரு புத்தகம் இது என்பேன். ஒரு நாற்காலிக்காக சண்டையிடும் கூட்டத்தினை நீங்கள் நேரில் பார்க்காவிட்டாலும் இக்கதையை படித்தால் போதும் உங்கள் கண்முன் அந்நிகழ்வு திரையாய் வெளிப்படும். பிறப்பின் அடிப்படையில் உருவான சாதி வேறுபாடுகளை ஒரு நாற்காலியைக் கொண்டு இமையம் சாட்டையால் அடித்துள்ளார்.


ஓர் அரசியல் பொதுக்கூட்டம் நிகழ்வதற்கு தேவைப்படும் பண மதிப்பை ஆண்டாள், சொர்ணம் மற்றும் கண்ணகி ஆகிய மூவரும் விவரிக்கும் முறை நான் இதுவரை சென்றிருந்த பொதுக் கூட்டங்களுக்கு எவ்வளவு செலவாயிருக்கும் என என்னை சிந்திக்க வைத்தது. தண்ணீர் பாக்கெட்களுக்காக அல்லல்படும் நிறைய மனிதர்களை நான் கடந்து வந்துள்ளேன். ஆனால் அப்போதெல்லாம் அவர்களின் தாகத்தை உணர முடியாது எனக்கு ஆசிரியர் பயன்படுத்திய வார்த்தைகள் புரிய வைத்தது. எவ்வித முன்னேற்பாடும் இன்றி ஒரு அரசியல் கூட்டம் நிகழ்ந்தால் அதில் கலந்துகொண்டுள்ளும் ஒவ்வொரு மனிதருக்கும் தனிப்பட்ட வாழ்வியல் போராட்டங்கள் உண்டு என்பதனை மிகவும் எதார்த்தமாக வரைந்துள்ளார். மேலும் வெங்கடேசப் பெருமாளின் அரசியல் ஆற்றலைப் பற்றி எழுதாமலிருக்க என்னால் முடியவில்லை. தனக்கென ஒரு பாதை அமைத்து அரசியலில் முன்னேறி பல்லாயிரக்கணக்கான மக்களின் பொறாமைக்குரியவனாக இருக்கிறான் என்றாலும் தன் ஜாதியப் பெருமையை காப்பாற்றும்  ஒருவனாகத்தான் அவ்வூர் மக்கள் அவனை நினைத்தனர். இப்போக்கினை என்னால் நிகழ்கால அரசியல் வாதிகளுடன் ஒப்பிட்டுப் பார்க்க உதவியாக இருந்தது. இன்றைய அரசியல் வாதிகளும் தங்களின் அரசியல் நோக்கத்திற்காக எண்ணற்ற குளறுபடிகளை செய்து வருகின்றனர் என்பதை நாம் நன்கு அறிவோம். மேலும் ஒரு பெண்ணை ஆளுங்கட்சியின் தலைவியாக சித்தரித்தது எனக்கு மறைந்த முன்னாள் முதல்வரை நினைவூட்டியது எனினும் அரசியல் சூழலில் ஆணாதிக்கத்தை உடைக்கும்விதமாக இது இருப்பதனால் மெச்சுகிறேன்.

கிராமப்புற பெண்களின் உள்ளுணர்வை மிகச் சிறப்பாக இப்புத்தகம் விளக்குகிறது. அரசியல்வாதிகளின் பிடியில் சிக்கிக் கொண்டிருக்கும் நம் கதையே இது‌. தேர்தல் காலங்களில் மக்களைச் சந்தித்து வாக்குறுதிகள் அளித்துவிட்டு தேர்தலில் வெற்றி பெற்ற பின் மக்களின் நலனில் சிறிதளவும் நேரத்தை செலவிடாமல் தன் சொந்த சித்தாந்தங்களையும் குறிப்பிட்ட சமூகத்தின் முன்னேற்றத்திற்காகவும் உழைக்கும் தலைவர்களை நாம் கண்டுள்ளோம். “மக்களே, நீங்கள் தான் என் உயிர் மூச்சு; உங்களுக்காகவே நான் அரசியல் சேவை செய்கிறேன்; உங்களுக்காகவே நான் அரசியலில் இறங்கினேன்; உங்களுக்காகவே என் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணிப்பேன்; என் நலம் முன் மக்களின் நலம் தான் எனக்கு மிகவும் பெரியது” என வெறும் வாயால் வடைச்சுட்டுக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகளுக்கு எல்லாம் இமையம் தன் கண்ணாடி எழுத்துக்களால் அவரவர் முகங்களை அடையாளம் காட்டியுள்ளார். நெடு நேர காத்திருப்புக்குப் பின்னர் தமிழ்நாடு உழைப்பாளர் முன்னேற்ற கழகத்தின் தலைவி விமானத்திலிருந்து இறங்கி காரில் ஏறியதும்; மேடைக்கு வந்ததும்; கையசைத்து காட்டியது என எல்லாவற்றையும் ஆண்டாள் வியப்புடன் உற்று நோக்கிய அதே கணம் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே தடுப்பாக கட்டப்பட்டிருந்த சவுக்கு கழிகளில்  மடமடவென்று  முடிகிற சத்தம் கேட்க 100, 200 மீட்டர் தூரத்துக்கு சைக்கிளில் ஏறி இருந்த ஆண்கள் எல்லாரும் அப்படியே பெண்கள் பக்கமாக சரிந்து விழுந்தனர். இவ்விபத்தில் குழந்தைகள் உட்பட 7 உயிர்கள் பரிதாபமாக பிரிந்தது. கூட்டத்தில் திக்கற்று நிற்கும் மனிதர்கள் ” ஐயோ போச்சே போச்சே” என அலறுவதன்றி வேறென்ன செய்ய முடியும்! அக்கூட்டத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்த கூச்சல், குழப்பம், சாது, கை, கால் முறிவு பற்றி எதுவும் தெரியாமல் அக்கட்சித் தலைவி “என் உயிரின் உயிரான; உடலிலும் உடலான; கண்ணிலும் கண்ணான என் உயிர் மூச்சினும் மேலான வாக்காளப் பெருங்குடி மக்களே! நடைபெற இருக்கின்ற சட்டமன்ற தேர்தலில் என் கட்சி வேட்பாளர்களுக்கு உங்களிடம் வாக்கு கேட்க வந்திருக்கிறேன் என கையில் வைத்திருந்த காகிதத்தைப் பிரித்துப் பார்த்து சத்தமாக தன்போக்கில் பேசிக்கொண்டிருந்தார் என நான் படித்த நேரத்தில் என் நினைவுக்கு வந்தது எல்லாம் ஒரு ஜீ தான். நாட்டில் நிலவுகின்ற சர்ச்சைகளையும், ஜாதி மதக் கலவரங்களையும், வேலையில்லாத் திண்டாட்டத்தையும், மாணவர்களின் பிரச்சனைகளையும், பெண்ணிற்கு எதிரான பாலியல் வன்புணர்வுகளையும், உலகின் ஆதிமொழி அழியப்படுவதையும், பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சி அடைந்து வருவதையும் சிறிதளவும் கண்டுகொள்ளாமல் “ஒரே நாடு ஒரே மொழி” என இந்தியத் துணைக்கண்டத்தின் பன்முகத்தன்மையை சிதைத்துக் கொண்டிருக்கும் ஒருவர்தான் அவர். இனியும், அவ்வித்தை மனிதர்களிடம் அடிமையாய் இருக்க வேண்டுமா என்பதை இக்கதையின் முடிவு நமக்கு நுட்பமாய் உணர்த்துமாயின்,  “இமையம் என்றும் வாழ்க வாழ்க!”

2018 ஆம் ஆண்டுக்கான இயல் விருது ...

வாழ்க வாழ்க
இமையம்
முதல்பதிப்பு : ஜீன் 2020
க்ரியா பதிப்பகம்
விலை : 125

– மதிவதனி இராஜசேகரன்
இந்திய மாணவர் சங்கம் – மெட்ராஸ் கிறித்துவக் கல்லூரி கிளை.


1 Comment

  1. Romba sirappa eludhirka.. adhum kurippa andha kadasi paragraph.. makkal sindhithey aaganum.
    Mooda makkal kan vizhikka virumbukiren..
    Ippadhivai pagirgiren. Inum pala nokathudan.. ezhuthugalaal engalidam pesa unnai ookapaduthugiren. Ipadhivirku nandri thozhiye💕

Leave a Response