Article

தொழிலாளர்களுக்கு எந்தக் கருணையும் மீதமில்லை – டி.கே.ராஜலட்சுமி (கி.ரமேஷ்)

Spread the love

 

ஊரடங்கையும், கண்டனப் போராட்டங்கள் நடத்தத் தொழிலாளர்களை அணிதிரட்ட முடியாமல் இருக்கும் நிலையையும் சாதகமாகக் கொண்டு உற்பத்திக்கு மீட்டுயிர் கொடுத்தல், பொருளாதாரத்தை ஊக்குவித்தல் என்ற பெயரில் தொழிலாளர் சட்டங்களில் மிகப்பெரும் மாற்றங்களைப் பல மாநில அரசுகள் புகுத்துகின்றன.

டி.கே.ராஜலட்சுமி

மார்ச் 24ஆம் தேதியன்று முதல் கட்ட ஊரடங்கை அறிவிக்கும்போது பிரதமர் மோடி தொழிலதிபர்களை அவர்களது ஊழியர்களிடம் கருணையுடன் நடந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார்.  ஏப்ரல் 14 அன்று முதல் கட்ட ஊரடங்கு முடிவுக்கு வந்தபோது அவர் தொழிலதிபர்கள் தமது ஊழியர்களைப் பணி நீக்கம் செய்யக் கூடாதென்று மீண்டும் கேட்டுக் கொண்டார்.  ஆனால் அப்போதே தொழிலதிபர்கள் கதவடைப்பு செய்து தமது ஊழியர்களை வேலையிழக்கச் செய்த செய்தியும், வேலையிழந்த புலம்பெயர் தொழிலாளர்கள் தமது ஊர்களுக்கும் திரும்பும் பதற்றத்தில் இருப்பதாகவும் செய்திகள் வந்தன.  தொழிலதிபர்கள் இந்தத் தந்திரத்தைக் கடைப்பிடிக்கக் கூடுமென்று எதிர்பார்த்தோ என்னவோ தொழிலாளர் துறை மார்ச் 20 அன்று தொழிலதிபர்களுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தது.  அதில் கோவிட் 19 உருவாக்கியுள்ள நோய்த்தொற்றால் ஏற்பட்டிருக்கும் பேரழிவு சூழலையும், அது தொழிலாளர்கள் சம்பளமோ, ஊதியமோ இல்லாமல் வேலையின்றிப் போகக் கூடிய நிலை ஏற்படக் கூடுமென்றும் சுட்டிக் காட்டியிருந்தது.  இந்தப் பொதுச் சுகாதார சவாலை எதிர்கொள்ள சமூகத்தின் அனைத்துப் பகுதியினரின் ஒன்றிணைந்த முயற்சிகள் தேவையென்றும், முதலாளிகள் தமது ஊழியர்களை, குறிப்பாக தற்காலிக, ஒப்பந்த ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யாமல், அவர்களது கூலிகளைக் குறைக்காமல் இருந்து இதற்கு ஒத்துழைக்க வேண்டுமென்றும் அது கேட்டுக் கொண்டது. வினோதமாக,  இந்த ஆலோசனை மேலும் பணியிடம் கோவிட் 19ஆல் வேலை செய்யாமல் போகுமானால், ஊழியர்கள் பணியில் இருந்ததாகக் கருதப்படுவர் என்றும் கூறியது.கூலியைக் குறைப்பதோ அல்லது பணிநீக்கம் செய்வதோ, அவர்களது நிதிநிலையைப் பலவீனப்படுத்துவதோடு மட்டுமின்றி, நோய்த்தொற்றை எதிர்த்துப் போராடும் அவர்களது மனத்துணிவையும் பாதிக்கும் என்று அது கூறியது.  பிரதமரோ அல்லது தொழிலாளர் துறையோ “தொழிலாளர் சீர்திருத்தம்” குறித்துப் பேசவேயில்லை.  ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் தமது வேலையை இழந்து, தமது சொந்த மாநிலத்துக்கு கால்நடையாகவோ, சைக்கிளிலோ செல்ல முடிவெடுத்ததிலிருந்து அந்தக் கோரிக்கைகளுக்கு எந்தப் பலனும் இல்லையென்பது தெளிவானது.

Labour Ministry to issue UWIN cards to informal workers from April ...

ஊரடங்கையும், தொழிலாளர்கள் எந்தக் கண்டனப் போராட்டத்தையும் ஏற்பாடு செய்ய முடியாத நிலையையும் பயன்படுத்திக் கொண்டு சில மாநில அரசுகள், குறிப்பாக, பாஜக, காங்கிரஸ் ஆளும் மாநில அரசுகள் தொழிலாளர் சட்டங்களில் பெரும் மாற்றங்களை அறிவித்தன. முதலாளிகள் தமது உற்பத்தியைப் பெருக்க, தமது விருப்பப்படி தொழிலாளர்களை அமர்த்துவதும், துரத்துவதும், எட்டு மணி நேர வேலையைப் பன்னிரண்டு மணி நேரம் வரை அதிகரிக்கும் உரிமையையும் அவர்களுக்கு அளித்தன.  ஏப்ரல் 20 அன்று தடை செய்யப்பட்ட பகுதிகளைத் தவிர, ஊரடங்கைத் தளர்த்துவதாக மத்திய அரசு அறிவித்ததும், அதனை மத்திய பிரதேச அரசு தொழிலாளர் சட்டங்களைத் தளர்த்துவதாகும் என்று பொருள்படுத்திக் கொண்டது.  ஏப்ரல் 22 அன்று சிவராஜ் சௌகான் அரசு 1948 தொழிற்சாலை சட்டம் பிரிவு 5ஐப் பயன்படுத்தி, அந்தச் சட்டத்தின் கீழ் வரும் அனைத்து தொழிற்சாலைகளும் அவற்றின் வயது வந்த தொழிலாளர்களின் வார, தினசரி வேலை நேரம் குறித்த அம்சங்களை மூன்று மாதங்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்தது.  இந்தத் தளர்வுகள் நிச்சயமாக தொழிலாளர்களின் நலனுக்காக அல்ல.  இந்த அறிவிப்பின்படி, தொழிலாளர்களை இப்போது முன்பு ஒரு நாளைக்கு 8 மணி நேரத்துக்கு மாறாக, 12 மணி நேரத்துக்கு மேலாக, வாரத்துக்கு 72 மணி நேரத்துக்கு மேலில்லாமல் வேலை செய்ய வைக்கலாம்; இடையில் 30 நிமிடம் ஓய்வில்லாமல் அவர்கள் 6 மணி நேரத்துக்கு மேல் வேலை செய்ய வைக்கப்பட அனுமதி இல்லை; மூன்று மாதங்களுக்கு தொழிற்சாலை ஆய்வுகளுக்கு அனுமதி கிடையாது; மூன்றாம் நபர் ஆய்வு அனுமதிக்கப்பட்டது;  50 தொழிலாளர்களூக்குக் கீழ் வேலை செய்யும் தொழிற்சாலைகளுக்கு ஆய்வு கிடையாது. தொழிற்சாலை லைசென்ஸ் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்படும், புதிய லைசென்சுகள், புதிய தொழிற்சாலைகளுக்கு பதிவுகள் ஒரே நாளில் வழங்கப்படும்.

தொழிற்சாலை சட்டம் பிரிவு 5, ஒரு “பொது நெருக்கடி” காலத்தில் சட்டத்தின் அனைத்து அம்சங்களிலிருந்தும் (பிரிவு 67 தவிர) எந்தத் தொழிற்சாலைக்கோ, அல்லது தொழிற்சாலைகளுக்கு ஒரு அரசு அறிவிக்கை மூலமாக விலக்களிக்க அனுமதிக்கிறது.  பிரிவு 5ஆனது, “பொது நெருக்கடி” என்பதை இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல், அல்லது நாட்டின் எந்தப் பகுதியாவது போர் அபாயத்தை சந்தித்தல், வெளி ஊடுறுவல் அல்லது உள்நாட்டு அமைதி கெடுவது ஆகியவற்றைக் குறிப்பிடுகிறது.  மத்திய அரசு கோவிட் 19ஐ தேசிய அல்லது பொது நெருக்கடி என்று அறிவிக்காததால், தற்போதைய சூழ்நிலையில் தொழிலாளர் சட்டங்களை நீர்த்துப் போகச் செய்வது புரிந்து கொள்ள முடியாததாகும்.

மே 6 அன்று, உத்தரபிரதேசத்தின் யோகி ஆதித்யநாத் அரசு, தொழிற்சாலை செயல்பாடுகளையும், மூதலீட்டையும் உயிர்ப்பிக்கும் ஒரு அவசரச்சட்டத்தைப் பிறப்பித்தது.  அதற்கு தொழிலாளர் சட்டங்களிலிருந்து விலக்களிப்பது அவசியம் என்று அது வாதிட்டது. உத்தர பிரதேச (குறிப்பிட்ட தொழிலாளர் சட்டங்களிலிருந்து தற்காலிக விலக்கு) அவசரச் சட்டமானது ஒரே அடியில் அனைத்து தொழிற்சாலைகள், உற்பத்தி ஆலைகளுக்கு மூன்று ஆண்டுகளுக்கு தொழிற்சாலை சட்டங்களைக் கடைப்பிடிப்பதிலிருந்து விலக்கு அளித்துள்ளது.  இந்த அவசரச் சட்டம் தொழிற்சாலை சட்டம் பிரிவு 5ஐ அமலாக்கவில்லை.

Migrant workers forced to work on tourist visa, end up in foreign ...

கட்டிடம் மற்றும் பிற கட்டுமானங்கள் சட்டம் 1996; கொத்தடிமைத் தொழிலாளர் தடைச் சட்டம் 1976; கூலி வழங்கும் சட்டம் பிரிவு 5(சரியான நேரத்தில் கூலி வழங்குதல்) மற்றும் தொழிலாளர் நிவாரணச் சட்டம் 1923; பெண்கள், குழந்தைகளை பணியமர்த்துதல் தொடர்பான சட்டங்களுக்கு இந்த விதிவிலக்குகள் பொருந்தாது.  முதலீட்டை ஊக்குவிப்பதைத் தவிர, இந்தச் சட்டங்கள் புதிய தொழிற்சாலைகள், உற்பத்திக் கேந்திரங்களை அமைத்தல் மற்றும் ஏற்கனவே இருக்கும் ஆலைகளைத் தொடர்ந்து இயக்குதல் ஆகியவற்றுக்கானவை.  தொழிற்சாலை சட்டத்தின்படி 18 வயதுக்கு மேற்பட்டோரை ஒருநாளைக்கு 9 மணி நேரத்துக்கு மேல், ஒரு வாரத்துக்கு 48 மணி நேரத்துக்கு மேல் வேலை செய்ய வைக்க முடியாது.

மத்திய பிரதேசம், உத்தர பிரதேச அரசாங்கங்களின் நடவடிக்கைகள் தொடர் விளைவுகளை ஏற்படுத்தின.  மே மாதம் இரண்டாவது வாரத்தில் குஜராத் அரசு 12 மணி நேர வேலை நாள், வாரத்துக்கு 72 மணி நேரம் என்ற அவசரச் சட்டத்தை நிறைவேற்றியது.  இந்த அவசரச்சட்டம் புதிய நிறுவனங்களுக்கு குறைந்தபட்ச ஊதியச் சட்டம், தொழில் பாதுகாப்புச் விதிகள், தொழிலாளர் நிவாரணச் சட்டம் ஆகியவற்றைத் தவிர மற்ற தொழிலாளர் சட்டங்களிலிருந்து விலக்கு வழங்கியது.  பாஜக ஆளும் இன்னொரு மாநிலமான இமாசல பிரதேசம் தொழிற்சாலை சட்டத்தைத் திருத்தி வேலை நாளை எட்டு மணியிலிருந்து 12 மணி நேரமாக்கியது.

தொழிற்சாலை தொழிலாளர்கள் பெரும்பாலானோர் அவர்கள் வேலை பார்த்த வசித்த இடங்களிலிருந்து சென்று விட்டனர், ஊரடங்குச் சட்டமானது தொழிற்சங்கங்கள் போராட்டத்துக்காக ஊழியர்களை அணிதிரட்டுவதைத் தடை செய்கிறது என்பதால் இந்த மாற்றங்களால் எந்த எதிர்ப்பும் வராது என்று எதிர்பார்த்தே அதைச் செய்தன என்பது வெளிப்படை.  நகரங்களுக்குத் திரும்பிய தொழிலாளர்கள் மிகவும் குறைவு, அவர்களுக்குப் பெரிய கூட்டுப் பேர சக்தி இருக்காது என்று எதிர்பார்க்கப்பட்டது.

சில இடங்களில், தொழிலுக்குத் திரும்ப விரும்பியவர்களை அவ்வளவு எளிதாக அதிகாரிகள் விடவில்லை.  மே 20 அன்று, ஹரியானாவின் குருகிராமிலுள்ள டுங்கஹேரா தொழிற்பகுதியில் தேசத்தின் தலைநகரைச் சுற்றி வாழ்ந்து வந்த தொழிலாளர்கள் மீண்டும் வேலைக்குத் திரும்பிய போது மோதல்கள் வெடித்ததாக விவரங்கள் வந்தன.  அவர்கள் தொழிற்பகுதிக்குள் செல்ல அனுமதிக்கப்படாமல் தடியடி நடத்தப்பட்டது.  ”முதலில் அவர்கள் வெளியேற விரும்பிய போது, அவர்கள் அனுமதிக்கப்படவில்லை, இப்போது அவர்கள் திரும்ப விரும்பும் போதும் அவர்கள் அனுமதிக்கப்படவில்லை” என்று சிஐடியுவின் நிர்வாகி சத்பீர்சிங் கூறினார்.  ராஜஸ்தான் பாலியிலுள்ள மகாராஜா ஸ்ரீஉம்மைத் ஆலையில் தொழிலாளர்கள் ஊரடங்கு காலத்தில் செய்த வேலைக்காகக் கூலி கேட்டபோது அமைதியின்மை ஏற்பட்டது.  போலீஸ் தடியடியில் ஈடுபட்ட போது 68 வயது ராம்நாத் சிங் உட்பட பல தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.  பின்னர் ராம்நாத் சிங் மருத்துவமனையில் மரணமடைந்தார்.  அவரது மரணம் ஒரு லாக்கப் மரணம் என்கின்றனர் தொழிற்சங்கத் தலைவர்கள்.

தொழிற்சங்கங்கள் சீர்திருத்தங்களை எதிர்க்கின்றன

மத்திய பிஜேபி அரசின் தொழிலாளர் ...

தொழிலாளர் சட்டங்களில் மாற்றங்களும், முதலாளிகளின் பாராமுகமும் வருங்காலத்தில் சமீபத்தில் ஒரு அமைதியின்மைக்கு இட்டுச் செல்லும் என்று தொழிற்சங்கப் பிரதிநிதிகள் கருதுகின்றனர்.  பத்து மத்தியத் தொழிற்சங்கங்கள் – பாரதீய மஸ்தூர் சங் (ஆர்.எஸ்.எஸ்.சின் தொழிற்சங்கப் பிரிவு), சிஐடியு, ஏ.ஐ.டி.யு.சி, எச்.எம்.எஸ்., ஏ.ஐ.யு.டி.யு.சி., சுயவேலைவாய்ப்புப் பெண்கள் சங்கம், எல்.பி.எஃப், தொழிற்சங்கங்கள், ஒன்றுபட்ட தொழிற்சங்க காங்கிரசின் அனைத்திந்திய ஒருங்கிணைப்புக் கமிட்டி – ஆகியவற்றுக்கு தொழிற்சங்கங்களும், உறுப்பினர்களும் உள்ளனர்.  அவர்கள் மே 22 அன்று தொழிலாளர் சட்டங்களில் செய்த மாற்றங்களை எதிர்த்து மதுரையில் ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

எஸ்.ஜேம்ஸ் தொழிலாளர் சட்டங்களில் செய்யபட்ட மாற்றங்களை விமர்சித்தார்.  இந்த சங்கங்கள் தொழிற்சாலை சட்டத்தையும், பிற சட்டங்களையும் எந்த முத்தரப்புப் பேச்சு வார்த்தையும் நீர்த்துப் போகச் செய்தது குறித்து சர்வதேச தொழிலாளர் அமைப்புக்குக் கடிதம் அனுப்பியுள்ளன.  ஊரடங்கு காலத்தில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு நிவாரணம் அளிக்க முடியாததால் அவர்கள் திரும்ப வேண்டிய நிலையைச் சுட்டிக் காட்டி அதன் கவனத்தை ஈர்த்த அவர்கள், 1979 மாநிலம் மாறும் புலம்பெயர் தொழிலாளர் (வேலைவாய்ப்பு கட்டுப்பாடு, பணி  நிலைமைகள்) சட்டத்தின் படி மாநில அரசுகளுக்குப் பல பொறுப்புகள் உள்ளன என்று கூறியுள்ளனர். தொழிலாளர்களைப் பதிவு செய்தல், நிறுவனங்கள், ஒப்பந்ததாரர்கள், முதன்மை முதலாளிகள் ஆகியோர் ஊதியம் வழங்க வேண்டிய பொறுப்பு ஆகியவை தங்குமிடம், பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணிநிலைமை விதிகள் 2019இன் கீழுள்ள அம்சங்களின்படி நீக்கப்பட்டன.

ராஜஸ்தானின் காங்கிரஸ் அரசு  வேலை நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக உயர்த்தியதுடன், தொழில் தகராறு சட்டத்தைத் திருத்தி தொழிலாளர்களை லே ஆஃப் செய்வது, பணிநீக்கம் செய்வதற்கான குறைந்தபட்ச வரம்பை 100இலிருந்து 300 ஆக உயர்த்தியது. (முந்தைய பாஜக மாநில அரசு தொழிலாளர் சட்டங்களை நீண்ட கால விளைவுகள் கொண்டதாக பெரிய மாற்றங்களைச் செய்ததால் பெருமளவு மனக்கசப்பு ஏற்பட்டது. 2017, ஃப்ரண்ட்லைன், 2017). காங்கிரஸ் ஆளும் இன்னொரு மாநிலமான பஞ்சாபில் தொழிற்சாலை சட்டம் திருத்தப்பட்டு வேலை நேரம் 8 மணியிலிருந்து 12 மணி நேரமாக்கப்பட்டது.  மகாராஷ்டிரா, கோவா, ஒரிசா மாநிலங்களும் தொழில் தேவைகளுக்கு ஏற்ப தமது தொழிலாளர் சட்டங்களை மாற்றுவதற்கு இழுக்கப்பட்டுள்ளன.

அலட்சியமான மத்திய அரசு

India extends lockdown to May 3; Fight against COVID-19 very ...

ஆர்வமூட்டும்படியாக, பொருளாதாரத்தை மீட்க அரசின் நிவாரணங்களை அறிவித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொழிலாளர்கள் பற்றியே பேசவில்லை.  அவர் போகிற போக்கில் பாராளுமன்றத்தில் நிலுவையில் இருக்கும் 44 தொழிலாளர் சட்டங்களை விழுங்கி விட்ட நான்கு தொழிலாளர் விதிகளைப் பற்றிக் கூறிவிட்டுக் கடந்து விட்டார்.  தமது வேலையையும், வாழ்க்கையையும் இழந்து நிற்கும் தொழிலாளர்களுக்கு வேலையில்லாதோர் அலவன்ஸ் வழங்குவது பற்றி அவர் பேசிய ஐந்து முறையிலும் ஒரு முறை கூடப் பேசவில்லை.

எளிதாகத் தொழில் செய்வது பற்றிப் பல அம்சங்கள் இந்த நிவாரண அறிவிப்புகளில் இருந்தது.  ஆனால் இந்தக் காலத்தில் எவ்வளவு தொழிலாளர்கள் வேலையிழந்தனர் என்பதை அமைச்சர் வெளிப்படுத்தவே இல்லை.  ஒருபுறம் அரசாங்கம் ஏராளமான தொழிற்சாலை தொழிலாளர்கள் தமது வேலையிடத்தையும், தங்குமிடத்தையும் விட்டுச் செல்வதை எந்த நிவாரணமும் கொடுக்காமல் வேடிக்கை பார்த்த அரசு, மறுபுறம் வெறும் நிர்வாக ஆணைகள் மூலமாக தொழிலாளர் சட்டங்களில் மிகப்பெரும் மாற்றங்களைக் கொண்டு வந்தது.  கோவிட் 19க்குப் பிந்தைய நிலை வேறு மாதிரியாக இருக்கும், வீட்டிலிருந்து வேலை செய்வது என்பது ஏற்கப்பட்ட விதியாக இருக்கும் என்று அரசு சொல்லிக் கொண்டிருந்தாலும், நிச்சயமாக வேலையிடத்தில்தான் வேலை செய்ய வேண்டும் என்ற உற்பத்தித் தொழிலாளர்களுக்கு அது எந்த வாய்ப்பையும் கொடுக்கவில்லை.  மூளை உழைப்புத் தொழிலாளர்கள் நோய்த்தொற்று உருவாக்கிய பொருளாதார நெருக்கடி காரணமாக லேஆஃப் செய்யப்பட்டும், ஊதிய வெட்டை ஏற்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்ட போது, உடலுழைப்புத் தொழிலாளர்கள் 2018இன் கடைசிக் காலாண்டில் தொடங்கி 2019இல் தொடர்ந்த பொருளாதார மந்த நிலையிலிருந்தே தொடர்ந்து வேலைகளை இழந்து வந்தனர்.  மே 8 அன்றி மத்திய தொழிலாளர்துறை அமைச்சர் சந்தோஷ் கங்காவர் நடத்திய காணொளிக் காட்சிக் கருத்தரங்கில் கலந்து கொண்ட முதலாளிகள் சங்கங்கள் தற்போதைய நெருக்கடியிலிருந்து தொழில்கள் வெளியே வர உதவுவதற்காக வேலை நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக உயர்த்துமாறும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு குறைந்தபட்ச ஊதியம், போனஸ் பெறுவதற்கான சட்டபூர்வ நிலுவை ஆகியவற்றைத் தவிர மற்ற சட்டங்களை நிறுத்தி வைக்குமாறும் கேட்டன.  அவை இந்த ஊரடங்குக் காலம் லேஃஆப் காலமாகக் கருதப்பட வேண்டுமென்றும், தொழிலாளிகள், முதலாளிகளுக்கான சமூகப் பாதுகாப்புக் கட்டணங்கள் குறைக்கப்பட வேண்டுமென்றும் கோரின. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் அவர்களது பங்கை 12இலிருந்து 10 சதமாக வெட்டும் மத்திய அரசின் முடிவு, தொழிலாளர் துறை தொழிலாளர் நலன்களைக் காப்பதை விட தொழில்களின் தேவைகளிலேயே அதிக கவனம் செலுத்தியதைக் காட்டுகிறது.

அசிம் பிரேம்ஜியின் எச்சரிக்கை

Wipro: Wipro chairman Azim Premji meets Tamil Nadu's CM J ...

நிதி ஆயோகும், தொழில்துறையின் பெரும்பகுதியும் தொழிலாளர் சட்டங்களின் இந்தத் திருத்தங்களை “துணிவான சீர்திருத்தங்கள்” எனவும், “மிகத் துணிவான முன்னெடுப்புகள்” என்றும் வானளாவப் பாராட்டிக் கொண்டிருந்த போது, வெளிப்படையாகப் பேசுபவர்கள் என்று அறியப்படுய்ம் இரண்டு தொழிலதிபர்கள் இந்த மாற்றங்களுக்கு நீண்ட கால விளைவுகள் ஏற்படும் என எச்சரித்தனர். விப்ரோ லிமிடெட்டின் நிறுவனரான அசிம் பிரேம்ஜி, ஒரு முன்னணி நிதி தினசரியில் எழுதிய ஒரு கட்டுறையில் இவ்வாறு குறிப்பிட்டார்: “பல மாநில அரசுகள் வர்த்தக நிறுவனங்களால் உந்தப்பட்டு தொழிலாளர்களைப் பாதுகாக்கும் பல தொழிலாளர் சட்டங்களை  நிறுத்தி வைக்க யோசிக்கின்றன அல்லது ஏற்கனவே நிறுத்தி விட்டன என்பதை அறிவது அதிர்ச்சியாக உள்ளது.”  இது குறைந்த கூலி பெறும் தொழிலாளர்களின் நிலையை மேலும் மோசமாக்கும், “நாம் வர்த்தகம் நடத்து முறையையும், தொழிலையும் பாதிக்கும்” என்று கூறினார்.

இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையம் அளித்த புள்ளிவிவரங்களின்படி, மே 3ஆம் தேதி நிறைவடைந்த வாரத்தில் இருந்த வேலைவாய்ப்பின்மை விகிதம் 27.1 சதவீதம்.  இதுவரை இருந்ததிலேயே இதுதான் உச்சம்.  இதனுடன் வேலை தேடுபவர்களின் எண்ணிக்கையும் சேர்ந்தது.  சிறு வியாபாரிகளும், கூலித் தொழிலாளர்களும்தான் ஊரடங்கால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டவர்கள்.  மார்ச்சுக்கும் ஏப்ரலுக்கும் இடையில் 91  மில்லியன் (ஒரு மில்லியன் – பத்து லட்சம்) மக்கள் தமது வாழ்க்கையை இழந்தனர்.  நிலையான சொத்துக்களை உடைய பெரும் நிறுவனனங்கள் சி.எம்.ஐ.இ. யின் படி, வேலையிழப்புக்களை அறிவித்தன.  இது வழக்கத்துக்கு மாறானது என்று சி.எம்.ஐ.இ. குறிப்பிட்டது.  ஏனென்றால் இந்தப் போக்கு மாறவே மாறாது என்றால்தான் பொதுவாக தொழில் முனைவர்கள் வேலையிழப்பை அறிவிப்பார்கள்.  20-30 வயதுடைய 27 மில்லியன் மக்களும், 25-29 இடையிலான வயதுடைய 14 மில்லியன் மக்களும் வேலையிழந்தனர்.  இந்த வேலையிழப்புக்களுக்கு சேமிப்பின் மீது தாக்கம் இருக்கும், அதன் விளைவாக நீண்ட கால விளைவுகள் ஏற்படும் என்று சி.எம்.ஐ.இ. கூறியது.

உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் பெருந்தன்மையுடன் வேலையின்மை நிவாரணங்களை அள்ளி வழங்கும்போது, பொதுச் செலவினத்தை அதிகரிப்பது பற்றியும் விவாதிக்கும்போது, இந்திய அரசோ நோய்த்தொற்று உருவாக்கிய நெருக்கடியை கோவிட்டுக்கு முந்தைய காலத்தில் அமலாக்க யோசித்ததை திணிப்பதற்கான வாய்ப்பாக எடுத்துக் கொண்டு விட்டது.

தமிழில்: கி.ரமேஷ்

Leave a Response

Top Reviews

Video Widget

gallery