Article

கொரோனா வைரஸால் நவதாராளமயம் முடிவுக்கு வருகிறதா? – பேரா. A. P. அருண் கண்ணண்,S. கிஷோர்குமார்

Spread the love

 

நவம்பர் மாதம் 11ஆம் தேதி சீனாவில் கொரோனாவைரஸால் முதல்நபர் பாதிக்கப்பட்டார் என்று அறியப்படுகிறது. அதே நாளில்2001ஆம் ஆண்டில் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்ட ஜோசப் ஸ்டிக்லிட்ஸ் “நவதாராளமயத்தின் முடிவு மற்றும் வரலாற்றின் மறு பிறப்பு (The End of Neo-liberalism and the Rebirth of History )”என்ற கட்டுரையில் “கட்டுப்பாடற்ற சந்தைகள்தான் எல்லோருக்குமான பொருளாதார வளத்தை அளிப்பதற்கான உறுதியான ஒரே வழி என்கிற நவதாராளவாத நம்பிக்கை இன்று கேள்விக்குள்ளாகி இருக்கிறது, இந்த கொள்கை இன்று மூச்சுத் திணறி உயிருக்குப் போராடிக் கொண்டுருக்கிறது. ஒரே நேரத்தில் நவதாராளவாதத்தின் மீதும், ஜனநாயகத்தின் மீதும் நம்பிக்கை சிதைவது என்பது ஏதோ எதேச்சையாக நடக்கும் ஒன்றல்ல. நவதாராளவாதம் என்பது கடந்த நாற்பது ஆண்டுகளில் ஜனநாயக வேர்களை அறுத்துள்ளது” என்கிற முக்கியமான கருத்தை வலியுறுத்துகிறார்.

ஜோசப் ஸ்டிக்லிட்ஸ் கூறுவதை போன்று மிகப் பெரிய நெருக்கடியில் உள்ள உலகபொருளாதாரம், கொரோனா வைரஸின் தாக்கத்தால் சீனா தொடங்கி உலகின் பல்வேறு நாடுகள் அத்தியாவசிய தேவைகளை தவிர மற்ற அனைத்து பொருளாதார செயல்பாடுகளையும் நிறுத்தியதன் காரணமாக மேலும் நெருக்கடிக்கு சென்றுள்ளது. இதை உலக வங்கி, உலக நிதி மையம் போன்ற அமைப்புகளிடமிருந்து வரும் அறிக்கைகளை வைத்தே நம்மால் மிக எளிதாக கணிக்க முடிகிறது.

இப்போது உருவாகியுள்ள சமூக-பொருளாதார நெருக்கடிவரும் காலங்களில் பெருளாதார மற்றும் அரசியல் தளங்களில் எவ்வாறான மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும் என்பது குறித்து இக்கட்டுரையில் காணலாம். இதை புரிந்துகொள்ள இதற்கு முன்பான நெருக்கடி காலங்களில் முதலாளித்துவ அமைப்பில் ஏற்பட்ட மாற்றங்களையும் பார்க்கவேண்டும்.

1930களில் உலகம் சந்தித்த மாபெரும் பொருளாதார மந்தம் மற்றும் ரஸ்யாவில் அமைந்திருந்த உறுதியான சோஷலிசஅரசும் முதலாளித்துவ நாடுகள் தங்களுடைய பொருளாதார கொள்கைகளில் மாற்றம்  கொண்டு வர வேண்டிய நிர்ப்பந்தத்தை உருவாக்கியது. இதன் விளைவாக அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற முதலாளித்துவ நாடுகள்கெனிஷியன் (Keynesian) பொருளாதார கோட்பாடுகளின் அடிப்படையில் இயங்கின. நலன்சார் முதலாளித்துவம் (welfare capitalism) என்றஇந்த பொருளாதார அமைப்பு முறையில்கல்வி, சுகாதாரம், சமுகப்பாதுகாப்பு போன்றவை அரசால் வழங்கப்பட்டது அல்லது பெரும்பகுதி மக்களை சென்றடைவதை உறுதிசெய்தது. 1940களின் இறுதியில் சீனாவில் நடந்தேறிய கம்யூனிசப் புரட்சி, கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் உருவான சோஷலிச அரசுகள், இந்தியா போன்ற காலனியாதிக்கத்தின் கீழ் இருந்தநாடுகளின் விடுதலையும் முதலாளித்துவ  நாடுகளில் “சோஷலிசத்தின் அபாயத்தை” அதிகரத்தது. இது முதலாளித்துவ  நாடுகளில் பலம் வாய்ந்த தொழிற்சங்கங்கள் அமைவதற்கும், தொழிலாளர் நலன் சார்ந்த சட்டங்கள் இயற்றப்படுவதற்கும் காரணியாய் இருந்தது. 1970 வரை முதலாளித்துவ அமைப்பு தொழிலாளி வர்க்கத்திடம் பல சமரசங்களை செய்து கொள்ள வேண்டியிருந்ததால் மொத்த உற்பத்தியில் லாபத்தின் பங்கை பெருக்குவதில் பல தடைகளை சந்தித்தது. இந்த தடைகளை உடைத்து லாபத்தை அதிகரிக்க உலக முதலாளித்துவ  கூட்டமைப்பின்  முயற்சியில் உருவானது தான் நவதாராள அல்லது சந்தை பொருளாதார கொள்கை.

Individualism at the end of the world: plague in the era of ...

1970களில் முதலாளித்துவநாடுகள் பெரும் லாபநெருக்கடிக்கு (profitability crisis) உள்ளானது, அதனோடு அப்பொது ஏற்பட்ட எண்ணெய் நெருக்கடியும் (oil crisis)உலக பொருளாதரத்தை தேக்கநிலைக்கு (stagflation) தள்ளியது.  இந்த நெருக்கடியை முதலாளித்துவம் நவதாராளமய கொள்கைகளை அமல்படுத்த பயன்படுத்திக்கொண்டது. சீனா-சோவியத் பிணக்கு அதன் தொடர்ச்சியாகசீனா சந்தை பொருளாதார அமைப்பு முறைக்கு மாறியது, சோவியத் மற்றும் கிழக்கு ஐரோப்பியக் கூட்டமைப்பின் வீழ்ச்சி,மற்றும் மின்னனு தொழிநுட்பத்தில் ஏற்பட்ட வளர்ச்சி உலகம் முழுவதும் நவதாராளமய கொள்கைகளை தீவிரமாக அமல்படுத்த ஏதுவாக அமைந்தது.இன்று உலகின் அனைத்து நாடுகளும் (விதி விலக்காக கியூபா போன்ற சில நாடுகளைத் தவிர) நவதாராள பொருளாதார வளைப் பின்னலில் ஒரு அங்கமாக செயல்படுகின்றன.

நவதாராள பொருளாதார கொள்கையை நடைமுறைப்படுத்தியதினால் உலகில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டன.

1)அமெரிக்கா போன்ற முதலாளித்துவ நாட்டின் தொழில் நிறுவனங்கள் தங்களுடைய உற்பத்தி தளங்களை சீனா, கொரியா, இந்தியா போன்ற தெற்கு உலக (global) நாடுகளுக்கு மாற்றியமைத்தனர். இங்கு நிலம், மூலப்பொருட்கள், உழைப்பு மலிவாககிடைப்பதினால் லாபம் அதிகரிப்பத்துடன் தன் சொந்த நாட்டின் தொழிலாளி வர்க்கத்தையும் பலவீனப்படுத்த உதவுகிறது.

2)நிதி மூலதனத்தின் வளர்ச்சி. உற்பத்தியே இல்லாமல் பங்கு சந்தையில் முதலீடு செய்துவெறும் ஊகவனிகத்தின் மூலம் லாபம் சேர்க்கின்ற வாய்ப்பை இது முதலாளிகளுக்கு உருவாக்கியது. நிதி மூலதனம் தன்னுடைய மூலதனத்தை ஒரு நாட்டில் இருந்து எளிதாக எடுத்து செல்ல முடியும் அதன் மூலம் எந்த ஒரு நாட்டின் பொருளாதாரத்தையும் சீர்குலைக்கும் வல்லமையுடையது. ஆகையால் நிதி மூலதனத்தின் நலனே பிரதானம் என்கிற நிலை உருவானது.

3)கடந்த காலங்களில் அரசு கட்டுப்பாட்டில் வைத்திருந்த கல்வி, சுகாதாரம் மற்றும் மருத்துவம் போன்ற துறைகள் தனியாருக்கு திறந்துவிடப்பட்டதுடன் அரசு மக்களுக்கு செய்கின்ற செலவுகளையும் குறைக்க வேண்டி நிர்பந்தப்படுத்தப்பட்டது. இதன் விளைவு இன்று மருத்துவம், கல்வி போன்ற அத்தியாவசிய தேவைகள் லாபம் கொழிக்கும் வியாபாரமாக மாறியுள்ளது.அமெரிக்கா போன்ற அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி உச்சத்தில் உள்ள ஒரு நாட்டில் கொரோனா வைரஸால் இவ்வளவு அதிக எண்ணிக்கையிலான உயிர்கள் பலியாகி உள்ளதற்கு தனியார்மயமே மிக முக்கிய காரணம் என்று பலரும் தெரிவிக்கின்றனர்.

4)முதலாளித்துவ நாடான அமெரிக்கா தொடங்கி தெற்கு உலகநாடுகள் வரை பல்வேறு தொழிலாளர் நல சட்டங்கள் ஒழித்துக் கட்டப்பட்டு உலக முழுவதும் தொழிற்சங்கங்கள் பலவீனப்படுத்தப்பட்டன.

5)ஒரு சில செல்வந்தர்களின் கையில் உலகத்தின் பெரும் பகுதியான வளத்தை கொண்டு சேர்த்துள்ளதோடு உலகின் பெரும்பான்மையான மக்களை கொடுமையான வறுமையில் தள்ளியுள்ளது.

Marx's "Capital" at 150: History in Capital, Capital in History ...

மார்க்ஸ் முதலாளித்துவம் நெருக்கடிகளை உருவாக்கும் முரண்களை தன்னகத்தே கொண்டுள்ளது என்கிறார். இம்முரண்களை நவதாராளமயம் தீவிரப்படுத்தியது, இதனால் நவதாராளமய கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்ட காலந்தொட்டே தொடர்ச்சியாக பல்வேறு சிக்கல்களையும் எதிர்ப்புகளையும் சந்தித்து வருகிறது. இது நடைமுறைப்படுத்தப்பட்ட சில ஆண்டுகளிலேயே (1982-83) மெக்ஸிக்கோ, பிரேசில், ஈக்வடார் தொடங்கி ஐரோப்பாவின் போலாந்து வரை மிகப்பெரும் கடன் நெருக்கடிக்குள்ளாகின. அடுத்து கட்டமாக 1987-88 அமெரிக்காவில் சேமிப்பு மற்றும் கடன் பெறும் நிறுவனங்களில் மிகப் பெரிய நெருக்கடி ஏற்பட்டது. பிறகு 1996-97 களில்கிழக்குஆசியா (East Asian Bubble) மற்றும்இந்தோனோசியாபோன்றநாடுகளில்நெருக்கடிவந்தது. அதனைத்தொடர்ந்து 2001-02 ஆம் ஆண்டில் அர்ஜெண்டினா (Argentina), பிரேசில் போன்ற நாடுகளின் பொருளாதாரமே நிலை குலைந்து போனது. அதே காலக்கட்டத்தில், அமெரிக்காவில்(2001-02 ஆண்டு தொடங்கி) ரியல் எஸ்டேட் துறையில் இருந்து பணத்தைஎடுத்துபங்குசந்தையில்பெரும்முதலீடுகளை தொடர்ச்சியாக பல ஆண்டுகள் செய்ததின் விளைவாக 2008ஆம் ஆண்டில் உலகம் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடி நிலையை சந்திக்க வேண்டியிருந்தது.

2008க்கு முன்னால் உருவான பொருளாதார நெருக்கடிகள் ஒரு சில நாடுகளை மட்டுமே பாதித்தன, ஆனால் 2008இல் ஏற்ப்பட்ட பொருளாதார நெருக்கடியின் தாக்கம் அமெரிக்கா தொடங்கி பல்வேறு முதலாளித்துவ நாடுகள் மற்றும் பல உலக நாடுகளிலும் உணர முடிந்தது. இதனால் உலகின் பல பகுதிகளில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழக்க நேரிட்டது. அமெரிக்கா போன்ற நாடுகளில் பலர் வீடுகளை இழந்து தெருவிற்கு வரும் நிலை வந்தது. இதை சரி செய்வதற்காக அரசுகள் எடுத்த பல முயற்சிகள் பெரும் நிறுவனங்களை காப்பற்றுவதற்கே பயன்பட்டதுடன் மட்டுமல்லாமல் அரசு சிக்கன (Austerity Measures) நடவடிக்கை என்ற பெயரில் மக்களுக்கான நலத்திட்ட செலவுகளை மேலும் குறைத்தன. இதன் விளைவு 2008 க்கு பின்னான கடந்த பத்து ஆண்டுகளில் அமெரிக்கா தொடங்கி சிலி, ஈக்வேடார், பெய்ருத், என்று உலகின் பல நாடுகளில் மக்கள் தொடர்ச்சியாக போராடி வருகின்றனர்.

மக்களின் பெரும் கோவத்தையும் அதிருப்தியையும் புரட்சிகர மாற்றத்தை நோக்கி அணித்திரட்டுவதற்கான போதிய சக்திமுற்போக்கு ஜனநாயக இயக்கங்களிடம் இல்லாததால் இனவாதம், மதவாதம், தேசியவாதம்போன்ற வலதுசாரி அரசியலை முன்மொழிந்த பலரும் ஆட்சிக்கு வந்தனர். அமெரிக்காவின் டிரம்ப் தொடங்கிபிரட்டனில் போரிஸ் ஜேஹான்சன், பிரேசிலில் பொல்சனரொ, இந்தியாவில் மோடிஎன இந்த பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

இந்த வலதுசாரி அரசுகளின் கொள்கைகள் உலக பொருளாதாரத்தை2008இல் ஏற்பட்ட நெருக்கடியில் இருந்து மீட்பதற்க்குபதிலாக அந்த நெருக்கடியை மேலும் கூர்மைப்படுத்திவருகின்றன. இதன் காராணமாகவே கடந்த சில ஆண்டுகளாக ஜோசப் ஸ்டிக்லிட்ஸ், தாமஸ் பிக்கட்டி, பால் க்ருக்மன் போன்ற முதலாளித்துவத்தை ஆதரிக்கும் பொருளாதார வல்லுநர்கள்கூட நவதாராள பொருளாதார கொள்கை தன்னுடய இறுதி நாட்களை எட்டிக் கொண்டிருப்பதாக கூறி வருகின்றனர்.

இந்த சூழலில்தான் கொரோனாவைரஸ் கடந்த சில மாதங்களாக உலக பொருளாதாரத்தை மிகப்பெரிய சிக்கலுக்குள் தள்ளியுள்ளது. இன்று ஏற்பட்டுள்ள உலக பொருளாதாரா நெருக்கடியும் அதனை தொடர்ந்து ஏற்படவுள்ள மாற்றங்கள் குறித்து சமூக வல்லுநர்கள் சொல்வதில் இருந்து மூன்று விதமான சாத்தியங்களை நாம் அடையாளம் காண முடிகிறது.

The COVID-19 Pandemic Is Exposing the Plague of Neoliberalism ...

1)நவதாராளமயத்திற்கு முந்தைய அரசின் தலையீட்டுடன் நடைபெறக் கூடிய (Keynesian Model)நலன்சார் முதாளாலித்துவ அமைப்பு முறைக்கு செல்வது.

2)இந்த நெருக்கடியை மேலும் ஒரு வாய்ப்பாக கொண்டு நவதாராளமயக் கொள்கைகளை தீவிரப்படுத்துவது. இதை தற்பொழுது உள்ள வலதுசாரி அரசுகளை மேலும் வலிமை படுத்தி மக்களை ஒடுக்கவதின் மூலம் சாத்தியப்படுத்துவது.

3)சோசலிச பாதையை நோக்கி செல்வது. கடந்த சில ஆண்டுகளகாவே நவதாராளமயத்திற்கு எதிராக ஏராளமான மக்கள் போராட்டங்கள் பலநாடுகளில் நடைபெறுகிறது.இன்று ஏற்பட்டுள்ள நெருக்கடியால் பெரும்பாலானமக்கள் மத்தியில் கோவமும்,அதேபோன்று சோசலிசநாடுகள் என்று சொல்லக்கூடியவை இந்த நோய்த்தொற்றை மிகச் சிறப்பாக கையாளுகிற விதமும் சோசலிச பாதையை நோக்கி அழைத்து செல்லும் என்று பலரும் நம்புகின்றனர்.

1930களின் மிகப்பெரியப் பொருளாதார மந்தநிலையைத் தொடர்ந்து தொழிலாளர் நலத்திட்டங்களும் சமூகப்பாதுகாப்பு திட்டங்களும் அமலுக்கு வருவதற்கு சக்தி வாய்ந்த தொழிலாளர் அமைப்புகளும் ரஸ்யாவில் உறுதியாய் அமைந்திருந்த சோசியலிச அரசுமே காரணம். அதற்கு பின்பு வந்த எல்லா பொருளாதார நெருக்கடிகளையும் முதலாளித்துவம் தனக்கு சாதகமாகவே பயன்படுத்தியதற்கு வலுவிழந்த   தொழிலாளர் அமைப்புகளும், முற்போக்கு ஜனநாயக இயக்கங்களும் முக்கிய காரணம் (நவதாராளமய கொள்கைகள் இவைகளை மேலும் வலுவிழக்க செய்தன). இந்த கொரோனாவைரஸ் காலகட்டத்தையும் வலதுசாரி முதலாளித்துவ அரசுகள் முதலாளிகளின் லாபத்தை பெருக்குவதற்கான வாய்ப்பாகவே பயன்படுத்துகிறது, உதாரணமாக, மோடி அரசு வேலை நேரத்தை 8லிருந்து 12ஆக உயர்த்தியுள்ளது, தொழிலாளர் நலச்சட்டங்களை தளர்த்துகிறது, லாபம் தரும் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கின்றது.

மக்கள் பெரும் இன்னலை சந்தித்து வருகின்ற இவ்வேளையில் குறிப்பாக இடம்பெயர் தொழிலாளர்களையும், முறைசாரா தொழிலாளர்களையும் அணித்திரட்ட புதிய வழிமுறைகளை கண்டறிய வேண்டியுள்ளது. தொழிற்சாலை மட்டுமல்ல பொது சுகாதாரம், விட்டு வசதி போன்ற இடம் சார்ந்த தேவைகளுக்காகவும், பாசிசத்திற்கெதிரான மாற்று கலாச்சாரத்திற்கான போராட்டங்களையும் தீவிரப்படுத்த வேண்டியுள்ளது. நெருக்கடிகள் மாற்றங்களை கொண்டு வரலாம் ஆனால் புரட்சிகர மாற்றங்கள் வலுமிக்க இடதுசாரி அமைப்புகளால் மட்டுமே சாத்தியமாகும்.

  1. பேரா. A. P. அருண் கண்ணண், பேராசிரியர், லயொலா கல்லூரி.
  2. S. கிஷோர்குமார், பொருளியல் ஆய்வாளர், மாசச்சூசெட்ஸ் பல்கலைக்கழகம், USA.

 

 

 

 

 

 

1 Comment

  1. தோழர்களுக்கு வாழ்த்துக்கள்.
    கட்டுரையின் வரைவை வரவேற்கிறேன்.வலிமையான இடதுசாரி அமைப்புகள் அமையாமல் இருப்பதற்கான சமூக / தத்துவ தடைகள்/தேவைகள் என்ன என்பதை விவரிக்க வேண்டியுள்ளது என்பதை தெரிவித்துகொள்கிறேன்.நன்றி.

Leave a Response

Top Reviews

Video Widget

gallery