Article

இணையவழி கற்பித்தல் ஏன் தவறாக இருக்கிறது? – சௌம்யஜித் பட்டாச்சார்யா (தமிழில்: தா.சந்திரகுரு)

Spread the love

 

இந்திய பல்கலைக்கழகங்களில் கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக, வகுப்புகள் இடைநிறுத்தம் செய்யப்பட்டதிலிருந்து, ஜூம் போன்ற பல்வேறு தளங்களைப் பயன்படுத்தி இணையவழி கற்பித்தல் என்பது அனைவரும் பயன்படுத்துகின்ற புதிய பிதற்றல் சொல்லாகியிருக்கிறது. ஆரம்பத்தில், என்னுடைய பல்கலைக்கழகத்திலிருந்து வந்த உத்தரவுகள் தெளிவற்றும் மிகவும் எச்சரிக்கையுடமும் சொல்லப்பட்டிருந்தன. வகுப்பு நேரங்களின் போது மின்னூல்களை வழங்குவது மற்றும் இணையத்தில் எந்நேரமும் இருப்பது குறித்து அறிவுறுத்தப்பட்டிருந்தது. படிப்படியாக, அந்த அறிவுறுத்தல், எந்தவொரு வெளிப்படையான உத்தரவும் இல்லாமல், பல்வேறு தளங்களைப் பயன்படுத்தி இணையவழி கற்பித்தலுக்கு ஆதரவாக மாறியது. பல்கலைக்கழகம், கல்லூரிகளில் உள்ள நிர்வாகிகளும், பல ஆசிரியர்களும் திடீரென ஜூம் அனுபவத்தால் நிரம்பி வழியத் தொடங்கினர். நிலவி வருகின்ற அசாதாரண நிலைக்கு இறுதியில் தீர்வு காணப்பட்டு விட்டதாகத் தோன்றியது. ஜூம் பயன்பாட்டிற்கு எதிராக இந்திய அரசாங்கம் விடுத்த எச்சரிக்கை, இந்த புதிய கண்டுபிடிப்பிற்கு இடையூறாக இருப்பது போலத் தோன்றினாலும், இந்த அதிசய கண்டுபிடிப்பின் மீதான நம்பிக்கையை அரசாங்கமோ அல்லது நடவடிக்கையை துவங்கியவர்களோ இழக்கும்படி எதுவும் நடக்கவில்லை. அவர்கள் இதுபோன்ற தரவு தனியுரிமை குறித்த அச்சுறுத்தல்கள் மற்ற தளங்களில் இருக்காது என்று கருதி, ஒரு தளத்திலிருந்து மற்றொரு தளத்திற்கு தங்களை மாற்றிக் கொண்டனர்.

பயன்முறையும், பெறுதலும்

தரவு அல்லது தகவல்களுக்கான அச்சுறுத்தல் என்பது இங்கே உண்மையான பிரச்சனையாக இருக்கவில்லை. இணையவழி கற்பித்தலும், அதனைப் பெறுவதுமே இப்போதுள்ள சிக்கலின் முக்கிய அம்சமாக இருக்கின்றன. முதலில், இந்த வசதியைப் பெறுவதில் இருக்கின்ற பிரச்சனைக்கு வருவோம். இந்த வசதியைப் பெறுவது என்பது இணைய வசதி கிடைப்பதை மட்டும் குறிக்காது. பெரும்பாலான மாணவர்களிடம் இணைய வசதியைப் பெறுகின்ற வகையில் இருக்கின்ற மொபைல் போன், இணையவழியிலான வகுப்புகளை நடத்துவதற்கான பொருத்தமான ஊடகமாக இருக்க முடியாது. மடிக்கணினி அதற்கான மிகவும் பொருத்தமான சாதனமாக இருக்கும். ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக, தொலைபேசியில் உள்ள சிறிய திரையில், ஒரு சொற்பொழிவின் மீது கவனத்தைக் குவித்து வைத்திருப்பது, உண்மையில் மிகக் கடினமான காரியம் ஆகும். கோவிட்-19 நெருக்கடியை அடுத்து, சமீபத்தில் ஹைதராபாத் பல்கலைக்கழகத்தால் நடத்தப்பட்ட ஆய்வு, 50% மாணவர்கள் மட்டுமே மடிக்கணினி வைத்திருப்பதையும், இணையத்தை அவ்வப்போது மட்டுமே சுமார் 45% பேரால் அணுக முடிவதையும், 18% பேர் இணைய வசதியே இல்லாதிருப்பதையும் தெளிவுபடுத்திக் காட்டியிருக்கிறது. இதுதான் மத்திய பல்கலைக்கழகம் ஒன்றில் இருக்கின்ற யதார்த்த நிலைமை. மாணவர்களில் பெரும்பாலானோர் முடக்கப்பட்டுள்ள நிலையில் இருக்கின்ற இந்திய கிராமப்புறங்கள் அல்லது சிறு நகரங்கள் ஒருபுறம் இருக்கட்டும்; பல பெருநகரங்களிலேயே, இணையத்தின் வேகம் மற்றும் அதில் உள்ள ஏற்ற இறக்கங்கள் பெரும் சிக்கல்களைக் கண்டு வருகின்றன என்பதே உண்மை.

How a flawed idea is teaching millions of kids to be poor readers ...

பொதுமுடக்கத்தின் போது மாணவர்கள் வீட்டிற்குள் சிக்கியிருக்கின்ற நிலையில், அவர்கள் தற்போது வாழ்ந்து வருகின்ற இடத்தின் பல மூலைகளிலும் தரவு சமிக்ஞைகள் பலவீனமாகவே உள்ளன. பல மாணவர்களிடம் வரம்பற்ற வைஃபை திட்டங்கள் இருக்கவில்லை. அவர்களிடம் வரையறைக்குட்பட்ட அளவிலான தரவு பொதிகள் மட்டுமே உள்ளன. குறைந்த வருமான வசதி கொண்ட பல மாணவர்களைப் பொறுத்தவரை, ஒரே நாளில் பல வகுப்புகளில் கலந்து கொள்வது என்பது கூடுதலாக அதிக செலவை ஏற்படுத்துவதாகவே இருக்கிறது. சாதாரண காலங்களில் இணைய வசதி அல்லது இலவச வைஃபை வசதி பெறுவதற்காக, மாணவர்கள்  தங்கள் வீட்டை விட்டு வெளியேறி தெரு முனைகளுக்குச் செல்வதை நாம் நன்கு அறிவோம்; இந்த பொது முடக்கத்தின் போது அத்தகைய சாத்தியங்களும்கூட, அவர்களுக்கு கிடைப்பதில்லை.

எனவே, மாணவர்கள் எவ்வளவு ஆர்வமாக இருந்தாலும், அவர்களில் பலரால் இணையவழி கற்பித்தல் மற்றும் கற்றல் செயல்பாட்டில் பங்கேற்பதற்கான உள்கட்டமைப்பு வசதிகளை முழுமையாகப் பெற இயலாது. பரந்த பொருளில் அனைவருக்குமான ’அதிகாரத்தைத் தருதல்’ என்பதுடன் தொடர்புடைய இந்த பிரச்சனை குறித்து மிகக் குறைவாகவே விவாதிக்கப்பட்டு வருகிறது. மாணவரிடம் இருக்கின்ற அதற்கான கருவி, இணைய இணைப்புகள் மட்டுமே வகுப்பறை சூழ்நிலையைப் பிரதிபலிப்பதற்குப் போதுமானவையாக இருப்பதில்லை. வகுப்பறை சூழலைப் பெறுவதற்கு, அவர்களைச் சுற்றியுள்ள இடம் மிகவும் முக்கியமானதாகும். குறைந்தபட்சம் அடுத்தவரின் இருப்பால் தொந்தரவு ஏற்படாத வகையில், அமைதியான, தனிமைப்படுத்தப்பட்ட இடம் இணையவழிக் கல்வியில் ஒருவருக்குத் தேவைப்படும். டெல்லி பல்கலைக்கழகத்தில் பயிலும் எங்களுடைய மாணவர்களில் பலருக்கும், இதுபோன்ற நிலைமைகள் அவர்களுடைய வீட்டில் இருக்காது என்பது எங்களுக்கு நன்றாகவே தெரியும். சிறிய அபார்ட்மெண்ட் அல்லது வசிப்பிடத்தில் இருக்கின்ற அவர்களைப் பொறுத்தவரை, இதுபோன்ற தனிமையான இடம் கிடைப்பது நிச்சயம் பிரச்சனையாகவே இருக்கும். அவர்கள் வசித்து வருகின்ற இடத்திலே, தனியான  அமைதியான இடத்தைப் பெறுவதற்கான சாத்தியமே இருக்காது. இங்கே அவர்களுக்கான பிரச்சனை, இடம் பற்றியதாக மட்டுமல்லாது, அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களின் தனியுரிமை குறித்ததாகவும் இருக்கிறது. ஒரு வீட்டில் இரண்டு மாணவர்கள் இருந்தால், இருவருக்கும் இடத்தை, பெரும்பாலும் ஒரே நேரத்தில்! உருவாக்கித் தர வேண்டும். பொருளாதார ரீதியாக பலவீனமான குடும்பத்திற்கு இது நிச்சயம் பெரும்பிரச்சனையாகவே இருக்கும் என்பது ஒருபுறம் இருக்க, நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தினருக்கும் இது தீர்க்க முடியாத சிக்கலாகவே இருக்கும். சிறிய குடியிருப்பில், ஒரு மணிநேர வகுப்பிற்காக, வீட்டில் உள்ள மற்ற அனைத்து உறுப்பினர்களும் தங்களுடைய அனைத்து வேலைகளையும் ஒதுக்கி வைத்து விட்டு, அமைதி காத்திருக்க வேண்டியிருக்கும்.

இந்த இணையவழிக் கல்வி, மாணவிகள் மற்றும் பெண் குடும்ப உறுப்பினர்கள் என்று இருவகையிலான பெண்களிடத்தும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்துவதாக இருக்கிறது. பெண்கள் தங்களுடைய வீடுகளுக்குள் அதிகப்படியாகப் பகிர்ந்து கொள்கின்ற வீட்டு வேலைகளின் சமமற்ற சுமையைக் கருத்தில் கொண்டால், இந்த பொதுமுடக்கத்தின் போது, கூடுதல் வீட்டு வேலைகளுக்கான பொறுப்புகளை பெரும்பாலும் மாணவிகளே ஏற்க வேண்டியிருக்கும். அவ்வாறு சில வீட்டுவேலைகளைச் செய்ய வேண்டியிருக்கும் போது, ​​இணையவழி வகுப்பில் கலந்துகொள்வதற்கான நெகிழ்வுத்தன்மை அந்த மாணவிக்கு கிடைப்பது அரிது. நெருக்கடி மிகுந்த வீடுகளுக்குள் அமைதி, தனியுரிமைக்கான இடத்தை ஒதுக்கித் தர வேண்டிய கட்டாயம் இருக்கின்ற மாறுபட்ட சூழ்நிலை, தாய் ஒருவள் தனது சொந்த வேலை நேரத்தையும், வீட்டு வேலைகளுக்கான நேரத்தையும் ஒதுக்கி வைத்து, அமைதியாக தன்னை சரிசெய்து கொள்வதைக் குறிப்பதாகவே இருக்கிறது.

Coronavirus | In the time of the pandemic, classes go online and ...

வீடுகளில் கிடைக்கக்கூடிய இந்த இடம், நமது கல்வி நிர்வாகிகள் மற்றும் ஆர்வமுள்ள ஆசிரியர்களால் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்படுவது, பாலினம் சார்ந்த நமது நடத்தையின் ஆழமான அறிகுறியாகவே இருக்கின்றது. வீடு என்பது எப்போதும் இரண்டாம் நிலையிலேயே உள்ளது; அது உருவகமாக அல்லது உண்மையிலேயே, பெரிய அளவில் அடைக்கலம் தருவதாக இருக்கலாம் (வீடு திரும்புவதற்கான முயற்சியில் புலம்பெயர்ந்தோர் அதிக எண்ணிக்கையில் நகர்ந்தது) என்றாலும், வேலை மற்றும் உற்பத்தித்திறன் சார்ந்த உற்பத்தி இடங்களுக்கே முதன்மையான முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அந்தப் பணியிடம் தொந்தரவுக்குள்ளாகும் போது, வீட்டிலுள்ள ’எஞ்சிய’  இடம் அதைப் பிரதிபலித்து, உற்பத்திக்கான இடமாக மாறிக்  கொள்கிறது. எப்போதுமே வீட்டு வேலை சார்ந்திருக்கும் பெண்பால் உலகமே, ’உற்பத்தி’ வேலை சார்ந்த ஆண் உலகிற்கு தன்னை ’ஆள்மாறாட்டம்’ செய்து கொள்ள வேண்டியிருக்கும். ஆனால் வேலை சார்ந்திருக்கும் அந்த ஆண் உலகம் வீடு சார்ந்த தேவைகளுக்கு ஏற்ப தன்னை ஒருபோதும் மாற்றிக் கொள்ளாது. நீங்கள் எந்தவொரு மன அழுத்தத்திற்குட்பட்டு இருந்தாலும், வேறு வழியில் சிந்திப்பது கிட்டத்தட்ட பாவம் என்றே கருதப்படும்.

இங்கே தொடர்புடைய முக்கியமான விஷயம் ஒன்றை, அதாவது பொதுமுடக்கம் மற்றும் சமூக இடைவெளி போன்றவை ஏன் கொண்டு வரப்பட்டன என்பதை நாம் கிட்டத்தட்ட மறந்தே விட்டோம். முன்னெப்போதுமில்லாத தொற்றுநோயின் காலமாக இந்த காலகட்டம் இருக்கிறது. இத்தகைய சூழ்நிலைகளில் பலருக்கு மன அழுத்தம், பதட்டம் அதிகரிக்கும்; வீட்டிலேயே மக்கள் தங்கியிருப்பது, அவர்கள் விடுமுறையில் இருப்பதாகாது. குடும்பத்தில் யாராவது ஒருவருக்கு தொற்றுநோய் பாதிப்பு இருக்கலாம்; நீங்களே ஒருவேளை தனிமைப்படுத்தப்பட்டிருக்கலாம். இதுதவிர, மற்ற நோய்களால் பாதிக்கப்பட்டிருக்கின்ற குடும்ப உறுப்பினர்களும் அதிக மன அழுத்தத்தில் இருப்பார்கள்; உடல்நலம் குறித்து அவசரநிலை ஏற்பட்டால், மருத்துவர் அல்லது மருத்துவமனையை சாதாரணமாக அணுக முடியாத ஆபத்து இப்போது உள்ளது. இந்த சூழ்நிலையில் அனைத்து மாணவர்களும் இணையவழி வகுப்புகளில் சுமுகமாக கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்ப்பது, இந்த சூழலை உருவாக்கியிருக்கின்ற சூழ்நிலையை மறந்து விட்டு நடப்பதாகவே இருக்கும்.

தரம் சார்ந்த வேறுபாடு

இதுபோன்ற கவலைகள் மிக அதிகமாக ஜோடிக்கப்பட்டவையாக இருப்பதாக எனது நண்பர்கள் சொன்னார்கள். எப்போதுமே சில மாணவர்கள் வகுப்புகளைத் தவறவிடுவார்கள்தான் என்ற அவர்களுடைய வாதம், ’‘ஆமாம், சில மாணவர்கள் இந்த இணையவழி வகுப்புகளைத் தவறவிடுவார்கள்தான், அனைத்து மாணவர்களின் வருகையை நீங்கள் எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா’ என்று செல்கிறது. இந்த இரண்டு சூழ்நிலைகளுக்கும் இடையிலான வேறுபாடு மிகப் பெரியது. அது தரம் சார்ந்த வேறுபாடாக இருக்கிறது.

முதலாவதாக, சாதாரண காலங்களில் ஒரு வகுப்பைத் தவறவிடுவது என்பது பெரும்பாலும் மாணவரின் சொந்த விருப்பத்தால் ஏற்படுகின்ற செயலாகவே உள்ளது; இரண்டாவதாக, அணுகல் வசதிகள் இல்லாததால் இணையவழி வகுப்பைத் தவறவிடுவது என்பது ஒருவரின் சொந்த விருப்பத்தால் ஏற்படுவது அல்ல. வகுப்பைத் தவறவிட ஆர்வமில்லாத ஒரு மாணவர், அவ்வாறு செய்ய வேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளாகலாம். விருப்பம் மற்றும் உரிமைகள் குறித்த பிரச்சனை தவிர, தரம் சார்ந்த அம்சமும் இங்கே உள்ளது. வெவ்வேறுபட்ட வீடுகளிலிருந்து வருகின்ற அனைத்து மாணவர்களுக்கும், வகுப்பறை என்ற பொதுவான ஒத்திசைவான இடத்திற்கு வருவதற்கான அணுகலை பல்கலைக்கழகத்தில் உள்ள வகுப்பறை என்ற இடமே வழங்கி வருகிறது. அந்த இடத்தின் மீது அதீத காதல் கொள்ளாமல், அதன் உள்ளார்ந்த ஏற்றத்தாழ்வுகளை முழுமையாக அறிந்து கொள்ளாமல் இருந்தாலும், மாணவர்களை முறையான சமத்துவம் இருக்கின்ற இடத்திற்கு கொண்டு வருவதாகவும், வீடுகளிலிருக்கின்ற தடைகளிலிருந்து விலகிச் செல்ல வைப்பதாகவும் அந்த வகுப்பறை இருப்பது என்னவோ உண்மைதான்.

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி ...

இந்த வேறுபாடு, பொருளாதாரம் மற்றும் சமூக ரீதியாக பின்தங்கிய மாணவர்களிடம் மிகவும் அதிகமாகவே இருக்கிறது. நன்கு உருவாக்கப்பட்ட வீடுகளில் இருக்கின்ற இடங்களின் தனியுரிமையை அந்த மாணவர்களால் பெறவே முடியாது. இவர்கள்தான் இணையவழியாக விரிவுரைகளைப் பெறுவதிலும் மிகவும் சிரமப்படுபவர்களாக இருக்கிறார்கள். ஆக அவர்களைப் பொறுத்தவரை, இது இரண்டு பக்கங்களிலிருந்து நடத்தப்படுகின்ற தாக்குதலாகவே இருக்கின்றது. மாற்று இணையவழிக் கல்வியைப் பெறுவது மிகவும் கடினமானதாக இருக்கின்ற, படிப்பதற்கு பல்கலைக்கழக இடம் (நூலகத்தில் பெரும்பாலும் நீண்ட நேரத்தைச் செலவழிக்கின்ற) தேவைப்படுகின்ற மாணவர்கள் இரண்டு விதமாக அதை இழக்கிறார்கள். சிறந்த ஆசிரியர்கள் பலரும், நிர்வாகிகளும் இணையவழி கற்பித்தலில் உள்ள ஆழமான ஏற்றத்தாழ்வுகளை ஒப்புக் கொள்ள மறுப்பது குழப்பமாக இருந்தாலும், கற்பித்தல்-கற்றல் செயல்முறை அரங்கில் வர்க்கம் மற்றும் சாதி சார்புகள் எவ்வளவு ஆழமாக ஊடுருவியுள்ளன என்பதைக் குறிப்பதாகவே இருக்கின்றன.

இப்போது, இணையவழி கற்பித்தல் பிரச்சனைக்கு மீண்டும் வருவோம். வகுப்பில் நேரடியாக நடத்துகின்ற கற்பித்தலுக்கு ஒரு மாற்றாக அல்லது அதை இதனால் மிஞ்ச முடியுமா? இது ஒரு தற்காலிகமான  நடவடிக்கை, இதுபோன்ற கவலைகள் தவறானவை என்று பலர் கூறி வந்தாலும், நமது கல்வி குறித்து திட்டமிடுபவர்களால் இணையவழி கற்பித்தலே இந்திய உயர்கல்வியின் எதிர்காலம் என்று இப்போது சில ஆண்டுகளாகவே பரிந்துரைக்கப்பட்டு வருவதால், இந்த பிரச்சனை அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது.. மனித வள மேம்பாட்டு அமைச்சகம், பல்கலைக்கழக மானியக் குழு மற்றும் நிதி ஆயோக் ஆகிய அமைப்புகளின் உயர் அதிகாரிகளின் பல்வேறு ஆவணங்களும், அறிக்கைகளும் இணையவழி கற்பித்தல் மற்றும் அதற்கான வளங்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படுவதை ஆதரித்து வருகின்றன. உயர்கல்வியில் இந்தியாவின் மொத்த மாணவர் சேர்க்கை விகிதத்தை அதிகரிப்பதற்கான வழிமுறையாக இணையவழி கற்பித்தலை அதிகரிப்பதற்கான வெளிப்படையான சிந்தனையும் அரசிடம் இருந்து வருகிறது.

பல துறைகளைப் போலவே, சாதாரண காலங்களில் அறிமுகப்படுத்துவதற்கு கடினமாக இருக்கும் நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துவதற்கான சரியான வாய்ப்பை இந்த  தொற்றுநோய் ஏற்படுத்தி தந்திருக்கிறது. இணையவழிக் கல்வியை மேம்படுத்துவது தொடர்பாக வெளியிடப்பட்ட சமீபத்திய அறிக்கையில், கோவிட்-19 வந்திருக்கின்ற இந்த நேரத்திலும், பின்னர் இந்த நெருக்கடிகள் அனைத்தும் முடிந்த பிறகும், இணையவழிக் கல்விக்கான உந்துதலைத் தர வேண்டும் என்றே  நாங்கள் கருதுகிறோம் என்று பல்கலைக்கழக மானியக் குழுவின் தலைவர் கூறியதாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. நாட்டில் மொத்த மாணவர் சேர்க்கை விகிதத்தை அதிகரிப்பது முக்கியம் என்றும் சொல்லப்பட்டுள்ளது. எனவே, இவ்வாறாக அறிமுகப்படுத்தப்படுகின்ற இந்த இணையவழி கற்பித்தல் முறை, எதிர்காலத்தில் பல்கலைக்கழக கல்விக்கான கட்டமைப்பில் நிரந்தர அம்சமாக மாறக்கூடும். எனவே பொது அணுகல், குறிப்பாக முன்னெப்போதுமில்லாத இந்த சந்தர்ப்பத்தில் அதன் பொருத்தம் தொடர்பான பிரச்சனைகள் தவிர, இணையவழி கற்பித்தலின் செயல்திறன் பிரச்சனைகள் குறித்தும் சுதந்திரமாக விவாதிக்கப்பட வேண்டும்.

முழுமையான கற்பித்தல்-கற்றல் இடங்களாக, மெய்நிகர் வெளிகளால் இருக்க முடியுமா? சுவாரஸ்யமானவையாகவும், சிறந்த மதிப்புடையவையாகவும் பல இணையவழி படிப்புகள் இருப்பது உண்மைதான். மாணவர்களோ அல்லது பொதுமக்களோ அவற்றை அணுகி, அவற்றிடமிருந்து கற்றுக் கொள்ளலாம். ஆனாலும் வகுப்பறையில், இத்தகைய இணையவழி படிப்புகள் மற்றும் பாடத்திட்டங்களைக் கற்பிப்பது நம்மைக் குழப்பமடையவே செய்கிறது. குறிப்பாக தங்களுடைய உரிமைகளை இழந்து நிற்கின்ற பிரிவினருக்கு மகத்தான மாற்றங்களை அளிப்பதற்கான ஆற்றலைக் கொண்டிருக்கும் பல்கலைக்கழக கல்வியின் பின்னணியில், கல்வி குறித்து இருக்கின்ற எந்தவொரு அர்த்தமுள்ள உரையாடலுக்கும் மிகப் பெரிய அவமதிப்பை ஏற்படுத்துவதாகவே இதுபோன்ற வகுப்புகள் இருக்கின்றன. பல்கலைக்கழகத்தில் உள்ள இடம், குறிப்பாக வகுப்பறையானது, மற்ற பரிமாற்ற வடிவங்களால் மாற்றீடு செய்யப்படும் வகையில் அறிவின் பரிவர்த்தனைக்கான இடமாக மட்டுமே இருக்கவில்லை.

Teachers to get Online learning platform- New plans of Delhi ...

கல்வி வல்லுநர்கள் ஏராளமானோர் இவ்வாறான பார்வையையே கொண்டுள்ளனர். ஆய்வக அடிப்படையிலான படிப்புகளில் வெளிப்படையான சிக்கல்கள் இருக்கின்றன. மெய்நிகர் ஆய்வகங்களுக்கான சாத்தியக்கூறுகள் பற்றி நாம் கேள்விப்படுகிறோம். இதுபோன்ற எந்தவொரு தளமும் இல்லாத வினோதமான சிந்தனைகள், பெரும்பாலும் ஆய்வகத்தில் என்ன நடக்கிறது என்பது பற்றி எதுவும் தெரியாத நபர்களாலேயே முன்மொழியப்படுகின்றன. வேதியியற் பொருட்களைக் கையாளாமலேயே, மெய்நிகர் வேதியியல் சோதனைகள் நடத்தப்படுமா? இது காரின் ஸ்டீயரிங்கைத் தொடாமல், சிமுலேட்டர் கருவி மூலம் கார் ஓட்டுவதைக் கற்றுக் கொள்வதைப்  போன்றதாகும். எவ்வாறாயினும், இத்தகைய தீவிரமான சிக்கல்களுக்கு மிகவும் அடிப்படையான தீர்வாக உள்ள வகுப்பறை, பலருக்கும் தீவிரமான, மாற்றங்களை அளிக்கின்ற இடமாக இருக்கின்றது. அந்த வகுப்பறை மாற்று சமுதாயச் சார்பை உருவாக்குகிறது; அது நீடித்த நட்பிற்கான இடமாக இருக்கிறது; குறிப்பாக ஆசிரியர்களால் அந்த திசையில் உணர்வுபூர்வமாக கவனமாக வளர்க்கப்படும் போது, சமூகத் தடைகளை உடைக்கும் ஆற்றலைக் கொண்டதாக உள்ளது. பேசவும், கேள்வி கேட்கவும் ஒருவரை ஊக்குவிக்கின்ற இடமாகவும் அது இருக்கிறது.

வகுப்பறைகள் மூலமாக கிடைக்கின்ற ஆதாயங்கள் ஒதுக்கப்பட்டவர்களுக்கு மட்டுமல்லாது, அனைத்து வசதிகளும் கொண்ட மாணவர்களையும் பலதரப்பட்ட பின்னணியிலிருந்து வருகின்ற சக மாணவர்கள் சார்ந்த மிகப்பெரிய சமூகத்திடம் அறிமுகப்படுத்துகின்ற வகையில் இருக்கின்றன. வகுப்பறை என்ற இடம் மட்டுமே, கற்றுக்கொள்வதற்கான இடமாக மட்டுமல்லாமல், பகிர்ந்து கொள்ள, கேள்வி கேட்க, சிரிக்க, ஆழ்ந்த உள்ளார்ந்த உறவுகளை வளர்க்க உதவுவதாகவும் இருக்கின்றது. இணையவழி கற்பித்தலுக்கான மெய்நிகர் இடத்தில் இவையனைத்தும் மிகவும் மோசமான நிலையிலேயே உள்ளன. மெய்நிகர் இடத்தில் நகைச்சுவை பிரதிபலித்தாலும், கேள்வி-பதில்கள் இணைக்கப்பட்டிருந்தாலும் கூட, அங்கே இருக்கின்ற உறவுகள் பெரும்பாலும் நீடித்திருக்காதவையாக, உறுதியற்றவையாக, நேரடியாக சந்திக்கின்ற இடத்தில் உள்ள நீடித்த உறவுகளிலிருந்து மாறுபட்டே இருக்கின்றன.

ஆகவே, மேலே உருவாக்கப்பட்ட வாதத்தின் அனைத்து இழைகளும் ஒன்றிணைக்கப்படும் போது,​​ இணையவழிக்கான  இடத்தை, வழக்கமான கல்விக்கான இடமாகக் காண்பது ஏன் தவறு என்பதை ஒருவரால் புரிந்து கொள்ள முடியும். இந்த தொற்றுநோய்ச் சூழலில், நிலைமை இன்னும் மோசமாகவே இருக்கிறது. இணையவழி கற்பித்தலை பதிலியாகப் பொருத்தக்கூடிய வகையில் நிலைமை சிறப்பாக இருக்கவில்லை.

சௌம்யஜித் பட்டாச்சார்யா (sbhattacharya@kmc.du.ac.in)

டெல்லி பல்கலைக்கழகத்தின் கிரோரி மால் கல்லூரியில் பொருளாதாரத் துறையில் கற்பித்து வருகிறார்

எக்கானமிக் அண்ட் பொலிட்டிக்கல் வீக்லி, 2020 ஜூன் 06

https://www.epw.in/journal/2020/23/commentary/what-so-wrong-online-teaching.htm

நன்றி; எக்கானாமிக் அண்ட் பொலிட்டிக்கல் வீக்லி

தமிழில்: தா.சந்திரகுரு

 

Leave a Response

Top Reviews

Video Widget

gallery