Article

காவல்துறையின் மிருகத்தனத்திற்கு எதிராக, இந்தியர்கள் ஏன் வீதிகளில் இறங்கி போராடுவதில்லை..? – சித்தார்த் பாட்டியா (தமிழில்:தா.சந்திரகுரு)

Spread the love

 

வழக்கமாகி விட்ட காவல்துறை மிருகத்தனத்திற்கு எதிராக, இந்தியர்கள் ஏன் வீதிகளில் இறங்கி போராடுவதில்லை? 

தொற்றுநோய் மற்றும் பொதுமுடக்கத்திற்கு இடையே, மின்னசோட்டாவில் காவல்துறையினரால் ஜார்ஜ் ஃப்ளாய்ட் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, பல்லாயிரக்கணக்கான அமெரிக்கர்கள் நகரங்களின் வீதிகளில் குழுமினர். சமூக இடைவெளி மற்றும் வீட்டில் தனிமைப்படுத்தி இருப்பதற்கான விதிகள் அனைத்தையும் நிராகரித்து, கறுப்பர், வெள்ளையர், ஆசியர்கள், பிறர் என்று அவர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் அணிவகுத்து வந்தனர். நோய்க்கெதிராகப் போராடுவதை விட, காவல்துறையின் இனவெறிக்கு எதிராக தங்கள் கோபத்தையும், ஆத்திரத்தையும் பதிவு செய்து போராடுவது அமெரிக்காவில் குறைந்து போயிருக்கவில்லை. 

Why was George Floyd arrested? NBA, NFL players voice outrage ...

காவல்துறையைச் சார்ந்த ஒருவர் கீழே தள்ளி முழங்காலால் அமுக்கி கைது செய்த போது, மினியாபோலிஸில் ஆப்பிரிக்க அமெரிக்க பாதுகாப்புக் காவலராக இருந்த ஃப்ளாய்ட் இறந்து போனார். அந்த காவல் அதிகாரி சில நிமிடங்கள் ஃப்ளாய்டின் கழுத்தில் மண்டியிட்டிருப்பதைக் காட்டுகின்ற வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன, அந்த வீடியோவில், ’என்னால் மூச்சுவிட முடியவில்லை’ என்று ஃப்ளாய்ட் கூறுகிறார். காரில் இருந்த அவரை, நான்கு காவல்துறை அதிகாரிகள் அணுகியதாகவும், அப்போது தான் ‘கைது செய்யப்படுவதை அவர் எதிர்க்க’ முயற்சித்ததாகவும் கூறப்படுகிறது. ஃப்ளாய்டின் கழுத்தில் மண்டியிட்ட டெரெக் சாவின் என்ற அந்தக் காவல்துறை அதிகாரி பின்னர் கைது செய்யப்பட்டார். அவர் மீது கொலைக் குற்றம் சுமத்தப்பட்டது. அந்தக் காட்சியை வேடிக்கை பார்த்த மேலும் மூன்று அதிகாரிகள் பணியில் இருந்து நீக்கப்பட்ட போதிலும், இதுவரை அவர்கள் மீது எந்த குற்றமும் சுமத்தப்படவில்லை.

பரவலாக கொள்ளை மற்றும் சொத்துக்களை எரித்தல் நடைபெற்றிருப்பதாகவும், ஆர்ப்பாட்டங்களை முறியடிப்பதற்காக காவல்துறை வன்முறையை ஏவியதாகவும் தகவல்கள் உள்ளன. கலவரத்தை எதிர்கொள்வதற்கான முழு ஆயத்தத்துடன் இருந்த காவல்துறையினரின் அச்சுறுத்துகின்ற படங்கள் ஊடகங்களில் நிரம்பி வழிந்தன. கலவரத்தைத் தணிப்பதற்காக மினியாபோலிஸ் நிர்வாகம் தேசிய பாதுகாப்புப் படையினரை  அழைத்ததாகக் கூறப்படுகிறது.

அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் காவல்துறையினரால் ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கு எதிராக நடத்தப்பட்டு வரும் திட்டமிடப்பட்ட, அளவிற்கு அதிகமான வன்முறை குறித்து புதிய உரையாடல்களை ஃப்ளாய்டின் இந்தக் கொலை தூண்டியுள்ளது. # Ican’tbreathe என்ற ஹேஷ்டேக் வைரலானது. இதற்கிடையில், போராட்டக்காரர்களுக்கு எதிராக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ட்வீட் செய்து, அவர்களை ‘குண்டர்கள்’ என்று அழைத்ததோடு, அவர்களை எல்லாம் சுட்டுக் கொல்லப் போவதாகவும் அச்சுறுத்தினார்.

இந்தியாவில் காவல்துறையினரின் அடிதடிகள், காவல்துறை காவலில் நடக்கின்ற மரணங்கள் மற்றும் அப்பட்டமான அரச வன்முறைகளுக்கெதிரான அரசியல்வாதிகளின் அலட்சியம் குறித்து நாம் அனைவரும் நன்கு அறிவோம். சமீப காலங்களில், குடிமக்களுக்கு எதிரான பல காவல்துறை வன்முறைச் சம்பவங்கள் படமாக்கப்பட்டு பரப்பப்படுகின்றன. அவை சமூக ஊடகங்களில் சீற்றத்தைத் தூண்டுகின்றன. ஜார்ஜ் ஃப்ளாய்ட் நடத்தப்பட்ட விதம் போன்ற நிகழ்வுகள் இந்தியாவில் நமக்கு மிகவும் பரிச்சயமானவையாகவே இருக்கின்றன. ஆயினும்கூட அதற்கான எதிர்வினைகள் இங்கே மிகவும் வேறுபட்டிருக்கின்றன; பெரும்பாலும் வகுப்புவாத சார்பு கொண்டதாக இருக்கின்ற, காவல்துறையின் இந்த கொடூரமான மிருகத்தனம், நம்மை வீதிகளில் இறக்குவதற்குப் போதுமானவையாக இருக்கவில்லை. 

அமெரிக்காவின் முக்கிய நகரங்களில், ஆயிரக்கணக்கானோர் வீதிகளுக்கு வந்துள்ள நிலையில், காவல்துறையைச் சார்ந்த ஒருவர் மனச்சாட்சியில்லாமல், எந்த உதவியும் இல்லாத மனிதனை அடிப்பது இந்தியாவில் சிற்றலையைக் கூடத் தூண்டுவதில்லை. யாரும் அதை எதிர்த்து பகிரங்கமாக நிற்பதில்லை. இதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாக, நான்கு முஸ்லீம் இளைஞர்களை காவல்துறையினர் அடித்து நொறுக்கும் வீடியோ இருக்கிறது. அந்த நான்கு இளைஞர்களில் ஒருவரான, பைசன் பின்னர் இறந்து போனார். இதயத்தைக் கீறுவதாக இருந்த அந்த வீடியோ, அதுபோன்ற பல வீடியோக்களைப் போலவே,  ட்விட்டர் மற்றும் பேஸ்புக்கில் அதற்கான தருணத்தை மட்டுமே கொண்டிருந்து, பின்னர் தேசிய அளவில் எந்தவொரு கூச்சலுமின்றி மறைந்து போனது. அமெரிக்காவில் நாம் இப்போது காணுகின்ற  வகையான எதிர்ப்புகள், அப்போது இங்கே மிகக் குறைவாகவே இருந்தன. இந்தியாவில் காவல்துறையினருக்கென்று தனியாக சட்டம் இருக்கிறது. தான் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டுமே என்ற அச்சம் எதுவுமின்றி, கான்ஸ்டபிள் அல்லது அதிகாரி ஒருவர், மக்களை அடிப்பது இங்கே வழக்கமான விஷயம். அவரை எந்தவொரு மேலதிகாரியும் கேள்வி கேட்கப் போவதில்லை, எந்தவொரு அரசியல்வாதியும் விளக்கம் தருமாறு அவரை அழைக்கப் போவதில்லை. குடிமக்களும் தங்களுக்கேற்றவாறே அதை எடுத்துக் கொள்வார்கள்.

C:\Users\Chandraguru\Pictures\Faizan.jpg

உண்மையாகப் பார்த்தால், பல இந்தியர்கள் காவல்துறையினருடன் உடன்பட்டு, அவர்களுடைய முன்முயற்சியைப் பாராட்டவும் செய்வார்கள். காவல்துறையின் மிருகத்தனம் என்பது அமெரிக்காவில் இருப்பதைப் போல, இந்தியாவில் ஒரு பிரச்சனையே இல்லை. அமெரிக்க நகரங்களில் காவல்துறையைச் சுத்தம் செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட  பல முயற்சிகள் விளைவுகளை ஏற்படுத்தத் தவறியிருந்தாலும், காவல்துறையின் காவலில் இருக்கும் ஒருவரைக் கொன்றதற்காக, காவல்துறையை பொதுமக்கள் புகழ்வார்கள் என்பதற்கெல்லாம் சாத்தியமே இல்லை.

1980களில், நீண்டகால நீதித்துறை நடைமுறைக்கு செல்வதைத் தவிர்த்து குற்றவாளிகளைக் கொன்ற என்கவுன்டர் நிபுணர்கள் மும்பையின் ஹீரோக்களாக மாறினர். சந்தேகிக்கப்படும் நக்சலைட்டுகள் என்கவுண்டர்களில் சுட்டுக் கொல்லப்பட்டதாக வருகின்ற செய்திகள் குடிமக்களிடம், குறிப்பாக நகரத்தில் வசிப்பவர்களிடம், எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை.

Bhopal jailbreak: Inquiry report clears MP cops over SIMI men's ...

’சிறையில் இருந்து தப்பித்த’ சந்தேகத்திற்குரிய எட்டு சிமி உறுப்பினர்கள் மத்தியப்பிரதேச காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டது கடுமையான கேள்விகளை எழுப்பியது. அது போலியானது என்றாலும், மாநில உள்துறை அமைச்சரால் மிகவும் பாராட்டப்பட்டது.

பொதுக்கலாச்சாரமும் இதில் ஒரு பாத்திரத்தை வகிக்கிறது. காவல்துறை சித்திரவதைகளுக்கு எதிராக விதிகள் இருந்த போதிலும். காவலில் வைத்திருக்கும் சந்தேகத்திற்குரிய நபர்களைச் சித்திரவதை செய்வதை, ஒப்புதலுடன் காட்டுவதில் இந்திய திரைப்படங்களுக்கு எந்தவிதமான தயக்கமும் இருப்பதில்லை. மாறாக, நிஜ வாழ்க்கையில் அது நடந்தாலும், ஹாலிவுட் திரைப்படங்களில், இவ்வாறு காட்டுவது அவ்வளவு எளிதாக நடக்காது,.

ஏழைகள் அல்லது சிறுபான்மையினரை விட நடுத்தர வர்க்கங்கள், குறிப்பாக நகரங்களில் வாழ்பவர்களுக்கு, காவல்துறை குறித்து வித்தியாசமான அனுபவம் உள்ளது. அவர்களுடன் நன்கு இணைந்திருக்க முடியும் என்று தோன்றுகின்ற குடிமக்கள், தங்களுக்கு விரோதமான காவல்துறை சார்ந்த ஒருவரை எதிர்கொள்வது என்பது மிகஅரிதாகவே இருக்கும், ஆனால் பொருளாதார மட்டத்தில் கீழ் உள்ள ஒருவரின் அனுபவம் அவ்வாறு இருக்காது. 

அதனாலேயே நடுத்தர வர்க்கங்களைச் சேர்ந்தவர்கள் வீதிக்கு வருவதற்கு எந்த காரணமும் இருப்பதில்லை, ஆனால் ஏழைகள் அதைச் செய்தால் – நகரங்களிலிருந்து கிராமங்களுக்கு பெருமளவில் குடியேறியபோது நாம் கண்டதைப் போல் – அவர்கள் தடியால் அடிக்கப்படுவார்கள். அமெரிக்காவில் காவல்துறையினரால் நடத்தப்படும் கடுமையான தாக்குதல்கள் முக்கிய செய்தித்தாள்கள் உட்பட ஊடகங்களில் விரிவாக விவரிக்கப்படுகின்றன. ஆனால் குடியுரிமைச் சட்டத் திருத்தத்திற்கு எதிரான போராட்டங்களின் போது, இந்திய தொலைக்காட்சி சேனல்கள் போராட்டக்காரர்களை தேசவிரோதிகள் என்று அழைத்ததை நாம் கண்டோம். 

குடியுரிமைச் சட்டத் திருத்தத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களைப் பொறுத்தவரை, இந்திய இளைஞர்கள் விஷயங்களை வித்தியாசமாகக் கண்டனர். அமெரிக்காவிலும், பெரும்பாலும் வெள்ளையர்கள், லத்தீன், பிறர் என்று ஏராளமான இளைஞர்களே போராட்டக்காரர்களாக இருந்தனர். முஸ்லீம்களை மட்டுமல்லாது, அனைவரையும் பாதிக்கின்ற பிரச்சினையாகவே, குடியுரிமைச் சட்டத் திருத்தம் பார்க்கப்பட்டது. அதேபோன்று, காவல்துறையின் மிருகத்தனத்தை நாம் தனிப்பட்ட முறையில் எதிர்கொண்டிருக்காவிட்டாலும் கூட, அது நம் அனைவரையும் உலுக்க வேண்டும். இவை நமது அமைப்பு குறித்த குறைபாடுகளாக உள்ளன.  அவை மாற்றப்பட வேண்டும். கூட்டாகவும், பலமாகவும் வெளிப்படுத்தப்படுகின்ற பொதுக் கருத்தால்  மட்டுமே அதைச் செய்ய முடியும்.

தி வயர் இணைய இதழ், 2020 ஜூன் 01 

https://thewire.in/rights/george-floyd-protests-india-police-brutality

நன்றி: தி வயர் இணைய இதழ்

தமிழில்:தா.சந்திரகுரு

1 Comment

  1. Our society is based on caste. Here it is seen as the problem of a particular caste. But actually it is the loss of aThamil society.

Leave a Response

Top Reviews

Video Widget

gallery