Article

பருவங்கள் கடந்து போகின்றன, பள்ளிகள் திறப்பு எப்போது? – ஆசிரியை.இரா.கோமதி

Spread the love

 

மனிதனை மிஞ்சியது இயற்கை. ஒவ்வொரு முறையும் ‘நீ எனக்கு எஜமான் அல்ல’, என்று மனித குலத்தின் தலையில் தட்டி கூறுவது இயற்கையின் வாடிக்கை. இந்த முறை இயற்கை கரோனா என்ற நோயினால் மனித இனத்தை கலங்கடித்து வருகிறது. உலகம் முழுவதும் சுமார் 5 லட்சம் உயிர்களை பரி கொடுத்துள்ளோம். உலக நாடுகள் அனைத்திலும் பெரும் பொருளாதாரச் சரிவு காணப்படுகிறது. சமுதாயத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகள் விரிவடைந்து கொண்டே போகின்றன. இவ்வாறு இந்நோய் பல தரப்பில் பேர் இழப்புகளை தந்துள்ளது. அந்த வரிசையில் பெருவாரியாக பாதிக்கப்பட்டுள்ள இன்னொரு சமூகம் மாணவ சமூகம் ஆகும்.உலகெங்கிலும் 138 நாடுகளில் உள்ள மாணவ எண்ணிக்கையில் சுமார் 90 சதவிகிதம் மாணவர்கள் பள்ளிகள் மூடலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா தாக்கமும் பள்ளி மூடல்களும்:

கொரோனா காற்றின் மூலமாக பரவும் நோய் அதனால் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் பொருட்டு இந்நோய் பாதிப்புக்கு உள்ளான பெரும்பாலான நாடுகள் அனைத்தும் பள்ளிகளை காலவரையின்றி மூடின. அவ்வாறு மூடப்பட்ட பள்ளிகள் மீண்டும் எப்போது திறக்கப்படும் என்ற கேள்விக்கான விடை யாரிடமும் இல்லை. இதுகுறித்து உலகெங்கிலும் நடந்த ஆராய்ச்சிகளின் முடிவில் இருவேறுபட்ட கருத்துகள் வந்தன. கொரோனா நோய் சிறு குழந்தைகளை பாதிப்பது குறைவாகவே உள்ளது, அவ்வாறு பாதிக்கப்பட்டாலும் உயிரிழப்பு ஏதும் இல்லை. அத்தோடு சிறு குழந்தைகள் இந்நோயை மற்றவர்களுக்கு பரப்பும் விகிதம் மிக மிக சொற்பமாகவே உள்ளது, அதன் அடிப்படையில்  தாராளமாக பள்ளிகள் திறக்கலாம் என்று ஒரு சாரார் கூறிவருகின்றனர். மற்றொருபுறம், ‘மாணவர்கள் சாதாரணமாகவே நோய்த் தொற்றுக்கு ஆளாகக் கூடியவர்கள்.அவ்வாறு இருக்க கொரோனா  போன்ற கொடிய நோய் இருக்கும்போது மாணவர்களை பெருமளவு பள்ளிகளில் ஒன்று கூட்டுவது ஆபத்தானதே’, என்றும்; குழந்தைகள் இதில் பாதிக்கும் விகிதம் குறைவாக இருந்தாலும் பள்ளிகளை மூடுவதன் வாயிலாக 16 முதல் 30 சதவிகிதம் வரை சமூக பரவலை கட்டுப்படுத்தலாம். எனவே தற்போதைக்கு பள்ளிகள் திறக்காமல் இருப்பதே நல்லது என்று கூறுகின்றனர் மற்றொரு சாரார்.

பாதிப்புக்கு உள்ளாகும் மாணவ சமுதாயம்:

tn govt schools reopen on 6th jan 2020 after half yearly exam

பள்ளிகள் என்பன குழந்தைகள் வெறும் கல்வி கற்கும் இடம் மட்டுமல்ல.குழந்தைகளை சமூக மயமாக்கும் இடமாகும். பள்ளிகள் குழந்தைகளுக்கு சமூக பாதுகாப்பை அளிக்கிறது. அத்தோடு மட்டுமல்லாமல் ஊட்டச்சத்து வழங்கி,உடல் நலத்தைப் பேணி, மாணவர்களை மனரீதியாகவும்  அரவணைக்கிறது. இவை அனைத்து மாணவர்களுக்கும் பொதுவானதாக இருப்பினும் சமூகத்தில் மிகவும் பின்தங்கிய வகுப்பிலிருந்து வரும் மாணவர்களுக்கு பள்ளிகள் மேற்கூறிய அனைத்தையும் தாண்டி ‘உயிர் பாதுகாப்பிற்கு’ உத்திரவாதம் தரும் இடமாக உள்ளது.

உலகம் முழுவதிலும் உள்ள 190 நாடுகளிலிருந்து சுமார் 157 கோடி மாணவர்கள் அதாவது மொத்த மாணவர் தொகையில் 90% பெயர் பாதிக்கப்பட்டுள்ளனர். மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருக்க வானொலி, தொலைக்காட்சி,இணையம் என பல்வேறு தளங்கள் வழியாக கல்வி அளிக்க முற்பட்ட போதிலும், நேரடி பள்ளி அனுபவம் இல்லாமல் இருப்பது மாணவர்களை மனரீதியாகவும் சமூக ரீதியாகவும் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாக்கும் என்பது பெரும் கவலை அளிக்கும் செய்தியாகும்.

யுனெஸ்கோவின் தரவுகளின் படி சுமார் 100 நாடுகள் மீண்டும் பள்ளிகள் எப்போது திறக்கும் என்பது பற்றி எந்த அறிவிப்பும் செய்யவில்லை, 65 நாடுகளில் நோய் பாதிப்பின் தன்மையைப் பொறுத்து பகுதி நேரமாகவோ அல்லது முழு நேரமாகவும் பள்ளிகள் திறக்க திட்டமிட்டுள்ளனர்.மேலும் 32 நாடுகள் இக்கல்வி ஆண்டை இணைய வழியிலேயே நடத்தி முடிப்பது என்று முடிவு எடுத்துள்ளனர்.

உலகம் முழுவதும் எப்போது எப்படி பள்ளிகள் திறப்பது என்பது நம்முன் உள்ள மிகப்பெரிய சவாலாகும். பள்ளிகள் திறப்பது பாதுகாப்பானதா அல்லது நோய்த்தொற்றை மேலும் அதிகப்படுத்தி விடக்கூடுமா? பள்ளிகள் மூடி இருப்பதனால் குழந்தைகளிடையே ஏற்படும் மனநல பாதிப்புகள் மற்றும் சமூக பாதிப்புகளை எப்படி சரி செய்வது? மாணவர்களின் கற்றல் இழப்பை எவ்வாறு ஈடுகட்டுவது? என பல கேள்விகள் நம் முன் தோன்றுகின்றன. இந்த கேள்விகளுக்கு விடை தெரியாமல் பள்ளிகள் திறப்பது குறித்து ஒரு முடிவெடுக்க முடியாது.  குறிப்பாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நோய்தொற்று தற்போது  அதிகமாகி வரும் இவ்வேளையில்  பள்ளிகள் திறப்பு தள்ளிப் போக வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இக்கேள்விகளுக்கு விடை காணும் விதமாக உலக நாடுகள் இச்சூழ்நிலையை எவ்வாறு கையாள்கின்றன என்பது குறித்தும், நம் நாட்டில் இப்பிரச்சனைகளுக்கு எவ்வாறு தீர்வு காண்பது என்பதையும் மேலும் பார்ப்போம்.

கற்றல் இழப்பை சரி செய்ய என்ன செய்கின்றன உலக நாடுகள்?

சீனா கொரோனாவிற்கு முன்னோடியாக இருந்தது. அதே வேளையில் கொரோனாவால் ஏற்படும் கற்றல் இழப்புகளை சரி செய்வதிலும் முன்னோடியாக உள்ளது. இணையவழி கற்றலை அனைவருக்கும் உறுதி செய்யும் வகையில் விளிம்பு நிலையில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் இலவசமாக கணினிகளை வழங்கியுள்ளது‌. அதனோடு சேர்த்து அனைத்து மாணவர்களுக்கும் இணைய வசதியையும் இலவசமாக வழங்கியுள்ளது.

இதேபோல் பிரான்ஸ் நாட்டில் மாணவர்கள் கணினிகளை  பெற்று பயன்படுத்திவிட்டு மீண்டும் அரசிடம் ஒப்படைக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இணைய வசதி இல்லாத ஏனைய ஐந்து சதவிகித மாணவர்களுக்கு ஒப்படைப்புகள் அச்சிட்டு வழங்கப்படுகின்றன.

ஐக்கிய அரபு அமீரகம் கணினி, இணையம் போன்ற தொழில்நுட்ப உதவி தேவைப்படும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கென்று முழு நேரம் இயங்கும் பிரத்தியேக தொலைபேசி இணைப்பை உருவாக்கி கற்றலை உறுதி செய்து வருகிறது.

உலக வல்லரசான அமெரிக்காவில் இணையவழிக் கல்வி நடைபெறுகிறது. வாஷிங்டன் மாகாணத்தில் ஒரு பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் இணையவசதி இல்லையெனில் அப்பள்ளி  கட்டாயமாக இணைய வழிக் கற்பித்தலை செய்யக்கூடாது என்று ஆணையிட்டுள்ளது. அவர்கள் மாற்றுமுறை கல்வியை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

போர்ச்சுகீசிய நாட்டில் அனைத்து மாணவர்களுக்கும் இணைய வசதி இல்லாத நிலையில் அதை சரி செய்யும் பொருட்டு அந்நாட்டு அரசு அதன் தபால் துறையுடன் ஒரு ஒப்பந்தத்தை கையெழுத்திட்டுள்ளது. அதன்படி தபால் வழியாக மாணவர்கள் அனைவருக்கும் கற்றல் பாடங்கள் பயிற்சி தாள்கள் மற்றும் ஒப்படைப்புகள் அவரவர் வீட்டிற்கே அனுப்பி வைக்கப்படுகின்றன.

இவ்வாறு உலக நாடுகள் பலவும் ஒன்றுக்கும் மேற்பட்ட தொழில்நுட்ப சாதனங்களான கணினி, இணையம், தொலைபேசி,தொலைக்காட்சிகள், யூடியூப் மற்றும் வேறு பல கற்றல் ஆப் போன்றவைகளை பயன்படுத்தி தத்தம் நாடுகளில் அவர்களது மாணவர்கள் கற்றல் செயல்பாடுகள் தடைபடாமல் பார்த்துக் கொள்கின்றனர்.

ஊட்டச்சத்து வழங்கலில் உலக நாடுகள்.

இந்தியாவில் பசி பட்டினி பிரச்சினை ...

கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்டுள்ள பள்ளிகளில் ஜப்பான் நாட்டில் பெற்றோர்களுக்கு அவர்கள் செலுத்திய பள்ளி கட்டணங்கள் திரும்ப வழங்கப்பட்டுள்ளது.  “மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கவில்லை என்றால் ஆசிரியர்களுக்கு பள்ளி நிர்வாகம் எவ்வாறு ஊதியம் வழங்கும்?” என்று கேள்வி எழுப்பும் நம் மக்கள் ஜப்பான் அரசு ஏன் பெற்றோருக்கு கல்வி கட்டணத்தை திரும்ப அளிக்கிறது என்று சிந்திக்க வேண்டும். சரி, ஊட்டச்சத்திற்கு வருவோம் ஜப்பான் நாட்டில் மூடப்பட்ட பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு அவரவர் வீட்டிற்கே சென்று உணவுகள் வழங்கப்படுகின்றன. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் மாணவர்கள் தங்கள் வீட்டின் அருகாமையில் உள்ள மையங்களுக்கு வந்து உணவுகளை எடுத்துக் கொண்டு செல்லும் வசதி செய்து தரப்பட்டுள்ளது.

ஸ்பெயின் நாட்டில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்களுக்கு அவர்கள் வீட்டின் அருகாமையில் உள்ள உணவகங்களில் உணவு அருந்த கிரெடிட் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. அர்ஜென்டினா நாட்டிலும், வாஷிங்டன் மாகாணங்களில் மாணவர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் அமெரிக்காவில் மாணவர்களின் குடும்பம் அவர்களுக்கான உணவுப்பொருட்களை மொத்தமாக எடுத்துச்செல்லும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு பள்ளிகள் மூடப்பட்டுள்ள  நாடுகள் அனைத்தும் மாணவர்களுக்கு உணவு தடையில்லாமல் வழங்குவதற்கு பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

சமூகத்திலிருந்து தனிமைப் படுத்துவதை  உலக நாடுகள் எப்படி கையாளுகிறது:

சமூக தனிமையிலிருந்து விடுவிக்க மாணவர்கள் அவர்களின் பள்ளிகளோடு தொடர்பில் இருப்பது மிக முக்கியமானதாகும். எப்போதும் பள்ளிக்கும் மாணவர்களுக்குமான தொடர்பாக இருப்பவர் ஆசிரியர். எனவே மாணவர்களின் தனிமையை போக்க ஆசிரியர்கள் அவர்களது மாணவர்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும். அமெரிக்கா இங்கிலாந்து போன்ற நாடுகளில் ஆசிரியர்கள் அவர்களுடைய மாணவர்கள் இணையம் மற்றும் தொலைபேசி வாயிலாக தினமும் தொடர்பில் உள்ளனர். இன்னும் ஒருபடி மேலே சென்று ஜப்பான், தாய்லாந்து போன்ற நாடுகளில் ஆசிரியர்கள் தொடர்ச்சியாக தங்கள் மாணவர்களின் வீடுகளுக்கு சென்று அவர்களையும் அவர்கள் குடும்பங்களையும் சந்திக்கின்றனர்.

கொரோனாவும் இந்திய மாணவர்களின் நிலையும்:

DMK Chief MK Stalin has urged the TN Government to immediately ...

உலக நாடுகளில் மாணவர்களோடு இணையவழியில் தொடர்பில் இருக்கின்றனர். ஆனால் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் இணையவழி வகுபகுப்புகள் ஒரு தீர்வு அல்ல.2014 ஆம் ஆண்டு செய்யப்பட்ட தேசிய கணக்கெடுப்பின் படி இந்தியாவின் 12.5% வீடுகளில் மட்டுமே இணைய வசதி உள்ளது. மிக சமீபத்தில் ‘Insight and consultingcomoany Kantar’ மேற்கொண்ட ஆய்வில் இது தற்போது 38 சதவீதமாக உயர்ந்துள்ளதாக கூறியுள்ளது. இருப்பினும் இந்த 38 சதவிகிதம் என்பது அனைத்து பிரிவினருக்கும் சமமானதாக இல்லை. பல்வேறு சமத்துவமின்மை காணப்படுகின்றன. வாழிடம், பாலினம், பொருளாதாரம் மற்றும் வயது போன்ற பல்வேறு விதங்களில் இணையவசதி சமமின்மை காணப்படுகிறது. அவ்வாறு இருக்க நம் நாட்டின் இணையவழிக் கல்வி என்பது பூனை கண்ணை கட்டிக்கொண்டு உலகம் இருண்டு விட்டதாக கூறுவதற்கு ஒப்பாகும். எனவே மாற்றுமுறை கல்வியை நாடுவதே நம் மாணவர்களுக்கு பயன் அளிக்கும்.

இந்தியாவில் பள்ளிகள் மூடலுக்கு பிறகு குழந்தைகளுக்கு மதிய உணவை தடையில்லாமல் வழங்கி மற்ற மாநிலங்களுக்கு வழிகாட்டுதலாக இருந்தது கேரளா அரசாகும். இதனால் கேரள அரசு உலக அளவில் பாராட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து மார்ச் 18ஆம் தேதி குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்குவது குறித்து விளக்கமளிக்குமாறு அனைத்து மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதனைத்தொடர்ந்து அஸ்சாம், மேற்கு வங்கம், ஆந்திர பிரதேசம் மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களும் மதிய உணவை குழந்தைகளின் வீடுகளுக்கே அங்கன்வாடி ஊழியர்கள் மூலமாக ஒப்படைக்கப்படும் என்று கூறினர்.துரதிர்ஷ்டவசமாக தமிழகம் மற்றும் புதுவையில் இன்றுவரை மதிய உணவு மாணவர்களுக்கு சென்று சேரவில்லை.இவ்விரு அரசுகளும் விரைவாக செயல்பட்டு மாணவர்களின் பசியை போக்க உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

இந்தியாவில் பள்ளி மூடல் வாயிலாக சுமார் முன்னூறு லட்சம் மாணவர்கள் தங்கள் சமூக வாழ்விலிருந்து தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். பள்ளியில் நண்பர்களோடு சேர்ந்து ஆடும் விளையாட்டு, கோபமாக போடும் சண்டை, பேனா கொண்டுவராதவனக்கு தன்னுடைய பேனாவை பகிர்ந்து கொள்ளும் நட்பு, தான் கொண்டுவந்த பிஸ்கட்டுகளை ஆளுக்கு ஒன்றாக பகிர்ந்து உண்ணும் அன்பு, தவறு செய்து மாட்டிக் கொள்ளும் போது ஒருவரை ஒருவர் காட்டிக் கொடுக்காத குறும்பு என மாணவர்கள் இழந்து உள்ளவை ஏராளம் ஏராளம். கூட்டிலிருந்து வந்த பட்டாம் பூச்சிகள் வானில் சுற்றித் திரிவதே அழகு. அவ்வாறு சுற்றித்திரிந்த பட்டாம் பூச்சிகளை மீண்டும் கூட்டுக்குள் போட்டுவிட்டது இந்தப் கொரோனா.

மாணவர்கள் நாள்தோறும் விளையாடி மகிழ்ச்சியாக பொழுதைக் கழிப்பதாக நாம் நினைக்கலாம். ஆனால் நிலைமை அவ்வாறாக இல்லை. சிறு குழந்தைகள் முதல் பதின்ம பருவ குழந்தைகள் வரை பல்வேறு வகையான சுரண்டல்களுக்கு ஆளாக அதிக வாய்ப்புகள் உள்ளன.குடும்ப வறுமை காரணமாக உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மாணவர்கள் ‘குழந்தை தொழிலாளர்களாக’ மாற உள்ளதாக UNICEF மற்றும் சர்வதேச தொழிலாளர்கள் அமைப்பு (ILO)  எச்சரித்துள்ளது. கிராமப்புறங்களில் காட்டிலும் நகர்ப்புறங்களில் உள்ள குழந்தைகளே குழந்தை தொழிலாளர்களாக மாற அதிக வாய்ப்புகள் உள்ளன. இதுதவிர குழந்தைகள் அதிகப்படியாக தங்கள் வீட்டு வேலைகளை செய்வதிலும் ஈடுபடுத்தப்படுவர் இதன் மூலமாக குழந்தைகள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பாதிப்படைவர். பள்ளி மூடலால் பொதுவாக குழந்தைகள் பாதிக்கப்பட்டாலும் இதில் பெரிதும் பாதிக்கப்பட இருப்பது பெண் குழந்தைகளே ஆவர். இதற்கு முன் மேற்கு ஆப்பிரிக்காவில் எபோலோ வைரஸ் பாதிப்பின் காரணமாக பள்ளிகள் மூடப்பட்ட போது பெண் குழந்தைகள் அதிகமாக பாலியல் பாதிப்பிற்கு ஆளானதாகவும், ‘பதின்ம வயது கருவுற்றல்’ விகிதம் அதிகரித்து இருந்ததும் இதற்கு சான்றாகும் என்று UNESCO கூறுகிறது.

சரி மேற்கூறிய அனைத்துவித பாதிப்பில் இருந்தும் தப்பி வரும் குழந்தைகளும் அலுங்காமல் மொத்தமாக சென்றுவிடும் பெரும் புதைகுழி ‘திரைகள்’ ஆகும். ஆம் பெரும்பாலான குழந்தைகள் மிகவும் பத்திரமாக உள்ளதாக எண்ணி பெற்றோர்கள் பலரும் இவர்களை அமர்த்துவது இந்த மெய்நிகர் உலகத்தின் முன்தான். தொலைக்காட்சி,கணினி, கைபேசி என இந்த உலகம் நாம் நினைப்பது போல குழந்தைகளுக்கு பாதுகாப்பானவை அல்ல. தொடர்ந்து வீடியோ கேம் விளையாடி மன அழுத்தத்தால் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த மாணவன் முதல் இணைய சூதாட்டத்தில் தன் தந்தையின் பணத்தை பந்தயமாக வைத்து லட்சக்கணக்கில் தோற்றுப்போன மாணவன் வரை நாம் கண்டும் கேட்டும் உள்ளோம்.

ஜெய்ப்பூர் மாவட்டத்திலிருந்து இயங்கிவரும் ‘ஜேகே லோன் குழந்தைகள் மருத்துவமனை’ மேற்கொண்ட ஒரு ஆய்வில் இருந்து இந்த கொரோனா பள்ளி மூடல் மற்றும் ஆன்லைன் வகுப்பறைகள் மூலமாக சாதாரணமாக 65 சதவிகித குழந்தைகள் மின்னணு கருவிகளுக்கு அடிமையாகி விட்டதாக கூறுகிறது. அவர்களுள் 50 சதவிகிதம் பேர் அவர்கள் விரும்பும் சாதனத்தை குறைந்தது அரை மணி நேரம் கூட பிரிந்து இருக்க முடியாமல் சிக்கித் தவிப்பதாக இந்த ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. மேலும் அதிகப்படியான மின்னணு சாதனங்களைப் பயன்படுத்துவதை பெற்றோர்கள் தடுக்கும் வேளையில் அழுது அடம்பிடித்து,தன்னிலை இழந்து, எரிச்சலோடு தன் கோபத்தை வெளிப்படுத்துதல் போன்ற நடத்தைப் பிறழ்வுகள் ஏற்படுவதாகும் கண்டறியப்பட்டுள்ளது. எனவே நாம் பாதுகாப்பானவை என்று நினைத்து குழந்தைகளை ஒப்படைக்கும் ‘திரைகள்’ அவர்களை அமைதிப்படுத்தவில்லை, அவர்களை ஆட்கொண்டு வருகிறது. குழந்தைகளின் நடத்தை மற்றும் மனநிலை அவை கண்ணுக்குத் தெரியாத எதிர்மறை  விளைவுகளை உண்டாக்கி வருகிறது என்பதை நாம் மறந்துவிட வேண்டாம்.

மாணவர்களை சூழ்ந்துள்ள ஆபத்துகளில் இருந்து அவர்களைப் பாதுகாக்கம் பொறுப்பு பெற்றோருக்கும், ஆசிரியர்களுக்கும், அரசுக்கும் உள்ளது.

பெற்றோர்களின் பங்கு:

பெற்றோர்களில் இரண்டுவகை உள்ளனர். ஒருவகை காலையிலிருந்து இரவு வரை எதையாவது படி படி என்று நச்சரிப்பு செய்வோர். மற்றொரு வகை குழந்தைகள் என்ன செய்கிறார்கள், ஏது செய்கிறார்கள் என்ற அக்கறை இல்லாதவர்கள். முதலாவதாக கூறியவர் குழந்தைகளை கொடுமைப்படுத்துகிறார். மற்றொருவர் குழந்தைகளை வீணடிக்கிறார். இரண்டுமே தவறு தான். மாணவர்கள் ஒரு நாளில் எவ்வளவு நேரம் கற்றலில் செலவு செய்கிறார்கள் என்பதைவிட செலவு செய்த நேரத்தை எவ்வளவு ஈடுபாட்டோடு அனுபவிக்கிறார்கள் என்பதே முக்கியம். உங்கள் குழந்தைகள் இந்த கொரோனா கால விடுமுறைகளை பயனுள்ளதாக கழிக்க ஒரு சின்ன யோசனை. ஒரு நாளில் குறைந்தது 1 முதல் 3 மணி நேரம் வரை குழந்தைகளை ஏதேனும் ஒரு விஷயத்தில் முறையாக கவனத்தை  செலுத்த வையுங்கள். அது அவர்களுக்கு பெரிதும் உதவும்.

ஆசிரியர்களின் பங்கு:

Ahmedabad: Survey belies AMC board's claim on 'low demand' for ...

ஏற்கனவே கூறியது போல ஆசிரியர்கள் இக்காலகட்டத்தில் குழந்தைகளோடு தொடர்பில் இருப்பது. முக்கியமாகும் நம் நாட்டில் இணையவழியில் தொடர்பு கொள்ளும் நிலையிலுள்ளவர்கள் தனியார் பள்ளி மாணவர்களாகவே இருப்பர். மீதமுள்ள பெரும்பான்மையான மாணவர்கள் அரசு பள்ளியில் படிப்பவர்கள். இவர்களுள் வெகு சிலரையே தொலைபேசி வாயிலாக தொடர்பு கொள்ள முடியும். எனில், மாணவர்களையும் பெற்றோர்களையும் தொடர்பு கொள்ள ஆசிரியர்கள் மாணவர்கள் இருப்பிடம் தேடிச் செல்லவேண்டிய அவசியம் உள்ளது. பல்வேறு சமூகப் பொருளாதார சிக்கலில் நசுக்கப்பட்டு உள்ள நம் மாணவர்களுக்கு ஆதரவாக ஒரு ஆசிரியரை தவிர யாரும் இருக்க முடியாது. மாணவர்களுக்கு வடிகால்களாக வேறு ஏதேனும் சமூக விரோதிகள் வந்து அவர்கள் சீரழியாமல் இருக்க வேண்டுமாயின் ஆசிரியர்கள் தத்தம் மாணவர்களை தேடிச் செல்லவேண்டிய கட்டாயம் உள்ளது. ஒவ்வொரு நாளும் அவர்களை சென்று பார்க்க வேண்டும் என்ற அவசியமில்லை குறிப்பிட்ட கால இடைவெளியில் கூட மாணவர்களை சென்று சந்தித்து வரலாம். இவ்வாறான சந்திப்பு வாயிலாக ‘நாம் பள்ளியோடு தொடர்பில் தான் இருக்கிறோம்; நமக்கு ஏதேனும் பிரச்சினை என்றால் நம் ஆசிரியரிடம் கூறலாம், நமக்கு உதவ அவர்கள் முன் வருவார்கள்’ என்ற நம்பிக்கை மாணவர் மனதில் துளிர்விடும். எனவே ஆசிரியர்களே மாணவர்களுக்கு துருவ நட்சத்திரமாக வழிகாட்டுங்கள்.

ஓர் அரசின் பங்கு:

இணைய வழி வகுப்புகள் பள்ளிகளுக்கு ஒரு மாற்று கிடையாது என்றாலும் கொரோனா போன்ற பெருநோய் தொற்றின்போது அதை தவிர்க்க முடியாமல் பெரும்பாலான வளர்ந்த நாடுகள் அம்முறையை பின்பற்றி வருகின்றன. இருப்பினும் நம் நாட்டில் இந்த இணைய வழி கற்பித்தல் பெரும் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தும். அந்த ஏற்றத்தாழ்வை சமன் செய்யவேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. அதற்கான ஒரு தீர்வு ‘மாற்றுமுறை கல்வியாகும்’. அதற்கான சில யோசனைகள் இதோ இங்கே தற்போதுள்ள சூழலில் முதல் பருவம் என்பது கானல் நீர்தான். எனவே இரண்டாம் பருவத்தில் இருந்து பள்ளிகள் திறப்பதற்கு ஆயத்தமாக வேண்டும். மத்திய மனிதவளத்துறை பள்ளிகள் திறப்பிற்குப் பின் தேவையான கற்றல் கற்பித்தல் கையேட்டினை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. அக்கையேடு ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பிற்கு டிசம்பர் 2020 வரும், 6 முதல் பன்னிரண்டாம் வகுப்புகளுக்கு ஜூன் 2021 லும் வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளது. அதுவரை நம் மாணவர்கள் கல்வி செயல்பாட்டில் ஈடுபடுத்தாமல் வைத்திருப்பது சமூக சமமின்மையை அதிகரிக்கும். தமிழகம் மற்றும் புதுவை அரசுகள் ஆசிரியர்களை வகுப்பு வாரியாக பாட வாரியாக ஒருங்கிணைக்க வேண்டும்.அக்குழுக்கள் கற்றல் அடைவுகளை மையப்படுத்தி மாணவர்களிடம் வளர்க்கவேண்டிய திறன்களை எளிமையான பயிற்சித்தாள்களாகவும்,செயல்பாடுகளாகவும், ஒப்படைப்பு களாகவும் மாற்ற வேண்டும்.

இவ்வாண்டு மாணவர்களுக்கு கொடுக்கவேண்டிய பாடப்புத்தகங்களை அவர்களுக்கு வழங்கிவிட வேண்டும். ஆனால் வழக்கமாக நடைபெறும் வகுப்பறைகளுக்கு பதிலாக திறன்களை மையப்படுத்திய எளிய  வகுப்புகளாக  இவை செயல்படும். இதன் மூலம் மாணவர்களை தொடர்ச்சியான கற்றலில் ஈடுபட வைக்கலாம். மாணவர்களின் கவனம் வெவ்வேறு திசையில் சிதறாமல் அவர்களை ஒருமுகப்படுத்தலாம். இவ்வாறு செய்வதன் மூலமாக  கொரோனா நோய் தொற்று காலங்களில் கற்றல் தடைபட்டு நின்றது என்ற வரலாற்றுப் பிழையை சரி செய்ய முடியும். அத்தோடு ஆழ்ந்து கற்க வேண்டும் என்று விரும்பும் மாணவர்கள் தங்கள் பாட புத்தகத்தை படிக்கலாம். அதில் எழும் சந்தேகங்களை தெளிவுபடுத்திக் கொள்ள கற்றல் செயலிகள் வசதியை அந்தந்த ஊர் பள்ளிகளில் ஏற்பாடு செய்து தர வேண்டும். இந்த காலகட்டத்தையாவது பயன்படுத்தி அனைத்து அரசு பள்ளிகளிலும் இணைய வசதிகள் செய்து தர பட வேண்டும்.

மேலே கூறிய இந்த கற்றல் செயல்பாடுகள் சிறுசிறு குழுக்களில் சமூக இடைவெளியோடு நடைபெறவேண்டும். இந்த முறையில் வகுப்புகளை கொண்டுசெல்ல வழக்கமான ஆசிரியர்கள் மட்டும் போதாது. எனவே இந்த முறைக்கு அந்தந்த ஊர்களில் உள்ள தன்னார்வலர் களையும் பயன்படுத்த வேண்டும்.ஆனால் கல்வி பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு அரசு உரிய பாதுகாப்பிற்கு உத்திரவாதம் அளிக்க வேண்டும். இவ்வாறு நடைபெறும் கற்றலில் மாணவர்களின் பங்கேற்பை  வைத்து அவர்களுக்கு மதிப்பீடு வழங்கி அடுத்த வகுப்பிற்கு தேர்ச்சி அளிக்கவேண்டும். இந்த கல்வி ஆண்டை ‘தேர்வுகளே இல்லாத, திறன் அடிப்படையிலான’ கல்வி ஆண்டாக கொண்டு செல்வோம்.

‘எவ்வளவு நாட்கள் மாணவர்கள் பள்ளியை விட்டு தள்ளி இருக்கிறார்களோ அவ்வளவு கடினம் அவர்களை மீண்டும் பள்ளிக்கு கொண்டு வருவது’ என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். எனவே பள்ளி என்ற அமைப்பு அந்தந்த ஊர்களுக்கு தேவையான தகவமைப்போடு மாற்றுப் பள்ளிகளாக மாற வேண்டும். குழந்தைகள் பள்ளியை தேடி வரும் முறையை மாற்றி, குழந்தைகள் இருக்கும் இடத்திற்கே கல்வியை கொண்டு செல்ல வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலமே கொரோனா போன்ற பேரிடர் கால பெரும் பாதிப்புகளிலிருந்து நம் மாணவர்களை பாதுகாக்க முடியும். எனவே மாற்றுப் பள்ளிகளை திறப்போம் மாணவர்களை காப்போம்.

 

இரா.கோமதி,  அரசு பள்ளி ஆசிரியை,

அமைப்பு செயலர், ஆசிரியர் சங்கம் (பதிவெண் 43), புதுச்சேரி.

2 Comments

  1. நல்ல கட்டுரை. பல கோணங்களிலும் பிரசினை அணுகப்பட்டுள்ளது.

  2. நன்றி ஐயா! ஆன்லைன் வகுப்புகள் மாணவர்களுக்கு முழுமையாக பயனளிக்காது. எனவே ஆசிரியர்களை கொண்டு மாற்று முறைகளில் கல்வி அளிக்க அரசு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

Leave a Response

Top Reviews

Video Widget

gallery