Article

தானாக முன்வந்த உச்சநீதிமன்றம் தரப்போவது என்ன..? – அ. குமரேசன்

Spread the love

மனதின் ஓரத்தில் ஒரு கவலை ஒட்டியிருக்கும் – வழியில் ஏதேனும் விபத்து ஏற்பட்டுவிடக்கூடாதே என்று. ஆயினும் நம்பிக்கையோடு சொந்த வண்டிகளிலும் பேருந்துகளிலும் ரயில்களிலும் விமானங்களிலும் படகுகளிலும் கப்பல்களிலும் பயணம் மேற்கொள்ளவே செய்கிறோம். அது போலத்தான், முன் போல நடுநிலையான விசாரணைகள் நடத்தப்படுமா, சரியான தீர்ப்புகள் வழங்கப்படுமா என்ற சந்தேகங்கள் எழுகின்றபோதிலும் இறுதிப் புகலிடமாக நீதிமன்றத்தை நாடவே செய்கிறோம். மக்கள் பிரச்சினைகளுக்காகப் பொதுநல வழக்குகள் போடுகிறோம், பல்வேறு விவகாரங்களில் நீதிமன்றம் தானாக முன்வந்து எடுத்துக்கொள்ளக்கூடாதா என்று எதிர்பார்க்கிறோம்.

பாதங்களில் தேசப்படம் வரையப்பட்டது போன்ற வெடிப்புகளோடு புலம்பெயர் தொழிலாளர்கள் தம் சொந்த ஊர்களுக்கு மறுபுலப்பெயர்ச்சி செய்துகொண்டிருக்கிறார்களே, அவர்களுடைய வியர்வையும் ரத்தமும் கண்ணீரும் உச்சநீதிமன்ற மௌனத்தைக் கரைத்திருக்கின்றன. மே 26 அன்று அவர்களுடைய பிரச்சினையை உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து எடுத்துக்கொண்டுள்ளது. மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, மத்திய, மாநில அரசுகளுக்கு என்ன செய்தீர்கள், என்ன செய்யப்போகிறீர்கள் என்று பதிலளிக்கக் கேட்டு ஆணையனுப்பியுள்ளது.

அந்தத் தொழிலாளர்களுக்காக அரசாங்கத்தை அசையவைக்கத் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்குகளைப் புறந்தள்ளிய உச்சநீதிமன்றம் இப்போதாவது இதில் தலையிட்டிருப்பதை, தொடக்கத்திலேயே அந்த வழக்குகளை விசாரணைக்கு எடுத்திருக்கலாமே என்ற விமர்சனத்தோடு வரவேற்கலாம். ஒருபோதும் செய்யாமலே விடுவதைவிட தாமதமாகவாவது செய்வது நல்லது என்றொரு ஆங்கிலச் சொலவடை எல்லோருக்கும் தெரிந்ததே.. ஆனால், தாமதமாகும் நீதி மறுக்கப்படும் நீதியே என்ற சொலவடையும் ஆங்கிலத்தில் இருப்பதும் எல்லோருக்கும் தெரியுமே.

தள்ளுபடியும் தானாக முன்வந்ததும்

என்ன செய்வார்கள் புலம் பெயர்ந்த ...

புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் ஊர்களுக்குப் புறப்படத் தொடங்கியதுமே தாக்கல் செய்யப்பட்ட, அதன் பிறகும் அடுத்தடுத்துக் கொண்டுவரப்பட்ட பொதுநல வழக்குகளை அப்போது உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது ஏன்? நாடு முழுவதும் முன்னெப்போதும் சந்தித்திராத ஒரு பெருந்தொற்றுப் பேரிடரை அரசு கையாண்டுகொண்டிருக்கிற நிலையில் அந்த நடவடிக்கைகளுக்கு முன்னுரிமையளிப்பதே முக்கியம் என்று நீதிமன்றம் கருதியிருக்கலாம் என்று சிலர் கூறுகிறார்கள். இந்த வழக்குகளை எடுத்துக்கொள்வதால் அந்தப் பணிகளுக்கு இடையூறு ஏற்பட்டுவிடக்கூடாது என்ற எண்ணத்தோடு அப்போது நீதிமன்றம் இருந்திருக்கலாம் என்றும் கூறுகிறார்கள். வழக்குகளை எடுத்துக்கொள்வது தொடர்பான விசாரணைகளில் அரசுத் தரப்பில் தரப்பட்ட விளக்கங்கள் ஏற்கத்தக்கவையே என்று நீதிமன்றம் கருதியிருக்கக்கூடும்.

ஆயினும் உச்சநீதிமன்றத்தின் இந்தச் செயல்பாடு அல்லது செயல்பாடின்மை குறித்துக் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. அரசியல் தலைவர்கள், மனித உரிமைச் செயல்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்கள் மட்டுமல்லாமல் முன்னாள் நீதிபதிகள் கடுமையாக விமர்சித்தார்கள். பல முக்கியமான வழக்குரைஞர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஏற்பின்மையைத் தெரிவித்தார்கள். தலைமை நீதிபதிக்குக் கடிதமே அனுப்பினார்கள். கொரோனா தடுப்புக்கான கறார் நடவடிக்கைகள் தேவை, அதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும், ஆனால் மக்களின் அடிப்படை உரிமைகளை – குறிப்பாக எளிதில் பேரிடரின் பெருந்துன்பங்களுக்கு இரையாகக்கூடிய எளிய, நலிந்த மக்களின் உரிமைகளை – உறுதிப்படுத்தும் தலையாய கடமையிலிருந்து நீதிமன்றம் ஒருபோதும் தடம்புரளக்கூடாது என்று வலியுறுத்தினார்கள்.

நீதிமன்றம் அரசாங்கத்தின் கருவியாக மாறிவிட்டதா என்ற கேள்வியும் உரக்க ஒலித்தது. அதிலும், நாட்டின் சாலைகளில் எங்குமே ஒரு புலம்பெயர் தொழிலாளி கூட நடந்து போய்க்கொண்டிருக்கவில்லை என்கிற அளவுக்கு தலைமை வழக்குரைஞர் மூலமாக அரசு சொன்னதை நீதிமன்றம் மறுகேள்வியின்றி ஏற்றுக்கொண்டதைப் பார்த்து மனிதநேயத்திற்காக நிற்பவர்கள் பதறிப்போனார்கள். ஊரடங்கு பல மாதங்களுக்கு நீட்டிக்கப்படலாம் என்ற போலித்தகவல் சமூக ஊடகங்களில் பரவியதால்தான் புலம்பெயர் தொழிலாளர்கள் வெளியேறத் தொடங்கினார்கள் என்று அரசுத்தரப்பில்  சொல்லப்பட்ட விளக்கத்தோடு அந்த வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டது நியாயம்தானா என்ற கேள்வியும் எழுப்பப்பட்டது.

புலம்பெயர் தொழிலாளர் பிரச்சனை ...

“புலம்பெயர் தொழிலாளர்களை கையாண்ட விதத்திற்காக உச்சநீதிமன்றம் தோல்விச் சான்றிதழ் பெறத் தகுதிபெற்றதாகிவிட்டது,” என்று எழுதினார் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மதன் லோக்கூர். “மிகப்பெரிய பெரும்பான்மை பலத்தோடு ஆட்சியமைத்திருக்கிறவர்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் நினைக்கக்கூடும். ஆனால் நாட்டின் ஒட்டுமொத்த வாக்காளர்களில் 25.16 சதவீதத்தினரின் வாக்குகளையே, பதிவான வாக்குகளில் 37.76 சதவீத வாக்குகளையே, நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 17.6 சதவீத வாக்குகளையே மத்திய ஆளுங்கட்சி பெற்றுள்ளது. வாக்காளர்களாகப் பதிவு பெறாத, அல்லது ஆளுங்கட்சிக்கு வாக்களிக்காத எஞ்சியுள்ள 107 கோடியே 10 லட்சம் மக்களின் குரல் கண்டிப்பாகக் கேட்கப்பட்டாக வேண்டும். அவர்களுடைய குரல்களை உச்சநீதிமன்றம் கேட்க வேண்டிய, “இந்தியாவின் மிகுந்த நம்பிக்கைக்குரிய நிறுவனம்” என்று (உலக அளவில் மதிக்கப்படும் ஆஸ்திரேலியப் பல்கலைக்கழக சட்டப் பேராசிரியர்) ஆலிவர் மென்டேல்சான் சித்தரித்த தோற்றத்தை மீட்க வேண்டிய நேரம் இது” என்று எழுதினார் உச்சநீதிமன்ற மூத்த வழக்குரைஞர் சந்தர் உதய் சிங்.

சிறப்பு ரயில்கள் மிகவும் பின்னாட்களில்தான் விடப்பட்டன. அதிலும் கட்டணம் யார் செலுத்துவது என்பது உட்படப் பல குழப்பங்கள். அரசு நடவடிக்கைகளின் தோல்விக்கு அப்பட்டமான சான்று என்று சித்தரிக்கத்தக்க வகையில் லட்சக்கணக்கில் புலம்பெயர் தொழிலாளர்கள் எல்லா நம்பிக்கைகளையும் இழந்தவர்களாகக் குடும்பம் குடும்பமாகக் கால்நடையாகப் புறப்பட்டார்கள். எல்லா மாநிலங்களிலிருந்தும் நடந்தார்கள். புனிதயாத்திரைகளாக மேற்கொள்ளப்படும் கால்நடைப் பயணங்களில் கூட இவ்வளவு பெரும் எண்ணிக்கையில் மக்கள் நடந்ததில்லை. இந்தியாவின் மிகப்பெரும் இடப்பெயர்ச்சி என்று வரலாறு இதைப் பதிவு செய்வது உறுதி.

வழக்கின் உட்பொருள்

தன் மீதான நம்பிக்கைப் பெயர்ச்சியாகவும் பதிவு செய்துவிடக்கூடாது என்ற அக்கறையோடு இப்போதேனும் உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து வழக்காக எடுத்துக்கொண்டது பெரியதொரு ஆறுதல். தானாக முன்வந்து என்பதன் உட்பொருள் என்னவென்றால் அரசாங்கத்தின் மீது நீதிமன்றமே வழக்குத் தொடுக்கிறது என்பதுதான். முதலிலேயே இது நடந்திருந்தால் அந்த எளிய உழைப்பாளிகள் எதிர்கொண்ட உயிரிழப்புகள், விபத்துகள் உள்ளிட்ட துயரங்கள் நிச்சயமாகக் குறைந்திருக்கும். ஏற்கெனவே மிகுந்த தாமதமாகிவிட்டது என்பதால் தனது இந்தச் சொந்த வழக்கின் விசாரணையை எவ்வளவு முடியுமோ அவ்வளவு விரைவாக நடத்தி முடிக்க வேண்டும், தீர்ப்பை எவ்வளவு முடியுமோ அவ்வளவு துல்லியமாகவும் கறாராகவும் அளிக்க வேண்டும்.

அந்த விசாரணைகளில் அரசுத்தரப்பிலிருந்து மட்டுமல்லாமல், தொழிற்சங்கங்கள், மனித உரிமை அமைப்புகள் போன்றவற்றிடமிருந்தும் கருத்துகளைக் கேட்க வேண்டும்.

Covid-19 lockdown: Supreme Court to hear plea on plight of migrant ...

எதற்காக அந்தத் தொழிலாளர்கள் தங்கள் ஊர்களை விட்டு நெடுந்தொலைவு மாநிலங்களுக்கு வந்தார்களோ அந்த வேலைகள் பறிபோயிருக்கின்றன. சொற்ப வருவாய்களும் அடிபட்டுவிட்டன. வெயில் கொடுமையால் ஏற்பட்ட ரத்தக்குழாய் வெடிப்பு, நடந்துகொண்டே இருந்ததால் ஏற்பட்ட மாரடைப்பு, சாலைகளில் (ரயில் தண்டவாளங்களிலும்) ஏற்பட்ட விபத்து ஆகிய காரணங்களால் உயிரிழந்தவர்கள் பலர். ஊரடங்கு முழுமையாக விலக்கிக்கொள்ளப்பட்ட பிறகு முந்தைய வேலைகள் கிடைக்குமா, எப்போது கிடைக்கும் என்ற வினாக்கள் ஒவ்வொருவர் மனதையும் ஆக்கிரமித்திருக்கின்றன. அப்படியே வேலை கிடைத்தாலும் இன்னொரு முறை போகத்தான் வேண்டுமா, யாரை நம்பிப் போவது என்ற வினாக்களுடன் பலர் வெறுமையாகப் பார்த்துக்கொண்டிருக்கக்கூடும்.

இதற்கெல்லாம் சரியான, நியாயமான தீர்வுகளை வழங்குவதாக, அந்த மக்களின் புதுவாழ்வை நிச்சயப்படுத்துவதாக உச்சநீதிமன்றத் தீர்ப்பு அமைய வேண்டும். அவர்கள் ஊர்விட்டு ஊர்போய் உழைப்பது, நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரக் கட்டுமானத்திலும், ஒற்றுமைப் பண்பாட்டை வளர்ப்பதிலும் முக்கியப் பங்காற்றுகிறது என்ற புரிதலோடு தீர்ப்பு வருமானால், அது நீதிமன்றத் தீர்ப்பாக மட்டுமல்லாமல், தேசத்தின் நீதியாகவும் நிலைபெறும்.

மத்திய அரசு தனது அமைச்சகங்களின் செயல்பாடுகள் பற்றிய புள்ளிவிவரங்களைத் தாக்கல்செய்வதோடு கடமை முடிந்துவிட்டதாகக் கருதாமல், சரியாகச் செயல்படுவதற்கான வாய்ப்பாக நீதிமன்றத்தின் ஆணைகளையும் வழிகாட்டல்களையும் வரவேற்கத் தயாராக இருக்க வேண்டும். நாட்டு மக்களுக்கு பிரதமர் எழுதியுள்ள திறந்த கடிதத்தில் தற்சார்புப் பொருளாதாரத்தைக் கட்டுவதன் முக்கியத்துவம் பற்றிச் சொல்கிறார். உண்மை நோக்கத்துடனேயே அந்தக் கருத்து சொல்லப்பட்டிருக்கிறது என்றால், அந்தத் தற்சார்பை உறுதிப்படுத்துவதில் இந்த உழைப்பாளிகளின் பங்கேற்பு முக்கியமானது என்ற உணர்வோடு நீதிமன்றத்தின் கேள்விகளுக்கு அரசு பதிலளித்தாக வேண்டும். மாநில அரசுகளும் இதற்கேற்பத் தகவமைத்துக்கொள்ள வேண்டும்.

இந்த நெருக்கடியான காலக்கட்டத்தில் அரசின் நடவடிக்கைகளைக் கேள்விக்கு உட்படுத்துவது தேசப்பற்றாகுமா என்று சிலர் கேட்பார்கள். அப்படிக் கேட்டு தவறுகளைச் சமுக்காளத்திற்கு அடியில் தள்ளி மறைக்க முயல்வார்கள். எளிய மக்களைப் பற்றிய அக்கறை கொள்வதுதான், தவறில்லாத நடவடிக்கைளை வலியுறுத்துவதுதான் தேசப்பற்று என்று புரிய வைப்பதாக நீதி வழங்கப்படட்டும்.

File:A.Kumaresan.jpg - Wikimedia Commons

அ. குமரேசன்

என் வலைப்பூ: அசாக்
http://asakmanju.blogspot.com

1 Comment

Leave a Response