Article

கருத்துச் சுதந்திரத்தின் எல்லை எது..? அதை வரையறுப்பது யார்..? – அ.குமரேசன்

Spread the love

 

கருத்துச் சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற குரல் ஒலிக்கிறபோதெல்லாம், அதற்கு எல்லை இல்லையா என்று கேட்கிற குரலும் ஒலிப்பதைக் கேட்கலாம். முதல் குரல் முற்றிலும் ஏற்கத்தக்கது என்றால் இரண்டாவது குரல் சற்றும் புறக்கணிக்க முடியாதது. இந்த இரண்டு குரல்களும் ஒலிப்பதைக் கேட்கிறபோது, கூடவே ஒரு காட்சியையும் காணலாம். முதல் குரலை ஒலிப்பவர்கள் பொதுவாக சமத்துவ லட்சியம், சமூக மாற்றம், பாலினப் பாகுபாடின்மை, மக்கள் நல்லிணக்கம், பகுத்தறிவு ஆகியவற்றை முன்வைக்கிறவர்களாக இருக்கிறார்கள். இரண்டாவது குரலை ஒலிப்பவர்கள் ஆகப்பெரும்பாலும் இந்த நோக்கங்களை ஏற்காதவர்களாக இருக்கிறார்கள்.

“கருத்துச் சுதந்திரத்திற்கு எல்லை இல்லையா” என்று கேட்கிற எல்லையோடு அவர்கள் நிற்பதில்லை. அவர்களுக்கு ஒவ்வாத கருத்தை வெளிப்படுத்துகிறவர்களை வசை பாடுவது, மிரட்டுவது, தாக்குவது, அதிகாரக் கருவிகளால் அடக்குவது என்று இறங்குகிறார்கள். கருத்துப்பூர்வமாக எதிர்வாதம் செய்வதிலும், நியாயங்களை நிறுவுவதிலும் தங்களது இயலாமையை வெளிச்சப்படுத்துகிறார்கள். ஆனாலும் அந்த இரண்டாவது குரலும் கேட்கப்பட்டாக வேண்டும்.

தற்போது தமிழகத்தில் ‘காட்மேன்’ வலைத்தொடரை முன்வைத்து இக்குரல்கள் ஒலிக்கின்றன. ஜீ-5 தயாரிப்பில், எழுத்தாளர் பாபு யோகேஸ்வரன் இயக்கிய அந்தத் தொடர் ஒளிபரப்பாகத் தொடங்கவில்லை. ஆனால் அதன் முன்னோட்ட விளம்பரத்தில் உள்ள ஒரு வசனத்தையும் ஒரு காட்சியையும் பிடித்துக்கொண்டு சர்ச்சை கிளப்பப்பட்டிருக்கிறது. மதத்தின் காவலர்களாக் கிளம்பியுள்ள அமைப்புளைச் சேர்ந்தவர்கள் தமிழகத்தின் பல இடங்களில் காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்திருக்கிறார்கள். தயாரிப்பாளருக்கும் இயக்குநருக்கும் நேரில் வந்து பதிலளிக்க சென்னை காவல்துறையிலிருந்து ஆணையனுப்பப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட சாதிப் பிரிவினரை இழிவாகச் சித்தரிக்கிறது, சமூக அமைதியைச் சீர்குலைக்கிறது என்றெல்லாம் புகாரில் கூறப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. கடந்த காலத்தில் – தற்போதைய கொரோனா போராட்டக் காலத்திலும் – மதப் பகைமைத் தீயை மூட்டிவிடும் நச்சுப் பிரச்சாரங்களை சிலர் தயக்கமில்லாமல் செய்தார்கள். அவர்கள் மீதும் புகார்கள் கொடுக்கப்பட்டன. ஆனால் அதிகார எந்திரம் அசையவில்லை. உண்மையிலேயே தமிழகத்தில் அதிகாரம் யார் கையில்?

கதையைப் பற்றி

செய்திகளிலிருந்து ஊகிக்க முடிவது என்னவென்றால், இது ஒரு மோசடிச் சாமியார் பற்றிய, அவருடைய மடத்தில் நடப்பது பற்றிய கதை என்பதுதான். மற்றபடி தடைகளைத் தாண்டி இணையத் திரைகளுக்கு அந்தப் படம் வந்தால்தான் தெரியும்.

காட்மேன்' வெப்சீரீஸ் தடைகோறலும் ...

இங்கே ஒரு சொந்த அனுபவம் ஒன்றையும் பகிர வேண்டும். அந்தத் தொடருக்கான படப்பிடிப்புகள் நடந்துகொண்டிருந்தபோது, ஊடக நண்பர் ஒருவர் தொடர்பு கொண்டு ஒரு காட்சியில் நடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். நடிப்புக் கலையில் உள்ள ஆர்வம் காரணமாக நானும் ஒப்புக்கொண்டேன். அங்கே ஒரு தொலைக்காட்சி விவாத அரங்கம் போல அமைக்கப்பட்டிருந்தது. என்னைப் போலவே விவாதங்களில் பங்கேற்கிற வலதுசாரிச் சிந்தனையாளர்கள் இருவரும், ஊடகவியலாளர்கள் இருவரும் வந்திருந்தார்கள். ஆசிரமத்தில் நடந்த குற்றம் பற்றிய விவாதம் நடப்பது போல் காட்சி. படப்பிடிப்பு முடிந்த பிறகுதான் இயக்குநரே அறிமுகமானார்! சர்ச்சை எழுந்தபிறகுதான் அந்த உதிரிக் காட்சியில் நாங்கள் பங்கேற்ற படம்தான் இது என்பதே நினைவுக்கு வந்தது!

படத்திற்கான விளம்பர விவகாரம் ஒருபுறமிருக்க, இனிமேல் இத்தகைய அழைப்புகள் வருமானால், நட்சத்திர நடிகர்களுக்குச் சொல்வது போல முழுக் கதையைச் சொல்லாவிட்டாலும், கதையின் மைய நீரோட்டம் என்ன என்பதையாவது சொல்லுமாறு வலியுறுத்த முடிவு செய்திருக்கிறேன்.

அவர்களது குற்றச்சாட்டு  

உலகம் எங்கும் கருத்துச் சுதந்திரம்

தொலைக்காட்சி விவாதங்களில் எதிர்ப்பாளர்கள் தரப்பிலிருந்து பங்கேற்றவர்கள், முன்னோட்ட விளம்பரத்தில் “என்னைச் சுற்றி இருக்கிற பிராமணர்கள் எல்லோரும் அயோக்கியர்களாக இருக்கிறார்கள்,” என்று நாயகப் பாத்திரம் சொல்வதாக ஒரு வசனம் வருவதாகக் குறிப்பிட்டு, இப்படி எல்லா பிராமணர்களையும சித்தரிப்பதை எப்படி ஏற்க முடியும் என்று கேட்டார்கள். அந்தக் குறிப்பிட்ட கதாபாத்திரம், தன்னைச் சுற்றியிருக்கிறவர்களைப் பற்றித்தானே அப்படிச் சொல்வதாக வருகிறது, நாட்டில் இருக்கிற எல்லா பிராமணர்களையும் அப்படிக் கூறுவதாக ஏன் திரித்துச் சொல்ல வேண்டும் என்ற கேள்விக்கு பதில் வரவில்லை. மாறாக வேறொரு கேள்வி வீசப்பட்டது – “இது போல மற்ற சாதிகளைப் பெயர் சொல்லிப் பேசுவார்களா,” என்று.

பொதுவாகத் திரைப்படங்களில் சாதிப் பெயர் கூறப்படுவதில்லை என்பதோடு சம்பந்தப்படுகிற பிரச்சனையுமாகிறது இது. பின்புலக் காட்சிகள், கதாபாத்திரங்களின் பேச்சுமொழி ஆகியவற்றின் மூலமே ஓரளவுக்குச் சாதி அடையாளப்படுத்தப்படும். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான கொடுமைகள், இடைநிலைச் சாதிகளைச் சேர்ந்தோர் மூலமாகவே பெருமளவுக்கு நிகழ்த்தப்படுகின்றன. சொல்லப்போனால் பிராமணர் அல்லாதார் மூலமாகப் பாகுபாடுகளைப் பராமரிப்பதுதான் பிராமணிய சித்தாந்தத்தின் சாதுரியம்.

ஆனாலும் திரைப்படங்களில் அந்தச் சாதிகளின் பெயர்கள் சொல்லப்படுவதில்லை. அப்படிச் சொன்னால் என்ன ஆகும் என்று தமிழ் சினிமாவும் தமிழ்ச் சமூகமும் பரிசோதனை செய்து பார்க்கத் தயாராக இல்லை. இந்நிலையில், பிராமணர் என்ற பெயரை மட்டும் பயன்படுத்துவது சரியா என்ற கேள்வியை ஒதுக்கிவிடுவதற்கில்லை.

பகுத்தறிவு சித்தாந்தமும் தி.மு.க ...

திராவிட இயக்கம் தழைத்தோங்கிவந்த காலக்கட்டத்தில் பிராமணிய எதிர்ப்பு பிராமணர் எதிர்ப்பாகவும் வெளிப்பட்டது. காலங்காலமாக அதிகாரபீடத் தொடர்புகளோடு செல்வாக்குச் செலுத்திய பிராமணியத்தால் வாய்ப்புகள் மறுக்கப்பட்ட பிரிவுகளின் பேராதரவு அதற்குக் கிடைத்தது. அனைத்துப் பிரிவுகளையும் சேர்ந்த முற்போக்காளர்களின் ஆதரவோடு வளர்ந்த அந்த இயக்கத்தின் முக்கியமான தாக்கங்களாக சமூகநீதி, பெண்களுக்கான வாய்ப்பு முதலியவை இங்கு வேரூன்றின.

இன்றைக்கு மக்களிடையே அதே அளவுக்கு பிராமணிய எதிர்ப்புக்கான ஆதரவு இருக்கிறதா என்று ஆராயப்பட வேண்டும். சமூகநீதிக்கான சட்டப்பூர்வ இட ஒதுக்கீடு ஏற்பாடுகளால் கல்வி, வேலை என்ற உரிமைகளைப் பெற்றவர்கள் உட்பட எத்தனை பேர் இன்று பிராமணிய எதிர்ப்பின் வரலாற்றையும் தேவையையும் புரிந்துவைத்திருக்கிறார்கள்? கல்வி, வேலைவாய்ப்பு மட்டுமல்லாமல் சமூகவெளியில் சுயமரியாதை, பாலின சமத்துவம், இந்திய அரசமைப்பு சாசனம் வலியுறுத்துகிற அறிவியல் கண்ணோட்டம் முதலானவற்றை நிலைநாட்டுவதோடும் இணைந்தது பிராமணிய சித்தாந்த எதிர்ப்பு.

இப்போதும் சமநீதியில் அக்கறை உள்ளவர்கள், பிராமணியம் எப்படியெல்லாம் செயல்படுகிறது என்று எடுத்துக்காட்டுகிறார்கள். அதற்கு எதிரான கருத்துகளைத் தொடர்ந்து சொல்கிறார்கள். அவர்களில் பிராமணக் குடும்பங்களிலிருந்து வந்தவர்களும் இருக்கிறார்கள். அதே போல், பிராமணர் அல்லாத குடும்பங்களிலிருந்து வந்தவர்களிலும் பிராமணிய சித்தாந்தத்தைப் பின்பற்றுகிறவர்கள் இருக்கிறார்கள்.

இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதுமே பரவலாக இன வாதம், மத வாதம், சுரண்டல் வாதம் என வலதுசாரி சக்திகளின் கைகள் இப்போது ஓங்கியிருக்கின்றன. அரசுகள் இத்தகைய சக்திகளின் கரங்களைத்தான் வலுப்படுத்துகின்றன. இன்றைய கொரோனா போராட்டப் படிப்பினைகளால் நாளைய உலகம் இதற்கெல்லாம் ஒரு தடுப்பு மருந்து கண்டுபிடித்தால்தான் உண்டு.

கவனத்தில் கொள்ள

இலக்கியச் சங்கமம்- Dinamani

படைப்பாளிகள் தங்களது கலையாக்கத்திற்காகப் பல்வேறு சமூக நிலைமைகளை எடுத்துக்கொள்வது போலவே, இந்தச் சமூக யதார்த்தங்களையும் கவனத்தில் கொண்டாக வேண்டும். படைப்புச் சுதந்திரம் முதன்மையானது. அதை எந்த நேரத்தில் எப்படிக் கையாளுவது என்ற புரிதல் முக்கியமானது. சிறு துரும்பு கிடைத்தாலும் பகைமை வாயுவைச் செலுத்திப் பெரிதாக்கத் தயாராக இருக்கிறவர்களுக்குப் பிடிகொடுத்துவிடாமல் கவனக் கூர்மையோடு படைப்புகளை உருவாக்க வேண்டியிருக்கிறது. அவர்களுடைய நோக்கம் இப்படியான படைப்புகளை முடக்குவதல்ல, மாற்றுச் சிந்தனைகள் பரவுவதையே தடுப்பதுதான்.

அதைப் புரிந்துகொண்டு செயல்படுவது சமரசமல்ல, காலத்தின் தேவை. இல்லையேல், எந்த மக்களிடம் இந்தச் சிந்தனைகளைக் கொண்டுசேர்க்கக் கருதி, கடும் உழைப்போடும் பெரும் செலவோடும் உருவாக்குகிற படைப்புகள் அந்த மக்களைச் சென்றடையாமலே மறைக்கப்பட்டுவிடும். கருத்து உடன்பாடு உள்ளவர்களின் அங்கீகாரம் போதும் என்று படைப்பாளிகள் சுயநிறைவுகொள்ள முடியாதல்லவா?

பறிக்கப்படுவது யாதெனில்

இது ஏதோ படைப்பாளி, எதிர்ப்பாளி விவகாரம் என்று மக்கள் வேடிக்கை பார்ப்பதுதான் துயரம்.

கருத்துச் சுதந்திரத்தை மறுக்கிறவர்களைப் பொறுத்தவரையில் படைப்பாளிகள் அல்லது சிந்தனையாளர்களின் உரிமையை மட்டும் பறிக்கவில்லை. என்ன, ஏது என்று எதையும் அறிந்துகொள்வதற்கும், அவ்வாறு அறிந்துகொண்டதன் அடிப்படையில் தாங்களாக முடிவெடுப்பதற்கும் மக்களுக்கு உள்ள அடிப்படை உரிமையைத் தட்டிப் பறிக்கிறார்கள். விவாதங்களில் குறுக்கிட்டுக்கொண்டே இருப்பது, மையப் பிரச்சினைகளைத் திசை திருப்பிக்கொண்டே இருப்பது, எதிராளி பெண்ணென்றால் இழிவுபடுத்துவது எல்லாமே அந்த நோக்கத்தோடு செய்யப்படுபவைதான்.

கருத்துச் சுதந்திரத்துக்கான ...

திசைதிருப்புவதற்குத் தோதாக அவர்கள் எடுத்துக்கொள்கிற துருப்பிடித்த ஆயுதம்தான் ஆபாசம் என்ற தாக்குதல். துருப்பிடித்த ஆயுதம் என்பதாலேயே அது ஆபத்தானதும் கூட. பாலியல் உறவு ஆபாசமா, குடும்பங்களில் அது நிகழ்வதில்லையா என்று கேட்கலாம்தான். இயற்கையான, தேவையான ஒரு வேட்கையைக் கலையில் சித்தரிப்பது தவறா என்றும் கேட்கலாம். புகழ்பெற்ற இலக்கியங்களும், கலையாக்கங்களும் பாலியலைப் பேசவே செய்கின்றன. பாலியல் நிகழ்வை நேரடியாகச் சித்தரிக்காமலே அந்த உணர்வை வெற்றிகரமாகக் கடத்துகிற படைப்புகளும் இருக்கின்றன.

கலைத் தேவையிலிருந்து அல்லாமல், வணிகத் தேவையிலிருந்து, குறிப்பாக ஆண் மன வக்கிரத்தைத் தூண்டும் வகையில் அத்தகைய காட்சிகளைத் திணிக்கிறபோது அது ஆபாசமாகிறது. விளம்பரத்திலேயே அதை இடம்பெறச் செய்கிறபோது நிச்சயமாக அது ஆபாச வலைவீச்சாகிறது. வேறு உள்நோக்கத்தோடு ஒரு கலைப் படைப்பைச் சிதைக்க நினைக்கிற வெறும் வாய்களுக்கு, இத்தகைய சித்தரிப்புகள் அவலாகிவிடுகின்றன.

கூடுதல் பொறுப்பு

திட்டமிட்டே இதையெல்லாம் செய்கிறார்கள் என்பதால் அவர்கள் இப்போதைக்கு மாறுவார்கள் என்று எதிர்பார்ப்பது மனப்பால் பருகுவதாகிவிடும். எவ்வளவு கண்டனங்கள் புறப்பட்டாலும் அதையெல்லாம் தங்களை நிறுவிக்கொள்வதற்கான விளம்பரங்களாகவே எடுத்துக்கொள்கிறவர்கள் அவர்கள்.

ஆகவேதான் படைப்பாளிகளோடு பேச வேண்டியிருக்கிறது. கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் உயிர்மூச்சு போன்றது. அத்துடன் நுரையீரலாய், ரத்தமாய் இணைந்ததுதான் சமூக அக்கறையும் சமூகப் பொறுப்பும். உண்மையான பிரச்சினைகளை எடுத்துக்கொள்வது சமூக அக்கறை. அதை எல்லோரும் ஏற்கத்தக்க வகையில் வெளிப்படுத்துவது சமூகப் பொறுப்பு. ‘காட்மேன்’ பிரச்சினையில் படைப்பாளிக்கு ஆதரவாகக் குரல்கொடுத்துள்ள, படம் தடையின்றி வெளியாவதை அரசு உறுதிப்படுத்த வேண்டுமெனக் கோரியிருக்கிற சிந்தனையாளர்களும் அமைப்புகளும் இந்த மூன்றையும் முன்னிறுத்துவது செயற்கையானதல்ல.

சமூக அக்கறையோடும், பொறுப்போடும் கருத்துச் சுதந்திரத்தின் எல்லையை வரையறுத்துக்கொள்வது படைப்பாளியாகத்தான் இருக்க வேண்டுமேயல்லாமல், கருத்துரிமையின் எதிரிகளிடம் அதை விட்டுவிடக்கூடாது.

File:A.Kumaresan.jpg - Wikimedia Commons

அ. குமரேசன்

என் வலைப்பூ: அசாக்
http://asakmanju.blogspot.com

Leave a Response

Top Reviews

Video Widget

gallery