Book Reviewநூல் அறிமுகம்

நூல் அறிமுகம் –  Washington Bullets (வாஷிங்டன் குண்டுகள்)

Spread the love

 

இது வழக்கமான அறிமுகத்திலிருந்து சற்று வேறுபட்டது.
முன்பெல்லாம் திரை அரங்குகளில் அங்குக் காட்டப்படும் திரைப்படங்களின் பாடல்கள்அடங்கிய புத்தகங்கள் விற்கப்படும். அத்தகைய பாட்டுப் புத்தகங்களை வாங்குவதிலும் சேர்த்துவைப்பதிலும் நண்பர்களுக்குள் போட்டி இருக்கும். இப்போது அதை நினைக்கையில் மகிழ்வும் சிரிப்பும் ஒரு சேர வருகின்றன. பாட்டுப் புத்தகங்களில் பாடல்களோடு,

“மீதியைவெள்ளித்திரையில் காண்க” என்ற வாசகங்களோடு முடியும் திரைக்கதைச் சுருக்கமும் இருக்கும். காலம் வெகுவாக மாறிவிட்டது. எல்லாமும் வணிகமயமாகிவிட்ட இன்றைய சூழலில்பாட்டுப் புத்தகங்கள் ஒருபுறம் தொலைந்து போக மறுபுறம் ஒரு திரைப்படத்தின் பாடல்களைவெளியடும் ‘இசை  வெளியீட்டு விழா’ பிரம்மாண்டமாக அரங்கேறுகின்றது; அதைத்தொடர்ந்து டீசர் என்கிற பெயரில் முன் வெளியீட்டு முன்னோட்டம் மேலும் பிரம்மாண்டமாகஅரங்கேறுகிறது.

Left Word Books ன் முதன்மை ஆசிரியர் விஜய் பிரசாத் எழுதியுள்ள Washington Bullets  இன்னும் வெளி உலகம் காணவில்லை. ஆக, Left Word Books ஆங்கிலத்திலும், பாரதிபுத்தகாலயம் தமிழிலும் ஒரு சேர வெளியிடவுள்ள இப்புத்தகத்தைக் குறித்த இப்பதிவு ஒரு முன்வெளியீட்டு முன்னோட்டம்.

சிறந்த ஓர் முன்னுரை

There's a power vacuum in Bolivia after Evo Morales left the ...

பொலிவியாவின் முன்னாள் குடியரசு தலைவரான ஈவோ மொரேல்ஸ் இந்நூலிற்கு சிறப்பான முன்னுரை எழுதியுள்ளார்.
“இப்புத்தகம் குண்டுகள் குறித்துப் பேசுவதாக ஆசரியர் கூறுகிறார். ஆம் ! ஜனநாயகத்தை, புரட்சிகளை மற்றும் மக்களின் நம்பிக்கைகளைப் படுகொலைசெய்த குண்டுகளைப் பற்றிய புத்தகம்தான் இது” என்று தொடங்குகிறது மொரேல்ஸின் முன்னுரை.  ‘இப்படு கொலைகளில் அமெரிக்காவின் பங்குபாத்திரம் இந்நூலில் ஆவணப்படுத்தப் பட்டுள்ளது………….
கடந்த பல பத்தாண்டுகளாக, அமெரிக்கா தனது சட்டவிரோதமான அரசியல் மற்றும் இராணுவத் தலையீடுகளை நியாயப்படுத்த பொய்யான காரணங்களையும் கற்பிதங்களையும்உருவாக்குகிறது. முதலில் தன் தலையீடு கம்யூனிசத்திற்கு எதிரான போர் என்றது. பின்னர்போதை மருந்து கடத்தலுக்கு எதிரானது என்றது. தற்போது பயங்கரவாதத்திற்கு எதிரானதுஎன்கிறது………

கடுமையான நெருக்கடியில் பூமிப்பந்து சிக்கியுள்ள இன்றைய சூழலில் இவ்வரிகளைஎழுதுகிறோம், வாசிக்கிறோம். உலக பொருளாதாரத்தை ஒரு தொற்று முடக்கிப்போட்டிருக்கிறது; பேராசை கொள்வதையும், செல்வங்களை மையப்படுத்துவதையும்  தன்இயல்பாகக் கொண்டுள்ள முதலாளித்துவம் தன் காலம் முடிவுறுகிறது என்பதைக்காட்டிக்கொண்டிருக்கிறது.

2020ல் பீடித்திருக்கிற நோயிலிருந்து உலகம் வெளிவருகிற போது நாம் இதுகாறும்அறிந்த உலகமாக அது இருப்பதற்கு வாய்ப்பில்லை. மக்களுக்கும் அன்னை பூமிக்கும்பெருமதிப்பளிக்கக் கூடிய ஓர் உலகை உருவாக்க நாமிணைந்து பணியாற்றுவோம். இதைசெய்வதற்கு அரசுகள் பெருவாரியான மக்களின் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களின் தேவைகளைமுன்னிலைப்படுத்த வேண்டியது அவசியம்.  நாம்தான் அந்த மக்கள்திரள் என்று நாம் உறுதியாகநம்புகிறோம்; மக்கள் கூட்டம் ஒரு நாள் வெல்லும் என்றும் உறுதியாக நம்புகிறோம்.” என்று முடியும் ஈவோ மொரேல்ஸின் முன்னுரை வார்ததைகள் நமக்குள் நம்பிக்கைவார்க்கின்றன.

கோப்புக்கள் சொல்லும் கதைகள்

‘கோப்புக்கள்’என்ற நுழைவாசல் நம்மைக் கைப்பிடித்துப் புத்தகத்திற்குள் அழைத்துச்செல்கிறது. “ இன்றைய காலக்கட்டத்தில் மேற்கு ஐரோப்பாவின் காட்டுமிராண்டித்தனம் நம்பமுடியாத உச்சத்தைத் தொட்டு நிற்கிறது. அமெரிக்காவின் காட்டுமிராண்டித்தனம் அதனைக்காட்டிலும் பன்மடங்கு விஞ்சி நிற்கிறது.” காலனியம் மீதான கருத்தாடல் என்ற தனதுபுத்தகத்தில் பிரஞ்சுக் கவிஞர் எய்மி சீசரின் (Aime Cesaire) இந்த வார்ததைகள் நம்மைநுழைவாசலில் வரவேற்கின்றன. ஐக்கிய அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் அரசுஆவணங்கள், பன்னாட்டு அமைப்புக்கள், உலகெங்குமுள்ள அறிஞர்களின் சிறப்புமிக்க எழுத்துக்கள் ஆகியவற்றை பெருமளவு வாசித்ததே இப்புத்தகத்தின் அடிப்படை என்கிறார்விஜய பிரசாத். மக்களும் மக்கள் பிரதிநிதிகளும் சரியான பாதையில் முன்னேற முயற்சிக்கிறபோது, மேற்குலகின் தூண்டுதலால் மேலாதிக்க வர்க்கங்கள் அம்முயற்சிகளை வேரறுத்தகதைகள்; வளமிக்க நாடுகள் சூறையாடப்பட்டுப் பாழடிக்கப்பட்ட  பூமிகளான கதைகள்; முந்தைய காலனிகால அவமானங்கள் நவீனகாலத்தில் புதிய பரிமானங்களைப் பெற்றுள்ளகதைகள்; மூன்றாம் உலக மக்கள் குறைந்த வாய்பபுக்களோடும் குன்றிய கெளரத்தோடும்மட்டுமே வாழ வற்புறுத்தப்பட்ட கதைகள் என்று  அக்கோப்புக்களில் ஒளிந்திருக்கும்கதைகளை நுழைவாசலில் பட்டியிலிடுகிறார், ஆசிரியர்.

ஐரோப்பிய ஆக்கிரமிப்பாளர்களால் அமெரிக்க மற்றும் ஆப்பிரிக்க பூர்வகுடிமக்கள் கொன்றுகுவிக்கப்பட்டதையும் அம்மக்களின் நிலங்களும் வளங்களும் சூறையாடப்பட்டதையும்புத்தகத்தின் முதல் பகுதி ஆழமாக விவரிக்கிறது. காலனிகள் உருவாக்கப்பட்ட அக்கொடூரக்கதைகளைப் படிக்கறபோது நாம் அதிர்சசியில் உறைந்து போகிறோம்.

உயர் அதிகாரம் என் உரிமை

ஈவு இரக்கமின்றி ஜப்பானில் அணுகுண்டு வீசி உலக நாடுகளுக்குத் தன் இராணுவஆற்றலைப் பறைசாற்றியதில் அமெரிக்காவிற்கு ஓர் உள்நோக்கம் இருந்தது. அந்தஉள்நோக்கம் என்னவென்று இப்புத்தகம் இப்படிச் சித்தரிக்கிறது.

ஹிரோஷிமா, நாகசாகி அணு ஆயுத ...

“இரண்டாம் உலகம் போருக்குப் பிந்தைய காலத்திற்கான அமெரிக்க அதிகாரத்தின்இலக்குகளை 1952ல் உள்துறை அதிகாரி நிட்சேயின் குழு வடிவமைத்தது. ‘ திட்டமிட்டகுண்டுவீச்சு ஆய்வு’ (Strategic Bombing Survey)என்ற அமைப்பின் மூலம் அமெரிக்காவின்ஆற்றலை நிட்சேயால் அறியமுடிந்தது. உயர் அதிகாரம் (Preponderant Power) என்ற சொல்லைநிட்சே அறிமுகப்படுத்திய பின் ‘உயர் அதிகாரம்’பெறுவது என்பது அமெரிக்கக் கொள்கையாகமாறிப்போனது. “ உயர் அதிகாரம் என்பது அமெரிக்கக் கொள்கையின் இலக்காக இருந்தாகவேண்டும். அதற்குக் குறைவாக எதையும் ஏற்றுக்கொள்வது தோல்வியை ஏற்பதாகும்“ என்றுஉள்துறை குறிப்புஎழுதியது. உயர் அதிகாரம் (Preponderant Power) என்ற சொல்லின்வேர்ச்சொல் லத்தின் மொழியில் உள்ளது. கூடுதலான எடை கொண்டது என்பது அதன்பொருள். இச்சொல், தன் நிறைக்கு இணையான தங்கத்தின் மதிப்பைவிட மன்னன்அதிகமதிப்புக் கொண்டவன் என்ற சிந்தனையின் வெளிப்பாடாகப் பயன்படுத்தப்பட்டது. ஐக்கியஅமெரிக்கா இதைத்தான் கோருகிறது. ஹிரோஷிமா மற்றும் நாகசாகியில் தான் அரங்கேற்றியகாட்சி மூலம் ஐக்கிய அமெரிக்கா அது விரும்பிய உயர்அதிகாரத்தை நிலைநிறுத்திக்கொண்டது.”

கறை படிந்த வரலாறு

1776ல் நடைபெற்ற அமெரிக்கப் புரட்சி ஒரு காலனிய எதிர்ப்புப் புரட்சி அல்லஎன்கிறது இப்புத்தகம். அது ‘முதலில் ஒரு புரட்சியா’ என்ற கேள்வியை எழுப்பி அதன்உள்ளடக்கத்தில்  வர்க்கப் போராட்டம் எதுவுமில்லை, தொழிலாளர்களின் இயக்கம் ஏதும்கீழிலிருந்துக் கட்டப்படவுமில்லை, பல்வேறுபட்ட மக்களின் ( அமெரிக்கப் பூர்வகுடியினர், ஆப்பிரிக்கர்கள், ஐரோப்பியர்கள்) சமுக ஒற்றுமையில்லை என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. ஆனால் பூர்வகுடி மக்களை இனப்படுகொலை செய்யும் உணர்வு மேலோங்கி இருந்தது; அமெரிக்கக் கண்டத்தில் அன்றைக்கிருந்த 13 காலனிகளையும் உடைத்து அக்கண்டம்முழுவதையும் வெற்றி கொள்ள வேண்டுமென்ற ஐரோப்பிய வந்தேறிகளின் ஆசை இருந்தது; ஆக, அமெரிக்கப் புரட்சி காலனியாதிக்கத்திற்கான போரே அன்றி காலனி எதிர்ப்புப் போரல்லஎன்று மறுக்க முடியாத வாத்தத்தை முன்வைக்கிறது. அமெரிக்காவின் குடியரசுத் தலைவர் ஜேம்ஸ் போல்க் (James Polk) மெக்ஸிகோவை வெல்லபடையை அனுப்பினார். அப்போரின் போது “ மெக்ஸிகோ முழுமையும் நம்மோடு இணைவதுநமக்குப் பெரும் லாபம் சேர்க்கும். மெக்ஸிகோ நங்கை அவளாகவே நம்மிடம் வரவேண்டும்என்பதே நம் விருப்பம். ஆனால் அவள் தானாக வரும்வரையில் நமக்கு அமைதியில்லை. அவளை நம்மிடம் வரவழைக்கப் படைகளைப் பயன்படுத்தலாம். சபைன் (Sabine) நாட்டுக்கன்னிகளைப் போல மெக்ஸிகோ அவளை சீரழித்தவர்களை விரைவில் விரும்புவாள்” என்று எழுதி தி நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் படைவீரர்களை உற்சாகப்படுத்தியதாம். அப்போரில் மெக்ஸிகோ தன் பூமியில் மூன்றில் ஒரு பகுதியை இழந்து போனது. ஐக்கிய அமெரிக்காவின் இன்றைய மாகாணங்களான அரிசோனா, கலிபோர்னியா, கொலோராடா, நெவ்டா, நியூ மெக்ஸிகோ, டெக்ஸாஸ் மற்றும் உடா ( Arizona, California, Colorado, Nevada, New Mexico, Texas and Utah)ஆகியவை மெக்ஸிகோ இழந்த பகுதிகளில் அடங்கும். இவ்வாறுஅமெரிக்காவின் விரிவாக்க வரலாறு முழுவதிலும் இரத்தக்கறைப் படிந்துள்ளது என்கிறார்ஆசிரியர்.

கொலைகாரக் கையேடு

Vijay Prashad on Twitter: "My next book, coming out in a month or ...

இரண்டாம் பகுதி அமெரிக்க ஏகாதிபத்தியம் தன் எதிரிகளின் ஆட்சிகளைக் கவிழ்க்கபின்பற்றிய நடைமுறைகளை விளக்குகிறது. “1954ல் அர்பென்ஸ் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. 1964ல் பிரேசிலில் ஜோஓ கெளலார்ட் (Joao Goulart), 1973ல் சிலேயில் சல்வடார் அலென்டே ( Salvador Allende), 1963ல் ஈராக்கில் அப்த்அல்-கரிம் குவாசிம்( Abd al-Karim Quasim) முதல் 1965ல் இந்தோனேசியாவில் சுகர்னோவரை, 1961ல் காங்கோவில் லுமும்பா(Lumumba) முதல் 1971ல் பொலிவியாவில் ஜுயன் ஜோஸ்டோரெஸ் ( Juan Jose Torres) வரையிலான மக்கள் தலைவர்களின்ஆட்சிகள் அனைத்தும் ஒரேவழிமுறையைப் பின்பற்றிக் கவிழ்க்கப்பட்டுள்ளன. 2019ல் பொலிவியாவில் இவோ மொரல்ஸின்(Evo Morales) ஆட்சி கவிழ்ப்பிலும், வெனின்சுலாவில் பொலிவிய உத்தியை வெட்டி வீழ்த்ததற்போது எடுக்கப்பட்டுவரும் முயற்சியிலும் இதே வழிமுறையின் எதிரொலியைக்காணமுடிகிறது.  பொருளாதார தேசியத்தை முன்னிறுத்த முனைபவர் எவரானாலும், பன்னாட்டுகார்பொரேட்களின் சந்தை மேலாதிக்கத்தை அச்சுறுத்தும் எதுவானாலும் மற்றும்கம்யூனிஸ்ட்களுக்கு பயன் தரும் எவரானாலும் அவர்கள் நீக்கப்பட வேண்டும். ஏகாதிபத்தியத்திற்கு பயன் தரும் வண்ணம் பொது கருத்தும் சர்வதேச சட்டமும் திருத்தப்படும். இந்த வாய்பாட்டு சூத்திரம் வழக்கமாக்கப்பட்டது. அது பொதுவாக, ஆட்சிக்கவிழ்ப்புக்குஏதுவான சூழலை உருவாக்கவும், அடிபணிந்திருக்கும் ஓர் உலகை உருவாக்கவும் குறுகியதிட்டமொன்றைக் கொண்டிருக்கும்.”

CIA  நுட்பமாகத் திட்டமிட்ட பின்னரே ஆட்சிக் கவிழ்ப்பை அரங்கேற்றுகிறது; அதற்கென ஒரு கையேடு வைத்துள்ளது.

1. பொதுக்கருத்தை உருவாக்கு

2. களத்தில் சரியான ஆளை பணியமர்த்து

3. தளபதிகள் தயாராக இருப்பதை உறுதி செய்

4.பொருளாதாரத்தை அலற வை

5. பிற நாடுகளிடமிருந்து தனிமைப்படுத்து

6.பெருந்திரள் போராட்டங்களை ஏற்படுத்து ஆகியவை அக்கையேட்டிலுள்ள சில வழிமுறைகளாகும். மக்களை நம்புவோம்
“சோவியத் யூனியன் என்ற பேரொளி மறைந்த பின்னர், ஏகாதிபத்திய தாராளவாதத்திற்கு மூன்றாம் உலக நாடுகள் அடிபணிந்த பின்னர் ஏகாதிபத்தியத்தின் தலையீட்டில் புதிய சகாப்தம் தொடங்கியது. இதன் பொருள் அதற்கு முன்பு தலையீடும் ஆட்சிக் கவிழ்ப்பும் இருந்ததில்லை என்பதல்ல. அத்தகைய சாதகமான சூழல் உருவான பின்னர் மேற்குலகின் தலையீடுகள் வேகமாகவும் கொடூரமாகவும் இருந்தன” என்று தொடங்குகிறது புத்தகத்தின் இறுதிப் பகுதி.

The Test of a Country Is Not the Number of its Millionaires ...
Vijay Prashad

இப்புதிய சகாப்தம் கண்ட போர்களுக்கு ஒரு முன் ஒத்திகையாக 1989ல் பனமா போரைக் கையாண்டது அமெரிக்க ஏகாதிபத்தியம். அப்போருக்கான கருத்தியல் களத்தை உருவாக்கியக் கையோடு அமெரிக்கப் பெரும்படை போரைத் தொடங்கியது. அமெரிக்காவை எதிர்க்கத் துணிவோரை எச்சரிக்கும் வண்ணம் போர் முழுமையாகத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது.

உலகெங்கும் இன்று 183 நாடுகளில் அமெரிக்காவின் 883 இராணுவ தளங்கள்இருக்கின்றன. அவற்றுள் ஒன்று ஜப்பானின் ஒக்கினாவா (Okinawa) தீவில் இருந்தது, இருக்கிறது. அமெரிக்க இராணுவ வீரர்களின் கட்டுக்குள் அடங்காத பாலியல் வன்முறையைக்கண்டு மக்கள் கொதித்துப் போக பிரச்சனை விசுவரூபம் எடுத்தது. இப்பிரச்சனை 1959ல்நடந்த தேர்தலில் ஜப்பான் ஜனநாயக கட்சியை ஆட்சிக்கட்டிலில் அமர வைத்தது. பதவியேற்றபுதிய பிரதமர் ஹட்டோயாமா யுக்கியோஹட் (Hatoyama Yukiohad), ஒக்கினாவாவில் இனியும்அமெரிக்க இராணுவ தளம் நீடிப்பதை அனுமதிக்க முடியாது என்று சூளுரைத்தார். ஜப்பானின்இந்த நிலைப்பாட்டை ஏற்றக்கொள்ள முடியாது என்ற அமெரிக்க அதிபர் ஒபாமாவின்எச்சரிக்கையை பிரதமர் ஹட்டோயாமாவிடம் எடுத்துச் சென்ற அமெரிக்க உள்துறை செயலர்அரசு விருந்தில் கலந்து கொள்ளாமல் தன் நாட்டின் கோபத்தை வெளிப்படுத்தினார். அமெரிக்கா தொடர்ந்து கொடுத்து வந்த அழுத்தத்தை எதிர்கொள்ள ஜப்பான் சீனாவைநாடியது. வெஞ்சினம் கொண்ட ஏகாதிபத்தியத்தின் நெருக்கடிக்கு ஜப்பான் இறுதியில்பணிந்தது. இராணுவ தளம் நீடிக்கும் என்பதோடு ஜப்பானை அமெரிக்கா விட்டுவிடவில்லை. தனக்குச் சாதகமான மேலும் 20 அம்ச ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ள வைத்தது. ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட மறுகணம் பிரதமர் பொறுப்பிலிருந்து விலகினார், ஹட்டோயாமா. கலகமில்லை, ஆயுதமில்லை, போரில்லை ஆனாலும் ஆட்சிக் கவிழ்ப்பு நடந்தது. இதுதான்அழுத்தம் கொடுத்து ஆட்சியைக் கவிழ்ப்பது.

          ஈராக், லிபியா, சிரியா ஆப்கானிஸ்தான், ஈரான், பிரேசில், வெனிசுலா, பொலிவியா, வடகொரியா என்று பல நாடுகளில் ஏகாதிபத்தியத்தின் அத்துமீறல்களையும்அட்டூழியங்களையும் ஆவணச் சான்றுகளோடு தெள்ளத்தெளிவாக விவரிக்கிறது புத்தகத்தின்இறுதிப்பக்கங்கள்.

          லத்தின் அமெரிக்கா நூற்றுக்கணக்கான மாபெரும் கவிஞர்களை உருவாக்கியுள்ளது. குவாடேமலாவின் மாபெரும் கவிஞனான ஓட்டோ ரெனே காஸ்டில்லோ அவர்களுள் ஒருவன். அவன் நோட்டுப் புத்தகங்களோடு காட்டில் வாழ்ந்தவன், அங்கு துப்பாக்கித் தூக்கியவன், எதிர்புரட்சிப் போர்களை வெல்வதற்கு மக்கள் ஆற்றல் மீது நம்பிக்கைக் கொண்டவன். அவன்கவிதைகளில் அந்த நம்பிக்கை நடனமாடும்.
  “ மக்களையும் வாழ்வையும் 
                      நாங்கள் நம்புகிறோம்
                      மக்களும் வாழ்வும் 
                      ஒரு போதும் எங்களை 
                      கைவிட்டதில்லை.” காஸ்டில்லோவின் இக்கவிதை வரிகளோடு புத்தகம் நிறைவு பெறுகிறது.

           புத்தகத்தில் உள்ளவற்றில் நூறில் ஒரு பங்கிற்கும் குறைவான விவரங்களே இங்குசொல்லப்பட்டுள்ளன. இன்னும், இன்னும் ஏராளமான தகவல்கள் மற்றும் உறைய வைக்கிறஉண்மைகளின் களஞ்சியமாக, நிஜங்களையும் அவற்றின் நிழல்களையும் வர்ககப் பார்வையில்அலசுகிற ஆய்வறிக்கையாக வெளிவர இருக்கிறது ‘Washington Bullets’. ஆசிரியர் இப்புத்தகத்தை யாருக்கு காணிக்கையாக்குகிறார்?தெரிந்து கொள்ள காத்திருப்போம். தெரிந்தபின் பெருமை கொள்வோம்.

Image

Washington Bullets
Vijay Prashad
(NewDelhi: LeftWord Books, 2020)

வாஷிங்டன் குண்டுகள்
தமிழில்: பேரா வ.பொன்னுராஜ்
(பாரதி புத்தகாலயம்)

2 Comments

  1. ஒவ்வொரு உலகக் குடிமகனின் அலமாரியில் இருக்க வேண்டிய அவசிய கையேடு இப்புத்தகம் என்று உணர்த்தும் விமர்சனம்.

  2. நூல் வெளிவரும் நாளுக்காகக் காத்திருக்க வைக்கும் சிறப்பான அறிமுகம் .

Leave a Response