Book Review

நூல் அறிமுகம்: பெ. சிவசுப்பிரமணியம் “வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும்” –  யாழினி ஆறுமுகம் 

63views
Spread the loveவீரப்பன் என்கிற ஒற்றை பிம்பம் 90 களில் ஏற்படுத்திய தனி மனித சாகசத்தை பெருமிதமாக உணர்ந்த பல ஆயிரம் பேர்களில் நாமும் ஒருவராக இருந்திருக்க கூடும்.
சாகசத்தை சிலாகித்த நம்மால் அதற்குப் பின்னால் இருந்த பலரின் வேதனை நம்மை எட்டவே இல்லை. அதனால் தான் இப் புத்தகத்தின் ஆசிரியர் பெ. சிவசுப்பிரமணியம் அவர்கள் ” வீரப்பன் என்ற ஒற்றைச் சொல்லின் மூலம் சொல்ல முடியாத துயரங்களை அனுபவித்த மக்களுக்காக” இந்நூலைச் சமர்பிக்கிறார்.
தமிழக, கர்நாடக அரசுகளின் தனிப்படை, கூட்டு அதிரடிப்படை, இந்திய அரசின் படை என எல்லாப் படைகளுக்கும் மிகப் பெரும் சவாலாக இருந்து, உலகையே திரும்பிப் பார்த்த வீரப்பனின் சாம்ராஜ்யத்தை ” வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும்” என்கிற நூல் வழியாக நம்மிடையே கடத்துகிறார்.
இப் புத்தகத்தின் ஆசிரியர் பெ. சிவசுப்பிரமணியம் என்கிற சிவா அவர்கள் நக்கீரன் இதழில் 25 ஆண்டுகள் செய்தியாளராகவும், புகைப்படக்காரராகவும் பணியாற்றியவர். 1993 ல் இவர் வீரப்பனை சந்தித்த பிறகு தான் வீரப்பனின் புகைப்படமே முதன் முதலாக வெளி உலகிற்குத் தெரிய வருகிறது…
பிறகு வீரப்பனை பற்றிய விசயங்கள் ஒவ்வொன்றாக வெளிவருகிறது. அதற்கு முன்பு வரை வீரப்பனை பற்றிய செய்திகள், படங்கள் அனைத்தும் வெறும் யூகத்தின் அடிப்படையில் வெளிவந்தவையே.
வீரப்பனுடன் சேர்ந்து சதி செய்ததாக கூறி காவல்துறையால் கடத்தப்பட்டு பிறகு கைது செய்யப்பட்டு, கொடும் சித்திரவதைகளை அனுபவித்து  பல ஆண்டுகள் சிறையில் இருந்த இந்நூலின் ஆசிரியர்  “பொய்வழக்கும் போராட்டமும்” என்கிற நூல் வழியாக தான் எதிர்கொண்ட சிக்கல்களை, சித்ரவதைகள் ஏற்கனவே ஆவனப்படுத்தியுள்ளார்.
மொழுக்கன் என்கிற வீரப்பன் சூழ்நிலைக் குற்றவாளியாக மாறி, யானைத் தந்தங்களைக் கடத்தி, சந்தனக் கட்டைகளைக் கடத்தி, இறுதியாக ஆட்களைக் கடத்தியது என மிக நீண்ட வரலாற்றை வீரப்பனுடன் எட்டு ஆண்டுகள் நெருங்கிப் பழகிய ஆசிரியர் தனது கடும் உழைப்பினால் வீரப்பன் தொடர்புடைய சொந்தம், பந்தம், கூட்டாளிகள், பங்காளிகள், காவல்துறை, வனத்துறை, என சகலரையும் சந்தித்து தனது 25 ஆண்டு கால உழைப்பின் மூலம் முதல்  தொகுதியை வெளிக் கொண்டு வந்துள்ளார். இன்னும் இரண்டு அல்லது மூன்று தொகுதிகள் வரும் என்று கூறியிருக்கிறார்.
வீரப்பனால் காடு பாதுகாக்கப்பட்டது…! -சிவசுப்பிரமணியன் பேட்டி - Aram Online
வீரப்பனுக்கு ஆதரவாக அல்லது எதிராக, காவல்துறை க்கு ஆதரவாக அல்லது எதிராக என  ஒரு சார்பு இல்லாமல் உண்மை நிலையை உள்ளது உள்ளபடியே தக்க ஆதாரங்களுடன் பதிவு செய்துள்ளார்.
சில திரைப்படங்களில் எடுத்தவுடன் இறுதிக் காட்சியை காண்பித்து பிறகு ப்ளாஸ்பேக் காட்சிகள் விரிவடையும்… அது மாதிரியே இப் புத்தகத்திலும் ” வீரப்பன் எப்படி கொல்லப்பட்டார்…?
எப்படி திட்டமிடப்பட்டது…?  எங்கு..? யாரால்…? என்கிற செய்தியை தக்க ஆதாரங்களுடன் முதலில் சொல்லி விட்டே… பிறகு வீரப்பனின் வாழ்க்கையை விவரிக்கிறார். எப்படி கொல்லப்பட்டார் என்பது நாம் அறிந்த செய்தியில் இருந்து முற்றிலும் வேறுபட்டது என்பதை படிக்கும் போது நம்மை திடுக்கிட வைக்கிறது.
ஆயிரக்கணக்கான யானைகளை கொன்று கொடூரமான முறையில் சுட்டுக் கொன்று மண்டையைப் பிளந்து  தந்தங்களை வெட்டி எடுத்தது…
காவல்துறை, வனத்துறை, பங்காளிகள், கூட்டாளிகள்,  காட்டிக் கொடுத்தவர்கள் என சட்டத்தின் படி 123 கொலைகள், அதுவும் பலரைக் கொன்று வெறி அடங்காமல் தீயில் கருக்கியும், துண்டு துண்டாக வெட்டி மீன்களுக்கு இரையாக்கியது என்று கொடூரமான முறையில் நடந்து கொண்டாலும்…
மறுபக்கத்தில்  மக்களுக்கு என்றும் உதவக்கூடியவராகவே இருந்துள்ளார். தன்னிடம் இருந்த பணத்தை தனது ஊர் மற்றும் அருகில் உள்ள ஊர் மக்களுக்கு என இல்லாதவர்களுக்கு எப்போதும் உதவியே வந்துள்ளார். பல ஆயிரக்கணக்கான குடும்பங்களின் பணத் தேவையை, குடும்ப சிக்கல்களை  தீர்த்து வைத்துள்ளார். ஒழுக்கக் கேடான பல செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு மத்தியில் தனி மனித ஒழுக்கத்தில் மிகச்சிறந்த முன்னுதாரணமாக இருந்துள்ளார்.
” இந்நூலின் நாயகனாக வீரப்பன் மட்டுமே இருக்க வேண்டும் என நீங்கள் எதிர்பார்க்க வேண்டாம். புனைவு அடிப்படையிலான கதையாக இருந்தால் அது சாத்தியம். இது ஒரு வரலாற்றுப் பதிவு. இதில் சொல்லப்பட்டது எல்லாம் உண்மைக்கு மிக அருகிலிருந்து பதிவு செய்துள்ளேன். மறைக்கப்பட்ட பல உண்மைகளை இயன்றவரை இந்நூல் வழியாக நான் சொல்ல வருவதால் இதற்கு பலமான ஆதரவும், எதிர்ப்பும் இருக்கும் “. என்று தனது வாக்குமூலத்தை ஆரம்பத்திலேயே பதிவு செய்து விடுகிறார் ஆசிரியர்.
பலருடைய வரலாற்றை நாம் படித்திருக்கிறோம், கேட்டிருக்கிறோம் ஆனால் நம் சம காலத்தில் நடந்த ஒரு சிலருக்கு வீரமாகவும், பலருக்கு துயரமாகவும் இருந்த வரலாற்றை அறிந்து கொள்வது அவசியம் மட்டுமல்ல நமது கடமையும் கூட.
அந்த வகையில் இந்நூலை ஆவனப்படுத்திய பெ. சிவசுப்பிரமணியம் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.
“வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும்” 
– பெ. சிவசுப்பிரமணியம் – Leave a Response