Poetry

வழிப்போக்கன் கவிதைகள்

Spread the love
நில்லென்றால் நில்லாது மழை
⛈️காட்சி-1
வானத்தையே கூரையாய் வைத்து
நடைபாதையில் வாழ்பவனுக்கு
ஒழுகுமிடத்தில் மட்டும்
பாத்திரம் வைக்க வேண்டிய
அவசியமில்லாமல்
எல்லா இடத்திலும்
எல்லாப் பாத்திரத்திலும்
நிரம்பி வழியும்படியாய்
பொதுவாய்ப் பொழிகிறது
பெய்யயெனப் பெய்யும் மழை.
அவன் சகதர்மினி
மழையை சபித்தபடியே
முந்தானையால்
ஓரளவிற்கு ஒழுகும்
தற்காலிக வானத்தை உருவாக்குகிறாள்
பெய்யெனப் பெய்யும் மழை
நில்லென்றால் நிற்பதில்லை
என்று புலம்பியபடியே.
⛈️காட்சி-2
மார்புக்குக் குறுக்கே
கைகளை இறுக்கிக் கட்டியபடி
குளிர் தூண்டும் மோகத்தை
மறைத்துக்கொண்டு
மேகங்களின் இடுக்கில் ஒழுகும்
மெல்லிய வெளிச்சத்தில் மின்னும்
மழைநீர்த் திவலைகளையும்
மழையில் நனையும் தலைவனையும்
மோகக் கண்களால் மாறி மாறி
உற்று பார்த்துக்கொண்டிருக்கிறாள்
நினைத்த மாத்திரத்தில்
கூடிக்களிக்க மறைவிடமற்ற
அந்த சாலையோரத்தில் வசிக்கும்
திணையைத் தொலைத்த ஒருத்தி.
⛈️காட்சி-3
சுழன்றடிக்கும் காற்றில்
உருண்டோடும் பாத்திரங்களைப் பார்த்து
உற்சாகமாய்ச் சிரிக்கும் சிறுமியின்
சிரிப்பு சப்தங்களுக்காய்
ஒரு வட்டமடித்து மீண்டும்
வேறு திசை நோக்கி
பாத்திரங்களை சிதறடிக்கும்
காற்றுக்கும் அதனை
பார்த்துச் சிரிக்கும் சிறுமிக்கும்
தனது ஞாபகங்களின் அலமாரியிலிருந்து
அதிவிரைவாய் ஒரு
கெட்ட வார்த்தையைத் தேர்ந்தெடுத்து
மீண்டுமொருமுறை
புதுப் பெயராய்ச் சூட்டுகிறாள்
அந்த தெருவோரத் தாய்.
நகரத்து வீதியில் கரையும் மனிதர்கள்
அலங்கரிக்கப்பட்ட
ஷாப்பிங் மால்களுக்கு வெளியில்
கரடியாய் சிங்கமாய் புலியாய்
மிக்கி மௌசாய் வேடமணிந்து
முழுதாய் ஒரு மனிதன் தன்னை
உருமாற்றிக்கொண்டிருக்கிறான்
தனக்குத் துளியும் பொருந்தாத
தனக்குத் துளியும் பிடிக்காத
புழுக்கம் நிறைந்த
அந்த ஆடைகளுக்குள் புகுந்து.
வேடமிட்டிருக்கும் அந்த விலங்குக்கு
பசிக்கப்போவதில்லையென்றாலும் கூட
அந்த கனமான துணிகளுக்குள்
மறைந்திருக்கும் மனிதனையும் சேர்த்து
பசியால் வருந்தும் சில வயிறுகள்
அவன் வீட்டில் இருக்கத்தான் செய்கின்றன.
குதித்துக் குதித்துச் சேட்டைகளால்
வருகிறவர்களை உற்சாகம் செய்யுமவன்
அபார்ட்மெண்ட் வாங்கவோ
கார் வாங்கவோ வேடமிடவில்லை
அவனுக்கும் அவனை நம்பியிருக்கும்
சில ஜீவன்களின் வயிற்றை
கொஞ்சமாய் நனைத்துக்கொள்ளவே
குதித்துக்கொண்டிருக்கிறான்.
மான ரோஷங்களைக் கடந்து
குதிக்கும் அவன் பாதங்களுக்குக் கீழே
நீண்டகாலமாய்
மிதிபட்டுக் கொண்டிருக்கிறது
நகரத்தில் குடியேறுவதற்கு முன்பாய்
அவன் வாழ்ந்த ஒரு கௌரவமான
பெருவாழ்வு.
நகரமும் பசியும் சேர்ந்து
மனிதர்களை நசுக்கிக்
கோமாளியாக்கும்
அத்தனை வித்தைகளையும்
கற்றுவைத்திருக்கிறது.
மனிதனின் மொத்த வித்தைகளும்
அந்த பசியின் முன்னால்
நகரத்து வீதிகளில்
தோற்றுக்கொண்டேயிருக்கிறது.
முழுதாய் ஒரு மனிதன் பசியால்
நகரத்து வீதிகளில் கரைந்துபோவதை
நீங்கள் ஆங்காங்கே காணலாம்
கருணையின் கண் உங்களிடமிருந்தால்.
                                       –வழிப்போக்கன்

1 Comment

Leave a Response

Top Reviews

Video Widget

gallery