Book Review

நூல் அறிமுகம்: வைக்கத்தப்பனின் தெருப் பிரச்சனை……  – ஜெ.பால சரவணன்.

பழ.அதியமான் எழுதிய வைக்கம் போராட்டம் என்ற நூல் காலச்சுவடு வெளியீடாக வந்துள்ளது. வரலாற்றுச் சிறப்பு மிக்க வைக்கப் போராட்ட வரலாற்றை ஏறத்தாழ இருபத்தைந்து ஆண்டுகளாகத் திட்டமிட்டு, ஆதாரங்களைத் திரட்டுவதற்காக மட்டுமே பத்தாண்டுகளையும், திரட்டிய ஆதாரங்களை முறைபடுத்தி எழுத மூன்று ஆண்டுகளும் எனப் பல ஆண்டு கால உழைப்பைக் கோரிய இப்புத்தகம் இரண்டாண்டு காலம் நடந்த வைக்கம் போராட்டத்தை மிகவும் நுணுக்கமாக ஆராயந்து காலவரிசைப்படி கொடுத்துள்ளதும், அதற்காகப் பல்வேறு இதழ்களை வாசித்து, பல முறை கேரளம் சென்று  ஒவ்வொறு நிகழ்வையும்  ஆதாரத்துடன் கொடுத்துள்ளதும், அவரது ஆய்வுக்கான நேர்மையாகும்.
   கேரளாவின் ஆரம்பகால வரலாற்றை புரிந்து கொண்டால்தான் வைக்கத்தின் போக்கினைப் புரிந்து கொள்ள முடியும். கேரள சாதி அமைப்பை புரிந்து கொண்டால்தான் இப்போராட்டம்  இரண்டு ஆண்டுகள் நீடித்தது பற்றியும் புரிந்து கொள்ள முடியும். எப்படியென்றால் ரோமாபுரி சாம்ராஜ்யத்தின் எழுச்சி, வீழ்ச்சியைப் புரிந்து கொள்ளாமல் கிருத்துவத்தின் எழுச்சியை புரிந்து கொள்ள முடியாதது போல.
    எந்த சூழலில் வைக்கம் போராட்டம் துவங்கியது, பெரியார் வைக்கம் சென்ற சூழல், காந்தியின் வைக்கம் வருகை, ராணியின் முடிவு, தமிழ்நாட்டில் இதற்கு கிடைத்த ஆதரவு, வைக்கத்தில் சத்தியம் கிரகம் நடந்த முறை, பத்திரிக்கைகளின் செயல்பாடு, காங்கிரசின் நிலைபாடு, பெண்களின் பங்களிப்பு, சாதாரண மக்கள் செய்த உதவி இப்படியான ஒரு வரலாற்று பார்வையைத் தர முயல்வதுதான்  இந்தப் புத்தகத்தின் நோக்கமாக நான் புரிந்து கொள்கிறேன்.
   கேரள மாநிலம் 1956 இல் உருவானது. காலணியாதிக்க காலத்தில் திருவிதாங்கூர், கொச்சி என்ற இரு சமஸ்தானங்களையும், பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் மலபார் மாவட்டத்தையும் கொண்டது.
    1729 முதல் 1949 வரையிலான 220 ஆண்டு காலத்தில் 12 அரசர்களையும் கண்டது திருவாங்கூர் சமஸ்தானம்.திருவாங்கூரின் 10 மற்றும் 11 ஆவது அரசர்களது ஆட்சியில்தான் வைக்கம் சத்தியாகிரகம் நிகழ்ந்தது. 10 வது மகாராஜா மூலம் திருநாள் (1855 – 1924) காலத்தில் தொடங்கிய சத்தியாகிரகம் அடுத்து வந்த பூராடம் திருநாள் சேதுலட்சுமி பாய் (1924- 31) காலத்தில்தான் முடிவுக்கு வந்தது. மார்த்தாண்ட வர்மாதான் திருவாங்கூரை உருவாக்கிய அரசர். அப்போதே இங்கிலாந்து அரசிக்கும் சமஸ்தானத்திற்குமான உறவு தொடங்கி விட்டது. மார்த்தாண்டவர்மா பத்மநாப தாசர் என்ற பட்டம் ஏற்று சமஸ்தானத்தை பத்மநாதசுவாமிக்கு அர்ப்பணித்தார். அதனால் தான் பெரியார் பின்னர் அவரைச் சாடினார்.
வைக்கம் போராட்டம்: பெரியார் கலந்து ...
     இங்கிலாந்து உறவு மூலம் மேற்குலகின் நவீனத்திற்கு சமஸ்தானம் வந்தது. பல சமூக நல, சமூக சீர்திருத்த திட்டங்களும் சமஸ்தானத்தில் நடைபெற்றன. அதே நேரத்தில் கோயில் தேவஸ்தானம் மிகவும் சுதந்திரமான பகுதியாகும். கோயில்கள் எல்லாம் பிராமனர்கள் மேற்பார்வையின் கீழ்த் தனியாட்சி பெற்றுத் திகழ்ந்தது. இதனால் பல அதிகாரங்களை தன்னகத்தே பெற்று குற்றவாளிகளை தண்டிக்க உரிமையும் பெற்றனர். பலகாலமாக கோயில்களுக்கு உட்பட்ட இடங்கள் சங்கேதம் இடங்களாக நடத்தப்பட்டன.
சங்கேதம் என்றால் ஒரு வகையில் கோயில் எல்லை எனலாம். இந்த இடத்திற்குள் குறிப்பாக கோயிலுக்குள் அல்ல கோயிலை சுற்றிய தெருக்களில் கூட சாதி இந்துக்கள் அல்லாதவர் நுழைய முடியாது. இந்திய சாதி அமைப்பு கேரளத்தையும் விட்டு விடவில்லை. உயர் அடுக்கில் கேரள பிராமணர்கள் மக்கள் தொகையில் மிகவும் சிறுபாண்மையினர். கேரளத்தை பூர்விகமாக கொண்ட நம்பூதிரிகளும், தமிழ் பிராமணர்களும், கெளசரஸ்வதிகளும் முக்கியமானவர்கள்.அடுத்து நாயர்களே மேல்நிலை சாதியினர். மக்கள் தொகையில் அதிகம் கொண்ட ஈழவர் சாதியினர் கீழ் நிலையிலும், அதற்கு அடுத்து சாணர் மற்றும் புலையர்.இது அன்றைய கேரள சாதியடுக்கு ஆகும்.
       கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள மகா தேவர் கோயிலை சுற்றிய தெருக்களில் நடந்து செல்வதற்காக குடி உரிமை சார்ந்த கோரிக்கைதான் வைக்கம் போராட்டம். இது கோயில் நுழைவுப் போராட்டம் அல்ல. 96 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த போராட்டத்தின் தேவை இன்னும் இந்தியா முழுவதும் நீடிப்பது அவலம்.
   வைக்கத்தில் போராட்டம் ஆரம்பமானதே ஒரு சிறு நிகழ்ச்சியிலே இருந்துதான். மாதவன் என்ற வழக்குரைஞர் ஒரு வழக்குக்காக ஆஜராக நீதிமன்றம் போனார். கோர்ட் இருந்த இடம் ராஜாவின் அரண்மனையின் ஒரு பகுதி. அரண்மனையை சுற்றி பந்தல் போடப் பட்டதில் கோர்ட் செயல்படும் பகுதியும் பந்தலுக்குள் வந்துவிட்டது. அது மட்டுமல்ல அரசு அலுவலகம் அனைத்தும் அதற்க்குள் தான் இருந்தது. இந்த பந்தல் பகுதிக்குள் மாதவன் போக முடியாது. ஏனெனில் அவர் ஈழவ சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால் தடுக்கப்பட்டார். இதனால்  மாதவன், டி.கே.மாதவன் மற்றும் கேரள காங்கிரசு கமிட்டித் தலைவர் கே.பி கேசவமனன் மற்றும் பலரும் சத்தியாகிரகம் பற்றி முடிவு செய்தனர். கேராளாவில் தீண்டாமையோடு, நெருங்காமையும் உள்ளது என்பதனையும் காந்தியின் கவனத்திற்கு கொண்டு சென்ற கே.பி கேசவமேனன் சத்தியக்கிரகத்தை காந்தியும் வழிமொழிந்தார். தமிழ்நாட்டில் ராஜாஜி திருவாங்கூர் மகாராஜாவிற்குத் தந்தி மூலம் வேண்டுக்கோள் விடுத்தார்.
நூல் அறிமுகம் : வைக்கம் போராட்ட ...
நீண்ட முன்னேற்பாடுகளோடு, உள்ளூர் பரப்புரைகளோடு கேரள காங்கிரஸ் கமிட்டியின் ஆதரவோடு தீண்டாமை விளக்கக் குழு முன்னெடுத்த சத்தியாகிரகம் 30 மார்ச் 1924 ஞாயிறன்று வைக்கத்தில் மிகுந்த நம்பிக்கையோடு தொடங்கியது. தினமும் மூன்று நபர்கள் சத்தியாகிரகம் செய்வது எனவும் அதனையொட்டி கைது செய்யபட்டால் சிறை செல்வது எனவும் சத்தியாகிகள் முடிவு செய்தனர்.கே.பி கேசவ மேனன், டி.கே.மாதவன், ஏ.கே பிள்ளை, கேளப்பநாயர், வேலாயுத மேனன் ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில் ஜார்ஜ் ஜோசப்பும் கைது செய்ய படுகிறார். கைதான நிலையில் ஜோசப் காந்திக்குத் தந்தி ஒன்றை அனுப்புகிறார். கைது செய்யப்பட்டு விட்டேன், சத்தியாகிரகம் நடந்தாக வேண்டும் பொதுஜனத் தொண்டர்களுக்குப் பற்றாக்குறை இல்லை. தலைவர்கள்தான் தேவை . தேவதாஸ் காந்தி அல்லது மஹாதேவ தேசாயியை அனுப்புங்கள் என்றார்.
      வெளியூரிலிருந்து வந்த நிர்மலா பாய் தலைமையேற்று நடத்தினார். ஏப்ரல் 13 அன்று ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட ஊர்வலம் நடந்தது. உள்ளுர் தலைவர்கள் கைதால், பக்கத்து பகுதியில் இருந்து காங்கிரஸ் கமிட்டி தலைவர் பெரியாரை அழைக்கலாம் என முடிவாயிற்று. ஜார்ஜ் ஜோசப் .குருர் நீலகண்டன் நம்பூதிரியும் சேர்ந்து கையொப்பம் இட்டு அழைக்கிறார்கள். தொடர்ந்து அழைப்பு பெரியாருக்கு வருகிறது. குளித்தலை மாநாடு இருக்கிறது கட்டாயம் வர வேண்டுமா? எனப் பெரியார் கேட்கிறார். ஜார்ஜ் ஜோசப் சிறையில் இருந்து விரிவான கடிதத்தை பெரியாருக்கு எழுதுகிறார். நீலகண்ட நம்பூதிரியிடமிருந்து மீண்டும் தந்தி வருகிறது.T. R கிருஷ்ணசாமி ஐயர் போன்றோர் மாறி மாறி அழைத்ததன்படி வைக்கம் செல்கிறார்.
   இந்நூல் வரும் வரை வைக்கம் பற்றி தெளிவற்ற நிலைதான் இருந்தது. ஆதரித்தும், எதிர்த்தும் பேசுபவர்களில் கூட ஆதாரம் கிடையாது. தற்சமயம் இந்நூல் முக்கியமானது என மதிப்பிடப் படுகிறது. இதுகாறும் வந்த நூலில் இது மாறுபட்ட வடிவம் உடையது.வரலாறு தொடர்பான கேள்விகளுக்கு விடை தருகிறது. தொண்டர்களின் பங்கு குறித்தும் பேசுவது கூடுதல் சிறப்பு. அதன் வழியே தொண்டர்களின் தியாகத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது. குறிப்பாக சீர்காடு கிராமத்து பெண்கள் தங்களது ஒரு வேளை உணவை நிறுத்தி அதன் மூலம் பெற்ற பணத்தை வைக்கம் போராட்டாத்திற்கு அனுப்பியது முதல் போராட்டத்திற்கு தொண்டர்கள் யார் யார் கலந்து கொள்வது என முறை வைத்து செயல்பட்ட விதத்தினை யெல்லாம் பதிவு செய்துள்ளார்.
அதனை வாசிக்கும் பொழதுதான் அக்காலத் தொண்டர்களின் போராட்ட குணத்தை அறிய முடிகிறது. சிவசைலம் என்ற தொண்டரை ஆதிக்க இந்துக்கள் கண்ணில் சுண்ணாம்பு தடவி கண்ணைப் பொட்டித்து விட்டது முதல், பிடி அரிசித் திட்டத்திற்கு தொண்டர்கள் வீடு வீடாக சென்று அரிசி சேகரித்த முறை, பெரியாரின் இணையர் நாகமையார் தலைமையில் பெண்கள் செய்த கலகம், வெயில், மழை எனப் பராமல் சத்தியாகிரகள் தொடர்ச்சியாக கலந்து கொண்டது , எதிர்ப்பு போராட்ட குழு செயல்பட்ட முறை உட்பட அதியமான் பதிவு செய்த விதம் வரலாற்றுக்கு செய்த நேர்மையாகும்.
கடவுளின் தேசத்தில் இரட்டை வீதி ...
     சத்தியாகிரக எதிர்ப்பு போராட்ட செயல்பாடு பற்றிய பதிவின் மூலம் சாதி இந்துக்கள் எவ்வளவு ஆணவத்துடன் நடந்து கொண்டனர் என்பதனையும் ,மன்னனே கோயிலில் குறிப்பிட்ட பகுதி வரை தான் செல்ல முடியும் என்ற நிலையை உருவாக்கியதன் மூலம், கோயில் என்ற பொது நிர்வாகத்தை சாதி இந்துக்கள் தங்கள் கையில் வைத்து கொண்டு செய்த அட்டுழியத்தின் ஒரு பகுதிதான், கோயிலை சுற்றியுள்ள தெருக்களில் நடக்க கூடாது என்ற விதி. இதனையொட்டித்தான் சத்தியாக்கிரகிகளுக்கு பல்வேறு தலைவர்கள் தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.நாராயண குரு, மத்திய சீக்கிய தலைவர் சர்தார் மங்கள் சிங் ஆதரவுச் செய்தி, காந்தி, பெரியார், ராஜாஜி இவர்களின் ஆதரவு எனத் தலைவர்கள் செயல்பட்ட விதம் மூலம் வைக்கம் போராட்டத்தை முன்நகர்த்தியது யார் என்பதனை வாசிப்பின் வழியே உணர்வது தான் பொருத்தமானது.
     காந்தியின் செயல்பாடுகளைப் பொறுத்த வரையில் ஏறத்தாழ போராட்டம் ஆரம்பித்து ஒரு வருடம் கழித்துத்தான் கேரளம் வருகிறார். போராட்டத்தில் இந்து அல்லாதவர்களின் பங்கேற்பை காந்தி விரும்பவில்லை. அதனால் தான் ஜார்ஜ் ஜோசப் போன்ற தலைவரை போராட்டத்திலிருந்து தனிமை படுத்தியது, சத்தியாகிரகிகள் உண்ணாவிரதம் இருந்த போது அதை நிறுத்த கையாண்ட விதம் ஆகியவை உண்மையில் வேடிக்கையானது. உங்களிடம் அன்புள்ளவருக்கு எதிராக நீங்கள் பட்டினி கிடைக்கலாம். அதுவும் உங்கள் உரிமையை வழியுறுத்துவதற்கு அல்ல. அவரை நல்வழி படுத்த என் கிறார். அகில இந்திய கவனத்தை வைக்கம் பெறத் தடையாக இருக்கிறார். உள்ளுர் பிரச்சனையை உள்ளுர் மக்கள் தான் தீர்க்க வேண்டும் என்று அறிவிக்கிறார். சத்தியாகிரகளுக்கு வெளியில் இருந்து கிடைத்த உதவிகளை தடுத்தல்.
குறிப்பாக உணவு, பண உதவி, அயல் மதத்தை சேர்ந்தவர்களை தடுத்தல், தானே வந்து உதவிய அகாலிதளத்தினர் சேவையை மறுத்தல் போன்றவை. சுதேச சமஸ்தானத்தில் காங்கிரசு  தலையீடுவதில்லை என்ற நிலைப்பாட்டை எடுத்தது. ஏன் என்றால் அது இந்தியர்களால் ஆளப்படுகிறது. வைக்கம் சத்தியாகிரகம் தீண்டாமையை ஒழிக்கும் சமூக சீர்திருத்த முயற்சி தான்.இந்திய அரசியலோடு தொடர்புடையது அல்ல என்று நியாயப்படுத்தினார். காந்தி சத்தியாகிரகிகளுக்கு ஆதரவாக செயல்பட்டார் என்றால் அது பெல்காம் காங்கிரஸ் மாநாட்டில் சத்தியாகிரக ளுக்கு ஆதரவாக ஒர் தீர்மானம் கொண்டு வந்தது மட்டுமே.
     வைக்கம் போராட்டம் ஆரம்பித்த 15 வது நாளில் வைக்கம் சென்ற பெரியாரின் பிரதான செயல்பாட்டுப் பிரச்சாரம். மக்களை சந்தித்து பேசுவது, ஆதரவை பெறுவது . நிதி திரட்டுவது. வைக்கம், சேர்த்தலை, ஆலப்புழை, திருவனந்தபுரம், நாகர்கோயில், தக்கலை, கொல்லம், செங்காணச்சேரி போன்ற இடங்களில் பேசினார்.1924 வைக்கத்திற்கு அருகில் சேத்திலை உரையில் குறிப்பிடுகிறார் சுதந்திரம், சமத்துவம் ,சகோரத்துவம் நிறுவப்பட தீண்டாமை , நெருங்காமைக்கும் முடிவு கட்ட வேண்டும் என்றார்.பெரியாரின் தர்க்க ரீதியான உரை, பேச்சாற்றல் அனைவரையும் போராட்டத்தின் பக்கம் வரச் செய்தது. கிருத்துவர், முஸ்ஸிம் மக்கள் தெருவில் நடக்கலாம். அதே தெருவில் மாடு, பன்றி கூட நடக்கலாம். ஆனால் இந்துக்கள் நடக்க முடியாது என்றால் இந்து மதத்தில் சுயமரியாதைக்கு இடம் இல்லையா? என்று கேட்டார்.
கடவுளின் தேசத்தில் இரட்டை வீதி ...
இதனால் பெரியாருக்கு பேசத் தடை விதிக்கப்படுகிறது. தடையை மீறி வைக்கத்தில் பேசுகிறார். முதல் முறையாக கைது செய்யப்பட்டார். ஒரு மாத வெறுங்காவல் தண்டணையை முழுமையாக முடித்து ஜூன் 21, 1924 அன்று ஆறுக்குட்டி சிறையிலிருந்து விடுதலையானார். விடுதலையான மறுநாள் வைக்கம் சென்று பிரவேசத் தடை ஆணைக்குப் பணியப் போவதில்லை என அறிவித்தார். அதன் பிறகு கொச்சி சென்ற பெரியார் பலரை சந்தித்து 300 ரூபாய் மதிப்புள்ள அரிசியை இயக்கத்திற்குப் பெற்று வந்தார். பிரவேசத் தடை உத்தரவை இரண்டாம் முறை மீறியதால் 18 ஜூலை 1924 அன்று நான்கு மாதக்கடுங்காவல் விதிக்கப்பட்டது. இம்முறை கைதைக் கண்டித்து ராஜாஜி அறிக்கை விட்டார். அந்த அறிக்கையில் தீண்டாதாருடைய குறைகளை நிவர்த்தி செய்ய முன் வந்தவர்களுக்கு விரோதமாக நடந்து கொள்ளத் திருவாங்கூர் சமஸ்தானம் தீர்மானித்து விட்டது. இத்தகைய செய்கையால் நமக்கு ஊக்கம் ஏற்பட வேண்டும் என்றார். இச்சமயத்தில் பெரியாரை கொல்வதற்கு நம்பூதிரிகள் செய்த ஏற்பாடு மிகவும் சுவராஸ்யமானது.அதனை பெரியாரின் கூற்றில் வாசிப்பதே சிறந்தது.
    ராஜாஜி வெளியிட்ட இரண்டாவது அறிக்கையில் திருவனந்தபுரம் மத்திய சிறையில் சத்தியாகிரக கைதியாய் இருக்கும் ராமசாமி நாயக்கர் உணவு, தங்குமிடம் போன்ற விஷயங்களில் சாதாரண தண்டனைக் கைதியாக நடந்தப் படுவதாக நம்பகமான தகவல்கள் வந்துள்ளன. இரும்பு விலங்குகளளுடன் தனிமைச் சிறையில் மற்ற கைதிகளுக்கு மத்தியில் தனியாகத் தொடர்பற்று வைக்கப்பட்டார். “ஆனால் நாயக்கர் சற்றும் தளர்வுறாது இருக்கிறார்” என. பெரியார் நடத்தப்பட்ட விதம் பற்றி சுதேசமித்ரன், தி இந்து ஆகியவை கண்டித்து எழுதின.திரு.வி.க.அறிக்கை வெளியிட்டார். திரு.வி.க அறிக்கை வந்த மறு நாள் பெரியார் உட்படப் பலர் விடுதலை செய்யப்பட்டனர். புதிய யுவராஜா பட்டத்திற்கு வந்ததையொட்டி நல்லெண்ன அடிப்படையில் விடுதலைக்கு பிறகு நாகர்கோவிலில் பேசிய பெரியார் தண்டனை முறையைக் கிண்டலுடன் சிலாகித்தார். பின்பு ஈரோடு வந்த பெரியாரை பிரிட்டிஷ் இந்திய அரசு வேறு ஒரு வழக்குக்காக கைது செய்தது. அதனையொட்டி நாகம்மையார் அறிக்கையில் வைக்கம் பேராட்டம் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என்ற விருப்பத்தைத் தெரிவித்தார்.
பெரியார் கைது செய்யபட்டு இரண்டு நாள் கழித்து ராஜாஜி தலைமையில் நடந்த நிலக்கோட்டை தாலுக்கா மாநாட்டில் தீண்டாமையை ஒழிக்கப் பெருந் தியாகம் செய்து திரும்பி வந்த தமிழ் நாட்டுத் தலைவரை இம் மாநாட்டில் அன்புடன் வரவேற்கிறோம். வைக்கம் பேராட்டத்தை பாராட்டி பல்வேறு பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டன. இறுதியாக ஒன்றைக் குறிப்பிட வேண்டும். காந்தி – ராணியார் சந்திப்பிற்கு முன் காந்தி – பெரியாரை சந்தித்து விட்டுச் சென்ற காந்தியிடம் ராணி நாங்கள் சாலைகளைத் திறந்து கொடுக்கிறோம். ஆனால் கோயிலுக்குள் நுழைவதாக ஈ.வெ.ராமசாமி நாயக்கர் பேசிக் கொண்டிருக்கிறார்.
நூல் அறிமுகம் : வைக்கம் போராட்ட ...
கோயில் நுழைவு என்று கிளர்ச்சி செய்ய கூடாது என்றார். அதற்கு காந்தி பெரியாரிடம் என்ன பதில் சொல்வது என்று வினவினார். அதற்குப் பெரியார் நமது லட்சியம் தெருவில் நடக்கத் தானே?. அதில் இருக்கும் பேதம் ஒழியத் தான் இந்தக் கிளர்ச்சி. இப்பொழது அதைப் பற்றி அழுத்தம் கொடுக்கப் போவதில்லை. மக்களை அதற்குப் பக்குவப்படுத்திவிட்டுத்தான் செய்ய வேண்டும் என்றார் பெரியார். அப்படியே சொல்லி விடலாமா என்றார் காந்தி. நன்றாகச் சொல்லி விடுங்கள் என்றார் பெரியார். கோயில் நுழைவு இப்போது இல்லை என்று அரசியிடம் தெரிவித்தார் காந்தி. அதன்படிச் சாலையில்’ யார் வேண்டுமானாலும் நடந்து செல்லலாம் என்ற உத்தரவு மூலம் பொதுச் சாலையாக ஆக்கினார்கள்.
     காங்கிரஸ்காராக கலந்து கொண்ட பெரியார் இறுதியில் கோயில் பிரவேசம் என்பது காங்கிரஸ் இலட்சியமாக இல்லாவிட்டாலும் எனது இலட்சியம் அது தானே. அதை விட்டுக் கொடுக்க எப்படி முடியும்? சுயமரியாதையின் வெளிபாடு அல்லவா? என்றார்.
    நீ வீதியில் நடக்காதே , என் முன் வராதே என்று சொன்னால், மனித உடலைத் தரித்திருக்கும் ஒரு உயிர் அதை எப்படி மீறுவது என்பது தான் வைக்கத்தின் தத்துவம்..
வரலாற்றின் பின் ஒரு தொடர் ஓட்டம் ...
நூல்: வைக்கம் போராட்டம்
ஆசிரியர்: பழ.அதியமான்
வெளியீடு: காலச்சுவடு 
விலை: ரூ.308

Leave a Response