Book Review

நூல் அறிமுகம்: உப்புவேலி (உலகின் மிகப்பெரிய உயிர்வேலியின் வரலாற்று ஆவணம்) – கருப்பு அன்பரசன்

Spread the love
தலைப்பே இந்த நூலினை வாசிக்க உங்களை இழுத்துப் போகும்..!
நான் மட்டும் விதிவிலக்காயென்ன.?
வாசிக்கத் தொடங்கியதும் அதிர்ச்சிக்குள்ளானேன். விவரத்திற்கு பிறகு வருகிறேன்.
உப்பு நமது வாழ்க்கையின் அத்தியாவசியத் தேவைகளில் ஒன்றாகிப்போனது.. இந்திய மக்களின்
வாழ்முறைகளில் மதிக்கத்தக்க ஒன்றாக.. போற்றுதலுக்குறிய ஒன்றாக உப்பு. இன்னும் எங்களின் சோமாசிபாடி உட்பட பல கிராமங்களின் பலச்சரக்கு, மளிகைக் கடைகளில் உப்பு கடைக்கு வெளியே வைத்துத்தான் இரவுகளில் கடையை மூடுவார்கள். எந்த திருட்டு நடந்தாலும் திருட வந்தவர்கள் உப்பு சட்டியை தொட மாட்டார்கள். உப்பைத் திருடுபவர்கள் வாழ்வு விளங்காது என்கிற ஒரு நம்பிக்கையில் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். விளக்கு வைக்கும் நேரத்தில் உப்பு வியாபாரமும் நடத்திட மாட்டார்கள்.. உப்பை கடனாகவும் கொடுக்க மாட்டார்கள்.. வீடுகளில் பெண்களும் அரிசி, பருப்பு, சர்க்கரை போன்ற்வற்றை “கைமாத்து” வாங்குகிற மாதிரி உப்பை கேட்கவும் மாட்டார்கள்.. கொடுக்கவும் மாட்டார்கள்.. அப்படி செய்வது இரண்டு குடும்பத்திற்குமே ஆகாது என்கிற நம்பிக்கை கொண்டவர்கள் இந்திய மக்கள். உப்பு நாவின் ருசியோடு மட்டும் கிடையாது. இந்தியர்களின் வீரம், மானம் மரியாதையோடு சம்மந்தப்பட்டதாகவே பார்க்கிறார்கள்.
அப்படிப்பட்ட உப்பு 1998ம் வருடம் ஒரு கிலோ 25 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை திடீரென்று விலை ஏறியது ஞாபகம் இருக்கா  நமக்கு.? குஜராத்தில் பல கடைகள் சூறையாடப்பட்டது அன்று. டில்லி, சென்னை, கல்கத்தா, மும்பை உள்ளிட்ட  பல நகரங்களில் உப்பு பதுக்கி வைக்கப்பட்டது.. கடைகளின் வெளியே இருந்த உப்பு மூட்டை கடைகளுக்கு உள்ளே எடுத்து வைக்கப் பட்டது. இந்தியாவில் உப்பு உற்பத்தி செய்யப்படும் மிகப்பெரிய கடற்பரப்பு குஜராத்தின் கண்டலா பகுதி. ஒரு ராத்திரி வந்த புயலினாலும்.. பேரலையாலும் அந்தப்பகுதியே கடல் நீரால் மூழ்கடிக்கப்பட்டது.. உப்பளத்தில் பணிபுரிந்த 14000 மனித உயிர்களை கடல் நீர் வாரிச் சுருட்டிக் கொண்டுபோய் கடலுக்குள் சேர்த்தது.  கூடவே வியாபாரிகளின் சூட்சுமத்தால் உப்பு இல்லை என்கிற வதந்தியும் பரவியது நாடு முழுவதும். வதந்தியே உப்பின் விலையை இடத்திற்கு தக்கவாறு உயர்த்தியது. உடனடியாக அரசு தலையிட்டு தொலைக்கட்சியிலும், வானொலியிலும் உப்பு கையிருப்பு குறித்து பேசிய பிறகே மக்கள் சம நிலைக்கு வரவேண்டியிருந்தது.
உப்பு வேலி - இந்தியாவில் அறியப்படாத ...
இயல்பாய் எல்லோரின் வாழ்க்கையிலும் பிரிக்க முடியாத ஒன்றாக கலந்திருந்த உப்பை, வியபாரிகளின் குயுக்தியால்.. லாப நோக்கால் ஒரு பேரலையை தனக்கு சாதகமாக்கி மூலதனத்தை பெருக்கிட வதந்தியைக் கிளப்பியவர்கள் தற்போதும் இருக்கும் போதினில், வியாபாரம் செய்ய வந்து இந்த நாட்டையே அடிமைப்படுத்தி வாழ்ந்த பிரிட்டீஷார், கடைசியில் பிப்ரவரி 28, 1947ல் உப்பின் மீதிருந்த தங்களின் அதிகாரத்தை, வரியை நீக்கி ஆணை பிறப்பித்தலுக்கு முன் உப்பின் மேல் தங்களின் அதிகாரத்தை நிலை நிறுத்தி என்னவெல்லாம் கொடூரங்களை நிகழ்த்தினார்கள் என்பதின் தேடுதலே இந்த “உப்புவேலி” நூல்.
“உப்புவேலி” என்கிற வரலாற்று ஆவணத்தை மூன்றாண்டுகால தொடர்ச்சியான தேடுதலால் இந்தியாவை ஆட்சி செய்த வெள்ளையர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட உயிர் கொண்ட  “உப்புவேலியின்” கடைசி எச்சத்தின் மீதேறி பலவேறு தரவுகளோடு சாட்சியுமாக இருக்கிறார் லண்டனில் வாழும் வரலாற்று ஆய்வாளர் ராய் மாக்ஸம்.
ஆங்கிலத்தில் வெளியான இந்த நூலினை அழகிய எளிய தமிழில் மொழிபெயர்ப்பு செய்து கொடுத்திருக்கிறார் சிறில் அலெக்ஸ். அழகாக வடிவமைத்து சிறப்புற தமிழ் மண்ணிற்கு அளித்திருக்கிறார்கள். குக்கூ காட்டுப்பள்ளியின் தன்னறம் நூல் வெளியீடு நிறுவனத்தர். மூவருக்கும் அன்பு வாழ்த்துகள்.
கிழக்கிந்தியக் கம்பெனியில் அதிகாரியாக பணிபுரிந்த மேஜர் ஜெனரக் ஸ்லீமன் என்கிறவர் 1893ல் எழுதி வெளியிட்ட புத்தகமொன்றில்”1869 ல் சிந்துவில் இருந்து மதராஸின் மகாநதி வரை 2300 மைல்கள் தொலைவிற்கு இந்தியாவை குறுக்காக பிரித்திட்ட, ஆட்கள் எவரும் ஊடுறவ முடியாத முள்மரங்களிலான பெரும்புதர் வேலி ஒன்று இருந்ததாக” சிறு குறிப்பினை லண்டன் நூலகமொன்றில் வாசித்திட..  அதைத் தேடி 1990 களின் இறுதியில் இந்தியா வந்த வரலாற்று ஆய்வாளர்  ராய் மாக்ஸம், அதற்காக தன் தேடல்கள் அனைத்தையும் ஆவணமாக்கி நல்லதொரு மொழி நடையில் அளித்திருக்கிறார் உப்புவேலி என்கிற இந்த நூலை.
நூலினை வாசிக்கத் தொடங்கியதுமே நமக்குள்ளும் ஒரு தேடுதலை தொடக்கி வைக்கிறார் ஆசிரியர், நமதின் வரலாறு எல்லாமுமே வெற்றி பெற்றவர்களாளும்.. அதிகாரத்தில் இருந்தவர்களாளுமே எழுதப்பட்டு வந்திருக்கிறதே.. தோற்றவர்களின் ரத்தத்திலிருந்தும்,
தோற்கடித்தவர்களின் வஞ்சத்தின் அனுபவத்திலிருந்து எழுதுவதெப்போது..? வென்றவர்கள் தங்களின் பராக்கிரமத்தை எங்கேயாவது பதிவு செய்திடும்போது இப்படிப்பட்ட நிஜங்களில் இருந்து அன்றைய நமது வாழ்வியலை.. பட்ட பாடுகளை அறிந்திட வேண்டி இருக்கிறது. துயரங்கள் இன்றளவும் தொடர்கிறது.  எதிர்வரும் சந்ததியர்களுக்கு  தோற்றுக் கொண்டே இருக்கும் நம் வலியில் இருந்து  நிஜங்களை அப்படியே எழுதி வைக்கத் துவங்குவோம் இப்போதாவது கவனத்தோடு.
தமிழ் களஞ்சியம்: கிறிஸ்துவ ...
லண்டன் நூலகத்தில் கிடைக்கப் பெற்ற வரைப்படங்கள், ஒரிசா தொடங்கி இன்றைய பாகிஸ்தானுக்குள் இருக்கும் சிந்து நதி வரை சென்ற உயிர்வேலியின் வழித்தடங்கள்,  புதர்வேலி எந்த நோக்கத்திற்காக அமைத்திடப்பெற்றது என்கிற இதரக் குறிப்புகளோடு 1996 ல் இந்தியா வருகிறார் ராய் மாக்ஸம்.
உத்திரப்பிரதேசத்தின் யமுனை நதிக்கரையில் இருக்கும் ஷேக்பூர் கிராமம் தொடங்கி ஜகமாபூர், ஜான்சி வரையிலான கிராமங்களை தன் நண்பர்கள் துணையோடு நடந்தே பார்வையிடுகிறார் உயிரான புதர்வேலி சென்ற வழிகளை. அவர் குறிப்பெடுத்திருந்த பாதையெங்கிலும் விவசாய நிலங்களும், கோதுமைப் பயிர்களும், இடிந்த கோட்டைகளும், சிதிலமாகிக் கிடக்கும் கோயில்களையும் காண்கிறார். ஒரு நூற்றாண்டுக்கு முன் இருந்த, பல ஆயிரக்கணக்கான இந்திய மக்களின் உழைப்பால் உருவான 14 அடி உயரமும், 12 அடி அகலமும் கொண்ட முட்புதர்; கருங்காலி, இந்திய இலந்தை, கிலாக்காய், சப்பாத்திக்கள்ளி உள்ளிட்ட முள் புதர்களாலான உயிர்ச் சுவர்;  முட்கள் கொண்ட சுழற்சிக் கொடிகளால் கட்டியெழுப்பப்பட்ட, இந்திய மக்களின் உயிர்வதைத்த முட்புதர் வேலி குறித்து எவருமே அறிந்திடாதது மிகப்பெரிய ஏமாற்றத்தைத் தந்தது ராய் மாக்ஸம் அவர்களுக்கு. கைகளில் வைத்திருந்த குறிப்பனைத்தும்  சமப்படுத்தப்பட்ட விளை நிலங்களாகவே தற்போது அவர் கண் முன். எப்படியும் அந்த உயிர் வேலியின் மிச்சமிருக்கும் அடையாளத்தை கண்டுபிடித்தே தீருவது என்கிற விடப்பிடியான ஆவலோடே லண்டன் திரும்புகிறார்.
இப்படிப்பட்ட முட்புதர் வேலி அமைத்திடும் நோக்கமென்னவென ஆய்வுகளை, கிடைத்த தரவுகள் அனைத்தையும் வைத்து மேற்கொள்கிறார்; வியபார நோக்கோடு வந்து பிரிட்டீஷார் தங்களின் அதிகாரத்தை நிலைநிறுத்திக் கொள்ள பிரித்தாளும் சூழ்ச்சியோடு கிடைத்திடும் நிலமனைத்திலும் தன் ஆட்சியை நேரடியாகவே நிகழ்த்துகின்றனர். வாய்ப்பில்லாத இடங்களில் நவாப் வழியாக ஆட்சி செய்கின்றனர். அரசு நிர்வகிக்கவும்.. தங்களின் பிரிட்டீஷ் அரசுக்கு தேவையான பொருளாதாரத்தை சுரண்டி எடுத்துச் செல்லவும் மக்கள் பயன்படுத்தும் பொருட்கள் மீது கடும் வரியை விதிக்கிறார்கள். அதில் முக்கியமானதாக, கால்நடைகள் முதல் மனிதர்கள் வரை பயன்படுத்தும் உப்பின் மீது தனது முற்றதிகாரத்தை முழுவதுமாக செலுத்துகிறார்கள்.
உப்புவேலி – தன்னறம் நூல்வெளி ...
உப்பு விளைச்சல் என்பது இந்தியா முழுவதிலும் கிடையாது.. ஒரு குறிப்பிட்ட இடங்களின் ஏரிகளிலும், பாறைகளிலும், கடற்கரை உப்பளங்களிலுமே உப்பு தயாரிக்கப்பட்டு நாடு முழுமைக்கும் கொண்டு சேர்க்கப்படும். கடத்தலை தடுப்பதற்கு 1803லேயே சுங்கச்சாவடிகளை  ஏற்படுத்தி வரி வசூல் செய்தாலும் உப்பின் மீது தங்களின் முற்றதிகாரத்தை மீறி நடைபெறும் உப்புக் கடத்தல் முற்றாக ஒழித்திட முடியவில்லை பிரிட்டீஷாரால். குத்தகைதாரர்களின் நிலவரி உட்பட பல பொருட்களின் வரிகள் வானம் பொய்த்தபோது குறைக்கப்பட்டாலும் இந்திய மக்கள் அனைவரும் பயன்படுத்தக்கூடிய உப்பிற்கு மட்டும் கடுமையாக உயர்த்தப்பட்டு மற்ற வரிகள் வழியாக ஏற்பட்ட இழப்புகளை இதில் சரிசெய்தது  பிரிட்டீஷ் நிர்வாகம்.
ஆனாலும் உப்புக் கடத்தல் தொடர்ந்து நடைபெற்றது. இதில் ஒரு மிகப்பெரிய நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்காக அமைத்திடப் பட்டதே 1869 முதல் 1879 வரையிலான முட்புதர் அமைத்திடும் பணி. ஒரிசா தொடங்கி சிந்து வரையிலான இடைபட்ட தூரத்தை ஆறுகளை விடுத்து நிலங்களிலான பகுதிகளில் செயற்கை முட்புதர்களை பனிரெண்டு அடி அகலத்திற்கும் பதினான்கு அடி உயரத்திற்கும் வளர்க்கிறார்கள். முள் மரங்கள் விளைய வாய்பற்ற பகுதிகளில் பல அடி ஆழம் நிலத்தை தோண்டி அதில் முள் மரம் வளர வாகுவான மண் நிரப்பி
மேடுபடுத்தி உயிராலான புதர் வேலிகளை அமைத்திடுகிறார்கள் இந்தியாவின் குறுக்காக எவரும் கடத்தலில் ஈடுபடாதவாறு கட்டுபாடுகளை உப்பின் மீது விதித்து.
இத்தனைக் கட்டுப்பாடுகளையும் மீறி உப்புக் கடத்தல் நடைபெற்றதென்பதை பல தரவுகளில் வரலாற்று ஆய்வாளர் ராய் மாக்ஸம் நம் முன் கொண்டு வந்திருக்கிறார். எந்தெந்த வகைகளில் கடத்தல் நடைபெற்றது, அதற்கான தண்டனைகள், சுங்க அதிகாரிகள் கடத்தலுக்கு எவ்வாறு துணைபுரிந்தார்கள்.. அதில் இருந்த நிர்வாகக் கோளாறு என்னவெல்லாம் என்பதை. 12000த்திற்கும் மேற்பட்ட காவலாளிகள் இருந்தாலும் அவர்களையும் மீறி ஆறுகளின் வழியாக.. முள் மரங்களின் வழியாக.. முட்புதர்களை தாண்டி எப்படி உப்பு கடத்தப்பட்டதென்பதை
ஆய்வாளர் சொல்லி இருக்கிறார் இந்த நூலில்.
1877-78 இந்தியாவில் கடுமையான பஞ்சம் நிகழ்ந்த துயரம் மிக்க ஆண்டு. பஞ்சத்தின் இன்னொரு பிரிவாக பல இடங்களில், வாந்தி, காலரா போன்ற பெரும் தொற்றாலும் மக்கள் தொடர்ந்து செத்துக் கொண்டே இருந்தார்கள். இந்த காலத்தில் பல வரிகளை நீக்கிய, குறைத்த பிரிட்டீஷர் உப்பின் மீதான வரியை மட்டும் நீக்க மறுத்தனர். பலரால் உப்பு வாங்கி பயன்படுத்த முடியாத சூழல்.. நெருக்கடி.. உணவுப் பஞ்சம் இன்னொரு புறம். மனித உடலுக்கு தேவையான உப்பு சக்தி வலுக்கட்டாயமாக மறுக்கப்பட பல உடல் உபாதைகள் நோய்கள் பெருக நாடு முழுவதிலும் அந்தக் காலத்தில் 13 லட்சத்திற்கும் மேற்பட்டோர் செத்ததாக அரசாங்க குறிப்புகள் தெரிவிக்கிறது. நிஜத்தில் செத்தவர்கள் எண்ணிக்கை கூடுதலாகும் என பலராலும் தெரிவிக்கப்பட்டது. உயிர் வாழ அடிப்படையான, மலிவான ஒரு பொருள் நாட்டின் பிற பகுதி மக்களுக்கு கிடைக்கப் பெறுவதை தடை செய்த முட்புதரின் எச்சத்தின் அடையாளத்தை கண்டடைய..
பிரிட்டீஷாரின் கொடூர எண்ணத்தில் இருந்த உருப்பெற்ற அந்த உயிர்வேலியின்
மிச்சைத்தை அறிந்திடும் ஆவலோடு மீண்டும் இந்தியாவிறகு 1997 ல் வருகிறார் தனது ஆய்வில் கிடைக்கப்பட்ட புதிய வரைபடங்களோடும்.. தரவுகளோடும்.. குறிப்புகளோடும் ராய் மாக்ஸம்.
Junior Vikatan - 26 April 2015 - உப்புவேலி | Book review ...
1997ல் ஆக்ராவிற்கு அருகாமையில் இருக்கும் ஜக்கோடாவிற்கு.. அருகில் இருக்கும் பதேஹபத், ஷம்ஷபாத், ஒர்ச்சா, லலிதாபூர் ஆகிய இடங்களில் சென்று பார்வையிடுகிறார் எப்படியாவது முட்புதரின் மீதத்தை பார்த்துவிடமாட்டோமா என்கிற ஆவலோடு. சென்ற அனைத்து  கிராமத்திலும் இப்படிப்பட்ட புதர் இருந்ததற்கான அடையாளங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு அரசின் சாலைகளாகவும், நிலங்களாகவும் காட்சி தந்தன. பலருக்கும் இவர் சொல்வது புதிய தகவலாகவே போய்ச் சேர்ந்தது. மீண்டும் லண்டன் திருப்புகிறார் ராய் விரக்தியோடு ஆனால் மன உறுதியோடு. தனக்கான தேடுதலை மீண்டும் லண்டனில் இருந்து தொடங்குகிறார்.
மக்களின் உயிர்தேவையான உப்பு மீது எல்லா நாடுகளிலும் வரி விதிக்கப்பட்டபோதும்; பிரஞ்சு நாட்டில் மாபெரும் புரட்சிக்கே வித்துட்டது இந்த உப்பு வரி.. உப்பு வரி வசூலித்தவர்களின் மீது கடும் தாக்குதலை நடத்திக் கொன்று புதைத்தனர் போராளிகள். ஆனால் அங்கு இருந்த வரியை விட பல மடங்கு வரி வசூல் செய்யப்பட்டாலும் இங்கு மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியோ.. அந்த அதிருப்தி போராட்டமோக வெளிப்படாததிற்கு காரணமாக இங்கு இருந்த நிலம் அனைத்தும் பெரும் குத்தகைதார்கள் வசமாகவே இருந்தது.. அவர்களுக்கு உப்பு வரி பெரும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை..  அவர்கள் செலுத்தும் மற்ற வரிகளுக்கு அரசு சலுகை செய்தது. இந்த நிலையில் பெரும்பாலான உழைக்கும் மக்கள் குத்தகைதாரர்களை நம்பியே தங்களின் வாழ்க்கையை அமைத்திருந்தனர். அவர்களை விடுத்துப் போராட்டம் செய்வதென்பது யோசிக்க முடியாத நிலையில் பெரும்பான்மையான உழைக்கும் மக்கள் இருந்ததால் பிரஞ்சுவில் நடைபெற்ற போராட்டத்தைப் போன்று இந்தியாவில் நடைபெற வாய்ப்பிருக்கவில்லை என்கிற வர்க்க படி நிலை குறித்து இந்த நூலில் பதிவு செய்திருக்கிறார் ராய் மாக்ஸம்.
ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கு எதிராக மகாத்மா காந்தியடிகள்  சுந்தந்திரப் போராட்டத்தின் ஒரு பகுதியாக உப்புக்கு விதிக்கப்பட்ட வரியை எதிர்த்து போராட்டத்தை இந்தியா முழுமைக்கும் நடத்துகிறார். அதன் தொடர்ச்சியாக வரிகொடா இயக்கம் நடைபெறுகிறது. எழுச்சியாக நடைபெற்ற இந்த மக்கள் போராட்டம் எப்படி கைவிடப் படுகிறது. அரசு இந்தப் போராட்டத்தை எப்படி அணுகியதென்பதை நூலில் பதிவாக்கி இருக்கிறார் ஆசிரியர். 1930 ல் நடைபெற்ற இப்போராட்டம் அப்போது சில சலுகைகளை மட்டுமே போராட்டக் குழுவினருக்கு ஆங்கிலேய அரசாங்கம் கொடுத்தது. இந்தியாவின் விடுதலை அறிவிக்கும் 1947 ஆம் ஆண்டு பிப்ரவரி 28ல்தான் உப்பின் மீதிருந்த வரியை நீக்கியதாக அறிவித்தது. இப்படியான பல விஷயங்களை உள்ளடக்கியதாக இந்து நூல் செல்கிறது.
19 ம் நூற்றாண்டில் 10 ஆண்டுகள் மட்டுமே இருந்த ஒரு மாபெரும் புதர் வேலியின் அடையாளத்தின் எச்சத்தை இந்தியாவில் கண்டிடமாட்டோமா என்கிற விடாப்பிடியான தேடுதலோடு மீண்டும் 1998 ல் இந்தியா வருகிறார் ராய் மாக்ஸம்.
இந்தியா வந்த ராய் ஜான்சியில் இருந்து எரிச் நோக்கி பயணிக்கிறார். அங்கேயும் புதர் இருந்ததற்கான அடையாளம் கிடையாது.. ஆனால் அந்தப் புதரின் அடையாளமாக நூற்றாண்டுகளுக்கும் மேலான புளிய மரம் இன்றும் நின்றிருப்பதை கவனிக்கிறார். அங்கிருக்கும் ஒரு துறவியின் வழிகாட்டலில் இட்டா மாவட்டம் சம்பல் பள்ளத்தாக்கின் பகுதியில் வேண்டுமானால் இருந்திட வாய்ப்பு என்பதை அறிகிறார். கொள்ளையர்கள் வாழும் சம்பல் பள்ளத்தாக்கு பகுதிகளுக்கு தன் நண்பரோடு பயணம் மேற்கொள்கிறார்
உயிர் வேலியின் தேடுதலால் உந்தப்பட்டு. பள்ளத்தாக்கின் சகநகர் கிராமத்தை அடைகின்றனர். அங்கு விசாரித்ததுமே பெரியவர் ஒருவர் “அரே நீ பர்மத் லயினையா தேடுற” என ஆச்சர்யத்தோடு கேட்க அதே ஆச்சர்யத்தோடு ஆமா என்று ராய் பதில் அளிக்க ;  வெள்ளையார்கள் உப்பின் மேல் நின்று இந்திய மக்களின் மீது  நிகழ்த்திய கொடுரத்தின் அடையாளமான உப்புவேலி என்கிற முட்புதரிலான உயிர் வேலியின் எச்சத்தைக் காண்கின்றார் சகநகரின் கிராமத்தில். ஆவணத்தில் இருந்த அதே அளவான இடத்தில், அழிந்த நிலையில் இருக்கும் வேலியினை.. புதரை காண்கின்றனர் ராய் மாக்ஸம் அவரின் நண்பரும். பர்மத்லயினில் இருக்கும் காவலாளிகள் ஒருவர் சத்தம் போட்டு சொல்லும் சேதி டில்லிக்கும் சென்று சேர்ந்த வரலாறும் சொல்லிக் கேள்விப் பட்டிருக்கிறோம் என்கின்றார் அந்த சகநகர் கிராமத்து பெரியவர். அந்த கிராமத்து பெரியவரோடு பேசப்பட்ட அனைத்தையும் அப்படியே பதிவாக்கி இருக்கிறார் தன் தேடுதலை நிகழ்த்தி சாதித்த ராய் மாக்ஸம் அவர்கள்.
வாசித்த சில வார்த்தைகளில் இருந்து தன் தேடுதலைத் தொடங்கி இந்திய மக்களின் வாழ்வியலில் உப்பின் வழியாக பிரிட்டீஷார் நிகழ்த்திய விவரிக்க முடியாத துயரங்களை பொது வெளியில் வெளிச்சம் போட்டுக் காட்டி இருக்கிறார் ஆய்வாளர்.ஆனால் இத்தனை பெரிய உயிர்வேலி எப்படி இந்திய சரித்திரத்தில் எங்கேயும்பதியாமல் விடுபட்டுப் போனது என்பது ஆச்சர்யத்தைவிட அதிர்ச்சிமிக்கதாகும். ஆட்சி செய்த மன்னர்கள் காலம் தொட்டே உப்பின் மீதான வரி என்பது இருந்தே வந்திருக்கிறது. ஆனால் உப்புக் கடத்தலை தடுத்து நிறுத்துவதற்கா இந்தியாவின் குறுக்கே இப்படியான முட்புதர் சுவர் அமைத்திடப் பெற்றது.. பிறகு அழிந்துபோனது  என்கிறமாதிரி எதுவுமே சுதந்திரப் போராட்ட வரலற்றிலுமாகட்டும் இந்திய வரலாற்றிலுமாகட்டும் பதிவாகாமலே இருந்ததென்பது வரலாற்று ஆய்வாளர்களின் கவனக்குறைவென்று கடந்து போகமுடியாத பெரும் சோகமே.!
Amazon.in: Buy உப்புவேலி – ராய் மாக்ஸம் ...
“உப்புவேலி” எளிய தமிழில் மொழிபெயர்கப்பட்டது.  ராய் மாக்ஸம் இந்தியா வரும் அத்தியாயங்கள் அனைத்தும் கதைவடிவிலும்.. அவர் கண்டறிந்த தரவுகள் அனைத்தும் கட்டுரை வடிவிலும் பதிவாக்கி இருக்கிறார். வரலாற்றை தெரிந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் வாசிக்கும்போது தடையேதும் அறிய முடியாது. மற்றவர்கள் வாசித்திட முனையும் வேளை கொஞ்சம் சிரமம் ஏற்படலாம்.
“உப்புவேலி” பலர் அறிந்திராத ஆச்சர்யமூட்டும்…அதிசயத்து யோசிக்கும்.. அதிர்ச்சிக்குள்ளாக்கும் பல செய்திகளை. ஆவணங்களை தாங்கி வந்திருக்கும்19ம் நூற்றாண்டின் இறுதியில் மறந்துபோன, மறக்கடிக்கப்பட்ட வரலாற்று நிஜம்.
கருப்பு அன்பரசன்
உப்புவேலி
உலகின் மிகப்பெரிய உயிர்வேலியின் வரலாற்று ஆவணம்
ராய் மாக்ஸம்
தமிழில்: சிறில் அலெக்ஸ்
வெளியீடு: தன்னறம் நூல்வெளி

Leave a Response

Top Reviews

Video Widget

gallery