Article

புலம்பெயர்தலைப் புரிந்துகொள்வோம்…  ஃப்ரண்ட்லைனிலிருந்து (தமிழில்: அறிவுக்கடல்)

Spread the love

‘என்னைப் பொருத்தவரை, இந்தியா கிராமங்களில் தொடங்கி கிராமங்களிலேயே முடிகிறது.’ -மகாத்மா காந்தி

‘நம் மக்களை முழுமையாகக் கட்டுப்படுத்திய பழங்காலத்திய இந்தியாவின் சமூக அமைப்பானது, தன்னாட்சிகொண்ட கிராம சமூகம், சாதி, கூட்டுக்குடும்பம் ஆகிய மூன்றையும் அடிப்படையாகக் கொண்டது.’ -ஜவகர்லால் நேரு

‘இந்து சமூக அடுக்கை செயல்படுத்தும் இடமாக இந்து கிராமங்கள் உள்ளன. அங்கு இந்து சமூக அடுக்கு முழுவீச்சில் நடைமுறையிலிருப்பதைக் காணலாம்.’ -பாபாசாகேப் அம்பேத்கர்.

இந்திய விடுதலை இயக்கத்தின் மூன்று பெரும் தலைவர்களும், இந்திய கிராமங்களைப் பற்றி, மாறுபட்ட பார்வைகளைக் கொண்டிருந்தனர். காந்திக்கு இந்தியாவின் அடையாளமாகத் தெரிந்த கிராமங்கள், நேருவுக்கு பிற்போக்குத் தனத்தையும், அம்பேத்கருக்கு அடக்குமுறையையும் நினைவூட்டின. இந்த மூவரில், அம்பேத்கர் மட்டுமே, சிறு வயதில் கிராமத்தில் வளர்ந்ததன்மூலம், கிராமங்களைப் பற்றிய ஒரு நேரடி அனுபவத்தைப் பெற்றிருந்தார். மூவருமே, அடிப்படையில் நகரங்களைச் சேர்ந்தவர்களாகவும், கல்விக்காகவோ, பணிக்காகவோ வெளிநாட்டுக்குச் சென்றதுடன், குடும்பங்களையும் இடம்பெயரச் செய்தவர்களாகவும் இருந்தனர். இந்தியாவின் முன்னேற்றத்திற்கு, கிராமங்கள் மாற வேண்டும் என்பதை அவர்கள் ஏற்றுக்கொண்டிருந்தனர்.

நகரங்களில் புதிய வேலைவாய்ப்புகள் உருவானதுட்பட, பல்வேறு காரணங்களால், 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்தே இந்தியாவின் கிராமப்புறங்களிலிருந்து, நகர்ப்புறங்களுக்கு புலம் பெயர்தல் தொடங்கிவிட்டது. இந்தியா விடுதலையடைந்ததும் இது வேகம்பெற்று, 90களில் உலகமயமாக்கலுக்குப்பின், உச்சத்தை எட்டியது. இக்கொள்கைகளால் கிராமப்புறங்களில் ஏற்பட்ட சரிவுகள், நகரம் நோக்கிய புலம்பெயர்தலைக் கடந்த முப்பதாண்டுகளாக மேலும் அதிகரிக்கச் செய்தன.

தொழிலாளர்கள் தற்போது நகரங்களைவிட்டு வெளியேறி, தங்கள் சொந்த மண்ணை நோக்கிச் செல்லத் தொடங்கியிருப்பது, இந்தியாவிற்குள் புலம் பெயர்தலுக்கு முற்றிலும் புதிய வடிவத்தைக் கொடுத்திருக்கிறது. அதே நேரத்தில், இப்படியொரு கொள்ளை நோயின் ஆபத்துக் காலத்திலும் இத் தொழிலாளர்களின் கைவிடப்பட்ட நிலை, உலகமயமாக்கல், பொருளாதார தாராளமயம் ஆகியவற்றின் மனிதத்தன்மையற்ற விளைவுகளுக்கு மோசமான உதாரணமாகிவிட்டது. எந்தக் கிராமங்களைவிட்டு வந்தார்களோ, வறுமையிலிருக்கும் அதே கிராமங்கள், தாங்கள் பட்டினியால் சாவதிலிருந்து தங்களைக் காக்கும் என்று நம்புமளவுக்கான அவர்களின் கையறு நிலையை, இந்த தலைகீழ் புலம் பெயர்தல் பட்டவர்த்தனமாக்கிக் கொண்டிருக்கிறது.

Stuck in camps, uncertainty keeps labourers on the edge - india ...


நெடுந்தொலைவுகளை இவர்கள் நடந்தே கடப்பதைப் பற்றி, மத்திய அரசும், பல மாநில அரசுகளும் துளியும் கவலைப்படவில்லை. அவர்களது எண்ணிக்கை, சிரமங்கள் ஆகியவை பற்றி அரசுகள் கவலைப்படாத நிலையில், இந்தியப் பிரிவினையின் போது புலம் பெயர்ந்த 1.7 கோடி மக்களைவிட, இவர்களின் எண்ணிக்கை அதிகம் என்று பலரும் கூறுகின்றனர். சுமார் 4 கோடிப் பேர் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக உலக வங்கி கூறுகிறது. தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான லாக் டவுனால் இந்தியாவிலும், லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் நடைபெற்ற இவ்வாறான புலம் பெயர்தல்கள், தொற்று மேலும் பரவுவதற்கே உதவியதாக உலக வங்கியின் அறிக்கை கூறுகிறது.

புலம் பெயர்ந்த சுமார் 45 கோடிப் பேரில், 15.6 சதவீதம் பேர், கிராமங்களிலிருந்து நகரங்களுக்குப் புலம் பெயர்ந்ததாகவும், அவ்வாறு சென்றவர்களில் பாதிக்கும் அதிகமானவர்கள்(55 சதவீதம்) பெண்கள் என்றும் 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பு கூறுகிறது. மாநிலத்துக்குள்ளேயும், மாநிலங்கள் கடந்தும் புலம் பெயர்ந்தவர்களில், உத்தர பிரரேசம், பிகார், மத்திய பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரகாண்ட், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலத்தவர்கள் மட்டும் 13 கோடிப்பேர். இவர்களில் ஒரு சிறு பகுதியினர், இந்த லாக் டவுனால் சொந்த கிராமங்களை நோக்கிச் செல்வதாகக் கொண்டால்கூட, அது உலக வங்கியின் மதிப்பீட்டைவிடவே அதிகமாக இருக்கும். இவர்களின் பிரச்சினையை முக்கியமாகக் கருதி, தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கவேண்டிய அரசு, அதில் தவறி, இவர்களது சிரமங்களை மேலும் மோசமாக்கியிருக்கிறது.

வெறும் 17 சதவீத உள்ளாட்சி நிர்வாகங்கள்தான், புலம்பெயர் தொழிலாளர்களின் தேவைகளில் கவனம் செலுத்தியுள்ளன. அவர்களைப் பணியமர்த்தியிருந்த நிறுவனங்களும்கூட கைவிட்டுவிட, வெறும் 28 சதவீத நிறுவனங்கள்தான் உதவியிருக்கின்றன. பிற மாநிலங்களிலுள்ள தங்கள் மாநிலத்திலிருந்து புலம்பெயர்ந்து சென்ற தொழிலாளர்களைப் பற்றிய விபரங்களைத் திரட்ட, எந்த மாநில அரசும் முயற்சிக்கக்கூட இல்லை. மாறாக, இப்பிரச்சினையைப் பற்றிப் பேசவே பெரும்பாலான மாநில அரசுகளுக்கு ஒரு மாதத்திற்கும் மேலாகியது. உதாரணமாக, ஜார்க்கண்ட் மாநிலத்திலிருந்து புலம்பெயர்ந்திருந்த பெரும்பாலான தொழிலாளர்கள் லாக்-டவுன் காலத்தில் மத்தியப் பிரதேச மாநிலத்தில் சிக்கிக்கொண்ட நிலையில், அவர்கள் உணவுக்குக்கூட உள்ளாட்சி நிர்வாகங்களையும், அரசுசாரா அமைப்புகளையும் எதிர்பார்த்திருக்க வேண்டியதாயிற்று. அதைப்போலவே, மாகாராஷ்ட்டிரத்தில் சிக்கிக்கொண்ட மேற்கு வங்க மாநிலத்திலிருந்து புலம்பெயர்ந்திருந்த தொழிலாளர்களுக்கு, அவர்களது மாநில அரசு ஏதாவது செய்திருக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்ளக்கூட வழியின்றிப் போனது.

மாநில அரசுகளுக்கிடையே ஒத்துழைப்பின்றிப்போனது என்பது, புலம்பெயர் தொழிலாளர்கள் பற்றிய தரவுகளே அவற்றிடம் இல்லையென்பதைக் காட்டுவதாகவும், இது மிகப்பெரிய பலவீனம் என்றும் விவசாய மற்றும் புலம்பெயர் தொழிலாளர்களுக்காக நீண்டகாலமாகச் செயல்படும் அரசுசாரா அமைப்பான ஏக்தா பரிஷத்தின் ரமேஷ் ஷர்மா கூறுகிறார். இந்த அமைப்பு, ஆயிரத்துக்கும் மேற்பட்ட தன்னார்வலர்களின் உதவியுடன், இந்தியாவின் புலம்பெயர்தல் வரைபடம் என்பதை உருவாக்கியிருக்கிறது. அவர்கள் நகரங்களில் மட்டுமின்றி, தொலைவில் தனித்திருக்கும் பகுதிகள், பாகிஸ்தான் எல்லைப் பகுதிகள், லடாக், அருணாசல பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் புலம்பெயர் தொழிலாளர்களையும் சந்தித்து, தகவல்களைத் திரட்டியுள்ளார்கள். அசாமிலிருந்து வந்து பெங்களூருவில் சிக்கிக்கொண்டவர்கள், தெலுங்கானாவிலிருந்து வந்து, கேரளத்தின் இடுக்கியில் சிக்கிக்கொண்டவர்கள்வர்கள் என்று, ஊடக வெளிச்சம் பெறாத அனைத்துப் பகுதிகளிலுள்ள தொழிலாளர்களின் தகவல்களையும் அவர்கள் திரட்டியுள்ளனர். ஏக்தா பரிஷத் தயாரித்துக்கொண்டிருக்கும், புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்த முழுமையான அறிக்கையில் இடம்பெறுவனவற்றிலிருந்து, சிலவற்றை நாம் காணலாம்.

Ekta Parishad on Twitter: "Our Founding President, P.V. Rajagopal ...


புலம்பெயர் தொழிலாளர்களின் மிகமுக்கிய பிரச்சினை மிகமோசமான ஊதியம். மிகக்குறைவான ஊதியம் பெறுவதால், சிறிய அளவிலான சேமிப்பைக்கூட வைத்துக்கொள்ள முடியாத நிலையே, கொரோனா போன்ற எதிர்பாராத நெருக்கடிகளைச் சந்திக்க இயலாதவர்களாக அவர்களை வைத்திருக்கிறது. இத்தொழிலாளர்கள் அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்சக் கூலியைவிட மிகக்குறைந்த கூலியையே பெறுகிறார்கள் என்பதுடன், அதிலும் 15-20 சதவீதத்தை, இவர்களை அழைத்துச் செல்லும் தரகர்கள் எடுத்துக்கொள்கிறார்கள். இவற்றைச் சரிசெய்ய எந்த நடவடிக்கையையும் அரசு மேற்கொள்ளவில்லை என்பதுடன், கொரோனா போன்ற நெருக்கடியான சூழ்நிலைகளில்கூட, முதலாளிகளின் நலன்களைக் காப்பதிலேயே மத்திய அரசு அக்கறை காட்டுகிறது.

நான்கு தொழிலாளர் நலச் சட்டங்களின் விதிகளையும் ஒருங்கிணைத்து, குறைந்தபட்சக் கூலி, உரிய நேரத்தில் கூலி வழங்கப்படுதல் ஆகியவற்றை இந்தியா முழுமைக்கும் பொதுவானதாக்கிய கூலிச் சட்டத்தை 2019இல் நாடாளுமன்றம் நிறைவேற்றுகிறது. ஆனால், ஏழு மாதங்கள் கழித்து, பருத்ருஹரி மகதப் தலைமையிலான, தொழிலாளர்கள் குறித்த நாடாமன்றக்குழுவின் அறிக்கை என்ன கூறியது தெரியுமா?  ‘நிலநடுக்கம், வெள்ளம், பெரும் புயல் போன்ற இயற்கைப் பேரிடர்களின்போது, தொழிற்சாலைகளை மூட நேரிடுகிறது. அவ்வாறு நீண்ட காலம் மூட நேரிடுவதில், முதலாளிகளின் தவறு எதுவும் இல்லாத நிலையில், மூடப்பட்டிருக்கும் காலத்திற்குக் கூலி வழங்கச் சொல்வது நியாயமாக இருக்காது’. அதாவது, தொழிற்சாலைகளின்மீது திணிக்கப்பட்டதாக லாக்டவுன் இருப்பதால், அக்காலத்தில், தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்குமாறு அவர்களை வற்புறுத்த முடியாது என்று மகதப் கூறுகிறார்.

தொழிலாளர்களின் ஊதியத்தை உத்தரவாதப் படுத்தாமல், கூலிச்சட்டம் தொழிலாளர்களுக்கு எவ்விதத்திலும் பயனளிக்காது என்று ஏக்தா பரிஷத்தின் ரமேஷ் ஷர்மா கூறுகிறார். இந்த புலம்பெயர் தொழிலாளர்களுக்கு, கூலிச்சட்டம் என்றால் என்னவென்றே தெரியாது என்கிறார் அவர்.

விவசாயம், கட்டுமானம், தொழிற்சாலைகள், (உணவகம் உள்ளிட்ட) சேவைத் துறைகள் ஆகிய நான்கு முக்கிய துறைகளின் தொழிலாளர்கள் தற்போதைய வெளியேற்றத்தில் ஊர் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். வேலைக்கும் வழியின்றி வறுமையைத்தான் சந்திக்க நேரிடும் என்றாலும், சொந்த ஊருக்குத் திரும்பவே 95 சதவீத புலம்பெயர் தொழிலாளர்கள் விரும்புவதாக ஏக்தா பரிஷத்தின் ஆய்வுகள் கூறுகின்றன. புலம்பெயர் தொழிலாளர்களில் 86 சதவீதம் பேருக்கு, வாழ்வதற்கு உறுதியான எந்த வழியும் தெரிந்திருக்கவில்லை. வெறும் 5 சதவீதம் பேர்தான், தற்போது வேலை செய்துகொண்டிருக்கும் இடத்திலேயே இருக்க விரும்புகிறார்கள். அவர்களது மனநிலையில், மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. வெறும் கையுடன் ஊர் திரும்புவதுடன், அங்கு சென்று வாழ எந்த வழியும் தெரியவில்லை என்றாலும், ஊர் திரும்ப விரும்புகிற அவர்களிடம் பேசியபோது, பொருளாதாரப் பாதுகாப்பு என்பது மூன்றாவது அல்லது நான்காவது தேவையாகத்தான் இருக்க முடியும், பாதுகாப்பான மனநிலையும், சமூகச் சூழலும்தான் முதலில் தேவையென்றும், சாக நேரிட்டால்கூட, அது சொந்த மண்ணில் நிகழ வேண்டுமென்றும் அவர்கள் கூறியதாக ஷர்மா கூறுகிறார்.

Odisha arranges buses to take migrants walking home to reach state ...


ஏக்தா பரிஷத் சந்தித்த புலம்பெயர் தொழிலாளர்களில் 68 சதவீதம்பேர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு, லாக்டவுனுக்குப்பின் ஆலோசனை தேவைப்படும் நிலையில் இருக்கிறார்கள். மத்தியப் பிரதேச மாநிலத்தில், நான்கு நாட்களாக நடந்து வந்த 22 தொழிலாளர்கள் ஒரு பள்ளியில் தனிமைப் படுத்தப்பட்டனர். அவர்களில் 30 வயதுள்ள ஒரு தொழிலாளி, கழிப்பறைக்குச் செல்வதாகக் கூறி வெளியில் சென்று, ஒரு மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார். சுனாமியில் தப்பித்தவர்களைப்போன்று, புலம்பெயர் தொழிலாளர்கள் மனநிலை தடுமாறியுள்ளதாக ஷர்மான கூறுகிறார். இத்தகையோருக்கு மனநல ஆலோசனை வழங்குவதற்கான பொதுவான வழிகாட்டுதல்களை உலக சுகாதார அமைப்பு உருவாக்கியுள்ளது. அவற்றில் ஒன்றைக்கூட கேரளாவைத் தவிர வேறு எந்த மாநிலமும் பின்பற்றவில்லை. உணவுப் பொருட்களை வழங்குவது முதலுதவி மட்டுமே. அதற்கான பிரச்சாரக் களமாக கொள்ளை நோய் பயன்படுத்தப்படக் கூடாது. நிர்வாகத்தில் உள்ள தவறுகளைக் கண்டறிந்து சரிசெய்துகொள்ள வேண்டிய நேரம் இது. உணவு முக்கியம்தான் என்றாலும், அது மட்டுமே நிவாரணம் அல்ல என்பதை அரசும், அரசுசாரா அமைப்புகளும் புரிந்துகொள்ள வேண்டும். மனங்களுக்கு ஆதரவளிக்கும் இரண்டாம் கட்ட நிவாரணத்தை, நாம் தொடங்கவேண்டும் என்கிறார் ஷர்மா.

மன நலத்தை இழந்ததுடன், நீண்ட தூரம் மோசமான பயணத்தை மேற்கொண்டு உடல் நலத்தையும் அவர்கள் இழந்திருக்கிறார்கள். ஏக்தா பரிஷத் சந்தித்த புலம்பெயர் தொழிலாளர்களில், 44 சதவீத பெண்களும், குழந்தைகளும் மோசமான உடல்நிலையுடன் இருக்கிறார்கள்.

புலம் பெயர்ந்தவர்கள் பெரும்பான்மையோர், நிலமில்லாத ஏழைகள். அதனால், தங்கள் கிராமத்தில் வாழ்வதற்கு எந்த வழியுமின்றியே அவர்கள் புலம்பெயர்ந்தனர். இப்போது அவர்கள் ஊர் திரும்பிக்கொண்டிருக்கிற இக்காலம், நிலச் சீர்திருத்தத்தை செயல்படுத்தி, அவர்களின் வாழ்க்கைக்கான வாய்ப்புகளை உருவாக்கித் தரவேண்டிய நேரம் என்று இத்துறையில் நீண்ட காலமாகப் பணியாற்றிக்கொண்டிருக்கிற ஏக்தா பரிஷத் வலியுறுத்துகிறது. சிறிய அளவிலான விவசாயத்தில் மிக முக்கிய பிரச்சினையாக இருப்பது தண்ணீர்தான், அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்ட இடங்களில் புலம்பெயர்தால் பாதியாக இருக்கிறது என்கிறார் ஷர்மா. வாய்ப்புகளையும் வளங்களையும் பெறுவதில் கிராமங்களில் மிகப்பெரிய ஏற்றத்தாழ்வு நிலவுகிறது, உயர் சாதியினருக்கு அனைத்தின்மீதும் உரிமையிருக்கிற நிலையில், ஏனையோருக்கு அவற்றின்மீதான உரிமை மறுக்கப்படுகிறது என்கிறார் ஷர்மா.

ஆண்டுக்கு 100 நாட்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தந்ததன்மூலம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உத்தரவாதத் திட்டம், புலம்பெயர்தலை ஓரளவுக்குக் கட்டுப்படுத்தியது. ஆனால், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட இத்திட்டத்தை, பாஜக ஆட்சிக்கு வந்ததும் ஓரங்கட்டத் தொடங்கியது. காங்கிரசின் தோல்விகளுக்கு தற்போதிருக்கும் நினைவுச்சின்னம் என்று 2015 பிரதமர் மோடி இத்திட்டத்தைக் கிண்டல் செய்தார். ஏழ்மையை ஒழிக்க விரும்பும் இந்த அரசு, ஏழைகளுக்கான இத்திட்டத்தைத் தொடரப் போவதில்லை என்பதை, பாஜக அரசின் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கடந்த ஆண்டு வெளிப்படுத்தினார். ஆனால், புலம்பெயர்தலைத் தடுப்பதில் இத்திட்டம் உதவியிருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன என்று இதே துறையின் மற்றொரு அமைச்சர் ராம் கிரிபால் யாதவ், நாடாளுமன்றத்தில் ஒரு கேள்விக்குப் பதிலளித்தார்.

FM Nirmala Sitharaman press conference on May 13: Here's what to ...


இப்போது, நிதியமைச்சர் இத்திட்டத்திற்கு ரூ.40 ஆயிரம் கோடி கூடுதலாக ஒதுக்கீடு செய்வதாக அறிவித்துள்ளது, இந்த அரசின் மனநிலையில் மாற்றமாகக் கருதி வரவேற்கத் தகுந்ததாக உள்ளது. தற்சார்பு என்பது மோடியின் நோக்கமாக இருந்தால், அதற்கு பொருளாதார பரவலாக்கம் அவசியம் என்கிற ஷர்மா, ‘தற்சார்புள்ள இந்தியன்’ இன்றி ‘தற்சார்பு இந்தியா’ சாத்தியமில்லை என்கிறார். அத்துடன், புலம்பெயர் தொழிலாளர்களின் பிரச்சினைகளை, அரசும் ஊடகங்களும் தவறாகப் புரிந்துகொண்டிருப்பது கவலைக்குரியது என்கிறார்.

இந்தியாவில் புலம்பெயர்தலின் வடிவங்கள், காரணங்கள், தீர்வுகள் ஆகியவற்றைப் புரிந்துகொள்ள, ஏக்தா பரிஷத்தின் புலம்பெயர்தல் வரைபடம் மிகப்பெரிய உதவியாக இருக்கும்.  அவற்றைக் கையாள, தெளிவான, நுணுக்கமான அணுகுமுறைகளை அரசுகள் உருவாக்க, இதிலுள்ள விபரங்கள் உதவியாக இருக்கும்.

உதாரணமாக, பெரும்பாலும் விவசாயத்தைச் சார்ந்திருக்கும் மக்களையும், அதிக ஏழ்மையையும் கொண்டிருக்கும் மணிப்பூரிலிருந்துதான், மிக அதிகம் பேர் மாநிலங்கடந்து புலம்பெயர்ந்திருக்கிறார்கள். ஆண்களைவிடப் பெண்கள் அதிகம் புலம்பெயர்ந்திருக்கும் இரு மாநிலங்கள், மணிப்பூரும், ஒடிஷாவும் (அதிலும் குறிப்பாக ஒடிஷாவின் சுந்தர்கார்). வீட்டு வேலைகளைச் செய்வதற்காகப் பெண்கள் பெரு நகரங்களுக்கு புலம்பெயர்கிறார்கள். தோற்றத்தைக் கொண்டு அவர்களை நேபாளிகள் என்று நாம் கருதினாருலும், அவர்கள் உண்மையில் மணிப்பூரிகளாக இருக்கிறார்கள். வீட்டு வேலைக்காக அதிகப் பெண்கள் புலம்பெயர்ந்திருக்கும் மற்றொரு மாநிலம் ஜார்க்கண்ட். ஏக்தா பரிஷத்தின் ஆய்வுகள் ஒரு வினோதமான உண்மையையும் வெளிப்படுத்துகின்றன. அசாமிலுள்ள தேயிலைத் தோட்டங்களில் நிரந்தரமாகத் தங்கிப் பணியாற்றுபவர்கள், ஜார்க்கண்ட்டிலிருந்து புலம்பெயர்ந்து வந்த ஷந்தால் மக்கள். ஆனால், அசாம் மக்கள் வேலைதேடி, தென்மாநிலங்களுக்குச் செல்கிறார்கள். வடகிழக்கு மாநிலங்களிலிருந்து புலம்பெயர்பவர்கள் பொதுவாக தென்மாநிலங்களுக்குச் செல்வதையே விரும்புகிறார்கள். ஆனால், பிகாரிகளுக்கு பஞ்சாப்தான் விருப்பமான இடமாக இருக்கிறது. உத்தரப்பிரதேசத் தொழிலாளர்கள் டெல்லி அல்லது மும்பைக்குச் செல்ல விரும்புகிறார்கள். கிராமப்புற பிகாரிகள், மகாராஷ்ட்டிரா அல்லது குஜராத்தின் கிராமப்புறத்தில் வேலை தேடுகிறார்கள். இந்தப் பகுதிகளையே மத்தியப் பிரதேசத்தின் தொழிலாளர்களும் விரும்புகிறார்கள்.

தலைகீழ் புலம்பெயர்தலால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு அரசுகள் தீர்வு காண விரும்பினால், இத்தகைய ஆய்வுகள் பேருதவியாக இருப்பதுடன், நீண்டகால நோக்கிலான தீர்வுகளை உருவாக்கவும் உதவும்.


Arivukkadal

Freelance writer; Photographer by hobby

Leave a Response

Top Reviews

Video Widget

gallery