Book Review

நூல் அறிமுகம்: உலகாயதம் – பெ. அந்தோணிராஜ்

Spread the love

 

ஆசிரியர் சட்டோபாத்யாயா ஒரு இயங்கியல் பொருள்முதல்வாதி. சுற்றுப்புற இயக்கங்களுடன் ஒரு விஷயத்தினைப் பொருத்திப்பார்த்து ஒரு முடிவுக்கு வருவது அவரது முறை என்று இந்நூலை மொழிபெயர்த்த திரு. தோத்திரி கூறுகிறார்.

**இந்திய தத்துவங்களைத் தரிசனங்கள் என்று கூறுவர். நமது நாட்டில் பல தரிசனங்கள் இருந்தன. அவை 1, உலகாயதம் 2, பௌத்தம் 3சமணம் 4, சாங்கியம் 5, நியாயம் 6, வைசேடிகம் 7, மீமாம்சம் 8, சங்கர வேதாந்தம் 9இராமானுஜ வேதாந்தம் 10, மத்வ வேதாந்தம் 11, சைவ சித்தாந்தம் என்பன.

**இவற்றை மூவகையாகப் பிரிக்கலாம்.

1, பொருள் முதல் வாதம் =சாருவகம் என்ற பண்டைய உலகாயதம்
2, கருத்து முதல் வாதத்தினை அடிப்டையாகக் கொண்ட வேதாந்தம்
3, இரண்டும் கலந்தவை, சைவம், பௌத்தம், சமணம், மீமாம்சம், சாங்கியம், வைசேடிகம் ஆகியன.

* உலகாயதம் என்பது சொல்லியல் படி “மக்களிடையே உள்ளது “”இந்த உலகம் பற்றியது “என்று பொருள் படும். இருக்கக்கூடிய ஆதாரங்களை வைத்துப்பார்க்கும்போது, இதற்கும் சில ஆதிகால சடங்கு நடவடிக்கைகளுக்கும் தொடர்பு உள்ளதைக் காட்டும். இதனுடைய முக்கிய கூறு “தேகவாதம் “எனப்படும். அதாவது மனித உடல் பேரண்டத்தில் நுண் மாதிரி என்பதும் உலகத்தின் தோற்றம் என்பதே ஆண் பெண் இணைவது என்பதில் உள்ளது.

**உலகாயதம் அல்லது சாருவகம் அல்லது பிரகஸ்பதியம் என்பது இவ்வுலகத்திற்கான தத்துவம் அல்லது பொருள்முதல்வாதம் எனப்பட்டது.

**மணிபத்ரர் லோகம் என்பதை பதார்த்த -சார்த்தம் அல்லது பதார்த்த சமூகம் அதாவது பொருள்களின் மொத்த இருப்பு என்று கூறுகிறார்.

**இந்திய சிந்தனையின் சிறந்த பண்பு யாதெனில் புற உலகத்தைவிட, மனிதனின் அக உலகத்தில் அதிகம் கவனம் செலுத்துவதுண்டு எனக்கூறுகிறார் s. இராதாகிருஸ்ணன்.

**உலகயாதவாதிகள் அனுமானத்தை மறுத்தனர். வேதங்களின் அதிகாரம், ஆன்மா, கடவுள், இறவாத்தன்மை ஆகியவற்றை மறுத்தனர். கண நேரத்திற்கான புலன் இன்பம் தவிர, பிற எல்லாவகையான ஒழுக்கமதிப்புகளையும் மறுத்தனர். மரணத்திற்குப்பின் மற்றொரு உலகம் இருக்கமுடியாது என்பதில் உறுதியாக இருந்தனர்.

**சாந்தோக்ய உபநிடதத்தின்படி, உடலையும் உயிரையும் ஒன்றாகக் கருதும்போக்கு அசுரர்களிடம் இருந்துள்ளது. பண்டையகால சுமேரியர்களை அசுரர்களாகக் கருதினார் ஆய்வாளர் தாஸ்குப்தா.

**அர்த்தம், தர்மம் ஆகியன முதலில் ஒன்றாக புரோகிதர்கள் கையில் இருந்தது, அர்த்தம் என்றால் அரசியல் பொருளாதாரம், தர்மம் என்பது மதம் சார்ந்த புனிதம். இவ்விரண்டிற்கும் மோதல் போக்கு ஆரம்பித்தவுடன் அர்த்தம் என்ற பிரிவு இன்ப நாட்டம் உள்ள பொருள் முதல் வாதத்திற்கு இட்டுச்சென்றது.

**குணரத்ன எனும் சமண அறிஞர் காபாலிகர்களையும், உலகயாதவாதிகளாகக் கூறுகிறார். இவர்கள் ஆண் பெண் சேர்க்கைக்கு முக்கியத்துவம் தருகின்றனர். ஆண் பெண் சேர்க்கையின் கால அளவை வைத்துதான் சித்தி கிடைக்கும் என்று கூறுகிறார்கள். இவர்கள் தேகத்தை நம்புகின்றனர். இவர்கள் தங்களை வைஷ்ணவர்கள் என்று அழைத்துக்கொள்கின்றனர், ஆனால் கிருஸ்ணாவதாரங்களில் நம்பிக்கை இல்லாதவர்கள்.

யார் பிராமணன்? யார் தீண்டத் தகாதவன் ...

**புத்தமதத்தின் சிதைந்த பிரிவினரிடம் ஆண் பெண் உறவு ஒழுக்கமற்று இருந்தது, இப்பிரிவினர் காலப்போக்கில் உலகாயதத்துடன் இணைந்தனர்.

**t r சாஸ்திரி என்பவர் கூற்று “உலகாயதம் என்பது இன்பம் பற்றிய கொள்கை. இதன் தாக்கமாக எல்லா இடங்களிலும் புலன் இன்பம் மேலோங்கியிருந்தது, அனைவரும் மதனோஸ்தவத்தில் மூழ்கி இருந்தனர், காமன் வழிபாடு முக்கியத்துவம் பெற்றது.”

**புத்தகோஷர், உலகாயதத்தை விதண்டாவாத அறிவியல் என்றார்.

**விதண்டாவாதம் என்பது தந்திரமாக தர்க்கம் செய்வதாகும். சொர்கத்துக்குரிய பாதையிலிருந்து நம்மை திசை திருப்புவதாகும், ஆனால் சாமானிய மக்கள் இந்த வாதத்தை விரும்பினர்.

**அர்த்தசாஸ்திரத்தில் உலகாயதத்தை தர்க்க அறிவியல் என்கிறார். ஹைதுர்க்கர்கள் என்பவர் உலகாயத தர்க்க சாஸ்திரிகள் ஆவர்.

**வேதநூல்களை குருட்டுத்தனமாக ஏற்றுக்கொள்வது என்பதுதான் ஆக்கபூர்வ அணுகுமுறை என்றால் உலகாயதம் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.

**இந்த தர்க்கசாஸ்திரிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என மனு பரிந்துரை செய்தார். காரணம் இவர்கள் பகுத்தறிவு வாதிகள் மட்டுமல்ல, இவர்களின் வாதத்திறமையினால் மறு உலகம் உள்ளதென்பதை உடைத்தெறிந்தனர், யாகங்களையும், வேதங்களின் அதிகாரத்தையும் எதிர்த்தனர், மறு உலகை மறுத்து, தானம், பலி ஆகியவற்றை நிராகரித்தார்கள்.

**குல்லுக பட்டர் இவர்களை வேதவிரோதிகள் என அழைக்கிறார்.

**புரந்தரர் எனும் உலகயாதவாதி “எங்கெல்லாம் காண்டல் அளவை சாத்தியமோ அங்கெல்லாம் உலகம் சம்பந்தமான பொருள்கள்பற்றி அனுமானம் பயனுள்ளதாக இருக்கும் என்கிறார். ஆனால் மரணத்திற்குப் பிந்திய வாழ்வு, கர்மவிதி போன்ற குருட்டு நம்பிக்கைகளுக்கு அனுமான வாதங்கள் பயன்படாது என்றும் கூறுகிறார்.

**உலகாயதத்தினரை பிரகிருதஜனம் (அநாகரிக மக்கள் )என்று ஆதிசங்கரர் குறிப்பிடுகிறார்.

**மனிதனின் இறுதிவேட்கை புலன் இன்பம் துய்த்தல் ஆகும், ஆனால் அதுவே வாழ்வின் இலட்சியம் ஆகிவிடாது, ஏனெனில் வாழ்க்கையென்பது இன்பமும் துன்பமும் சேர்ந்ததே, அதனால் இயல்பாக எழக்கூடிய இன்பங்களை துய்ப்பது தவறில்லை என மத்துவர் கூறுகிறார்.

**புத்தமத சாத்திரங்களில் குறிப்பிட்டுள்ளபடி ஒரு நல்ல பிராமணன் கற்கவேண்டிய அறிவுத்துறைகளில் உலகாயதமும் ஒன்றாகும். ஹரிவம்சத்தில் இடம்பெறும் ஒரு வாக்கியம் “பிரமணர்களது சாதனைப்பட்டியலின் கடைசியில் அவர்கள் உலகாயதத்திலும் தேர்ந்திருந்தனர் “”

**சுருதி, ஸ்மிருதி இரண்டையும் உலகாயதர்கள் ஏற்றுக்கொண்டதில்லை. மறுஉலகம், துறக்கம் ஆகியவற்றை கேலி பேசினர்.

**குமரிலர் எனும் அறிஞர் “நடைமுறையில் மீமாம்சம் உலகாயதமாகப் பெரிதும் மாற்றமடைந்துள்ளது, ஆனால் நான் இதனை மீட்டு வைதீகப்பாதைக்குத் திருப்ப முயற்சி செய்துள்ளேன் “என்கிறார். உலகாயதம் எந்த அளவு வைதீகத்தை எதிர்த்துள்ளது என்பது தெரிகிறது.

**பிராமணிய நூல்களில் உலகாயதமானது பூதங்கள், அரக்கர்கள், பேய்கள், தைத்யர்கள், அசுரர்கள் ஆகியோருடையதாக காட்டப்படுகிறது.

**கீதையில் கிருஷ்ணர் கூறுகிறார், “இந்த உலகத்தில் தேவர், அசுரர் என்ற இரு இனங்கள் படைக்கப்பட்டன. ” கீதைக்கு உரை எழுதிய ஸ்ரீதரஸ்வாமி என்பவர் “தேவர்களின் கருத்து என்பது கீதையின் சாரம், அசுரர்களின் கருத்து உலகாயதம் “என்கிறார்.

பிராமணர்கள் | Tamil and Vedas

**பிராமணன் என்பவன் வேதங்களில் சொல்லப்படாதவற்றைக் கற்கக்கூடாது. இதுதான் கடமை.

**”ஆத்மன் என்பது தீங்கற்றது, வயத்தற்றது, மரணமற்றது, துக்கமற்றது, பசியற்றது, தகமற்றது, அதன் ஆசை உண்மையானது. அது நித்தியமானது, அதனைத் தேடவேண்டும், அதாவது புரிந்துகொள்ளவேண்டும். ஆத்மனை புரிந்து கொண்டவன் எல்லா உலகத்தையும் பெறுகிறான், எல்லா விருப்பங்களையும் பூர்த்தி செய்கிறான் “இவ்வாறு பிரஜாபதி பேசினார். இதனை பின்பற்றி தேவர்களில் இந்திரனும், அசுரர்களில் விரோசனனும் தேடுகிறார்கள், இறுதியில் பிரஜாபதியிடம் வருகின்றனர், விரோசனன் உடலும் ஆன்மாவும் ஒன்றென புரிந்துகொள்கிறேன், ஆனால் இந்திரன் கருத்துமுதல்வாதத்தின் அடிப்படையில் ஆத்மனை காண விழைகிறான்.

**பிரகத்தாரணிய உபநிடதத்தில் யாக்ஞவல்கியர் மைத்திரியிடம் கூறுகிறார், “இந்த மூலகங்களிடமிருந்து (பூதங்கள் )ஒருவன் தோன்றுகிறான், பின்னர் அதற்குள்ளாகவே மறைந்துவிடுகிறான். மரணத்திற்கு பின்பு உணர்வு என்பது இல்லை “.

**தாந்திரீகம் என்பது மிகப்பழமையானது, வேதங்களை விட பழமையானது என்று வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

**மந்திரங்கள், சடங்குகளுடன் தாந்திரீகம் வைதீகமானதும், வேதபாரம்பரியத்திற்கு எதிரானதும் கூட. மனுவுக்கு உரையெழுதிய குலுக்கப்பட்டார் கூறியபடி சுருதிகள் இருவகையானவை. அவை வேதம், தாந்திரீகம் எனப்படும்.

**சாந்தோக்ய உபநிடதத்திலும், மைத்ரேயினி உபநிடதத்திலும், உலகாயதக் கருத்துகள் அசுரர்களுடையது என்கின்றன. அதனால் அசுரர்களிடையே ஒரு திட்டவட்டமான உலகத் தோற்றவியல் இருந்தது எனத்தெரிகிறது. இதிலிருந்து அசுரர்கள்தான் உலகயாதவாதிகள் எனத்தெரிகிறது.

**குணரத்ன, சாருவாகர்களைக் குறிப்பிடும்போது, அவர்கள் எல்லாவற்றையும் மறுப்பவர்கள், நன்மை தீமை பற்றி கவலைப்படாதவர்கள், கண்ணால் காண்பதைத்தவிர வேறு எதையும் நம்பாதவர்கள், மது மாமிசம் அருந்தி வரம்பற்ற உடலுறவு கொண்டவர்கள், சாதாரண மக்களைப்போல் நடந்து கொண்டதினால் உலகாயதர்கள் என்று அழைக்கப்பட்டனர் என்றுக் கூறுகிறார்.

**தாந்திரிக சடங்குகள் பஞ்ச மகரங்கள் என்றழைக்கப்பட்டது. அவை மது, மாமிசம், மைதுனம், முத்ரா (வருத்தப்பருப்பு ), மத்ஸ்ய (மீன் ).

**தாந்திரிகத்தை மதத்தின் எல்லைக்குள் கொண்டுவர, மதவழி ஆன்மீகமாக மற்ற இந்த நூல்களில் இடைவிடா முயற்சி செய்யப்பட்டு, இறுதியில் இரண்டாகப்பிரிந்தது. அவை பௌத்த தாந்திரீகம், இந்து தாந்திரீகம் ஆகும். இதிலிருந்து இந்து தாந்திரீகம் வைஷ்ணவ தாந்திரீகம், சாக்த தாந்திரீகம் என்று இரண்டாகப்பிரிந்தது.

**அஸ்ஸிரியாவிலிருந்து குடியேறியவர் அசுரர் என்று கருதுகிறார்கள். இவர்கள் ஆரியர்களுக்கு முன்பே இந்தியாவுக்கு வந்தவர்கள். பண்டைய கால பாரசீகர்களாகவும் இருக்கக்கூடும் என்றும் நம்பப்படுகிறது.

உண்மையில் யார் ஆரியர்கள்? | கருப்பு

**ஆரியர்கள் இந்தியாவிற்குள் நுழைவதை தடுத்தவர்களாக கூறப்படுகிறவர்கள், அசுரர், தைத்யர்கள், தானவர்கள், நாகர்கள் ஆகியோர்.

**பாகவதத்தில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது, “பகவானின் ஐந்தாவது அவதாரம் முனிவர்களில் முக்கியமானவரான கபிலர் என்பதாகும். அவர்தான் அசுரிக்கு சாங்கியத்தின் அடிப்படை விதிகளை கற்றுக்கொடுத்தார், காலப்போக்கில் இது சிதைந்து போனது “கபிலரை கடவுள் அவதாரமென்பது சற்று வேடிக்கையானதாகும், ஏனெனில் கபிலர் கடவுள் இல்லையென்று கூறியவர்.

**ஆரம்பத்தில் முழுதும் நாத்திக்கவாதமாகவும், பொருள் முதல்வாதமாகவும் இருந்த சாங்கியம், மெல்ல மெல்ல ஆன்மீகமயமாக்கபட்டு இறுதியில் மூல சாங்கியத்திற்கு நேர் எதிராக மாற்றப்பட்டது.

**உலகாயதர்களின் அடிப்படைக்கொள்கை வாமசாரமாகும். வாமா என்பது பெண்ணையும், காமத்தையும் குறிக்கும் சொல்லாகும். தாந்திரீகத்தில் உள்ள வாமசாரத்தில் நம் முன்னோர்கள் அதிக அக்கறை காட்டியதால், நிச்சியமாக அது கேவலமான, பிறழ்ந்த நடவடிக்கையாக இருந்திருக்க முடியாது.

**சாந்தோக்ய உபநிடதத்தில் வாமதேவிய சமன் என்னும் பகுதியில் ஆண் பெண் உறவு, வேத உச்சாடனத்தின் வெவ்வேறு கட்டங்களுடன் இணைத்துக்காட்டப்பட்டுள்ளது.

**வேதகால மக்கள் பழங்குடிகளிடமிருந்து நம்பிக்கைகளையும், கருத்துக்களையும் தாராளமாக கடன் வாங்கினர். இதனால் பழங்குடிகள் வேதக்கண்ணோட்டத்திற்குள் வந்தனர். இந்திய கலாச்சாரம் என்பது ஆரியம், அரியமல்லாதது ஆகியவற்றின் அற்புதமான இணைப்பைப் பிரதிபலிக்கிறது என்று கூறப்படுவதுண்டு.

**சதியை மறுத்து பெண்களும் ஆன்மீக குருவாகலாம் என்றும், அவளிடம் கற்பது அதிகப்பலனைத்தரும் என்றும் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்த நூல் “மகா நிர்வாண தந்திரம் “என்பதாகும்.

நண்பர்களே இந்நூல் ஏறக்குறைய 900பக்கங்கள் உடையது. நாலு பாகங்கள் கொண்டது. எட்டு இயல்கள் உள்ளன. நான் தற்போது தங்களுடன் முதல் இயலை மட்டுமே பகிர்ந்துள்ளேன். நிச்சியமாக இந்நூல் முழுக்க பதிவு செய்ய குறைந்தது எட்டு பதிவுகள் தேவைப்படும். நிறைய புதிய விஷயங்களை உள்ளடக்கி கொண்டுள்ளது இந்நூல். மொழி பெயர்ப்பு சற்று சிரமமாகத்தான் உள்ளது. ஆனால் கோசாம்பியின் பண்டைய இந்தியாவை விட வாசிக்க சிரமமில்லாமல்தான் உள்ளது. இது ஒரு NCBH வெளியீடு இந்த நூலிலுள்ள கருத்துகள் நிச்சியமாக ஆய்வு செய்ப்பவருக்கு உதவியாக இருக்கக்கூடும்.

உலகாயதம் | Buy Tamil & English Books Online | CommonFolks

நூல் =உலகாயதம்

ஆசிரியர் =தேவி பிரசாத் சட்டோபாத்யாய

தமிழில் ==தோத்தாத்ரி

வெளியீடு ==நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

விலை ==ரூ. 725/

நன்றி நண்பர்களே !

அன்புடன் – பெ. அந்தோணிராஜ்
தேனி.

Leave a Response

Top Reviews

Video Widget

gallery