Article

திருப்பூரில் தமிழறிஞர் மரணம் – டாக்.கி.நாச்சிமுத்து

Spread the love

திருப்பூரில் தமிழறிஞர் மரணம். புலவர் மணியன் தன் 84ம் வயதில் திருப்பூரில் மரணம்  அடைந்தார். புற்று நோயால் அவதிப்பட்டவருக்கு விடுதலை கொரானா காலத்தில் வாய்த்தது.

அரசு ஆதரவு கிடைக்காமல் நல்ல தமிழறிஞர்கள் திருமடங்களையும் புரவலர்களையும் நாடிச்சென்று தம்புலமையை வெளிப்படுத்த முயன்று உரிய சிறப்புக்களை தக்கநேரத்தில் பெறாமற்போன வரலாற்றிற்குச் சொந்தக்காரர் மணியனார் அவர்கள்.

சோழவள நாட்டில் பிறந்திருந்தாலும் கொங்குவள நாட்டைத் தன் தாயகமாகக் கொண்டு அவர் கொங்கு நாட்டில் விஜயமங்கலம் போன்ற இடங்களில் தமிழாசிரியராகப் பணியாற்றிப் பணி நிறைவில் அவர் கோவையில் குடிபுகுந்து ஆற்றிவந்த தமிழ்ப்பணிகளை நினைவு கூர்ந்து அவருக்குச் சிறப்புச் செய்வது கொங்கு மண்ணின் மாண்புக்குத்தக்கது

ஆய்வறிஞர் முனைவர் புலவர் மணியன் (1936-2020)

இரங்கற்குறிப்பு

            மூத்ததமிழ் ஆய்வறிஞர் முனைவர் புலவர்மணியன் அவர்கள் இன்று காலை 5 மணி அளவில் திருப்பூரில் தன் மூத்தமகள் வீட்டில் தம் 84 ஆம் வயதில் காலமானார் என்றதுன்பமான செய்தியை முனைவர்.கே.எஸ்.கமலேஸ்வரன் அவர்கள் மூலம் அறிந்து சொல்லொணாத் துன்பமுற்றோம் .அவர் அண்மைக்காலமாகப் புற்றுநோயால் துன்புற்றுவந்தார்.

தஞ்சை மாவட்டம் திருமயிலாடியில் மரபுவழித் தமிழ்ப்புலமைக் குடும்பத்தில் 29.04.1936 பிறந்த முனைவர் திருபுலவர்மணியன் அவர்கள் பெரும்புலவர் ச.தண்டபாணி தேசிகரிடம் தமிழ் கற்றபெருமையினர். அவருடன் இணைந்து அக்காலத்தியே சங்க இலக்கிய அகராதியை வெளியிட்டபுலமையாளர். அவர் தொடர்ந்து சிலம்புக்கும் மணிமேகலைக்கும் அத்தகைய கருவி நூல்சமைத்தவர்.

தொடர்ந்து அவர்கள் பேராசிரியர் வ.ஐ.சுப்பிரமணியனார் வழிகாட்டச் சங்க இலக்கிய வினைவடிவங்கள் என்ற அரிய அகராதித் தொகுப்பைச் செய்து சங்க இலக்கிய மொழிக்கு அரிய ஒரு கருவி நூலைப் படைத்துத் திருவனந்தபுரம் திராவிட மொழியியல் கழகம் வழி வெளியிட்டார். .தொடர்ந்து அவர் அருட்செல்வர் நா.மகாலிங்கம் ஆதரவில் தேவாரம் சொல்லகராதி, அருட்பா அகராதி திருமந்திர அகராதி ஒன்பதாம் திருமுறை அகராதி, பத்தாம் திருமுறை அகராதிஎன்று கருவி நூல் பணியில் முனைந்து செயல்பட்டுப் பல அரிய கருவி நூல்களை வழங்கியவர். அவர் அரிதின் முயன்று தொகுத்து வெளியிட்டுள்ள கொங்குவட்டாரச் சொல்லகராதி பற்றியும் இங்கு விதந்து குறிப்பிட வேண்டும். அதன் திருந்திய பதிப்பொன்றைத்தான் இறக்குந்தறுவாயிலும் கவனமுடன் வெளியிட்டதை நாம் மறக்க முடியாது. அவர் தயாரித்துள்ள பதினொராந் திருமுறை அகராதி அருட்செல்வர் மகனார் திரு.ம.மாணிக்கம் அவர்கள் ஆதரவில் அண்மையில் வெளியாகியிருக்கிறது. அவர் தமிழ்ப்பணிக்காக கற்பகம் பல்கலைக்கழகம் முனைவர் பட்டம் வழங்கிய சிறப்புடையவர். பல நல்ல ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் எழுதியவர் புலவர் மணியனார் அவர்கள். துணைவியை இழந்த முதுமைத் துன்பத்திலும் தமிழைத் துணையாகக் கொண்டு வாழ்ந்து வந்தார்.

வைணவ இலக்கிய மரபில் நாலாயிரம் முதலிய தோத்திரப் பாடல்களுக்கு உரை மரபு சைவத்தில் வேரூன்றவில்லை. எனினும் இருபதாம் நூற்றாண்டிற்குப் பின் இந்நிலை மாற்றமடைந்தது. திருவாசகம் போன்றவற்றை போப்போன்றவர்கள் மொழிபெயர்த்த பின் தமிழர்களும் உரைமுயற்சியில் இறங்கினர். பண்டிதமணி கதிரேசஞ் செட்டியார்திருவாசகமணி பாலசுப்பிரமணியன் போன்றோரைத் தொடர்ந்து இத்துறையில் முயல்பவர்களைக் காணலாம். அத்துடன் செங்கலவராய பிள்ளை அவர்களின் ஒளி நெறிவரிசை ஆழமான ஒருபுலமை மரபு சைவ இலக்கிய ஆராய்ச்சியிலும் வளர்ந்து வருவதைக் காட்டுகிறது.

அப்புலமை மரபின் கான்முளையாகத் தோன்றிப் பேரா.வ.ஐ.சுப்பிரமணியம் போன்றவர்கள் வழிப் புதுநெறிகளை ஏற்றுத் தமிழ்ப்புலமை மரபைச் செழுமைப்படுத்தியவர் புலவர் மணியன் என்ற மணியான புலவர் மணி அவர்கள். ஆராய்ச்சிக்கு உரிய அரிய கருவி நூல்களை உருவாக்குவது என்ற அடிப்படைத் தமிழாய் வைவளப்படுத்தியவர் அவர். நிறுவன ஆதரவு ,அரசு ஆதரவு கிடைக்காமல் நல்ல தமிழறிஞர்கள் திருமடங்களையும் புரவலர்களையும் நாடிச்சென்று தம் புலமையை வெளிப்படுத்த முயன்று உரிய சிறப்புக்களை தக்க நேரத்தில் பெறாமற்போன வரலாற்றிற்குச் சொந்தக்காரர் மணியனார் அவர்கள்.

சோழவள நாட்டில் பிறந்திருந்தாலும் கொங்குவள நாட்டைத் தன் தாயகமாகக் கொண்டு அவர் கொங்குநாட்டில் விஜயமங்கலம் போன்ற இடங்களில் தமிழாசிரியராகப் பணியாற்றிப் பணிநிறைவில் அவர் கோவையில் குடிபுகுந்து ஆற்றி வந்த தமிழ்ப்பணிகளை நினைவு கூர்ந்து அவருக்குச் சிறப்புச் செய்வது கொங்கு மண்ணின் மாண்புக்குத்தக்கது.

அவர் மறைவு தமிழாய்வுக்குப் பேரிழப்பு . அவரை இழந்து வாடும் அவர் குடும்பத்தார், நண்பர்கள் ஆய்வாளர்கள் முதலிய அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள். அவர் உயிர் இயற்கையின் கையில் அமைதியாக உறங்கட்டும்

 

1 Comment

  1. தமிழறிஞர் அவர்கள் ஆத்மா சாந்தியடைய அவர் விட்டுச் சென்ற தமிழ்ப் பணி மூலம் முயல்வோமாக.

Leave a Response

Top Reviews

Video Widget

gallery