Article

அஞ்சலி: நீதியரசர் ஹோஸ்பெட் சுரேஷ் – மனித உரிமைகள் காவலர் (தமிழில்: கமலாலயன்)

Spread the love

Justice Hosbet Suresh – A Champion of Human Rights    (1929-2020)     Front Line –June 12,2020

LYLA BAVADAM   

‘நீதியரசர்ஹோஸ்பெட்சுரேஷ்- மனிதஉரிமைகள்காவலர்’

                                                          லைலா பவதம்                                                           

தமிழில்: கமலாலயன்

நீதியரசர் ஹோஸ்பெட் சுரேஷ் (1929-2020) ஜுன் பதினோராம் தேதியன்று மறைந்தார்.மிக வலிமையான சட்டக்குரல் படைத்த,மனச்சான்றுள்ள ஒரு மனிதரை மனித உரிமைகள் இயக்கம் இழந்திருக்கிறது.

தீஸ்டா செடல்வாட் கூறுகிறார்: “அசாதாரணமான ஒரு மனித உயிர்…இந்தியாவின் சாதாரண மக்களுக்குக் கடமைப்பட்ட,அரசியலமைப்புச்சட்ட பூர்வமான அர்ப்பணிப்புணர்வே அவருடைய உயர்ந்தபட்ச,இறுதிவரை நிலைத்திருந்த அர்ப்பணிப்புணர்வாகும்.

பெருந்திரள் மக்களோடும்,அவர்தம் பிரச்சினைகளோடும் அவர் கொண்டிருந்த ஓர் ஆழமான இணைப்புக்கண்ணிதான் பணி ஓய்வுக்குப் பின்,அவரை மனித உரிமைகள் இயக்கப்பணிகளை நோக்கி ஈர்த்திருக்கக்கூடும்.பெரும்பான்மை மக்களின் பிரச்சினைகளைக் கையாளுவதில் அவர் பின்பற்றிய அணுகுமுறை,மனிதாபிமானமுள்ள,பாரபட்சமற்ற பொது உணர்வுநிலையைக் கொண்டதாக இருந்தது.

கர்நாடக மாநிலம்,ஹோஸ்பெட் நகரில் 1929-ஆம் ஆண்டு ஜுலை -20 அன்று பிறந்தவர் சுரேஷ்.மங்களூர் பல்கலைக் கழகத்தில் இளங்கலைப் பட்டப்படிப்பையும்,பெல்காம் விஸ்வேஸ்வரய்யா தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் முதுகலைப்பட்டப் படிப்பையும் நிறைவு செய்தார்.பின் பம்பாய்ப் பல்கலைக் கழகத்தில் சட்டக்கல்வி (LLM)பயின்று வழக்குரைஞராகப் பணியாற்றி வந்தார்.அப்போதே,மும்பையில் இருந்த கல்லூரியொன்றில் சட்டம் பயிற்றுவிக்கும் ஆசிரியராகப் பணியாற்றினார்.1968–ஆம் ஆண்டில் பம்பாய் சிட்டி சிவில் மற்றும் செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஒரு நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.ஒரு தலைமுறைக் காலம் கழித்து,அதே நீதி மன்றத்தில் இரண்டாவது கூடுதல் முதன்மை நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்றார்.1980-ஆம் ஆண்டு,மீண்டும் வழக்கறிஞராகப் பணியாற்ற முடிவு செய்து,அவ்வாறே பணியைத் தொடர்ந்தார்.ஆனால்,ஆறு வருடங்கள் கழித்து,பம்பாய் உயர்நீதி மன்றத்தின் கூடுதல் நீதிபதியாகப் பணியேற்றுக் கொண்டார்.1987-இல் அதே உயர்நீதி மன்றத்தின் நிரந்தர நீதிபதியாகப் பொறுப்பேற்றார்.பணியிலிருந்து 1991-ஆம் ஆண்டில் ஒய்வு பெற்றார்.

நீதியரசர் சுரேஷ் வழங்கிய தீர்ப்புகளுள் ஆகச்சிறப்பாகக் குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று- அவர் பணி ஒய்வு பெற்ற 1991-ஆம்ஆண்டில்,ஒரு சட்டமன்ற உறுப்பினர் தேர்தலில் அரசியல் காரணங்களுக்காக மதத்தைத் தவறாகப் பயன்படுத்தினார் என்ற அடிப்படையில் அவரைத் தகுதிநீக்கம் செய்து உத்தரவிட்டதுதான்.மும்பை கோரேகாவ்ன் தொகுதியில்,ஜனதா தளம் சார்பில் ஷரத்ராவும்,சிவசேனாவின் சார்பில் சுபாஷ் தேசாய் என்பவரும் போட்டியிட்டிருந் தனர்.சுபாஷ் தேசாயின் வெற்றியை எதிர்த்து ஷரத்ராவ் வழக்குத் தொடுத்தார்.நீதியரசர் சுரேஷ் அந்த வாதத்தை ஏற்றுக்கொண்டு,தனது தீர்ப்பில் பின்வருமாறு குறிப்பிட்டார்:

“வாக்காளர்களிடம் ஒருவர் தனது மதத்தின் அடிப்படையில் தனக்கு வாக்களிக்குமாறு வேண்டுகோள் விடுத்து பரப்புரை செய்வதன் மூலம்,அரசியலுக்குள் மதத்தை அந்தத் தருணத்திலேயே நுழைத்து விடுகிறார்.பெருந்திரளான மக்களிடையே அவர்களின் ஈடுபாட்டையும் கவலையையும் அரசியல் பெற்றிருக்கிறது.அத்தகைய அரசியலில் மேற்கண்ட வாறு ஒருவர் வாக்கு சேகரிக்கத் தொடங்கியது முதலே, அவருக்கு மாறான சமதையான பிற மத நம்பிக்கையாளர்களோடு அவர்களின் மனச்சான்று, மதம், நம்பிக்கைகள், உரிமைகள் முதலான எல்லாவற்றுடனும் முரண்மோதலுக்குக் காரணமாகி விடுகிறார்.ஆகவே,1951-ஆம் ஆண்டு இந்தியக் குற்றவியல் சட்டம் பிரிவு 123(3) அல்லது பிரிவு 123(3-A); (எனவே ஐபிசி பிரிவு 153-A யின்படியும்)ஆகியவற்றின்படி,அரசியலினூடாக மதத்தைப் பிரச்சாரம் செய்வது குற்றமாகிறது.”

ஆனால்,உண்மையில் பணி ஓய்வுக்குப் பின்தான் அவர் பிரகாசித்தார்.நாடு முழுவதிலும் இழைக்கப்பட்டு வந்த அநீதிகளைப் பற்றிய புலன்விசாரணை செய்யுமாறு அமைக்கப்பட்ட பல்வேறு விசாரணை ஆணையங்கள்,தீர்ப்பாயங்களில் பணியாற்ற தொடர்ந்து அவர் நியமிக்கப்பட்டு வந்திருக்கிறார்.மும்பையில் 1992,டிசம்பர் முதல் 1993 ஜனவரி வரையில் நடைபெற்ற கலவரங்களை விசாரணை செய்யுமாறு இந்திய மக்களின் மனித உரிமைகள் ஆணையம் இவரைக் கேட்டுக்கொண்டது.இது,இவர் பங்கேற்ற முதலாவது,குறிப்பிடத்தக்க புலன் விசாரணையாக அமைந்தது.இவ்விசாரணையில் கண்டறியப்பட்ட உண்மைகள்,  “மக்களின் தீர்ப்பு” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டன.இந்த அறிக்கை,போலீசாரையும், அரசாங்கத்தையும் கடுமையாகக் கண்டித்திருந்தது.இக்கலவரங்களை விசாரிப்பதற்கென அரசு நியமித்த நீதியரசர் ஸ்ரீகிருஷ்ணா ஆணையத்தின் முன்பு நீதிபதி சுரேஷ் நேரில் சென்று வாக்கு மூலம் அளித்தார்.

மூன்றாண்டுகள் கழிந்த பிறகு,சேரிவாழ் மக்களை வெளியேற்றிய நடவடிக்கையை விசாரிக்க வேண்டுமென இந்திய மக்களின் தீர்ப்பாயம் கேட்டுக் கொண்டதற்கிணங்க அதனை ஏற்று மற்றோர் அறிக்கையை எழுதினார். “குடிசைகளில் வாழ்வோரின் வீடுகள்,நடைபாதை களைக் குரூரமாக இடித்துத் தள்ளியது பற்றி இந்திய மக்களின் தீர்ப்பாயம் மேற்கொண்ட விசாரணை-வலுக்கட்டாயமான வெளியேற்றங்கள்” என்ற தலைப்பில் அமைந்த அந்த அறிக்கை,மும்பையில் சேரிவாழ் மக்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்ட குரூரமான,மனிதத் தன்மையற்ற அதிகார படைபலப் பிரயோகம் தொடர்பான விவரங்களை ஆவணப்படுத்தி யிருந்தது.

இதே போன்று,குஜராத்தில் கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்தை அடுத்து நடைபெற்ற கலவரங்கள் குறித்து விசாரணை செய்ய இந்திய மக்களின் தீர்ப்பாயம் நிறுவிய உண்மை யறியும் குழுவின் ஓர் உறுப்பினராக,மற்றோர் ஒய்வு பெற்ற நீதிபதி பி.பி.சாவந்த்துடன் இணைந்து சுரேஷ் பணியாற்றினார்.இக்குழுவுக்குத் தலைமை வகித்தவர் ஒய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதியரசர் வி.ஆர்.கிருஷ்ணய்யர்.குஜராத் மாநிலத்தின் மேனாள் உள்துறை அமைச்சர் ஹரேன் பாண்ட்யாஉண்மையறியும் குழுவிடம் வாக்குமூலம் தந்தார்.அதன்படி,அன்றைய முதல்வராக இருந்த நரேந்திரமோடி, கலவரங்களின் போது,போலீசாரை நடவடிக்கைகள் எவற்றையும் எடுக்க விடாமல் செயலற்றுப்போகச் செய்தார்.அதன்மூலம் கலவரக்காரர்கள் எவ்விதத் தடையுமின்றி பிரதானமாக முஸ்லிம் மக்களின் வீடுகள், கடைகளைக் கொளுத்துதல், கொள்ளையடித்தல், கொலை செய்தல், பெண்களை வன்புணர்ச்சிக்கு ஆளாக்குதல் போன்ற காரியங்களில் ஈடுபடுவதற்குச் சுதந்திரமாக அனுமதிக்கப்பட்டனர்.இவ்வாறான பல உண்மைகள் மேற்கண்ட உண்மையறியும் குழு அறிக்கையின் வழியே வெளிச்சத்துக்கு வந்தன.அடுத்த ஆண்டே ஹரேன் பாண்ட்யா கொலை செய்யப்பட்டார்.

இக்கலவரங்களுக்குப் பின்னர், “மானுடத்துக்கு எதிரான குற்றங்கள்,இனப்படுகொலைகள் தடுப்புச்சட்டம் -2004 ”என்ற உத்தேச சட்ட முன்வரைவு ஒன்றினை உருவாக்கித் தந்தவர்களுள் ஒருவராக நீதியரசர் சுரேஷ் இருந்தார்.இனப்படுகொலைக் குற்றங்களைத் தடை செய்தல், அவற்றில் ஈடுபடுவோரைத் தண்டித்தல் பற்றிய சர்வதேச மாநாட்டின்(1948)ஒப்பந்தக் கொள்கைகள் அடிப்படையில் உத்தேசிக்கப்பட்ட ஒரு சட்ட முன்வரைவு இது.இந்த ஒப்பந்தத்தில் ஒப்புகையளித்த நாடுகளுள் இந்தியாவும் ஒன்று.குடிமக்களுள் எந்த ஒரு குழுவினருக்கும் எதிராக இழைக்கப்படும் பெருந்திரள் வன்முறைக் குற்றங்களைக் கட்டுப் படுத்தத் தவறும் பட்சத்தில்,அவ்வாறு தவறிழைக்கும் அமைச்சர்களுக்கும்,அதிகாரிகளுக்கும் அவர்களே அக்குற்றங்களுக்குப் பொறுப்பு என குற்றவியல்ரீதியாகத் தீர்மானித்து தண்டனைகள் வழங்க அச்சட்டம் வகை செய்ய முற்பட்டது.

பின்வரும் முக்கியமான பல பிரச்சினைகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணை களிலும் நீதியரசர் சுரேஷ் பங்களித்து வந்திருக்கிறார்: பொது விநியோகத் திட்ட அமைப்பின் செயல்பாடுகள்,காஷ்மீர்ப் பள்ளத்தாக்கில் மனித உரிமைகள் மீறல்,காவிரி நதி நீர்த் தகராறு, கிழக்குக் கடற்கரை நெடுகப் பரவி வந்த இறால் பண்ணைகளின் நாசகரமான விளைவுகள் (இந்த விசாரணையின் விளைவாக,இறால் பண்ணை வளர்ப்பை உச்சநீதிமன்றம் முழுமை யாகத் தடை செய்தது),மத்தியப் பிரதேசம் தேவாஸ் என்ற ஊரில் பழங்குடி மக்கள் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டது பற்றிய விசாரணை; இவை எல்லாவற்றுடன்,மியான்மர் நாடு இராணுவ ஆட்சியின் கீழ் இருந்த போது,அங்கு ஏற்பட்ட உணவுப் பற்றாக்குறை பற்றிய சர்வ தேசத் தீர்ப்பாய விசாரணையிலுங் கூட நீதிபதி சுரேஷ் பங்களித்திருக்கிறார்.

நீதித்துறையின் போதாமைகள் பற்றி ஒரு முதன்மையான விமர்சகராகவும் அவர் இருந்தார். செய்தியாளர்களிடம் நீதியமைப்பைப் பற்றி வெளிப்படையாக விமரிசனம் செய்யுமாறு அடிக்கடி கூறுவதுண்டு;அதே சமயம்,அவ்வாறு விமர்சிக்கையில் மரியாதை குறையாமலும், தொடர்புடைய அனைத்து உண்மைகளையும் சரிபார்த்து அறிந்துகொண்ட பின்னும்தான் செய்ய வேண்டும் எனவும் வழிகாட்டியவர்.குஜராத் கலவரங்களுக்குப் பின்பு மிகவும் தொந்தரவுக்கு உள்ளானார் அவர்.அந்த நிகழ்வுகளை,”அது ஓர் இனப்படுகொலை” என்று வெளிப்படையாக வலிமிகுந்த தொனியில் விமர்சித்தார்.ஆனால்,அந்த விஷயத்தில் நீதி பெறப்படாதது அவரைத் துயருக்குள்ளாக்கி விட்டது.அதே போன்று,இந்திராகாந்தி படுகொலை செய்யப்பட்ட போது டெல்லியில் சீக்கியர்களுக்கு எதிராக 1984-இல் நடைபெற்ற கலவரங்களையும் ‘இனப்படுகொலைகள்’என்றே குறிப்பிட்டார்.இந்த நிகழ்வின்போதும் நீதி வழங்குவது தாமதிக்கப்பட்டதற்காக மீண்டும் தனது துயரத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

தீஸ்டா செடல்வாட்,பின்வருமாறு கூறுவதற்கு மேலே கண்டவை போன்ற எடுத்துக் காட்டுகள்தாம் இட்டுச் சென்றன எனலாம்: “அவர் பணி ஒய்வு பெற்ற நாள் முதலே,ஆயிரக் கணக்கான மனித உரிமை ஆர்வலர்களுக்கு வழிகாட்டியாக விளங்கி உத்வேகமூட்டி வந்திருக்கிறார்.நாடு முழுவதிலுமுள்ள நீதிபதிகளுக்கும் அவர் இவ்விஷயத்தில் உற்சாகம் அளித்து வந்திருக்கிறார்.”

நீதியரசர் சுரேஷின் அறுபதாண்டு காலப் பொது வாழ்க்கையில்,கொடூரமான அடக்குமுறை சட்டங்கள்,அரசு ஒடுக்குமுறைகள்,நீதித்துறை ஊழல்கள் ஆகியனவற்றுக்கு எதிராகவே எப்போதும் குரல் எழுப்பி வந்திருக்கிறார்.அவருடைய வாழ்க்கை,மிகச்சிறப்பாக வழி நடத்தப் பட்டு வந்த ஒன்று எனப் பலரும் கூறுவர்;நீதியரசர் சுரேஷ் அவருக்கே உரித்தான அமைதி யான வழிகளால் நன்கறியப்பட்டிருந்தவர். “எனது மனச்சான்றுதான் என்னை வழிநடத்தி வந்தது” என அவர் கூறக்கூடும்.

மும்பை,அந்தேரியிலுள்ள அவரது இல்லத்தில் மிக அமைதியான முறையில் சுரேஷின் மறைவு நிகழ்ந்த போது அவருக்கு வயது –91. அன்புக்குரிய அவரது மகள்கள் அப்போது அவரருகே இருந்தனர்.

 

Leave a Response

Top Reviews

Video Widget

gallery