Story

மொழிபெயர்ப்பு சிறுகதை: க்ரிஷா – செகாவ் (தமிழில் – ச.சுப்பாராவ்)

Spread the love

 

இரண்டு வருடங்கள், எட்டு மாதங்களுக்கு முன் பிறந்தவனான க்ரிஷா என்ற கொழுகொழு குட்டிப்பையன் தனது ஆயாவுடன் இரண்டு பக்கங்களிலும் மரங்கள் அடர்ந்த பெருஞ்சாலையில் நடந்து போய்க் கொண்டிருந்தான். அவன் நீண்டு, கணுக்கால் வரை தொங்கும், பெண்கள் அணியம் பெலிஸ் என்ற ஆடையை அணிந்திருந்தான். ஸ்கார்ஃப் போர்த்தி தலையில் புசுபுசுவென்று குஞ்சம் வைத்த தொப்பி அணிந்திருந்தான். காலில் கதகதப்பான பூட்ஸ். அவனுக்கு மிகவும் வெக்கையாக, மூச்சுத் திணறுவது போல் இருந்தது. குதியாட்டம் போடும் ஏப்ரல் மாதத்து சூரியன் முகத்தில் அடித்து, கண்கள் கூசச் செய்தது.

அவனது பயந்த, தத்தக்கா புத்தக்கா என்ற தீர்மானமற்ற நடை அவன் மிகவும் திகைப்படைந்திருப்பதைக் காட்டியது.

இதுவரை க்ரிஷா ஒரு செவ்வகமான உலகை மட்டுமே அறிந்திருந்தான். அதன் ஒரு மூலையில் அவனது கட்டில். மற்ற மூலையில் ஆயாவின் டிரங்குப் பெட்டி. மூன்றாவது மூலையில் ஒரு நாற்காலி. நான்காவது மூலையில் எரிந்து கொண்டிருக்கும் ஒரு விளக்கு. கட்டிலுக்கு அடியில் பார்த்தால் கையொடிந்த ஒரு பொம்மையும், ஒரு சிறிய மத்தளமும் இருக்கும். ஆயாவின் டிரங்கிற்குப் பின்னால் பஞ்சுச் சிட்டங்கள், மூடியில்லாத டப்பாக்கள் என்று கண்ட கண்ட சாமான்கள் நிறைய இருக்கும். அந்த உலகில் க்ரிஷா, ஆயா தவிர அம்மாவும், ஒரு பூனையும் அடிக்கடி வருவார்கள். அம்மா பொம்மை போல் இருப்பாள். பூனைக்குட்டி அப்பாவின் மென்மயிர் கோட்டுப் போல இருக்கும். என்ன, அந்தக் கோட்டுக்கு கண்களும், வாலும் இருக்காது. பாப்பா அறை என்றழைக்கப்படும் அந்த உலகத்திலிருந்து ஒரு கதவு வழியாக அவர்கள் உணவு, தேனீர் சாப்பிடும் பெரிய இடத்திற்குப் போகலாம். அங்கே உயரமான கால்கள் வைத்த க்ரிஷாவின் நாற்காலி இருக்கும். தன் பொண்டுலத்தை ஆட்டியபடி, ஓசை எழுப்புவதற்காக ஒரு கடிகாரம் சுவரில் இருக்கும். அந்த சாப்பாட்டு அறையிலிருந்து சிவப்பு நிற கை வைத்த நாற்காலிகள் உள்ள ஒரு அறைக்குச் செல்லலாம். அங்கு விரிக்கப்பட்டுள்ள கம்பளத்தில் உள்ள பெரிய கறைக்காக, இப்போதும் க்ரிஷாவை விரலை நீட்டியபடி அதட்டுகிறார்கள். அந்த அறைக்கு அடுத்தாற்போல், இன்னொரு அறையும் உண்டு. அங்கு யாருக்கும் அனுமதியில்லை. அங்கே அப்பா இருப்பது லேசாகத் தெரியும். அப்பா என்ற புரிந்து கொள்ள முடியாத மனிதர்! ஆயாவையும், அம்மாவையும் புரிந்து கொள்ள முடியும். அவர்கள் க்ரிஷாவிற்கு உடை அணிவித்து விடுவார்கள். உணவை ஊட்டி விடுவார்கள். தூங்க வைப்பார்கள். ஆனால் இந்த அப்பா எதற்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை. புரிந்து கொள்ள முடியாத மற்றொரு ஆளும் உண்டு. அது அத்தை. அவள்தான் க்ரிஷாவிற்கு மத்தளம் வாங்கித் தந்தாள். அவள் திடீரென்று வருவாள். திடீரென்று காணாமல் போய்விடுவாள். எங்கு காணாமல் போகிறாள்? க்ரிஷா பலமுறை கட்டிலுக்கு அடியில், டிரங்குப் பெட்டிக்குப் பின்னால், சோபாவிற்கு அடியில் என்று தேடிப் பார்த்திருக்கிறான். அவள் அங்கெல்லாம் இல்லை.

சூரிய ஒளி கண்ணைத் தாக்கும் இந்தப் புதிய உலகில், நிறைய அப்பாக்கள், அம்மாக்கள், அத்தைகள் இருக்கிறார்கள். யாரை ஓடிப்போய் கட்டிக் கொள்ளலாம் என்று தெரியவில்லை. ஆனால் எல்லாவற்றையும் விட வினோதமாக, அபத்தமாக இருந்தது குதிரைகள்தான். க்ரிஷா நகரும் அவற்றின் கால்களை வெறித்துப் பார்த்தான். ஒன்றும் புரியவில்லை. இந்தப் புதிரை விடுவிப்பதற்காக ஆயாவின் முகத்தைப் பார்க்கிறான். ஆனால் அவள் பேசவில்லை.

திடீரென்று அச்சமூட்டும் காலடியோசைகளை அவன் கேட்டான்…. சிவந்த முகம் கொண்ட, தேய்த்துக் குளிப்பதற்காகப் பயன்படுத்தும் மூலிகை இலைக் கட்டுகளை கையில் வைத்துக் கொண்டு, போர்வீர்ர்கள் அந்த சாலையில் அவனை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள். க்ரிஷா பயத்தில் நடுங்கினான். இது ஏதேனும் ஆபத்தா என்று அறிய ஆயாவைப் பார்த்தான். ஆனால் ஆயா அழவில்லை, ஓடவும் இல்லை என்பதால், இது ஒன்றும் ஆபத்தில்லை என்று தெரிந்தது. அவனும் அந்த வீரர்கள் போல் நடக்க ஆரம்பித்தான்.

Grisha and Other Short Stories eBook by Anton Chekhov ...

மகிழ்ச்சியற்ற முகத்தோடு, நாக்கை தொங்கவிட்டுக் கொண்டு, வால்களை காற்றில் உயர்த்தி வைத்தபடி இரண்டு பெரிய பூனைகள் ஒன்றையொன்று துரத்தியபடி ஓடின. க்ரிஷா தானும் அந்தப் பூனைகளின் பின் ஓட நினைக்கிறான்.

‘நில்!‘ என்று கத்தினாள் ஆயா, அவனது தோளை முரட்டுத்தனமாகப் பிடித்து. ‘எங்க ஓடற? சேட்டை பண்ணக் கூடாதுன்னு சொல்லி இருக்கேன் இல்ல?‘

இங்கு ஒர் ஆயா ஒர் தட்டில் ஆரஞ்சுப் பழங்களை வைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள். க்ரிஷா அவளைத் தாண்டிச் செல்லும் போது, எதுவும் சொல்லாமல், ஓர் ஆரஞ்சை எடுத்தான்.

‘இதை எதுக்கு எடுக்கற?‘ என்று அவனது வழித்துணை அவன் கையைத் தட்டி, பழத்தைப் பிடுங்கினாள். ‘லூசு!‘

இப்போது தன் காலடியில் விளக்கு பொல் ஒளி வீசும் ஒரு கண்ணாடித் துண்டை எடுக்க வேண்டும் என்று க்ரிஷாவிற்கு ஆசையாக இருக்கிறது. ஆனால் ஆயா திரும்பவும் தன் கையைத் தட்டிவிடுவாள் என்ற பயம்.

‘உன்னை வணங்குகிறேன்!‘ க்ரிஷாவின் தலைக்கு மேலே ஒரு கனமான, எரத்த குரல் திடீரென்று கேட்க, அவன் நிமிர்ந்து பார்த்தால் பளபளக்கும் பித்தான்கள் அணிந்த உயரமான ஒருவன் நிற்கிறான்.

அவனுக்கு பெருமகிழ்ச்சி ஏற்படும் விதமாக, அவன் ஆயாவின் கையைப் பிடித்துக் கொண்டான். இருவரும் நின்று பேசுகிறார்கள். சூரியனின் ஒளி, வண்டிகளின் இரைச்சல், குதிரைகள், அந்த பளபளப்பான பித்தான்கள் எல்லமே கவர்ந்திழுக்கும் வகையில் புதியதாக இருக்கின்றன. ஆனால் அச்சமூட்டுவதாக இல்லை. க்ரிஷாவின் மனம் சந்தோஷ உணர்வால் நிறைய, அவன் சிரிக்க ஆரம்பித்தான்.

‘வா! வா!‘ என்று அவன் அந்த பளபளா பித்தான்காரனின் கோட்டைப் பிடித்து இழுக்கிறான்.

‘எங்க வரணும்?‘ என்கிறான் அவன்.

‘என்னோட வா!‘ என்று பிடிவாதம் செய்கிறான் க்ரிஷா.

பளாபளா பித்தான்காரனோடு சேர்த்து அம்மா, அப்பா, பூனை என்று எல்லோரையும் எங்கோ அழைத்துச் செல்ல ஆசையாக இருக்கிறது. ஆனால் அதைச் சொல்லத் தெரியவில்லை.

Dissecting Chekhov – Russian Life

சிறிகு நேரத்தில், ஆயா அந்த சாலையிலிருந்து திரும்பி, அவனை ஒரு பெரிய முற்றத்திற்கு அழைத்துச் சென்றாள். அங்கு இப்போதும் பனியாக இருக்கிறது. பளபளா பித்தான்காரனும் அவர்களோடு வந்திருந்தான். அவர்கள் கவனமாக பனி, தேங்கிய தண்ணீர் ஆகியவற்றைத் தவிர்த்து, இருண்ட, அழுக்கான மாடிப்படிகள் ஏறி ஒரு அறைக்குள் சென்றார்கள். அங்கு ஒரே புகைமயமாக இருந்தது. வறுத்த இறைச்சியின் நறுமணம். அடுப்பருகே ஒரு பெண் கட்லெட்களைப் பொறித்துக் கொண்டிருந்தாள். அந்த சமையல்காரியும், ஆயாவும் ஒருவரையொருவர் முத்தமிட்டுக் கொண்டார்கள். பிறகு தணிந்த குரலில் பேச ஆரம்பித்தார்கள். ஸ்கார்ஃபால் போர்த்தப்பட்ட க்ரிஷாவிற்கு வெக்கையால் மூச்சுத் திணறியது.

தன்னையே பார்த்துக் கொண்டு, ‘இது ஏன் இப்படி?‘ என்று வியந்தான்.

சமையல்காரி மேஜையில் ஒரு பாட்டில், இரண்டு மதுக்கோப்பைகள், ஓர் அப்பம் ஆகியவற்றை எடுத்து வைத்தாள். இரு பெண்களும், அந்த ஆளும் தத்தமது கோப்பைகளை உரசிவிட்டு, பல முறை குடித்தார்கள். அந்த ஆள் முதலில் சமையல்காரியை அணைத்துக் கொண்டான். பிறகு ஆயாவை. பின்னர் மூவரும் தணிந்த குரலில் பாட ஆரம்பித்தார்கள்.

க்ரிஷா அப்பத்தை நோக்கி கையை நீட்ட. அவனுக்கு ஒரு துண்டு அப்பம் தந்தார்கள். அதைத் தின்றுவிட்டு, ஆயா குடிப்பதைப் பார்த்தான்… அவனுக்கும் குடிப்பதற்கு வேண்டும்.

‘ஆயா, எனக்குக் கொஞ்சம்!‘ என்று கெஞ்சினான்.

சமையல்காரி தன் கோப்பையிலிருந்து அவனுக்கு ஒரு வாய் குடிக்கத் தந்தாள். அவன் கண்களை உருட்டி, முழித்து, இருமினான். அதன் பிறகு நீண்ட நேரம் தன் கைகளை ஆட்டிக் கொண்டே இருந்தான். சமையல்காரி அவனைப் பார்த்துச் சிரித்தாள்.

வீட்டுக்குப் போனவுடன் க்ரிஷா அம்மாவிடம், சுவரிடம், தன் கட்டிலிடம் தான் போன இடங்கள், பார்த்த விஷயங்கள் பற்றிச் சொல்ல ஆரம்பித்தான். அவன் நாக்கால் அதிகம் பேசுவதில்லை. கை, முகபாவங்களை வைத்துப் பேசினான். சூரியன் எப்படி ஒளிர்ந்தது என்று காட்டினான். குதிரை எப்படி ஓடியது என்று காட்டினான். அந்த அடுப்பு எப்படி பயங்கரமாக இருந்தது, அந்த சமையல்காரி எப்படிக் குடித்தாள் என்றெல்லாம் காட்டினான்…..

ச.சுப்பாராவ்

இரவு தூக்கம் வ்ரவில்லை. மூலிகைச் செடி கட்டுக்களோடு வந்த வீரர்கள், அந்தப் பெரிய பூனைகள், அந்தக் கண்ணாடித் துண்டு, அந்த ஆரஞ்சுகள் இருந்த தட்டு, அந்த பளபளக்கும் பித்தான்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து அவனது மனதை அழுத்தின. ஏதோ உளறியபடி அவன் மாறிமாறிப் புரண்டான்.. கடைசியில் தனது பரபரப்பைத் தாங்க முடியாமல் அழ ஆரம்பித்தான்.

‘உனக்கு காய்ச்சல் போலிருக்கு,‘ என்றாள் அம்மா, அவன் நெற்றியில் கை வைத்துப் பார்த்து. ‘எதனால் வந்திருக்கும்?‘

‘அடுப்பு,‘ என்று அலறினான் க்ரிஷா. ‘அடுப்பே, போ!‘

‘ஏதோ கன்னாபின்னாவென்று சாப்பிட்டிருக்கிறான் போல…… ‘ என்று முடிவு செய்தாள் அம்மா.

அதனால், தான் அனுபவித்த புதிய வாழ்வின் காட்சிகளால், சிதறடிக்கப்பட்டிருந்த க்ரிஷாவிற்கு அம்மாவிடமிருந்து ஒரு கரண்டி நிறைய விளக்கெண்ணெய் கிடைத்தது!.

2 Comments

  1. குழந்தை க்ரிஷாவின் வார்த்தைகளில் எழுதப்பட்ட கதை மிகவும் அழகாக இருக்கிறது. Superb. Want to go back to those days.

Leave a Response

Top Reviews

Video Widget

gallery