Book Review

டோட்டோ-சான் (ஜன்னலில் ஒரு சிறுமி) வானுயர்ந்த கட்டடங்கள் அல்ல ஒரு பள்ளியின் பெருமை என்பதை  உணர்த்தும் நூல்..! – பெ.விஜயகுமார்.   

Spread the love

 

இன்றைய இந்திய கல்விச் சூழலில் ஆசிரியர்கள், பெற்றோர்கள், குழந்தைகள், கல்வியாளர்கள், கல்வித்துறை அதிகாரிகள், பள்ளி நிர்வாகிகள், கல்வியில் அக்கறையுள்ள அனைவரும் கட்டாயம் படித்திட வேண்டிய புத்தகம் ’டோட்டோ-சான்’. டோக்கியோ நகரிலிருந்த ’டோமோயி’ என்ற பள்ளியைப் பற்றி அதன் பழைய மாணவி டெட்சுகோ குரோயாநாகி உருக்கமாக எழுதியுள்ள இந்நூல் படிப்பவரை வியப்பின் விளிம்பிற்கு எடுத்துச் செல்கிறது. எந்தவொரு மாணவருக்கும் தான் படித்த பள்ளியின் மீது அலாதியான பற்றும், பெருமையும் இருப்பது இயல்பே. ஆனால் டெட்சுகோ தான் படித்த பள்ளியை உணர்ச்சிப் பூர்வமாகச் சித்தரித்து வாசகர்களைப் பரவசப்படுத்துகிறார். ஒரு பள்ளியின் பெருமை அதன் வானுயர்ந்த கட்டடங்களும், பரந்து விரிந்த வளாகமும் அல்ல; அது கடைப்பிடிக்கும் கற்றல், கற்பித்தல் வழிமுறைகளே என்று அறைந்து சொல்கிறது இந்நூல். குழந்தைகளை மையப்படுத்திய கல்வி முறையே சிறந்த கல்வி முறையாக இருக்க முடியும் என்ற கல்வியாளர்களின் கூற்றினை உறுதிப்படுத்துகிறது இந்நூல். குழந்தைகளின் சுயமரியாதையையும், தனித்தன்மையையும் வளர்ப்பதே பள்ளிகளின் நோக்கமாக இருந்திட வேண்டும் என்பதை உலகுக்கு உணர்த்துகிறது. கற்பதில் மகிழ்ச்சி, சுதந்திரம், அன்பு ஆகியன இருந்திட வேண்டும் என்ற லட்சியத்துடன் செயல்பட்ட இப்பள்ளி அற்ப ஆயுளில் முடிந்தது அவலமே. இரண்டாம் உலகப்போர் இழைத்த பேரழிவுகளில் டோமோயி பள்ளியும் ஒன்று என்றறியும்போது நம் மனம் பதறுகிறது. 1945இல் ஜப்பான் – அமெரிக்காவிடையே நடந்த யுத்தத்தில், குண்டு மழை பொழிந்த ஓரிரவில் இப்பள்ளி குண்டுகளுக்கு இரையாகியது.

டோக்கியோ நகரில் 1937இல் கோபயாஷி என்ற கல்வியாளர் நிறுவிய வழக்கத்துக்கு மாறான இப்பள்ளியில் பழைய ரெயில் பெட்டிகளே வகுப்பறைகளாக இருந்தன. இதன் பழைய மாணவி டெட்சுகோ குரோயாநாகி தன்னுடைய பள்ளி பற்றிய நினைவுகளை முதலில் தொடர் கட்டுரைகளாகவும் பின்னர் 1982இல் ’டோட்டோ-சான்’ என்ற நூல் வடிவிலும் வெளியிட்டார். ஜப்பானிய மொழியில் வெளியான இந்நூல் ஒரே ஆண்டில் நாலரைக் கோடி பிரதிகள் விற்று சாதனை படைத்தது. டோரத்தி பிரிட்டன் என்ற பெண்மணி நூலை முதலில் ஆங்கிலத்தில் வெளியிட இன்று உலகத்தின் பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ’டோட்டோ-சான், ஜன்னலில் ஒரு சிறுமி’ என்ற பெயரில் தமிழில் வள்ளிநாயகம் மற்றும் பிரபாகர் இருவரும் இணைந்து இந்நூலினை பாங்குடன் மொழிபெயர்த்துள்ளனர்.

டோட்டோ-சான்

இப்பள்ளியின் நிறுவனர் மற்றும் தலைமை ஆசிரியர் கோபயாஷி அவர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட டோட்டோ-சான் எனும் சிறுமி பின்னாட்களில் ஜப்பான் தொலைக்காட்சி நிறுவனத்தில் அரிய சாதனைகள் புரிந்த டெட்சுகோ குரோயாநாகியாகப் பரிணமிக்கிறார். சிறந்த தொலைக்காட்சிப் பணிக்கான பரிசு பெறுகிறார். ஜப்பானின் தொலைக்காட்சியில் தோன்றும் சிறந்த நபராகத் தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். ‘டெட்சுகோ அரங்கம்’ என்ற பெயரில் இவர் வழங்கிய நிகழ்ச்சி ஜப்பான் தொலைக்காட்சியில் அதிகம் பேர் கண்டுகளித்த தொடராகும். டோட்டா-சான் முதலில் சேரும் பள்ளியில் குறும்புக்காரி என்று முத்திரை குத்தப்பெற்று வெளியேற்றப்படுகிறாள். வகுப்பு நேரத்தில் பாடத்தைக் கவனிக்காமல் தெருவிசைப் பாடகர்களின் பாட்டினைக் கேட்பதற்காக ஜன்னலில் நிற்கும் ஒரு சிறுமி என்று சொல்லி; அவளை சமாளிக்க முடியாமல் வெளியே அனுப்புகின்றனர். டோமோயி பள்ளியில் அவளைச் சேர்த்திட பதற்றத்துடன் அவள் தாய் வருகிறாள். டோட்டோ-சான் பேசுவதைத் தலைமை ஆசிரியர் நான்கு மணி நேரம் கேட்டு மகிழ்கிறார். அவளை அன்புடன் அந்தப் பள்ளி அரவணைத்துக் கொள்கிறது. அன்று தொடங்கும் டோட்டோ-சானின் பள்ளி வாழ்க்கை வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத இனிய அனுபவங்களாக அமைகின்றன.

கோபயாஷி ஐரோப்பிய நாடுகள் சென்று கல்வியியல் கோட்பாடுகளை அறிந்து வந்தவர். அதிலும் குறிப்பாக எமிலி ஜாக்ஸ்சுடனும், பாரிசில் டல்குரோசுடனும் இசை, உடலிசைப் பயிற்சியைக் கற்றுக்கொண்டார். கோபயாஷி எப்போதும் தன் சக ஆசிரியர்களிடம் “ஏற்கனவே முடிவு செய்த வார்ப்புகளில் குழந்தைகளைப் பொருத்தாதீர்கள். இயற்கையாக அவர்களை வளர விட்டுவிடுங்கள். அவர்களின் கனவுகள் உங்களுடையவைகளை விடப் பெரியவைகளாக இருக்கலாம்” எனக் கூறுவார். ரெயில் பெட்டி வகுப்பறையில் குழந்தைகள் தாங்கள் விரும்பும் இடத்தில் உட்கார்ந்திடலாம். வட்டவடிவிலான வகுப்பறையில் முன் வரிசை பின் வரிசை என்பதற்கே இடமில்லை. மதிய உணவிற்கான நேரம் மிக அதிகமாக ஒதுக்கப்பட்டது. குழந்தைகள் சத்துமிகு உணவு உண்பதற்கு கோபயாஷி கடைப்பிடித்த உத்தி விநோதமானது. தினமும் குழந்தைகள் கடலிலிருந்து கொஞ்சம், மலையிலிருந்து கொஞ்சம் உணவு கொண்டுவர வேண்டும் என்று சொல்வார். மீன், காய்கறி இரண்டும் கலந்த உணவு அவர்களின் உடல் வளர்ச்சிக்கும், மன வளர்ச்சிக்கும் ஏதுவாக இருக்கும் என்று நம்பினார். கோபயாஷி பள்ளி வளாகத்துக்குள் தங்கியிருந்தது குழந்தைகளுக்கு அவரின் உதவியும், ஆலோசனையும் எந்த நேரமும் கிடைத்திட ஏதுவாக இருந்தது. ஒவ்வொரு நாளும் கோபயாஷியின் மனைவி மதிய உணவு நேரத்தில் தட்டு நிறைய மீன் மற்றும் காய்கறிகளில் செய்த உணவினைக் கொண்டுவருவார்.

டோட்டோ-சான்

எந்தக் குழந்தைக்கு எது தேவையோ அதனைக் கொடுத்து சாப்பாட்டை நிறைவுசெய்வார். குழந்தைகள் மெதுவாக உண்ணவேண்டும் என்பதற்காக ஆங்கில நர்சரி பாட்டு மெட்டில் (Row, row row your boat) ஒரு பாட்டை பாடச் சொல்வார். ”மெல்லு, மெல்லு, அதை நன்றாக மெல்லு/ நீ உண்ணும் எல்லாவற்றையும் மெல்லு/ மெல்லு அதை மெல்லு அதை மெல்லு/ உனது சோறு, மீன், இறைச்சி எல்லாவற்றையும் மெல்லு” என்ற பாடலுடன் மதிய உணவு தொடங்கும். வகுப்புகள் காலையுடன் முடிந்துவிடும். மதியம் அனைத்து வகுப்புக் குழந்தைகளும் பள்ளி வளாகத்தையும், வளாகத்தைத் தாண்டியும் சுற்றிவருவார்கள். இசை, இயற்கை இவைகளுடன் இணைந்த கல்வியே சிறந்த கல்வியாக இருக்க முடியும் என்பதில் கோபயாஷி அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்தார். சுதந்திரமாகவும், விளையாட்டாகவும் உணர்ந்த இந்த நடைதான் உண்மையிலேயே அறிவியல், வரலாறு, புவியியல், சமூகம் என அனைத்துப் பாடங்களும் கற்றிட உகந்தது என்பதை டோமோயி பள்ளி வலியுறுத்தியது. ஆறு ரெயில் பெட்டிகள் கொண்ட அந்தப் பள்ளிக்கு ஏழாவது ரெயில் பெட்டி வந்தது. இரவு வந்து சேரும் அந்தப் பெட்டியைப் பார்த்து மகிழ்ந்திட குழந்தைகள் எல்லாம் அன்றிரவு பள்ளியிலேயே தங்கினர். குழந்தைகளுக்கு பள்ளியில் இரவைக் கழித்த அந்த அனுபவம் அலாதியானது. புதிதாக வந்த ரெயில் பெட்டி பள்ளியின் நூலகமாக மாற்றப்பட்டது. ரெயில் பெட்டிக்குள் உட்கார்ந்து புத்தகம் படிப்பதை குழந்தைகள் மிகவும் விரும்பினர்.

வகுப்பறைகளான ரெயில் பெட்டிகள் தவிர டோமோயி பள்ளியில் ஒரு பெரிய கூட்ட அரங்கம், தலைமை ஆசிரியருக்கான அறை, தலைமை ஆசிரியரின் வீடும் தனிக் கட்டிடங்களாக இருந்தன.  யூரித்மிக்ஸ் எனும் இசைப்பயிற்சிக்கு கூட்ட அரங்கு பயன்பட்டது. டோட்டோ-சான் இசடோரா டங்கன் மாதிரியே குதித்தும், ஓடியும் ஆடுவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தாள். கோபயாஷி பள்ளிக்கு குழந்தைகள் எளிமையான ஆடையுடன் வரவேண்டும் என்பதையே விரும்புவார். அப்போதுதான் குழந்தைகள் விளையாடும்போது ஆடை அழுக்குப்பட்டுவிடும் அல்லது கிழிந்துவிடும் என்ற பயமின்றி முழுமனதுடன் விளையாடுவார்கள் என்பார். குழந்தைகளுக்கு ஆடைகள் குறித்து அதிதமான ஈர்ப்பு இல்லாமல் இருப்பது நல்லது என்றும் எண்ணினார். வெறும் ஐம்பது மாணவர்கள் மட்டுமே இருந்த பள்ளியில் இரு மாற்றுத் திறனாளி மாணவர்கள் இருந்தனர். இவர்கள் நலனில் கோபயாஷி அதிக அக்கறை எடுத்துக்கொள்வார். விளையாட்டு விழாவில் தாகாஹாஷி என்ற குட்டையான மாணவன் வெற்றி பெறும் வண்ணம் ஏதேனும் ஒரு எளிமையான போட்டி சேர்க்கப்பட்டிருக்கும். குழந்தைகள் பேய், பிசாசு என்ற பயத்திலிருந்து விடுபட ஓரிரவு விஷேச விளையாட்டு உண்டு.

Totto Chan -டோட்டோ சான் – சன்னலின் ஓரம் ...

சில குழந்தைகள் பேய்களாகவும், மற்ற குழந்தைகள் பேய்களைத் தேடிக் கொண்டுவருபவர்களாகவும் நடிப்பார்கள். இவ்விளையாட்டு குழந்தைகளை மூடநம்பிக்கைகளிலிருந்து விடுவிக்க உதவிடும். குழந்தைகள் நீச்சல் கற்றுக்கொள்ள தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் இருந்தனர். நீச்சல் உடைகளின்றி குழந்தைகள் நிர்வாணமாகவே நீந்தினர். சிறுவர்களும், சிறுமிகளும் தங்கள் உடற்கூறு வேற்றுமையில் ஆரோக்கியமற்ற ஆர்வத்தைக் காட்டுவது நல்லதல்ல என்பதே இதன் நோக்கமாகும். தங்கள் உடலை மற்றவர்களுக்கு மறைப்பதற்காகப்படும் சிரமம் இயற்கைக்கு முரணானது என்று கோபயாஷி நினைத்தார். ஒரு முறை ஓயி என்ற மாணவன் டோட்டோ-சான் சடையைப் பிடித்து இழுத்துவிட்டான். கோபயாஷி அவனைக் கண்டித்து பெண்களிடம் நுட்பமாக நடந்து கொள்ள வேண்டும் என்றும் அவர்களைக் கவனித்துக்கொள்ள வேண்டுமெனவும் அறிவுறுத்தினார். டோட்டோ-சான் ஆச்சரியத்தில் ஆழ்ந்தாள். இதற்கு முன் யாரும் பெண்களிடம் மென்மையாக நடந்துகொள்ள வேண்டும் என்று சொல்லி அவள் கேட்டதேயில்லை.

டோமோயி பள்ளியின் சோதனை முயற்சிகளில் நம்பிக்கை இல்லாத பெற்றோர்கள் சிலர் இருந்தனர். ஒரு பையனின் பெற்றோர் அவனின் விருப்பத்திற்கு மாறாக அவனைப் பள்ளியிலிருந்து விலக்கிக் கொண்டபோது அந்த மாணவன் தலைமை ஆசிரியரைக் கட்டிப் பிடித்து அழுதான். தலைமை ஆசிரியரும் கண்கள் சிவக்க அழுதார்.  மாணவர்களும், ஆசிரியர்களும் பள்ளியின் மீது உணர்ச்சிப் பூர்வமான ஈடுபாட்டுடன் இருந்தனர். விவசாயத்தின் பெருமையை ஏட்டில் மட்டுமே சொல்லித்தரும் இன்றைய சூழலில் டோமோயி பள்ளியில் மாணவர்களுக்கு விவசாயம் கற்றுக்கொடுக்கப்பட்டது. கிராமத்திலிருந்து வரவழைக்கப்பட்ட விவசாயி மாணவர்களுக்கு விவசாயம் கற்றுக்கொடுத்தார். உழுவது, களையெடுப்பது, பாத்திகள் பிடிப்பது, உரமிடுவது என்று விவசாயத்தின் அனைத்து நுட்பங்களும் கற்றுக்கொடுக்கப்பட்டன. களைகள் செடிகளுக்கு ஏற்படுத்தும் தீய விளைவுகளை மாணவர்கள் தெரிந்து கொண்டு ஆச்சரியப்பட்டனர். களைகள் செடிகளுக்கு சூரிய வெளிச்சத்தை மறைக்கின்றன, பூச்சிகள் தங்குவதற்கு மறைவிடமாகின்றன. வயலில் இருக்கும் உரத்தையெல்லாம் எடுத்துக்கொள்கின்றன என்ற விளக்கங்களைப் பெற்றனர். குழந்தைகளுக்கு சமையல் கலையைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பும் கிடைத்தது. பள்ளிக்கு வெளியே திறந்த வெளியில் சமையல் கற்றனர். கற்களைக் கொண்டு அடுப்பு செய்வது, சுள்ளிகளைப் பொறுக்கி எரிபொருள் தயாரிப்பது, சோறு ஆக்குவது, பன்றிக் கறி சூப் செய்வது என்று அமர்க்களப்படுத்தினார்கள். குழந்தைகளுக்கு ஆர்வம் இருந்தால் எதையும் எளிதில் கற்றுக் கொள்வார்கள் என்பது நிரூபணமானது.

டோட்டோ-சான்: ஜன்னலில் ஒரு சிறுமி | Buy ...

குழந்தைகள் செய்யும் தவறை டோமோயி பள்ளி ஒருபோதும் பெற்றோர்களுக்குத் தெரிவிப்பதில்லை. குழந்தைகளைப் பற்றி பெற்றோரிடம் குறை கூறுவது தவறு என்று கருதப்பட்டது. குழந்தைகள் செய்யும் தவறு சுட்டிக் காட்டப்படும், அவர்கள் மன்னிப்புக் கேட்பார்கள். அத்துடன் பிரச்சனை முடிந்துவிடும். டோட்டோ-சான் பள்ளியில் சேர்ந்த முதல் நாளே அவளை “ நீ ஒரு நல்ல பெண்; உனக்குத் தெரியுமா? என்று கேட்டார். அன்றிலிருந்து தானொரு நல்ல பெண் என்ற எண்ணம் அவள் மனதில் ஆழப் பதிந்து, அவள் நல்ல பெண்ணாகவே வாழ்ந்து காட்டினாள். ஒரு நாள் பக்கத்துப் பள்ளி மாணவர்கள் சிலர் ”டோமோயி ஒரு பாழடைந்த பள்ளி/ உள்ளும் புறமும் ஒரு பாழடைந்த பள்ளி” என்று பாடிக்கொண்டே போனார்கள். இதைக் கேட்டு டோட்டோ-சான் மிகவும் கோபமடைந்தாள். அவர்களை விரட்டிப் பிடிக்கப்போனாள். அவர்கள் ஓடிச் சென்றதும், “ டோமோயி பள்ளி ஓர் அற்புதமான பள்ளி/ உள்ளும் புறமும் அது ஒரு அற்புதமான பள்ளி” என்று பாடிக்கொண்டே பள்ளிக்குள் நுழைந்தாள். அவளுடன் மற்ற குழந்தைகளும் சேர்ந்து பாடினர். தன்னுடைய அறையிலிருந்து குழந்தைகளின் பாடலைக் கேட்ட தலைமை ஆசிரியர் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தார். அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த மியாசாகி என்ற ஒரு பையன் டோமோயி பள்ளியில் சேர்ந்தான். ஆங்கிலம் சரளமாகப் பேசும் அவனுக்குப் பாவம் ஜப்பானிய மொழி தெரியாது. குழந்தைகள் எல்லாம் அவனிடமிருந்து ஆங்கிலம் பேசக் கற்றுக்கொண்டனர்.

அவனும் ஜப்பானிய மொழியைப் பிழையின்றி பேசக் கற்றுக்கொண்டான். அமெரிக்காவைப் பற்றிய நிறைய செய்திகளை அவனிடமிருந்து குழந்தைகள் தெரிந்துகொண்டனர். ஜப்பானும், அமெரிக்காவும் டோமோயி பள்ளியில் நண்பர்கள். ஆனால் வெளியில் ஜப்பானும், அமெரிக்காவும் எதிரிகளாக இருந்தனர். கள்ளங் கபடம் அறியாக் குழந்தைகளுக்கு பகைமையும் தெரியாதல்லவா? ஆங்கிலம் எதிரிகளின் மொழி என்று மற்ற பள்ளிகளில் எல்லாம் ஆங்கிலம் வெறுக்கப்பட்டது, மறுக்கப்பட்டது. ஆனால் டோமோயி மாணவர்கள் கற்றுக்கொண்டனர். அமெரிக்கா பிசாசுகளின் நாடு என்று ஜப்பானியர்கள் திட்டிக்கொண்டிருந்த காலத்தில் அமெரிக்கா அழகானது என்று டோமோயி குழந்தைகள் பாடிக் கொண்டிருந்தனர். டோமோயியைக் கடந்து செல்லும் காற்றும் மென்மையாகவும், இனிமையாகவும், வெதுவெதுப்பாகவும் இருந்தது. டோமோயி பள்ளி குழந்தைகளுக்கு எழுதுவதற்கான சுதந்திரத்தை முழுவதும் வழங்கியிருந்தது. கூட்ட அரங்கில் இசைப் பயிற்சி முடிந்ததும், குழந்தைகள் அரங்கின் தரை முழுவதும் தாங்கள் விரும்பிய எதையும் எழுதுவார்கள் அல்லது வரைவார்கள். வரைந்து முடிந்ததும், குழந்தைகள் துணி கொண்டு அழித்து தரையைச் சுத்தப்படுத்துவார்கள். டோட்டோ-சான் அன்பின் மிகுதியில் ஒரு நாள் தலைமை ஆசிரியரிடம் “நான் படித்துப் பெரியவள் ஆனதும் இந்தப் பள்ளியின் ஆசிரியராக இருப்பேன்” என்று சொல்லியிருந்தாள். டோட்டோ-சான் அந்தப் பள்ளியின் ஆசிரியையாக வரவில்லை. ஆனால், வாழ்வில் மிகப் பெரிய வெற்றிகளைப் பெற்று, அவளின் மதிப்புக்கும், மரியாதைக்கும் உரிய கோபயாஷிக்கும் பெருமை சேர்த்துள்ளாள். தான் படித்த பள்ளிக்கு மாணவி ஆற்றும் கடமை இதுவாகத்தானே இருக்க முடியும்!

  —பெ.விஜயகுமார்.   

————————– 

 

Leave a Response

Top Reviews

Video Widget

gallery