Article

யாருக்கான தேர்வு..? ~ சுபாஷ்.

205views
Spread the love

 

“ஆன்லைனில் வகுப்பு எடுக்க கூடாது” மீறுபவர்கள் மீது நடவடிக்கை என ஒருபக்கம் தண்டோரா போட்டு விட்டு அடுத்த ஒரு மணி நேரத்தில் தனியார் பள்ளிகளின் நிர்பந்தத்தின் பேரில் அதை திரும்பப்பெற்று, மறுபுறம் அரசுப்பள்ளிகளில் பத்தாம் வகுப்பிற்கு முன்னேறும் மாணவர்களுக்கு எம் ஐ நோட்5 செல்போனை கொடுத்து ஜீம் செயலியின் மூலம் பாடம் எடுக்க தயாராவது எந்தவிதமான செயல்திட்டம் என்று புரியவில்லை . அப்பட்டமாக தனியார் பள்ளிகளின் கட்டளையை அரசு பள்ளிகளின் மீது திணிப்பது நியாயமா?? அன்றாடம் சாப்பாட்டுக்கே வழி இல்லாத குடும்பங்களிலிருந்து வரும் மாணவர்கள் எப்படி 300, 400 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்து இணையத்தை பயன்படுத்த முடியும்? என்ற கேள்விகளோடு கேள்விக்குறியாய் மாணவர்களின் நிலை. வெறும் தேர்வு முறையை மட்டும் பிடித்து தொங்கிக் கொண்டிருக்கும் இந்திய சமூகத்தின் கல்வித்துறையையே மறு பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டிய காலக்கட்டமிது. தேர்வு நடத்த வேண்டியது மாணவர்களுக்கு அல்ல! ஆட்சியாளர்களுக்கும், கல்வி முறைக்குமே மறுதேர்வு நடத்த வேண்டும். அது சரியானதா என்பதை சோதிப்பதற்காக..! ஏனெனில் கொரோனா வந்து உயிர் இழந்தால் கூட பரவாயில்லை, பத்தாவது தேர்வு நடத்தியே தீரவேண்டும்! அது நடக்கவில்லை என்றால் இந்த உலகம் தலை சிறந்த மருத்துவர்களையும், பொறியாளர்களையும், தலைவர்களையும் கண்டறிய முடியாமல் போய்விடும்! என்ற அளவில் மாயையை உருவாக்கும் இந்த அரசு கடந்த காலங்களில் பல நாடுகளுக்கு அரசு சுற்றுலா என்ற பெயரில் இன்ப சுற்றுலா தான் போய் வந்தது என்பதை நிரூபித்துள்ளது. குறிப்பாக கல்வி அமைச்சர் செங்கோட்டையன் பின்லாந்து நாட்டிற்கு சென்று வந்தும் கூட அவர்களிடம் இருந்து பாடம் கற்றுக் கொள்ளாதது வேதனை அளிக்கிறது.

பிற நாடுகள்:

10 reasons why Finland’s education system is the best in the world …

குறிப்பாக பின்லாந்தை பேசுவதற்கு காரணம் உண்டு . உலகின் தலைசிறந்த கல்வித்துறை இயங்கும் நாடுகளின் பட்டியலில் முதலிடம் வகிப்பது பின்லாந்து. அந்நாட்டில் மாணவர்கள் குறிப்பிட்ட நிலையை அடையும்வரை தேர்வு முறை கிடையாது, தனியார் பள்ளிகள் கிடையாது, கிரேட் முறை கிடையாது, ஏழு வயதில் இருந்து தான் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல வேண்டும், செயல்வழி கற்றலுக்கும் சூழலியல் கல்விக்கும் தான் அதி முக்கியத்துவம். அதுவும் மாணவர்களின் விருப்பத்தேர்வு அடிப்படையில்தான். எனவே அந்நாட்டில் தேர்வு குறித்த பயமோ, அவசியமோ கிடையாது. அதுமட்டுமின்றி, உலகின் தலைசிறந்த மருத்துவர்களை அளிக்கும் நாடான கியூபாவில் நீட் போன்ற பாதக தேர்வுகள் கிடையாது. கல்வி முழுவதும் அரசின் கட்டுப்பாட்டில் இலவசமாக வழங்கப்படுகிறது. வளர்ந்த நாடுகளில் அதிகமாக இணையவழி கல்வி சாத்தியமான ஒன்றாக நடைமுறையில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. காரணம் அந்த அரசுகள் கடைக்கோடி கிராமங்களுக்கும் இணையம் செல்வதை சாத்திய படுத்தியுள்ளது. குறிப்பாக சோசலிச நாடுகளான சீனா,கியூபா போன்ற நாடுகள் ஆகும். இந்நாடுகள் எல்லாமே கல்வித்துறையில் செயல்வழிக்கற்றலை அதிகம் ஊக்குவிப்பவனவாகவும் தேர்வு என்பதை ஒரு பகுதியாகவும் கொண்டுள்ளன. ஆனால் இந்தியா முழுவதுமாகவும் தேர்வுமுறையையே கொண்டுள்ளது.. எனவேதான் இந்தியாவில் 2,403 (2014), 2,646 (2015) 2,413 (2016) மாணவர்கள் தற்கொலை அதிகம்.

இந்திய நிலை!?

உலகம் முழுவதும் கொரோனாவால் பொருளாதார நெருக்கடியையும், எதிர்கால பிரச்சினையையும் நினைத்து வருந்தி கொண்டிருக்கையில் இந்திய அரசு CAA க்கு எதிராக போராடிய ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்களை கடும் அடக்குமுறைச் சட்டங்களின் கீழ் கைது செய்வதில் முனைப்புடன் செயல்பட்டு கொண்டிருக்கிறது. ஆர்எஸ்எஸ் அஜெண்டாவான “புதிய கல்விக் கொள்கையை” ஜூன் மாதத்திலிருந்து அமல்படுத்த போவதாகவும் அறிவித்துள்ளது. இணையக்கல்வி என்ற பெயரில் நாட்டின் பல்வேறு பிற்படுத்தப்பட்ட மாணவர்களை கல்வி பெறுவதிலிருந்து தடுக்கின்ற வேலையை செய்து வருகிறது. “குரு பத்தடி பாய்ந்தால் சிஷ்யன் 20 அடி பாய்வான்” என்பதுபோல் அதிமுக அரசு பத்தாம் வகுப்பு தேர்வை நடத்தியே தீருவோம் என்று கங்கணம் கட்டிக்கொண்டு நிற்கிறது. நீட் தேர்வுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் செல்லாத அரசு, டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என்று தீர்ப்பிற்கு எதிராக உச்சநீதிமன்றம் செல்கிறது. குடிகெடுக்கும் அரசிடம் இருந்து வேறு எதை எதிர்பார்க்க முடியும். அதிகமான கிராமப்புற மாணவர்களை கொண்ட தமிழ்நாட்டில் பல கிராமங்களில் செல்போன் கோபுரங்களே கிடையாது.. அங்கெல்லாம் மாணவர்களால் கண்டிப்பாக இணையவசதியை பெற முடியாத நிலையே உள்ளது.

மாணவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள்!!

Online education in India | Future of e-Learning in India

இந்தியாவில் பாதிக்குப் பாதி மக்கள் மட்டுமே இணைய வசதியை ஏதோ ஒரு வகையில் பெறுபவராக உள்ளனர். அதிலும் 12.5 சதவீதம் மட்டுமே மாணவர்கள் ஆவர். அதில் 27% நகர்ப்புறங்களிலும், வெறும் 5% மட்டுமே கிராமப்புறங்களிலும் வீடுகளில் இணைய வசதி பெற்றவராக உள்ளனர். நிலை இப்படி இருக்க நாட்டில் பெரும்பான்மையான மாணவர்கள் பாடங்கள் முடிக்கப்படாத சூழலில் ஊரடங்கால் பாதிக்கப்பட்டு வீடுகளில் முடங்கி உள்ளனர். வசதிபடைத்த, வாய்ப்புகள் நிறைந்த குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள் வேண்டுமானால் இணையம் மூலம் பயிற்சிகளை மேற்கொண்டு பாடத்திட்ட அளவில் தேர்வுக்கு தயார் ஆவார்கள். ஆனால், நான்கு மாத இடைவெளியில் மனரீதியான தயார்நிலை கண்டிப்பாக இருக்காது. அதேபோல் இணையம் இல்லாமல் குறிப்பாக பேருந்து கூட செல்லாத கிராமப்புற மாணவர்கள் பாடத்திட்ட அளவிலும் சரி, மன ரீதியாகவும் சரி தயாராக இருக்க மாட்டார்கள். குறிப்பாக மலையகப் பகுதிகள், குக்கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் இந்த தகவல்களை அறிந்து இருப்பார்களா என்பதே சந்தேகம். அதுமட்டுமன்றி லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளிகள் இந்தியாவின் சாலைகள் தோறும் நடந்து கொண்டிருக்கின்றனர். அவர்களின் பிள்ளைகளின் கல்வி என்பது கேள்விக்குறியாகி நிற்கிறது. எனவே இந்த நிலையில் தேர்வு நடத்துவது என்பது இயல்பாகவே ஒரு தரப்பு மாணவர்களை கல்வித்துறையில் இருந்து வெளியே விரட்டும் செயலாகவே இருக்கும். அதுதான் இன்றைய மதவாத பிஜேபி அரசுக்கும் அடிமை அதிமுக அரசுக்கும் தேவையான ஒன்றாக உள்ளது. இதை அனைத்தையும் தாண்டி நாங்கள் செல்போன் தருகிறோம், பாடம் கற்பிக்கிறோம், தேர்வு நடத்துகிறோம் என அரசு செய்தால் தேர்வுக்கு வரும் மாணவர்கள் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு இடத்தில் கூடும்போது அவர்களுக்கிடையேயான சமூக இடைவெளி என்பது எந்த அளவு சாத்தியமாக இருக்கும் என்பது கேள்விக்குறியே. அது இன்னும் அதிகப்படியான நோய் தொற்றை ஏற்படுத்தவே வழி வகுக்கும். இப்படி நிலைமை மிக மோசமாக இருக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பது முக்கியமான கேள்வி.

நாம் என்ன செய்ய வேண்டும்?

Online edtech startups negotiate the learning curve | The Passage

“கழிப்பறைகளே இல்லாத கிராமங்கள் உள்ள இந்தியாவில், இணையவசதி என்பது எட்டாக்கனியே!!
இந்தியா இணைய வசதிகளை கொண்டு செல்வதில் இன்னும் வெகு தூரம் செல்ல வேண்டியுள்ளது. எனவே ,அதுவரை இணைய வகுப்புகள் நடத்தி மாணவர்களை பிரிப்பதை கைவிட்டு இணையத்தை மக்களுக்கு கொண்டு செல்வதை முன்னெடுக்கவேண்டும். அதற்கு முதலில் இந்திய மாநிலமான கேரளாவின் செயலை தெரிந்து கொள்ள வேண்டும். கடந்த ஆண்டு கேரளா கம்யூனிஸ்ட் அரசு அனைத்து மாவட்ட கிராமங்களிலும் அரசு மற்றும் பஞ்சாயத்து அலுவலகங்கள், பேருந்து நிறுத்தம், மருத்துவமனை என எல்லா இடங்களிலும் இலவச வைபை வசதி அறிமுகப்படுத்தினார்கள். இதனால் கணிசமான மக்களை பொது இணையத்துடன், சமூக வலைதளங்களுடன் இணைக்க முடிந்தது. இந்த மாடலை கொண்டு மற்ற மாநிலங்களிலும் இதை சாத்தியப்படுத்த வேண்டும். அது வருங்காலத்தில் இதுபோன்ற வேறொரு பேரிடரை சந்திக்க பேருதவியாக இருக்கும். இந்த ஊரடங்கு நேரத்தில் மாணவர்களிடத்தில் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தாமல், தேர்வு குறித்த பயத்தை உருவாக்காமல் ஆசிரியர்களை மாணவர்களிடம் பேசவைப்பது, வீட்டிலிருந்தே உடற்பயிற்சி செய்தல், உடல்நலம் மேம்படுதல் குறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்தல் போன்றவற்றை செய்தல் வேண்டும்.

அவர்களுக்கு தேர்வு குறித்த பயத்தை நீக்குவது போன்ற கவுன்சிலிங் நிகழ்ச்சிகளை தொலைக்காட்சி மூலமாகவும் , வேறு வகையிலோ விழிப்புணர்வாக கொண்டு செல்ல வேண்டும். ஊரடங்கு முடிந்து கல்வி நிலையங்கள் திறந்த உடனே தேர்வு! தேர்வு!! என்று மாணவர்களை மனரீதியாக சிதைக்காமல் பாடத்திட்டங்களை குறைத்தல், தேர்வுக்கு மாற்றான வழிமுறைகளை யோசித்தல் போன்றவற்றை செய்தால் மட்டுமே இழப்புகளை தவிர்க்க முடியும். மாணவர்களிடத்தில் எடுக்கப்பட்ட ஆய்வில் அவர்கள் அதிகம் கவலைப்படுவது கல்விக்கட்டணம் மற்றும் தேர்வு பயம் குறித்துதான். எனவே, இந்த பேரிடரின் தாக்கம் குறையும் வரை கல்வி உரிமை சட்டத்தின் படி அனைத்து மாணவர்களுக்கும் இலவச கல்வி வழங்கப்பட வேண்டும். அனைத்துவகையான கட்டணம் மற்றும் கடன்கள் ரத்து செய்யப்படவேண்டும். குறிப்பாக இந்தியா தன்னுடைய கல்விமுறையை மீண்டும் சுய பரிசோதனை செய்துகொண்டு மாற்றிக்கொள்ளவில்லை என்றால் எதிர்காலம் ஆபத்துக்குள்ளாவதை யாராலும் தடுக்க முடியாது.

Leave a Response