Article

உலக நாகரிக வரலாற்றில் திருவள்ளூர் மாவட்டம்: வரலாற்றுத் தொடர் – பகுதி 1

உலக நாகரிக வரலாற்றில் திருவள்ளூர் மாவட்டம்

வரலாற்றுத் தொடர் – பகுதி 1

பேரா.சு.ஜெகஜீவன்ராம்

 

சிந்து சமவெளி பண்பாட்டின் கண்டுபிடிப்பிற்கு பிறகுதான் உலக நாகரிக வரலாற்றில் இந்திய துணைக்கண்டம் இடம்பிடித்தது. ஆங்கிலேயர்களின் தொல்லியல் .ஆய்வு முயற்சியால் இது நிகழ்ந்தது. அதே ஆங்கிலேய தொல்லியல் அறிஞர்களின் முயற்சியால்தான் தமிழ்நாட்டின் வரலாற்றுத்தொன்மையும் வெளிக்கொண்டுவரப்பட்டது. அவ்வாறு வெளிக்கொண்டு வரப்பட்ட தமிழ்நாட்டின் தொல்பெருமையில் திருவள்ளூர் மாவட்டத்திற்கு கணிசமான பங்கு உள்ளது.

இந்திய வரலாற்றின் முழுமையில், தமிழ் நாட்டின் வரலாறு முக்கியத்துவம் வாய்ந்ததும், தொன்மைச் சிறப்புகள் பெற்றுள்ளதும் ஆகும். அதே போன்று, தமிழ் நாட்டு வரலாற்றின் முழுமையில் நோக்கும் போது, திருவள்ளூர் மாவட்டம், அத்தகைய தொன்மைச் சிறப்புகள் பெற்றுள்ள பகுதியாகும்.  பழங்காலத்தில் தொண்டை மண்டலம் என்று வழங்கப்பட்டு வந்த பரந்த நிலப்பகுதியின் ஓர் அங்கமாக திகழ்ந்த பெருமைக்குரியது இன்றைய திருவள்ளூர் மாவட்டம். இப்பகுதியின் வரலாற்று தொன்மை குறித்த பல்வேறு ஆதாரங்கள் தொடர்ச்சியாக கிடைத்த வண்ணமிருக்கின்றன.

திருவள்ளூர் மாவட்டத்தின் மையப்பகுதியில், மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி பாய்ந்து செல்லும் கொற்றலையாறு மற்றும் ஆரணியாறு ஆகியவற்றின் கரையோரங்களில் அமைந்துள்ள பல பகுதிகள், இந்தியாவின் பழங்கால நாகரிகத்தின் பிறப்பிடங்களாக இருந்திருக்கின்றன. இந்த ஆறுகளையொட்டிய சமவெளிப்பகுதிகளில் ஏறத்தாழ 100 க்கும் மேற்ப்பட்ட ஊர்களில் பழைய கற்கருவிகள் கிடைக்கின்றன என்பது மிகவும் ஆச்சரியம் அளிக்கக்கூடிய செய்தியாகும்.

இந்தியாவிலேயே முதன்முதலாக சென்னைக்கு அருகிலுள்ள பல்லாவரத்தில்தான் பழைய கற்காலக் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இவ்வரிய கண்டுபிடிப்பை 1863 ஆம் ஆண்டு மே மாதத்தில் இந்திய தொல் பழங்கால வரலாற்றின் தந்தை எனப்போற்றப்படும் சர். இராபர்ட் புரூஸ் புட் அவர்கள் நிகழ்த்தினார்கள். இதனைத்தொடர்ந்து அவரும் வில்லியம் கிங் என்பவரும் சேர்ந்து கொற்றலையாற்று பள்ளதாக்கு பகுதியில் பழையகற்கருவிகள் கிடைக்கும் பல இடங்களை ஆய்வு செய்து அவற்றைப் பற்றிய செய்திகளை வெளியிட்டார்கள். குறிப்பாக 1930ஆம் ஆண்டில்தான் இப்பகுதியின் பழைய கற்கால ஆய்வில் ஒரு விழிப்புணர்ச்சி ஏற்ப்பட்டது எனலாம். காமிடே, பர்கிட், வி.டி.கிருஷ்ணாசாமி, டி.டி.பேட்டர்சன் மற்றும் கே.வி.சவுந்திரராஜன் போன்ற அறிஞர்கள் பல அரிய செய்திகளை வெளியிட்டனர். இந்த ஆய்வுகளின் மூலம் கொற்றலை ஆற்றின் பள்ளத்தாக்கு பகுதியில் நான்கு படிவுப் படுகைகள், (Four Fold Terrace System) உள்ளனவென்றும் வடமதுரை என்ற ஊரில் கூழாங்கல் திரளை அடுக்கின் பகுதி (Boulder Conglomerate Horizon) ஒன்று காணப்படுகிறது என்றும் தெரிய வந்தது.

பின்னர் 1957 முதல் 1979 வரை இந்திய தொல்லியல் துறையைச் சேர்ந்த கே.டி. பேனர்ஜி என்பவர். அத்திரம்பாக்கம், குடியம், வடமதுரை, பூண்டி, நெய்வேலி ஆகிய இடங்களில் அகழ்வாய்வுகளை மேற்கொண்டார். அண்மையில் சாந்திபப்பு என்பவர் இப்பகுதியின் பிளைஸ்டோசீன் கால நிலப்பரப்பின் இயற்கூறுகள் மற்றும் மண்ணியல் அமைப்பின் (Pleistocene Geomorphology) அடிப்படையில் ஆய்வு செய்தும், அத்திரம்பாக்கத்தில் மீண்டும் அகழாய்வு செய்தும் பல அரிய செய்திகளை வெளிப்படுத்தியுள்ளார்.1

டாக்டர் கார்னிஷ், ஃபிரேசர், சர். இராபர்ட் புரூஸ் ஃபூட் ஆகிய ஆங்கிலேயே அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட கடினமான, தொடர்ச்சியான ஆய்வுகள் மூலமாக இத்தகைய உண்மைகள் வெளிக்கொணரப்பட்டன.  தொடர்ந்து செய்யப்பட்ட ஆராய்ச்சிகளின் மூலமாக இம்மாவட்டத்தின் குடியம், பூண்டி, அத்திரம்பாக்கம், நெய்வேலி, வடமதுரை, பரிக்குளம், பொன்னேரி போன்ற பகுதிகளில் சிறப்பான முறையில் பழங்கற்கால பண்பாடும் (Paleolithic Culture) பெருங்கற்கால பண்பாடும் (Megalithic Culture)  நிலவியிருப்பது கண்டறியப்பட்டது. யாவற்றுக்கும் மேலாக குடியத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கற்கால மனிதர்களின் குகைகள் இம்மாவட்டத்தின் வரலாற்றுப் பெருமையை உலக அரங்கில் பறைசாற்றி இருக்கிறது. இவ்வூர் பூண்டிக்கு மேற்கே 10கி.மீ தூரத்தில் உள்ளது. இவ்வூருக்கு அருகிலுள்ள அல்லிக்குழி மலைத்தொடரில் பழைய கற்கால மக்கள் வாழ்ந்த 16 குகைகள் காணப்படுகின்றன. இவற்றுள் மனத்தச்சம்மன் குகையில் அகழாய்வு (1962-63 மற்றும் 1963-64) மேற்கொள்ளப்பட்டது. இந்த அகழ்வின் மூலம் இங்கு வாழ்ந்த கற்கால மக்கள் கற்கருவிகள் செய்யும் தொழில் நுட்பத்தில் படிப்படியாக வளர்ச்சி பெற்றதைத் தெளிவாக அறிய முடிந்தது. இங்கு கிடைத்த கற்கருவிகளில் முக்கியமானவை கைக்கோடாரிகள், கிழிப்பான்கள், வெட்டிகள், சுரண்டிகள் என்பனவாகும்.2  இவ்வாறு பழம்பெரும் வரலாற்றுத்தொன்மையை பெற்றுள்ளதோடன்றி, திருவள்ளூர் மாவட்டம், தமிழக வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த இடைக்கால மற்றும் நவீனகால நிகழ்வுகள் யாவற்றுடனும் தொடர்புடையதாக இருந்து வந்துள்ளது என்பது மிகவும் முக்கியமாகும்.

திருவள்ளூர் மாவட்டத்தின் புவியியல் அமைவிடம் (Geographical Position)

தமிழகத்தின் வடகிழக்கு பகுதியில் திருவள்ளூர் மாவட்டம் அமைந்துள்ளது. வடக்கு அட்ச ரேகையில் 12015’ 13015’க்கு இடையிலும் கிழக்கு தீர்க்க ரேகையில் 79015’-80020’க்கு இடையிலும் இம்மாவட்டம் அமைந்துள்ளது.3 இம்மாவட்டம் 3422 சதுர கிலோ மீட்டர்கள் பரப்பைக் கொண்டுள்ளது. ஆரணியாறு, கொற்றலையாறு, கூவம் ஆறு ஆகியவை திருவள்ளூர் மாவட்டத்தின் வழியாக பாய்ந்துச் சென்று வங்கக் கடலில் கலக்கின்றன. ஆரணியாறு பழவேற்காட்டில் வங்கக் கடலில் கலக்குமிடத்திலும்  கொற்றலையாறு எண்ணூர் அருகே வங்கக் கடலில் கலக்குமிடத்திலும் இரண்டு கழிமுகப் பகுதிகள் அமைந்துள்ளன. இம்மாவட்டத்தை சுற்றி, தெற்கில் காஞ்சிபுரம் மாவட்டம், கிழக்கில் சென்னை மாநகரமும் வங்காள விரிகுடாவும், வடக்கில் ஆந்திர மாநிலமும், மேற்கில் வேலூர் மாவட்டமும் எல்லைகளாக அமைந்துள்ளன.

இயற்கை அமைப்பும் பிரிவுகளும்

திருவள்ளூர் மாவட்டம் 3,422 சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இம்மாவட்டத்தின் கடலோரப்பகுதிகள், கடல் மட்டத்திலிருந்து ஏறக்குறைய சமதளத்தில் அமைந்துள்ளன. திருத்தணி மற்றும் பள்ளிப்பட்டு வட்டங்கள் மட்டும் மலைப்பாங்கானப் பகுதிகளாக காணப்படுகின்றன. மாவட்டத்தின் பொதுவான இயற்கை பிரிவுகளாக சமவெளி பகுதிகள், கழிமுகப்பகுதிகள், மலைப்பாங்கான பகுதிகள், கடற்கரைப் பகுதிகள் (Coastal Belts), ஆறுகள், வடிகால் பகுதிகள், ஏரிகள் போன்றவை அமைந்துள்ளன.

ஆரணி ஆறு மற்றும் கொற்றலை ஆறு வழித்தடம்

மாவட்டத்தின் கிழக்குப்பகுதி பொதுவாக கடற்கரை சமவெளிப் பகுதியாகக் காணப்படுகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி வட்டத்திற்குட்பட்ட வடகிழக்கு மூலையில் அமைந்துள்ள பழவேற்காடு பகுதியில் வங்காள விரிகுடாவின் முக்கிய கழிமுகப்பகுதியும் அதனையொட்டிய ஏரியும் முக்கிய இயற்கை அம்சங்களாக அமைந்துள்ளன. இதன் நீளம் சுமார் அறுபது கிலோ மீட்டர் வரை சென்று ஆந்திர மாநிலத்தின் நெல்லூர் மாவட்டத்தைத் தொடுகிறது. அதன் அகலம் 5.கி.மீ. முதல் 18கி.மீ. வரை பரந்து காணப்படுகிறது. இம்மாவட்டத்தின் மையப்பகுதியில் ஓடும் ஆரணியாறு தொடர்ந்து கிழக்கு நோக்கி பாய்ந்து சென்று பழவேற்காடு கழிமுகத்தின் தென்பகுதியில் கலக்கிறது. அதே போல் கொற்றலை ஆறும் கிழக்கு நோக்கித் தொடர்ந்து பாய்ந்து சென்று எண்ணூர் பகுதியில் வங்காள விரிகுடாவில் கலக்கிறது. இதனால் இவ்விடத்தில் மேலும் ஒரு கழிமுகப்பகுதி உருவாகின்றது.

 
அல்லிக்குழி மலைக் குன்றுகள்

 

பொன்னேரி வட்டத்தின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள அல்லிக்குழி மலைக் குன்றுகள் (Alikuli Hills)  கிழக்குத் தொடர்ச்சி மலையின் (Eastern Ghats) நீளத்தின் ஒரு பகுதியாக இடம் பெற்றுள்ளது. இம்மலைக்குன்றுகளின் தொடர்ச்சியானது, அடர்ந்த நீண்ட மலைக் காடுகளையும் (Hill Forests) வளர்த்து செழிப்படைய செய்துள்ளது. திருவள்ளூர் வட்டத்தில் 81.52 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பாதுகாக்கப்பட்ட காடுகள் பகுதி (Reserved Forests) அமைந்துள்ளது.

இம்மாவட்டத்தின் தலைமையிடமாகிய திருவள்ளூர் நகரம், சென்னை – திருப்பதி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. சென்னையிலிருந்து சுமார்  44 கிலோமீட்டர் தொலைவில் இந்நகரம் அமைந்துள்ளது. சென்னை-அரக்கோணம் இரயில் மார்க்கத்தின் இடையில் திருவள்ளூர் இரயில் நிலையம் அமைந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தின் உள்ளடங்கிய ஒரு வட்டமாகவும், ஒரு வருவாய் நிர்வாகப்பிரிவாகவும் திருவள்ளுர் இடம்பெற்று செயல்பட்டு வருகிறது. வரலாற்று ரீதியாகவும், பண்பாட்டு ரீதியாகவும் முக்கியத்துவமுடைய பகுதிகள் இம்மாவட்டத்தில் அமைந்து சிறப்பு செய்கின்றன. இவ்வகையில் திருநின்றவூர், திருவொற்றியூர், திருவள்ளூர், திருத்தணி, சத்தியவேடு, மாதர்பாக்கம், திருவாலங்காடு, பெரியபாளையம், சின்னம்பேடு(சிறுவாபுரி), திருப்பாலைவனம், பழவேற்காடு ஆகிய பகுதிகள் குறிப்பிடத்தக்கவையாகும். பழவேற்காடு பகுதி வரலாற்று சிறப்புக் கருதியும் இயற்கை எழில் கருதியும் தமிழகத்தின் சுற்றுலாத்தளங்களில் ஒன்றாக தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. பழவேற்காடு ஏரியில் அமைந்துள்ள இயற்கையான பறவைகள் சரணாலயம் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு இணையாக வளர்ந்து வருகிறது.

1997 ஆம் ஆண்டில் திருவள்ளூர் மாவட்டத்திற்கான புதிய எல்லைகள் வரையறுக்கப்பட்டு, அது தனியொரு மாவட்டமாக தமிழ்நாட்டின் வரைபடத்தில் இடம் பிடித்தது. அப்பொழுது முதல், நிர்வாக அடிப்படையிலும், தனித்த மாவட்டமாக செயல்பட்டு வருகிறது. இதற்கு முன்பாக நிலவியல் அடிப்படையிலும் நிர்வாக ரீதியிலும் செங்கற்பட்டு மாவட்டத்தின் ஒருங்கிணைந்த மாவட்டமாக திருவள்ளூர் மாவட்டம் இருந்து வந்தது. எனவே இங்கு நாம் கவனத்தில் எடுத்துக்கொண்டுள்ள திருவள்ளூர் மாவட்டத்தின் ‘வரலாறு’ என்பதும் கூட பழங்காலம் முதல் செங்கற்பட்டு மாவட்டத்தின் ஒன்றிணைந்த வரலாறாகவும், பெரும்பாலும் பிரித்தறிய முடியாத வரலாறாகவும் இருக்கின்றது. இதன் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தின் வரலாற்றுப் பின்னணியை எடுத்துக்காட்ட வேண்டுமெனில் ஒன்றிணைந்த மாவட்டத்தின் (காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் இணைந்த செங்கற்பட்டு மாவட்டம்) வரலாற்றையே பெரும்பாலும் பரிசீலிக்க வேண்டியுள்ளது.

தற்போதைய திருவள்ளூர் மாவட்டமும், காஞ்சிபுரம் மாவட்டமும் இணைந்திருந்த செங்கற்பட்டு மாவட்டம் மிகவும் தொன்மையான வரலாற்றுச் சிறப்பையும், பாரம்பரியத்தையும் கொண்டதாகும். இம்மாவட்டத்தில் ஆங்கிலேயர் காலம் முதல் சமீப காலம் வரை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு தொல்லியல் ஆய்வுகள் (Archeological Surveys)  மூலம் இவ்வரலாற்றுத் தொன்மை நிரூபணம் செய்யப்பட்டு வருகின்றன. இது தொடர்பான வரலாற்றுச் செய்திகளை அடுத்த பதிவில் பார்ப்போம்..

சான்றுகள்

  1.   து.துளசிராமன், தமிழகத் தொல்பழங்காலமும் பூண்டி அகழ்வைப்பகமும், தமிழ்நாடு  அரசு தொல்லியல்துறை,  2005. பக்.V,VI.
  2. மேலது.பக்.6,7.
  3.  Environment Profile of Thiruvallur District, p.5.

நன்றி: https://varalarupanpadu.blogspot.com/

Leave a Response