Book Review

நூல் அறிமுகம்: “கவிதையின் கலங்கல் நீர்தன்மை” (முனைவர் இரா. சம்பத்தின் நூலைமுன் வைத்து) – சுப்ரபாரதிமணியன்      

 

நவீன இலக்கிய முறையில் மனிதர்களின் சுயத்தை மொழி கட்டமைக்கிறது. அதுவே அதிகார அமைப்பாக்கி விடுகிறது. மொழியிலிருந்து விடுபடுதல் என்பது மனித விடுதலை என்பதும் ஒரு கோணமாகிவிட்டது.மொழியை வைத்து மொழிகடந்த தளத்திற்கு நவீன கவிதை சென்று விட்ட்து. எதிர்கலாச்சார அம்சங்களை பின்நவீனத்துவ சூழலில் அதிகம் பேசுகிறபோது  அதில் கட்டமைக்கப்படும் அதிகாரமும் முக்கியமாகி விடுகிறது.

அந்த வகையில் மொழியை ஊடகமாக்க் கொண்டு அமையும் இலக்கியம் பற்றிய ஆய்வுக்கு புதிய அம்சங்களைக் கண்டடைவது   இரா சம்பத் அவர்களின் ஆய்வாக இருக்கிறது.

மொழியின் நுண்பொருளாகவும், புறத்தோற்றத்திற்கு தென்படாததாகவும் அக மொழி அமைகிறது. புற வெளிப்பாட்டில் கண்களில் தென்படுவதை பேசுவதற்கும், எழுதுவதற்கும் சொற்கள் , சொற்றொடர்கள் வாக்கியங்களை பயன்படுத்துவது புற மொழியாகிறது.மொழி காலம், இடம், சமூகம் ஆகிய நிலைகளில் வேறுபடும் தன்மையினை உடையதாக உள்ளது.பிரதிக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் வாசகனுக்கு முக்கியத்துவம் தரும் பின்நவீனத்துவத்தின் அம்சங்கள் படைப்பிலக்கியத்தில் வெகுவாக இடம்பிடிக்கிற நவீன சூழலும் காணப்படுகிறது.

இச்சூழலில்  இலக்கிய ஆய்வு பற்றிய அக்கறையை செலுத்தி வருபவர் இரா. சம்பத்..இன்றைய பல்கலைக்கழகங்களில் மேற்கொள்ளப்பட்டு  இலக்கியம் தொடர்பான ஆய்வுகள் அனைத்தும் இலக்கிய மதிப்பீடுகளே தவிர இலக்கியவியல் சார்ந்த ஆய்வுகள் அல்ல என்பதும் முன்வைக்கப்படுகிறது. அதற்குக் காரணம் நம் நாட்டில் ஆங்கில ஆட்சியின் ஆதிக்கம் தந்த இங்கிலாந்திய ஆய்வு மரபு தொல்காப்பிய இலக்கியவியல் மரபில் தமிழிலக்கிய வரலாற்றில் கோட்பாட்டு மாற்றங்களுடன் போற்றப்பட்டு வந்ததை  தகர்த்து விட்டது பற்றிய சர்ச்சைகள் எப்போது உள்ளன.இலக்கியவியல் ஆய்வு வடிவம், உள்ளடக்கம் என்றமையும். அது இலக்கிய மதிப்பீடுகள் என்ற வரையறைக்கு வந்து சேர்ந்து விட்டது.மொழியியலுக்கும் இந்த வடிவம், உள்ளடக்க்க் கூறுகள் முக்கியமானவை.இந்நூற்றாண்டின் கவிதைப்படைப்புகளில் வடிவம், உள்ளடக்கம், கூறும் முறை பற்றி இலக்கிய ஆய்வுக்கு தன் பங்கை இரா சம்பத் தொடர்ந்து செலுத்தி வருகிறார்.

தொல்காப்பியக் கவிதையியலும் ...

இதில் மொழி வழியாக கட்டமைக்கப்படும் கவிதை மனித இனவரலாறு, சமூக நிகழ்வுகளை பிரதிபலித்து சமூக மாற்றத்திற்கான விசயமாக மாறுவதை தன் ஆய்வுகளில் வெளிப்படுத்தியுள்ளார்.சமூக வெளியில் மொழியின் பயன்பாட்டைபற்றி அக்கறை கொள்வதே சம்பத் அவர்களுக்கு முக்கியமானதாகப் படுகிறது.மொழியின் ஜாலத்தின் மேன்மையும் அதிகாரமும் புறந்தள்ளக்கூடியதாகவே அவருக்கு இயல்பாகிறது.

“ தொல்காப்பிய கவிதையியலும் தமிழ் இலக்கியமும் ”  என்ற இந் நூலில் சம்பத் வெவ்வேறு இலக்கிய மரபுகள் பற்றிப் பேசுகிறார். யோசிக்கிறார்.இலக்கிய மரபுகளை விதி இலக்கணமாக வகுக்காமல் விளக்க இலக்கணமாக வகுக்கும் தொல்காப்பியரின் அணுகுமுறையானது அறிவியல் தன்மையிலானது என்கிறார்.  இலக்கிய மரபுகள் நிலையானவை அல்ல. அது காலந்தோறும் மாறும் இயல்பினதாகும்.   தொல்காப்பியர் கண்ட இலக்கிய மரபுகள் சங்க இலக்கிய மரபுகளாகும் தொல்காப்பியரின் இலக்கிய மரபுகள் சங்க இலக்கியத்தில் ஒன்று பட்டும் வேறுபட்டும் இருப்பதை விளக்குகிறார். கவிஞர்களின் சுயமான அனுபவப்பார்வையின் வெளிப்பாடாக கவிதை கலை அனுபவமாகும் வித்தையை பல கட்டுரைகளில் கட்டவிழ்கிறார்.உரைநடை அம்சங்கள், சிறுகதைத்தன்மை  புதுக்கவிதையில் இடம் பெறுவதைக் கண்டடைவது சில கட்டுரைகளின் மையமாக இருக்கிறது. புதுச்சேரி இலக்கிய மரபு என்பதையும் புதுவைப் படைப்பாளிகளை முன் வைத்து கட்டமைக்கிறார்.இது பாரதி, பாரதிதாசன் இலக்கிய மரபுகளின் தொடர்ச்சியாக எப்படி இருந்தது என்பதையும் சுட்டிக்காட்டுகிறார். அவை மரபு சார்ந்த யாப்பியல் விதிகளுக்கு பொருந்தக்கூடியதாகவும், புதிய இலக்கிய மரபுகளை உருவாக்க்கூடியதாகவும் அமைந்திருப்பதை பல கட்டுரைகளில் நிறுவுகிறார் .சங்ககால பாடல்கள் முதல் இன்றைய நவீன கவிதையின் அம்சங்களின் உள்ளடக்கம், வடிவம் சார்ந்து ஆராய்ந்திருப்பது சம்பத்தின் ஆய்வு முறையாக வளம் சேர்க்கிறது.சமூக வெளியில் மொழியின் பயன்பாடு பற்றிய அக்கறைக்கு எழுத்து வகைக் கவிஞர்களை விட வானம்பாடி வகை கவிஞர்கள் அவரை ஆக்கிரமித்திருப்பதை இக்கட்டுரைகளில் காண முடிகிறது. நீண்ட காலமாகப் புதுக்கவிதையை ஓர் இலக்கிய வகையாக கொள்வதற்கு அதன் வடிவம் தடையாக இருந்ததை உடைத்து  நவீன கவிதையை இலக்கிய வகைக்கு கொண்டு வர கோட்பாட்டு ரீதியான நியாயத்தை இந்நூல் நிறுவுகிறது என்பதில் இரா சம்பத் அவர்களின் ஆய்வுப் பங்களிப்பு கவனத்திற்குறியதாகிறது. ” இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் மரபுக் கவிதையின் யாப்பியல் மரபும், நெகிழ்வும்”  , “ இலக்கியமும், இலக்கிய கோட்பாடும்” போன்ற முந்தின இவரின் நூல்களும் இவ்வகையில் உரம் சேர்ப்பவையாகும்.

 

( தொல்காப்பியக் கவிதையியலும் தமிழிலக்கியமும் : இரா. சம்பத், ரூ.120 , முரண்களரி படைப்பகம், சென்னை)

Leave a Response