Book Review

நூல் அறிமுகம்: பள்ளிக்கு வெளியே.. – டாக்டர் இடங்கர் பாவலன்குழந்தைகளுக்கு பள்ளியில் வகுப்பறைகள் இருப்பது சரிதான். ஆனால் ஏன் இப்போதெல்லாம் வீடுகளெல்லாம் வகுப்பறைகளாகவும், பெற்றோர்கள் ஆசிரியர்களாகவும் உருமாறிக் கொண்டிருக்கின்றன? இன்றைய காலம் ஒரு குழந்தைக்கு இரண்டு வகுப்பறைகளை தந்திருக்கிறது ஒன்று பள்ளியில், இன்னொன்று வீட்டில்..

தெருக்களே பள்ளிக்கூடம் என்கிற ராகுல் அல்வாரிஸ் எழுதிய புத்தகம் இந்த கொரோனா காலகட்டத்தில் தன்னறம் நூல்வெளி, குக்கூ காட்டுப் பள்ளியின் வெளியீடாக வந்துள்ளது. இதனை சுஷில்குமார் தமிழில் மொழி பெயர்த்துள்ளார். கொரோனா காலத்து பள்ளி மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாக்கப்பட்ட சூழலில் இப்புத்தகம் மற்றுமொரு பாதையை காட்டியுள்ளது.

புத்தகத்தின் அட்டைப்படமே அதை வாங்கிப் படிக்க வேண்டிய ஆசையைத் தூண்டும். ஒரு பரந்து விரிந்த சூரியகாந்தி தோட்டத்தின் நடுவே தந்தையுடன் பின்னே அமர்ந்தவாறு மிதிவண்டியில் பயணம் செய்கிற வண்ணமயமான அட்டைப்படம் அது.

ஒரு ஆணோ, பெண்ணோ, குழந்தையோ, பெரியவர்களோ, இளைஞர்களோ எப்படியெல்லாம் இருக்க வேண்டுமென்று சமூகம் சொல்லி வைத்திருக்கிறதோ அந்த கற்பிதங்களையெல்லாம் பள்ளி என்கிற அறிவுப் பட்டரைக்குள் நுழைவதற்கு முன்பாகவே வீடுகளில் குழந்தைகளுக்கு அவை கற்பிக்கப்பட்டுவிடுகின்றன. ஒரு குழந்தை பள்ளி செல்லும் போது முதலில் அது வீட்டிலுள்ள முரண்பாடுகளை உடைத்து அறிவதிலிருந்தே அதன் கல்வியைத் துவங்குகிறது.

எப்போதும் குழந்தைகளுக்கு பள்ளிப் பாடமும், வீட்டிலுள்ள  பழக்கவழக்கமும் இருவேறு துருவங்களாய் தெரிகிறது. வீடு மற்றும் பள்ளியினது இரண்டு முரண்பட்ட கற்பிதங்களுக்கு நடுவே நின்று குழம்பியபடி வாழ்க்கை என்பதென்ன, கல்வியென்பதென்ன என்பதை மெல்ல மெல்ல அவர்கள் கற்றுக் கொண்டிருக்கிறார்கள். பள்ளியில் பூமியின் தோற்றத்தைப் பற்றி அறிந்து கொள்ளும் அதே குழந்தை வீட்டில் அத்தனையும் கடவுள்தான் படைத்தார் என்றும் நம்ப வைக்கப்படுகிறது. இந்த குழப்பங்களை ஆராய்ந்து உண்மையைக் கண்டறிவதிலிருந்தே அவர்களின் கற்றல் பயணம் ஆரம்பமாகிறது.ஆனால் இந்த தெருக்களே பள்ளிக்கூடம் என்கிற ராகுல் அல்வாரிஸ் அவர்களுடைய அனுபவங்கள் நம்மை வேறொரு தளத்திற்கு கொண்டு சேர்க்கின்றன. பள்ளி செல்லும் பருவத்தினரான அவர் தன் தந்தையின் வழிகாட்டலின் பேரில் வெளியே தன் வாழ்க்கையை பலவிதமான பரிணாமங்களில் கற்கத் துவங்குகிறார்.

முதன் முதலில் தன் தந்தையின் நண்பராக மீன்கள் அருங்காட்சியாகத்திற்கு செல்லும் அவர் அங்கு மீன் தொட்டிகள் எவ்வாறு செய்யப்படுகின்றன, அதில் மீன்கள் வாழ்வதற்கான செயற்கையான சூழல் எவ்வாறு உருவாக்கப்படுகின்றன, அதில் எந்த வகையான மீன்களைத் தேர்வு செய்ய வேண்டும், அதற்கான உணவு முறைகள் என்னென்ன ஆகியவற்றை அங்கே கற்றுக் கொள்கிறார். இங்கு முக்கியமான விஷயம் என்னவென்றால் இங்கே அவர் கற்றுக் கொள்கிற ஒவ்வொன்றும் ஆர்வத்தின் பேரில் அதனதன் அனுபவம் கிடைக்க வேண்டித்தான் நடக்கிறதே தவிர அதை ஒரு பொருளீட்டுகிற வணிகத்தின் நோக்கத்திற்காகச் செய்யவில்லை.

அடுத்ததாக தாவரவியல் கண்காட்சி, மலர்கள் கண்காட்சி, இயற்கை விவசாயம், மண்புழு வளர்ப்பு என்று தன் தந்தையின் உதவியினாலும் வலைதளங்களில் தேடிப்பிடித்து தன் சுய முயற்சியாலும் அவர் பல்வேறு அனுபவங்களைப் பெற தங்கிப் பயில்வதற்கு பல்வேறு இடங்களுக்கு சென்று கொண்டே இருக்கிறார்.

சென்னையில் முதலைப் பண்ணியில் விலங்குகளுக்கு உணவளிப்பது, பாம்புகளைக் கையாளுவது, ஆமை முட்டைகளை சேகரித்து குஞ்சு பொரித்த பின் கடலில் விடுவது (Turtle walk), காடறிதல் நிமித்தமாக விலங்குகள் கணக்கெடுப்பு குழுவுடன் பயணமாகுவது என ராகுல் அல்வாரிஸ் பயணம் செய்த அனுபவங்களென இப்புத்தகம் பல்வேறு விஷயங்களை நம்முள் கடத்திக் கொண்டே இருக்கிறது.

இறுதியில் பள்ளிப்படிப்பு முடிக்கையில் பல்வேறு அனுபவ அறிவோடு வந்து நிற்கிற ராகுல் அல்வாரிஸை பல்வேறு பல்கலைக்கழகங்கள் தங்கள் கல்லூரிகளுக்கு வந்து கலந்துரையாட அழைத்துக் கொண்டே இருக்கிறது. இப்புத்தக்கம் ராகுல் அல்வாரிஸ் அவர்களின் மாற்றுவழி பயணப்பட்ட கல்வியின் இன்னுமொரு வடிவம்.எங்கள் ஊரில் பள்ளி விடுமுறையில் தீப்பெட்டி ஆபீஸ்களுக்கு, அச்சகங்களுக்கு, காலண்டர் கம்பெனிகள் என்று மாணவர்கள் பள்ளி கட்டணம் செலுத்துவதற்காக வேலைக்கு செல்லும் வழக்கமுண்டு. அப்படி விடுமுறையில் சம்பாதித்து சேமித்த பணம்தான் அவர்களின் பள்ளிக் கட்டணமாகவோ பள்ளிச் சீருடையாகவோ உருமாறும். 

அன்றாட வீட்டுச் செலவுகளுக்குள் முடிந்து போகிற உழைப்புப் பணத்தையும் தாண்டி அவசரச் செலவுக்காக தான் முன்பணமாக வாங்கிய கடனை அடைக்க கம்பெனியில் சம்பளமின்றி வேலை செய்கிற பெற்றோர்களுக்கு மத்தியில் தன் படிப்பிற்காக தானே சம்பாதித்துக் கொள்ளும் மாணவர்கள் என் காலத்தில் அநேகமாக இருந்தார்கள். ஒருவேளை குழந்தைத் தொழிலாளர்கள் அதிகமாய் இருந்ததற்கு இதுவும் ஒரு காரணமாய் இருந்திருக்கக் கூடும்.

என் காலத்தில் பள்ளிக்கால சுவாரஸியங்களைவிட தெருவிளக்குகளுக்கு கீழே அமர்ந்தபடி படித்து விளையாடிய நினைவுகளே அதிகம். பள்ளிக்காலத்து அனுபவமென்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக அமைகிறது. அப்போது பெண்களெல்லாம் தீப்பெட்டி ஆபிசுக்கு படையெடுப்பார்களென்றால் பசங்களெல்லாம் டூ-வீலர், கார் ஓர்க் ஷாப்புகளுக்கும், லாரியில் கிளீனர் வேலைக்கும் செல்வார்கள்.

பள்ளிக்கால தேர்வு விடுமுறைக் காலத்தில் நான் ஒரு கிளீனராக இரண்டு மூன்று முறை பயணம் செய்திருக்கிறேன். ஒரு பள்ளி மாணவனாக அத்தகைய அனுபவம் எனக்கு பெருமதிப்புக்குறியது. லாரியின் முகப்பில் அமர்ந்து கொண்டு பெரிய சட்டகக் கண்ணாடியின் வழியே சாலையை பார்ப்பது ஒரு பெரிய மனிதனது தோற்றத்தை எப்போதும் எனக்குள்ளே ஏற்படுத்தும். பக்கவாட்டுக் கண்ணாடியின் வழியே பின்னால் வருகிற வாகனங்களை அவதானித்துக் கொண்டே போகிற எதிர்படுகிற வாகனங்களுக்கு கையசைத்தவாறு லாரியிலிருந்தவாறே துடுப்பசைத்துக் கொண்டிருப்பேன். அப்போது எதிர்படுகிற கையசைக்கும் குழந்தைகளைப் பார்த்து மறுகை அசைத்துக் காட்டுவதற்கு ஒருபோதும் நான் தயங்கியதில்லை.ஓட்டுநர் அருகிலே அமர்பவர்கள் தூங்கு மூஞ்சிகளாக இருக்க கூடாது என்பதே முன் இருக்கையில் அமர்வபவர்களுக்கு விதிக்கப்படுகிற முதல் கட்டளை. அது ஓட்டுநரையும் அசத்தி தூங்க வைத்துவிடும் என்பதால் அவரோடு நானும் என்னோடு அவரும் பேசியபடியே கடந்துபோன இரவுகள் இப்போதும்கூட நட்சத்திரங்களைப் பார்க்கையில் நினைவில் வந்துவிழும். இடைவிடாத அசட்டுப் பேச்சுகள், எப்.எம் ரேடியோவில் பாடல்களென அத்தனையும் மீறி வருகிற தூக்கத்தை அதற்கும் மேலும் கட்டுப்படுத்த மனமின்றி சாலையோரத்தில் நிறுத்தி தூங்க முயலும் போது அவ்வாறு நிறுவதற்காக நாங்கள் யாரிடமும் அனுமதி கேட்டதில்லை. ஓட்டுநர்களுக்கென்ற ஒளிவுமறைவாக திறந்து வைத்திருக்கிற பிரத்தியேகமான சாலையோர உணவகங்களில் கிடைக்கிற தோசையும் இட்லியும் அங்கு நடக்கிற காரசாரமான பேச்சுகளும் முன்பின் அறிந்திடாத சுவையான அனுபவங்கள்.

அங்குதான் சாலையோர மரங்களுக்கு கீழே நிழல்படிந்த இருளுக்குள் மூக்காடிட்டபடி மறைந்து ஒதுங்குகிற பெண்கள் பற்றிய இன்னொரு பக்கத்தை அறிந்து கொண்டேன். அவர்களைப் பற்றிய ஓட்டுநர்கள் சொல்கிற கதைகள் அத்தனையும் கண்ணீர் கதைகள்தான். நாம் அன்றாடம் கடந்து செல்கிற இந்த சாலையோர சந்துகளில் எத்தனை எத்தனை குடும்பங்களின் வாழ்க்கை விபத்துக்குள்ளாகி கிடக்கிறதென்று பெருங்கவலை அப்போது சூழந்து கொள்ளும்.

டோல்கேட்டுகளில் பூ விற்க வருகிற சிறுமிகளின் கைகளை உரசுகிற, இப்பவே இப்படினா வளந்த பின்னாடி எப்படி இருப்பா என்கிற மனிதர்களின் அருவருப்பான பேச்சுகளென அங்கே எல்லாமும் சர்வ சாதாரணமயமாக இருக்கும். இப்படியாக வாழ்வைப் பற்றிய பலவிதமான கற்பிதங்களை உடைத்ததும், வாழ்க்கையென்பது படிப்பு மட்டுமல்ல என்பதைப் புரிய வைத்ததும் இதுபோன்றதொரு கிடைத்தற்கரிய அனுபவங்கள்தான்.

ராகுல் அல்வாரிஸையும் நம்மூர் பிள்ளைகளையும் ஏனோ ஒரே சமயத்தில் யோசித்துப் பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது. ஆனால் அவர்களை ஒரே தராசில் வைத்து மதிப்பிட நான் எப்போதும் விரும்பவில்லை. இருவரின் நோக்கம் எப்படி வேறோ அவ்வாறே அவர்களின் வாழ்க்கையென்பதும் வேறுதானே!

ஒரு ராகுல் அல்வாரிஸைப் போல பள்ளிக்காலத்தில் பணிபுரிந்து கொண்டே படித்த கிராமத்து இளைஞர்களின் பள்ளிக்கு வெளியேயான கற்பிதங்களைப் பற்றி எழுதினால் இன்னும் நிறைய சுவாரசியமான விஷயங்கள் நமக்குக் கிடைக்கக்கூடும். அந்த வகையில் பள்ளிக்கு வெளியே தெருக்களில் கற்கும் வாழ்பனுவங்களைப் பற்றிய புதியதோர் திறப்பை ஏற்படுத்துகிற ‘தெருக்களே பள்ளிக்கூடம்’ புத்தகம் சிறப்பானதொரு இவ்வாண்டின் வருகை என்றே சொல்லலாம்.தெருக்களே பள்ளிக்கூடம்

தன்னறம் நூல்வெளி, குக்கூ காட்டுப்பள்ளி

ராகுல் அல்வாரிஸ்

தமிழில் சுஷில் குமார்

விலை-200

9843870079Leave a Response