Book Review

தெய்வம் என்பதோர்… – தொ. பரமசிவன் | நூல் மதிப்புரை: பெ. அந்தோணிராஜ்

Spread the love

தொ. ப என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் இந்நூலாசிரியர் நெல்லை ம. சு. பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றியவர். இவரது அழகர் கோயில், பண்பாட்டு அசைவுகள், சமயங்களின் அரசியல், அறியப்படாத தமிழகம் போன்ற கட்டுரை நூல்கள் விரும்பி வாசிக்கப்பட்டவை.

தமிழ் பண்பாட்டுக்கூறுகளை தெருக்களில், வயல்வெளிகளில், மலைப்பாறைகளில், நடுகற்களில், கோயில்களில், குகைகளில் தேடிக்கண்டறிந்தவர், அவருடைய கூற்றுப்படி இன்னும் நாம் ஆராய வேண்டியவை நிறைய இருக்கிறது. இனி இந்நூலைப் பற்றி…..

பழந்தமிழர்களின் தாய்த் தெய்வக்கோயில்கள் 99விழுக்காடு வடக்கு நோக்கியே அமைந்துள்ளன.

பழந்தமிழகம் முப்புறமும் கடலால் சூழ்ந்து வட பகுதி மட்டும் நிலத்தொடர்பு பெற்றது, அதனால் பகைவர்கள் வடபுறமிருந்து மட்டுமே வரமுடியும், அதனால் அத்திசை நோக்கி ஆய்தங்களுடன் அமர்ந்து காத்தருள்வாள் என்ற நம்பிக்கையில்தான் அம்மன் கோயில்கள் வடதிசை நோக்கி அமைந்தது.

அரசுகள் உருவானபோது போர்த்தெய்வமாக மாற்றப்பட்டு ‘கொற்றவை ‘என்ற பெயரோடு வழங்கப்பட்டது. பெருந்தெய்வ கோயில்களில் இருக்கும் பெண்தெய்வங்கள் கையில் பூ ஏந்தி நிற்கும்போது தாய்த் தெய்வங்களின் கையில் ஆயுதங்கள் இருக்கும்.

பண்டைய இலக்கியங்களில் தாய்த் தெய்வம் ‘செல்வி ‘என்று குறிப்பிடப்படுகிறது. செல்வி என்றால் குழந்தை பெற்ற தாயவள். அம்மன் என பிற்காலத்தில் வழங்கப்பட்டச் சொல் சீமாட்டி அல்லது உயர்குடிப்பெண் என்று பொருள்படும்.

வைதீகம் முழுமையாகத் தமிழ்நாட்டில் வெற்றி பெற்றபோது தாய்த் தெய்வம் சிவனின் மனைவியாகவும், திருமாலின் தங்கையாகவும் ஆக்கப்பட்டாள். அவள் தோற்றக்கூறுகள் ஓரளவு மறைக்கப்பட்டு குடும்பஅமைப்பின் அச்சாணியாக மாற்றப்பட்டாள்.

வடக்கு நோக்கி அமர்ந்திருத்தல், கையில் ஆயுதம் ஏந்தி இருத்தல், தலையில் பெரும்பாலும் அக்னி மகுடம் ஏந்தி இருத்தல் கழுத்தில் காறையும் பொட்டும் அணிந்திருத்தல் தாய்த் தெய்வத்தின் தனி அடையாளங்கள் ஆகும். வழிபாட்டு முறைகளிலும் பொங்கல், முளைப்பாரி, சாமியாட்டம், இரத்தப்பலி இவையெல்லாம் தாய்த் தெய்வத்தின் தனிக்கூறுகளாகும்.

தமிழ்நாட்டில் பல்லவ, பாண்டிய, சோழர் காலங்களில் சைவ, வைணவ சமயங்கள் பேரெழுச்சி பெற்றன. கிபி 11ஆம் நூற்றாண்டு வரை தமிழகத்தின் பெருந்திரளான மக்கள் தாய்த் தெய்வ வழிபாட்டில்தான் நின்றிருந்தனர்.

தமிழ்நாட்டின் பெருந்தெய்வக்கோயில்களில் சிலவற்றில் தாய்த் தெய்வமே ஆழ்ந்த பக்திக்கும், பெருத்த மரியாதைக்கும் உரியதாக விளங்குகிறது. கன்னியாகுமாரி, திருநெல்வேலி, மதுரை, காஞ்சி, திருவானைக்கா(வல் )போன்ற ஊர்களில் நாம் இதைக்காணலாம்.

சிலப்பதிகாரம் குறிப்பிடும் ‘தென்னவன் குலமுதல் கிழத்தி ‘மீனாட்சியாகத்தான் இருக்கவேண்டும்.

நவராத்திரி விழாவில் எட்டாம் நாள் விழாவில் மீனாட்சிக்கு வேப்பம் பூ மாலை சூட்டப்படுகிறது. வேப்பம்பூ மாலை சூடுதல் என்பது தமிழ்நாட்டில் வேறு எங்கும் கேட்டும் கண்டும் அறிந்திராத செய்தியாகும். வேப்பம்பூ பாண்டியரது மாலையாகும் என்பது இங்கு ஒப்புநோக்கத்தக்கது.

திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி கோயிலில் நவகண்டம்(தன் தலையை தானே அரிந்து அம்மனுக்கு காணிக்கையாக்குதல் ) கொடுக்கும் சிற்பச்சான்றுகள் உள்ளன.

இக்கோயிலில் நண்பகல் ஒரு வேளை மட்டும் பூசாரி சேலையை தன் உடம்பில் சுற்றி பெண்ணாக பாவனை செய்து பூசை செய்யும் பழக்கம் உள்ளது.

ஒரு அம்மன் கோயிலை வைதீகமயப்படுத்த ஸ்ரீ சக்ர பிரதிஷ்டை செய்வது என்பது தெய்வத்தின் அடங்காச்சினத்தைக் குறைக்க மந்திரங்களை செப்புத்தகட்டில் எழுதி தலைவாசலில் பதிப்பதாகும்.

இப்போதுள்ள சிருங்கேரி கிளை மடமான காஞ்சி மடத்துக்குச்சொந்தமான காமாட்சி அம்மன் கோயில் கம்மாளர்களுக்குச் சொந்தமானது. இது பௌத்தர்களின் தாரா தேவி வழிபாட்டிலிருந்து தோன்றியிருக்கவேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். தமிழ் நாட்டில் தெலுங்கு மொழிப்பேசும் கம்மாளர்கள் இன்றளவும் தங்களது குலதெய்வமாக பங்காரு காமாட்சியம்மனையே வழிபடுகின்றனர்.

கோவில்களை குறிக்க கோட்டம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயில் இன்றளவும் காமக்கோட்டம் என்றே வழங்கப்பெறுகின்றது, பார்ப்பனச் சொல்லாடல் இதனையே’ காமகோடி ‘ என்று தன்வயமாக்கி வைதீகமயப்படுத்தியுள்ளது.

பொதுவாக தாய்த் தெய்வங்கள் ஆறாத சினம் கொண்டவையாகும், எனவே அவைகள் அக்னி மகுடம் உடையனவாக உள்ளது. சடங்குகளே தாய்த்தெய்வக் கோயில்களில் முதன்மை பெறுகின்றன, பெருந்தெய்வ கோயில்கள் போல அங்கு வரையறுக்கப்பட்ட விழாநாட்கள் கிடையாது.

தமிழர் வீடுகளில் பிரசவம் நடந்த வீட்டின் பின்புறம் மகப்பேறுத் தீற்றைக் கழிப்பதற்காக ஒரு சடங்கு செய்வார்கள், இது தாய்த்தெய்வ வழிபாட்டின் எச்சமேயாகும். தாய்தெய்வத்தின் பெயர்கள் “வெயிலுகந்தாள், கருக்கினிலமர்ந்தாள், வாள்மேல் நடந்தாள் “போன்றவையாகும்.

தென் தமிழ்நாட்டில் அம்மன் என்றழைக்கப்படும் தாய்தெய்வங்கள் வட தமிழ்நாட்டில் ஆயி என்றழைக்கப்படுகிறது. குழுமாயி, பூமாயி, பெரியாயி, சிலம்பாயி என்பன வழங்ககப்படுகின்றன. பத்ரகாளி, பங்காரு காமாட்சி, லோகநாயகி என்று தாய்தெய்வங்களுக்கு பெயரிட்டு வணங்குகின்றனர்.

அரச குடும்பத்து பெண்களின் சமாதிமேல் எழுப்பப்பட்ட பள்ளிப்படை கோயில்களும் தாய்தெய்வக் கோயிலாகிப்போனது. திராவிட மொழிப்பேசும் மக்களிடத்தில் தாய்த்தெய்வ வழிபாடு மிக ஆழமாக வேரூன்றியுள்ளது.

நெல்லை, குமரி மாவட்டங்களில் பரவலாக வணங்கப்பெறும் இசக்கியம்மன் ஒரு சமண சமயதெய்வமாகும். சமண மதம் தமிழ்நாட்டில் 13ஆம் நூற்றாண்டோடு அழிந்து போயிற்று. இதேப்போல வட தமிழ்நாட்டிக் வணங்கப்படும் பொன்னியம்மனும் ‘ஜ்வாலா மாலினி ‘என்ற சமண தெய்வமேயாகும்.

வைதீகத்திற்கு அடிமைப்படாத எளிய மக்களின் தெய்வமாக இசக்கியும், பொன்னியம்மனும் விளங்குகின்றன.

மறைந்துவிட்ட சாக்த, காளாமுக, காபாலிகா வழிபாட்டோடு தொடர்புடைய தெய்வங்களின் வழிபாடு சுடுகாடுகளில் நிகழ்த்தப்படுகிறது. பெரும்பாலும் சடங்குகளாகவே அமைகின்றன. இத்திருவிழாக்கள் மயானக்கொள்ளை எனப்படுகிறது. ஸ்மஷாணம் என்ற வடசொல் மசானம் –மயானம் –மாசானம் –மாசாணி எனதிருந்தி வழங்கப்படுகிறது.

பழையனூர் நீலிக் கதை வணிகர் ×வேளாளர் பூசல் காரணமாக எழுந்தது ஆகும். இக்கதை சேக்கிழார் புராணத்தில் வேளாளரின் பெருமைகளை நிலை நாட்டும் முகமாக எழுதப்பட்டுள்ளது.

பொதுவாக, பெண்கள் அம்மை நோயினால் இறந்திருந்தால் அவர்கள் மரியம்மனாக திருநிலைப்படுத்துவது மரபாகும். சோழப்பெருந்தேவி ஒருவரின் பள்ளிப்படைக் கோயிலாகவே புகழ்பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோயில் இருக்கவேண்டும் எனப் பண்பாட்டு ஆய்வாளர்கள் மதிப்பிடுவர்.

பக்தி இயக்கத்தின் எழுச்சியின் போது சிவனுக்கு மகனாக முருகன் மாற்றப்படும்போது திருநாவுக்கரசர் மட்டும் முருகனின் மனைவி வள்ளி என்ற கதையை ஏற்றுக்கொள்கிறார். மற்ற பக்தி இயக்க முன்னோடிகள் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை.

பக்தி இயக்க காலகட்டத்தில் முருகனின் மனைவியாக தெய்வானை எங்கும் பேசப்படவில்லை என்பது இங்கு குறிப்பிடவேண்டும்.

பெருஞ்சசமய நெறிக்குள் முருகன் கொண்டுவரப்பட்ட பின் தெய்வானை மனைவியாக்கப்படுகிறாள், ஊர்தியாக மயிலும், ஆட்டுகிடாயும், கொடியாக சேவலும் வந்து சேருகின்றன.

தெய்வங்களிலும் மேல் -கீழ் காட்டுவதற்கு முருகனின் இருபுறமும் மனைவியர் நிற்கும் சிற்பங்களில் தெய்வானைக்கு மட்டும் மார்பு கச்சு இருப்பதை காணலாம்.

பார்ப்பனப் பூசைக்கு முருகன் உட்பட்ட பிறகு, கிடாய்வெட்டு, தேன், தினையரிசி, கிழங்கு போன்றவை படைப்பது தவிர்க்கப்பட்டது.

தமிழகத்தில் நில ஆவணங்களை பாதுகாக்கும் பொறுப்பில் இரண்டு சாதியினர் மட்டுமே இருந்துள்ளனர். தென்பகுதியில் வேளாளரும், வட பகுதியில் கருணீக முதலியாரும்.

கருணீகர்களுக்கு உரிய தெய்வமாக கையில் எழுதுகோலுடன் இருக்கும் சித்ரகுப்த நாயனார் காஞ்சிபுரத்தில் எழுந்தருளியுள்ளார். அது போலவே தென்பகுதியில் போடிநாயக்கனூர் அருகிலும் பரிபாலனம் செய்கிறார்.

சித்திரை முழுநிலவன்று சித்திரகுப்த நாயனாருக்கு விழா எடுக்கப்படுகிறது.

உலக வரலாறு நெடுகிலும் ஒரு பிரிவினரின் வழிபாட்டிடத்தை மற்றவர் இடிப்பதும், அழிப்பதும் தொடர்ந்துநடைபெற்று வருகிறது. ஆனால் தமிழ்நாட்டில், திருநெல்வேலி மாவட்டம் சிங்கிகுளம் மக்கள் மட்டும் ஒரு சமணக்கோயிலை பகவதியம்மன் கோயிலாக்கி வழிபட்டு அங்கிருக்கும் தெய்வங்களை தமது தெய்வமாக்கிக்கொண்டனர். சனநாயக உணர்வுள்ள எளிய மக்கள் தெய்வங்களை கைவிடுவதில்லை, அதற்கு சாட்சியாக விளங்குகிறது சிங்கிகுளம் நியாய பரிபாலன பெரும்பள்ளி.

திருவாசகத்தின் மீது சோழர்களின் சைவ அரசு கொண்டிருந்த விலகல் போலவே, பாசுபத சைவ நூலான திருமந்திரத்தைத் தோத்திர நூலாகக் காட்ட முயலும் விலகல் போக்கு சித்தாந்த சைவத்திலும் உண்டு.

திருவாசகம் குறுந்தேசியவாதத்தை முன்னெடுத்தது. அது வீட்டில் முற்றோதல் மட்டுமே செய்யப்படுகிறது.

சைவத்தில் ஏற்பட்ட மோதல்களும், முரண்களும் அடுத்து வரும்காலங்களில் உள்வாங்கப்பட்டு, செரிமானம் செய்யப்பட்டுள்ளது.

வள்ளலார் காலம் வரை கோயிலில் உணவு உண்ணும் உரிமை பார்பனர்களுக்கே இருந்துள்ளது, இவர்தான் சாதிபேதமின்றி அனைவருக்கும் பந்தியிட்டவர்.

தமிழகத்தில் இருக்கும் அனைத்து மடங்களும் சாதிய நியதியை கடைபிடிக்கின்றன

ஆழ்வார்கள் பாடல்களில் கண்ணன் அவதாரமே முக்கியத்துவம் பெறுகின்றன அதே சமயம் அவர்களின் பாடல்களில் கீதையைப் பற்றி ஓரிரு இடங்களில் மட்டுமே குறிப்பிடப்படுகிறது. இது ஒரு வியப்புக்குரிய செய்தியாகும்.

வரலாறு என்பது மதக்கொலைகளாலும் அரசர்களின் கூத்துகளாலும் ஆனது, வேதங்களிலும் பொய் வேதங்கள் உண்டு, மூத்தலைமுறையினரும் பொய் நடைக்காரராக இருப்பர் என்று துணிந்து சொன்ன முதல் கவி பாரதிதான்.

திருமணச்சடங்கு பேசும் வாரணம் ஆயிரத்தில், நாத்தனார் மாலை சூட்டினாள் என்றும் மணமக்கள் மேல் பொறிஅள்ளிப்போடுதலும் பார்ப்பனர் அல்லாத மக்களின் சடங்காகும்.

பெரியாரின் வாழ்வும் நோக்கமும் தன் மக்களின் இருத்தலுக்கும், கண்ணியமான வாழ்விற்குமான போராட்டமுமாக இருந்தன.எனவேதான், ஆண்டுமுழுதும் வெட்டவெளியில் மண் குவியலாய் கிடந்து ஆண்டிற்கொருமுறை உயிர் கொண்டெழும் நாட்டார் தெய்வங்களை அவர் எதிகொள்ளவேயில்லை. மாறாக அதிகார மையத்தையும் ஏற்றத்தாழ்வுகளை மட்டுமே எதிர்த்தார்.

நண்பர்களே தொ. ப. வின் படைப்புகள் அனைத்தும் இதுவரை நமக்குத் தெரியாத விஷயங்களையும் கருத்துக்களையும் அறியவைக்கிறது என்பதை மாற்றுக்கருத்து எழப்போவதில்லை.
வாசியுங்கள், புதியன தெரிந்து கொள்ளுங்கள்

அன்புடன்

பெ. அந்தோணிராஜ்
தேனி.

Leave a Response

Top Reviews

Video Widget

gallery