Book Review

நூல் அறிமுகம்: நம்பிக்கைகள் பலவற்றைச் சுமந்து தில்லிக்கு வந்த முஸ்லீம் குழந்தையின் கதை – நியாஸ் ஃபரூகி (தமிழில் தா.சந்திரகுரு)

Spread the love

 

தன்னுடைய கிராமத்து வசதிகளைத் துறந்து விட்டு பீகாரிலிருந்து வெளியேறிய பத்து வயதுச் சிறுவனான நியாஸ் ஃபரூகி சிறந்த கல்வி வாய்ப்புகளுக்காக தில்லியில் உள்ள ஜமியா நகருக்கு வந்து சேர்ந்தான். 2008ஆம் ஆண்டு அந்தப் பகுதியில் நடைபெற்ற பட்லா ஹவுஸ் என்கவுண்டர், அவனோடு சேர்ந்த பல முஸ்லீம்களின் வாழ்வில் மிகமுக்கிய தருணமாக மாறிப் போனது. முஸ்லீமாக இருப்பதில் உள்ள அரசியல் அடையாளத்திற்கு அப்பாற்பட்டு முஸ்லீம் இளைஞர்கள் எதிர்கொள்கின்ற சவால்களை நியாஸ் ஃபரூகி தன்னுடைய நினைவுக்குறிப்புகளை ’சாதாரண மனிதனின் முற்போக்கு உணர்விற்கான வழிகாட்டி’ என்ற தலைப்பில் புத்தகமாக இப்போது எழுதியிருக்கிறார். 

அந்த என்கவுண்டருக்குப் பிறகு, தனது தொலைபேசியில் இருந்த நண்பர்களின் எண்களை நீக்குவதோடு, தொலைபேசி மற்றும் சமூக ஊடகங்களின் மூலமாக தன்னுடைய நண்பர்களுடன் இருந்த தொடர்புகள் அனைத்தையும் நீக்கிய ஃபரூகி, இஸ்லாம், குரான், உருதுக் கவிதைகள் என்று ஜிஹாதியின் தோற்றத்தைத் தன் மீது ஏற்படுத்துவதாக தான் கருதிய அனைத்திடமிருந்தும் தன்னை ஒதுக்கி வைத்துக் கொண்டதாக எழுதுகிறார். காவல்துறை அட்டூழியங்களை நேரில் கண்ட ஃபரூகி, தன்னுடைய உடைமைகளில் எதுவும் ஜிகாதி இலக்கியத்தோடு தொடர்பு இல்லாமல் இருக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்துவதற்காக தன்னுடைய பொருட்கள் அனைத்தையும் கிளறிப் பார்ப்பவராக மாறி விடுகிறார். தன்னுடைய கடிதங்கள், கவிதைகள், நகைச்சுவைத் துணுக்குகள், எழுதி முடிக்கப் பெறாத கட்டுரைகள், செய்தித்தாள்கள் மற்றும் பத்திரிக்கை இதழ்கள் ஆகியவற்றை காவல்துறை மற்றும் தொலைக்காட்சி செய்தி சேனல்களின் கண்களைக் கொண்டு பார்க்க முற்பட்டார். அதன் விளைவாக தன்னுடைய பல்வேறுபட்ட அனுபவங்கள் அனைத்தும் ஒரு கட்டத்தில் ஒரே சாயலைப் பெறத் தொடங்கின என்றும், தன்னிடம் இருக்கும் பொருட்கள் தன்னை தீவிரவாதியாக சித்தரித்து விடுமோ என்ற ஒற்றைச் சிந்தனை கொண்டவராக தான் அதன் மூலம் மாறி விட்டதாகவும் ஃபரூகி எழுதியிருக்கிறார்.  

ஜமியா நகரில் நடந்த அந்த என்கவுண்டருக்கு முன், பின் என்று ஃபரூகியின் வாழ்வில் இரண்டு வெவ்வேறு கட்டங்களுக்கு இடையில் மாறிச் செல்வதாக இந்த நினைவுக் குறிப்புகள் எழுதப்பட்டுள்ளன. இன்றைய இந்தியாவில் இருக்கின்ற முஸ்லீம் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் எதிர்கொள்கின்ற முரண்பாடான அடையாளங்களின் அழுத்தத்தை ஃபரூகியின் இந்தப் புத்தகம் வெளிக் கொணர்கிறது. முஸ்லீம்களின் அடையாளத்தை அரசியல்மயமாக்குவதன் மூலம் தாங்கள் ஒதுக்கப்படுவதை உணராமல், தங்களுடைய சுயம், சமூகம் சார்ந்த உணர்வுகளை முஸ்லீம்களால் பெற முடியுமா என்ற கேள்வியை எழுப்புகின்ற வகையில் ஃபரூகியின் நினைவுக் குறிப்புகள் உள்ளன.

Book Review: A Heartbreakingly-powerful Memoir of a 'Normal ...

அந்தப் புத்தகத்தின் முன்னுரைப் பகுதியின் தமிழாக்கம். 

முன்னுரை: உங்களைப் போன்ற ஒருவர்

நீங்கள் வசித்து வரும் பகுதியில், இரண்டு வீடுகள் தள்ளி, தீவிரவாவாதிகள் என்ற பெயரில் உங்கள் அண்டை வீட்டாராக இருந்த இருவர் காவல்துறை என்கவுண்டரில் கொல்லப்பட்டனர் என்பதை அறியும் போது, நீங்கள் எவ்வாறு நடந்து கொள்வீர்கள்? இது ஏதோ இம்ஃபால் அல்லது ஸ்ரீநகரில் நடப்பதாக நினைத்துப் பார்க்காதீர்கள். ஏனெனில் அங்கெல்லாம் இதுபோன்ற நிகழ்வுகள் கேள்விப்படாதவை. உண்மையில் இதுபோன்ற நிகழ்வுகள் நீங்கள் வசிக்கின்ற பாதுகாப்பான, வசதியான சுற்றுப்புறத்தில் மட்டுமே நடக்கக்கூடும். 

உண்மைகளை அறிந்து கொள்வோம்

2008ஆம் ஆண்டு செப்டம்பரில் தெற்கு டெல்லியில் உள்ள ஜமியா நகரில் உள்ள ஜமியா மத்திய பல்கலைக்கழகத்தின் அருகே இது நடந்தது. இந்த என்கவுண்டர் மோதல் உண்மை என்றே சிலர் நம்பினர். டெல்லி காவல்துறை ஆய்வாளர் ஒருவர் அப்போது கொல்லப்பட்டது, அந்த நிகழ்விற்கு துரதிருஷ்டவசமான திருப்பத்தைக் கொடுத்தது மட்டுமல்லாமல், காவல்துறையினரால் சொல்லப்பட்ட கதைக்கு நம்பகத்தன்மையை அளிப்பதாகவும் ஆகிப்போனது. என்கவுண்டரில் கொல்லப்பட்ட அந்த மாணவர்கள் தேசத்துரோகிகள் என்பதாகக் கண்டறியப்பட்டனர். ஆனாலும் காவல்துறையினரின் அந்தக் கதை, நான் உட்பட பல உள்ளூர்வாசிகளுக்கு நம்புவதற்கு கடினமான கதையாகவே இருந்தது. 

அந்த இரண்டு இளைஞர்கள் இறந்த இடத்திலிருந்து சுமார் 200 மீட்டர் தூரத்தில் தனித்து வசித்து வந்த எனக்கு அப்போது இருபத்திரண்டு வயது. செய்தித்தாள்களில் வந்த செய்திகளை நான் வாசித்த போது, இறந்து போனவர்களை, என்னைப் போலவே நான் நினைத்துக் கொண்டது எனக்கு இன்னும் நினைவில் இருக்கிறது. எனக்கு மிக அருகே நடந்ததால், அந்த நிகழ்வு என்னை மிகவும் அச்சுறுத்துவதாக இருந்தது. அவர்கள் நானாகவே இருந்ததாக – ஆனாலும் பெயர்கள் மட்டுமே மாறி இருந்ததைப் போன்றே எனக்குத் தோன்றியது. என்னைப் போன்று சிறுவயதில் இருந்தே அவர்களும் தங்கள் குடும்பத்தினரிடம் இருந்து பிரிந்து தனித்தே வாழ்ந்து வந்தார்கள். ஐஏஎஸ் அதிகாரியாக வேண்டும், பைலட் ஆக வேண்டும் என்ற விருப்பம் கொண்டவர்களாக அவர்கள் இருந்தார்கள்.  கொல்லப்பட்டவர்களில் ஒருவர் என்னைப் போலவே ஜமியா மிலியா இஸ்லாமியாவில் படித்துக் கொண்டிருந்தார். என்னைவிட இளையவரான, பதினேழு வயதான அவர் டெல்லிக்கு வந்து சில மாதங்களே ஆகியிருந்தன. ஜமியா நுழைவுத் தேர்வுகளுக்காக தன்னைத் தயார் செய்து கொண்டிருந்த அவர், நான் ஒருமுறை விரும்பியதைப் போன்றே, ஆங்கிலப் பயிற்சி வகுப்புகளிலும் கலந்து கொண்டிருந்தார். 

என்னுடைய அறையைப் போலவே, அந்த தீவிரவாதிகளின் அறைகள் குப்பைகூளங்கள் நிறைந்தவையாக இருந்ததாக ஊடகங்களில் வெளியான செய்திகள் இருந்தன. என் வீட்டிலுள்ள விளக்குகள் இரவில் வெகுநேரம் வரை, இன்னும் சொல்வதானால் அதிகாலை வரையிலும் எரிந்து கொண்டே இருக்கும். நியாஸ் இரவு முழுவதும் படிக்கிற, மிகவும் கடினமாக உழைக்கிற பையன் என்று எனது அண்டை வீட்டார் கூறுவார்கள். நான் எவ்வளவு கடினமாக உழைத்தேன் என்பது என்னுடைய நண்பர்களுக்கும், எனக்கும் மட்டுமே தெரியும். காவல்துறையினர் கதவைத் தட்டிய போது அவர்கள் கதவைத் திறக்கவில்லை என்றார்கள். நானும் கதவைத் திறந்திருக்க மாட்டேன் – முக்கியமான வேலை எதுவும் இல்லாவிட்டால் என்னை எழுப்புவது என்பது கடவுளுக்குக்கூட கடினமான காரியமாகவே இருந்திருக்கும். அவர்களுடைய வீட்டில் இரவு வெகுநேரம் வரை விளக்குகள் எரிந்து கொண்டிருந்ததாக செய்தித்தாள்களில் வெளியான செய்திகளில் குறிப்பிடப்பட்டிருந்தது.  

Batla House Encounter:  talks about his book An …

நிரூபிக்க முடியாத ஆதாரங்களின் அடிப்படையில், பெரும்பாலும் யாரென்றே அறியப்படாதவர்களால், அவர்களுடைய நடவடிக்கைகள் பற்றிக் கூறப்பட்ட கதைகளில், அந்த சிறுவர்கள் உண்மையிலேயே தீவிரவாதிகள்தான் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. அவர்கள் உண்மையில் அவ்வாறாகவே இருந்திருக்கலாம். ஆனால் எந்த விசாரணையுமின்றி முதலிலேயே அவர்களைத் தீவிரவாதிகள் என்று அழைப்பது பொருத்தமற்றதாகவே இருந்தது. பத்திரிகைகளில் வெளியான செய்திகளில் அவர்கள் மீதான குற்றம் குறித்து எந்த சந்தேகமும் குறிப்பிடப்படவில்லை. 

அந்த என்கவுண்டர், டெல்லியில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் முப்பது பேர் கொல்லப்பட்ட ஒரு வாரத்திற்குள்ளாக நடந்தது. குண்டுவெடிப்பு நடந்து ஒரு வாரத்திற்குப் பிறகு, சந்தேகத்திற்கிடமான தீவிரவாதிகளைக் கண்டுபிடிப்பதற்காக ஜமியா நகர் உட்பட பல்வேறு மறைவிடங்களில் காவல்துறையினர் சோதனைகளை நடத்தியதாக செய்திகள் வெளியாகி இருந்தன. அந்த கட்டிடத்தின் காவலாளி, அந்த என்கவுண்டரில் கொல்லப்பட்டவர்களின் உண்மையான அடையாளங்கள் மற்றும் முகவரிகளை, உள்ளூர் காவல்நிலையத்தில் சமர்ப்பித்ததாக கூறியிருந்தார். அந்த என்கவுண்டரின் போது இந்த தீவிரவாதிகள் ஏன் ஜமியா நகரிலிருந்து தப்பி ஓடவில்லை என்று உள்ளூர்வாசிகள் கேட்டனர். காவல்துறையினரும் அவர்களது பங்கிற்கு, அந்த தீவிரவாதிகள் சாதாரண மனிதர்கள் போன்று மாறுவேடமிட்டிருந்ததால், தப்பிச் செல்ல முயற்சிக்காமல் மிகுந்த நம்பிக்கையோடு அங்கேயே இருந்ததாக பதில் கூறினர். ஆனாலும் அவர்கள் அனைவரையும் சந்தேகத்திற்குரிய தீவிரவாதிகள் என்று தங்களுடைய முதல் அறிக்கையிலேயே அவர்கள் அறிவித்திருந்தனர்.

பாலிவுட் திரைப்படங்களில் வருகின்ற வல்லுனர்களைப் போல காவல்துறையினர் இந்த உண்மைகள் அனைத்தையும் ஒரே நொடியில் கண்டுபிடித்தனர். அவர்கள் கண்டுபிடித்ததை ஊடகங்கள் அப்படியே உங்களுக்கும், எனக்கும் வழங்கின. ஏனெனில் அது அவர்களின் வேலை என்பது உங்களுக்குத் தெரியும். நாட்டின் மனசாட்சி திருப்தி அடைந்தது என்றாலும், என்னுடைய மனச்சாட்சி திருப்தியடையவில்லை. அடையவே இல்லை. ஒருவேளை நான் இந்த நாட்டின் ஒரு பகுதியாக இல்லாமல் இருப்பதால் அவ்வாறு இருந்திருக்கக்கூடும். ஒரு நிமிடம் நினைத்துப் பார்த்தேன். நான் ஒருவேளை தேவைப்படாமல் போயிருக்கலாம். நான் பயந்துவிட்டேன். எனக்குள் ஒரு சந்தேகம் இருந்தது. அதைப் போன்றே எங்களுடைய பகுதியில் இருந்த ஒவ்வொரு இளைஞனுக்கும் சந்தேகம் இருந்தது. அதிகாரிகளும், செய்தி அறிக்கைகளும் தங்களுடைய முடிவுகளை அடைந்த வேகத்தில் ஏதோ சந்தேகப்படும்படியாக இருக்கிறது என்பதை எங்களால் உணர முடிந்தது. உங்களுக்கும், எனக்கும் தெரிந்தவற்றைவிட அல்லது நமக்கு யாராவது சொல்லியிருப்பதை விட சற்று அதிகமாகவே ஏதோ அதில் இருக்கிறது என்பதை என்னால் உணர முடிந்தது.   

நானாக கால் கழுவப் பழகிக் கொண்ட வயதிலேயே நான் படிப்பதற்காக தில்லிக்கு வந்து விட்டேன். என்னுடைய பெற்றோர்களிடமிருந்து பதினோரு ஆண்டுகள் தனித்து வாழ்ந்த போது, என்னுடைய சிந்தனைகளை எனது நண்பர்களும், ஜமியா நகரில் பழகியவர்களும், எனது முந்தைய நினைவுகளுமே வடிவமைத்தன. மற்றவற்றை நான் சந்தா செலுத்தி வாங்கிக் கொண்டிருந்த தி ஹிந்து செய்தித்தாள் மூலமாகவே கற்றுக் கொண்டேன். குழந்தைகளைக் கெடுக்கின்ற தொலைக்காட்சிப் பெட்டி என்னிடம் இருக்கவில்லை. 

நான் மதப்பற்றுள்ளதொரு குடும்பத்தில் பிறந்து வளர்ந்தேன். தங்களுடைய செயல்பாடுகளுக்கு கடவுளுடைய அங்கீகாரத்தைப் பெறுவதில் அக்கறை கொண்டவர்களாகவே என்னுடைய பெற்றோர்களும், தாத்தா பாட்டிகளும் இருந்தார்கள். குருட்டுப் பிடிவாதம் கொண்ட மதவெறி பிடித்தவனாகவோ அல்லது அது போன்ற வேறு வகையிலோ நான் வளர்க்கப்படவில்லை. அதற்கு முற்றிலும் மாறாக வளர்க்கப்பட்டேன். எனது தாத்தாவான ததா எனக்கு கவிஞர் அலாமா முகம்மது இக்பால் எழுதிய சாரே சஹான் சே அச்சா பாடலைக் கற்றுக் கொடுத்தார். ராம் என்ற கவிதையையும் கவிஞர் இக்பால் எழுதியுள்ளார் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். அந்தப் பாடலில் ராமனை அவர் இந்தியாவின் தலைவன் எனும் வகையில் ‘இமாம்-இ-ஹிந்த்’ என்றழைக்கிறார்.  முஸ்லீம்களைக் கைவிட்டதற்காக எழுதப்பட்ட ஷிக்வா என்ற ’கடவுளுக்கு ஒரு புகார்’ மூலமாகவும் இக்பால் பிரபலமானவர். மதகுருக்களின் கோபத்தை அது அவருக்குப் பெற்றுத் தந்தது. மேலும் மதநம்பிக்கையற்றவர் என்ற ஃபத்வாவையும் அவர்களிடமிருந்து பெற்றுத் தந்தது.  ஆனால் இக்பால்  அந்தப் புகாருக்கான பதிலை, ஜவாப்-இ-ஷிக்வா என்பதாக அளித்து அனைவரின் வாயையும் மூடினார். 

நீ முகம்மதுவை நேசித்தால், நான் எப்போதும் உன்னுடையவன்

இந்த உலகம் ஒன்றுமில்லை, விதியின் பேனா முழுவதும் உன்னுடையது.

இந்த மண்ணிலிருந்தே நான் எழுந்தேன் 

இந்த மண்ணிலேயே கலந்து விடுவேன் 

என்ற கவிதையையும் ததா எனக்கு கற்றுக் கொடுத்தார். மேலும் முன்பின் தெரியாதவர்களின் நம்பிக்கை மற்றும் உணர்வுகளை அறிந்து கொள்ள முடியாததால் அவர்களுக்கு வணக்கம் தெரிவிப்பதற்கு, சலாமை விட அடாபை பயன்படுத்துமாறு அவர் எனக்கு கற்றுக்கொடுத்தார். இவையனைத்தும், புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வதற்கு, என்னுடைய குடும்பத்தின் கௌரவத்தைக் காப்பாற்றுவதற்கு என்று 1997இல் தில்லிக்கு படிக்க வருவதற்கு முன்பாகவே எனக்கு கற்றுக் கொடுக்கப்பட்டன. மிகவும் மரியாதைக்குரிய நபராக ததா இருந்தார். என்னுடைய பெற்றோர் தங்களுடைய நல்ல செயல்களால் அவருடைய மரபுகளை விட்டுவிடாதிருந்தனர். 

Book Review: An Ordinary Man's Guide to Radicalism | Oracle Opinions

நன்றாகப் படிக்கக் கூடியவன் என்று என்னைக் கருதியதால், தில்லியில் உள்ள பள்ளிக்கு அனுப்பி வைத்தனர் (ஆங்கிலம் எனக்கு நன்றாகத் தெரியும். உதாரணமாக ‘துரோகி’ என்ற வார்த்தையின் அர்த்தத்தை நான் அறிந்திருந்தேன். பெண்ணின் மார்பைக் குறிக்கும் சரியான வார்த்தை எனக்கு தெரியும்). ஜமியா பள்ளியில் ஆறாம் வகுப்பு நுழைவுத்தேர்வில் நான் வெற்றி பெற்றேன். ஐந்தாம் வகுப்பிலிருந்து இருபது பேர் ஏற்கனவே தேர்ச்சி பெற்றிருந்த அந்த ஆறாம் வகுப்பில் சேர்வதற்கு, நுழைவுத்தேர்வை எழுதிய ஆயிரம் மாணவர்களில் ஆறு பேர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டனர். 

அந்த புதிய பள்ளியில் எல்லாமே வித்தியாசமாக இருந்தது. உதாரணமாக, ஏற்கனவே நான் படித்த பள்ளியில் ஹிந்தியே போதனா மொழியாக இருந்தது. ஆனால் ஜமியாவில் உருதுதான் போதனாமொழி.  ஒரேயொரு ஹிந்து வகுப்புத் தோழனோடு முஸ்லீம் பள்ளியில் படித்தும், முஸ்லீம்கள் மட்டுமே வசிக்கும் ஜமியா நகரில் தங்கியும் வாழ்ந்து வந்த நான், நண்பர்கள், மூத்தவர்கள், அந்தப் பகுதியில் வசிப்பவர்கள் என்று அனைவரிடமிருந்தும் பல விஷயங்களைக் கற்றுக் கொண்டேன். அவர்களைப் பற்றியும் கற்றுக் கொண்டேன்.

ஐ.ஏ.எஸ் நுழைவுத் தேர்வுகளில் முஸ்லீம்களுக்கு எதிராக அவர்கள் பாகுபாடு காட்டுகின்றனர். அதனால்தான் எந்தவொரு முஸ்லீமும் ஐஏஎஸ் அதிகாரியாக (நான் அவ்வாறு வர வேண்டும் என்று ததா விரும்பினார்) வரமுடிவதில்லை. அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதை அவர்கள் நியாயப்படுத்துகிறார்கள். நிச்சயமாக, காஷ்மீரில் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது கல்வியறிவு பெற்ற ஒவ்வொரு முஸ்லீமுக்கும் தெரியும். அதே போல் பாலஸ்தீனத்திலும். 

எந்த அளவிற்கு இவற்றை நான் உண்மையிலேயே புரிந்துகொண்டுள்ளேன் என்பது உறுதியாகத் தெரியவில்லை என்றாலும், நான் அதில் சிலவற்றையாவது உள்வாங்கிக் கொண்டிருக்கிறேன் என்பது உறுதி. 

இந்தியப் பல்கலைக்கழகங்களைப் பொறுத்த மட்டில், இது ஒன்றும் புதிதானதல்ல என்றாலும், மாணவர்கள் சண்டையிட்டுக் கொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்த அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் நான் சேர்ந்து பயில்வதை என்னுடைய குடும்பத்தினர் விரும்பவில்லை. எனவே அவர்கள் ஜமியாவைத் தேர்வு செய்தனர். நாட்கள் செல்லச் செல்ல, ஐஏஎஸ் தேர்வு என்பது ஒரு பெருங்கனவு என்பதை மெதுவாக நான் உணர்ந்து கொண்ட போது, மருத்துவப் படிப்பு என் மனதிற்குள் வந்திறங்கியது. என்னாலான முயற்சிகள் அனைத்தையும் மேற்கொண்ட போதும், நுழைவுத்தேர்வில் என்னால் தேர்ச்சி அடைய முடியவில்லை. இறுதியில் உயிரியல் படிப்பில் சேர்ந்தேன். என்னுடைய பாடங்களைப் படிப்பதற்காக நான் செலவிட்ட நேரத்தைக் கொண்டு அதுவே என்னால் செய்ய முடிந்த காரியமாக இருந்தது.  

ஆனால் அந்த மூன்று வருட பட்டப்படிப்பே என் வாழ்நாளின் தலைசிறந்த நேரமாக இருந்தது. கல்லூரியில் பலரையும் நண்பர்களாக என்னோடு சேர்த்துக் கொண்டேன். அங்கே ஒரு மதச்சார்பற்ற சூழ்நிலை நிலவியது. அல்லது நான் அவ்வாறு நினைத்துக் கொண்டேன். எங்களுடைய குழுவில் ஹிந்து ஒருவரும் இருந்தார். அவருடைய மதம் எங்களுடைய மனதில் ஒருபோதும் இருந்ததில்லை. வெள்ளிக்கிழமைகளில் பல்கலைக்கழக மசூதிக்கு தொழுகை நடத்த செல்வது மற்றவர்களின் வழக்கமாக இருந்தது. அது மிகவும் இயல்பானதாக இருந்தது. 

ஏதோவொரு காரணத்தால் எங்களுடைய குழுவில் இருந்த பலரும் மருத்துவப் படிப்பு கிடைக்காதவர்களாகவே இருந்தோம். மருத்துவப்படிப்பிற்கான நுழைவுத் தேர்வில் தேர்ச்சி அடையதாதாலேயே மருத்துவப் படிப்போடு தொடர்புடைய, உயிரிதொழில்நுட்பத் துறைக்கு கீழானதாக்க கருதப்படுகின்ற உயிரியல் படிப்பைப் படிக்க நாங்கள் இங்கே வந்து சேர்ந்திருந்தோம்.  

இஸ்லாம், முஸ்லீம்கள் என்று ஆரம்பித்து அமெரிக்காவுடன் இந்தியாவின் அணுசக்தி உடன்படிக்கை வரையில் பல தளங்களிலும் நீண்ட விவாதங்கள் எங்களுக்கிடையே நடைபெறும். ஆபாசம், கடந்து செல்லும் பெண்ணின் அளவு பற்றியும் கூட நாங்கள் பேசுவதுண்டு. அது எப்போதும் கலகலப்பாக, நிச்சயமாக எங்களுடைய பாடங்களைவிட ரசிக்கும்படியாகவே எங்களுக்கு இருந்தது. 

அடுத்ததாக எம்.எஸ்சி உயிரியலா அல்லது எம்பிஏவா? என்று என்னுடைய எதிர்காலத்தைப் பற்றி பட்டப்படிப்பின் இறுதி ஆண்டில் நான் கவலைப்பட ஆரம்பித்தேன். இந்த இரண்டு விருப்பங்கள் மட்டுமே சாத்தியமானவையாக எனக்குத் தோன்றின. எலிகள், கரப்பான் பூச்சிகள், பூஞ்சைகளுடன் ஆய்வகங்களில் என் நேரத்தைச் செலவிடுவதற்கு நான் விரும்பவில்லை என்பதால் எம்பிஏ படிப்பது என்று முடிவுசெய்தேன். ஆனால் 2008ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த நிகழ்வுகள் என் வாழ்க்கையின் போக்கை முற்றிலுமாக மாற்றியமைத்தன.

Author Neyaz Farooquee launches his book 'An Ordinary Man's Guide ...

தில்லி காவல்துறையினருக்கும், அவர்களால் தீவிரவாதிகள் என்று அழைக்கப்பட்டவர்களுக்கும் இடையே நடந்த மோதலில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர். காவல்துறை ஆய்வாளர் ஒருவர் சுடப்பட்டு, அன்று மாலையில் உயிரிழந்தார்.  

அதற்குப் பிறகு வந்த ஒவ்வொரு நாளிலும், காவல்துறையினரின் தடுமாற்றங்கள், ஊடகங்களின் வெறித்தனமான செய்திகளை உள்ளடக்கிய அந்த என்கவுண்டர் மோதல் என்ற கதை, ஜமியா நகரில் வாழ்ந்து வரும் முஸ்லீம்கள், எங்கள் குடியிருப்புப் பகுதி, எங்கள் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் மீது தொடர்ந்து அவதூறு பரப்பும் வகையிலேயே இருந்ததாகவே அங்கே குடியிருந்தவர்கள் அனைவரும் கருதினோம். அதுகுறித்து யாருக்கும் எந்த சந்தேகமும் இருக்கவில்லை. ஆனால் அந்த என்கவுண்டரோடு விஷயம் முடிந்து விடவில்லை. தீவிரவாதிகளோடு தொடர்பில் இருந்ததாக குற்றம் சுமத்தி தொடர்ந்து மாணவர்களை காவல்துறையினர் அழைத்துச் செல்ல ஆரம்பித்தனர். பட்லா ஹவுஸ் காலனியில் லஜவாப் தேநீர் கடையில் இருந்து சிலரை அழைத்துச் சென்றனர். ’தீவிரவாதிகளில் ஒருவர், தன்னுடைய நண்பரின் வகுப்புத்தோழர்’ என்று ஒரு மாணவர் தன்னுடைய நண்பரிடம் சொல்லி முடிக்கும் முன்பாகவே காவல்துறையினர் அவரைத் தேடி வந்து, கூட்டிச் சென்று விடுவார்கள். இந்த செய்தி எங்கிருந்து வந்தது என்று யாருக்கும் தெரியாது, ஆனாலும் அது அப்படியே ஆழ்ந்து பதிந்து எங்களை அச்சுறுத்திக் கொண்டே இருந்தது. 

என்னுடைய நண்பர்கள் அனைவருமே பயந்து போயினர். சூரியன் மறைந்த பிறகு வெளியே செல்வதையே நாங்கள் நிறுத்திவிட்டோம். லஜவாப், இல்லை பிஸ்மில்லா தேநீர் கடை இல்லை, எங்களுடைய தெருநுழைவில் அமைந்துள்ள அஜ்மத் கபாப் கடைக்கு அப்பால் செல்வதே எங்களைப் பொறுத்தவரை அரிதாகி விட்டது. எங்களுடைய உரையாடலைக் கேட்டுக் கொண்டிருக்கும் ஒருவர் அதனை எவ்வாறு எடுத்துக் கொள்வார் என்று யாருக்குத் தெரியும்? நாங்கள் அனைவருமே அடுத்து நாம்தான் என்று எண்ணிக் கொண்டோம். என்னிடம் மறைப்பதற்கான எதுவும் இல்லை என்றாலும்… அவர்கள் என்னை கைது செய்தால் என்ன ஆவது?

என்னைப் போலவே, என் நண்பர்கள் யாருக்கும் அவர்களது பெற்றோர்கள் தில்லியில் இருக்கவில்லை. நாங்கள் கைது செய்யப்பட்டால் எங்களைக் காப்பாற்றுவதற்கு யாரும் கிடையாது. எங்கள் நிலைமையைப் பற்றி யோசித்த போது, எதிர்காலம் இருண்டு போயிருப்பதாகவே தோன்றியது. ஏராளமான முறை வீட்டிற்குத் திரும்பச் செல்வது பற்றி நினைத்துக் கொண்டேன். நான் தங்கியிருந்த இடத்திலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் ஒரே வாசல் மட்டும் கொண்டிருந்த அந்தக் கட்டிடத்திலிருந்து தீவிரவாதிகள் தப்பிச் சென்றனர் என்ற செய்தி என் நினைவில் இருக்கிறது. அவர்களால் எவ்வாறு அப்படி தப்பிச் செல்ல முடிந்தது என்பது கடவுளுக்கு மட்டுமே வெளிச்சம். இருந்தபோதிலும் அந்த செய்தி அவ்வாறுதான் இருந்தது. ஒருவேளை நான் ஊருக்குச் சென்றிருந்தால், இன்னும் ஒருவன் தப்பி ஓடிவிட்டான் என்றே அவர்கள் கூறியிருப்பார்கள் என்று நான் நினைத்துக் கொண்டேன். எனவே வீட்டிற்குச் செல்லும் யோசனையை கைவிட்டு விட்டேன். இது ஏதோ சித்தம் கலங்கிய பேச்சு என்று நீங்கள் கருதுவீர்களேயானால், முஸ்லீம் குடும்பம் ஒன்றில் பிறக்காததற்காக நீங்கள் உங்கள் ஜாதகத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்ளலாம். அல்லது அந்தக் குடியிருப்புப் பகுதிக்குள் இவ்வளவு நாட்களும் நாங்கள் எவ்விதமான மனநிலையில், பெரும்பாலானோர் அழைப்பதைப் போன்று பாகிஸ்தானியர்களாக இருந்தோம் என்பதை உங்களால் அறிந்து கொள்ள முடியும். 

தூக்கமின்றியே நான் பல இரவுகளை கழித்திருந்தேன். ஜமியா மில்லியா இஸ்லாமியாவில் சேர்ந்ததிலிருந்து என்னால் வெறுக்கப்பட்டு வந்த ஒரு மனிதர் மட்டுமே அந்த கட்டத்தில் எனக்கு உதவினார். சல்மான் ருஷ்டியை ஆதரித்த அவர், தீவிரவாதிகள் என்று சந்தேகிக்கப்படுகின்ற எங்களுக்கு அப்போது ஆதரவளித்து வந்தார்.   

பல்கலைக்கழக அரங்கத்திற்குள் நூற்றுக்கணக்கான முஸ்லீம் மாணவர்கள் நெருக்கமாக இருந்த கூட்டத்தில், ’மற்றவர்களைப் போன்று நீங்களும் தேசப்பற்று கொண்டவர்கள்தான். உங்கள் தேசப்பற்றை வேறு யாரிடமும் நீங்கள் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை’ என்று பேராசிரியர் முஷிருல் ஹசன் கூறிய போது காது செவிடாகும் வகையில் கரவொலி எழுந்தது. 

Neyaz Farooquee – Hyderabad Literary Festival 2020

அடுத்த நாள் அவர் அமைதிப் பேரணி ஒன்றை ஏற்பாடு செய்தார். தீவிரவாதிகள், தீவிரவாதிகள் என்று சந்தேகிக்கப்பட்டவர்கள், முற்போக்குவாதிகள், அடிப்படைவாதிகள் என்று பலவகைகளிலும் அழைக்கப்படுகின்ற நாங்கள் அனைவரும் அந்தப் பேரணியில் கலந்து கொண்டோம். ஜமியா என்று அழைக்கப்படுகின்ற அந்த ‘ஜிகாதி’ ஆய்வகத்தில் எங்களுக்குப் பயிற்சியளித்த ‘பயிற்சியாளர்களும்’ எங்களுடன் கலந்து கொண்டனர். 

ஆண்டின் நடுவே ஈத் பெருநாள் வந்ததால், வீட்டிற்குச் செல்லும் கேள்வி எழவில்லை. ஆனால் என் மனநிலையைச் சரிசெய்து கொள்வதற்காக நான் வீட்டுக்குச் சென்றேன். ஒரு வாரம் கழித்து, நன்றாக இருப்பதாக நான் உணர்ந்த போது வீட்டிலிருந்து திரும்பினேன். திரும்பி வரும் போது கோரக்பூர் ரயில் நிலையத்தில் ரயில் நின்ற போது, ​​ பத்திரிகை வாங்குவதற்காக சென்ற நான் அங்கே இருந்த இந்தியா டுடே இதழின் அட்டையைப் பார்த்தேன். அந்த இருண்ட பழைய நாட்களுக்கு அது என்னை மீண்டும் இட்டுச் சென்றது. 

அந்தக் கட்டுரையில், தன்னுடைய தாயார் இருக்கின்ற சந்தையில்கூட நான் குண்டு வீசுவேன் என்று கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் கூறியதாக மேற்கோள் காட்டப்பட்டிருந்தது. அது பயங்கரமான செய்தியாக இருந்தாலும், நம்ப முடியாததாகவே இருந்தது. அந்த என்கவுண்டருக்குப் பின்னர் வெளியான கண்மூடித்தனமான செய்தியின் ஒரு பகுதியாக வடிவமைக்கப்பட்ட கதையைப் போன்றதாகவே அது தோன்றியது. இவ்வாறான குற்றவாளிகள் தங்கள் வாயை மிகவும் எளிதில் நிச்சயமாக திறக்கமாட்டார்கள்தானே? இவ்வாறு கூறுமாறு ஒருவேளை அவர்கள் சித்திரவதை செய்யப்பட்டிருக்கலாம். கைது செய்யப்பட்ட தங்கள் மகன்களை சந்திப்பதற்கான அனுமதி கைதிற்குப் பின்பாக சில நாட்களுக்கு அளிக்கப்படவில்லை என்று கைது செய்யப்பட்டவர்களின் பெற்றோர்கள், ஜமியா ஆசிரியர்கள் சிலரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொது விசாரணையில் கலந்து கொண்ட போது தெரிவித்தனர். உண்மையில், தங்களுடைய தீவிரவாத மகன்கள் எங்கே தங்கியிருந்தார்கள் என்பதுகூட அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதும்  தங்கள் மகன்களின் முகங்கள் துணி கொண்டு மறைக்கப்பட்டிருந்தன என்று கூறிய பெற்றோர்கள், தங்களுடைய வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்த பிறகுதான் துணிகளை அகற்றுமாறு ஆணையிடப்பட்டதாகத் தெரிவித்தனர்.

அவர்களுடைய முகங்களில் மோசமான காயங்கள் இருந்தன. இதை நினைவுபடுத்தி அந்த பெற்றோர்கள் கூறிய கூட்டத்தில் நானும் கலந்து கொண்டிருந்தேன். அவர்களுடைய முகங்களும், குரல்களும் இன்றுவரையிலும் எனக்குத் தெளிவாக நினைவில் இருக்கின்றன. மேலும், பெரிய பத்திரிகையாளர் ஒருவர் அவர்களிடம் ஒரு ’வெளிப்படையான’ நேர்காணலைச் செய்தார். ஒரு சந்திப்பின் மூலமாக அல்லாமல், கைது செய்யப்பட்ட சில நாட்களுக்குள்ளாகவே இரண்டு முறை நடைபெற்ற சந்திப்புகள் மூலமாக தான் எழுதியதாக அவர் கூறியிருந்தார். அந்தக் கட்டுரையால் ஈர்க்கப்பட்ட நான் ஒரு பத்திரிகையாளராக ஆக வேண்டும் என்று தீர்மானித்தேன். உலகத்தை மாற்றுவதற்காக அவ்வாறு நான் நினைக்கவில்லை, குறைந்தபட்சம் இந்த பத்திரிகைத் துறையில் அரைகுறையான உண்மைகளை அல்லது பொய்களைப் பரப்புகின்றவனாக நான் இருக்க மாட்டேன் என்பதே என்னுடைய எண்ணமாக இருந்தது. 

தேர்வுகளில் மிகக் குறைவான மதிப்பெண் பெற்று என்னுடைய பட்டப்படிப்பை நான் முடித்ததும், இதழியலில் முதுநிலைப் பட்டம் பெறுவதற்காக ஜமியாவில் உள்ள AJK மாஸ் கம்யூனிகேஷன் ஆய்வு மையத்தில் சேர்ந்தேன். அங்கே படித்து முடித்த பிறகு புதுதில்லியில் உள்ள முன்னணி ஆங்கில நாளேட்டிற்காகப் பணிபுரியும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

அந்த என்கவுண்டர் நடந்து பத்தாண்டுகளுக்கு மேலாகி விட்டது. ஆனாலும் அது குறித்த கேள்விகள் இன்னும் என்னுள் இருந்து கொண்டே இருக்கின்றன. அவர்கள் உண்மையில் பயங்கரவாதிகள்தானா? அவ்வாறு இல்லையெனில், அவர்களுக்கு, அவர்களுடைய குடும்பங்கள், நண்பர்களுக்கு மிகுந்த அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது. ஆம் என்றால், இன்ஸ்பெக்டர் சர்மா, அவருடைய குடும்பம், நண்பர்கள் மற்றும் குண்டுவெடிப்புகளில் கொல்லப்பட்டவர்களுக்கு கடுமையான அநீதி இழைக்கப்பட்டுள்ளது. அந்த காவல்துறை ஆய்வாளர் எந்த சூழ்நிலையில் சுடப்பட்டார்? அந்த வீட்டிற்குள் இருந்தவர்கள் அவரைச் சுட்டார்களா? அல்லது காவல்துறையினரால் சுடப்பட்டாரா? ஊடக அறிக்கைகள் மூலமாகப் பார்க்கும் போது, தில்லி காவல்துறையின் சிறப்புக் குழுவில் இடம் பெற்றிருந்த காவல்துறையினர் மீது குற்றம் இல்லை என்று சொல்லி விட முடியாது. சந்தேகத்திற்கிடமான பல என்கவுண்டர்களில் இந்தக் குழுவினர் ஈடுபட்டதாக பல குற்றச்சாட்டுகள் ஏற்கனவே அவர்கள் மீது உள்ளன. முழு உண்மை என்ன? எவரும் அறிய மாட்டார்கள். இந்த கதைகளைச் சொல்பவர்களைப் போலவே, உண்மைகளும் பலவிதங்களில் இருக்கின்றன. 

இப்போதும் கூட, எண்கள் இல்லாத கார்களில் சீருடை அணியாத காவல்துறையினர் அடிக்கடி ஜமியா நகருக்கு பெரும்பாலும் நள்ளிரவில் வந்து செல்கின்றனர் குடியிருப்புவாசிகள் அவர்களை எதிர்க்கும்போது, ​​சில நேரங்களில் காவல்துறையினரைத் தாக்கும் போது, சங்கிலி பறித்தவனையோ அல்லது கார் திருடனையோ அல்லது வங்கதேசத்துக்காரனைத் தேடி வந்ததாக அவர்கள் கூறுகின்றனர். கிட்டத்தட்ட பத்தாண்டுகள் கழித்து காவல்துறையினர் இப்பொழுது நடந்து கொள்கின்ற விதம்கூட, 2008இல் நடந்த அந்த என்கவுண்டர் குறித்து மக்களுக்கு இருக்கின்ற சந்தேகங்களை அதிகமாக்குவதாகவே இருக்கிறது.

Excerpt: An Ordinary Man's Guide to Radicalism - books$excerpts ...

கடந்து வந்த ஆண்டுகளில் எனக்குள் ஏற்பட்ட மாற்றங்களை உணராதவனாகவே நான் இருந்து வந்திருக்கிறேன்.  மதப்பற்று கொண்ட குடும்பத்தில் இருந்து வந்த கிராமத்துச் சிறுவனான நான் தொடர்ந்து பழிவாங்கப்படுகின்ற உணர்வு கொண்ட நகரத்து இளைஞனாக வளர்ந்திருக்கிறேன். பலவகையான நண்பர்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறேன். பறவைகளைக் கவனித்து வந்திருக்கிறேன். மலைகள், காடுகள், ஏரிகளின் அழகை அனுபவித்திருக்கிறேன். மதத்தின் உணர்வுகளை உள்வாங்கியிருக்கிறேன். ஒரு கையால் ஓசை எழுப்ப முடியாது என்பதைக் கற்றுக் கொண்டிருக்கிறேன். இன்னும் பல விஷயங்களை அறியாதவனாகவே நான் இருக்கிறேன். 

அந்த என்கவுண்டர் ஜமியா நகரில் உள்ள பல இளைஞர்களைப் போல என்னையும் கோபமடையச் செய்தது. நான் ஏறக்குறைய அழும் நிலையில் இருந்தேன். மிகுந்த ஏமாற்றத்துடன் நான் அல்லது நாங்கள் எதிர்கொண்டு வருபவற்றை எவ்வாறு சமாளிப்பது என்பதை மட்டும் எண்ணிக் கொண்டிருந்தேன். பிரச்சனைகள் நிறைந்த பகுதிகளில் உள்ள இளைஞர்கள் ஏன் ஆயுதங்களை தூக்குகிறார்கள் என்பதை அது எனக்குத் தெரியப்படுத்தியது. அது ஏன், நடைபெறுகிறது, எவ்வாறு நடைபெறுகிறது? அதைச் செய்ய வேண்டிய அவசியம் இருப்பதாக எது அவர்களுக்கு உணர்த்தியது? 

தில்லி மற்றும் நாடு முழுவதும் நடைபெறுகின்ற குண்டு வெடிப்புகள், தீவிரவாத தாக்குதல்களிலும், அவற்றைத் தொடர்ந்து நடைபெறுகின்ற தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கைகளிலும், தொடர்ந்து அப்பாவி மக்களே அளவிட முடியாத அளவிற்கு மிகவும் அதிகமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள், என்னுடைய சிறிய அளவிலான போராட்டங்கள், அவர்களுடைய போராட்டங்களோடு ஒப்பிடத்தக்கவை அல்ல. ஆனால் ஜமியா நகரின் துன்பங்கள், சாதனைகள், எளிய மனிதர்கள் பற்றிய குரல்கள் பேரிரைச்சலில் கரைந்து கேட்க முடியாது போயிருக்கின்றன. இந்த செய்திகளை நீங்கள் ஒருவேளை கேள்விப்பட்டிருக்கலாம். ஆனாலும் பத்திரிகைகளிலும், தொலைக்காட்சி ஸ்டுடியோக்களிலும் இவை ஒருபோதும் அரங்கேற முடியாது. 

என்னுடைய கதை நம்பிக்கைகள் பலவற்றைச் சுமந்து தில்லிக்கு வந்த குழந்தை ஒன்றின் கதையாக இருக்கிறது; தன் வழியைத் தவற விட்ட இளைஞன் ஒருவனின் கதையாக அது இருக்கிறது. உங்களைப் போன்ற ஒருவரிடம் நான் இவ்வாறு சொன்னால். நீங்கள் என்னுடைய கதையை வாசிப்பீர்களா?

https://www.hindustantimes.com/books/excerpt-an-ordinary-man-s-guide-to-radicalism/story-B6oytOEPyPnZG8vxIKZJiI.html 

https://thewire.in/229453/acknowledging-unraveling-image-good-muslim/ 

நன்றி: தி ஹிந்துஸ்தான் டைம்ஸ், தி வயர்

தமிழில்

தா.சந்திரகுரு

 

Leave a Response

Top Reviews

Video Widget

gallery