நேர்காணல்

இந்தியர்களின் இனவெறி, வெள்ளையர்களின் இனவெறியை விட மிகமோசமானது – அருந்ததி ராயுடன் நேர்காணல் (தமிழில்: தா.சந்திரகுரு)

Spread the love

 

அண்மையில் அமெரிக்காவில் மினியாபொலிஸ் காவல்துறை அதிகாரியால் ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்ற ஆப்பிரிக்க-அமெரிக்கர் கொல்லப்பட்ட நிகழ்வு, உலகெங்கிலும் அமைப்புரீதியாக இருந்து வருகின்ற இனவெறிக்கு எதிராக பெருமளவிலான எதிர்ப்புக்களைத் தூண்டியது. மே 25 அன்று டெரெக் சாவின் என்ற வெள்ளை போலீஸ் அதிகாரி 46 வயதான ஆப்பிரிக்க-அமெரிக்கரான ஃப்ளாய்டின் கைகளில் கைவிலங்கை இட்டு, கழுத்தில் மண்டியிட்டு தரையோடு அழுத்தினார். பொது அரசியல் நிலைப்பாடுகளை எடுக்கத் தெரியாத பிரபலங்கள் உட்பட பல இந்தியர்கள் – ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் மீதான அடக்குமுறைக்கு அடையாளமாக இருந்த ஃப்ளாய்டின் மரணத்திற்கு தங்களுடைய கண்டனத்தைத் தெரிவித்ததோடு, அமெரிக்காவில் நடைபெற்ற போராட்டங்களுக்கு ஆதரவாக குரலும் கொடுத்தனர்.

இதற்கு நேர்மாறாக, இந்தியாவின் பிரதான உரையாடலுக்குள் எப்போதாவது மட்டுமே, சாதியத்தை செயல்படுத்துகின்ற அடக்குமுறை கட்டமைப்புகள் கண்டிக்கப்படுகின்றன. விளிம்புநிலை  சமூகங்களுக்கு, குறிப்பாக தலித் மற்றும் முஸ்லீம் சமூகங்களுக்கு எதிரான பாகுபாடுகளால், இந்தியாவில் அந்த அளவிற்கான கவனத்தின் ஒரு பகுதியைக்கூட பெற முடியவில்லை என்று பலர் குறிப்பிட்டுள்ளனர். எடுத்துக்காட்டாக, 2019 நவம்பர் மற்றும் 2020 மார்ச் 2020க்கு இடைப்பட்ட காலத்தில்,  2019ஆம் ஆண்டு குடியுரிமை (திருத்த) சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற நாடு தழுவிய இயக்கத்தின் போது காவல்துறையின் மிருகத்தனமான தாக்குதல்கள் குறித்து பல செய்திகள் வெளிவந்தன. ஆனால் ஒடுக்கப்பட்ட-சாதி இந்தியர்களுக்கெதிரான எண்ணற்ற சாதியரீதியிலான அட்டூழியங்கள், கொரோனா வைரஸிற்கு எதிரான பொதுமுடக்கத்தின் போது கணிசமாக அதிகரித்துள்ள நிலையில், அவ்வாறு வெளியாகின்ற செய்திகள் பெரும்பாலும் மௌனத்தையே எதிர்கொள்கின்றன.

இந்தியாவில் காணப்படுகின்ற இனவாதம், சாதியம் உள்ளிட்ட பல பிரச்சனைகள் குறித்து இந்திய சமுதாயத்தின் நிலை பற்றி ஊடக தளமான தலித் கேமராவிற்கு அளித்த நேர்காணலில், செயற்பாட்டாளரும் எழுத்தாளருமான அருந்ததி ராய் விவாதித்தார். அமெரிக்காவில் ஃப்ளாய்டின் மரணம் குறித்து நடைபெற்ற போராட்டங்களின் ஒரு பகுதியாக, அடிமை வர்த்தக உரிமையாளரின் சிலையை கீழே தள்ளியது குறித்து கருத்து தெரிவிக்கும் போது, இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு தற்போதைய இந்தியாவில் சாத்தியமே இல்லை என்று கூறிய அவர் ‘அது போன்று சிலைகள் அகற்றப்படும் அல்லது இழுத்து தள்ளப்படும் நாளிலிருந்து நாம் வெகு தொலைவிலே இருக்கிறோம். இப்போது, அதுபோன்ற சிலைகள் நிறுவப்பட்டு கொண்டாடப்படுகின்ற நிலையிலேயே நாம் இருக்கிறோம்’ என்று தெரிவித்தார்.

நேர்காணல்

தலித் கேமரா: நாம் எவ்வாறு அமெரிக்க இயக்கத்தை ஆதரிப்பது? இந்தியாவில் எதிர்ப்பு தெரிவிக்கின்றவர்களுடன் எவ்வாறு  ஒருவரால் தன்னை இணைத்துக் கொள்ள முடியும்?

வெள்ளை அமெரிக்க காவல்துறையால் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் கொல்லப்படுகின்ற தொடர் நிகழ்வுகளில், சமீபத்தியதாக இருக்கின்ற ஜார்ஜ் ஃப்ளாய்டின் கொடூரமான கொலை தொடர்பாக எழுந்த மிகப்பெரிய போராட்டங்களைப் பற்றியே நீங்கள் கூறுகிறீர்கள் என்று நான் கருதுகிறேன். அந்த இயக்கத்தை ஆதரிப்பதற்கான சிறந்த வழி, அது எங்கிருந்து வருகிறது என்பதை முதலில் புரிந்து கொள்வதே ஆகும். அடிமைத்தனம், இனவாதம், சிவில் உரிமைகள் இயக்கம் – அதன் வெற்றிகள் மற்றும் தோல்விகளின் வரலாறு பற்றி புரிந்து கொள்ள வேண்டும். நேரடியாகவும் நுட்பமான வழிகளிலும் உணர்வற்றவர்களாக, சிறைப்படுத்தப்பட்டவர்களாக, உரிமையற்றவர்களாக வட அமெரிக்காவில் உள்ள ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் ’ஜனநாயகம்’ என்ற கட்டமைப்பிற்குள் மாறியிருக்கின்ற வரலாறு பற்றி புரிந்து கொள்ள வேண்டும். இவையனைத்திலும் அமெரிக்காவில் உள்ள பெரும்பாலான இந்திய சமூகம் கொண்டிருந்த பங்கைப் புரிந்து கொள்ள வேண்டும். அந்த சமூகம் பாரம்பரியமாக யாருடன் தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறது? இதற்கான பதில்கள் நமக்கு, நம்முடைய சொந்த சமுதாயத்தைப் பற்றி ஏராளமாகச் சொல்லும். நம்முடைய சொந்த விழுமியங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து ஓரளவு நேர்மையுடன் உரையாடினால் மட்டுமே, அங்கே உள்ள கலாச்சாரங்கள் மற்றும் சமூகங்களில் ஏற்படுகின்ற மிகஅதிக அளவிலான சீற்றத்தை நம்மால் ஆதரிக்க முடியும். சகோதரித்துவம், சகோதரத்துவம், ஒற்றுமை போன்ற உணர்வுகளுக்கு இடமில்லாததாகத் தோன்றுகின்ற மிகவும் நோய்வாய்ப்பட்ட சமூகத்திலேயே நாம்  உண்மையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்…

தலித் கேமரா: அமெரிக்காவின் கு க்ளக்ஸ் கிளன் மற்றும் இந்தியாவில் பசு பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்துகின்ற சாதி ஹிந்துக்களின் சித்தாந்தங்களும், நடைமுறைகளும் ஒரேபோல் இருக்கின்றனவா?

நிச்சயமாக ஒற்றுமைகள் உள்ளன. அவர்களிடையே உள்ள வித்தியாசம் என்னவென்றால், கு க்ளக்ஸ் கிளன் (கேகேகே) கொலைகளை நடத்தியபோது, அவர்கள் சற்றே வித்தியாசமான நாடக உணர்வைக் கொண்டிருந்தனர். இன்று ஆர்எஸ்எஸ் அமைப்பு இருப்பதைப் போலவே, கிளன் தன்னுடைய காலத்தில் மிகவும் செல்வாக்கு மிக்க அமைப்புகளில் ஒன்றாக அமெரிக்காவில் இருந்தது. அதன் உறுப்பினர்கள் காவல்துறை, நீதித்துறை உள்ளிட்ட அனைத்து பொது நிறுவனங்களுக்குள்ளும் ஊடுருவியிருந்தனர். கிளன் நடத்திய கொலைகள் ஒருபோதும் வெறும் கொலைகளாக இருந்ததில்லை. அந்தக் கொலைகள் பயங்கரவாதத்தை வெளிப்படுத்துவதற்கும், பாடங்களைக் கற்பிப்பதற்கும் நடத்தப்பட்ட சடங்கு நிகழ்ச்சிகளாகவே இருந்தன. ஹிந்து விழிப்புணர்வால் தலித்துகள் மற்றும் முஸ்லீம்களைக் கொல்லப்பட்டதைப் போலவே, கறுப்பின மக்களை கேகேகே கொன்றதும் உண்மை. சுரேகா போட்மங்கே மற்றும் அவரது குடும்பத்தினர் உங்கள் நினைவில் இருக்கிறார்களா? நிச்சயமாக சுரேகா போட்மங்கேயும், ஜார்ஜ் ஃப்ளாயிடும்  வெவ்வேறு போராட்டங்களில் இருந்த வெவ்வேறு மனிதர்கள். தங்கள் சொந்த கிராமத்தைச் சேர்ந்தவர்களாலேயே போட்மங்கேயும்,  அவரது குடும்பத்தினரும் படுகொலை செய்யப்பட்டனர். காவல்துறை அதிகாரி டெரெக் சாவின்,  ஜார்ஜ் ஃப்ளாய்டை மிகுந்த நாடக உணர்வுடனேயே  கொலை செய்தார்.  தன்னுடைய ட்ரவுசர் பையில் ஒரு கையை வைத்துக் கொண்டிருந்த அவரின் முழங்கால் ஃப்ளாய்டின் கழுத்தில் இருந்தது. அவருக்கு உதவுவதற்கு ஆட்கள் இருந்தனர். அவருக்கு பாதுகாப்பாக மற்ற காவல்துறையினர் இருந்தனர். அவருக்கென்று பார்வையாளர்களும் இருந்தனர். தன்னைப் படமெடுப்பது அவருக்குத் தெரியும். ஆனாலும் அவர் அதைச் செய்தார். ஏனென்றால், தனக்கு பாதுகாப்பு இருப்பதாகவும், தண்டனை எதுவும் இருக்காது என்றும் அவர் நம்பினார். இந்த காலகட்டத்தில், வெள்ளை மேலாதிக்கவாதிகள், ஹிந்து மேலாதிக்கவாதிகள் ஆகிய இருவருக்குமே (பணிவுடன் கூறுவதென்றால்) அனுதாபிகள் – உயர் பதவியில் இருக்கின்றனர். எனவே இருவரும் தொடர்ந்து வெற்றி பெறுகிறார்கள்.

Black lives matter – and so do lives of members of all of India's ...

தலித் கேமரா: #blacklivesmatter இந்தியர்கள் பிரபலப்படுத்துவதை காண்கிறோம். ஆனால் இந்த நாட்டில்தான் கறுப்பினத்தவர்கள் மீது தொடர்ச்சியாக தாக்குதல்கள்  நடத்தப்படுவதையும் நாம் காண்கிறோம். இந்தியர்கள் கறுப்பினத்தவர்களை எவ்வாறு பார்க்கிறார்கள் அல்லது இந்தியர்களாகிய நாம் அவர்களைப் பற்றி என்னவிதமான பொதுக்கருத்தை  வைத்திருக்கிறோம்?

வெளுத்த தோல் மீது இந்தியர்களை எவ்வாறு ஆட்டிப் படைக்கிறது என்று பாருங்கள். அது நம்மிடம் இருக்கின்ற மிகவும் மோசமான விஷயங்களில் ஒன்றாகும். பாலிவுட் திரைப்படங்களைப் பார்த்தீர்கள் என்றால், இந்தியாவை  நீங்கள் வெள்ளைக்காரர்களின் நாடு என்றுதான் கற்பனை செய்ய வேண்டியிருக்கும். கறுப்பின மக்கள் மீதான இந்திய இனவெறி, வெள்ளை மக்களின் இனவெறியை விட மிகவும் மோசமானது. அது நம்ப முடியாததாக இருக்கிறது. கறுப்பின நண்பர்களுடன் இருக்கும் போது, தெருக்களில் அவ்வாறு நடப்பதைக் கண்டிருக்கிறேன். உண்மையில் தோல் நிறம் அவர்களிடமிருந்து வேறுபட்டிருக்காதவர்களிடம் இருந்துகூட, சில நேரங்களில் அது வெளிப்படுவதை நான் பார்த்திருக்கிறேன்! ஒருபோதும் நான் அதைப்போன்று கோபமாக இருந்ததில்லை அல்லது வெட்கப்பட்டதில்லை. அந்த  இனவாதம் வெளிப்படையான தாக்குதல்களாகவே வெளிப்படுகின்றது. 2014ஆம் ஆண்டு டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மிகப் பெரிய ஆதரவைப் பெற்று வென்ற உடனேயே, சட்ட அமைச்சர் சோம்நாத் பாரதி,  நள்ளிரவு சோதனைக்காக ஒரு குழுவினரை வழிநடத்திச் சென்றார்.  அப்போது ’ஒழுக்கக்கேடான மற்றும் சட்டவிரோத செயல்களில்’ ஈடுபட்டதாகக் கூறி, காங்கோ மற்றும் உகாண்டா பெண்கள் குழு ஒன்று  கிர்கியில் அவர்களால் தாக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டது.  2017ஆம் ஆண்டு, போதைப்பொருள் விற்பனை குற்றச்சாட்டை முன்வைத்து, ஆப்பிரிக்க மாணவர்கள் கிரேட்டர் நொய்டாவில் விழிப்புணர்வு கும்பலால் தாக்கப்பட்டு, அடித்து உதைக்கப்பட்டனர்.. ஆனால் இந்தியாவில் இனவாதம்  பரந்த அளவில் மாறுபட்டதாக இருந்து வருகிறது. நொய்டா தாக்குதலுக்குப் பின்னர், பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் தருண் விஜய் இனவெறியை ஆதரித்ததை யாரால் மறக்க முடியும்? ’நாங்கள் இனவெறியர்களாக இருந்திருந்தால், தென்மாநிலங்களில் உள்ள தமிழர்களை நீங்கள் அறிவீர்கள், கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திராவில் உள்ளவர்களை அறிவீர்கள் – நாங்கள் ஏன் அவர்களுடன் சேர்ந்து வாழ்கிறோம்?’ என்ற கேள்வியை அவர் முன்வைத்தார். அவர்கள் ஏன் நம்முடன் வாழ்கிறார்கள் என்ற கேள்விக்கான பதிலை கறுப்பின தென்னிந்தியர்கள் அனைவரும் கேட்டுப் பெற வேண்டும். அவர் சொல்லும் காரணங்களை நான் அறிய விரும்புகிறேன்.

தலித் கேமரா: ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் #blacklivesmatter என்று வாதிடும்போது, ​​ஆசியர்கள் #asianlivesmatter என்றும் வெள்ளையர்கள் #allivesmatter என்றும் வாதிடுகின்றனர்

அர்த்தமற்ற உண்மைகள், அரசியலை வெளியேற்றுவதற்கான ஒரு நுட்பமான வழியாகும். ஆப்பிரிக்க அமெரிக்கர்களைப் போல, ஆசியர்களும் வெள்ளையர்களும் அமெரிக்காவில் கொலை செய்யப்படுவதில்லை; சிறையில் அடைக்கப்படுவதில்லை; அவர்களுடைய உரிமைகள் பறிக்கப்படுவதில்லை; வறுமை நிலைக்கு அவர்கள் தள்ளப்படுவதில்லை. ஜனநாயகத்தின் சமூக ஒப்பந்தம் மற்றும் சட்டக் கட்டமைப்பிற்குப் பொருந்தக்கூடிய வழிகளில், வன்முறையுடன் ஆப்பிரிக்க அமெரிக்கர்களைத் தடுப்பது, அவர்களின் குரல்களை ஒடுக்குவது, அவர்களை அடிமைப்படுத்துவது என்று ஒருங்கிணைந்த முயற்சிகள் அடிமைத்தனம் ஒழிக்கப்பட்டதிலிருந்தே அமெரிக்காவில் நடந்து வந்தன. அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் போர் குறித்து இருக்கின்ற சர்வதேச அளவிலான கதை – வியட்நாம், ஜப்பான், ஈராக், ஆப்கானிஸ்தானில் நடந்த இனப்படுகொலை தனிக் கதை… இதையே  #asianlivesmatter மற்றும் #alllivesmatter போன்றவை குறிப்பிடுவதாக நான் கருதவில்லை.

தலித் கேமரா: தலித்துகள் #Dalitlivesmatter என்று கூறும்போது, ​​அது பல நூற்றாண்டுகளாக நடந்த கறுப்பின மக்களின் போராட்டத்தை குறைத்து மதிப்பிடுவதாக இருக்கிறது அல்லவா? #Dalitlivesmatter இயக்கம் இனவெறிக்கு மேலானதா?

சாதியம் மற்றும் இனவெறி ஆகியவை வெவ்வேறு வரலாறுகளைக் கொண்டிருந்தாலும், சாதியம் ஒருவித தெய்வீக ஆணையைக் கோருவதாக இருப்பதைத் தவிர, அவையிரண்டும் வேறுபட்டவை அல்ல. எனவே #dalitlivesmatter என்று சொல்வதை, பல நூற்றாண்டு கால கறுப்பின மக்களின் போராட்டத்திற்கு ஒப்பாக ஏற்றுக்கொள்வது சற்று கடுமையாக இருக்கும் என்றே நான் நினைக்கிறேன். அது பொதுவான காரணத்தை, ஒற்றுமையை உருவாக்குவதற்கான முயற்சி என்றே நான் நினைக்கிறேன். பிளாக் லைவ்ஸ் மேட்டர் (பிஎல்எம்) என்ற இயக்கம் அமெரிக்காவில் நடைபெறுகிறது என்ற உண்மையாலேயே, அது மிகவும் ஆற்றல் மிக்கதாக, மற்றவற்றை விட  அதிகமாக அனைவருக்கும் தெரிவதாக இருக்கிறது. இவ்வளவு காலமாக இந்தியாவில் சாதியம் என்பது, நன்கு அறியப்பட்ட, மிகவும் மரியாதைக்குரிய அறிவுஜீவிகள் மற்றும் கல்வியாளர்களின் உதவியால் சர்வதேச ஆய்வின் கீழ் கண்டறியப்படாத திட்டமாகவே இருந்து வருகிறது.

இதைச் சொல்லும் போது, யாருமே இனவெறியைத் தவிர்த்தவர்களாக இல்லை என்பதைக் கவனிக்க வேண்டும். இனவெறி வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு வடிவங்களை எடுப்பதாக இருக்கிறது. எடுத்துக்காட்டாக, தென்னாப்பிரிக்காவில் உள்ள கறுப்பு தென்னாப்பிரிக்கர்களுக்கு, பிற ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த நைஜீரியர்கள் மற்றும் ஆப்பிரிக்கர்கள் மீது இனவெறி (ஜீனோபோபியா) இருக்கிறது. சாதிய ஒடுக்குமுறை, பிராமணியம் ஆகியவற்றை ஒவ்வொரு சாதியினரும் கடைப்பிடித்து, அந்த ஏணியில் தங்களுக்குக் கீழான சாதியை அவர்கள் ஒடுக்கி வருவது நமக்குத் தெரியும். ‘தலித்’ என்ற அரசியல் வகைக்குள்ளும் கூட அது இருப்பதை உங்கள் சொந்த போராட்டங்களில் நீங்கள் பார்த்திருப்பீர்கள். எதையும் நீண்ட நேரம் உற்றுப் பார்த்தால், எப்போதும் அதைச் சுற்றியிருந்து வருகின்ற பொதுக் கருத்திலிருந்து மிகவும் சிக்கலானதாக அது மாறுவதைக் காண முடியும். ஆனாலும் பொதுக்கருத்து என்பது மிக முக்கியமானது. மக்களுக்கு தங்களுடைய எண்ணங்களை ஒழுங்கமைப்பதற்கான கட்டமைப்பை அது வழங்குகிறது.

DalitLivesMatter – What Can We Learn From #BlackLivesMatter | Velivada

தலித் கேமரா: போதைப்பொருட்கள் விற்பவர்களாக, காட்டுமிராண்டிகளாக, மனித மாமிசம் உண்பவர்களாக கறுப்பர்களைப் பற்றி ஒரே மாதிரியான பொதுக்கருத்து இந்திய ஆன்மாவிலும், அதனால் இந்திய செய்தி மற்றும் பொழுதுபோக்கு ஊடகங்களிலும் இன்னும் ஏன் இருந்து வருகிறது?

ஏனென்றால் நாம் இனவெறிக் கலாச்சாரம் கொண்டவர்களாக இருக்கிறோம். கடந்த ஆண்டு ஆபிரகாமிண்டே சந்ததிகள் என்ற மலையாள படத்தை நான் பார்த்தேன்.  கொடூரமான, முட்டாள்-கிரிமினல் வில்லன்களாக இருந்த கறுப்பின ஆப்பிரிக்கர்கள் மலையாள சூப்பர் ஹீரோவால் அழித்தொழிக்கப்பட்டனர். கேரளாவில் ஆப்பிரிக்கர்கள் யாரும் இல்லை என்பதால், அந்த இனவெறியைக் காட்டுவதற்காக, திரைப்படத் தயாரிப்பாளர் இந்த புனைகதைக்குள் அவர்களை இறக்குமதி செய்திருந்தார்! அது அரசின் அட்டூழியமாக இருக்கவில்லை. சமூகத்தின் அட்டூழியமாக, மக்களின் அட்டூழியமாகவே இருந்தது. கறுப்பு தோல்களுக்காக வடஇந்தியர்களால் கேலி செய்யப்படுகின்ற தென்னிந்தியர்கள் – கலைஞர்கள், திரைப்படத் தயாரிப்பாளர்கள், நடிகர்கள், எழுத்தாளர்கள் – அதே காரணத்திற்காக ஆப்பிரிக்கர்களை அவமானப்படுத்துகிறார்கள். இது அடித்தளமே இல்லாத குழாய்கிணற்றுக்குள் விழுவதைப் போன்றது.

தலித் கேமரா: அமெரிக்காவில் போராட்டத்தின் போது, காந்தியின் சிலை உடைக்கப்பட்டதற்கான காரணம் என்னவாக இருக்கும்?

அதைத் தெரிந்து கொள்வது கடினம். சிலை உடைக்கப்பட்டு, அதன் மீது சாயம் தெளிக்கப்பட்டதாக செய்தி அறிக்கைகள் கூறுகின்றன. வெளியான புகைப்படங்களில் சிலை மூடப்பட்டிருக்கிறது.  எனவே என்ன சாயம் என்று யாருக்கும் தெரியாது. கானா மற்றும் பிற நாடுகளில் காந்தி சிலைகளை அழித்த தொடர்நிகழ்வின் ஒரு பகுதியாக அந்த நிகழ்வு நடந்ததா? தென்னாப்பிரிக்காவில் இருந்த காலத்தில் கறுப்பின ஆப்பிரிக்கர்களுக்கு எதிரான காந்தியின் இனவெறி கருத்துக்களை, இந்தியாவில் சாதி குறித்து அவருக்கிருந்த நிலைப்பாட்டை அறிந்தவர்கள் அதைச் செய்தார்களா? அல்லது இந்தியப் பிரதமர் மீது வெறுப்பை வெளிப்படுத்த விரும்பிய மக்களால் செய்யப்பட்டதா? ட்ரம்ப் மீதான அவரது அன்பின் வெளிப்பாடுகள்… ஹவுடி மோடி, நமஸ்தே டிரம்ப் போன்றவை காரணமாக இருந்தனவா என்று எனக்கு உண்மையில் தெரியாது. போராட்டக்காரர்கள் பலரும், தங்களது உத்வேகத்திற்கு ஆதாரமாக, காந்தியின் புகைப்படங்களை ட்வீட் செய்திருந்தார்கள் என்பதும், வன்முறையற்ற சிவில் ஒத்துழையாமை குறித்த உத்திகளில் தங்களுடைய ஆசிரியராக, வழிகாட்டியாக அவர்கள் காந்தியை ஏற்றுக் கொண்டிருப்பதும் உண்மைதான். எனவே அந்த தெருக்களில் காந்தி பல அவதாரங்களில் இருக்கிறார்.

தலித் கேமரா: காந்தி சிலைகளை நிர்மாணிப்பதற்கு இந்திய அரசு ஏன் நிதியுதவி செய்கிறது? – தற்போதைய சிலைக்கும்  மற்றும்  பல்வேறு ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள  பல சிலைகளுக்கும் அடல் பிஹாரி வாஜ்பாய் நிதியுதவி செய்தார்வெளிநாடுகளில் காந்தி சிலைகளை ஊக்குவிக்கிற அதே இந்திய அரசு தான், இந்தியாவில் மிகப்பெரிய ராணுவமயமாக்கப்பட்ட மண்டலத்தைக் கொண்டிருக்கிறது. மேலும் இந்திய சமூகம்  சகிப்புத்தன்மையற்ற தன்மை கொண்டதாகவும் ஆகியிருக்கிறது... இதை எவ்வாறு ஒருவர் புரிந்து கொள்வது?

நல்லதற்கோ அல்லது கெட்டதற்கோ, காந்தி இந்தியாவின் மிகப்பெரிய ஏற்றுமதிப் பொருளாகி விட்டார். நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் தீவிர வன்முறை மற்றும் ராணுவவாதத்தைக் கொண்டு வருகின்ற இந்திய அரசாங்கத்தின் எளிதான திறனுடன், அகிம்சை பற்றிய காந்தியின் கருத்து எப்போதும் மிக வசதியாக இணைந்திருக்கிறது. அவர்களைப் பொறுத்தவரை, காந்தி என்பது ஒரு கருவி. ஒரு பயன்பாடு. தங்களை மறைத்துக் கொள்வதற்கான ஒரு திரை. கண்ணீர்ப்புகை குண்டாகவும் இருக்கலாம். காந்தியன் என்று தன்னை அழைத்துக் கொள்பவர்களுக்கு – மேலாதிக்க சாதியினர் – சாதியை ஏற்றுக்கொள்வதும், கடைப்பிடிப்பதும், சமூக ரீதியாக அல்லது அறிவுப்பூர்வமாக  முரண்படுவதாகத் தோன்றுவதில்லை. இவ்வாறான நிலைமை மீறுபவர்களுக்கு எதிராக வன்முறையை – மிக மோசமான உடல்ரீதியான வன்முறையை –  நிகழ்த்தி நிரந்தரமாக அச்சுறுத்துகின்ற சூழல் உள்ள அமைப்பிற்குள் மட்டுமே தொடர்ந்து இருக்க முடியும் என்பதை நாம் அறிவோம். இத்தகைய பாசாங்குத்தனம் கவனிக்கப்படாமலே போகின்றது.

ஆற்றில் வீசப்பட்டார் அடிமை ...

தலித் கேமரா: பிரிஸ்டனில் இருந்த அடிமை வர்த்தக உரிமையாளர் எட்வர்ட் கோல்ஸ்டனின் சிலையை கீழே தள்ளிவிட்ட பிஎல்எம் இயக்கத்தை பல இந்தியர்களும் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர். ஆனால் இந்தியாவில், ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தின் முன்பாக மனுவின் சிலை நிறுவப்பட்டுள்ளது. மேலும் ’பிராமணர்களுக்கு மட்டும் வீடுகள்’ என்பது போன்ற சாதியத்தை ஊக்குவிக்குகின்ற பல அடையாளங்கள் இருக்கின்றன. அவற்றையெல்லாம் கீழே தள்ளுவது ஒருபுறம் இருக்கட்டும்… அவற்றை நிராகரிப்பதற்குக்கூட நாம் ஒருபோதும் சிறிதளவேனும் அக்கறை காட்டியதில்லை. இது குறித்து உங்கள் கருத்து என்ன?

நாம் ஒரு சாதிய, ஹிந்து தேசியவாத அரசின்கீழ் வாழ்கிறோம். அது போன்று சிலைகள் அகற்றப்படும் அல்லது இழுத்து தள்ளப்படும் நாளிலிருந்து நாம் வெகு தொலைவிலே இருக்கிறோம். இப்போது அதுபோன்ற சிலைகள் நிறுவப்பட்டு கொண்டாடப்படுகின்ற நிலையிலேயே நாம் இருக்கிறோம். துரதிர்ஷ்டவசமாக, ஒரு காலத்தில் தலித் சிறுத்தைகள் போன்ற தீவிர இயக்கங்களில் பங்காற்றியவர்கள்கூட, இப்போது இந்த புதிய ஆட்சியாளர்களுடன் கைகோர்த்துக் கொண்டுள்ளனர். கவிதை, கலை, இசை, இலக்கியம் போன்ற நடவடிக்கைகளின் மூலம், பல ஆண்டுகளாக ஒழுங்கமைத்து, போராடி, நினைவுகூர்ந்து தங்களுக்குள்ளே சொல்லிக்கொண்ட ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் கதையே, இனப் பிரிவினை குறித்து புதிய தலைமுறை அமெரிக்கர்கள் அவமானமும், கோபமும் கொண்டுள்ள அமெரிக்காவில் நாம் காணும்  எழுச்சிக்கு காரணமாக இருக்கின்றது.. கூட்டுணர்வை அவர்கள் இவ்வாறு வெளிப்படுத்துவது ஆச்சரியமான விஷயம் ஆகும்.

தலித் கேமரா: இந்தியாவில் பொதுமுடக்கம் மற்றும் பிற விதிவிலக்கான செயல்பாடுகளை கோவிட்-19ஐ எதிர்த்துப் போராடுவதற்கான சரியான நடவடிக்கைகள் என்று நீங்கள் கருதுகிறீர்களா? அல்லது அவை பலருடைய வாழ்க்கையை மொத்த அழிவுக்குள்ளாக்கிய அவசர முடிவுகளா? மேலும், திடீரென்று ’மீண்டும் திறப்பது / பொதுமுடக்கம் நீக்கம்’ ஆகியவை செய்யப்படுவது பற்றி உங்கள் கருத்து என்ன?

இந்தியாவில் முதல் கோவிட்-19 நோயாளி குறித்து ஜனவரி 30 அன்று பதிவானது. அது ஒரு தொற்றுநோய் என்று உலக சுகாதார நிறுவனம் மார்ச் 11 அன்று அறிவித்த பிறகும், அது சுகாதார அவசரநிலை அல்ல என்றே சுகாதார அமைச்சகம் கூறியது. எப்போது சர்வதேச விமான நிலையங்களை மூடிவிட்டு சர்வதேச பயணிகளை தனிமைப்படுத்தியிருக்க வேண்டுமோ, அப்போது அவர்கள் அதைச் செய்யவில்லை. ஒருவேளை அது ட்ரம்ப் இங்கே வருவதால் இருந்திருக்கலாம். பிப்ரவரி கடைசி வாரத்தில் ட்ரம்ப் வந்தார். பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட நமஸ்தே ட்ரம்ப் பேரணியில் கலந்து கொள்வதற்காக, மும்பை மற்றும் அகமதாபாத்திற்கு, அமெரிக்காவிலிருந்து ஆயிரக்கணக்கானோர் பறந்து வந்தனர். இப்போது அந்த இரண்டு நகரங்களும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது தற்செயலானதா? தப்லிகி ஜமாத்தை  களங்கப்படுத்துவதையும், நமஸ்தே டிரம்பை பெருமைப்படுத்துவதையும் எவ்வாறு ஒருவரால் நியாயப்படுத்த முடியும்? நடவடிக்கைகளை மேலிருந்து ஆரம்பித்து, விமானத்தில் வருபவர்களைத் தனிமைப்படுத்தாமல் அரசாங்கம் காத்திருந்தது. அதற்கான விலையை தொழிலாளர் வர்க்கம் கொடுக்க வேண்டியதாகி இருக்கிறது. நான்கு மணிநேர இடைவெளியில், பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டபோது 545 நோயாளிகள் மற்றும் 10 இறப்புகள் மட்டுமே இருந்தன. ’சமூக இடைவெளியை’ ஏற்படுத்துவதற்காக இத்தாலி மற்றும் ஸ்பெயினில் கடைப்பிடிக்கப்பட்ட பொதுமுடக்கத்தை, வெறுமனே இறக்குமதி செய்து, வெட்டி ஒட்டப்பட்டதாகவே இந்த பொதுமுடக்கம் இருந்தது.

முழுமையான திட்டமிடல் இல்லாததால் ஏற்பட்டிருக்கின்ற பேரழிவு மனிதகுலத்திற்கு எதிராக இழைக்கப்பட்ட மாபெரும் குற்றமாகும். இந்தியாவில் மேல்தட்டில் இருப்பவர்களால் மட்டுமே, உடல் ரீதியாக தங்களை மற்றவர்களிடமிருந்து தூர விலக்கி வைத்துக் கொள்ள முடியும். ஏழைகளோ சேரிகளில், சிறிய வீடுகளில், அங்கீகரிக்கப்படாத குடியிருப்பு பகுதிகளில் உண்மையில் உடல் ரீதியாக நெருக்கி வைக்கப்பட்டுள்ளனர். வெளிநாடுகளில் சிக்கித் தவித்த இந்தியர்களை ஆபரேஷன் வந்தே பாரத் திட்டத்தின் மூலம் விமானத்தில் இந்தியவிற்கு அழைத்து வந்த வேளையில், ​​தங்குமிடம், உணவு, பணம், போக்குவரத்து எதுவுமில்லாது நகரங்களில் சிக்கித் தவித்த லட்சக்கணக்கான தொழிலாள வர்க்கத்தினர் தங்கள் கிராமங்களை நோக்கி, ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தூரம் நடந்து செல்லத் தொடங்கியிருந்தனர். தனிமைப்படுத்தப்பட்ட முகாம்களில் வலுக்கட்டாயமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த  பல்லாயிரக்கணக்கானவர்கள் பின்னர் வெளியே செல்வதற்கு அனுமதிக்கப்பட்டனர். பேருந்துகள் மற்றும் ரயில்களில் நெரிசலில் சிக்கிய அவர்கள், தங்களுடன் வைரஸைச் சுமந்து கொண்டு சென்றனர். தந்திரமாக தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து நன்றாகத் தெரிந்திருக்கும் பிரதமரிடம், நாட்டை வழிநடத்துவதற்கான எந்த துப்பும் இல்லை என்பதையே அது காட்டியது.  எந்த துப்பும் இல்லை, பெரிய அளவில் பெருமை மட்டுமே இருக்கிறது. நிபுணர்களின் கருத்தைக் கேட்பதற்கான எந்தவொரு முயற்சியும் இல்லை. 138 கோடி மக்களை, வெறுமனே நான்கு மணிநேர அறிவிப்பில் அவர் முடக்கி வைத்தார். ஏன்? எவ்வாறு? ஏனென்றால் அவரால் அது முடியும் என்ற ஒரே காரணத்திற்காக… ஏனென்றால், எதிராகப் பேசுவதால் ஏற்படும் விளைவுகளைக் கண்டு, அரசியல்வாதிகள், அதிகாரிகள், வணிகர்கள், தொழிலதிபர்கள் என்று அனைவரும், ஏன் பாஜகவில் உள்ள அவரது சொந்த சகாக்கள் கூட பயப்படுகிறார்கள். அனைவரின் மூளையும் அச்சத்தால் உறைந்து போயிருக்கிறது அல்லது அவரை எப்படி சந்தோஷப்படுத்துவது, எப்படி அவருடைய ஆதரவைப் பெறுவது என்பதிலேயே அவர்கள் அனைவரும் ஆர்வமாக உள்ளனர். ஆக நாட்டை அழிக்க அவரை நாம் அனுமதித்திருக்கிறோம். சுத்தியல் கொண்டு இரண்டு பக்கமிருந்தும் நம்மைத் தாக்குவதற்கு  நாம் அனுமதித்திருக்கிறோம்.

Coronavirus India cases: 1409 cases reported in last 24 hrs; no ...

பொதுமுடக்கத்தின் போது, நோயாளிகளின் எண்ணிக்கை மிக அதிக அளவில் உயர்ந்தது. இப்போது வரைபடம் ஒரு செங்குத்தான குன்றைப் போன்று இருக்கிறது. நம்மிடையே 200,000 நோயாளிகள் உள்ளனர். மேலும் பொருளாதாரம் முற்றிலுமாக சரிந்து விட்டது, இந்த நிலையில்,  அவர்கள் பொதுமுடக்கத்தை நீக்கியுள்ளனர். அதிர்ஷ்டவசமாக, பெரும்பான்மையான நோயாளிகள் அறிகுறியற்றவர்களாக இருப்பதாகவே தோன்றுகின்றது. இறப்பு எண்ணிக்கை குறித்த அந்த எண்களை நம்ப முடிந்தால், அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவை விட இந்தியாவில் மிகக் குறைவாகவே உள்ளது. லட்சக்கணக்கானவர்கள் வேலையில்லாமல் உள்ளனர். பட்டினி சூழ்ந்து கொண்டிருக்கிறது. மக்கள் திரும்பிப் போயிருக்கின்ற அந்த கிராமங்களில் என்ன நடந்து கொண்டிருக்கிறது? இத்தகைய பயம், விரக்தி மற்றும் தேவைகள் இருக்கின்ற தருணங்களில், சாதி, நிலப்பிரபுத்துவம், பாலியல் போன்றவற்றை மக்கள் எவ்வாறு எதிர்கொள்வார்கள்?

ஆனாலும் மோடி இன்னும் ரஃபேல் போர் விமானங்களை வாங்கவே விரும்புகிறார். பாரம்பரிய கட்டடக்கலையை விட்டு வெளியேறி, டெல்லியின் மத்திய விஸ்டாவை மறுவடிவமைக்க இருபதாயிரம் கோடி ரூபாய் செலவழிக்கவே அவர் விரும்புவதாக நான் கருதுகிறேன். இதற்கிடையில், பொதுமுடக்கத்திற்கு முன்பாக ஒருபோதும் ஆலோசித்திராத மாநில அரசாங்கங்களிடம் பேரழிவு குறித்த நிர்வாகத்தை தள்ளி விட்டுவிட்ட அவர், இனி மாநிலங்களே குழப்பத்திற்கு காரணம் என்று குற்றம் சாட்டுவார்.

இந்த இரட்டைப் பேரழிவையே அவரும், அவரது அடிமை ஊடகங்களும் தங்களுடைய சாதனையாக மக்களிடம் விற்கப் போகிறார்கள். ஏற்கனவே பீகாரில் 72,000 எல்இடி திரையில் மெய்நிகர் தேர்தல் பிரச்சாரத்தை அவர்கள் தொடங்கி விட்டனர். மக்களைப் பட்டினி போட்டாலும், அவர்களிடம் இதற்கு மட்டும் பணம் இருக்கிறது. தங்களுடைய உரையாடல்களை ஏற்கனவே வகுப்புவாதம் நோக்கி திருப்பி விட்டிருக்கிறார்கள். ஜமியா மிலியா இஸ்லாமியா மற்றும் ஜே.என்.யுவைச் சேர்ந்த மாணவர்கள் தங்கள் பல்கலைக்கழகங்களுக்குள்ளேயே காவல்துறையினர் மற்றும் ஹிந்துத்துவா குண்டர்களால் கொடூரமாகத் தாக்கப்பட்டனர். காவல்துறையினரின் ஆதரவுடன் ஹிந்து விழிப்புணர்வு கும்பல்கள் முஸ்லீம்கள் மீது தாக்குதலை மேற்கொண்ட வடகிழக்கு தில்லி வன்முறையில், அவர்கள் சதிகாரர்களாக கைது செய்யப்படுகிறார்கள். அது பீமா-கோரேகானின் தில்லி பதிப்பாகவே இருந்தது. பைத்தியக்காரத்தனமான குற்றச்சாட்டுகளின் பேரில், இந்தியாவின் தலைசிறந்த வழக்கறிஞர்கள், செயற்பாட்டாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் அறிவுஜீவிகள் சிலர் சிறையில் உள்ளனர். யாரோ ஒருவர் சொன்னதைப் போல், வழுக்கை மனிதனிடம்கூட, மோடியால் சீப்பை விற்றுவிட முடியும். அதை வாங்குகின்ற நாம் அதற்குத் தகுதியானவர்களாகவே இருப்போம். முட்டாள்களைப் போல, முடியில்லாத தலைகளை சீவிக் கொண்டே இருக்கலாம்.

தலித் கேமரா: விரைவான பொருளாதார வளர்ச்சி மற்றும் குடிமக்களுக்கு அதிகாரம் அளித்தலுக்காக டிஜிட்டல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதற்கு, டிஜிட்டல் இந்தியா திட்டத்தை அரசாங்கமே அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக ஆரோக்ய சேது செயலி மற்றும் மைகவ் கொரோனா ஹப் (myGovCoronaHub) போன்றவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. உங்கள் கருத்துப்படி, இந்திய அரசு கூறுகின்ற டிஜிட்டல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது என்பதற்கு சரியான பொருள் என்ன? இந்திய குடிமக்களுக்கு யார், எந்த வழிகளில் அதிகாரம் தருவது என்று அர்த்தம்? அவர்களில் பெரும்பாலோர் குடிமக்களாக இருந்தாலும், அவர்களை யார் விலக்கி வைக்கிறார்கள்?

2022ஆம் ஆண்டில் இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 44 கோடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது எதிர்பார்க்கப்படும் மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கிற்கும் குறைவான எண்ணிக்கையிலானது. இப்போது இணையவழி கற்றலுக்காக குழந்தைகள் கூட ஸ்மார்ட்போன்களை வைத்திருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே டிஜிட்டல் இந்தியாவிற்கான பெரிய திட்டங்கள் பெரும்பான்மையான மக்களை விலக்கியே வைக்கின்றன. நீங்கள் குறிப்பிடுகின்ற செயலிகள்.. அவை இன்னும் அரைகுறையாக, முழுமையற்றவையாக இருந்த போதிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு போன்றவற்றை நம்புகின்ற இந்த பில்கேட்ஸ் அணுகுமுறை, சுகாதாரம், கல்வி மற்றும் வறுமை போன்ற மிகப்பெரிய பிரச்சனைகளைத் தீர்த்து வைக்கும் என்று நம்புவது ஆபத்தானது. அரசியல் தீர்வுகள்தான் நமக்குத் தேவை. அநீதி, பட்டினி, நவீன இனவாதம், நவீன சாதியம், இஸ்லாமியர் விரோத நிலை, சுற்றுச்சூழல் அழிவு ஆகியவை நவீன தாராளமய முதலாளித்துவ திட்டத்துடன் குறியிடப்பட்டுள்ளன. செயலிகள் மற்றும் போலியான டிஜிட்டல் செயல்திறன்களால் சிக்கல்களைத் தீர்க்க முடியாது. அவை நம்மை தனியார்மயமாக்கப்பட்ட முதலாளித்துவ கண்காணிப்பு அரசுக்குள்ளேயே கொண்டுபோய் நுழைத்து விடும்.

Malappuram student commits suicide allegedly over missing online ...

தலித் கேமரா: கேரள அரசு முறைப்படுத்த முயற்சித்து வருகின்ற தொழில்நுட்பமான இணையவழி  கல்வியைப் பெறுவதற்கான வழிகள் தன்னிடம் இல்லாததால், தேவிகா என்ற தலித் மாணவி சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார். தொழில்நுட்பம் வரலாற்று ரீதியாக, சமூகத்தை ஜனநாயகப்படுத்துவதற்கான ஒரு வழியாக கருதப்படுகிறது. ஆனால் தேவிகா, இணையவழி கல்வி போன்ற விஷயங்களில், தொழில்நுட்பம் என்பது மேலும் ஓரம்கட்டுவதற்கும், விலக்கி வைப்பதற்குமான சந்தர்ப்பமாகவே இந்தியாவில் மாறியுள்ளது. குறிப்பிட்ட நமக்கான சூழலில் இந்த முரண்பாட்டை நாம் எவ்வாறு கையாள்வது?

உங்கள் முந்தைய கேள்விக்கு பதிலளிக்கும் போது, இந்த கேள்விக்கு நான் பதிலளித்திருக்கிறேன் என்றே நான் நினைக்கிறேன். உரிமைகள் கிடைக்காத பின்னணியில் இருந்து வருகின்ற குழந்தைகளுக்கு இணையவழி கல்வி என்பது பேரழிவாகவே மாறும். தன்னை விலக்கி வைக்கின்ற ஆழமான கிணற்றுக்குள் தான் விழுந்து விட்டதாகக் கண்ட தேவிகா, தன்னையே மாய்த்துக் கொண்டாள். ஏனென்றால் அவளிடம் ஸ்மார்ட்போன் இல்லை, அவள் குடும்பத்தினர் டிவியை சரிசெய்யக்கூட முடியாத மிகவும் மோசமான நிலையிலே இருந்தனர். அவளைப் போன்று லட்சக்கணக்கானவர்கள் இருக்கின்றனர். இளைஞர்களைப் பொறுத்தவரை, வகுப்பறைகளுக்குள் என்ன நடக்கிறது என்பதைப் போலவே பள்ளிக்கூடங்கள், பல்கலைக்கழக வளாகங்கள் மற்றும் வகுப்பறைகளுக்கு வெளியே நடக்கின்ற அனைத்தும் முக்கியம். ஸ்மார்ட்போன்கள் உள்ளவர்களுக்கும் அது முக்கியம். தலித், ஆதிவாசி மற்றும் இப்போது முக்கியமாக முஸ்லீம் மாணவர்கள் பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்களில் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றனர். இந்த தாக்குதல்களை எதிர்த்துப் போராட வேண்டும். இணையத்தில் நம்மைத் தனிமைப்படுத்திக் கொள்வது என்பது, நமது சமூகத்தில் ஏற்படக்கூடிய மிக ஆபத்தான விஷயமாக இருக்கும். கல்வியில் முதலீடு செய்வதிலிருந்து விலகிக் கொண்டு, தனியார்மயமாக்கலுக்கு நீண்ட காலமாக விரும்பி வந்து சேர்ந்திருக்கும் அரசாங்கங்கள் இந்த வழியைத்தான் முயற்சிக்கும் என்பதாகவே, இணையவழிக் கல்வி வேரூன்றுவது குறித்த எனது அச்சம் இருக்கிறது. நாம் அதை அனுமதிக்க முடியாது.

தலித் கேமரா: முற்போக்கு சர்வதேசியம்  என்ற முயற்சியை சர்வதேச செயற்பாட்டாளர்கள், கல்வியாளர்கள் பலருடன் இணைந்து நீங்கள் சமீபத்தில் தொடங்கினீர்கள். நம்மிடம் ஏற்கனவே இடது சர்வதேசியம் மற்றும் கறுப்பு சர்வதேசியம்… போன்றவை இருக்கின்றன. அந்த முயற்சிகளில் பெரும்பாலானவை சிதைந்து போய் விட்டன. அரசியல் குறித்து இருந்த கற்பனைகளும் தேசியமயமாக்கப்பட்டு, இனமயமாக்கப்பட்டுள்ளன. தேசிய பெருந்திரள்வாதம் மற்றும் உலக அமைப்புகளின் முழுமையான தோல்வி ஆகியவற்றின் பின்னணியில் இந்த முற்போக்கு சர்வதேசவாதம் எவ்வாறு முன்னேறிச் செல்லும்?

சர்வதேச அளவிலான முயற்சிகள் முக்கியமானவை. குறிப்பாக இப்போது நம்மைப் போன்ற நாடுகளில், மிகவும் மோசமான ஹிந்து தேசியவாதம் என்ற அரசியல் உரையாடல்  முக்கியத்துவம் பெற்றிருக்கும் நிலையில், அத்தகைய முயற்சிகள் நமக்கு முன்னோக்கு, புரிதல், பாதுகாப்பு மற்றும் ஒற்றுமை குறித்த பாதைகளை வழங்குகின்றன. ஆனால் ஒருபோதும் உள்ளூர் அளவில் அணிதிரள்வது, எதிர்ப்பு ஆகியவற்றை அத்தகைய சர்வதேசியத்தால் மாற்ற முடியாது. மாற்றவும் கூடாது. அது மிகப் பெரிய தவறாகி விடும். நமக்கான போர்களில் நாம்தான் போராட வேண்டும். பெரும்பாலும் நாம் தனித்தே இருப்போம். வேறு யாராலும் நமக்கு உதவ முடியாது.

தலித் கேமரா: உலகளாவிய எதிர்ப்பு இயக்கங்களுக்கு படிப்படியான சீர்திருத்தவாத நம்பிக்கையிலான நடவடிக்கைகளை விட, தீவிரமான, திட்டமிடப்பட்ட மாற்றங்களே இப்போது தேவைப்படுகின்றன. ஹிந்து நாஜி ஆட்சியின் கீழ், ஹிந்து தாராளவாத மதச்சார்பற்ற அறிவுஜீவிகள் தங்களுடைய சீர்திருத்தவாத நம்பிக்கை அரசியல் நடவடிக்கைகளை இன்னும் வலியுறுத்தி வருகின்ற இந்திய சூழலில், இதை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்?

தங்களுடைய சமூக / பொருளாதார / அறிவுசார் நிலைகளை இன்றிருக்கின்ற நிலையிலேயே தக்கவைத்துக் கொள்ள விரும்புகின்றவர்களால், புரட்சியை உருவாக்குவது அரிது என்பதே என்னுடைய பதிலாக இருக்கும். பூச்சு வேலை, ஒட்டு வேலை என்று ஆங்காங்கே சரிப்படுத்திக் கொள்ளும் வேலைகள் மட்டுமே அவர்களுக்குத் தேவைப்படும். அதற்கு மேல் எதுவும் அவர்களுக்குத் தேவைப்படாது. நீதி, சமத்துவம், ஜனநாயகம் ஆகியவற்றிற்கான சோதனையில் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு பொதுநிறுவனமும் தோல்வியுற்று வருகின்ற அதே வேளையில், இன்னும் நம்பிக்கை கொண்டவர்களாகவே அவர்கள் இருக்கிறார்கள். தற்போதைய ஆட்சியை ஹிந்து நாஜி ஆட்சி என்று நீங்கள் வகைப்படுத்தியதைக் கண்டு அவர்களில் பலரும் பதைபதைப்பார்கள். மேலாதிக்கத்திற்கான போட்டியில் இருந்து வருகின்ற இந்த பாசிச நம்பிக்கையானது, பிராமணியத்திலிருந்தும், பிராமணர்கள் பூமியில் கடவுளாக இருக்கிறார்கள் என்ற பூதேவா கருத்திலிருந்தும் எவ்விதத்திலும் வித்தியாசமானதாக இருக்கவில்லை தெய்வீக ஆணைப்படி சில மனிதர்கள் இயல்பாகவே உயர்ந்தவர்கள், சிலர் மற்றவர்களை விட தாழ்ந்தவர்கள் என்ற எண்ணம், மிகஎளிதாக மேலாதிக்கத்திற்கான போட்டியில் இருக்கின்ற பாசிச சிந்தனை கொண்டதாக இருப்பதைக் காண்பது ஒன்றும் கடினமான காரியமல்ல.

என்ஆர்சி மற்றும் என்பிஆருக்கு ...

தலித் கேமரா: என்ஆர்சி – சிஏஏ – என்பிஆர் எதிர்ப்பு இயக்கத்தில், அரசியலமைப்பும் இந்திய தேசியக் கொடியும் முன்னிலைப்படுத்தப்பட்டதை நாம் கண்டோம். இதில் எங்களுடைய கேள்வி குறிப்பாக அரசியலமைப்பு பற்றியதாக இருக்கிறது. இயக்கத்தின் முன்னணியில் இருப்பவர்களின் அடையாளங்களை மையப்படுத்தாமல், முக்கியமாக தலித் – பகுஜன் – முஸ்லீம் போன்ற அடையாளங்களிலிருந்து திசைதிருப்புவதற்காகவே அரசியலமைப்பு பயன்படுத்தப்படுகிறது என்று நீங்கள் கருதுகிறீர்களா? உங்கள் கருத்துப்படி அதன் தாக்கங்கள் எவ்வாறு இருக்கும்?

இது மிகவும் சிக்கலானது. தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கு இயலாத வகையில்,  சில காரணங்களால் மக்கள் நிர்பந்திக்கப்படுகிறார்கள். டாக்டர் அம்பேத்கர் வரைவுக் குழுவின் தலைவராக இருந்து இயற்றப்பட்டுள்ள இந்திய அரசியலமைப்பு, அப்போதிருந்த சமுதாயத்தின் நிலைமையைத் தாண்டி, பல ஆண்டுகளுக்கு முன்பாகவே இயற்றப்பட்ட வகையிலே இருந்தது. இந்தியாவில் முதன்முறையாக தார்மீகரீதியாகவும், சட்டரீதியாகவும் மனிதர்கள் அனைவரும் சமம், அனைவரும் சமஉரிமை உடையவர்கள் என்று அப்போதுதான் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டது. ஏணியின் உச்சத்திலும், அடிமட்டத்திலும் இருப்பவர்களைத் தவிர, கீழே உள்ள யாரோ ஒருவரை ஒடுக்குவதாக, அல்லது மேலிருந்து யாராலோ  ஒடுக்கப்படுவதாக இருக்கின்ற, வேறுபட்டதாக, சாதியைக் கடைப்பிடித்து வருகின்ற இந்திய சமூகத்தில், அனைவருக்குமான சமத்துவம் என்ற அந்த சிந்தனை, அரசியலமைப்பு அறநெறி என்பது கிடைத்தற்கரியது. குறிப்பாக தலித்துகளைப் பொறுத்தவரை, அது காலத்தில் உறைந்து போன புனித நூலாகி விட்டது. அரசியலமைப்பின் பல அம்சங்களால் அம்பேத்கர் மிகுந்த ஏமாற்றமடைந்தவராகவே இருந்தார். அரசியலமைப்பு உயிருள்ள ஆவணமாக இருக்க வேண்டும் என்று நம்பிய அவர், அதை மேம்படுத்துவதற்காக ஒவ்வொரு தலைமுறையினரும் உழைக்க வேண்டும் என்றார். ஆனால் ஹிந்து வலதுசாரிகளின் தொடர்ச்சியான தாக்குதலுக்கு எதிராக அதைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் நமக்கு ஏற்பட்டுள்ளது. இப்போது அரசியலமைப்பை மாற்றுவதற்காக வைக்கப்படுகின்ற கோரிக்கைகள் முற்போக்கானவை அல்ல, மிகவும் பிற்போக்குத்தனமானவை. எனவே, அரசியலமைப்பைப் பாதுகாக்க, அதைச் சுற்றி நாம் அணிவகுக்க வேண்டியிருக்கிறது. குறிப்பாக இப்போது ஆர்எஸ்எஸ் அதிகாரத்தில் இருப்பதால், அதைப் பாதுகாப்ப முயல்பவர்கள் ஒரு வகையில் அரசியலமைப்புவாதத்தையே நாட வேண்டியிருக்கிறது.

2019ஆம் ஆண்டு அதிர்ச்சி தருகின்ற ஆண்டாகவே இருந்துள்ளது. காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது, முஸ்லீம்கள் விரோத குடியுரிமை சட்டத் திருத்தத்தை இயற்றியது போன்ற நடவடிக்கைகளின் மூலம் அரசியலமைப்பு அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் அரசியலமைப்பை திருத்தி எழுதாமல், இந்தியாவை ஹிந்து தேசமாக முறையாக அறிவிப்பதற்குப் பதிலாக, அரசியலமைப்பை முழுமையாகப் புறக்கணித்து, நமக்கென்று அரசியலமைப்பே இல்லாதது போன்று இந்த அரசாங்கம் நடந்து கொள்வதையே குறிக்கின்றன. முஸ்லீம்களை தேச விரோத பாகிஸ்தான் அனுதாபிகளாகவும், பயங்கரவாதிகளாகவும் காட்டி அச்சுறுத்துவது, பிரதான ஊடகங்களால் அவர்களுக்கு எதிராக மோசமான, மனிதாபிமானமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவது, நீதிமன்றங்கள் மற்றும் காவல்துறை நடவடிக்கைகளில் இருக்கின்ற சார்புத்தன்மை மற்றும் வெளிப்படையாக தெருக்களில் ரத்தம் சிந்த வைப்பது ஆகியவற்றிற்கு மத்தியில், தேசியக் கொடியை அசைப்பது, அரசியலமைப்பின் முகப்புரையை வாசிப்பது போன்ற நடவடிக்கைகளே, தெருவில் இறங்கி எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்ற முஸ்லீம்கள், தங்களைக் காப்பாற்றிக் கொள்ள உணருகின்ற ஒரே வழியாக இருக்கின்றன.

சமூகம் மற்றும் பொருளாதார ரீதியாக முஸ்லீம்கள் புறக்கணிக்கப்படுகின்ற நேரத்தில், பிரதான தொலைக்காட்சி சேனல்கள் #கொரோனாஜிஹாத் மற்றும் #மனித குண்டுகள் நிகழ்ச்சிகளை வெளிப்படையாக ஒளிபரப்பிக் கொண்டிருக்கின்ற அதே வேளையில், சிஏஏ ஆர்ப்பாட்டங்களின் போதும், கொரோனா நம்மைத் தாக்கிய பின்னரும், முஸ்லீம்களுக்கு மருத்துவ வசதிகள் மறுக்கப்படுவது குறித்த மோசமான செய்திகளை நாம் கேள்விப்பட்டு வருகிறோம். ஆனால் அதேநேரத்தில், பாஜகவின் கபில் மிஸ்ராவால் சுதந்திரமாக உலா வர முடிகிறது. தேசத் துரோகிகள் சுடப்பட வேண்டும் (தேஷ் கே கடரோன் கோ, கோலி மரோ சலோன் கோ) என்ற முழக்கத்தை முன்னிறுத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்கூரால், பத்திரிகையாளர் சந்திப்புகளில் நிதியமைச்சரின் அருகே அமர்ந்திருக்க முடிகிறது. இவை மேலே இருந்து தரப்படும்   வெட்கக்கேடான பொது சமிக்ஞையாகவே இருக்கின்றன. .

மெதுவாக மரணத்தை எதிர்கொண்டு சாலையில் படுத்துக் கிடந்த நேரத்தில். ஃபைசனின் தொண்டையில் தடியை வைத்து அழுத்தி, தேசிய கீதம் பாடுமாறு காவல்துறையினர் அவரைக் கட்டாயப்படுத்தியதை நாம் எப்போதாவது மறக்க முடியுமா? ஆப்பிரிக்க அமெரிக்கர் ஒருவருக்கு அமெரிக்காவில் இவ்வாறு நடந்திருந்தால், அங்கே என்ன நடந்திருக்கும் என்று உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? வெட்கக்கேடாக இல்லையா? எப்படியிருந்தாலும், அரசியலமைப்புவாதம் குறித்த உங்கள் கேள்விக்கு பதிலளிப்பது என்றால்… இந்தியாவில் யார் எதிர்ப்பு தெரிவிக்க அனுமதிக்கப்படுகிறார்கள், யார் என்ன சொல்ல அனுமதிக்கப்படுகிறார்கள் என்பவை, அவர்களுடைய மதம், சாதி, இனம் மற்றும் பாலினம் ஆகியவற்றைப் பொறுத்ததாகவே இருக்கின்றன. சமத்துவம் என்று இங்கே எதுவும் இல்லை – சமத்துவம் என்ற கருத்தின் ஒரு சிறுகுறிப்பு கூட இங்கே இல்லை. அது குறித்த பாசாங்கு கூட இங்கே இருக்கவில்லை. அறிவார்ந்த, சமூக மற்றும் பொருளாதார ரீதியாக – ஒரு நாடு என்ற வகையில் அது நம்மைப் பழிக்கிறது. அனைவருக்குமான நீதி, கண்ணியம் மற்றும் மரியாதைக்காகப் போராடுவதைப் போன்று தளையிலிருந்து விடுவிக்கின்ற, மகிழ்ச்சியான நடவடிக்கை வேறொன்றும் இருக்கப் போவதில்லை. அதைச் செய்வதற்கு வர்க்கம், சாதி, பாலினம் மற்றும் குறுங்குழுவாதம் என்ற பட்டகத்தின் வழி நாம் பார்க்க வேண்டும். நாம் எதிர்த்து நிற்கின்ற சக்திகளுக்கு எதிரான எதிர்ப்பு இயக்கங்களுக்கும் அது பொருந்துவதாகவே இருக்கின்றது. அதைக் கற்றுக் கொள்ளாத வரை, நாம் என்றென்றும் வளர்ச்சியின்றி குன்றியே இருப்போம்.

https://caravanmagazine.in/society/we-live-in-a-castesist-hindu-nationalist-state-arundhati-roy-on-racism-and-casteism

தமிழில்: தா.சந்திரகுரு

நன்றி: தி கேரவான், 2020 ஜூன் 13

Leave a Response

Top Reviews

Video Widget

gallery