Article

எல்ஐசியை பங்குச் சந்தையில் விற்கும் மோடி அரசின் முடிவு மிகச்சிறந்த பொதுத்துறை நிறுவனத்தின் அழிவில்தான் போய் முடியும்  – பினாய் விஸ்வம் (தமிழில் ரமணன்)

Spread the love

 

பிரதமர் மோடியும் அவரது அரசாங்கமும் ஒரு வினோதமான செயல்பாட்டை விடாப்பிடியாக முன்வைத்துக் கொண்டிருக்கிறார்கள். சொல்வது ஒன்று, செய்வது அதற்கு எதிரான ஒன்று என்பதே அதன் சாரம். ‘எல்லோருடனும் ஒற்றுமை;எல்லோருக்கும் வளர்ச்சி’(சப் கா சாத் சப் கா விகாஸ்’) என்ற முழக்கத்தை கட்டமைப்பதிலேயே இந்த அணுகுமுறைதான் வெளிப்பட்டது. இந்த மேல்பூச்சை பிரதமர் தனது ‘ஈஸ் ஆஃப் டூயிங் பிசினஸ்’ போல் மிக எளிதாக செய்வதை கடந்த ஆறு ஆண்டு காலமாக நாடு பார்த்துக் கொண்டிருக்கிறது. அவருடைய வெற்றுமுழக்கப் பெட்டகத்திலிருந்து இப்பொழுது வந்திருக்கும் பிரச்சார வாசகம்தான் ‘ஆத்மநிர்பார் பாரத்’. நாடு ஒரு சிக்கலான, சிரமமான கட்டத்தில் இருக்கும்போது இது வெளிவந்திருக்கிறது. ஊக்கமான இந்த முழக்கம் செயல்படுத்த தொடங்கிய மறு நாளே அவருடைய உண்மையான நோக்கம் என்ன என்பது தெரிந்து விட்டது. வானம்,பூமி முதற்கொண்டு அதை சுற்றியிருக்கும் எல்லாமும் விற்பனைக்கு வந்துவிட்டது. அந்நிய முதலீடே ஆத்மநிர்பாரின் இயங்கு விசையானது. எல்ஐசி இன்று எதிர்நோக்கியிருக்கும் சிக்கலை இந்தப் பின்னணியில் பார்க்க வேண்டும்.

இந்திய தன்னிறைவு மகுடத்தின் வைரமாகக் கருதப்படும் இந்த மாபெரும் பொதுத்துறையை பங்குச் சந்தையில் விற்கும் பொறுப்பு, முதலீடு மற்றும் பொதுச்சொத்து மேலாண்மை துறையிடம்(DIPAM) கொடுக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக ஆலோசனை நிறுவனங்கள், முதலீட்டு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடமிருந்து வந்துள்ள கேட்பு ஆவணங்களை அது ஏற்கனவே பரிசீலிக்கத் தொடங்கிவிட்டது. அந்த ஆவணங்கள் ஜூலை 14ஆம் தேதி திறக்கப்பட உள்ளன.  எல்ஐசியை சாகடிக்கும் வஞ்சக செயல்பாடுகளின் தொடக்கமாக அது இருக்கும்.உள்நாட்டு, வெளிநாட்டு மூலதனத்தின் சித்து விளையாட்டுகளுக்கு நாட்டின் பெருமை மிகு நிறுவனத்தை பலியாக்குவதன் முதல்படி அது. எல்ஐசியின் பங்கும் பணியும் தீவிரமாக மறுவரையறை செய்யப்படப் போகிறது. காப்பீட்டுத் துறையின் பிரம்மாண்ட பொது நிறுவனம் முடிவுக்கு வருகிறது. இந்த நடவடிக்கை பொதுத்துறை விரோத,மக்கள் விரோத,தேச விரோத ஒன்று. மேலும் ‘தன்னிறைவு பாரதம்’ எனும் கோட்பாட்டிற்கும் எதிரானது. நமது முழு பலத்துடன் அது எதிர்க்கப்பட வேண்டும். மேல்நிலை அதிகாரிகளிலிருந்து கீழ்நிலை ஊழியர்கள் வரை எல்ஐசியின் மொத்த பணியாளர்களும் தங்கள் எதிர்ப்புக் குரலை எழுப்பியுள்ளார்கள். அரசு செல்லும் தற்கொலைப் பாதையை தடுக்க இந்திய மக்களில் நாட்டுப் பற்றுள்ள எல்லாப் பிரிவினரும் முன் வரவேண்டும்.

PM Narendra Modi reviews state of economy with FM Nirmala ...

இந்திய நாட்டின் பொதுத்துறை வரலாற்றை பிரதம மந்திரி மோடியும் நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனும் அறிந்திருக்க மாட்டார்கள். ஏகபோகமாக நாட்டின் சேமிப்பை அனுபவித்துக் கொண்டிருந்த நயவஞ்சக தனியார் நிறுவனங்களிடமிருந்து தங்களைக் காக்குமாறு மக்கள் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க தேசிய அரசாங்கம் எடுத்த  இயல்பான செயல்பாடு அது. பண்டித ஜவஹர்லால் நேருவின் முன்னெடுப்பில் அன்றைய நிதியமைச்சர் சி.டி.தேஷ்முக், எல்ஐசி என்ற நிறுவனத்தை ஏற்படுத்த முடிவெடுத்தார். ஐந்து கோடி மூலதனத்தில் பாராளுமன்றத்திள் இயற்றப்பட்ட சட்டத்தின்படி 245 இந்திய மற்றும் வெளிநாட்டு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் நாட்டுடமையாக்கப்பட்டன. காலப்போக்கில் லட்சக்கணக்கான மக்களுக்கு காப்பீடு வழங்கும் மாபெரும் பொதுத்துறை நிதி நிறுவனமாக அது வளர்ந்தது. அதன் சொத்துகளும் 32 லட்சம் கோடிக்கு மேல் பெருகியுள்ளது. இந்த நிறுவனத்தை வலிமையானதாக மாற்ற, ஆயிரக்கணக்கான ஊழியர்கள், அதிகாரிகள் மற்றும் முகவர்கள் கடுமையாக உழைத்துள்ளார்கள். முன்னேற்றத்தைக் கட்டமைக்கும் தேசபக்த கடமையில் தன்னுடைய பிரம்மாண்டமான நிதி ஆதாரத்துடன் நாட்டுடன் இணைந்து நின்றிருக்கிறது.  வீட்டுவசதி, மின்சாரம், நீர்ப்பாசனம், குடிநீர், வடிகால், சாலைகள், துறைமுகங்கள், பாலங்கள், ரயில்வே என சமூக நலத் திட்டங்களில் அதன் லாபத்தை முதலீடு செய்வதன் மூலம் நாட்டுப் பணிகளில் ஈடுபட்டுள்ளது. கடந்த 64ஆண்டுகளில் நாடும் மக்களும் எல்ஐசியின் சேவைகளினால் எண்ணற்ற பலன்களை அடைந்துள்ளன.

பிஜேபி அரசு, தனது  தனியுடமை கொலைவெறியில் இந்த அம்சங்களையெல்லாம் குறித்து கவலைப்படவில்லை. இந்தக் கொரோனா காலத்தில் தனியார் துறையின் கைவிரிப்பையும் பொதுத்துறையின் இன்றியமையாமையும் மொத்த உலகமுமே உணர்ந்துள்ளது. இந்த சூழ்நிலையில்தான் ‘ஆத்ம நிர்பார்’ என்ற போர்வையில் தனியார் துறையின் சந்தை பிடிக்கும் பேராசைக்கு துதி பாடிக்கொண்டிருக்கிறது. ஜூலை 14க்குப் பிறகு எல்ஐசியின் முன்னுரிமைகளும் சமூக அக்கறையும் மாற்றி எழுதப்படும். அதன் அழுத்தம் எங்கு இருக்கவேண்டுமோ அதெல்லாம் திருத்தப்படும். தேசிய முன்னுரிமைகளும் பாலிசிதாரருக்கு நியாயமான லாபமுமே எல்ஐசி முதலீடுகளின் கேந்திரமான காரணிகளாக இருந்தன. பங்கு சந்தை விற்பனை மூலம் எல்ஐசி இந்த பாத்திரம் வகிப்பதிலிருந்து நீக்கப்பட்டுவிடும். பெரும்பான்மை பங்குதாரர்களின் தனிப்பட்ட தேவைகளை நிறைவேற்ற அது நிர்பந்திக்கப்படும்.

நீண்ட காலமாக இந்த சிறந்த நிதி நிறுவனத்தின் மீது கண் வைத்திருக்கும் அந்நிய முதலீட்டாளர்கள் நரேந்திர மோடி தலைமையிலுள்ள ‘தேசபக்த அரசின்’ இந்த வள்ளல்தன்மையை கண்டிப்பாகப் பயன்படுத்திக் கொள்வார்கள். ஏற்கனவே உள்ள தனியார் காப்பீட்டு நிறுவனங்களும் இந்தக் கொள்ளையில் பங்கு பெற களத்தில் இயல்பாகவே குதிப்பார்கள். இந்த முப்பது ஆண்டுகளாக எல்ஐசி தனது திறமையையும் அர்ப்பணிப்பையும் நிரூபித்துள்ளதால் தனியார் நிறுவனங்கள் ஒரு ஓரமாக ஒதுக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு இந்தக் கதவுகளை மோடி அரசாங்கம் எதற்காக திறந்து விட்டிருக்கிறது? போட்டி போட்டு எல்ஐசியை முந்தி செல்வதற்காகவா? இல்லை; அதனுள் நுழைந்து அதன் மூலாதாரங்களை கொள்ளையடிக்கவே. பொதுத்துறையின் மீது தனது தனிப்பட்ட பேராசையையும் லாப வெறியையும் திணிப்பதற்கு இது ஒரு புதுமையான வழி.

We Won't Allow Privatisation of LIC, It's People's Asset' | NewsClick

முதலாளித்துவ பொருளாதாரம் செழித்திருக்க செய்வதற்கு அண்மைக்கால சோதனைக்களம் எல்ஐசி. ஆனால் இந்த சோதனைகள் இதோடு முடியப்போவதில்லை. ‘உங்கள் நலம் எங்கள் கையில்’ என்ற பொருள் கொண்ட ‘யோகஷேமம் வஹாம்யகம்’ எனபதுதான் எல்ஐசியின் முழக்கம். 64 வருடங்களாக கோடிக்கணக்கான மக்களுக்கு அது நம்பிக்கை அளித்திருக்கிறது. இப்பொழுது மோடி அரசு தன்னுடைய உள்நாட்டு வெளிநாட்டு கார்ப்பரேட் நண்பர்களுக்கு அந்த நம்பிக்கையை அளிக்க ஆர்வமாக உள்ளது. இந்த தேச விரோத நடவடிக்கையை பார்த்துக்கொண்டு நாடு வாய் மூடி ஊமையாய் இருக்க முடியாது. ஒன்றுபட்டு எழுச்சி கொண்டு அரசிடம் ‘எல்ஐசியை சாகடிக்காதே’ என்று உரத்த குரலில் சொல்ல வேண்டிய நேரமிது.

நன்றி: நேஷனல் ஹெரால்ட் – 02.07.2020  

Leave a Response