Article

தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருக்கும் இந்திய ஜனநாயகம் – மோடி 2.0 ஆட்சியின் முதலாம் ஆண்டு நிறைவடைந்திருக்கிறது – சித்தார்த் வரதராஜன் (தமிழில் தா.சந்திரகுரு)

Spread the love

 

நரேந்திர மோடி பிரதமராக பதவி வகித்த முதல் ஆண்டில் இந்தியாவிற்காக அவர் என்ன செய்திருக்கிறார் என்பதைத் தெரிந்து கொள்வதற்கு, அமுல்யா லியோனா, அனுராக் தாக்கூர் என்ற இரண்டு இளைஞர்களின் மாறுபட்ட தலைவிதியை கருத்தில் கொள்ளலாம் என்று நான் கருதுகிறேன்.

பெங்களூரில் நடைபெற்ற பொதுநிகழ்ச்சி மேடையில் இருந்து ‘பாகிஸ்தான் வாழ்க’, ‘இந்தியா  வாழ்க’ என்று வெறுமனே முழக்கமிட்டதற்காக தேசத்துரோகம் உள்ளிட்ட பிற கடுமையான குற்றங்கள் புரிந்தாக குற்றம் சாட்டப்பட்ட லியோனா, அன்றிலிருந்து மூன்று மாதங்களாக இன்னும் சிறைக்குள் இருக்கிறார். 

நீடூழி வாழ்வதைப் பற்றி லியோனா பேசியிருந்தார் என்றால், மோடி தலைமையிலான மத்திய அரசில் இணை நிதியமைச்சராக இருந்து வரும் அனுராக் தாக்கூரோ கொலை செய்வதைப் பற்றி பேசியிருந்தார். டெல்லியில் நடந்த பொதுநிகழ்ச்சி மேடையில் இருந்த அனுராக் தாக்கூர், ’துரோகிகளைச் சுடுங்கள்’ என்று பாரதிய ஜனதா கட்சி ஆதரவாளர்கள் குழுமியிருந்த கூட்டத்தினரிடம் கேட்டுக் கொண்டார். ‘துரோகிகள்’ என்பது அவர் கவனமில்லாமல் பயன்படுத்திய வார்த்தை அல்ல. மாறாக அரசாங்கம் கொண்டு வந்திருந்த குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து ஷாஹீன் பாக் மற்றும் பிற இடங்களில் போராடி வந்த, பெண்கள் மற்றும் ஆண்களையே அந்த வார்த்தை குறி வைத்திருந்தது. ஒரு சில நாட்களிலேயே, உண்மையாகவே ஜாமியா மிலியாவில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இருப்பினும், தாக்கூர் மீது காவல்துறை இன்னும் வழக்கு எதுவும் தாக்கல் செய்யவில்லை எனும் போது, அவரை கைது செய்வது பற்றி யாராவது பேச முடியுமா? அமைச்சருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யும் நோக்கம் காவல்துறையிடம் இருக்கிறதா என்று தில்லி உயர்நீதிமன்றத்தில் கேட்கப்பட்டபோது, ​​ அரசு உயர் சட்ட அதிகாரி ‘இந்த நேரம் சரியாக இல்லை’ என்று தெரிவித்தார்.

House of Indian girl who chanted 'Pakistan Zindabad' attacked by ...
Woman Says ‘Pakistan Zindabad… Hindustan Zindabad’ at CAA …

லியோனாவும், தாக்கூரும் மட்டுமே தனித்திருக்கவில்லை. இந்திரா காந்தி அறிவித்த நெருக்கடிநிலை காலத்திற்குப் பிறகு, கடந்த ஆண்டில்தான் இந்தியா முழுவதும் பலர் அரசியல் காரணங்களுக்காக அதிக காலம் காவலில் இருந்துள்ளார்கள். இந்த அளவிற்கு கைது மற்றும் தடுப்புக்காவல் போன்றவை இதற்கு முன்னர் ஒருபோதும் அதிக தலைகளுக்கு மேல் தொங்கிக் கொண்டிருந்தில்லை. ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதல்வரான மெஹபூபா முப்தி, ஒன்பதாவது மாத சிறைவாசத்தில் இப்போது இருந்து வருகிறார். 

அதே வேளையில், சுதந்திர இந்தியாவில் இதற்கு முன்னர் எப்போதும் அரசு நிர்வாகத்துடன் தொடர்புடையவர்களுக்கு இதுபோன்று தண்டனைகளிலிருந்து பாதுகாப்பு வழங்கப்பட்துமில்லை. ஆளும் கட்சியின் உறுப்பினராக அல்லது அரசாங்கத்தின் அரசியல் திட்டங்களை ஆதரிப்பவராக இருந்தால், அவர் தாராளமாக வன்முறையை ஆதரிக்கலாம், அதை முன்னெடுக்கவும் செய்யலாம், மத சிறுபான்மையினருக்கு எதிராக அவர் வெறுப்பை பரப்பலாம், ஏழைகளை அவதூறாகப் பேசி, அவர்களை அவமானப்படுத்தலாம், நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்குமாறு கேட்கப்படுவதைப் பற்றி எந்தக் கவலையுமில்லாமல் இருக்கலாம். இந்தியாவில் முஸ்லீம்களைப் பொருளாதாரீதியாகப்ர புறக்கணிப்பு செய்ய வேண்டும் என்ற கருத்தை ஆதரித்ததற்காக, இந்திய வம்சாவளியைச் சார்ந்த அமைதிக்கான நீதிபதி ஒருவர் நியூசிலாந்தில் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். உத்தரப்பிரதேசத்தில், இரண்டு எம்.எல்.ஏக்கள் இதேபோன்ற காரியத்தைச் செய்து கேமராவிற்குள் சிக்கினர். ஆனாலும் அவர்களால் தங்கள் வேலையைத் தக்க வைத்துக் கொள்ள முடிந்தது மட்டுமல்லாது, அவர்கள் மீது குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்வதற்கு எந்த காரணமும் இல்லை என்று காவல்துறையினர் கூறி விட்டனர். 

இன்று இந்தியாவின் பல பகுதிகளில், தங்கள் தலைவர்களைக் கேலி செய்வதற்கோ அல்லது விமர்சிப்பதற்கோ மக்களுக்கு உரிமை இல்லை அல்லது அந்த உரிமை மெல்லிய இழையில் தொங்கிக்  கொண்டிருக்கிறது. கடந்த வாரம், பத்திரிகையாளர் ஒருவர் பிரதமரை ‘கப்பு’ அல்லது தற்பெருமை கொண்டவர் என்று குறிப்பிட்டதற்காக, மத்தியப்பிரதேச காவல்துறை அவர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்தது. ஆக்ராவில், உத்தரபிரதேச முதல்வரை ‘நாய்’ என்று அழைத்த ஒருவர் மீது தேசத்துரோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருக்கிறது. கடந்த மாதம், காஷ்மீரில் இளம் புகைப்படக் கலைஞர் ஒருவர், கடந்த 2018ஆம் ஆண்டு இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட புகைப்படத்திற்காக, பயங்கரவாதி என்று முத்திரை குத்தப்பட்டு சட்டவிரோத செயல்கள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவதாக அச்சுறுத்தப்பட்டார். ஆந்திராவில், விசாகப்பட்டினத்தில் நடந்த சமீபத்திய தொழில்துறை விபத்து குறித்து தொடர்ச்சியான சங்கடமான கேள்விகளைக் கேட்ட ஒரு பெண், காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இந்த ‘தனிப்பட்ட’ நபர்கள் மீதான வழக்குகள் அனைத்தும், மற்றவர்களை மௌ.னமாக இருக்க வைக்கும் வகையிலே,  அச்சுறுத்தும் நோக்கம் கொண்டவையாகவே இருக்கின்றன. திருத்தப்பட்டுள்ள சட்டவிரோத செயல்கள் (தடுப்பு) சட்டம், எந்தவொரு தனிநபரையும் ’பயங்கரவாதியாக’ சித்தரிக்கும் அதிகாரத்தை உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு வழங்கியுள்ளது.

Why Is There Hue And Cry Over Sedition Law? Every Country Has And ...

கொரோனா வைரஸ் தொற்று, எந்தவொரு திட்டமோ அல்லது தயாரிப்போ இல்லாமல் மனித பேரழிவைத் தூண்டி விட்டிருக்கும் பொதுமுடக்கம் என்று இவை இரண்டையும் மோடி கையாண்ட விதத்தில் இருந்து நிர்வாகியாக அவருடைய மோசமான தோல்வி தெளிவாகத் தெரிகிறது. ஆனால், அவரிடமிருக்கின்ற நோயின் பயங்கர உச்சமாக, கடந்த ஆண்டில் அதிக கவனத்திற்கு வந்த ஜனநாயகத்தின் மீது காட்டிய அவமதிப்பே, என்னைப் பொறுத்தவரை அவர் ஏற்படுத்தியிருக்கும் மிகப்பெரிய பேரழிவாக இருக்கிறது.  

அத்தகைய அவமதிப்பைச் செய்த தலைவரால் மட்டுமே – என்ன மோசமான செயல்களைச் செய்தாலும், தன்னால் அதிகாரத்தில் இருக்க முடியும் என்று நம்புகின்ற தலைவரால் மட்டுமே – வாக்களிக்கும் உரிமை கொண்டிருக்கும் கோடிக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்களின், துன்பத்தைச் சரிசெய்வதற்கான எந்தவொரு முயற்சியையும் மேற்கொள்ளாதால் ஏற்படுகின்ற அபாயத்தை எதிர்கொள்ளக் கூடியவராக இருக்க முடியும். இவ்வாறு மோடி ஜனநாயகத்தைப் புறக்கணிப்பது ஆழமாகவும் பரவலாகவும் இயங்குவதாக இருக்கிறது. மேலும் அதிகாரத்தைப் பயன்படுத்துவதைப் பொறுத்தவரை, தடுப்பு மற்றும் சமநிலையாகச் செயல்படுகின்ற ஒவ்வொரு நிறுவனத்திற்குள்ளும் அது தன்னை நீட்டித்துக் கொண்டிருக்கிறது. 

பிரதமராக இருந்த முதல் ஆட்சிக் காலத்தில், நீதித்துறை, இந்திய ரிசர்வ் வங்கி, மத்திய புலனாய்வுப் பிரிவு, நாட்டின் பல்கலைக்கழக அமைப்புகள், மத்திய விஜிலென்ஸ் ஆணையம், தகவல் அறியும் உரிமைச்சட்டம், பாராளுமன்றம் மற்றும் அதன் குழுக்கள் என்று அனைத்தையும் அவர் குறைமதிப்பிற்கு உள்ளாக்கினார். தன்னுடைய இரண்டாவது ஆட்சிக்காலத்தில், இந்தியாவின் அரசியலமைப்பின் கூட்டாட்சித் தன்மை மீது, இப்போது தனது பார்வையைத் திருப்பியுள்ளார். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலான மக்களின் ஜனநாயக உரிமைகள் மீது தான் நடத்துகின்ற தாக்குதல்களுக்கு எதிரான நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்துவதை உறுதி செய்கின்ற வகையில், மத்திய தகவல் ஆணையத்தின் நடவடிக்கைகளைத் துண்டித்து, நீதித்துறையின் சுதந்திரத்தையும் குறைமதிப்பிற்கு உட்படுத்தியுள்ளார்.

பாஜகவின் வகுப்புவாதத் திட்டங்களுக்கு பின்னடைவு ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக, அவருடைய  முதலாவது ஆட்சிக் காலத்தில் உருமறைப்பாகப் பயன்படுத்தப்பட்ட முன்னேற்றம் மற்றும் வளர்ச்சி போன்றவை மறைந்து போய் விட்டன. மோடியின் இந்த இரண்டாவது ஆட்சிக் காலத்தின் முதல் ஆண்டில் பாஜக சுட்டிக்காட்டக்கூடிய ஒரே ’சாதனை’யாக இருக்கின்ற அனைத்தும், அதனுடைய முஸ்லீம் எதிர்ப்பு மனநிலையோடு தொடர்புடையவையாகவே இருக்கின்றன. முதலாவதாக, முறையாக விவாகரத்து செய்யாமல் தங்கள் மனைவிகளைக் கைவிடுகின்ற முஸ்லீம் கணவர்களை குற்றவாளிகள் ஆக்குகின்ற சட்டம் வந்தது. (அதே செயலைச் செய்கின்ற ஹிந்து கணவர்கள் பயப்பட வேண்டியதில்லை) பின்னர் ஆகஸ்ட் 5 அன்று 370ஆவது சட்டப்பிரிவு நீக்கப்பட்டது. மேலும் ஆறு நீண்ட மாதங்களுக்கு ஜம்மு-காஷ்மீர் மக்கள் மீது தகவல் தொடர்பு துண்டிப்பு நடவடிக்கை சுமத்தப்பட்டது. அந்த தடை இன்னும் முழுமையாக நீக்கப்படவில்லை. 

BJP income doubles to Rs 2,410 crore, Congress' up 4.5 times to Rs ...

அடுத்து, அயோத்தி பிரச்சினை தொடர்பாக, அதன் தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் 1992ஆம் ஆண்டு பாபர் மசூதியை முழுமையாக இடித்த அந்த இடத்திலேயே, ராமர் கோவிலைக் கட்டிக் கொள்ளும்  பாஜகவின் நீண்டகாலத் திட்டத்தை நிறைவேற்றிக் கொள்ளும் வகையில், ஒரு சாதகமான (வெளிப்படையாக அபத்தமானது என்றாலும்) தீர்ப்பை மோடி அரசாங்கம், உச்சநீதிமன்றத்திடமிருந்து வேண்டிப் பெற்றுக் கொண்டது. சட்டப்பூர்வமான பொது அறிவின்படி கொடூரமான குற்றத்திற்கு வழிவகுத்த சொத்து தகராறுக்கு, மோடியின் வற்புறுத்தலின் பேரில் மிகவிரைவான தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்த கிரிமினல் வழக்கு இன்னும் தொடர்ந்து நீடிக்கிறது.

கடந்த டிசம்பரில் மோடி அரசாங்கத்தின் மூன்றாவது ‘சாதனை’யாக, குடியுரிமை சட்டத் திருத்தம்  நிறைவேற்றப்பட்டது. முறையான விவாகரத்து தீர்வு இல்லாமல் தங்கள் மனைவிகளைக் கைவிடுவது என்பது, முஸ்லீம்களுக்கு மட்டுமல்லாது அனைத்து கணவர்களுக்குமே குற்றம் என்று மாற்றப்பட்டிருந்தால், முத்தலாக் சட்டத்திற்காக கூறப்பட்ட நோக்கம் நிறைவேறியிருக்கும். முஸ்லீம் அல்லாதவர்களை மட்டுமல்லாது, அண்டை நாடுகளில் துன்புறுத்தலுக்கு ஆளானவர்கள் அனைவரையும் இந்திய குடிமக்களாக மாறுவதற்கு அனுமதித்திருந்தால், குடியுரிமை சட்டத் திருத்தத்திற்காக கூறப்பட்ட நோக்கம் நிறைவேறியிருக்கும். ஆனால் மோடி அரசாங்கத்தின் நோக்கம் மதத்தை காரணியாகப் பயன்படுத்தி, சமுதாயத்தை ஒருமுனைப்படுத்துவதே ஆகும். பொதுமக்களின் எதிர்ப்பில் இருந்த தீவிரத்தை உணர்ந்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், மோடியும், குறைந்தபட்சம் தற்காலிகமாகப் பின்வாங்க வேண்டியிருந்த  இந்திய குடிமக்கள் தேசிய பதிவேட்டிற்கு அடுத்து அரசாங்கம் உண்மையில் தொடர விரும்பியதை, அமித்ஷாவின் அந்த ’காலவரிசை’ தெளிவுபடுத்திக் காட்டியது.

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களின் தீவிரத்தன்மையை தணிக்கின்ற  வகையில்,  டெல்லியில் வகுப்புவாத வன்முறையைப் பயன்படுத்தியதே இந்த அரசாங்கத்தின் அடுத்த ‘சாதனை’ ஆகும். அவர்களுடைய இந்த செயல்முறை தோல்வியுற்ற போது – அல்லது கொரோனா வைரஸ் வந்து  குறுக்கிட்டபோது – அந்த வன்முறை ஒரு ‘இஸ்லாமிய-மார்க்சிய சதி’யின் விளைவாக இருப்பதாக் கூறி, மிக மோசமான  சட்டவிரோத செயல்கள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிரான போராட்டத்தில் முன்னணியில் நின்று செயல்பட்ட பல செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டனர். அந்த வன்முறை முஸ்லீம்களை இலக்காகக் கொண்டது என்பதை உலகம் முழுவதும் அறிந்திருந்தாலும், நாஜி ஜெர்மனியில் யூதர்கள் மீது நடத்தப்பட்ட நவம்பர் வன்முறையைப் (கிறிஸ்டால்நாச்ட்) போல, முஸ்லீம்கள் தங்கள் வீடுகளையும் வாழ்வாதாரங்களையும் அழிக்க சதி செய்தனர் என்றே கூறப்பட்டது. 

பிரதமராக தங்கள் தலைவரின் ஆறாவது ஆண்டின் முக்கிய சாதனைகளாக, ஜனநாயகத்தை அடக்கி ஒடுக்குவதையும், முஸ்லீம்களிடம் அதிகரித்து வரும் பாதுகாப்பின்மையையும் மோடி லாபி காணும் என்றாலும், மோடி அரசாங்கத்தின் காஷ்மீர் கொள்கை, கோவிட்-19 நோய்த் தொற்றை அவர் கையாண்ட விதம், பொதுமுடக்கத்தால் ஏற்படக்கூடிய விளைவுகளிலிருந்து ஏழைகளையும், பாதிக்கப்படக் கூடியவர்களையும் பாதுகாக்க முடியாமை என்ற மூன்று பெரிய தோல்விகளில் இருந்து அவர்களால் அவரை விடுவிக்க முடியாது.  

What rights will Kashmiris lose after Article 370, Article 35A are ...

காஷ்மீர் பள்ளத்தாக்கில் 4ஜி சேவைகளை திரும்பத் தருவதற்கோ,, அனைத்து அரசியல் தலைவர்களையும் விடுவிப்பதற்கோ, அல்லது ஜனநாயக அரசியல் நடவடிக்கைகளை அனுமதிப்பதற்கோ அரசாங்கத்திடம்  விருப்பம் இல்லாதிருப்பது, 370ஆவது பிரிவை அகற்றுவது போன்ற நடவடிக்கை, மிக முக்கியமான பிரச்சனையைத் தீர்ப்பதற்காக மோடியிடம் இருக்கின்ற அணுகுமுறை அல்ல என்பதற்கான அறிகுறியாகவே இருக்கின்றது.  தற்போதைய அணுகுமுறை நீண்டகாலத்திற்குத் தொடர்ந்தால், காஷ்மீர் பிரச்சினைக்கான பொதுமக்கள் சார்ந்த தீர்வை எதிர்நோக்கியிருக்கும் பள்ளத்தாக்கில் உள்ள மக்களின் அச்சம் இன்னும் அதிகரிக்கவே செய்யும். 

பெருமளவிலான கைதுகள், இணையத் தடை குறித்து எதையும் செய்வதற்கு உச்சநீதிமன்றம் மறுத்திருக்கிறது. 370ஆவது பிரிவு மற்றும் குடியுரிமை சட்டத் திருத்தம் போன்ற நடவடிக்கைகள் எழுப்பியிருக்கும் சட்டபூர்வமான கேள்விக்கு முன்னுரிமை அளிப்பது ஒருபுறம் இருக்கட்டும், ரஞ்சன் கோகோய், எம்.பியாக  அரசு தரப்பிலிருந்து தன்னுடைய வாழ்க்கையை ஆழ்ந்து கவனித்து ரசிக்க முடிந்திருப்பது, மற்றுமொரு பெரிய அரசாங்க சாதனையாக முன்னிறுத்தப்படக் கூடும். 

அதிகபட்ச தொற்றுநோய், குறைந்தபட்ச நிர்வாகம்

தற்காலிக, சிந்தனையற்ற, மையப்படுத்தப்பட்ட, ஜனநாயக விரோதமான பிரதமருக்கே உரித்தான தனிச்சிறப்பான செயல்பாட்டு பாணி, நீதித்துறை கூட நரேந்திர மோடியைக் காப்பாற்ற இயலாத அளவிற்கு கொரோனா வைரஸ் விவகாரம், துரதிர்ஷ்டவசமாக இந்தியாவிற்கும், அவருக்கும் பெரும் தவறுகளைச் செய்வதற்கான வழிவகுத்துக் கொடுத்திருக்கிறது. உண்மையில், புலம்பெயர்ந்த தொழிலாளர்களை நடத்திய விதம் குறித்து முதலில் அரசாங்கத்தின் பக்கம் நின்ற உச்சநீதிமன்றம், இந்தியா முழுவதும் காட்சிக்கு வைக்கப்பட்ட துயரங்களால் தன்னுடைய அணுகுமுறையை மறுபரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயத்திற்குள்ளானது. 

உண்மை என்னவென்றால், பிரச்சனை ஆரம்பித்ததிலிருந்தே, மோடி இந்த நெருக்கடியை கையாண்ட விதம் பேரழிவு தருவதாகவே இருந்தது. மிகத் தாமதமாக மார்ச் 13 அன்று, பொது சுகாதார நெருக்கடிநிலை இல்லை என்று அவருடைய அரசாங்கம் வெளிப்படையாக அறிவித்தது. ஆனால் அதற்கு 11 நாட்களுக்குப் பிறகு, வெறுமனே நான்கு மணிநேர அவகாசத்துடன் தேசிய அளவிலான பொதுமுடக்கத்தை விதிக்கும் நிர்பந்தத்திற்கு பிரதமர் உள்ளானார். உலகின் பெரும்பாலான தலைவர்கள் இவரைப் போலவே செயல்பட்டிருக்கிறார்கள் என்பதால், பொதுமுடக்கத்தை நோய் பரவலைத் தடுப்பதற்கான நடவடிக்கை என்று நம்பியதற்காக மோடியை நாம் தவறாகக் கூற முடியாது. ஆனாலும் எந்த ஏற்பாடுகளும் செய்யாமலேயே பொதுமுடக்கத்தை அமல்படுத்திய ஒரே பெரும்தலைவராக இவர் மட்டுமே இருக்கிறார். 

மார்ச் 22 அன்றைக்கான ‘ஜனதா ஊரடங்கு உத்தரவை’ அறிவித்த மார்ச் 19 அன்றே அவர் பொதுமுடக்கம் என்ற திட்டத்தை உறுதிப்படுத்தியிருந்தால், அதன் விளைவுகளைத் திட்டமிடுவதற்கு அவருக்கு ஆறு நாட்கள் கூடுதல் அவகாசம் கிடைத்திருக்கும். பொதுமுடக்கத்திற்கு முன்பாக சில நாட்களை வீணடித்து, மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் அரசாங்கத்தை கவிழ்ப்பது, தொற்றுநோயை வகுப்புவாதமாக்குவது போன்ற தனது அரசியல் நோக்கங்களைத் தொடர்ந்த மோடி அரசாங்கம், அரசு இயந்திரங்களை அதிக அளவில் பயன்படுத்துவது, தன்னுடைய குறைந்தபட்ச நிர்வாகத்திலிருந்து விலகிச் செல்வதாக இருக்கும் என்றே நம்பியது. ஆனால் உண்மை என்னவென்றால், பொருளாதாரத்தையும், லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தையும் வீணடித்த பொதுமுடக்கம், தொற்றுநோயைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டது. இத்துடன் சங்பரிவாரின் மிகஅசிங்கமான இஸ்லாமிய எதிர்ப்பு – வளைகுடா பிராந்தியத்தில் பல ஆண்டுகளாக இந்தியா கொண்டிருந்த ராஜதந்திரத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தியது – நாட்டிற்கு தீங்கு விளைவிக்கின்ற பொருளாதார விளைவுகளை ஏற்படுத்துகின்ற செயலாகவே இருந்தது. 

unannounced curfew in these areas of Lucknow due to Situation ...

மோடி 1.0 ஆட்சியின் போது, ​​பாஜக அரசை ‘மன்மோகன் சிங் பிளஸ் மாடு’ என்று அருண் ஷோரி கேலி செய்திருந்தார். ஆனால் இன்றைக்கு, ஆட்சியதிகாரத்தை மையப்படுத்தவும், பெருவணிகத்தின் நலன்களை ஊக்குவிக்கவும், மக்களின் ஜனநாயக உரிமைகளை மிதிக்கவும், நீதித்துறையை நிர்வகிக்கவும் மோடி இந்த தொற்றுநோயைப் பயன்படுத்திய விதத்தைப் பார்க்கும் போது, அவருடைய ஆட்சி மிகப் பெரிய அளவில் இந்திரா காந்தியின் நெருக்கடிநிலையை  ஒத்ததாகவே இருக்கிறது. இந்திராகாந்திக்காக மன்னிப்புக் கோருபவர்கள், வழக்கமாக ‘குறைந்த பட்சம் ரயில்களாவது சரியான நேரத்தில் ஓடின’ என்று சொல்வார்கள். ஆனால் இன்றைய மோடி 2.0 ஆட்சியால் அதைக்கூட நிர்வகிக்க முடியவில்லை, இவ்வாறான நிலைமையையே, இந்த ஆறு ஆண்டுகால கருத்தியல் ரீதியாக இயங்கும் ‘ஆட்சி’ உருவாக்கியிருக்கிறது.

முதலமைச்சராகவும் பிரதமராகவும் மோடி இருந்த காலகட்டங்களில், அவரைப் பற்றி நாம் கற்றுக்கொண்ட ஏதாவது ஒன்று இருக்குமென்றால், அது தான் செய்த தவறுகளிலிருந்து அவர் ஒருபோதும் பாடம் கற்றுக் கொள்ள மாட்டார் என்பதாகவே இருக்கும். தற்போது நிலவுகின்ற  நிலைமை அவருடைய ஆளுமை வழிபாட்டின் விளைவாக ஏற்பட்டதாகவே இருக்கிறது. மேலும் தன்னுடைய இத்தகைய மோசமான நடவடிக்கைகளை இரட்டிப்பாக்குவது மட்டும்தான் அவரால் செய்ய முடிந்த ஒரே எதிர்வினையாகவும் இருக்கின்றது. அதிகாரத்தை ஓரிடத்தில் குவித்தல் மற்றும் சர்வாதிகாரவாதம் பிளவுபடுத்துகின்ற, துருவமுனைப்படுத்தும் அரசியல் போன்றவையே நெருக்கடிகளைக் கடப்பதற்கு அவருக்கு இதற்கு முன்னர் உதவியிருக்கின்றன. கோவிட்-19 பரவுகிற சூழலில், பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ள நிலைமையில், வரவிருக்கும் ஆண்டு, இதுவரையிலும் நாம் கண்டதை விட மிக மோசமான பாதிப்பையே இந்திய ஜனநாயகத்திற்கு ஏற்படுத்துவதாகவே இருக்கப் போகின்றது. 

தி வயர் இணைய இதழ், 2020 மே 30

https://thewire.in/politics/as-the-first-year-of-modi-2-0-ends-its-clear-that-democracy-has-been-quarantined

 

Leave a Response

Top Reviews

Video Widget

gallery