Article

உயிர் கொல்லி நோய் கோவிட்-19 பின்னணியில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியும் பொருளாதாரப் பெருமந்தத் தாக்கத்தின் போது (1929-1939) பெற்ற படிப்பினைகளும்: பேரா. கா. அ. மணிக்குமார்

Spread the love

 

அமெரிக்கப் பங்குச்சந்தையின் வீழ்ச்சியின் விளைவாக 1929 இல் ஆரம்பித்து அடுத்த பத்தாண்டுகள் நீடித்த உலகளாவிய பொருளாதாரப்பெருமந்தம் வரலாற்றில் முதலாளித்துவம் சந்தித்த மாபெரும் சவாலாகும். ஏற்றுமதிச்சந்தையில் வீழ்ச்சி, உணவு, வர்த்தக விளைபொருட்களின் தேக்கம், விலை சரிவு, சுங்கத்தீர்வை, முத்திரை காகிதம், பத்திரப்பதிவுகள் மூலம்  அரசுக்குக் கிடைத்த வருவாயில் இழப்பு  ஆகியவை  பெருமந்தத்தின் சிறப்புக்கூறுகளாகும். கட்டுப்பாடற்ற முதலாளித்துவத்தின் மீதான நம்பிக்கையை இப்பெருமந்தம் இழக்கச்செய்து அரசியலிலும்  தாக்கத்தை ஏற்படுத்தியது. அமெரிக்காவில் 1920 களில் ஏற்பட்ட அபரீத பொருளாதார வளர்ச்சிக்கு உரிமை கொண்டாடிய ஹூவரின் குடியரசுக்கட்சி அடுத்த இருபது ஆண்டுகளுக்குத் தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்பட்டது. இங்கிலாந்தில் பொருளாதார வீழ்ச்சிக்குக் காரணமாகக் கருதப்பட்ட தொழிலாளர் கட்சி 1931 முடிவில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் தோற்கடிக்கப்பட்டது.

இன்று கொரோனா பொது முடக்கத்தால் சரிந்திருக்கும் உலகப்பொருளாதாரம் 1930களில் உலகை உலுக்கிய பொருளாதாரப்பெருமந்தமாக உருவெடுக்கும் எனச் சர்வதேச நிதி நிறுவனம் (IMF) எச்சரித்திருக்கும் பின்னணியில் உலகப்பெருமந்தம் பற்றிய ஓர் புரிதல் அவசியம் என்ற எண்ணத்தில் எழுதப்பட்ட கட்டுரை இது.

முதல் உலகப்போருக்குப் பின் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் 

முதல் உலகப்போர் ஒவ்வொரு ஐரோப்பிய  நாட்டின் மீதும் பெரும் கடன் சுமையை ஏற்படுத்தியது. நிதி வல்லமையில் அது வரை முதன்மை நாடாக இருந்த இங்கிலாந்து கடன்பட்ட நாடாக பின்னுக்கு தள்ளப்பட்டது. அனைத்து நாடுகளுக்கும் கடன் வழங்கும் அளவுக்குச் செல்வவளம் கொண்ட நாடாக    அமெரிக்கா உருவெடுத்தது. இங்கிலாந்தின் தேசியக்கடன் 650 கோடி டாலர் ஆக இருந்தது. அமெரிக்கா நேசநாடுகளின் பக்கம் போரின் இறுதியில் சேர்ந்தாலும் போரின் ஆரம்பத்திலிருந்து நேசநாடுகளுக்கு கடன் உதவி செய்துவந்திருந்தது. போரின் முடிவில் ஐரோப்பா 1000 கோடி டாலர் அமெரிக்காவிற்குக் கடன் பாக்கி வைத்திருந்தது. கடன்பட்ட நாடுகள் தங்கள் நாட்டு உற்பத்திப்பொருள்களை ஏற்றுமதி செய்ததன் மூலம் கடனை அடைந்திருக்கலாம். ஆனால் அமெரிக்கா எழுப்பியிருந்த சுங்கச்சுவர் அதற்குத் தடையாய் இருந்தது. இருப்பினும் கடன்பட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு உதவ அமெரிக்கச் செல்வந்தர்கள் பலர் இருந்ததால் அவர்களிடமிருந்து வாங்கிய கடன் மூலமே  கடனுக்குக்காண வட்டி செலுத்தப்பட்டது. பிற நாட்டுப் பொருள்களை அனுமதிக்காத அமெரிக்கா, தன் நாட்டிலிருந்து மூலதனம் வெளியேறுவதைத் தடை செய்யவில்லை. மூலதன பெயர்ச்சி கால ஓட்டத்தில் நிச்சயமாக லாபகரமானதாக இருந்திருக்கும். ஆனால் உள்நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மூலதன ஏற்றுமதியைத் தடை செய்ய அமெரிக்காவைக் கட்டாயப்படுத்தியது.

பங்குச்சந்தை வீழ்ச்சி               

1920களில் அமெரிக்கா  மட்டுமே பணக்கார நாடு. நாட்டின் பணம்படைத்தோர் பங்குகளை வாங்கி விற்கும் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இச்சூதாட்டக்காரர்கள் பங்குகளின் மதிப்பைச் செயற்கையாக உயர்த்தி இருந்தனர். 1929 ஆம் ஆண்டு அக்டோபர் 24ஆம் நாள் அமெரிக்கர்களுக்குக் கருப்பு தினமாகும். அன்று 1,28,94,650 பங்குகள் கை மாறின. அவை குறைந்த விலைக்கு விற்கப்பட்டதால் பங்குதாரர்களின் கனவுகள் சிதைந்தன. அனைவரும் அச்சத்தில் பங்குகளை விற்க முயன்ற போது பங்குகளை வாங்குவதற்கு ஆள் இல்லாமல் போனது. இதன் எதிரொலியாக சிகாகோ, பபல்லோ பரிவர்த்தனை நிறுவனங்கள் மூடப்பட்டன. பங்குச்சந்தை சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த பலர் தற்கொலை செய்துகொண்டனர்.     

Trading Mistakes to Avoid | The Cash Academy

திவாலான வங்கிகள்

பங்குச்சந்தை வீழ்ச்சியைத் தொடர்ந்து அமெரிக்க வங்கிகள் திவாலாகின. 1929-33 ஆண்டுகளுக்குள்  24,970 வங்கிகள் மூடப்பட்டன. அமெரிக்க நிதியாளர்கள்  தாம் முதலீடு செய்திருந்த பணத்தைத் திரும்பப் பெறத்தொடங்கினர். 1929 ஆம் ஆண்டு தனியார்கள் முதலீடு செய்திருந்த தொகை கிட்டத்தட்ட 1500 கோடி டாலர் ஆகும். இதில் பெருந் தொகை ஜெர்மனியில் முதலீடு செய்யப்பட்டிருந்தது. ஜெர்மனி அத்தொகையை தொலை திட்ட அடிப்படையில் பல புதிய தொழில்களில் முதலீடு செய்திருந்தது. எனவே பணத்தை அமெரிக்காவுக்குத் திருப்பிக்கொடுக்க இங்கிலாந்திலிருந்தும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிடமிருந்தும் ஜெர்மனி கடன் வாங்க வேண்டியிருந்தது. கடன் கொடுத்த கிழக்கு ஐரோப்பிய நாடுகள் வெகு விரைவிலேயே பெருமந்தத்தால் பாதிக்கப்பட்டதால் வியன்னாவில் (ஆஸ்திரியா)  இருந்த கிரிடிட்-அன்ஸ்டால்ட் வங்கியில் வாங்கியிருந்த கடனை திருப்பி செலுத்த  வேண்டிய நிலையில் ஜெர்மனிக்குத் தொடர்ந்து கடன் வழங்க அவைகளால் இயலவில்லை. இதன் விளைவாக ஜெர்மனியின் மிகப்பெரிய இரு வங்கிகளான டாம்ஸ்டெட் தேசிய வங்கியும், டிரெஸ்டன் வங்கியும் திவாலாகின. இந்த இருவங்கிகளுக்கும் பேங்க் ஆப் இங்கிலாந்து அதிகக்கடன் கொடுத்திருந்தால் அதுவும் சிக்கலில் மாட்டியது.

நிலைமையைச் சமாளிக்க முதலில்  பிரான்ஸிடமிருந்தும் பின்னர் அமெரிக்காவிடமிருந்து பிரிட்டன் கடன் வாங்கியது. நிலைமை கட்டுக்கடங்காத போது 1931ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் வாரத்தில் கடுமையான வரி விதிப்பு,, செலவினம் மற்றும் பணியாட்கள் குறைப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய அவசர நிதி அறிக்கையைத்  தாக்கல் செய்தது. 1833 இல் இருந்து பின்பற்றி வந்த தடையற்ற வர்த்தகக் கொள்கையைப் பிரிட்டன் கைவிட்டதோடு  தங்கத்தரத் திட்டத்திலிருந்தும் (Gold Standard)   வெளியேறியது. பிரிட்டனைத்தொடர்ந்து அனைத்து ஐரோப்பிய நாடுகளும்  தற்காப்புக்கொள்கையை (Protectionism) பின்பற்றத்தொடங்கின. அவரவர் நாட்டு நாணயங்களின் மதிப்பைக் குறைத்து ஏற்றுமதியை ஊக்குவிக்க ஆட்சியாளர்கள் முயன்றனர். அத்தோடு வெளிநாடுகளில் வாங்கியிருந்த கடனையும் அதற்கான வட்டியையும்  நிறுத்தி வைத்ததால்  வட்டிக்குப் பணம் கொடுத்தவர்களும் கடன் கொடுப்பதை நிறுத்தினர். சர்வதேச நிதிப்புழக்கம் 18 சதவீதமாகக் குறைந்தது   

அமெரிக்காவில் பெருமந்தத்தின் தாக்கம் 

 

பிரிட்டன் காலனிகள் பல பெற்றிருந்ததால் பெருமந்தத்தின் தாக்கத்தை  அவற்றிற்குக் கடத்தி விட முடிந்தது. உதாரணத்திற்கு அனைத்து நாடுகளும் நாணயத்தின் மதிப்பைக் குறைத்து ஏற்றுமதியை ஊக்குவித்தபோது இங்கிலாந்து   ரூபாயின் மதிப்பைக் கூட்டி தன்  நாட்டு உற்பத்திப்பொருள்களை பெரும் அளவில் இந்தியாவில்  இறக்குமதி செய்வதற்கு வழிவகுத்தது. ஆனால் அமெரிக்காவிற்கு பிலிப்பைன்ஸ் தவிர வேறு காலனிகள் இல்லாததால் அங்குப் பாதிப்பு  கடுமையாக இருந்தது. 1929இல் அமெரிக்காவின் ஏற்றுமதி மதிப்பு எழுநூறு கோடி டாலர் ஆக இருந்தது. ஆனால் 1932இல் அதன் மதிப்பு 250 கோடி டாலர் ஆகக் குறைந்தது. அதே காலகட்டத்தில் இறக்குமதியின் மதிப்பும் 590 கோடி டாலரிலிருந்து 200 கோடி டாலர் ஆகச் சரிந்தது.  உற்பத்தி பொருள்களின் விலை 26% சதவீதமாக வீழ்ந்தது. 

அமெரிக்காவின் பிரசித்தி பெற்ற மின்சாதனப்பொருட்கள் உற்பத்தி நிறுவனமான வெஸ்ட்டிங் ஹவுஸின் விற்பனை மூன்றில் ஒரு பங்காகச் சுருங்கியது.பல தொழில் நிறுவனங்களுக்கு தலைமை தாங்கி பிரபல தொழில் அதிபராக விளங்கிய சாமுவேல் இன்சல் திவாலாகி சட்டத்தின் பிடியிலிருந்து தன்னைக் காப்பாற்ற கிரீஸ் நாட்டுக்கு தப்பி ஓடினார். 

 {இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில், தாக்கம் எவ்வாறு இருந்தது என்பதை அறிய எனது 1930களில் தமிழகம்: பொருளாதாரப்பெருமந்தத்தின் தாக்கம் (அலைகள் வெளியீட்டகம்- மறுபதிப்பு 2019) நூலை படிக்கவும்.}

அப்போது அதிபராக இருந்த ஹூவரின் குடியரசுக்கட்சி அரசுப் பணியாளர்கள் மூன்றில் ஒரு பகுதியினரை பணியிலிருந்து நீக்கிவிட்டுக் குறைந்திருந்த அரசு வருமானத்திற்கு ஏற்ப செலவினங்களைச் சுருக்கி  நிதிநிலையைச் சரி செய்ய முயன்றது. அரசைப் பின்பற்றி தனியார் தொழில் நிறுவனங்களும் ஆட்குறைப்பு, சம்பள வெட்டு (40 முதல் 60 சதவீதம்)  போன்ற நடவடிக்கைகளில் இறங்கின.  இருப்பினும் நிலைமை கட்டுக்குள் அடங்கவில்லை. அமெரிக்கப் பொருளாதாரம் ஐம்பது சதவீத வீழ்ச்சியைக் கண்டது. மிக மோசமான பாதிப்பாண்டான 1932-33 இல் அமெரிக்காவில் 24.9 சதவீதத்தினர் வேலையின்றி இருந்தனர். வேலையில்லாத அமெரிக்கர்கள் தங்கள் வீடு வாசல்களை இழந்து பட்டினியுடன் வீதிகளில் அலைந்தனர்.    

At the Time of the Louisville Flood | Photography and the Great ...

இலவச உணவுக்காக வரிசையில் நிற்கும் அமெரிக்கர்கள்கேலிச்சித்திரம்

போராட்டங்களும் வேலைநிறுத்தங்களும் 

1930கள் இடதுசாரிகளின் காலமாகப் போற்றப்படுகிறது. அந்த பத்தாண்டுகளின் போது அமெரிக்காவில் நூற்றுக்கணக்கான போராட்டங்களை சோசலிஸ்டுகளும், கம்யூனிஸ்ட்டுகளும் நடத்தினர். அவற்றுள் குறிப்பிடத்தக்கது நியூயார்க் நகர டாக்சி ஓட்டுநர்கள் வேலை நிறுத்தப்போராட்டம் (1934). இப்போராட்டம் நடக்கும் முன் அதிபர் தேர்தலில் ஹூவர் தோற்கடிக்கப்பட்டு 1933 மார்ச் இல் ரூஸ்வெல்ட் அதிபராகப் பதவியேற்றிருந்தார். 1934 ஆம் ஆண்டு பிப்ரவரி மூன்றாம் நாள் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட டாக்சி ஓட்டுநர்கள் செய்த வேலை நிறுத்தம் நியூயார்க் நகரையே ஸ்தம்பிக்கவைத்தது. வேலைநிறுத்தத்திற்குக் காரணம் ஒவ்வொரு வாடகைக்கட்டணத்திலிருந்தும்  நகராட்சி வரியாகப்  பிடிக்கப்பட்ட ஐந்து சதவீதத் தொகையை அவர்கள் வேலை பார்த்த நிறுவனங்களுக்குப் பதிலாக வாகன ஓட்டிகளுக்கு வழங்க வேண்டும் என்பதாகும். போராட்டக்காரர்களுக்கு நகர மேயரின் ஆதரவு இருந்தது. இருப்பினும் சொந்த வாடகைக்காக ஓட்டுநர்கள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளாததால் அவர்கள் பயணிகளை ஏற்றிச்செல்லும் போது, இரு பிரிவினருக்கும் மோதல் ஏற்பட்டு வன்முறை வெடித்தது. இதனால்  காவல் துறையினர்  தலையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஓட்டுநர்களைக்  கைது செய்ததோடு  அவர்களது ஓட்டுநர் உரிமத்தையும் ரத்து செய்தனர்.  

Taxi driver strike in New York, 1934 Stock Photo: 37006684 - Alamy

நியூயார்க் டாக்ஸி ஓட்டுநர்கள் போராட்டம் (1934)

நாற்பது நாட்கள் நடைபெற்ற இப்போராட்டத்தால் ஈர்க்கப்பட்ட கிலிஃபோர்ட் ஓடெட்ஸ் எழுதிய நாடகம் “இடதுசாரி வருகைக்காகக் காத்திருத்தல்” (Waiting for Lefty) 163 தடவை பிராட்வே அரங்கத்தில் பெருமந்தத்தின் போது அரங்கேற்றப்பட்டுள்ளது. ஏழ்மை, தொழிலாளர்கள்  சுரண்டப்படுத்தல், பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையில் அதிகரித்துவந்த இடைவெளி போன்றவற்றை எதிர்த்து ஓர் கலவரக்குரலாக இந்நாடகம் எழுதப்பட்டுள்ளது. இந்நாடகத்தின் முக்கியத்துவம் கருதி அதன் சுருக்கம் இங்குத் தரப்படுகிறது. 

இடதுசாரி வருகைக்காகக் காத்திருத்தல் (Waiting for Lefty)

நாடகச்சுருக்கம்

Looking Up at Down

நாடக விளம்பரம் (1938)

நாடக ஆரம்பம்  

டாக்சி ஓட்டுநர்களின் சங்கக்கூட்டத்தில் கூட்டத்தலைவர் கேரி பேட் வேலை நிறுத்தத்திற்கு எதிராகப் பேசுகிறார். புதிய அதிபர் ரூஸ்வெல்ட் ஆட்சியில் போராட்டங்கள் தேவையற்றது என வாதாடுகிறார். உறுப்பினர்கள் இடதுசாரி காஸ்டெல்லோ எங்கே எனக் கேட்கும் போது  தேர்ந்தெடுக்கப்பட்ட குழு உறுப்பினர்கள் அனைவரும் வந்திருப்பதாகப் பேட் கூறுகிறார். ஜோ என்ற தொழிலாளி தலைவர்களின் கருத்துக்களிலிருந்து வேறுபடுபவர்களை எல்லாம் கம்யூனிஸ்ட் என அழைப்பதை எதிர்க்கிறார். தான் கம்யூனிஸ்ட் அல்ல போர்வீரன் என்றும் தன மனைவி போராடச்சொன்னதாகவும் தானும் போராட்டம் தேவை என்பதை உணர்வதாகவும் கூறுகிறார்.

காட்சி 1

சங்கக்கூட்டத்திற்கு முன் ஜோ தன்  மனைவியுடன் நடத்தும் உரையாடல்: அடகுவைத்திருந்த வீட்டு மரச்சாமான்களை அதன் விலையில் நான்கில் மூன்று பங்கைக்கொடுத்து மீட்டிருக்கின்றேன் என்கிறார் ஜோவின் மனைவி எட்னா. அதற்கு ஜோ  தற்போதைய சம்பளம் வீடு வாடகைக்குக் கூட போதாததாய் இருக்கிறது. ஆனால் தனது முதலாளி இன்னும் சம்பளத்தைக்குறைக்கப்போவதாகக் கூறுகிறார் எனப்பதிலளிக்கிறார். போராட்டம் பெரிய வெற்றியைக்கொடுக்காது. மாறாகச் சம்பளப் பணம் தான் பறி போகும் எனத் தயங்கித்தயங்கிச் சொல்லுகிறார். ஜோ சேர்த்திருக்கும் சங்கம் உருப்படாத ஒன்று என்கிறார் எட்னா. அதை  ஒத்துக்கொண்ட ஜோ சங்கத்தலைவர்கள் எல்லாம் மோசடியாளர்கள். சங்கத்தை சுய லாபத்திற்காகப் பயன்படுத்துபவர்கள் என விரக்தியாகப் பேசுகிறார். தனியாக வேறொரு சங்கம் ஜோ தொடங்க வேண்டும் என்கிறார் எட்னா. அப்படிச் செய்யாவிட்டால் ஜோவை விவாகரத்து செய்து விடுவதாகவும் மிரட்டுகிறார்.

காட்சி 2

ஓர் ஆய்வுக்கூட உதவியாளரான மில்லருக்கு அவருடைய எஜமானர் பாயட் பதவி, சம்பள உயர்வு தருவதாகவும், இராசயனப்போருக்கு பயன்படும் நச்சு வாயு தயாரிக்கும் பணியில் அவர் வேதியல் நிபுணர் பிரன்னருடன் வேலை செய்ய வேண்டும் என்றும் பிரன்னர் நடவடிக்கை பற்றி வாராந்திர அறிக்கை தனக்குத் தர வேண்டும் என்றும் கட்டளை இடுகிறார்.. மில்லர் முதல் உலகப்போரில் தனது சகோதரனையும் உறவினர் பலரையும் இழந்திருந்ததால் பிரன்னர் தரும் புதிய வேலையை நிராகரிக்கிறார். பாயட் தொடர்ந்து மில்லரை புதிய பணியில் சேர வற்புறுத்தும்போது மில்லர் அவரை தாக்கியதோடு, இதற்குச் சவக்குழி தோண்டி பிழைக்கலாம் எனக் கூறிவிட்டு அங்கிருந்து  வெளியேறுகிறார்.     

காட்சி 3 

பிளாரன்ஸ் என்ற இளம் வயதுப்பெண் குறைந்த சம்பளம் பெறும் ஓர் டாக்சி   ஓட்டுநர் சித் என்பவரின் காதலி. பிளாரென்ஸின் தாய் நோய்வாய்ப்பட்டிருப்பதால் சித் பிளாரன்ஸூக்கு பண உதவி செய்து வருகிறார். காதலன் சித் பற்றி தனது சகோதரன் இர்வ் உடன் பிளாரன்ஸ் விவாதித்துக்கொண்டிருக்கிறார். சிறிது நேரத்தில் இர்வ் வெளியேற சித் உள்ளே நுழைகிறார். அன்று காலை சகோதரன் கப்பற்படையில் சேர்ந்து விட்டதால், தான் பிளாரன்ஸூடன் வசிக்க முடியும் என சித் சொல்லுகிறார். வாழ்க்கையில் அவர் படும் அல்லல்களை  வேதனையுடன் நினைவு  கூறி நாட்டை வழிநடத்தும் முதலாளித்துவ வாதிகள் தொழிலாளர்களைச் சுரண்டுவதாகவும், சம்பளத்தைச் சிறிது கூட்டிக்கொடுத்தாலும் தங்களை மிஞ்சி விடுவார்கள் என்ற எண்ணம் கொண்டவர்களாக உள்ளதாகவும் வேதனைப் படுகிறார். கப்பற்படையில் சேரும் தனது சகோதரரின் முடிவை விமர்சிக்கிற சித் குறைந்த சம்பளம் வாங்குவதால் பிளாரன்ஸ் தன்னை திருமணம் செய்ய மறுத்துவிடுவாரோ என்ற தனது அச்சத்தையும் வெளிப்படுத்துகிறார். இசைத்தட்டை ஓட விட்டு நடனம் ஆடி இருவரும்  கவலையை மறக்கின்றனர்.

காட்சி 4

தொடரும் சங்கக்கூட்டம் 

கூட்டத்தலைவர் ஹேரி பேட் பிலடெல்பியாவில் நடந்த டாக்ஸி ஓட்டுநர்களின் வேலை நிறுத்தம் தொழிலாளர்களுக்குப் பாதகமாக  முடிந்ததாகக்கூறி டாம் கிளயிட்டன் என்ற ஒரு நபரை அறிமுகம் செய்து பேச  வைக்கிறார்.   வேலை நிறுத்தம் வெற்றி பெரும் என்றால் நான் தொழிலாளர்களுக்கு ஆதரவாக இருப்பேன். ஆனால் என்னுடைய அனுபவத்தில் வேலை நிறுத்தும் வெற்றி பெரும் என நான் நம்பவில்லை” என கிளயிட்டன் கூறுகிறான் .கூட்டத்திலிருந்த ஒருவர்  கிளயிட்டனை உட்காரச்சொல்லி கூச்சலிடுகிறார். ஹேரி பேட்டும் அவரது ஆதரவாளர்களும் அவரை அமைதிப்படுத்துவதற்குள் மேடை ஏறிய அம்மனிதர்  கிளயிட்டன் நிர்வாகத்தின் ஒற்றன் எனவும் சங்கத்தை உடைக்கவும், வேலை நிறுத்தப்போராட்டத்திலிருந்து தொழிலாளர்களைப் பின்வாங்கச்செய்யவும் அவன் முயற்சிக்கிறான் எனவும் முழங்குகிறார் . கிளயிட்டனின் உண்மையான பெயர் கிளான்சி எனத் தோலுரித்துக்காட்டி அவனைக் கூட்டத்திலிருந்து  வெளியேறச்செய்கிறார்.  

சங்கக்கூட்டம் நிறைவு பெறுதல்: 

அகதே என்ற ஓர் உறுப்பினர் மேடையிலிருந்து  தான் தொழிலாளர் வர்க்கத்தைச் சேர்ந்தவன் என்பதில் பெருமைப்படுகிறேன்  எனப் பேசத்தொடங்கும் போது ஹேரி பேட்டும் அவரது ஆதரவாளர்களும் அவரைத் தடுக்க முயல்கின்றனர். ஆனால்  அகதே இதர தோழர்களுடன் சேர்ந்து அவர்கள் முயற்சியை முறியடிக்கின்றார். வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபடுபவர்களையெல்லாம் சங்கத்தலைமை கம்யூனிஸ்ட்டுகள் என்றால் கம்யூனிஸ்ட் வணக்கம் தெரிவிக்கவும் நாம்  தயங்கமாட்டோம் எனச் சொல்லிக்கொண்டே கம்யூனிஸ்ட் வணக்கம் கூறிவிட்டு, ஒன்று படுவோம், போராடுவோம் என முழங்கிக் கூட்டத்தை எழுச்சி பெறச்செய்கிறார். அந்நேரத்தில் கூட்டத்திற்குள் நுழைந்த ஒருவர் எதிர்பார்த்திருந்த இடது சாரி  திரும்ப வரமாட்டார், ஏனெனில் அவர் சுட்டுக் கொல்லப்பட்டுவிட்டார். அவரது பூத உடல் சில மணிநேரங்களுக்கு முன் தான் கிடைத்ததுஎன அவர் கூறியதும் அகதே  முன்மொழிய அனைவரும் போராட்டம், போராட்டம் எனக்கூக்கிறலிடுகின்றனர். 

 நாடகம் முடிகிறது.             

சமூக பாதுகாப்புச்சட்டங்கள்

19ஆம் நூற்றாண்டில் தொழிலாளர் போராட்டங்கள் அமெரிக்காவில் நடந்தபோதெல்லாம் தொழிற்சாலை முதலாளிகள் கூலிப்படையை ஏவி தொழிலாளர்களை ஒடுக்கினர். அரசும் அதற்குத் துணை போனது. ஆனால் பொருளாதார பெருமந்தத்தின் போது தொழிலாளர்களின் பக்கம் நியாயம் இருந்ததை உணர்ந்த ரூஸ்வெல்ட் அரசு புதிய ஒப்பந்தம் (New Deal) அடிப்படையில் சமூக பாதுகாப்புச்சட்டம் (1935) கொண்டுவந்தது. இதன் மூலம் வயதானவர்க்கு ஓய்வூதியம், வேலையில்லாதவர்க்குக் காப்பீடு போன்றவை உத்திரவாதப்படுத்தப்பட்டன. தொழிலாளர் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராகப் போராடவும், கூட்டுப்பேர சக்தியைப் பயன்படுத்தவும் தொழிலாளர்கள் உரிமை பெற்றனர். தேசிய தொழிலாளர் உறவுச்சட்டம் (1935) தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோர்  தொழிற்சங்கம் அமைக்க உரிமை வழங்கியது. இச்சட்டத்தை அமல்படுத்தத் தேசிய தொழிலாளர் ஆணையம் அமைக்கப்பட்டது. 

இந்தியாவில் பொருளாதார பெருமந்த பின்னணியில் தான் தொழிலாளர்களை வென்றெடுக்கத் தொழிலாளர்களுக்கு வாழ்க்கைக்கான ஊதியம், தங்களது நலன்களைப் பாதுகாத்துக்கொள்ளச் சங்கம் அமைத்து, போராடி பேச்சுவார்த்தை மூலம் கோரிக்கைகளை நிறைவேற்றிக்கொள்ளும்  உரிமை போன்றவற்றை  ஆதரித்து இந்தியத் தேசிய காங்கிரஸ் 1931ஆம் ஆண்டு நடத்திய கராச்சி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றியது.      

தொழிற்சங்க காங்கிரஸ் 

அமெரிக்கத் தொழிற்சாலைகளில் பணியாற்றிய தொழிலாளர்களை ஜான் எல் லூயிஸ் தொழிற்சங்க காங்கிரசின் (Congress Industrial Organization) கீழ் அணி திரட்டினார். அவர் கம்யூனிஸ்ட் அல்ல. ஆனால் அவர் நடத்திய தொழிற்சங்கத்தின் முக்கிய பொறுப்புகளில் கம்யூனிஸ்ட்களை நியமித்தார். உலகநாடுகளின் பொருளாதாரம் சீரழிந்துகொண்டிருந்த போது சோவியத் யூனியனில் ஏற்பட்டுக்கொண்டிருந்த அபரீதமான பொருளாதார வளர்ச்சியையும், வேலையில்லாத்திண்டாட்டம் அங்கு இல்லாததையும்  சுட்டிக்காட்டி  சந்தைப்  பொருளாதாரத்தை எதிர்த்த தொழிற்சங்க தலைவர்களின் அர்ப்பணிப்பு வாழ்க்கை அதிக எண்ணிக்கையிலான தொழிலாளர்களைத் தொழிற்சங்க காங்கிரஸில் இணையச்செய்தது. இக்காலகட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியும் வளர்ந்தது. 1930இல் 7500 உறுப்பினர்களை மட்டுமே கொண்டிருந்த அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சி 1936 ஆம் ஆண்டு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்களைப் பெற்றிருந்தது.  அந்த ஆண்டு 44 நாட்கள் தொடர்ந்து போராடிய தொழிலாளர் சம்மேளனம் நாட்டின் மாபெரும் ஆட்டோமொபைல் நிறுவனமான ஜெனரல் மோட்டார்ஸின் அங்கீகாரத்தை பெற்றது. சங்கம் வைத்துப் போராட அவர்களுக்கு உரிமை வழங்கப்பட்டது. 1941க்குள் லூயிஸின்  தொழிற்சங்க காங்கிரஸ் ஒன்றரை கோடிக்கு மேலான உறுப்பினர்களைப் பெற்றிருந்தது.  

Great Getaways: Sit-Down Strike Memorial - YouTube

போராட்ட வெற்றியின் களிப்பில் ஜெனரல் மோட்டார்ஸ் தொழிலாளர்கள்(1936) 

பெருமந்தம் கற்பிக்கும் பாடங்கள்

இரண்டாம் உலகப்போர் வெடித்த பின் ஏற்பட்ட மாறுபட்ட சூழலில்தான் உலகப்பொருளாதாரம் வீழ்ச்சியிலிருந்து மீளத்தொடங்கியது. ஆயுத வியாபாரிகளை அதிகம் கொண்ட அமெரிக்கா முதல் உலகப்போரில் போன்று இரண்டாம் உலகப்போரிலும் இறுதியில் தான் (முத்து துறைமுகம் ஜப்பானியர்களால் தாக்கப்பட்ட) போரில் குதித்தது. அதுவரை நேசநாடுகளுக்கு மட்டுமின்றி அச்சு நாடுகளுக்கும் ஆயுதங்களை ஏற்றுமதி செய்ததால் அமெரிக்காவில் பணம் கொழித்தது. ரூஸ்வெல்ட்டின் புதிய ஒப்பந்தக்கொள்கை (New Deal Policy) பெருமந்தத்தின் வீரியத்தைக் குறைப்பதற்குப் பயன்பட்டதே தவிர அமெரிக்கப் பொருளாதாரத்தை 1929ஆம் ஆண்டுக்கு முந்தைய நிலைக்குக் கொண்டு செல்ல உதவவில்லை. அதற்குச் சந்தைப்பொருளாதார ஆதரவாளர்கள் சொல்லும் காரணங்கள் இவை: ரூஸ்வெல்ட்டின் மைய அரசு (Federal State) செலவழித்த தொகை மிகக்குறைவு; மைய அரசு பற்றாக்குறை வரவு-செலவு கணக்கீட்டைச் சமர்ப்பித்தபோது, மாகாண அரசுகள் வருமானத்திற்கு ஏற்ப செலவைக்குறைத்து உபரி காண்பித்தன. மைய அரசு வங்கி (அமெரிக்காவில்-Federal Bank; இந்தியாவில்-Reserve Bank) இருப்பிலிருந்த பணத்தைப் பயன்படுத்தி வங்கிகள் திவால் ஆகுவதையோ, மூடப்படுவதையோ தடுக்கவில்லை

அன்று ஆபத்து இரட்சகராக இங்கிலாந்தால் செயல்பட முடியவில்லை.  அமெரிக்கா செயல்பட்டிருக்க வேண்டும், ஆனால் அதன் நிலைப்பாடு தடையற்ற வர்த்தகத்திற்கு (Free Trade) எதிராக இருந்ததால் அப்பங்கை அது ஆற்றிட  விரும்பவில்லை, எனப் பொருளாதார வரலாற்றறிஞர் சார்லஸ் கிண்டில்பர்க்கர்  குறிப்பிடுகிறார். தடையற்ற வர்த்தகம் பற்றிப்பேச அடுத்த  நாற்பது ஆண்டுகளுக்கு எந்த ஓர் நாட்டிற்கும் துணிச்சல் வரவில்லை என்கிறார் வரலாற்றறிஞர் எரிக் ஹாப்ஸ்பாம். 

ஆனால் அன்றில்லாத கருத்தொற்றுமை இன்று உலகநாடுகளுக்கிடையே சந்தைப் பொருளாதாரத்திற்கு ஆதரவாக இருப்பதை நாம் பார்க்கிறோம். பணக்கார நாடுகள் (ஜி7) சந்தைப் பொருளாதாரத்தைக் காக்க எதையும் செய்யத் தயாராயிருக்கின்றன. 2008ஆம் ஆண்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க ஒவ்வொரு நாட்டிலும் குறிப்பாக அமெரிக்காவில் மைய அரசு கொடுத்த தாராள நிதி உதவி போன்று தற்போதும் நிதி ஊக்கம் (Economic Stimulus) மூலம் நிலைமையைச் சமாளிக்கலாம் என ஜி7  நாடுகள் நம்புகின்றன. அதன் எதிரொலி தான், பெருமுதலாளிகளுக்கும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் தாராள உதவிக்கரம் நீட்டும் உலக நாடுகளின் போக்கு. 

இன்று வங்கிகள் திவாலானாலும் மூடப்படமாட்டாது. மைய வங்கி இருப்பில் இருக்கும் அனைத்தையும் சிறப்பு நிதியாக வழங்கும். சாமுவேல் இன்சல் போன்றவர்கள் நாட்டை விட்டுத் தப்பி ஓடிட  அவசியமில்லை. தப்பி ஓடினாலும் அவர்களுக்கு மக்களைத் திருப்திப்படுத்த அரசு மிரட்டல் விடுமே தவிரப் பெரிதாகத் தண்டனை ஏதும் தந்துவிடாது. 

சந்தைப்பொருளாதாரத்தின் மூலம் பலனடைந்தோர் நடுத்தர, உயர் வகுப்பு மக்களே. இந்தியாவில் முறைசாரா நிறுவனங்களில் பணியாற்றும் 45 கோடி தொழிலாளர்களுக்கோ  நிரந்தரமற்ற வாழ்வாதாரம்துயரமிக்க  புலம் பெயர்தல், அதனால்  உருவாகும்  பாதுகாப்பற்ற அவல நிலை மற்றும் பட்டினிச்சாவு. எவ்வளவு நாளைக்கு நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்ற பெயரில் சிலரின் செல்வச்செழிப்பிற்குப் பெரும்பான்மையான அப்பாவி மக்களின்  வாழ்வைச் சிதைப்பது?. 

Tackling the migrant crisis: Stimulus package must correct ...

நன்றி- பைனான்சியல் எக்ஸ்பிரஸ்

பெருமந்தத்தின் போது சர்வதேச சங்கத்தின் ஓர் அங்கமாக ஜெனிவாவில் செயல்பட்ட சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO),  வேலையில்லாத்திண்டாட்டத்தை குறைக்கத் தொழிலாளர்களின் வேலை நேரத்தைக் குறைக்கப் பரிந்துரைத்தது. இன்று இந்தியாவிலோ மைய அரசு முதல் அனைத்து மாநில அரசுகளும் பணியாளர்களின் வேலை நேரத்தை நாளுக்கு 12 முதல் 14 மணிநேரமாக ஆக்குகிறது. மேலும் போராடிப்பெற்ற தொழிற்சங்க உரிமைகளைப்பறிக்க முயல்கிறது. 

செல்வந்தர்களின் பணமோ அல்லது தொழிலாளர்களின் உழைப்போ தனித்தனியாக மூலதனமாகாது; ஒன்றோடொன்று இணையும்போதுதான் அது மூலதனமாகிறது என்றார் மார்க்ஸ். தொழிலதிபர்கள் இதைப் புரிய வில்லை என்றால் அரசு அவர்களைப் புரிய வைக்க  வேண்டும். முன்னணி முதலாளித்துவ நாடுகள் செய்யத்துணியாததை இந்திய மைய அரசு செய்வதன் மூலம் தனது கொடூர, கோர முதலாளித்துவ முகத்தைக் காட்டுகிறது. இதனால் நாட்டில் பயங்கரவாதம்தான் தலையெடுக்கும் என்பதை உயர் அதிகாரிகள் அதிகாரத்தில் அமர்ந்திருக்கும் அரசியல்வாதிகளுக்கு எச்சரிக்கவேண்டும்.                   

எப்படி இந்தியத் தேசியவாதிகள் 1930 களில் தொழிலாளர் நல்வாழ்விற்கான திட்டத்தைத் தயாரித்தார்களோ அது போன்று முறைசாரா நிறுவனத்தில் பணியாற்றுவோர் மற்றும் 14 கோடி புலம் பெயர் தொழிலாளர்களின் நலன் காக்க இடதுசாரிகள் மட்டுமின்றி ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து ஓர் விரிவான திட்டத்தைத் தயாரித்து வெளியிடுவது காலத்தின் கட்டாயமாகும். பெருமந்தத்தின் போது  அணிசேராத தொழிலாளர்களை அணிதிரட்டிட இடது சாரிகள் முயன்றது போன்று இன்றைய சூழலிலும் முன்முயற்சி எடுக்க இடதுசாரிகள் கடமைப்பட்டுள்ளார்கள். 

(பேரா. கா. அ. மணிக்குமார், வரலாற்றுத்துறை (ஒய்வு),மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்,  திருநெல்வேலி)

3 Comments

  1. உணவைத் தூண்டகூடிய நீண்ட காலப் பொருளாதார உண்மைகளைச் சுருக்கமாகக் கண் முன் கொண்டுவருவதுடன் செய்யவேண்டிய விசயங்களையும் வலியுறுத்துகிறது.

  2. உணர்வை
    த் தூண்டகூடிய நீண்ட காலப் பொருளாதார உண்மைகளைச் சுருக்கமாகக் கண் முன் கொண்டுவருவதுடன் செய்யவேண்டிய விசயங்களையும் வலியுறுத்துகிறது.

  3. பொருளாதர நெருக்கடி குறித்து வரலாற்று பின்னணியோடு ஆய்வு செய்வது நல்ல நடைமுறை. சிறப்பான பணி.

Leave a Response

Top Reviews

Video Widget

gallery