Poetry

தங்கேஸ் கவிதைகள்

Spread the love

ஆத்தூர்-கரிய கோவிலில் கன மழை || Attur and ...

மழைக் காட்சிகள்

************************

நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு……

********************************************

கலங்கிய குட்டைகளில் பறக்கும் கட்சிக் கொடிகளை

நையப் புடைக்கின்றது வலுத்த மழைத்துளி

முக்குளித்த பின்பு

நாற்புறமும் தெறிக்கின்றன

சேற்றின் தீற்றல்கள்

அடிவயிற்றில் குமட்டிக்கொண்டு வரும்

நாற்றத்தை அலட்சயித்து

மக்கிய குப்பைகளையும் மக்காத குப்பைகளையும்

கவனமாகக் குடைந்து கொண்டிருக்கும்

கருப்புருவத்தைத் தோல்வியுற்ற தேனீக்களாக

கொட்டித்தீர்க்கின்றன

வெறிகொண்ட மழைத்துளிகள்

மேலேயிருந்து உதிரும் ஈசல் பூச்சிகள்

சற்று நின்ற பொழுதில்

ஆருயிர் தலைவரின் கூட்டத்திற்கு

சென்று வரும் வாகனங்கள்

வியாபாரம் நடக்கும்

கடைவீதியோரம் ஒதுங்குகின்றன

“ஏம்மா தங்கச்சி எங்க ஆட்சில

ஆப்பிள் கிலோ நூறு ரூபா தான

அதிசயமா இரு நூறுன்னு சொல்லிறேயே ?”

“அண்ணே இப்பல்லாம் கிலோ நூறு ரூபாய்க்கு

மனுசனை மட்டும்தான் வாங்க முடியும்

பார்த்துக்கோங்க ..”

சோவென்று மழைக்குள்

எலும்புக்கூடுகள் புதைக்கப்பட்ட இடங்களை

தோண்டிகொண்டிருக்கிறார்கள்

தொலைக்காட்சியில்

பயமாக இருக்கிறது

நம் கால்கள் நின்று கொண்டிருக்கும்

இடத்திற்கு கீழே

என்ன புதைக்கப்பட்டிருக்கிறதோ?

இந்த நட்சத்திரங்களிலொன்று என் பிரியமானதாய் இருந்தது

Why Looking At The Stars Is A Look Back In Time

இந்த எண்ணிலாத நட்சத்திரங்களிலொன்று
என் பிரியமானதாய் இருந்தது
என் பால்யம் முதல்
நிலவைப்பிசைந்து அன்னை
சோறூட்டிய நாளொன்றிலேயே
அது எனக்கு அறிமுகமாகிவிட்டது
சிறு கண்சிமிட்டலுடன்

பிறகு என்னுடன் சிநேகிதம் வளர்த்திருந்தது
நெடுங்காலமாய்
நான் அதன் இருப்பிடம் சென்று வருவதும்
அது என்னிடம் வந்து போவதும்
வெகுசகஜமாகியிருந்தது அந்நாட்களில்

முதன் முதலாக சைக்கிள் விட்ட நாட்களிலும்
செங்குளம் ஆலமரத்தில் குரங்குளாய் மாறி
தலைகீழாய் தொங்கிய
பொழுதுகளிலும்
என்னோடு அதுவும் களித்திருந்து
கண்கொட்டாமல்

வாலிபத்தின் வாசலில்
ஒரு சாட்சியாக அதுவும் என்னோடு
கண்விழித்திருந்தது
பிசு பிசுக்கும் இரவுகளில்
ஆளரவமற்ற மொட்டை மாடியில்

பின் நாட்களில்
கிராமத்தில் என் பெரிய வயலை விற்று
நகரத்தில் நான் ஒரு பிளாட்டுக்கு
சொந்தக்காரனாகியிருந்தேன்

அதன் பின்
நான் அழைக்காததால்
அதுவும் வரவில்லை
என் பிளாட்டிற்கு

என் பிரிய நட்சத்திரத்தின் ஞாபகத்தை
மறந்திருந்தேன்
சுவர்களில் ஒட்டியிருந்த
ஜிகினா நட்சத்திரங்களிலும்
நகரத்தின் கிறு கிறுப்பிலும்

வாழ்க்கை உருண்டோட
நகரம் என்னை மென்று துப்பிய நாளொன்றில்
என் தொப்புள் கொடியிலேயே
மீண்டும் பூத்து விட ஆசை கொண்டு
இரவெல்லாம் வயல் வெளிகளினூடே
தேடியலையும் நாளொன்றில்

என் இதயத்தில் அணைவதற்கே
இவ்வளவு வேகமாய் உதிர்வது
என் பிரிய நட்சத்திரமாய் இருக்க கூடாது
என்று நினைத்தது
அபத்தமல்லாது வேறு என்னவோ ?

கண்சிமிட்டும் கணத்தில்
அதுவும் காலத்தில் உறைந்து விட்டது
என்பால்யத்தைப்போலவே

வார்த்தைகளை கூவி கூவி விற்றுக் கொண்டிருப்பவர்களிடம்

40 வார்த்தைகளை உச்சரிக்க கடினமாக ...

அவன் வருகிறான்
என்னை விற்க விரும்புகிறேன்
சுரண்டிப் பார்த்து சுண்டிப் பார்த்து

அடிமைகள் வாங்கப்படுவார்கள்
குறைந்தது ஐந்தாண்டு ஒப்பந்தம்
ஒரு விரல் நீட்டுகிறான்
சாதகம் கணிக்கப்படுகிறது
அவர்கள் பால் போன்ற திரவத்தை
நீட்டுகிறார்கள்
அவனுடைய வலது மணிக்கட்டு
சுருக்கமாக நீள்கிறது
கைகளுக்குள் காகிதம் போன்ற ஒன்று
வெற்றிகரமாக விற்கப்படுகிறது
ஜனநாயகம்
இனித் தேவை பிரியாணியில்
ஒரு லெக் பீஸ் மட்டுமே

சுண்டெலிகளின் ஊழல்கள்,,,,,

venkatnagaraj: வெளியூர் எலி!

கொல்வதற்கு மனமில்லை
பாவம் ஒரு சுண்டெலிதானே என விட்டு விட்டேன்
ஒரு வாரத்திலேயே பார்க்கும் இடங்களிலெல்லாம்
சுண்டெலிகளின் தலைகள் தோன்றின
பல்கிப்பெருகி

ஓடி ஓடி களைத்தாலும் அவைகள் பிடிபடுவதில்லை
பிடிபடாது எனத்தெரிந்தாலும்
பின்னால் ஓடுவது சுவராசியமாய்த்தான் இருக்கிறது

ஒருமுறை கால் பெருவிரல் நகத்தை ஒன்று சுரண்ட
சும்மா சுரண்டுவதுதானே என விட்டுவிட்டேன்
அப்பப்பா என்ன சுகம்
எலி சுரண்டியவர்களுக்குத்தான் இது புரியும்

சுரண்டலில் இன்பம் கண்டபின்
அவைகள் சுரண்டுவதற்கே நகம் வளர்க்க ஆரம்பித்தேன்
அவைகளோ மறு நாளிலிருந்தோ சுரண்டுவதை விட்டுவிட்டு
என் சதை துணுக்குகளை உருட்டி உருட்டி கொறித்து தின்ன ஆரம்பித்தன

நான் விரட்டுவதற்குப்பதில்
அவைகளை உச்சிமுகர்ந்து
உண்பதற்கு மென்மேலும் சதைவளர்க்கலானேன்
குறிப்பாக
வயிற்றைச் சுற்றிலும் சிறிய கறிமேடாக

சுண்டலிகளின் பற்களில் கடிபடும் புளகாங்கிதத்தில்
நான் மெய்மறந்திருக்கும் வேளைகளில்
அவைகளோ என் மீது பன்மடங்கு உரிமை எடுத்து
உடம்பெல்லாம் ஓடி விளையாடுகின்றன
உற்ற உறவென

என்ன ஆச்சரியம்
சுண்டெலியின் கூறுகள் என் உடலெல்லாம் உற்பத்தியாகின்றன
உருளும் கண்கள் கூரிய நாசி முறைத்த மூக்கு
விறைத்த காதுகள் வீச்வீச் சப்தம்
அங்கங்கே குழிதோண்டி புழுக்கைகளைப் புதைத்து
வளைக்குள் வலைவிரித்து
இனம் பெருக்கி சந்ததி வளர்த்து
சுண்டெலிகளின் பாஷைகள் தான்
உலகத்திலேயே இனிமையானவை

சுண்டெலிகளுக்கென்று தனி வீடு தனித்தெரு
தனி ஒரு ஊர்
சீக்கிரமே இந்த தேசமே சுண்டெலிகளின் தேசமாகிவிடுமென்று
நான் இறுமார்ந்திருந்த வேளையில் ஒருநாள்

என் கனவில்
முந்தைய என்னைப்போலவே மனித தோற்றம் கொண்ட
உருவம் ஒன்று வந்து
என்னை மீள் உரு கொள்ளச் சொன்னதும்
எனக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை

சுதந்திரத்தைப் பறிக்கவந்த பாவியே
என் கடைசி மூச்சும் சுண்டெலிகளுக்கே
என்று கத்த ஆரம்பித்தேன்
சரி சரி கடைசியாயகவாவது விடைகொடு
என்று கை நீட்டினான்
கைகொடுக்கும் தந்திரத்தில்
அவன் உரு மாற்றி தன்னைப் பெரிய பருந்தாக்கி
பெருஞ்சிறகு விரித்து கூரிய அலகுகொண்டு
என்னைக் கொத்த வந்த வேளையில்
பதறிப்போய் எலிவளைக்குள் புகுந்து கொண்டேன்

ஏமாற்றத்தோடு சபித்துக்கொண்டே பறந்து சென்றது அது
அப்பாடா ஆசுவாசத்தோடு
எலி வளைக்குள் நான் வந்து
பருத்த தொப்பையை தடவிக்கொண்டு
அவசரமாக
என் சக சுண்டெலிகளுக்கு அழைப்பு விடுத்தேன்
பருந்துகளிடம் இருந்து தப்பித்துக்கொள்வதைப் பற்றி
ஆலோசிக்க.

Image

தங்கேஸ்

Leave a Response

Top Reviews

Video Widget

gallery