Poetry

தங்கேஸ் கவிதைகள்

 

நீ விட்டுப் போன வெற்றிடத்தை…………. | கை ...

வெற்றிடத்தை நிரப்பிக்கொண்டிருக்கிறேன்

காலமற்ற பொழுதில்

எவ்விதம் நிரம்புமோ இனி இது?

வெள்ளைத்தாளிலிருந்து முளைத்தெழுகின்றன

மரத்துகள்களின் விசும்பல்களும்

காகித கூழாவதற்கும் முன்பு

மண்ணின் ஈரலை முத்தமிட்டுக்கொண்டிருந்த

பிரிய வேர் ஒன்றின் முடிவற்ற தேம்பல்களும்

எல்லையற்ற வெளிதன்னை

தன் வழியே நிரப்பித்தீர்க்க

சின்னஞ்சிறிய சிறகசைத்து அலையும்

அந்த சிட்டுக்குருவியின்

பறத்தலில் கொஞ்சம்

ஜொலிக்கும் நட்சத்திரங்களுக்கு நடுவில்

சோபையிழந்து நடுங்கிக்கொண்டிருக்கும்

அந்த பலவீனமான கிழட்டு நட்சத்திரம்

இதில் உதிர்ந்து விழும்போது கொஞ்சம்

நிரம்பக்கூடும்

இந்த வெள்ளைக்காகிதத்தின் வெற்றிடம்

காற்றின் விரல்கள்

துழாவுகையில் சிணுங்கி நெளியும்

கொத்து அரளிப்பூக்களின்

ஏழாம் சிலிர்ப்பில் கொஞ்சம்

அடர்ந்த பச்சையத்திற்குள்

நாளை மலரத்துடிக்கும் மொட்டொன்றும்

அதே கிளையில் நாளை உதிர்ந்துவிடக் காத்திருக்கும்

சருகொன்றும்

இடம்மாறினால்

சற்று நிரம்பக்கூடும்

இந்த வெள்ளைக்காகிதத்தின் வெற்றிடம்

ஆனாலும்

எவ்வளவு நிரப்பினாலும் நிரம்பாமல்

நிரம்பியவை யாவையும் மலைப்பாம்பாய்

விழுங்கிவிட்டு இரைக்காகக் காத்திருக்கும்

இந்த விநோத வெற்றிடத்தை

எவ்விதம் நிரப்புவேனோ

யாருமற்ற இந்த அகாலத்தில்?

காத்திருக்கிறேன் ஆண்டுகளாக

இன்றிரவும் சேர்த்தே

என்னை வெற்றிடமாகவும்

வெற்றிடத்தை நானாகவும்

மாற்றி வைத்துப்போன

அந்த மாயக்கரம்

என்னை நானாகவும்

வெற்றிடத்தை மறுபடியும்

வெற்றிடமாகவும்

வந்து மாற்றி வைத்துப்போகுமென்று

 

எங்கும் நிறைந்த சிட்டுகள்! - Kungumam Tamil ...

பேரழிவை நோக்கி விரைந்து கொண்டிருக்கும் இந்த கொழுத்த உலகத்திடம்

ஒரு சின்னஞ் சிறுசிட்டுக்குருவி சொல்லும் சேதி யாது?

வன்மம் கொண்ட

பூட்ஸ் கால்களிடம்

குரல்வளை நெரிக்கப்பட்ட பசும் புற்கள் சொல்லும் சேதி யாது?

முற்றிலும் வணிகமயமாகி விட்ட

என் உடலே

ஒளியாண்டுகளுக்கு அப்பாலிருந்து

மெல்ல விசும்பும் உன் பலவீனமான ஆன்மா

சொல்லும் சேதி யாது?

உலகின் ஒட்டு மொத்த அநீதியாய்

கவிந்து கிடக்கும் இந்த கரிய வேதாளத்தின்

உடலைத் துளையிட்டு

ஊடுருவி

விரட்டப் போவது யார்?

ஒரு சின்ஞை் சிறு சில்வண்டின்

இரைச்சல் தானா?

கொழுத்த இந்த உலகத்திடம்

ஒரு சின்னஞ் சிறுசிட்டுக்குருவியின்

அலகு சொல்லும் சேதி யாது?

ஒரு சிறு வெளிச்சப்புள்ளி தானா?

 

where the angels fall | tribute to Dorota Terakowska ♫ www.m ...

மழைக்காலத் தேவதைகள்

 

மழை முகில் திறக்கும் அந்தி வானமெங்கும்

படரும் ஒளி ரேகைகள்

இன்று விண்வெளித் தேவதைகள்

சூடிப்பார்க்கும் தங்க ஆபரணங்கள்

முதல் துளி தலையை தொட்டதும்

தேவதைகளாகி விடுகிறார்கள்

எங்கள் வீட்டுப்பெண்கள்

நாணத்தின் கதிர்வீச்சில் தேகமெங்கும்

பூக்களாகப் பூக்கின்றன

சுமையற்ற பால்யத்தின் மின்னல்கள்

 

நமக்காக ஒருவர் அழுதுகொண்டேயிருந்தால்

யாவருக்கும் பிடிக்கும் தானே ?

தவிர உச்சியிலிருந்து விழுந்து நதியாவதும்

கடலாவதும்

குளமாவதும் குட்டையாவதும்

தேங்கிய மண்ணில் சேறாவதும்

நிலத்தில் இயல்பேயன்றி

அதன் தவறில்லை தானே ?

 

தாய்மை பொங்கிய மார்பில் தானாக துளிர்த்த

ஒரு சொட்டு அமிர்தம் போல

எங்கோ எப்பொழுதோ எவருக்கோ

வேதனையில் துளிர்த்த ஒரு துளி கண்ணீருக்கே

இந்த மழை இன்று சமர்ப்பணம் என்றால்

அந்த எவரோ ஒருவர் ஏன் நாமாக இருக்கக்கூடாது

என்று நினைத்துக்கொள்ளுவார்கள்

எங்கள் வீட்டுப்பெண்கள்

 

தங்கேஸ்

Leave a Response