Poetry

தங்கேஸ் கவிதைகள்கவிதை 1: பயணம்
இன்று சின்னஞ்சிறிய சிறகுகளால்
ஆசீர்வதிக்கப்படப்போகும் பரந்தவானம்
சற்றும் குழைவின்றி கருங்கற் பாறையாய்
சமைந்திருக்கிறது
எல்லையின்மையென்பது
உனக்கு மட்டும் தானா ?
உனக்கது உண்டென்றால்
எனக்கும் தானே
முதல் அசைவிலேயே முடிவிலியை
காற்றில் எழுதியபடி
தொடங்குகிறது இச் சிற்றுயிரின் பயணம்
சோர்வுறும் போது கிட்டும்
ஆரத்  தழுவல்கள்
பறத்தலின் பாதையில் அங்கங்கே
பிரியத்தின் கிழட்டு முத்தங்கள்
குளிரடையும் இறகுகளுக்குள்
புகுந்து கொள்ளும் கதகதப்பான மூச்சுக்காற்று
இன்று சருகுகளாய் அலையும்
நேற்றின் சிறகுகள்
விண்வெளியெங்கும் வினையாற்றும்
நம் மூதாதையர்கள் தானே
போய் வா சகியே
நீ ஏற்கனவே உன்னை வென்றுவிட்டுத்தானே
பயணிக்க  தொடங்குகிறாய்


கவிதை 2: கதவைத்  தட்டிக்கொண்டு
இது எத்தனை பேர்கள்
உள்ளே நுழைவதற்கான கதவு ?
நாகரீகம் கருதி உள்ளே நுழைபவர்கள்
கதவைத் தட்டிவிட்டாவது வரலாமல்லவா?
இத்தனை பேர்கள் உள்ளே நுழைந்தால்
உள்ளே இருப்பவர்கள் வெளியறிவிடவேண்டும்தானே?
நானும் கூட அப்படித்தான் நினைத்திருந்தேன்
வீடென்று சொல்லிவிட்டு
வெளியில் தானே
வசிக்கிறாய் என்றது ஒரு அசரிரீ
வாஸ்து பார்த்து கட்டினாலும் சரி
சாதக கட்டங்களை
கூட்டி கூட்டி கணித்தாலும் சரி
மரவட்டைக்கு விளக்குமாற்று குச்சி
மண்புழுவுக்கு கரம்பைப் புழுதி
நத்தைக்கு ஊமச்சிக் கூடு
தவளைக்குப் பாசிக்குளம்
மனிதனுக்குத் தெருக்கோடி
உள்ளே ஒரு மின்னல் வெட்டு
மழைத்துளிகள் கதவை தட்டிக்கொண்டு
வீட்டிற்குள் உள்ளே நுழையவில்லை
நானும் அப்போது வீட்டிலில்லை


கவிதை 3: மழைக்கால காட்சிகள்
அர்த்தமற்ற கூச்சலை ஓயாமல்
பிரகடனப்படுத்தியபடியே
பிதற்றிக் கொண்டிருக்கின்றன
நிற்காத மழைத் துணுக்குகள்
கேட்பாரற்ற தெருவில்
இல்லாத இடது பின்னங்கால் ஒன்றையும்
காற்றில் ஊன்றி
ஓடுவதாய் பாவனை செய்தபடி
எவ்வி எவ்வி குதித்தபடி ஓடுகிறது
பழுப்புநிறத் தெருநாய்
திடீரென்று முளைத்த கருப்புக் காளான்களை
கீரீடங்களாய்ச் சூட்டிக்கொண்ட
வெற்றுத்தலைகள் நனையாத அகம்பாவத்தில்
வருண பகவானை ஏளனமாய்ப் பார்த்தபடி செல்கின்றன
வாயில் நெருப்புக் கங்குகளை ஏந்திய
கொள்ளிவாய்ப் பிசாசுகள் ஒரு புறமும்
காலியான தேன்நிற மதுப்புட்டிகளை
ஆளற்ற வீடுகளுக்கு முன் வீசிச் செல்லும்
சனநாயகப்பேய்கள் மறுபுறமும்
வறுத்துத் தின்பதற்கு
எந்தப் புற்றிலிருந்து
எந்த ஈசல் பூச்சிகள் கிளம்பிவரும் என
காத்துக் கிடக்கும் வெறியுற்ற விழிகள்
அந்தப்புறமும்
அழிச்சாட்டியம் செய்ய
அமைதியாக
இந்தத் தெருவில் இருக்கும் ஒரே ஒரு
ஓட்டுவீட்டின் வாசலுக்கு முன்
எப்படியும் நிறைந்துவிடுமென்று
இருகரங்களையும் ஏந்தியபடியே
நின்றுகொண்டிருக்கிறாள் ஒரு ஏழைச்சிறுமி
     தங்கேஸ்
       தமுஎகச
       தேனி


Leave a Response