Articleகல்வி

ஆசிரியர் தினம்: என்னை வளர்த்த ஆசிரியர்கள் – கி.ரமேஷ்

நமது மனதிலிருக்கும் மாசுக்களை நீக்கி நம்மைத் தூய்மையாக்கும் ஆசிரியர்களுக்கு நமது நன்றியை உரித்தாக்கும் நாளாக இந்த நாள் உள்ளது. தமிழையும் கொண்டாடுவோம் – ஆசு + இரியர் = மாசு நீக்குபவர் என்று நான் எங்கோ படித்த நினைவு. எனது வாழ்வில் நான் இந்த நிலைக்கு உயர்ந்ததற்கு எனக்கு உந்துதலாக இருந்த இரண்டு ஆசிரியர்கள் குறித்து பதிவிடலாம் என்பது என் அவா.
நான் ஐந்தாவது வரை ஒரு உள்ளூர் நர்சரி பள்ளியில் படித்து விட்டு, மதுரைக் கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு சேர்ந்தேன். எதோ பள்ளிக்குப் போய் வந்து கொண்டிருந்தேன் என்றாலும், என் வாழ்வின் திருப்பம் ஒன்பதாவது வகுப்பில்தான். அப்போதுதான் என்.சி.சி. ஆசிரியர் திரு.எஸ்.எஸ். என்னும் திரு.எஸ்.சுப்ரமணியன் வகுப்பு ஆசிரியராக உள்ளே நுழைந்தார். வெளியே அவரது பிம்பம் வேறு. ’மிகவும் ஸ்டிரிக்டு’ என்று அறியப்பட்டவர். உள்ளே அவர் வேறு என்பதை அங்குதான் அறிந்து கொண்டேன். ‘என் குழந்தைகள்’ என்று அவர் பேசும்போதே அவரது அன்பு வெளிப்படும். உள்ளே நுழைந்தவர் முதலில் எங்களை ரிலாக்ஸ் செய்தார். பிறகு அவருடன் ஒன்றி விட்டோம்.
அதுவரை நான் ஆங்கில மீடியத்தில்தான் படித்துக் கொண்டிருந்தேன் என்றாலும், என்ன படித்தேன் என்பது எனக்குத் தெரியவே தெரியாது என்பதை வெட்கமின்றி ஒப்புக் கொள்கிறேன். என்னைத் தமிழ் மீடியத்தில் என் தந்தை சேர்த்தாலும் அதுவும் ஒர்க் அவுட் ஆகவில்லை. அது வேறு பிரச்சனை. அப்போதுதான் திரு.எஸ்.எஸ். இது ஒரு மொழி மட்டுமே, அறிவு அல்ல, அதைப் பயில்வது ஒன்றும் பெரிய காரியமல்ல என்ற எண்ணத்தை எங்கள் மனதில் பதிய வைத்தார். .அவரது எளிமையான விளக்கத்தில் நாங்கள் ஆங்கிலம் பயின்றோம். இன்றளவும் எனக்கு அந்த மொழியில் அடித்தளம் அமைத்துக் கொடுத்தது அவர்தான் என்பதை தினமும் நினைவு கூர்கிறென்.
அடுத்தது அவர் எனது ஆளுமைத்திறனை வெளிக்கொண்டு வந்த விஷயம். நான் பிறந்ததிலிருந்தே ஒல்லிப்பிச்சான் நோஞ்சான் பயில்வாந்தான். என் தந்தை என்னைக் கேலி செய்து பாட்டே பாடுவதுண்டு. ஐந்தாவது வரை எனக்கு அடிக்கடி காய்ச்சல் வேறு வந்து விடும். என்னை அந்தக் காய்ச்சலிலிருந்து விடுவித்தவர் ரவீந்திரன் என்கிற ஆயுர்வேத மருத்துவர். ஆறாவது படிக்கும்போதே நான் சாரண இயக்கத்தில் சேர்ந்திருந்தாலும்,  உடற்கட்டு கொண்ட மாணவர்களுக்கு மட்டுமே என்று நான் நினைத்த என்.சி.சி.யில் எட்டாம் வகுப்பில் நான் சேரவில்லை.
ஒன்பதாவது வகுப்பில் என் ஆசிரியராக வந்த எஸ்.எஸ். அவர்கள் எங்கள் அனைவரையும் சேருமாறு ஊக்குவித்தார். என் தந்தையிடம் சென்று நான் சொல்லவும், அவர் பயந்து போனார். காரணம் என் ‘உடற்கட்டு’. அவரே நேராக வந்து எஸ்.எஸ்.சைப் பார்த்துப் பேசினார். என் குழந்தையை எப்படிக் கொண்டு வர வேண்டுமென்று எனக்குத் தெரியும். நீங்கள் தைரியமாக விட்டுச் செல்லுங்கள் என்று எஸ்.எஸ். அவருக்கு தைரியம் கூறி அனுப்பி விட்டார். அன்று தொடங்கின என் வாழ்வில் இன்றளவும் நான் கடைப்பிடித்து வரும் ஒழுக்கங்கள். முதலில் நேரம் காத்தல் – punctuality இல் தொடங்கிப் பல்வேறு விஷயங்கள்.
அந்தப் பயிற்சியில் மூழ்கிய நான், முதலாண்டு இறுதியில் கார்ப்பரல் ஆக இரண்டாவது பதவிக்கு நேரடியாக முன்னேறினேன். இரண்டாவது ஆண்டில் படை எண் 93இல் சார்ஜெண்டாகப் பணியாற்றத் தொடங்கினேன். இன்றளவும் என்னால் மறக்க முடியாதது: 2 Tamilnadu Medical company, Troop No.94, 70448/81, Company Sargeant Major K.Ramesh reporting Sir.” அப்போது திருநெல்வேலி பேட்டை பள்ளியில் நடந்த காம்ப்புக்குச் சென்றேன். மீண்டும் எஸ்.எஸ். என் தந்தையிடம் தைரியம் கூறினார். அங்கு பங்கேற்ற 700 மாணவர்களில் ட்ரில்லிலும், கமாண்டிலும் முன்னணியில் இருந்த பதினைந்து மாணவர்களைத் தேர்ந்தெடுத்தார்கள். அதில் நான் ஒருவன். அவர்களில் இருவரை கமாண்டுக்குத் தேர்ந்தெடுத்தார்கள். அவர்களில் நான் ஒருவன். ஐநூறு அடி தூரத்தில் எங்கள் காம்ப்பை ஆய்வு செய்ய வரும் அதிகாரி வரும்போதே கமாண்ட் கேட்க வேண்டும். அந்தப் பொறுப்பை ஏற்றவன் நான். அசந்து போனார் ஆய்வு செய்ய வந்த அதிகாரி. ஏன் இதையெல்லாம் கூறுகிறேன் என்றால், எஸ்.எஸ். மட்டும் எனக்கு இருக்கும் திறமையை வெளிக்கொண்டு வந்திரா விட்டால், ஒரு சராசரியாக நான் போயிருப்பேன். அங்கு நடந்த போட்டியில் அதிக மார்க் வாங்கிய சார்ஜென்டும் நாந்தான். இன்றளவும் திரு.எஸ்.எஸ். என்னை ஆளாக்கியதை நான் நன்றியுடன் நினைவு கூர்ந்து கொண்டே இருப்பேன்.
TET for tat: TN Govt stops salaries to 1500 teachers for not clearing NET  for the last 7 years- Edexlive
அடுத்து என் சாரண ஆசிரியர் பிச்சை ஐயா. மனிதர் நகைச்சுவைத் தென்றல்தான். ஒரு ஆசிரியர் போலவே இருக்க மாட்டார். மாணவர்களை அணைத்துக் கொண்டே கற்பிக்கும் மனிதர். அவர் சாரண ஆசிரியர் என்றால் கேட்க வேண்டுமா. பத்தாம் வகுப்புக்குப் பிறகு என்.சி.சி. இல்லாததால் சாரண இயக்கத்தில் தீவீரமாக இறங்கினேன். கை கொடுத்தார்கள் சாரண ஆசிரியர் பிச்சை ஐயாவும், அப்போதைய தலைமை ஆசிரியர் திரு.பாலசுப்ரமணியனும்.
நான் இருக்கிறேன், நீ நடத்து என்று வந்து நின்றார் பிச்சை ஐயா. அப்போது சாரண அறை பூட்டியே கிடக்கும். மாணவர்களுக்குக் கொடுக்க வேண்டிய நோட்டு புத்தகங்கள் அடுக்கி வைக்கவும், பிற வேலைகளுக்குமே திறக்கும். அப்போது கர்னல் போன்ற மிடுக்குடன் உலவும் பாலு சாரிடம் சென்றேன். நேராக அவரிடம் கேட்டேன், சாரண இயக்கம் நடத்த வேண்டும், சாவியைக் கொடுங்கள் என்று கேட்டேன். ஒரு பார்வை பார்த்து விட்டு, என்ன நினைத்தாரோ தெரியவில்லை. இந்தா சாவி. நீதான் பொறுப்பு. பார்த்துக் கொள் என்று சொல்லி விட்டார். இரண்டு வருடங்களில் பிச்சை ஐயாவின் ஆதரவுடன், ஏராளமான சாரணர்கள் இரண்டாம் வகுப்பும், முதல் வகுப்பும் தேறி விட்டார்கள். ஒன்றிரண்டு பேரையாவது ஜனாதிபதி அவார்டு பெற வைத்து விட வேண்டும் என்ற என் கனவு நிறைவேறவில்லை. இன்று பட்டேல் சாரண இயக்கத்துடன் தொடர்பில் இருக்கிறேன். இயக்கம் நடத்தும் இந்தத் திறனை வெளிக்கொண்டு வந்தது சாரண இயக்கமும், பிச்சை ஐயாவும்தான் என்பதை என்றும் நன்றியுடன் நினைவு கூர்வேன்.
ஒரு ஆசிரியனாக வேண்டும் என்பதுதான் என் கனவாக இருந்தது. எனினும், திசை மாறிச் சென்று விட்டேன். கடந்த வாரம் ஒரு நண்பர் என்னிடம் கேட்டார். நீங்கள் ஆசிரியராக வேண்டும் என்று நினைத்திருப்பீர்கள், கரெக்டா என்று. ஆகா, அவருக்கு நன்றி சொன்னேன். இன்று என் துணைவியார் ஆசிரியராக இருப்பது என்பது மகிழ்ச்சி. அது எவ்வளவு கடினமான பணி என்பதை நேரில் பார்த்துக் கொண்டிருக்கிறேன். முடிந்த உதவிகளை ஆசிரியர்களுக்கு பாரதி புத்தகாலயத்தின் உதவியுடன் செய்து வருகிறேன்.
இந்த ஆசிரியர் தினத்தில் என்னை ஒரு ஆளுமையாக உருவாக்கி இந்த உலகில் நடை போட வைத்த என் ஆசிரியர்களுக்கு என் நன்றி.
கி.ரமேஷ்

1 Comment

  1. நானும் தங்களின் அருகில் இருந்து அனைத்து சம்பவங்களை பார்த்தது போல எழுதிய விதம் அருமை…

Leave a Response