Article

மசூதிகள் குறிவைத்துத் தாக்கப்படுவது தொடர்கின்றன -சியா உஸ் சலாம் (தமிழில்: ச.வீரமணி)

Spread the love

(வட கிழக்கு தில்லியில், பிப்ரவரியின் கடைசியில், மசூதிகளின் மீது மேற்கொள்ளப்பட்ட வன்முறைத் தாக்குதல்கள், சமூக முடக்கக் காலத்தின் போதும் தொடர்கின்றன.)

சுமார் பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்பு, 2002 பிப்ரவரி-மார்ச் மாதங்களில்,  குஜராத்தில் இஸ்லாமிய நினைவுச் சின்னங்களும், முஸ்லீம்கள் வாழும் இடங்களும், நூற்றுக்கணக்கானவை குறிவைத்துத் தாக்கப்பட்டன. இந்தியாவில் உள்ள ஊடகங்களில் பெரும்பாலானவை, வாலி குஜராத்தி என்கிற 300 ஆண்டு கால புண்ணியஸ்தலம் இடிக்கப்பட்டதை மட்டுமே வெளியிட்டதுடன் தங்களைச் சுருக்கிக்கொண்ட அதேசமயத்தில், தி கார்டியன் இதழ் மட்டும், “குஜராத் மாநிலத்தில், முஸ்லீம்களுக்கு எதிராக நடைபெற்ற கலவரங்களின்போது, 400 ஆண்டு கால அழகிய மசூதி உட்பட நிகரற்ற 230 இஸ்லாமிய நினைவுச் சின்னங்கள், இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டன அல்லது அழிக்கப்பட்டன,” என்று செய்தி வெளியிட்டிருந்தது. மேலும் அது,  “இவ்வாறு அழிக்கப்பட்டவை ஆப்கானிஸ்தானில் பாமியான் புத்தர் சிலை அழிக்கப்பட்டது போன்று அல்லது திபெத்தில் உள்ள மடங்கள் செங்காவலர்களால் அழிக்கப்பட்டது போன்று அவற்றுடன் போட்டியிடக்கூடிய அளவிற்கு சேதங்கள் மிகவும் விரிவானவை என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள். குஜராத் கலவரத்தின்போது பல நினைவுச் சின்னங்கள் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டன. இவற்றில் ஈராயிரம் பேர், (இவர்களில் முஸ்லீம்களே அதிகம்) இறந்துவிட்டனர். மற்றும் பல சம்பவங்களில் இந்து குண்டர் கும்பல்கள் பாரசீக எழுத்துக்களுடன் காணப்பட்ட பல உன்னதமான மசூதித் திரைகளையும் நொறுக்கித்தள்ளினார்கள்,  செங்கற்களை பிடுங்கி எறிந்தார்கள். பழைய குரான் புத்தகங்களை தீ வைத்துக் கொளுத்தினார்கள்,” என்றும் குறிப்பிட்டிருந்தது.

2020இல், குஜராத்தில் நடைபெற்ற வன்முறை மாடல் அதே போன்று நாட்டின் தலைநகரில் பிரதிபலித்திருக்கிறது. சமூக முடக்கக் காலத்திலும்கூட முஸ்லீம்கள் தொழும் இடங்கள் தாக்குதல்களிலிருந்து தப்பித்திடவில்லை. துவாரகாவில் உள்ள ஒரு மசூதி, திரும்பத் திரும்ப தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டது. பிஜாஸ்வான் என்னுமிடத்தில் உள்ள மசூதிக்கும் இதே கதிதான் ஏற்பட்டது. கொஞ்ச நாட்களுக்கு முன்பு, அலிபூரில் உள்ள ஒரு மசூதி தாக்கப்பட்டது. இந்தத் தாக்குதல்கள் அனைத்தும், பிப்ரவரியில் வட கிழக்கு தில்லியில் நடைபெற்ற வன்முறை வெறியாட்டங்களைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுள்ளன. வடகிழக்கு தில்லியில் நடைபெற்ற வன்முறை வெறியாட்டங்களின்போது 19 மசூதிகளும், தர்காக்களும் எரித்துத் தீக்கிரையாக்கப்பட்டன அல்லது இடித்துத் தரைமட்டமாக்கப் பட்டன. இத்தகைய தாக்குதல்கள் 24 தில்லியில் உள்ள முஸ்லீம்கள் தொழும் இடங்களில் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இவற்றின் மூலமாக சிறுபான்மை இனத்தினர் மத்தியில் அச்ச உணர்வு பரப்பப்பட்டிருக்கிறது. இவர்களில் சிலர் இத்தகைய வன்முறைச் சம்பவங்கள்தொடர்பாக காவல்துறையினரிடம் புகார் அளிப்பதற்குக்கூட பயப்படுகின்றனர்.

உதாரணமாக, துவாரகா மசூதி, 11ஆவது செக்டாரில் ஷாஜகானாபாத் அருகில் அமைந்திருந்த மசூதி, திரும்பத் திரும்ப  குறி வைக்கப்பட்டது. பிப்ரவரியில் விஷமிகள் அதனைத் தாக்கியபோது, காவல்துறையினர் நிலைமையை மட்டுப்படுத்தினர். ஸ்தலத்தில் இருந்து வந்த இந்துக்களுடன் பேசி சுமுகமான சூழ்நிலையைக் கொண்டு வந்தனர். அவர்களும் நடந்த நிகழ்வுக்கு வருத்தம் தெரிவித்தனர். உண்மையில், பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்களில் பலர் மசூதிகளின் வாயிலில் நின்றுகொண்டு, மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் விதத்தில் செய்திகளை அளித்து முஸ்லீம்களிடையே நம்பிக்கையை ஊட்டினார்கள். மசூதியை நிர்வகித்தவர்கள் கட்டிடத்தின் முன்புள்ள பகுதியில் தொடர் வன்முறைகளைத் தடுப்பதற்காக, சிசிடிவி கேமராக்களை அமைத்தனர். மசூதிகளில் தொழுகைகள் தொடர்ந்தன.

A mosque on fire, shops looted, people celebrating: My five hours ...

ஜூன் 14 அன்று அதிகாலை நேரத்தில் இந்துத்துவா பாதுகாப்புக் குழுக்கள் மசூதிகளின் மீது கற்களை வீசி தாக்குதல்களைத் திரும்பவும் மேற்கொண்டன. அந்த சமயத்தில் இமாம் மட்டுமே மசூதியில் இருந்ததால் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. அவர், அருகே வசித்தவர்களை உடனடியாக உஷார்ப்படுத்தினார்.  காவல்நிலையத்தில் இச்சம்பவம் குறித்து புகார் அளிக்கப்பட்டது. இந்த சமயம், வன்முறையாளர்கள் மசூதியின் முன்பக்கத்தில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டிருந்ததால் அங்கேயிருந்து தாக்குதலைத் தொடுக்கவில்லை என்பது தெரிந்தது,. அதற்குப் பதிலாக, மசூதிக்கு இணையாகச் செல்லும் சாலையிலிருந்து கற்களை வீசி இருக்கின்றனர். இதனால் கட்டிடத்திற்கு சிறிய அளவில் சேதாரங்கள் ஏற்பட்டன. 2002இல் குஜராத்தில் எப்படி ஊடகங்கள் வன்முறை வெறியாட்டங்களை அடக்கி வாசித்ததோ அதேபோன்றே இப்போதும் தில்லியில் உள்ள ஊடகங்கள் இந்தத் தாக்குதலையும் அடக்கி வாசித்தன. ஒரு சில தினங்களுக்குப் பின்னர், தென் மேற்கு தில்லியில் பிஜாஸ்வான் மசூதி குறிவைக்கப்பட்டது. இந்த மசூதி இதற்கு முன்பு 2018இல் தாக்குதலுக்கு ஆளானது. தொழுகைகள் நடைபெறும் சமயங்களில் அவற்றில் கட்டுப்பாடுகளை ஏற்படுத்தவும் ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

பின்னர் இதில் தில்லி சிறுபான்மையினர் ஆணையம் தலையிட்டது. அதன் தலைவரான டாக்டர் சஃபருல் இஸ்லாம் கான், இது தொடர்பாகக் கூறியதாவது: “இது ஓர் பழைய பிரச்சனை. 2018க்கு முன்பு நாங்கள் ஒரு நோட்டீஸ் அனுப்பினோம். அப்போது அங்கேயுள்ள மக்கள் மற்றும் போலீசாரின் நிர்ப்பந்தம் காரணமாக அமைதி நிலைநாட்டப்பட்டது. ஆனாலும், அது எங்கள் சமூகத்தினருக்குத் தீங்கு விளைவித்தது.” 2018 அக்டோபரில் ஆணையம், தாமாகவே முன்வந்து அந்த நிகழ்வுகுறித்து நடவடிக்கை எடுத்தது. சிறுபான்மையினர் குழு, தென் மேற்கு தில்லி, காவல் துணை ஆணையருக்கு, சரி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு வலியுறுத்திக் கடிதம் எழுதியது. “சில விஷமிகள் நமாஸ் நடக்கும் சமயங்களில், குறிப்பாக, வெள்ளிக்கிழமையன்று பகலில் நமாஸ் நடக்கும் சமயங்களில், பிரச்சனைகளை உருவாக்கிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் வலுக்கட்டாயமாக மசூதிகளிலிருந்த ஒலிபெருக்கிகளை நீக்கினார்கள். அதன்மூலம் மசூதிக்கு வெளியிலிருப்பவர்களை தொழுகை நடத்துவதிலிருந்து தடுத்தார்கள்,”  என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஒரு சில நாட்கள் கழித்து, இப்பிரச்சனை சுமுகமான முறையில் தீர்வு காணப்பட்டதாக, போலீசார், ஆணையத்திற்குத் தெரிவித்தார்கள். இமாம், மௌல்வி லால் முகமது, இப்போது தொழுகை செய்வதிலிருந்து எவரும் தடுக்கப்படவில்லை என்று போலீசாரிடம் தெரிவித்திருந்தார்.

2020 ஜூன் இறுதி வாரத்தில் குண்டர் கும்பலைச் சேர்ந்த சிலர், ஒலிபெருக்கி மூலமாகத் தொழுகைக்காக அழைப்பு (ஆசான்) விடுப்பதற்கும், மசூதிக்கு வருபவர்களின் எண்ணிக்கை குறித்தும் ஆட்சேபித்தபோது, இவ்வாறான இடைக்கால அமைதி நிலையும் முடிவுக்கு வந்தது. “வெளியார்” எவரையும் தொழுகைக்கு வர அனுமதிக்கக்கூடாது என்று மீண்டும் அவர்கள் வலியுறுத்தினார்கள். உள்ளூர் முஸ்லீம்கள் ஆரம்பத்தில் தடுத்துப் பார்த்தார்கள், இப்பிராந்தியத்தில் அதிக அளவில் மசூதிகள் இல்லை என்று சொல்லிப் பார்த்தார்கள், வெள்ளிக்கிழமைகளில் இந்தப் பக்கம் வருகின்ற வர்த்தகர்களோ அல்லது மாணவர்களோ தொழுகைக்காக வருபவர்களை எப்படித் தடுப்பது என்று சொல்லிப் பார்த்தார்கள். எனினும், பின்னர், அவர்கள் தாங்கள் கூறியதையே, மீண்டும் வற்புறுத்தத் தொடங்கினார்கள். இதற்கு நீதிமன்றத்தின் மூலம் ஜமாத்-இ-இஸ்லாமி ஹிந்த் நிறுவனத்தினர் முயற்சித்தபோது, உள்ளூர் வாசிகள் முன்வரத் தவறிவிட்டார்கள். விஷயங்களைப் பதிவு செய்திட எவரும் தயாராக இல்லை. “நாங்கள் இங்கே பிழைக்க வேண்டியிருக்கிறது,” என்று அவர்கள் கூறினார்கள். “விஷமிகளின் கோரிக்கைகளில் பலவற்றை அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள்,” என்று ஜமாத்தின் துணைத் தலைவராக இருக்கின்ற பொறியாளர் சலீம் கூறி வருத்தப்பட்டார்.

Targeted for being Muslim': Inside the mosque burnt by rioters in ...

சஃபருல் இஸ்லாம் கான், “உள்ளூர் முஸ்லீம்கள் அங்கு போலீசார் அளித்திடும் நிர்ப்பந்தங்களுக்கு செவிமடுக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. எனவே வழக்குகளைத் தொடர்ந்து நடத்திட முன்வரமாட்டார்கள். இது ஒரு பொதுவான பிரச்சனையாகும். போலீசாரின் நிர்ப்பந்தத்தின்கீழ் சமரசம் செய்துகொள்வது எங்கும் உள்ள பொதுவான ஒன்று,” என்று கூறினார். அவர் தன் அனுபவத்திலிருந்து இதனைக் கூறினார். உள்ளூர் தடியாட்களுக்கும், உள்ளூர் போலீசாருக்கும் இடையேயுள்ள வஞ்சகக் கூட்டினை அவர் நிறையவே பார்த்திருக்கிறார்.

ஏப்ரல் 3 அன்று, சுமார் 200 பேர் தில்லி ஆலிபூர் பகுதியில் உள்ள மசூதியின் வளாகங்களைக் கொள்ளையடித்தார்கள் என்று செய்திகள் வெளியாகி இருக்கிறது. இது தொடர்பாக சஃபருல் இஸ்லாம் கான், “வட மேற்கு தில்லி, ஆலிபூர் காவல் நிலைய வளாகத்தின் கீழ் உள்ள முக்மேல்பூர் கிராமத்தில் சுமார் இரவு 8 மணியளவில், மசூதியின் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டதாகக் கூறி ஓர் அறிக்கையையும், ஒரு வீடியோவையும் எங்கள் குழு பெற்றிருக்கிறது,” என்று கூறி காவல்துறை ஆணையருக்குக் கடிதம் எழுதினார். “மசூதிக்குள் இரண்டு அல்லது மூன்று பேர் மட்டுமே இருந்தார்கள். தாக்க வந்தவர்களோ சுமார் 200 பேர்களாகும். குண்டர் கும்பல் மசூதியைச் சூறையாடியதுடன், ஒரு பகுதியை தீ வைத்துக் கொளுத்தி இருக்கிறது, கூரை மற்றும் ஒரு பகுதியை இடித்து சேதப்படுத்தி இருக்கிறது,” என்று அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. சஃபருல் இஸ்லாம் கான், “இவ்வாறு நாட்டின் தலைநகரில் நடக்க முடியுமா என்பது நம்ப முடியாத விதத்தில் இருக்கிறது,” என்று கூறியுள்ளார். மேலும், “இந்தப் பிரச்சனையை செயற்கையான முறையில் சரிசெய்திட முடியாது. ஏனெனில், ஒரு மதஞ்சார்ந்த இடத்தை சூறையாடியிருக்கின்றனர், கூரை உட்பட ஒரு பகுதியை தீ வைத்துக் கொளுத்தி இருக்கின்றனர். ஒரு முறையான சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் இத்தகைய சட்டவிரோத அட்டூழியங்கள் பொதுவானவைகளாக மாறிவிடும்,” என்று கூறினார்.

அதே சமயத்தில், பல மசூதிகளுக்கும் தொழுகைக்கு அழைப்பு விடுத்து,  ஒலிபெருக்கிகள் பயன்படுத்துவதை விலக்கிக்கொள்ளுமாறு நிர்ப்பந்தங்கள் வந்திருக்கின்றன. சமூக முடக்கக் காலத்தில் இவ்வாறு அழைப்பு விடுப்பது அவசியம் இல்லை (சமூக முடக்கத்தின் முதல் மூன்று கட்டங்களிலும் மசூதிகள் மூடப்பட்டு இருந்தன) என்று சிலர் கூறும் அதே சமயத்தில், மற்றவர்கள் நல்லதுக்காக அந்தப் பழக்கத்தை முறித்துக்கொள்ளுமாறு கூறுகிறார்கள். சில உள்ளூர் போலீஸ்காரர்களும்கூட, ஒலிபெருக்கிகள் பயன்படுத்துவதை தடுத்திடும் பணியினை வெளிப்படையாகவே மேற்கொண்டார்கள். சிறுபான்மையினர் குழு தலையிட்டு, இவ்வாறு அழைப்பு விடுப்பது (ஆசான்) சமூக முடக்கக்காலத்தில் மக்களுக்குத் தொழுகை நேரத்தைக் கூறி அவர்களை உஷார்ப்படுத்துவது அவசியம் என்று கூறி  வலியுறுத்தியிருக்கிறது. எனினும், மீண்டும் காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல் நிலைய அதிகாரிகள் சிறுபான்மை சமூகத்தினரின் தொழுகை மேற்கொள்ளும் உரிமையை பாதுகாத்திட தலையிட வேண்டி இருந்தது. பொறியாளர் சலீம் இதர சமூகத்தினருடன் பிணைப்பைக் கட்டி எழுப்ப வேண்டியிருக்கிறது என்று கூறினார். “இந்த நிகழ்வுகள் சமீபகாலங்களில்தான் அதிகரித்திருக்கின்றன. ஓர் இடத்தில், அழைப்பு விடுப்பதற்கு ஆட்சேபணை எழுந்தது. மற்றோர் இடத்தில் மசூதிக்கு வெளியே எச்சில் துப்புவது குறித்து ஆட்சேபணை எழுந்தது. மற்றோர் இடத்தில்  மதராசாவில் குழந்தைகளை ஒளித்து வைத்திருப்பதாக ஊடகங்களில் கதை கட்டிவிடப்படுவது போன்ற பிரச்சனை எழுப்பப்பட்டது.  உத்தரப்பிரதேசம், தில்லி மற்றும் ஹர்யானாவின் பல பகுதிகளில் இதுபோன்ற சம்பவங்கள் இப்போது அடிக்கடி நிகழத்தொடங்கிவிட்டன என்பதே எதார்த்தமாகும். இதற்கு நிரந்தரத் தீர்வு காண காவல்துறையினர் கவலைப்படவே இல்லை. அனைத்து சமூகத்திலும் உள்ள பொறுப்பான மனிதர்களுடன் கலந்து பேசி, இத்தகைய விஷமிகளைத் தனிமைப்படுத்திடக்கூடிய விதத்தில் ஒரு சமூகப் பிணைப்பைக் கட்டி எழுப்புவது மட்டுமே இதற்கு நிரந்தரத் தீர்வாகும்,” என்று அவர் கூறினார்.

வட கிழக்கு தில்லியில் பிப்ரவரியின் கடைசியில் வன்முறை வெறியாட்டங்கள் நடந்த சமயத்தில் 19 மசூதிகள் தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்டன. குண்டர் கும்பல்கள் மசூதிகளைச் சூறையாடியது மட்டுமல்ல, அவற்றை எரிவாயு சிலிண்டர்களின் உதவியுடன் தீ வைத்தும் கொளுத்தினார்கள். குரான் புத்தகங்கள் இருந்த அலமாரிகள் அனைத்தும் சாம்பலாகிவிட்டன. தொழுகைக்காகப் பயன்படுத்தப்படும் பாய்கள் எரிக்கப்பட்டன, சுவர்களில் இருந்த இஸ்லாமிய அழகிய சித்திரங்கள் வேண்டுமென்றே அசிங்கப்படுத்தப்பட்டன. நான்கு இடங்களில் மசூதிகளின் ஸ்தூபிகளில் காவிக் கொடிகள் ஏற்றப்பட்டன. ஜமியாத் உலாமா-ஐ-ஹிந்த் தலைவர்களால் ஒரு வார கால முயற்சிக்குப் பின்னரே அக்கொடிகளை நீக்க முடிந்தது. அதன்பின்னர்தான் மசூதிகளில் தொழுகைகள் நடத்தப்படுவது தொடங்கப்பட்டன.

Mosque in Delhi set on fire, bhagwa flag hoisted on minaret

அப்போதிருந்த பதற்றமான வாரத்தில், முஸ்லீம்கள் தொழுகை தொடங்கப்படுவதற்காகக் காத்துக்கொண்டிருந்த அதே சமயத்தில், குண்டர் கும்பல்கள் ஆத்திரமூட்டும் கோஷங்களை எழுப்பிக்கொண்டிருந்தனர். சில மசூதிகளில் குறிப்பாக அசோக் நகர், சிவ் விகார் மற்றம் முஸ்தபாபாத் ஆகிய இடங்களில், தொழுகை தொடங்கியபோதிலும்கூட, இத்தகைய நெருக்கடியை சந்திக்கக்கூடிய விதங்களில் இருந்தன. ஃபரூக்கிய மசூதியில், தாக்குதலுக்குப் பின்னர் வந்த முதல் வெள்ளிக் கிழமையன்று,  கூரையின் மீது தொழுகை அளிக்கப்பட்டபோது, தில்லி காவல்துறை  அந்த இடம் புலன்விசாரணையின் கீழ் இருக்கிறது என்று கூறி அங்கே தொழுகையைத் தொடர அனுமதிக்கவில்லை. அதிர்ஷ்டவசமாக தொழுகைகள் இப்போது நடந்துகொண்டிருக்கின்றன.

மசூதிக்குப் பின்புற சுவரை ஒட்டியிருந்த முகமது ரஷீத் என்பவரின் வீடு தீ வைத்துக் கொளுத்தப்பட்டிருந்தது. அவர் இது தொடர்பாக, “அதிர்ஷ்டவசமாக, இப்போது இயல்பான தொழுகை மீண்டும் தொடங்கி இருக்கிறது. நானும் அங்கே போகிறேன். பிப்ரவரியில் வன்முறை வெறியாட்டங்களுக்கு ஆளான மற்ற மசூதிகளும் கொஞ்சம் கொஞ்சமாக இயல்புநிலைக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றன,” என்று கூறினார்.

எனினும், மசூதிகளின் மீதான தாக்குதல்கள் முற்றிலுமாக முடிவுக்கு வந்துவிடவில்லை. இடங்கள் மாறியிருக்கின்றன அவ்வளவுதான். உச்சநீதிமன்றம் பாபர் மசூதி – ராமஜன்மபூமி வழக்கில் தீர்ப்பு அளித்தபின்னர் இதுபோன்ற தாக்குதல்கள் அதிகரித்திருப்பதாக பலர் கருதுகின்றனர். குண்டர் கும்பல்கள், வெளிப்படையாகவே, “பாபர் மசூதி என்னாயிற்று என்று பாருங்கள்” என்பது போன்று ஆத்திரமூட்டும் முழக்கங்களை போடத் துவங்கியிருக்கின்றனர்.

சஃபருல் இஸ்லாம் கான், தீர்ப்புக்கும் நடைபெறும் சம்பவங்களுக்கும் இடையே தொடர்பு இருப்பதாக பார்க்கவில்லை என்று கூறினார். ஆனால் அவர், “பயம் ஏற்படுத்தக்கூடிய விதத்தில் ஒருவிதமான சூழ்நிலை இருக்கிறது. உள்ளூரில் உள்ள பெரும் புள்ளிகளிடமிருந்தும், காவல்துறையினரிடமிருந்தும் வந்த நிர்ப்பந்தங்களின் கீழ் சமரசம் ஏற்பட்டிருக்கிறது., இதில் எவ்விதமான நீதியும் இல்லை என்பதால் இது நீண்ட நாட்களுக்கு நீடிக்காது,” என்று கூறினார்.

(நன்றி: ப்ரண்ட்லைன்)

படக்குறிப்பு:

பிப்ரவரி 28 வெள்ளிக்கிழமை அன்று வட கிழக்கு தில்லியில் உள்ள ஒரு மசூதியில் தொழுகைக்காக வரும் மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் போலீசார்.

Leave a Response

Top Reviews

Video Widget

gallery