இன்றைய புத்தகம்

புத்தகங்களின் காட்டில் தலையைத் தொலைத்தேன்! – 12… தமிழக வரலாறும் பண்பாடும் – ப.திருமாவேலன்

344views
Spread the love

எனக்கு வரலாற்றுப் புரிதலை ஏற்படுத்திய புத்தகம் ‘தமிழக வரலாறும் பண்பாடும்’. எழுதியவர் கே.கே.பிள்ளை! பள்ளிக் காலத்தில் ஏற்பட்ட பிரமிப்பும் மலைப்பும் இன்றைக்கும் குறையவில்லை. இன்னும் மிக உயர்வாகக் கருதும் புத்தகங்களில் அதுவும் ஒன்று. ஒரே புத்தகத்தின் மூன்று பதிப்புகள் வைத்திருக்கிறேன் என்பது அதன் மரியாதையை உணர்த்தும். பள்ளிக் கால வரலாற்றுப் புத்தகங்கள் நமக்கு மன்னர்கள் ஆளத் தொடங்கிய, ஆண்டு முடித்த வரலாற்றை மட்டுமே சொல்லி வந்தது. அந்த ஆண்டுகளை மனப்பாடம் செய்ய முடியாமல் வரலாற்றை வெறுத்த மாணவர்கள் அதிகம் உண்டு. ஆனால் பன்னிரெண்டாம் வகுப்பின் கோடை விடுமுறையில் சிக்கினார் கே.கே.பிள்ளை. ஆரம்பம் முதல் முடிவு வரை கீழே வைக்க முடியாத புனைவு நடையில் எழுதப்பட்ட வரலாற்று நூல் அது. அந்நூல் உணர்த்திய தமிழ்ச்சமுதாயம் அன்று மிக பெருமைக்குரியதாவும் இருந்தது. அதிர்ச்சிக்குரியதாகவும் இருந்தது.

சங்க காலத்தில் தமிழர் நாகரிகம், பண்பாடு கொண்டதாக இருந்தது. மொழி வளர்ந்தது. நாடு செழித்தது. தமிழர்களும் வளம்பெற்று வாழ்ந்து வந்தனர். மொழிக்கு மட்டுமல்லாமல் வாழ்க்கைக்கும் இலக்கணம் வகுத்தவன் தமிழன். அதன்படி வாழ்ந்தான். அறம், பொருள், இன்பம் என வாழ்க்கையை வகுத்து வாழ்ந்தான். இவ்வாழ்க்கை தான் சங்க இலக்கியமாகக் கிடைக்கிறது. கல்வி செழித்தது. ‘சான்றோனாக்குதல்’ தந்தைக்கு கடனே’ என்கிற அளவில் பொதுக் கல்வியாக இருந்தது.’கணக்கியல் இல்லாத உலகும் நன்மை பயத்தல் இல’ என்கிற அளவில் நாள்தோறும் கல்வியாளர்கள் இருந்தனர். பதினான்காயிரம் மாணவர்களுக்கு கல்வி கற்பித்தவர் ‘குலபதி’ எனப்பட்டவர். இரந்தும் கல்வி பெற்றார்கள்.

Image result for தமிழக வரலாறும் பண்பாடும்தொழிலுக்கு ஏற்ப குலங்கள் இருந்தன அளவர், இடையர், இயவர், உமணர், உழவர், எயிண், கடம்பர், கம்மாயர், களமர், கிளைஞர், குயவர், குறவர், குறும்பர், கூத்தர், கொல்லர், கோசர், தச்சர், துடியர், தோப்பாகர், துணையர், புராதவர், பறையர், பாணர், புலையர், பொருநர், கழவர், வடவடுகர், வண்ணார், வணிகர், வேடர் – எனப் பல குலங்கள் இருந்தன. இக்குலத்தவர்களுக்குள் திருமணக் கலவிக்கு தடை இல்லை. தமிழர்கள் உயிர் துறந்தவர்களுக்கு நடுகல் நட்டினர். நடுகல் வணங்கப்பட்டது. மரங்களுக்கு தெய்வத்தன்மை உண்டென்று மக்கள் நம்பினர். ஐந்திணைகளுக்கும் ஐந்து கடவுள்கள் இருந்தன. சேயோன், மாயோன், வேந்தன், வருணன், கொற்றவை எனப்பட்டார்கள்.

சிலப்பதிகார காலத்திலேயே ஆரியர்கள் வேள்வி வளர்க்கத் தொடங்கினர். மன்னர்கள் யாகம் வளர்த்தனர். பல்யாகச் சாலைகள் இருந்தன. சிறு தெய்வ வழிபாடு இருந்தது.ஆரியர் நுழைவு பண்பாட்டு வழியிலும், களப்பிரர் நுழைவு அரசியல் வழியிலும் தமிழர் வாழ்வை, தமிழ்நாட்டைச் சிதைக்க தொடங்கியது. கி.பி. 3ம் நூற்றாண்டில் இருள் பரவியது.

Image result for தமிழக வரலாறும் பண்பாடும்வேங்கடத்துக்கு மேலிருந்து வந்து தமிழகம் முழுக்கப் பரவியவர்கள் களப்பிரர்கள். இவர்களது சமயம் பௌத்தமாகவும், பிறகு சமணமாகவும் இருந்தது. வைதிக மதத்தை எதிர்த்தார்கள். தமிழ்மொழி தாழ்வுற்றது. பாலியும் பிராகிருதமும் அரசு மொழிகளாயின. தமிழில் கற்பிக்க மறுத்தனர். வைதிகம், சைவம், பிரமவாதம், ஆசிவகம், நிகண்டம், சாங்கியம், வைசேடிகம், பௌதிகம், உலோகாயதம் – எனப்பல சமயங்கள் இருந்தன. பல்லவர் கல்வெட்டுகள் முதலில் பிராகிருதம், பிறகு சமஸ்கிருதம், பிறகு கிரந்த – தமிழ் எழுத்தில் உள்ளது. சிற்பக் கலையும், கட்டடக் கலையும் இவர்கள் ஆட்சியில் செழித்தது. கோவில்கள் அதிகம் கட்டப்பட்டது. பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய தெய்வ சிலைகள் நிறுவியது. சங்ககாலம் கழிந்து களப்பிரரும், பல்லவரும் உள்ளே நுழைந்தபிறகு தமிழர் பண்பாடு அன்னிய – ஆரிய – வடமொழி பண்பாடுடையதாக மாறியது. குலப்பிரிவு, பிராமண மேம்பாடு, மொழிக்கலப்பு தோன்றியது.வைதிகம், சமணம், பௌத்தச் சண்டைகள் அதிகம் நடந்தன. நாயன்மார்களும், ஆழ்வார்களும் சைவம், வைணவத்தோடு வந்தார்கள். மன்னனை வளைத்து அவனை தங்கள் சமயமாக மாற்றும் முயற்சிகள் அதிகம் நடந்தன. சமண, சைவ, வைணவ இலக்கியம் அதிகம் தளிர்த்தது. திருநாவுக்கரசர், ஞானசம்பந்தர், திருமங்கல ஆழ்வார் – மூவரும் பல்லவர் காலத்தவர், கடவுள் இது எனக்காட்டாத சமணமும், பௌத்தமும் வீழ்ந்தது. பல்லவர் காலத்தில் பிராமணர்களுக்கு நிலங்கள் தானமாகத் தரப்பட்டது. இதுவே பிரம்ம தேசங்கள். கோவில்களுக்கு தரப்பட்டது தேவபோகம், தேவதானம். சமண பௌத்தத்திற்கு தரப்படது ‘பள்ளிச் சந்தம்’. கோவில் அர்ச்சகர், பணி செய்வோர்க்கு நிலங்கள் தரப்பட்டன.

Image result for தமிழக வரலாறும் பண்பாடும்தமிழர் வீரத்தின் மாபெரும் அடையாளமாகப் போற்றப்படுவர் இராசராசனும், அவன் மகன் இராசேந்திரனும். வீரத்தில் இங்கு பேரரசு நிறுவியவன் மட்டுமல்ல அயலகம் சென்றும் வென்று காட்டியவன். தஞ்சை பெருதனயர் பேரலை உருவாக்கியவன் இராசராசன். கங்கை கொண்ட சோழபுரம் இராசேந்திரன் அமைத்தது. சமய குருமார்களுக்கு அரசவையில் முக்கிய இடம் இருந்தது. அவர்கள் சொற்படி நடந்தனர். அதிகமான கோபுரங்கள் கட்டினர். மன்னர்களின் சிலைகளும், கோவிலில் வைக்கப்பட்டு வணங்கப்பட்டன. பிராமண குடியிருப்புகள் அகரம், பிரமதேயம், சதுர்வேதி மங்கலம் எனப்பட்டது. மன்னர்கள் நிறுவிய பள்ளிகள் யாவும் பிராமணர்கட்கு மட்டும் வடமொழிப் பயிற்சி அளித்துவந்தன . தென்னாட்டு முதலாம் இராஜேந்திரன் உருவாக்கிய பள்ளியில் 340 பிராமண மாணவர்கள் மட்டுமே படித்தனர். மடங்கள் சைவம் வளர்த்தன.இடங்கை – வலங்கை பிரிவினை சோழர் காலத்தில் உருவானது. சுமார் ஒன்பது (11-19) நூற்றாண்டுகளாக தமிழரின் வாழ்வை அலைக்கழித்தது இப்பிரிவினை. வலங்கையில் 96 குலங்கள், இடங்கையில் 96 குலங்கள் இருந்தன. இவர்களுக்குள் பெரும் கலகம் கி.பி. 1071-ல் நடந்துள்ளது. ஒரே சாதிக்குள் இருபிரிவினைகள் இது. பணம் வைத்திருந்தவர், பணமில்லாதவர் என்றும் சொல்லப்பட்டது.வலங்கையினர் செல்வாக்கு பெற்றவர்களாக இருந்தனர். இடங்கையினர் தொழிலாளர்கள்.குடிமக்கள் வரிப்பணம் வேள்விகளுக்கு, மடங்களுக்கு போனது. தேவரடியார்க்கு தனி வீதிகள் உருவாக்கப்பட்டது.

Image result for devaradiyar

மன்னரும், செல்வரும் பலமனைவியரை மணந்தனர். அரசிகள் சிலர் உடன்கட்டை ஏறினர். உடன்கட்டை கட்டாயமாக இல்லை. பெண்டிர்க்கு சொத்துரிமை இருந்தது. அரசர்களின் அலுவல்களில் பட்டத்தரசிகளும் இருந்தனர். அரசிகள் கோவில் கட்டினார்கள். தஞ்சை கோவிலுக்காக 400 தேவரடியார் இருந்தனர். குடிமக்களில் சிலர் தங்களை கோவில் அடிமைகளாக விற்றுக்கொண்டனர். சங்க காலத்தில் பிணங்கள் புதைக்கப்பட்டது. சோழர் காலத்தில் எரிக்கப்பட்டது. ஏராளமான மரங்கள் நடப்பட்டது. நிலங்கள் தானமாகத் தரப்பட்டது. சைவம், வைணவம் இரண்டும் தழைத்தது. சிவன், திருமால் வழிபாடு பெருகியது. எண்ணம் நிறைவேற ‘வேண்டுதல்’ உருவானது. இந்தியாவிலேயே மிகச்சிறந்த நாடு என்று பாராட்டப்பட்ட பாண்டியநாடு, உட்பகையால் முடிந்தது. பாண்டியரிடம் பொன்னும், மணியும் இருந்தது எனினும், ஆனால் மக்கள் வறுமையில் இருந்தனர். தேவரடியார் வழக்கமும், உடன்கட்டை ஏறுதலும் இருந்தது. அரசுரிமைப் போராட்டங்களிலும் மாலிகாப்பூரின் அட்டூழியங்களாலும் பாண்டியநாடு சீர்குலைந்து போயிற்று. பாண்டியரின் உட்பகையில் விசயநகர அரசு உள்ளே நுழைந்தது. மதுரையில் நாயக்கராட்சி , தஞ்சாவூரில் நாயக்கர் ஆட்சி, அதன்பிறகு மராட்டியர் ஆட்சி என தமிழ்ப்பரப்பு மொத்தமும் அன்னியராட்சியாகத் தொடர்ந்தது. 13 முதல் 18ம் நூற்றாண்டு தமிழ்சமூக நிலை கவலைக்கிடமாக ஆனது. மன்னராட்சியின் முடிவும் காலனியத்தின் தொடக்கமும் மிக மிக மோசமானதாக இருந்தது.

Image result for devaradiyar

அன்னிய மொழி மன்னர்கள் – ஆரியத்தனத்தில் மூழ்கியிருந்தனர். அதே சூழலில் வைதிகம், சமணம், பௌத்தம், இசுலாம், கிறித்துவம் என்ற மதக் கோட்பாடுகளின் வேட்டைக்காடாகவும் தமிழ் நிலம் மாறிக்கிடந்தது. உயர்வை நோக்கிய பயணத்தில், பல்வேறு தடைக்கற்கள் இருந்தன. மாபெரும் தடையான சாதியே, பெருமைக்குரியதாகவும் மக்களால் உணரப்பட்டது. சாதி அகற்றுதல் என்று இல்லாமல் சாதிப்பெருமை பேசுவதாக மற்ற உயர்சாதிகள் திட்டமிட்டார்கள். தீண்டாமை தலை விரித்தாடியது. சோழப்பேரரசு காலம் போலவே விசயநகர, நாயக்க, மராட்டிய அரசும் பிராமணர் விரும்பும் அரசாக இருந்தது. விசயநகரப்பேரரசு, நாயக்கர் ஆட்சியில் தெலுங்கு, கன்னட மொழியினர் தமிழத்தினுள் ஏராளமானோர் வந்து குடியேறினர். மாலிக்காபூர் படையெடுப்புக்கு முன்பே இசுலாமியர் குடியேறிவிட்டார்கள். இந்த 1500 – 1600களில் ஐரோப்பியர்கள் உள்ளே நுழைகிறார்கள் – என்கிற வரலாற்றுச் சித்திரத்தை மனதில் உருவாக்கியவர் கே.கே.பிள்ளை.இந்த நூல் உருவாக்கிய தாக்கம் என்பது பெரியது. தமிழ்நிலத்தை வெவ்வேறு மொழியினர், வெவ்வேறு இனத்தினர், வேறுவேறு மதத்தினர், வேறுவேறு நாட்டினர் எப்படிச் சூறையாடினார்கள் என்பதை மனதில் விதைத்த விதைதான் இந்தப் புத்தகம்.
ஈராயிரம் ஆண்டுத் தமிழர் வரலாற்றை எழுதிய கே.கே.பிள்ளை யார்? என்ற வரலாற்றை அறியாச் சமூகம் நாம் என்பதுதான் இன்னும் அதிர்ச்சிக்குரியது. நாஞ்சில் நாட்டைச் சேர்ந்தவர் இவர். இவரது அப்பா பெயர் கோலப்பன். இவர் பெயர் கனகசபாபதி பிள்ளை.

Image result for கே.கே.பிள்ளைகோலப்ப கனகசபாபதி பிள்ளை என்பதன் சுருக்கம் தான் கே.கே.பிள்ளை. 1905ல் பிறந்து 1981ல் இறந்து போயிருக்கிறார். கோட்டாறு பள்ளியிலும் நாகர்கோவில் ஸ்காட் கிறித்துவக் கல்லூரியிலும் படித்திருக்கிறார். சென்னை மாகாண உள்ளாட்சி அமைப்புகள் குறித்து ஆராய்ந்தவர். சுசீந்திரம் கோவில் பற்றிய ஆய்வுக்காக ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்றவர். கல்வெட்டு ஆராய்ச்சியாளராகவும் வரலாற்றாசிரியராகவும் இருந்துள்ளார். சென்னை மாநிலக் கல்லூரியிலும் சென்னை பல்கலைக் கழகத்திலும் பணியாற்றியவர். இவருக்காகவே மரபு வழி பண்பாட்டுத்துறையானது சென்னை பல்கலைக்கழகத்தில் தொடங்கப்பட்டது. தகவல்களின் குவியல் இந்நூல். தகவல்களின் குவியலாக இருக்கும் நூல் படிக்க இயல்பானதாக சுவையாக இருக்காது. ஆனால் இது படிக்க இனிமையாகவும் இருக்கும். நடையழகுக்குள் போய்விட்டால் தகவல்கள் பறந்து போகும். ஆனால் இதில் தகவல்களின் சேர்க்கை செறிவாக இருக்கும். இன்றைய தினம் ஐ ஏ எஸ் முதல் அனைத்து போட்டித் தேர்வுக்கு படிப்பவர்களுக்கும் இது வேதப்புத்தகமாக இருக்கிறது. பிள்ளை என்பது அவரது சாதிப்பட்டமாக இருக்கலாம். ஆனால் கனகசபாபதி, தமிழன்னையின் பிள்ளை!

 

Leave a Response