Article

நாட்டில் வேறெங்கும் இல்லாத நிலையில் முஸ்லீம்களை தமிழ்நாடு அரசு, காவல்அடைப்பு முகாமில் அடைத்து வைத்திருக்கிறது – சுகன்யா சாந்தா (தமிழில்: ச. வீரமணி)

Spread the love

[இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலும் இல்லாத அளவில் தமிழ்நாடு மட்டும் முஸ்லீம்களை காவல் அடைப்பு முகாம் ஏற்படுத்தி அடைத்து வைத்திருக்கிறது. வெளிநாட்டைச் சேர்ந்த தப்லிகி ஜமாத் உறுப்பினர்களை இவ்வாறு அடைத்து வைத்திருக்கிறது. ஏப்ரல் 11இலிருந்து இவ்வாறு அடைத்து வைத்திருப்பவர்களுடன் பேசுவதற்குக்கூட அனுமதிக்கப்படுவதில்லை என்று அவர்களின் குடும்பத்தினர் கூறுகிறார்கள். இவ்வாறு கடைப்புக் காவல் முகாம் ஏற்படுத்தி இருப்பது அரசமைப்புச்சட்டத்திற்கு விரோதமான செயல் என்று சமூக உரிமைக்காகப் போராடும் வழக்குரைஞர்கள் கூறுகிறார்கள்.]

மார்ச் 25இன் முதல் வாரத்தில், எத்தியோப்பியாவைச் சேர்ந்த முக்தார் (வயது 25) என்பவரும், அவருடைய மனைவி ஃபெத்யா என்பவரும் அவர்களின் தலைநகரான அட்டிஸ் அபாபாவிலிருந்து புதுதில்லி வந்திருந்தனர். அவர்கள் புதுதில்லியில் நடைபெற்ற தப்லிகி ஜமாத் மாநாட்டில் பங்கேற்றுவிட்டு,  தமிழ்நாட்டிற்கு வந்து சில ஊர்களைச் சுற்றிப்பார்த்துவிட்டு, மீண்டும் தங்கள் நாட்டிற்கு அதே மாதத்தின் கடைசியில் திரும்பிடத் திட்டமிட்டிருந்தனர்.

முக்தார் இந்தியாவிற்கு இதற்கு முன் வந்திருக்கிறார். இது அவருக்கு மூன்றாவது முறை. ஆனால் அவருடைய மனைவிக்கு இதுவே முதல் முறையாகும். அவர் தன்னுடைய மூன்று வயது பையனை விட்டுவிட்டு வந்திருந்ததால் கொஞ்சம் பதட்டத்துடனேயே இருந்தார். இவர்கள் இல்லாமல் அவர்களின் மகனான முகமது முக்தார், தன்னுடைய தாத்தா-பாட்டிகளுடன் இருந்து வந்தான்.

இவர்களின் நான்கு வார பயணம் என்பது, பிரதமர் திடீரென்று சமூக முடக்கத்தை அறிவித்த பின்னர் துயரார்ந்தவிதத்தில் மாறிவிட்டது. இதனைத் தொடர்ந்து, நாட்டில் கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்று பரவுவதற்கே தப்லிகி ஜமாத் மாநாடுதான் காரணம் என்பதுபோல் மதவெறித்தீ விசிறிவிடப்பட்டது. மேற்படி தம்பதிகள் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஆசியா, ஆப்ரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து வந்து அடைக்கப்பட்டிருக்கும் 129 பேர்களில் முக்தாரும், ஃபெய்தாவும் இருவர். இவர்கள் அனைவருமே வலுக்கட்டாயமாக சிறையில் அடைக்கப்பட்டார்கள்.  முதலில் சென்னையில் உள்ள புழல் சிறையிலிருந்த பள்ளியிலும்,  பின்னர் சைதாப்பேட்டை கிளைச் சிறையிலும், அதன் பின்னர் பார்ஸ்டல் பள்ளியிலும் அடைக்கப்பட்டனர்.   இவர்களுக்காகவே பார்ஸ்டல் பள்ளி அவசர அவசரமாக அடைப்புக் காவல் முகாமாக மாற்றப்பட்டது. இவர்களில் 31 ஆண்களும், பெண்களும் புழல் சிறை எண் 2-க்கு விசாரணைக் கைதிகளாகவும், பெண்களுக்கான சிறப்பு சிறைக்கூடத்திற்கும் அனுப்பப்பட்டனர்.

Send foreign TJ members home, appeals Islamic Federation in Tamil ...

எத்தியோப்பியாவின் அட்டிஸ் அபாபாவிலிருந்து, முக்தாரின் குடும்பத்தினர் இவர்களின் நிலையைத் தெரிந்துகொள்ள பல வழிகளிலும் முயற்சித்தனர். முக்தாரின் சகோதரி ஃபோசியா, ‘முக்தார் தம்பதிகளின் குரலைக் கேட்பதற்குத் தங்களுக்கு மூன்று மாதங்களுக்கும் மேலானது’ என்று கூறுகிறார். “அவர்களுக்கு என்ன நடந்தது என்றே எங்களால் தெரிந்துகொள்ள முடியவில்லை. இன்னும் எத்தனைக் காலம் அவர்கள் அங்கே இருக்க வேண்டும் என்றும் தெரியவில்லை. அவர்களின் சிறு வயது பையன், எப்போதும் ‘அம்மா எங்கே’, ‘அப்பா எங்கே’ என்று கேட்டுக்கொண்டே இருக்கிறான்.  இவர்களின் இந்தப் பயணம் எங்களுக்குக் கடும் துன்பத்தையும், துயரத்தையும் கொடுத்திருக்கிறது,” என்றார். இவ்வாறு இவர் அட்டிஸ் அபாபாவிலிருந்து தொலைபேசிவாயிலாகத் தன் துயரங்களைப் பகிர்ந்து கொண்டார்.

மத்திய உள்துறை அமைச்சகத்திலிருந்து கிடைக்கப்பெற்ற தகவல்களிலிருந்து 35 நாடுகளிலிருந்து 3,500க்கும் மேற்பட்டவர்கள் இந்தியாவிற்கு வந்து இவ்வாறு சிக்கித் தவித்துக் கொண்டிருக்கின்றனர். இவர்களில் உடனடியாக அவசர மருத்துவ சிகிச்சை தேவைப்படும் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பல வயது முதிர்ந்தவர்களும் அடங்குவர்.

ஆனாலும், தமிழ்நாட்டில் அடைக்கப்பட்டிருக்கும் 129 வெளிநாட்டினரின் நிலைமைகள் மிகவும் மோசமாக இருப்பதாகவும், இவர்களில் குறைந்தபட்சம் 12 பேர் இளம் தாய்மார்கள் என்றும் கூறப்படுகிறது.

ஏப்ரலில் தமிழ்நாடு அரசாங்கம் மாநிலம் முழுதும் பல்வேறு இடங்களில் 15 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்தது. பின்னர் மாவட்டங்களுக்கிடையே பல்வேறு விசாரணைகள் மேற்கொண்டு, அனைவரையும் சிறையில் அடைத்தது. இவர்களில் பெரும்பாலானவர்கள் பல்வேறு மசூதிகளிலும், தனியாருக்குச் சொந்தமான வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்தார்கள். இவர்களில் மலேசியவைச் சேர்ந்த 10 பேர், அவர்களின் அரசாங்கம் அனுப்பி வைத்த சிறப்பு விமானத்தில் ஏற இருந்த ஒரு சில நிமிடங்களுக்கு முன், அவர்களை ஏறவிடாமல் தடுத்து, கைது செய்யப்பட்டு, அடைக்கப்பட்டார்கள்.

அதிலிருந்து இவ்வாறு கைது செய்யப்பட்ட வெளிநாட்டினர் அனைவருமே எப்படியாவது தங்கள் நாட்டுக்குச் சென்றிட வேண்டும் என்று சட்டபூர்வமாக முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். ஆனாலும் ஆட்சியாளர்களோ அவர்களின் வேண்டுகோளைக் கேட்கக்கூடிய நிலையில் இல்லை.

புதிய காவல் அடைப்பு முகாம் 

அவர்கள் கைது செய்யப்பட்டு ஒரு மாதம் கழிந்தபின்னர், சென்னை உயர்நீதிமன்றம் முதலில் அவர்களில் தாய்லாந்தைச் சேர்ந்த ஆறு பேருக்கு மே 6 அன்று ஜாமீன் வழங்கியது. ஆயினும் தமிழ்நாடு அரசாங்கம் அவர்களை விடுவிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்குப் பதிலாக, புதிதாக ஓர்  அரசாணை வெளியிட்டு, அவர்களைத் தொடர்ந்து காவல் அடைப்பில் வைத்திருக்கிறது. மே 8 அன்று மாநில ஆளுநரால் வெளியிடப்பட்டுள்ள அந்த அரசாணையில் இவர்களை காவல் அடைப்பில் வைத்திருப்பதற்கு, எவ்விதமான காரணத்தையும் தெரிவிக்கவில்லை. அதில் கூறப்பட்டிருப்பதெல்லாம், “1946ஆம் ஆண்டு வெளிநாட்டினர் சட்டத்தின் 3(2)(e)ஆவது பிரிவின்கீழ் அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தின்கீழ், தமிழ்நாடு அரசாங்கம் இதன்மூலம், அவர்கள், விடுவிக்கப்படும்பட்சத்தில், சென்னை மாவட்டத்தில், புழலில் உள்ள சிறப்பு முகாமில் வசிப்பார்கள் என்று ஆணையிடுகிறது,” என்பது மட்டுமேயாகும்.

இவ்வாறு தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்திருப்பதன் மூலம், தமிழ்நாடு அரசாங்கம், இந்தியாவிலேயே வெளிநாட்டினர் சட்டத்தின் கீழ் காவல் அடைப்பு முகாம் அமைத்திருக்கும் ஒரேயொரு மாநிலமாக மாறி இருக்கிறது. கெரோனோ வைரஸ் தொற்று தீவிரமாக இருந்துகொண்டிருக்கக்கூடிய நிலையிலும் தமிழ்நாடு அரசு இதனைச் செய்திருக்கிறது.

காவல் அடைப்பு முகாம்களை ஏற்படுத்தியிருக்கக்கூடிய மாநிலங்கள்கூட இதனைச் செய்திடவில்லை. ஆனால், தமிழக அரசோ, யவனப்பருவக் குற்றவாளிகள் (adolescent offenders) அடைக்கப்படுவதற்காக இருந்துவந்த பார்ஸ்டல் பள்ளியை, காவல் அடைப்பு முகாமாக மாற்றி இருக்கிறது. மாநில அரசாங்கம் இதனை ஒரு தற்காலிக முகாம் என்று கூறிவந்தபோதிலும், வழக்குரைஞர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் அரசாங்கம் இவ்வாறு “தவறாக வேறுபடுத்திக்” காட்டுவதாகக் கூறுகின்றனர்.

“சுமார் 3,500 பேர், வெளிநாட்டினர் சட்டத்தின்கீழ் விசா நெறிமுறைகளை மீறியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தபோதிலும் வேறெந்த மாநிலமும் இவ்வளவு மோசமாக நடவடிக்கைகளை எடுத்திடவில்லை. ஆரம்பத்தில் கைது செய்யப்பட்டபோதிலும், பின்னர் அவர்கள் ஜாமீனில் வெளியே வந்துவிட்டனர். ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் இவ்வளவு மோசமானமுறையில் நடந்துகொண்டிருக்கிறது,” என்று வழக்குரைஞர் ஷேசாத் கூறுகிறார்.

புழல் சிறையுடன் இருக்கின்ற பார்ஸ்டல் பள்ளியில் 38 பேர்களைத்தான் அடைத்து வைக்க முடியும்.  ஆனால் 129 பேர் அங்கே அடைத்து வைக்கப்பட்டிருக்கின்றனர். அங்கே அவர்களின் வாழ்நிலைமைகள் மிகவும் அசிங்கமாக இருப்பதாக அவர்களைப் பார்த்துவிட்டுத் திரும்பும் வழக்குரைஞர்கள் கூறுகிறார்கள். “அவர்களில் பலர் இந்தியாவின் உணவுப் பழக்க வழக்கங்களோடு பழகியவர்கள் அல்ல. எனவே பல நாட்களில் அவர்கள் பட்டினி கிடக்கிறார்கள். பல மாதங்களாக அவர்களால் தங்கள் குடும்பத்தினருடன் பேச முடியவில்லை,” என்று ஒரு வழக்குரைஞர் கூறுகிறார்.

தப்லிகி ஜமாத் மாநாட்டில் பங்கேற்றவர்களில் ஓரிருவரைத் தவிர மற்ற அனைவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்று அவர்களை சோதனை செய்தபோது அவர்களுக்கு ‘நெகடிவ்’ என்று வந்ததன்மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. எனினும்  அவர்கள் இவ்வாறாக புழல் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

Tamil Muslim group opposes foreign Tabligi Jamat member's ...

தப்லிகி ஜமாத் மாநாட்டிற்கு வந்திருந்தவர்களில், மகாராஷ்ட்ரா, ஹர்யானா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 100 வெளிநாட்டினர், இதுவரை விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள்.

ஜூன் 29 திங்கள் அன்று, இந்தியாவிற்கு பத்தாண்டு காலத்திற்கு வரத் தடை விதிக்கப்பட்டுள்ள பல வெளிநாட்டினர் சார்பாக மனு விசாரணைக்கு வந்த சமயத்தில், நீதியரசர்கள் ஏ.எம். கன்வில்கார், தினேஷ் மகேஷ்வரி மற்றும் சஞ்சய் கன்னா ஆகியோரடங்கிய அமர்வாயம், “இந்த வெளிநாட்டினரின் விசாக்கள் ரத்து செய்யப்பட்டால், இந்தியாவில் அவர்களை ஏன் இன்னமும் வைத்திருக்க வேண்டும்? அவர்களை நாடு கடத்துங்கள். மேலும், அவர்கள் ஒவ்வொருவருக்கும் அளித்துள்ள கட்டளைகளின் வாசகங்களையும், விசா ரத்து செய்த விவரத்தையும் எங்களுக்குத் தெரிவிக்கவும்,” என்று கேட்டிருக்கிறது.

“வெளிநாட்டினர் மதமாற்றம் செய்வதற்காகவே வந்திருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை வழக்குரைஞர்கள் மறுத்தனர். “இவர்களில் பலருக்கு தங்கள் தாய்மொழியைத் தவிர வேறு ஆங்கிலமோ அல்லது இந்திய மொழிகள் எதுவுமோ தெரியாது. இவர்களால் இங்கேயுள்ள மக்களுடன் எந்த மொழியிலும் பேசமுடியாத நிலையில் இவர்கள் எப்படி மதத்தைப் பரப்பமுடியும்?” என்றுகூறி, அரசுத்தரப்பில் வைக்கப்படும் வாதங்களை கடுமையாக மறுக்கின்றனர்.”

தமிழ்நாட்டில் உள்ள 129 பேரும் ஏற்கனவே ஜாமீனில் விடுவிக்கப்பட்டவர்கள்தான். எனவே வெளிநாட்டினர் சட்டத்தின்படி அவர்களை அவர்களின் நாடுகளுக்கு அனுப்பி வைத்திட அரசாங்கங்கள் நடவடிக்கை எடுத்திட மாநில அரசாங்கங்கள் அதிகாரம் பெற்றிருக்கின்றன.

ஜூன் 12 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை அமர்வாயத்தில் உள்ள நீதியரசர் ஜி.ஆர். ஸ்வாமிநாதன், “அடைத்து வைக்கப்பட்டிருப்பவர்கள் ஏற்கனவே போதுமான அளவிற்கு அவதிப்பட்டுவிட்டார்கள்,” என்றும், மேலும் “அவர்கள் வெளிநாட்டினராக இருந்தாலும்கூட, அவர்களுக்கும் அரசமைப்புச் சட்டத்தின் 21ஆவது பிரிவின்படி உயிர்வாழும் உரிமையை அளித்திட வேண்டும்,” என்றும் மனிதாபிமான அணுகுமுறையுடன் கூறியிருக்கிறார்.

   மேலும், நீதிமன்றம் பார்ஸ்டல் பள்ளியில் அடைத்து வைக்கப்பட்டிருப்பவர்களை, சிறைக் கட்டமைப்பு இல்லாத ஓரிடத்தில் வைக்க வேண்டும் என்று கட்டளை பிறப்பித்திருக்கிறது. இதற்காக நீதிமன்றம், மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் 2019 ஜனவரி 9 அன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ள காவல் அடைப்பு மையத்தின் மாடலையும் அனுப்பி வைத்திருக்கிறது.

“காவல் அடைப்பு முகாமுக்கும் சிறைக்கும் இடையேயுள்ள வித்தியாசம் எதையும் ஏற்படுத்த மாநில அரசாங்கம் தவறிவிட்டது,” என்று கூறும் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரான ஜவஹிலுல்லா, “உயர்நீதிமன்றத்தின் கட்டளைக்குப்பின்பும் இது மாறாது,” என்றும் கூறுகிறார்.

“இவ்வாறு அடைத்து வைக்கப்பட்டிருப்பவர்களுக்கு அவர்கள் குடும்பத்தினருடன் முறையாகத் தொடர்பு கொள்ள வசதிகள் செய்து தரப்பட வேண்டும். சமையல் இடம் தனியாக ஏற்படுத்தித் தர வேண்டும். தண்ணீர் வசதி செய்துதரப்பட வேண்டும். ஆனால் இதில் எதையுமே அவர்களுக்கு செய்துதரவில்லை. இன்னும் சரியாகச் சொல்வதென்றால், இதர சிறைவாசிகளைவிட இவர்கள் மிகவும் மோசமாக நடத்தப்பட்டு வருகிறார்கள்,” என்று அவர் கூறுகிறார்.

Indian Muslims battle Islamophobia amid COVID-19 - The Federal

சென்னையில் உள்ள ஜமியா  காஸ்மியா அராபிக் கல்லூரி, இவ்வாறு அடைத்து வைக்கப்பட்டிருக்கும் வெளிநாட்டினருக்கு தங்குவதற்கு இடம் அளித்திட முன்வந்தது. எனினும் மாநில அரசாங்கம் அதனைக் கண்டுகொள்ளவில்லை.

இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவேண்டும் என்று கோரி அளித்துள்ள ‘ஆட்கொணர் மனு’ (‘habeas corpus’) நீதிமன்றத்தால் பின்னொரு தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. அதேசமயத்தில் மாநில அரசின் அரசாணையை எதிர்த்தும் வழக்கு தொடுத்திட வழக்குரைஞர்கள் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்.

உலகம் முழுதும் பல நாடுகளிலும் உள்ள இவர்களின் உறவினர்கள், இந்திய அரசாங்கம் “வகுப்புவாத அரசியல்” அடிப்படையில்  இவர்களுக்கு எதிராக விளையாடுவதைக் கைவிட்டுவிட்டு, இவர்களை அவரவர் நாடுகளுக்கு அனுப்பி வைத்திட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

“நாங்கள் எப்போதும் இந்தியாவை நேசித்து வந்திருக்கிறோம். உங்கள் நாட்டை, அதன் அழகு மற்றும் விருந்தோம்பும் பண்புள்ள மக்களுக்காக என்றென்றும் நினைவுகூர எங்களை அனுமதியுங்கள். எங்கள் குழந்தைகளின் மீது இத்தகைய மனிதாபிமானமற்ற துன்பறுத்தல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்திடுங்கள்,” என்று ஹாசன் என்பவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

(நன்றி: தி ஒயர்)

(தமிழில்: ச. வீரமணி)

Leave a Response

Top Reviews

Video Widget

gallery