Book Review

நூல் அறிமுகம்: தாகூரின் முக்தா தாரா: அறிவியல் – இயற்கை இடையிலான முரண்பாட்டைச் சித்தரிக்கும் நாடகம்.! (பெ.விஜயகுமார்)

Spread the love

 

ரவீந்திரநாத் தாகூர் என்றதும் இலக்கியத்திற்கான நோபல் பரிசைப் பெற்ற இந்தியர் என்றும், இந்தியா, வங்க தேசம் ஆகிய இரு நாடுகளின் தேசிய கீதங்களை இயற்றியவர் என்றும் பளிச்சென்று சொல்லி விடுவோம். இந்திய விடுதலைப் போருக்கு தன்னுடைய தார்மீக ஆதரவை முழுமையாக நல்கியவர்; ஜாலியன் வாலா பாக் கொடூரத்தைக் கண்டித்து பிரிட்டிஷ் அரசு கொடுத்த பட்டத்தை திருப்பிக் கொடுத்தவர் என்பதெல்லாம் நாம் அறிந்ததே. மொழி, மதம், இனம், புவியியல் எல்லைகள் அடிப்படையிலான தேசியம் உலக மக்களை ஒன்றிணைப்பதற்கு மாறாக பிரிக்கவே செய்கிறது என்பதால், நவீன உலகின் சிறந்த சிந்தனையாக தேசியம் இருக்க முடியாது என்று தாகூர் நினைத்தார்.

மதங்களைத் தாண்டிய ஆன்மிகம், மனிதநேயம், சர்வதேசியம் போன்ற உயர்ந்த லட்சியங்களுடன் வாழ்ந்த தாகூர், குருதேவ் என்றும் மகாகவி என்றும் அழைக்கப்பட்டார். தாகூர் தலைமையேற்று நடத்திய கல்வி நிலையங்களான சாந்தி நிகேதனும், விஸ்வபாரதி பல்கலைக்கழகமும் உலக ஒற்றுமையை வலியுறுத்தும் நிறுவனங்களாகவும், கலைகள் அனைத்தையும் இயற்கையுடன் இணைந்த சூழலில் பயிற்றுவிக்கும் மையங்களாகவும் திகழ்ந்தன. ”வீடும் உலகமும்’, ’விநோதினி’, கோரா’, போன்ற நாவல்கள், ’கபூலிவாலா’, ’போஸ்ட் மாஸ்டர்’, ’சுபா’ போன்ற சிறுகதைகள், ’வால்மீகி பிரதிபா’, ’விசர்ஜன்’, ’மாலினி’, ’போஸ்ட் ஆபிஸ்’, ’சந்நியாசி’, முக்தா தாரா போன்ற நாடகங்களுடன், எண்ணற்ற கவிதைகளையும், கட்டுரைகளையும் உலக இலக்கியத்திற்கான தன்னுடைய பங்களிப்பாக தாகூர் வழங்கியுள்ளார்.

Rabindranath Tagore, not Bob Dylan: The first lyricist to win the ...

1922இல் எழுதப்பட்ட முக்தா தாரா (சுதந்திரமான ஆறு) நாடகம், தாகூர் நாடகங்களிலே தனித்துவமானதாகும். அறிவியலின் நோக்கம் இயற்கையின் விநோதங்களை அறிந்து கொண்டு அதனை மனிதகுல வளர்ச்சிக்குப் பயன்படுத்துவதாக மட்டுமே இருந்திட வேண்டும். இயற்கையை சீரழித்து வளரும் தொழில்நுட்பம், மனிதகுலத்தை அழிவுப்பாதைக்கே இட்டுச்செல்லும் என்பதை இந்த நாடகம் உணர்த்துகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் அறிவியலுக்கும், மதத்திற்கும் இடையில் மேலோங்கியிருந்த முரண்பாடு, அடுத்த கட்டமாக அறிவியலுக்கும், இயற்கைக்குமான முரண்பாடாக நிலைபெற்றது.

ஆற்றின் குறுக்கே பெரிய அணைகளைக் கட்டுவது, ஆற்றின் போக்கையே மாற்றுவது போன்ற மிகப் பெரிய குறுக்கீடுகளால் இயற்கையின் சீற்றத்தை மனிதகுலம் சந்திப்பதை நாம் காண்கிறோம். ஆறுகளின் குறுக்கே கட்டப்படும் அணைகளால், நாடுகளிடையே அல்லது ஒரே நாட்டில் மாநிலங்களுக்கு இடையே நதி நீர்ப் பங்கீடு மிகப் பெரும் பிரச்சனையாக உருவாகுவதையும் காண்கிறோம். ஆற்றின் குறுக்கே அணைகள் கட்டுவது ஒருபுறம் வளர்ச்சிக்கும், மறுபுறம் வீழ்ச்சிக்குமே வழிவகுக்கும் என்பதற்கு காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள நாகர்ஜூன சாகர் அணையே சாட்சியாகும். இத்தகு நதி நீர்ப் பங்கிட்டுப் பிரச்சனையே முக்தா தாரா நாடகத்தின் கருப்பொருளாகும்.

முக்தா தாரா நாடகம், நாடுகளுக்கிடையில் நிலவும் வெறுப்பு அரசியல் எவ்வாறு மனித உயிர்களைக் காவு கேட்கிறது; மகாத்மா காந்தி வழிகாட்டிய வன்முறைகளற்ற போராட்டங்கள் மூலம் எவ்வாறு வெற்றி பெறலாம்; அரசு வன்முறைகள் எவ்வளவு ஆபத்தானவை என்பதை எல்லாம் நம் கண் முன்பாக காட்சிப்படுத்துகிறது.  நூறாண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட அந்த நாடகம் இன்றைய சமூக, அரசியல், பொருளாதாரம், கலாச்சாரச் சூழலுக்கும் பொருத்தமாக இருப்பது விந்தையே!

MUKTA - DHARA - Vasans Book Stall

இமயமலையின் அடிவாரத்தில் இருக்கும் உத்தரக்கூட் நாட்டின் மன்னன் ரணஜித் அதிகாரம் தரும் போதையில் அண்டை நாடான சிவத்தரா மக்களுக்கு தாங்க முடியாத துயரங்களைக் கொடுக்கிறான். அவர்களை என்றென்றும் உத்தரக்கூட் நாட்டின் அடிமைகளாக வைத்திருக்க வேண்டும் என்ற மேலாதிக்க வெறியுடன் அவன் ஆட்சி நடத்துகிறான். அவர்களின் வாழ்வாதாரமான முக்தா தாரா நதியின் நீரைத் தடுத்து நிறுத்தி அவர்களின் விவசாயத்தைச் சீரழிக்க நினைக்கிறான். தன்னுடைய பெயரிலேயே சுதந்திரத்தைத் தாங்கி நிற்கும் முக்தா தாரா ஆறு சிவத்தரா வழியாக இயல்பாகப் பாய்வதைத் தடுத்திட நதியின் பிறப்பிடத்திலேயே அணையைக் கட்டுகிறான்.

அதை முன்னின்று நடத்தும் விபூதி என்ற பொறியாளர், அறிவியியல் துணை கொண்டு தன்னால் எதையும் சாதிக்க முடியும் என்ற மமதையில் இருக்கிறான். எண்ணற்ற உயிர்ப் பலிகளுடன் அணை கட்டி முடிக்கப்படுகிறது. சந்தப்பட்டனா என்ற நகரிலிருந்து ஏராளமான இளைஞர்களை வலுக்கட்டாயமாக இழுத்து வருகிறார்கள். அணையின் கட்டுமானத்தில் அந்த இளைஞர்கள் சிந்திய ரத்தக்கறை படிகிறது. வெறும் கற்களால் மட்டுமல்லாமல் அவர்களின் கல்லறைகளின் மீதும் கட்டப்பட்டதாகவே அந்த அணை ஓங்கி வளர்ந்து நிற்கும். ஊர் மக்கள் வழிபடும் பைரவன் கோயில் கோபுரத்தின் உயரத்தைவிட அணை உயர்ந்து நிற்பது நல்லதல்ல என்று சில நல்ல உள்ளங்கள் சஞ்சலப்பட்டன. ஏழைகளின் சொல் என்றும் அம்பலம் ஏறுவதில்லையே!

நாடகத்தின் முதல் காட்சி அணையின் திறப்பு விழாவுடன் தொடங்குகிறது. விழாவில் அணையின் நாயகன் விபூதிக்கு பாராட்டும், பட்டமும் அளித்து மன்னர் ரணஜித் கௌரவிக்க உள்ளார். விழாவைக் காண மக்கள் திரண்டு வந்துள்ளனர். கூட்டத்தில் அம்பா என்ற அபலைப் பெண் ”சுமன்! சுமன்!” என்று கதறியவாறு அலைகிறாள். அவனை எங்கே தேட முடியும்? அவள் மகன் சுமனைப் பலிபீடத்தில் வெட்டிக் காணிக்கை கொடுத்த பின்னர் தானே அணை கட்டும் வேலையே தொடங்கியது. கூட்டத்தில் ’படுக்’ என்ற கிழவரும் தன்னுடைய இரு பேரன்களைத் தேடி அலைவதையும் காண்கிறோம். அவர்களையும் தான் அணை விழுங்கிவிட்டதே! அந்த ஜனநெரிசலில் ”அய்யோ! இன்னும் எத்தனை இன்னுயிர்களை இந்த அணை விழுங்குமோ” என்ற அந்த ஏழைக் கிழவரின் கதறல் யாருக்கும் கேட்காமலேயே போகிறது.

Muktodhara - YouTube

உத்தரக்கூட் பள்ளி ஆசிரியரையும் அந்தக் கூட்டத்தில் காண்கிறோம்.  பள்ளிச் சிறுவர்களை மன்னருக்கும், விழா நாயகன் விபூதிக்கும் ’ஜே’ போடச் சொல்வதற்காக அழைத்து வந்துள்ளார். ’ஜே’ போடாத குழந்தைகளை பிரம்பால் அடித்தவாறே கூட்டத்தில் முந்திச் செல்கிறார். ”என்னுடைய மாணவர்கள் வருங்காலத்தில் சிவத்தரா மக்களை விலங்குகளைப் போல் நடத்துவார்கள்! அப்படித்தானே அவர்களுக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறேன்!” என்று பெருமை பேசுவதுடன் எதிரில் காணும் அமைச்சரைக் கும்பிட்டு “அய்யா! நான் எவ்வளவு அரச விசுவாசியாக இருக்கிறேன். எனக்கு நல்ல சம்பளம் கொடுக்கக் கூடாதா?” என்று யாசிக்கவும் செய்கிறார். ஆசிரியர் தொழில் எவ்வளவு உன்னதமானது? மாணவர்களின் மனதில் நல்லெண்ணங்களை விதைப்பது அல்லவா அவர்களின் கடமை? இதனை அறியாத சில புல்லுருவிகள் இன்றிருப்பது போல் அன்றும் ஆசிரியர்கள் மத்தியில் இருந்துள்ளதை  தாகூர் பகடி செய்கிறார்.

அணையின் பெருமைகளையும், அதனைக் கட்டி முடித்த விபூதியின் திறமையையும் பேசியவாறு உற்சாகத்தில் உத்தரக்கூட் மக்கள் நடைபோடுகிறார்கள். அதிலும் விஷயம் அறிந்த ஒருவன் ”விபூதி ஒன்றும் கெட்டிக்காரன் அல்ல. பொறியாளர் வெங்கட் வர்மா அவர்கள் எழுதி வைத்திருந்த பொறியியல் நுட்பங்களைத் திருடிப் பெற்ற சாமர்த்தியம்தான்; பாவம்! வெங்கட் வர்மா வறுமையில் வாடி உயிரிழந்தார். அவரின் திறமைகளைத் திருடி இன்று பெயரும், புகழும் பெற்றுள்ளான் இந்த விபூதி!” என்று உண்மையைப் போட்டு உடைக்கிறான்.

கூட்டத்தில் பட்டத்து இளவரசர் அபிஜித்தையும், அவரின் இளவல் சஞ்சயையும் காண்கிறோம். அபிஜித் பட்டத்து இளவரசர் என்றாலும் மன்னன் ரணஜித்தின் வளர்ப்புப் பிள்ளைதான். முக்தா தாரா நீர் வீழ்ச்சியின் அருகில் கிடந்த குழந்தையை எடுத்து வளர்த்து இளவரசர் பட்டம் சூட்டி மகிழ்ந்தான் மன்னன் ரணஜித். அபிஜித் தன்னை முக்தா தாரா நதியின் பிள்ளையாகவே நினைக்கிறான். நதியின் குறுக்கே கட்டிய அணையை தன் தாயின் மடியில் கட்டப்பட்ட அவலமாகவே கருதுகிறான். அபிஜித் அரண்மனையில் ஒலிக்கின்ற ஜனநாயகத்தின் குரல். அவனுடைய தம்பி சஞ்சய், தன் அண்ணன் மீது அளவற்ற பாசம் கொண்டிருக்கிறான். இருவரும் சிவத்தரா மக்கள் வஞ்சிக்கப்படுவது கண்டு மனம் கலங்குகிறார்கள்.

தனஞ்செயன் என்ற யோகி அவர்களுடன் இணைந்து செயல்படுகிறார். உத்தரக்கூட் மன்னன் ரணஜித்தின் கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராக அவர் சிவத்தரா மக்களைத் திரட்டுகிறார். அவர்களைப் போராட்ட களத்தில் இறக்குகிறார். அவரின் ஆயுதம் அகிம்சை. காந்தியத்தின் மீது தனக்கிருக்கும் நம்பிக்கையைத் தனஞ்செயன் கதாபாத்திரத்தை உருவாக்கி தாகூர் மன நிறைவு கொள்கிறார். கடுமையான வறட்சியையும் மீறி கொடூரமாக வரி வசூல் நடைபெறுகிறது. வரியை மறுக்கச் சொல்லி ஒத்துழையாமை இயக்கத்தை தனஞ்செயன் நடத்துகிறார். அரசின் அடக்குமுறைகளை வன்முறையால் எதிர்கொள்ளாமல் அமைதியின் வழி நின்று அறப்போராட்டம் நடத்தச் சொல்கிறார். நாடகம் முழுவதும் தனஞ்செயன் கவிதை மொழியில் பேசுவது, நாடகத்திற்கு பொலிவைக் கொடுக்கிறது.

Muktadhara – Jana Sanskriti's International Forum Theatre Festival ...

அபிஜித் சிவத்தரா மக்களுக்கு நியாயத்தைப் பெற்றுத் தர விரும்புகிறான். விஷயம் அறிந்த மன்னன் அபிஜித்தைக் கைது செய்து தடுப்புக் காவலில் வைக்கிறான். அண்ணனுக்கு இழைக்கப்பட்ட கொடுமை கண்டு தம்பி சஞ்சய் வெகுண்டெழுகிறான்  தன்னையும் சிறையில் அடைக்கச் சொல்லி அமைச்சரைக் கேட்கிறான்.  சிறையிலிருந்து தப்பித்து வெளிவந்து அணையை உடைத்து தன் அன்னை முக்தா தாராவை விடுவிக்க அபிஜித் முடிவெடுக்கிறான். சிவத்தரா மக்களும், தம்பி சஞ்சயும் அவன் பின் அணிவகுக்கத் தயாராகிறார்கள். ஆனால் குடிமக்கள் உயிரைப் பலி கொடுக்க அபிஜித் விரும்பவில்லை. தம்பி சஞ்சையையும் ஒதுங்கி இருக்கச் சொல்லிவிட்டு இருளில் அணையை நோக்கி நகருகிறான். அணையில் இரு பலவீனமான புள்ளிகள் இருப்பதை எல்லோரும் அறிவார்கள். அணையைக் கட்டிய பொறியாளன் விபூதியும் அறிவான். அணையை உடைக்க முயல்பவன் தான் வெள்ளத்திற்கு முதற்பலி ஆவான். மரணம் நிச்சயம். மரணமே  அணையின் காவலாளி என்று விபூதி பெருமையுடன் சொல்வதுண்டு.

அபிஜித் அணையின் பலவீனமான புள்ளியில் ஓங்கி அடிக்கிறான். அணை உடைந்து வெள்ளம் பெருக்கெடுத்து வருகிறது. அபிஜித் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுகிறான். இல்லை; அபிஜித் தன் அன்னை முக்தா தாராவின் மடியில் அமர்ந்து மரணத்தைத் தழுவுகிறான். அணை உடைந்தது  கண்டு விபூதியும், மன்னனும் அதிர்ச்சியில் ஆழ்கிறார்கள். “அணை கட்டப்பட்டதைக் கொண்டாடக் கூடினீர்கள்! இப்போது அணை உடைக்கப்படுவதைக் கொண்டாடுங்கள்!. அபிஜித்தின் மரணத்தில் பிறக்கிறது முக்தா தாராவின் விடுதலை!” என்று தனஞ்செயன் அவர்களை அமைதிப்படுத்துகிறார். துயருக்குப் பின்னான அமைதியுடன் நாடகம் முடிகிறது. ஆம்; துன்பியல் நாடகம் அதன் இயல்பான முடிவான அமைதியை நோக்கி நகர்ந்து வெற்றி பெறுகிறது. வாழ்வின் சக்கரம் தன் சுழற்சியை முடித்து   தொடங்கிய இடத்தில் நிற்கிறது.

தாகூர் மேற்கத்திய நாடக உத்திகளை நன்கு கற்றறிந்தவர். நாடகம் ஒரு தொடக்கம், ஒரு நடு, ஒரு முடிவு என்று இயல்பாக நகருகிறது. செவ்வியியல் நாடகக் கோட்பாடுகளையும் தாகூர் துல்லியமாகக் கடைப்பிடிக்கிறார். நாடகத்தில் காலம், இடம், செயல்கள் மூன்றும் ஒருங்கிணைந்து காணப்படுகின்றன. கிரேக்க நாடகங்களில் ‘Chorus’ என்றழைக்கப்படும் கதாபாத்திரங்கள் அல்லாத ஒரு பாடல் குழுவினர் நாடக மேடையில் நின்று நாடகத்தின் போக்கையும், கதாபாத்திரங்கள் மீதான கருத்தையும் பாடல்கள் மூலம் விளக்கிச் சொல்வார்கள். தனஞ்செயன் கதாபாத்திரம் நாடகத்தின் நிகழ்வுகளில் பங்கேற்காமல் ஒதுங்கி நின்று, தன்னுடைய பாடல்கள் மூலம் ’கோரஸ்’ போல் பயன்படுவது நாடகத்திற்கு அழகு சேர்க்கிறது. நாடகத்தின் துவக்கத்திலேயே நாயகன் அபிஜித்துக்கு வரவிருக்கும் துயரத்தைப் பார்வையாளர்களால் புரிந்து கொள்ள முடிகிறது. அபிஜித்தின் மரணமும் குறிப்பாக உணர்த்தப்படுகிறது. முக்தா தாரா நதியின் மீது கட்டப்பட்டுள்ள சங்கிலி உடைக்கப்பட்டு விடுதலை பெறும் என்ற எதிர்பார்ப்பு நிறைவேறிய மகிழ்ச்சியில் மன அமைதியுடன் பார்வையாளர்கள் அரங்கத்திலிருந்து வெளியேற நாடகம் முற்றுப் பெறுகிறது.

    –பெ.விஜயகுமார்.

                  …………………………………………………………………………………………

Leave a Response

Top Reviews

Video Widget

gallery