archiveVikatan

Article

ஊடகங்கள் சொல்லாத ஒரு செய்தி – அ.குமரேசன்

 

அரசியல், ஆன்மீகம், சமூகம், பொருளாதாரம், தொழில், வணிகம், வேளாண்மை, கல்வி, விளையாட்டு, திரையுலகம் என எங்கே என்ன நடக்கிறது என்று புலனாய்வு செய்து மக்களின் கவனத்திற்குக் கொண்டுவருபவை ஊடகங்கள். அந்த ஊடகங்களால் மக்களின் கவனத்திற்குக் கொண்டுவரப்படாத ஒன்று இருக்கிறது – ஊடகத்துறையில் என்ன நடக்கிறது என்பதே அது.

அச்சுப் பத்திரிகை, தொலைக்காட்சி, பண்பலை வானொலி, இணையத்தளம் என ஊடகத்துறையின் எல்லாப் பிரிவுகளிலும் ஊதியக் குறைப்பும் ஊழியர் குறைப்பும் நடந்து கொண்டிருக்கின்றன. தாக்குப் பிடிக்கத் திணறுகிற சிறு நிறுவனங்களில் மட்டுமல்லாமல் தலைமுறைகளுக்குத் தாங்கி நிற்கக்கூடிய பெரிய நிறுவனங்களிலும் ஊழியர்களது ஊதியம் 40 சதவீதம் வரையில் வெட்டப்பட்டிருக்கிறது. அந்த ஊழியர்களின் ஒரே ஆறுதல் தங்களுடைய வேலையை வெட்டிவிடவில்லை என்பதுதான். வேறு நிறுவனங்களில் முழு ஊதியத்தைக் கையில் கொடுத்து ஊழியர்கள் வெளியேற்றப்படுகிறார்கள்.

இது பற்றிய தகவல்கள் முகநூல், ட்விட்டர், வாட்ஸ்அப் உள்ளிட்ட பொதுவான சமூக ஊடகங்களில், இவர்களது பிரச்சினைகளில் அக்கறை உள்ளவர்களால் பகிரப்படுகின்றன. சமூக அக்கறையோடு இயங்கும் சில இணையத்தள ஏடுகளில் பதிவாகியுள்ளன. ஆனால் நம் வீட்டு வாசலில் கொண்டுவந்து போடப்படுகிற பெரிய நிறுவனங்களின் பத்திரிகைகளில் அந்தச் செய்தியைப் பார்க்க முடியாது. நம் வீட்டுக்கு உள்ளேயே வருகிற பெரிய தொலைக்காட்சி நிறுவனங்களின் செய்தி ஒளிபரப்புகளில், ஒற்றை வரியில் ஓடுகிற செய்தியாகக் கூட அதைத் தெரிந்துகொள்ள முடியாது.

பண்பா, பதுங்கலா?

சக ஊடக நிறுவனத்தின் பிரச்சினையில் நாம் எப்படித் தலையிடுவது என்ற தொழில்முறைப் பண்பின் காரணமாகவா அந்தச் செய்திகள் மறைக்கப்படுகின்றன? இல்லை. உங்கள் நிறுவனத்தில் என்ன செய்கிறீர்கள் என்ற கேள்வியிலிருந்து பதுங்கிக்கொள்வதற்காகவே. ஒரு நிறுவனத்தின் நிர்வாகப் பிரிவில் உள்ள நண்பர் ஒருவர் தனிப்பட்ட முறையில், “சார், உங்களுக்குத் தெரியாதது இல்லை. இந்தச் செய்தியை நாங்கள் சொன்னோம்னா, எங்க கம்பெனியிலே இதே மாதிரி நடக்கிறதை மத்தவங்களும் செய்தியாக்குவாங்களே,” என்று கூறினார்.

176 ஊழியர்களை வேலை நீக்கம் செய்யும் ...

நூற்றாண்டை நெருங்கிக்கொண்டிருக்கிற ‘விகடன்’ குழுமத்தில் செய்தியாளர்கள் உள்ளிட்ட ஆசிரியர்குழு சார்ந்தவர்கள் முதல் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் வரையில் 176 ஊழியர்கள் வெளியேற்றப்படுகிறார்கள், நேரடியாகப் பணி நீக்க அறிவிப்பைத் தராமல் ஊழியர்கள் தாங்களாக விலகல் கடிதம் கொடுக்க வற்புறுத்தப்படுகிறார்கள், கடிதம் கொடுக்கத் தயங்குகிறவர்களிடம் அவர்களாகக் கொடுத்தால் நிலைமை சரியான பிறகு மறுபடியும் வேலைக்கு எடுக்க வாய்ப்பிருக்கிறது என்பதாகத் தூண்டுகிற தூண்டில் போடப்படுகிறது என்றெல்லாம் தகவல்கள் வந்துள்ளன. அவர்களுக்கான தொழிற்சங்கம் எதுவும் இல்லை என்ற நிலையில் வெளியே கூட்டாக இயங்கிக்கொண்டிருக்கிறவர்கள் நிர்வாத்தைச் சந்தித்துப் பேசச் சென்றபோது, வளாக நுழைவாயிலிலேயே காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டார்கள். காவல்துறையினர் தயாராக இருந்திருக்கிறார்கள் என்றால் நிர்வாகம் இது பிரச்சினையாகும் என்று எதிர்பார்த்து முன்னெச்சரிக்கையோடு செயல்பட்டிருக்கிறது என்றுதானே பொருள்?

இதையெல்லாம் ஒரு செய்தியாகவாவது வெளியிடக்கூடாதா, குறைந்தது ஊடகவியலாளர்களைக் காவல்துறையினர் தடுத்துநிறுத்தினார்கள் என்ற நிகழ்வை மட்டுமாவது செய்தியாகச் சொல்லியிருக்கலாமே என்று கேட்டபோதுதான் அந்த நண்பர் மேற்கண்டவாறு கூறினார்.

இது திடீர் முடிவல்ல. தகுதியும் திறனும் இல்லாதவர்கள் வெளியேற்றப்படுகிறார்களை வெளியேற்றுவது தவறா என்றும் கேட்பதற்கில்லை. நிர்வாகம் இதை முன்கூட்டியே திட்டமிட்டிருந்தது என்பதற்கு ஒரு ஆதாரம்: மே மாதத் தொடக்கத்தில் இண்டியன் ஜர்னலிசம் ரிவ்யூ என்ற ஆங்கில இணையத்தளத்திற்கு விகடன் குழுமத் தலைவர் பா.சீனிவாசன் அளித்த பேட்டி. அதில், ஊடகத்துறை சந்திக்கிற நெருக்கடிகள் பற்றி சரியாகவே கூறுகிற அவர், எவ்வளவு சிறப்பானவர்களாக இருந்தாலும் வெளியேற்றுவது என்ற முடிவை இரண்டு முறை யோசித்துக்கொண்டிருக்க முடியாது என்று சொல்கிறார். எவ்வளவு திறமைசாலிகளாக, நிறுவன வளர்ச்சிக்குப் பங்களித்தவர்களாக இருந்தாலும் வெளியேற்றுவதைத் தவிர்க்கக் கூடாது என்பதுதானே இதன் பொருள்?

திருப்பியளிக்கப்பட்ட விருதுகள்

எஞ்சியிருக்கிற மற்ற ஊழியர்களும் அஞ்சியிருக்கிறார்கள் என்ற நிலையில்தான், சில கலைஞர்கள், எழுத்தாளர்கள், சமூகச் செயல்பாட்டாளர்கள் தங்களுக்கு முன்பு விகடன் குழுமம் வழங்கிய விருதுகளைத் திருப்பியளிப்பதாக அறிவித்தார்கள். வேதனையான வேடிக்கை என்னவென்றால் அதைக் கூட மற்ற ஊடகங்கள் செய்தியாக வெளியிடவில்லை.

மற்ற நிறுவனங்களிலும் இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்கிறபோது விகடன் மட்டும் ஏன் இந்த அளவுக்கு விமர்சிக்கப்படுகிறது? காரணம், விகடன் வாசகர்கள் தலைமுறை தலைமுறையாக அதைத் தங்களின் குடும்பத்தோடு ஐக்கியப்படுத்தி வந்திருப்பதுதான். சோப், பவுடர், காபித்தூள், தலைமுடி எண்ணெய் போன்ற நுகர்பொருள்களில் குறிப்பிட்ட நிறுவனங்களின் தயாரிப்புகள் நெடுங்காலமாக வாங்கப்படுகின்றன என்றாலும், விகடனை அத்தகைய ஒரு வணிகப் பொருளாகக் கருதியதில்லை. விருது பெற்றவர்கள் அத்தகைய ஒரு நெருக்கமான உணர்வோடுதான் பெருமிதம் கொண்டிருந்தார்கள். இப்போதும் அதே உணர்விலிருந்துதான் வேதனையோடு விருதுகளைத் திருப்பியளிக்கிறார்கள். ஆனால் இன்றைய விகடன் குழுமத்தினர் வெறும் வணிகமாகவே கருதுகிறார்கள்.

பிரதமர் விமானத்தில் கோளாறு என ...

நியூஸ் 18, நியூஸ் 7 ஆகிய தொலைக்காட்சிகளில் 15 முதல் 20 சதவீதம் வரையில் ஊதிய வெட்டு. அதையாவது தற்காலிக ஏற்பாடு என்று சொல்லிக்கொள்ளலாம். ஆனால் ஊழியர் பணி நீக்கத்தை அப்படிச் சொல்ல முடியுமா? ஊழியர்களின் எதிர்காலத்தை நிரந்தரமாகக் கேள்விக்குறிக்குள் நிறுத்துவதல்லவா அது? வேந்தர் தொலைக்காட்சியில் கிட்டத்தட்ட 50 ஊழியர்கள் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். பேசச் சென்ற ஊடகவியலாளர்களிடம் நட்டத்தில் இயங்குவதாகச் சொன்னாராம் நிறுவனத் தலைவர் பாரி வேந்தர். வளாகத்திற்கு வெளியே நிறுத்தாமல் பேசவாவது செய்தார்களே!

அவரும் அரசியல் களத்தில் செயல்படுகிறவர்தான். வணிகம் சார்ந்த லாப-நட்டக் கணக்குகளைத் தாண்டி அரசியல் சிந்தனைகளை மக்களிடம் கொண்டுசெல்வதற்கென்றே தொடங்கப்பட்ட கலைஞர் தொலைக்காட்சியில் ஆட்குறைப்பு செய்யாவிட்டாலும், ஊதியக்குறைப்பு நடந்திருக்கிறது. விகடன் குழுமத்தைப் போலவே, செய்தித்தாள் வாசிக்கிற குடும்பங்களோடு உணர்வுப்பூர்வமாக இணைந்த ‘இந்து’ குழுமத்திலும் இப்படியே நடந்திருக்கிறது.

நாட்டில், உலகத்தில்

தமிழகத்தில் மட்டுமல்ல, நாடு முழுவதுமே பல பெரிய, நீண்ட வரலாறு உள்ள ஊடக நிறுவனங்களில் இத்தகைய காட்சிகள்தான். முன்பு வேலைக்குத் தேர்ந்தெடுத்த ஊழியர்களை இப்போது வேலை நீக்கத்துக்குத் தேர்ந்தெடுத்து வெளியேற்றிக்கொண்டிருக்கிறார்கள். என்டீடிவி நிறுவனம் 20 சதவீத ஊதியக் குறைப்புச் செய்திருக்கிறதாம். டைம்ஸ் குழுமம், வீடியோ அழைப்பின் மூலம் இனி நீங்கள் எங்கள் ஊழியரல்ல என்று சொல்லியதாம். அப்படியெல்லாம் சிறுமைப்படுத்தாமல், அலுவலகக் கூட்ட அரங்கிற்கு ஒவ்வொருவராக வரவழைத்து, நிர்வாக முடிவைச் சொல்லி, விலகல் கடிதம் கொடுக்கச் சொல்கிறதாம் ஹிந்துஸ்தான் டைம்ஸ், மின்ட் பத்திரிகைகளை வெளியிடும் எச்.டி. குழுமம். ஒரு ஊழியர் “நான் என் சொந்த விருப்பத்தின் பேரில் விலகவில்லை, கட்டாயப்படுத்தப்பட்டதால் இந்தக் கடிதத்தைக் கொடுக்கிறேன்” என்றே எழுதியளித்தாராம்.

சமூக ஊடகங்களிலும், சில பொதுநோக்கு இணையத்தள ஏடுகளிலும் வெளியான தகவல்களே இவ்வளவு என்றால், இன்னும் வெளிவராதவை நிறைய இருக்கும் என ஊகிப்பது கடினமல்ல. பலர் “நிலைமை சரியான பிறகு” மறுபடி வேலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்போடு இருக்கலாம். பலர், இதை வெளியே சொன்னால் வேறு நிறுவனங்களில் சேர்கிற வாய்ப்புகள் மறுக்கப்படும் என்ற தயக்கத்தோடும் இருக்கலாம். எல்லாத்துறைகளிலும் தொழிலாளர்கள் வேலையற்றவர்களாக்கப்பட்டிருப்பதும், மௌனமாக்கப்பட்டிருப்பதும் இப்படித்தானே?

பார்வை: ஊடகம் என்ன செய்கிறது?

உலகம் முழுவதுமே முதலாளித்துவப் பொருளாதாரம் பெரும் சரிவைச் சந்தித்துக்கொண்டிருக்கிற நிலையில், களப்பலியாக்கப்படுவது எப்போதுமே தொழிலாளர்கள்தான். நெருக்கடிகளைக் கையாளும் திறமையற்ற முதலாளித்துவ அமைப்பில் தொழில்-வணிகத்துக்காகத்தான் தொழிலாளர்கள் வேலைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறார்களேயன்றி, அவர்களுக்கு வேலை தர வேண்டும் என்பதற்காக தொழில்-வணிகம் தொடங்கப்படுவதில்லை. இன்றைய கொரோனாக்கிருமியின் கோரத்தாண்டவம் வேலை நீக்கத்திற்கும், ஊதியக் குறைப்புக்கும் கச்சிதமான வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொள்ளப்படுகிறது. அரசுகளும் அதற்கேற்பத் தொழிலாளர் சட்டங்களைத் தயங்காமல் வளைத்துக்கொடுக்கின்றன.

ஊடகத்துறையிலும் இது நகலெடுக்கப்படுகிறது. புதிய நிலைமைகளை எதிர்கொள்ள உழைப்பாளி வர்க்கம் தன்னைத் தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டியிருக்கிறது. ஆனால், தொழிலாளர்கள் யோசிக்கவோ, திட்டமிடவோ அவகாசம் அளிக்காமல், அதுவரையில் அவர்களது வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வழிசெய்யாமல் சொற்பத்தொகை கொடுத்துத் தெருவில் நிறுத்துவது கொரோனாவைவிடக் கொடூரமானதல்லவா? கொரோனா வருகையையும், ஊரடங்குக் கட்டுப்பாடுகளையும், தொழிலாளர் சட்டங்கள் நீர்த்துப்போகச் செய்யப்படுவதையும் வாய்ப்பாகப் பயன்படுத்துவது முதுகில் குத்துகிற வேலையல்லவா?

தற்குழி!

இந்த நடவடிக்கைகளால் சமாளித்து நிற்கலாம் என ஊடக நிறுனங்களின் முதலாளிகள் கருதக்கூடும். ஆனால் அது தற்காலிகளமான சமாளிப்பாகவே இருக்கும். மற்ற துறைகளிலும் இவ்வாறு நடக்கிறபோது வருவாயை இழக்கிற ஊழியர்களில் கணிசமானவர்கள் செலவுகளைச் சுருக்குகிற முயற்சிகளில் பத்திரிகைச் சந்தாக்களைப் புதுப்பிப்பதை நிறுத்திவைப்பார்கள். சந்தை சுருங்கும்போது நிர்வாகங்கள் என்ன செய்ய முடியும்? ஆட்களைக் குறைத்துக்கொண்டே போவார்களா? சிறு குழுவினர் மட்டும் அல்லது அவரவர் குடும்பத்தினர் மட்டும் ஆளுக்கொரு வேலையைப் பிரித்துக்கொண்டு செய்யலாம் என்று முடிவெடுப்பார்களா?

இன்னொரு வகையிலும் தங்களுக்குத் தாங்களே குழிபறித்துக்கொள்கிறார்கள். சிறப்பாகப் பங்கேற்கிற, திறமைசாலிகளாகச் செயல்படுகிற, துணிவோடு எங்கும் சென்று உண்மைகளை விசாரிக்கிற, தங்களது மொழித்திறனோடு மனம் தொடும் வகையில் வெளிப்படுத்துகிற, ஒரு காதலோடு எந்திரங்களை இயக்குகிற, கரத்தாலும் கருத்தாலும் உழைக்கிறவர்கள் சுருங்குகிறபோது என்ன நடக்கும்? செய்திகளின், எழுத்துகளின், சித்தரிப்புகளின் தரம் குறையும். இறுதியில் அதுவும் வாசகத் தளமும் பார்வையாளர் ஆதரவும் அரிக்கப்படுவதில் போய் முடியும். ஊடகக் குழுமங்கள் இந்தக் கோணத்திலும் இது பற்றிச் சிந்தித்தாக வேண்டிய தேவை இருக்கிறது.

Unions | Maritime Industry Knowlage Center

தொடக்கத்தில் குறிப்பிட்டது போல, ஓரிரு நிறுவனங்களைத் தவிர, பெரும்பாலான ஊடக வளாகங்களில் தொழிற்சங்கங்கள் கிடையாது. இருக்கிற அமைப்புகள் வெளியேயிருந்து செயல்படுபவைதான். அவர்களுக்கிடையே எத்தனையோ முரண்பாடுகள். அவ்வப்போது சில கூட்டு முயற்சிகள் மேற்கொள்ளப்படும், பிறகு காணாமல் போய்விடும். ஆயினும், இத்தகைய முரண்பாடுகளுக்கிடையே உழைப்பாளிகள் மீதான அக்கறையோடு ஊடகவியலாளர்கள் சிலர் பிரச்சினையில் தலையிட்டுவருகிறார்கள்.

வலுவாகத் தலையிட வேண்டியவர்கள் விரிவான தொழிற்சங்க இயக்கங்களைச் சேர்ந்தவர்கள்தான். இவர்களுக்காகக் குரல்கொடுப்பதில் தொடங்கி, இவர்களுக்காக வளாகச் சங்கம் அமைத்துத் துணைநிற்பது வரையில் அது தொடர வேண்டும்.

தொழில் அறம்

Communication and Public Relation - Excel Media

இதையெல்லாம் பேசுகிறபோது, ஊடகத்துறை எதிர்கொள்கிற சிக்கல்களைக் கொஞ்சமும் குறைத்து மதிப்பிடுவதற்கில்லை. முக்கியமாக, அவர்களது வருவாயில் 85 சதவீதம் வரையில் பங்களித்துக்கொண்டிருந்த விளம்பரங்கள் வெகுவாக வற்றிவிட்டன. கூகுள், முகநூல் போன்ற உலகளாவிய நிறுவனங்களுக்குப் பெரும்பாலான முக்கிய விளம்பரங்கள் மடைமாறிவிட்டன. அண்மையில் அச்சு ஊடகங்களின் உரிமையாளர்கள் முதலமைச்சரையும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் சந்தித்து, மத்திய அரசிடமிருந்து தங்களுக்கு வரவேண்டிய விளம்பர நிலுவை பல கோடிக்கணக்கில் இருப்பதை எடுத்துச் சொல்லி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலம் இதைப் பிரதமர் கவனத்திற்குக் கொண்டுசெல்லக் கேட்டுக்கொண்டார்கள். தொழில் சார்ந்த வேறு பல நெருக்கடிகள் பற்றியும் கூறியிருக்கிறார்கள். அந்தக் கோரிக்கைகள் முற்றிலும் நியாயமானவை, ஆதரிக்கப்பட வேண்டியவை.

இப்படிப்பட்ட நெருக்கடிகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்பதிலும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால், எளிதான உடனடி வழியாக ஊழியர்களை நட்டாற்றில் விடுவதைத்தான் கேள்விக்கு உள்ளாக்க வேண்டியிருக்கிறது. அதுவும் அவர்களுக்கு நெஞ்சுரம் தரவேண்டிய இந்தச் சோதனையான காலக்கட்டத்தில் கைவிடுவதைத்தான் இது தொழில் அறமாகுமா என்று கேட்க வேண்டியிருக்கிறது.

ஊடக நிறுவனங்களின் இன்றைய இந்த அணுகுமுறைகளுக்கும், வெறும் வணிகக் கண்ணோட்டம் ஆக்கிரமிப்பதற்கும் பின்னால் ஒரு முக்கியமான அரசியல் இருக்கிறது. ஒவ்வொருவரும் தெரிந்துகொண்டாக வேண்டிய நுட்பமான ஊடக அரசியல்! அது பற்றி அடுத்தொரு வாய்ப்பில் பேசுவோம்.

File:A.Kumaresan.jpg - Wikimedia Commons

அ. குமரேசன்

என் வலைப்பூ: அசாக்
http://asakmanju.blogspot.com

வரைவு தேசியக் கல்விக் கொள்கை

“தேசியக் கல்விக் கொள்கை வரைவு தமிழில் சுருக்கம் மட்டும் போதுமா?” எழுத்தாளர் விழியன்

தேசியக் கல்விக் கொள்கை வரைவை தமிழில் சுருக்கமாக அளித்திருப்பது பற்றி தன் கருத்துகளைப் பகிர்கிறார் எழுத்தாளர் விழியன். தேசியக் கல்விக்...