archiveTN government

Article

இந்த முழு நாடும் போராடுகிறது-யாரோடு? – மதுக்கூர் இராமலிங்கம்

 

கொரோனா நோய்த்தொற்று உலகில் 210 நாடுகளை பாடாய்ப்படுத்திக் கொண்டிருக்கிறது. ஒருபுறத்தில் மருத்துவ நிபுணர்களும், அறிவியல் அறிஞர்களும் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கான மருந்துகளை கண்டுபிடிப்பதற்கு அரும்பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஏதாவது மருந்து கண்டுபிடிக்கப்பட்டால் அதை வைத்து தங்களது கல்லாப் பெட்டியை நிரப்பிக்கொள்ளலாம் என கழுகுகள் போல கார்ப்பரேட் மருந்து நிறுவனங்கள் காத்துக் கொண்டிருக்கின்றன. உலகமயம் என்ற பெயரில் சுகாதாரத்துறையை முற்றிலும் தனியாரிடம் ஒப்படைத்ததன் விளைவை பெரும்பாலான முதலாளித்துவ நாடுகள் அனுபவித்துக் கொண்டிருக்கின்றன.

பதஞ்சலியின் எழுச்சியில் இருந்து ...

இன்னொருபுறத்தில் சுதேசி வேடமிட்டு உலா வந்து கொண்டிருக்கிற பதஞ்சலி முதலாளி ‘யோகா புகழ்’ பாபா ராம்தேவின் நிறுவனம் கொரோனா தொற்றை 7 நாளில் குணப்படுத்தக்கூடிய ஆயுர்வேத மருந்தை கண்டுபிடித்துவிட்டதாகக் கூறி ‘கொரோனில்’ என்று பெயரும் வைத்து விளம்பரப்படுத்தியுள்ளது. மத்திய சுகாதார அமைச்சகம் இந்த மருந்திற்கும் விளம்பரத்திற்கும் தடைவிதித்துள்ளது.

இந்நேரம் திருத்தணிகாச்சலம் போன்ற ‘ஏப்பை, சாப்பைகளாக’ இருந்தால் குண்டர் சட்டம் பாய்ந்து பிடுங்கியிருக்கும். காவி உடை ராம்தேவ் யோகா மூலம் உடலை ஒல்லியாக வைத்திருப்பதால் குண்டர் சட்டம் பாயவில்லை போலிருக்கிறது.

கொரோனா நோய்த்தொற்று இந்தியாவில் பரவத்துவங்கிய நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை அழைத்து விருந்து வைத்து மகிழ்ந்த மோடி, பிறகு கைத்தட்டுங்கள், விளக்கு ஏந்துங்கள் என்று உருக்கமாக வேண்டுகோள் விடுத்துக் கொண்டிருந்தார். தற்போதெல்லாம் அவர் எதுவும் கூறுவது இல்லை. நடப்பது நடக்கட்டும் என்று புலம்பெயர் தொழிலாளர்களை நடக்கவிட்டுவிட்டார்.

ஒருபக்கம் மக்களை வீட்டை அடையுங்கள், வியாபாரிகள் கடையை அடையுங்கள் என்று கூறிவிட்டு மத்திய பாஜக கூட்டணி அரசு அனைத்தையும் தனியாருக்கும், கார்ப்பரேட் முதலாளிகளுக்கும் திறந்துவிட்டுக் கொண்டிருக்கிறது. கொரோனா வைரஸ் உருவாகி பரவுவதற்கும், பாலைவன வெட்டுக்கிளிகள் படையெடுத்து வருவதற்கும் புவி வெப்பமயமாதலும் ஒரு காரணம் என்று சுற்றுச்சூழல் நிபுணர்கள் எச்சரிக்கும் நிலையில், பிரதமர் மோடியோ 20க்கும் மேற்பட்ட பசுமைக்காடுகளை தனியாரிடம் கொடுத்து பாலைவனமாக்கிவிட்டார். வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் ஒரு பகுதியும் அதானியின் துறைமுகத்திற்கும் சூரிய ஒளி மின் தயாரிப்புக்கும் தரப்பட்டுள்ளது. வேடந்தாங்கலை நம்பி வரும் பறவைகள் இனி எங்கே செல்லுமோ தெரியவில்லை.

Modi and Adani: the old friends laying waste to India's environment

கொரோனா நிவாரணப் பணிகளுக்காக 20 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டிருப்பதாக பிரதமர் மோடி அறிவித்தார். இதில் எந்தெந்த துறைகளுக்கு எவ்வளவு என்று நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன், இந்தி தெரிந்த ஒரு துணை அமைச்சரின் துணையோடு ஐந்து நாள் உபன்யாசம் நிகழ்த்தினார். கூட்டிக்கழித்துப்பார்த்தால் இதில் மக்களுக்கு ஒன்றும் இல்லை. சிறு குறு தொழில்களுக்கும் பெருமளவு பயனில்லை. விவசாயிகளுக்கோ தொழிலாளர்களுக்கோ குறிப்பாக முறைசாரா தொழிலாளர்களுக்கோ பெரிய பலனில்லை. ஆனால்  கார்ப்பரேட் முதலாளிகள் காட்டில் அடைமழை பொழிகிறது. இஸ்ரோ உட்பட பல்வேறு பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்கு தரப்படும் என்பதுதான் ஐந்து நாள் பொழிப்புரையின் சாராம்சம்.

தமிழகத்தில் நடக்கிற கூத்துக்களுக்கு அளவு இல்லை. கொரோனாவை சமாளிப்பது எப்படி என்று எதிர்க்கட்சிகளின் ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை கேளுங்கள் என்றால், இவர்கள் என்ன டாக்டர்களா என்று எதிர்க்கேள்வி கேட்டார் எடப்பாடியார். ஆனால் இவர் மூன்று நாளில் கொரோனாவை முடித்துக்காட்டுகிறேன் என்று பெரிய டாக்டர் போல சவால் விட்டார். இதைக் கேட்ட கொரோனாவே கூட்டமாகக் கூடி கும்மிடியத்துச் சிரித்தது. கடைசியில் கொரோனா எப்போது முடிவுக்கு வரும் என்பது அந்தக் கடவுளுக்குத்தான் தெரியும் என்று மேலே கையை காட்டிவிட்டார் முதல்வர். எங்கள் வழிபாட்டுத் தலங்களே மூடிக் கிடக்கும் போது எங்களுக்கு எதுவும் தெரியாது என்று கடவுள்கள் கையைக் கழுவிவிட்டன.

தமிழகத்தில் கொரோனா தொற்றை தடுப்பதைவிட மரண எண்ணிக்கையை தடுப்பதில்தான் மாநில அரசு அதிக கவனம் செலுத்துகிறது. திமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் கொரோனா நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு அதன் காரணமாகவே தொற்று ஏற்பட்டு காலமான நிலையில், அதையும்கூட இரக்கமின்றி கிண்டலடித்தார்கள் அதிமுகவினர். அடுத்தடுத்து அதிமுக எம்எல்ஏக்களையும் கொரோனா கொத்தத்துவங்கிய நிலையில் வாயை மூடிக்கொண்டனர். உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு தொற்று ஏற்பட்டதைக் கூறி ஏற்க மறுத்தார் முதல்வர். அமைச்சருக்கு கொரோனாவா என்று கேட்டதற்கு இல்லை என்றார் முதல்வர். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறித்து கேட்டதற்கு கொரோனா இல்லை என்று அவரே கூறிவிட்டார். இதற்கு மேல் ஒன்றும் கேட்காதீர்கள் என்றார் முதல்வர்.

Why Beela Rajesh was shunted out and who mismanaged a pandemic in ...

தலைநகர் சென்னையை கொடூரமாக வேட்டையாடுகிறது கொரோனா. ஆனால் மாநில சுகாதாரத்துறைக்கும் மாநகராட்சி நிர்வாகத்திற்கும் போதிய ஒருங்கிணைப்பு இல்லை என்று குற்றம் சாட்டப்படுகிறது. ஏற்கெனவே மாநகராட்சி ஆணையர்கள் மாவட்ட ஆட்சியர்கள் கொரோனா பணியில் ஈடுபட்டிருக்கும் போது கூடுதலாக மாவட்டத்திற்கு ஒரு கண்காணிப்பு அதிகாரி நியமிக்கப்பட்டார். ஐ.ஏ.எஸ் அதிகாரிகளிடையே ஈகோ யுத்தம் நடப்பதாகவும் இதனால் பணிகள் பாதிக்கப்படுவதாகவும் ஊடகங்கள் கூறுகின்றன. இதில் வேடிக்கை என்னவென்றால் மாநில சுகாதாரத்துறை செயலாளராக இருந்து தினந்தோறும் சிங்கிள்சோர்ஸ் என பேட்டி கொடுத்துக் கொண்டிருந்த பீலா ராஜேஷ் கொரோனா தொற்று குறைவாக உள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தின் கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டதுதான்.

ஒருபுறத்தில் கொரோனா குறித்து அச்சம், மறுபுறத்தில் ஊரடங்கு தொழில் முடக்கம் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி என இரட்டைத் தாக்குதலுக்கு மக்கள் ஆளாகியுள்ளனர். தமிழகம் உட்பட மாநிலங்களுக்குத் தரவேண்டிய நிதியை தராமல் வஞ்சிக்கிறது மத்திய அரசு. இதை தட்டிக்கேட்க வழியில்லாமல், மின் கட்டணம் உயரும் பெட்ரோல் டீசல் விலையோடு சேர்த்து தனது பங்கிற்கு வாட் வரி என அடுத்தடுத்து சுமைகளை இறக்குகிறது மாநில அரசு. துவக்கத்தில் குடும்பத்திற்கு 1000 ரூபாய் கொடுத்ததோடு சரி. மீண்டும் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட சென்னை மற்றும் அண்டை மாவட்டங்களுக்கு மட்டுமே அடுத்து ஒரு 1000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. மதுரை போன்ற மாவட்டங்களுக்கு அதுவும் இல்லை.

ஜெயலலிதா 6அடி பாய்ந்தால் முதல்வர் 16 ...

குறிப்பாக நான்கு மாதங்களுக்குச் சேர்த்து மின்கட்டணம் வசூலிக்கப்பட்டதால் பல குடும்பங்கள் கதிகலங்கி நிற்கிறது. கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபடும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள், தூய்மைப் பணியாளர்கள் பலி எண்ணிக்கை அதிகரித்ததும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. இதனிடையே ஆகஸ்டில் கொரோனா உச்சம் தொடும் அக்டோபரில் அடுத்த உச்சத்தைத் தொடும் என்றெல்லாம் வெளிவரும் தகவல்கள் மக்களை மேலும் மேலும் அச்சுறுத்துகின்றன.
கொரோனா  என்பது ஒரு சுகாதார நெருக்கடி.

இதை சமாளிக்க வேண்டிய பெரும் பொறுப்பு மத்திய மாநில அரசுகளுக்கு உண்டு. தவறுகளை சுட்டிக்காட்ட வேண்டிய பொறுப்பு எதிர்க்கட்சிகளுக்கு உண்டு. ஆனால் விமர்சனத்தையே எதிர்கொள்ள மத்திய மாநில ஆளும் கட்சிகள் தயாராக இல்லை. ஏதோ அதிமுக ஆட்சிதான் கொரோனாவை கொண்டுவந்தது போல எதிர்க்கட்சிகள் கூறக்கூடாது என்கிறார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. முதல்வர் எடப்பாடியாருக்கு கொரோனா வராது வந்தாலும் உடனே சென்றுவிடும் என ஆரூடம் சொல்கிறார் தெர்மக்கோல் புகழ் செல்லூர் ராஜூ. கொரோனாவும் வாழ்க்கைப் பாடுகளும் விரட்டும் போது அமைச்சர்களின் காமெடியை ரசிக்கும் நிலையில் மக்கள் இல்லை.

மொத்தத்தில் கொரோனா எனும் கொடும் காலத்தை கடப்பதற்கு மக்களுக்கு மத்திய மாநில அரசுகள் படகாக இருக்க வேண்டுமேயன்றி சமூகத்தின் நிசப்தத்தை தங்களது அறுவடைக்கான மௌன சம்மதமாக எடுத்துக்கொள்ளக் கூடாது.

Article

கொரானா: இயலாமையை மறைப்பதைத் தவிர அரசு வேறென்ன செய்கிறது..? – க.கனகராஜ் சிபிஎம், மாநில செயற்குழு உறுப்பினர்

  தமிழக அரசு ஜூன் 23ஆம் தேதி நள்ளிரவு முதல் 30ஆம் தேதி நள்ளிரவு வரை மதுரையில் முழு ஊரடங்கு...