archivetamilnadu

Article

இரண்டாவது தலைநகரப் பேச்சு எங்கிருந்து வருகிறது? – அ.குமரேசன்

தமிழகத்திற்கு இரண்டாவது தலைநகரம் ஏற்படுத்தப்படுவது பற்றிய பேச்சு இப்போது மட்டுமல்ல, அவ்வப்போது ஒரு அலை போல வந்து கொண்டுதான்  இருந்திருக்கிறது . ஆனால் ஒரு அலை முடிந்து ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு இன்னொரு  அலை வருவதுதான் நடந்திருக்கிறதேயல்லாமல் அந்த அலையே முற்றிலுமாக கரையைக் கவ்வியதில்லை.

இரண்டாவது தலைநகரம் பற்றி இதுவரையில் தொழில்-வர்த்தகத் துறையை சேர்ந்தவர்கள்,  பண்பாட்டுத் தளத்திலும் சமூகத் தளத்திலும் செயல்பட்டு வருகிறார்கள், சில அரசியல்வாதிகள் ஆகியோர்  பேசி வந்திருக்கிறார்கள்.  அவர்கள் கூட ஒரு முன்மொழிவு என்ற வகையில்தான் தெரிவித்து வந்திருக்கிறார்கள்.  இப்போது முதல்முறையாக அமைச்சர்கள் மட்டத்திலிருந்து  இந்தக் கருத்து வந்திருக்கிறது.  ஆகவே இது கவனத்துக்கு உள்ளாகியிருக்கிறது.

ஒரு அமைச்சர்  மதுரையை இரண்டாவது தலைநகரமாக அறிவிக்க வேண்டும் என்று சொல்ல, அதை இன்னொரு அமைச்சர் ஆதரிக்க, மற்றொரு அமைச்சர் ஏற்கெனவே எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது மேற்கொண்ட ஒரு முன்முயற்சியைச்  சுட்டிக்காட்டி,  திருச்சிதான் தலைநகரமாக இருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

Tamil Nadu It Minister Rb Udhaya Kumar Proposes To Make Madurai …

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இது அமைச்சர்களின் சொந்த கருத்துதானேயன்றி,  அரசின் முடிவு அல்ல இன்று கூறி பிரச்சினைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.   ஆயினும் தொடங்கிவிட்ட இந்த விவாதம் சில நாட்களுக்குத் தொடரும் என்று எதிர்பார்க்கலாம். மீண்டும் ஒரு இடைவெளிக்குப் பிறகு மறுபடியும் இந்த அலை எழலாம்.

17 நாடுகள்

ஒரு நாட்டுக்கு அல்லது ஒரு மாநிலத்துக்கு இரண்டாவது தலைநகரம் தேவையா?  முன்பு இங்கிலாந்து நாட்டில் கொள்ளை நோய் பரவியபோது இன்றைய மன்னர் சார்லஸ் லண்டனில் இருந்து ஆக்ஸ்போர்டு நகரத்திற்கு தலைநகரத்தை மாற்றினார்.  பின்னர் லண்டனில் தலைநகரம் ஆனது.

இந்தியாவிலும் ஆறு நூற்றாண்டுகளுக்கு முன்பு முகலாயப் பேரரரசின் மன்னராக இருந்த முகமது பின் துக்ளக், நிர்வாகக் காரணங்களுக்காக தலைநகரத்தை மகாராஷ்டிரா பகுதியின் …… நகரத்திற்கு மாற்றினார். அதற்காக தில்லியிலிருந்து  புதிய சாலை போடப்பட்டது.  அந்தச் சாலை வழியாக புதிய தலைநகருக்கு வர அவனை விட்டார்.  சாலையில் செல்லும் போது பலர் உயிரிழந்தார்கள்.  சாலையில் புலம்பெயர்ந்து நடக்கிறபோது உயிரிழப்பது அப்போதே நடந்திருக்கிறது. விரைவிலேயே எதிரிகளின் தாக்குதல்,  கொள்ளைநோய் போன்ற பிரச்சினைகள் கடுமையாக ஏற்பட்டதால் தலை நகரத்தை மீண்டும் தில்லிக்கு மாற்றினார்.  அரசுகள் உறுதியற்ற நிலைப்பாடுகளை மேற்கொள்கின்றபோது  அதை துக்ளக் தர்பார் என்று கேலியாகச்  சொல்கிற நடைமுறை வந்தது.

A Country with Two Capitals - YouTube

இப்போதும் கூட பெனின்,  பொலிவியா,  புரூண்டி,  சிலி, ஐவரி, டொமினிக்கன் ரிபப்ளிக், எஸ்வாட்டினி,  ஹோண்டுராஸ்,  மலேசியா,  மான்டிநேக்ரோ,  நெதர்லாந்து,  தென் ஆப்பிரிக்கா,  இலங்கை,  டான்சானியா,  மேற்கு சஹாரா,  யேமன் ஆகிய 17 நாடுகள் இரண்டு தலைநகரங்களைக் கொண்டிருக்கின்றன..  ஆனால் அங்கெல்லாம் அவ்வாறு அமைந்ததில் தட்பவெட்பம்,  போர்  போன்ற வரலாற்று பின்னணிகள் உள்ளன. இந்த 17 நாடுகளிலும் கூட,  நிர்வாக நடவடிக்கைகள் சார்ந்து இரண்டு தலை நகரங்களாக இருக்கின்றனவே தவிர,  அரசியல் தலைமையாக, நாட்டிற்கான அரசின் கொள்கைகளை இறுதிப்படுத்துகிற நாடாளுமன்றம் இருப்பது ஒரே தலைநகரத்தில்தான். அது மாற்றப்படுவதில்லை.

தேவை என்ன?

இங்கே ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு ஸ்ரீநகர்,  ஜம்மு  ஆகிய இரண்டு தலைநகர்கள் உண்டுதான். அதற்கும் கடும் குளிர் என்ற தட்பவெப்பமும், வரலாறு சார்ந்த காரணங்களும் உள்ளன.  தமிழகத்தில் அப்படியான தேவை ஏற்பட்டிருக்கிறதா?  தமிழகத்தின் தலைநகரமாக சென்னை இருப்பது கூட வரலாற்றுக் காரணங்களோடுதான்.

Srinagar | History, Life, Lakes, & Map | Britannica

அடிப்படையான தேவைகள் தீர்க்கப்படும் வரையில்,  இப்போது  ஒரு தலை நகரம் இருப்பதால் என்னென்ன பிரச்சினைகள்  இருப்பதாகச்  சுட்டிக்காட்டப்படுகிறதோ,  அதே போன்ற பிரச்சினைகள் இரண்டாவது தலைநகரம் உருவான பிறகும் தொடரும் என்றே நினைக்கிறேன்.

இதைச் சொல்வதால் மதுரை நகரத்தின் தகுதியைக் கேள்விக்கு உட்படுத்துவதாகாது.  மதுரையின் வரலாற்றுப் பின்புலமும்,  பண்பாட்டுத் தளமும் எவராலும் மறுக்க முடியாதவை. ஏன், பாண்டிய நாட்டின் தலைநகரமாக இருந்ததுதானே மதுரை? ஆனால் இப்போது இதை முன்வைப்பது பற்றிதான் விவாதிக்க வேண்டியிருக்கிறது. திருச்சி, தஞ்சை நகரங்களுக்கும் இது பொருந்தும்.

மதுரையும் மதுரை சார்ந்த தென் மாவட்டங்களும் பெரும் வளர்ச்சி காண வேண்டியுள்ளது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. தற்போதுள்ள பல போதாமைளைப் போக்கிடும் வகையில் அந்த வளர்ச்சி தேவைப்படுவதை மறுப்பதற்கில்லை.  ஆனால் அந்த வளர்ச்சி ஏற்படாததற்கு காரணம் மாநிலத்தின் தலைநகரம் நெடுந்தொலைவில் இருப்பது மட்டும்தானா?

சென்னையை ஒட்டிய வட மாவட்டங்கள் சென்னை அளவுக்கு வளர்ச்சியடைந்துவிட்டனவா?  சென்னையே கூட “வளர்ச்சி” அடைந்துவிட்டதா? இன்னமும் இங்கே எத்தனை பிரச்சினைகள்!  குடிசைப் பகுதிகள் முதல் குடிநீர்த் தட்டுப்பாடுகள் வரையில், கூவம் முதல் கொசுக்கள் வரையில் எத்தனை நெருக்கடியான சவால்கள்! சென்னையின் நெருக்கடி எப்படிப்பட்டதாக இருக்கிறது என்பதற்கு கொரோனா சாட்சியம் ஒன்று போதுமே.

உண்மையான தீர்வு

எந்த மாவட்டமும் சரியான வளர்ச்சிப் பாதையில் செல்ல வேண்டுமானால் தேவைப்படுவது  அதிகாரப் பரவல் கொள்கைதான்.  அகில இந்திய அளவில் அதிகாரங்கள் மத்தியில் குவிக்கப்பட்டிருப்பதுபோல, மாநிலத்தில் அனைத்து அதிகாரங்களும் சென்னையில், தலைமைச் செயலகத்தில் குவிக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு முடிவுக்கும் அல்லது ஒவ்வொரு ஒப்புதலுக்கும் தலைமைச் செயலகக் கதவைத் தட்ட வேண்டியிருக்கிறது  என்பதுதான் பிரச்சினை.

ஒரு வாதத்திற்காக,  இரண்டாவது தலைநகரம் என்று அமைக்கப்பட்ட பிறகு,  ஒரு தொலைதூர மாவட்டத்தின்  தொழில் வளர்ச்சி உள்ளிட்ட தேவைகளுக்காக,  இரண்டாவது தலைமைச் செயலகத்தின் கதவுகளைத் தட்ட வேண்டும் என்ற நிலைமை ஏற்படுவதனால் அதனால் என்ன பயன்?  அதனால் என்ன பெரிய மாற்றம் ஏற்பட்டுவிடும்?

ஆகவே, அதிகாரப் பரவல் என்பது அனைத்து மாவட்டங்களுக்குமானதாக இருக்க வேண்டும். அந்தந்த மாவட்ட நிர்வாகமே வளர்ச்சித் தேவைகள், மக்களுக்கான சேவைகள் ஆகியவற்றைத் தானே முடிவு செய்து செயல்படுத்துகிற அதிகாரத்தைப் பெற்றிருக்க வேண்டும். அதற்கு நிகரான இன்னொரு முக்கிய தேவை,  மாவட்ட நிர்வாகம் ஜனநாயகப்படுத்தப் பட்டதாக இருக்க வேண்டும். உள்ளாட்சிகள் சட்டப்படி  மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட ஒன்றியம் உண்மையான அதிகாரம் உள்ள அமைப்பாக,  ஆட்சியர் தலைமையிலான மாவட்ட நிர்வாகத்திற்கு வழிகாட்டுகிற இடத்தில் இருக்க வேண்டும்.

எடுத்துக்காட்டாக,  கேரளத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு சிறப்பான அதிகாரங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.  ஊரின் தேவைகளை ஒட்டிய கொள்கை முடிவுகளை கூட உள்ளாட்சிகளால் மேற்கொள்ள முடிகிறது செயல்படுத்தவும் முடிகிறது. நாடு முழுவதும் செயல்படுத்தப்படுகிற அதே உள்ளாட்சிச் சட்டத்தை வைத்து கேரளம் இதைச் செய்ய முடிந்திருக்கிறது என்றால் தமிழகத்தால் ஏன் முடியாது? மற்ற மாநிலங்களால் ஏன் முடியாது?

அப்படியான அதிகாரப் பரவலுக்கான கொள்கை மாற்றங்கள் குறித்து பேசுவதற்கு அமைச்சர்களோ மற்றவர்களோ தயாரா? அமைச்சரும் கூட இதை மாவட்ட நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வமான கூட்டத்தில் முன்மொழியவில்லை.  அவருடைய கட்சியின் மாவட்டக் கூட்டத்தில்தான் ஒரு கோரிக்கைத் தீர்மானமாகக் கொண்டு வந்திருக்கிறார்கள். ஒரு பேச்சுக்கு இது ஏற்கப்படுவதாக வைத்துக்கொள்வோமானால், அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்து, மத்திய அரசு ஒப்புதல் அளித்து, நடைமுறைக்கு வருவதற்குச் சில ஆண்டுகள் ஆகும். ஆனால், இன்றைய மாநில அரசின் பதவிக்காலம் சில மாதங்களில் முடிவுக்கு வரப்போகிறது. தேர்தலைச் சந்தித்தாக வேண்டியிருக்கிறது.  அதற்குள் என்ன அவசரம்?

அந்த அவசரம்,  ஆட்சியின் மீது மக்களுக்கு உள்ள  ஏமாற்றங்களையும்,  கோபங்களையும்,  விமர்சனங்களையும் மடைமாற்ற வேண்டும்  என்ற தேவையிலிருந்தே வருவதாகத்தான் பார்க்க வேண்டியுள்ளது.  வட்டார உணர்வுகளைக் கிளறிவிட்டு, தனிப்பட்ட செல்வாக்கைத் தக்கவைத்துக்கொள்கிற அல்லது வளர்த்துக்கொள்கிற அரசியல் இதில் இருக்கிறதா என்பதையும் மக்கள் கவனத்தில் கொள்வார்கள்.

அ. குமரேசன்

Article

வேலைவாய்ப்பும் கோவிட்-19-ம் தமிழ்நாட்டில் நிலவும் போக்குகளும், பிரச்சனைகளும் – ப.கு. பாபு, விகாஸ்குமார் மற்றும் பூனம்சிங்

(* சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம் (Madras Institute of Development Studies)>babu@mids.ac.in ** அஸீம் பிரேம்ஜி பல்கலைக் கழகம்,...
Article

EIA-வை திரும்பப் பெறு: தமிழகம் முழுவதும் கோலமிட்டுப் போராட்டம் – ஆரண்யா

ஜல்லிக்கட்டு போராட்டம், சி.ஏ.ஏ.வுக்கு ஏதிரான போராட்டங்களின்போது கோலமிட்டு எதிர்ப்பைத் தெரிவிக்கும் வழிமுறை பிரபலமானது. அதேவகையில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு...
Article

தமிழகத்தில் COVID -19 க்குப் பிந்தைய சுற்றுச்சூழல் சீர்திருத்தங்கள்..! – பெ. துரைராசு &  லி.வெங்கடாசலம்

  முன்னுரை:   COVID -19 பெருந்தொற்றும் அதைத்தொடர்ந்த ஊரடங்கும் இந்தியாவின் சுற்றுச்சூழல்  துறையில்  பல விரும்பத்தக்க, நேர்மறையான மாற்றங்களை விளைவித்துள்ளன. ...
Article

குழந்தைகளுக்குச் சத்துணவு: விரைந்து செயல்படுமா தமிழக அரசு? – தேனி சுந்தர் ..

  உச்ச நீதிமன்றத்தில் நீதியரசர் அரவிந்த் போப்டே தலைமையிலான அமர்வு தானே முன்வந்து விசாரித்த, கொரனா காரணமாக முன்கூட்டியே விடுமுறை...
Article

தமிழக பதிப்புத்துறையும் கொரோனா ஊரடங்கும்…!

தமிழ் இந்து தலையங்கம்: ஊரடங்கின் விளைவாகப் பாதிக்கப்படும் சமூகத்தின் விளிம்புநிலைக் குழுக்களுக்குத் தமிழக அரசு உதவும் நடவடிக்கைகளை முன்னெடுத்துவருவது வரவேற்புக்குரியது....