archivetamilnadu government

Article

கொரானா: இயலாமையை மறைப்பதைத் தவிர அரசு வேறென்ன செய்கிறது..? – க.கனகராஜ் சிபிஎம், மாநில செயற்குழு உறுப்பினர்

 

தமிழக அரசு ஜூன் 23ஆம் தேதி நள்ளிரவு முதல் 30ஆம் தேதி நள்ளிரவு வரை மதுரையில் முழு ஊரடங்கு அமல்படுத்த ஆணையிட்ட இருக்கிறது. வேறுசில மாவட்டங்களுக்கும் முழு ஊரடங்கு விரிவுபடுத்தபடலாம் என்ற செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

மதுரை மாவட்டத்தின் கண்காணிப்பு அதிகாரி ராமநாதபுரம் மாவட்டத்திற்கும், ராமநாதபுரம் மாவட்ட கண்காணிப்பாளர் மதுரை மாவட்டத்திற்கும் மாற்றப்பட்ட இருக்கிறார்கள். இதுவெல்லாம் மாநில அரசு சென்னையைத் தாண்டி கொரோனா தொற்று மாவட்டங்களுக்கும் பரவி இருக்கிறது என்பதை அங்கீகரித்து எடுத்திருக்கும் நடவடிக்கைகள்.

இந்த நடவடிக்கைகளும் கூட கடந்த கால அனுபவத்தில் இருந்து துல்லியமாக திட்டமிடப்பட்டு இருப்பதாக சொல்லமுடியாது. உதாரணமாக 23 ஆம் தேதி நள்ளிரவு அதாவது 24 ஆம் தேதி காலையில் இருந்து ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. ஆனால் 23ஆம் தேதி நள்ளிரவு என்று அரசாங்கம் அறிவித்ததால் சித்திரைத் திருவிழாவைப் போல 22ஆம் தேதியை மக்கள் கடைகளில் குவிந்துவிட்டனர்.

வரிசையாக இதுபோன்ற தவறான நடவடிக்கைகளை மாநில அரசாங்கம் செய்துகொண்டே இருக்கிறது. தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு மேம்படுத்துவதற்கும் பதிலாக தவறுகளை திரும்பத் திரும்ப அச்சு பிறழாமல் செய்து கொண்டிருக்கிறது. இப்போதும்கூட தென்மாவட்டங்களில் மதுரை தவிர்த்து இதர மாவட்டங்களில் அரசு மருத்துவமனைகள் தவிர தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தொற்றை கண்டறிவதற்கான பரிசோதனைகளுக்கான அங்கீகாரம் வழங்கப்படவில்லை. இப்போது நிலையில் அது ஒரு பிரச்சனை அல்ல. நிச்சயமாக அரசு மருத்துவமனைகள் மிகத் திறமையாகவே இதை சமாளித்து வருகின்றன.

மாவட்டங்களை பொறுத்தமட்டில் பிரச்சனை என்னவெனில் நோய்த்தொற்று அதிகரிகும் நேரத்தில் தனியார் மருத்துவமனை பரிசோதனை நிலையங்களின் உதவிகள் தேவைப்படலாம். அதற்கான ஏற்பாடுகளை இப்போது இருந்தே செய்யவில்லை என்றால் அரசு மிகப்பெரிய சிக்கலில் மாட்டிக்கொள்ளும். அரசு மாட்டிக் கொள்வது பிரச்சனை அல்ல. இதன் காரணமாக நோய்த்தொற்று அதிகரிப்பதும் மக்கள் பாதிக்கப்படுவதும் பெருமளவில் நடக்கும். இவ்வாறு நிகழாமல் தடுப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என்று சொன்னாலும் கூட அரசு பிடிவாதமாக மறுத்து கொண்டே இருக்கிறது.

இதிலென்ன கௌரவப் பிரச்சனை அடங்கி இருக்கிறது என்று தெரியவில்லை. தவறான ஒன்றைச் செய்து அதன் காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டால் அரசின் கௌரவம் பாதிக்கப்படும். எதிர்க்கட்சிகள் வெகுமக்கள் இயக்கங்கள், துறைசார் வல்லுனர்கள் சொல்லும் ஆலோசனைகளை உள்வாங்கிக்கொண்டு சரியானவற்றை அமல்படுத்துவதன் மூலம் அரசின் நம்பகத்தன்மையும் அரசின் மீதான மரியாதையும் உயரமே தவிர குறையாது.

உதாரணமாக, பல்வேறு அமைப்புகள் கடுமையாக விமர்சித்த பிறகு, நீதிமன்றமும் தலையிடுவதற்கு வாய்ப்பிருக்கிறது என்று தெரிந்த பிறகே அரசாங்கம் பத்தாம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்தது. இல்லையென்றால் இப்போது நம் பிள்ளைகள் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதுவதற்காக பள்ளிகளுக்கு சென்று கொண்டிருப்பதை கடந்த 15-ம் தேதியில் இருந்து பார்த்துக் கொண்டிருப்போம்.

Coronavirus in Tamil Nadu: 86% of Covid-19 cases in Tamil Nadu ...

15-ம் தேதிக்கு பிறகு நான்கு நாட்கள் கழித்து 19ம் தேதியிலிருந்து சென்னை உட்பட நான்கு மாவட்டங்களில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. இப்போது எழும் கேள்வி என்னவென்றால், எதிர்க்கட்சிகள், ஜனநாயக இயக்கங்களின் வலுவான குரல் இல்லை என்றால் ஒன்று பத்தாம் வகுப்பு தேர்வுகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டிருக்கும் அல்லது இப்போது அமல்படுத்தப்பட்டு இருக்கக்கூடிய முழு ஊரடங்கு என்பது இந்த நான்கு மாவட்டங்களிலும் தேர்வுகள் முடிவடையும் வரை அமல்படுத்தப்பட்டால் இருந்திருக்கும். இந்த இரண்டில் எதை அரசு செய்தாலும் செய்யாமல் விட்டாலும் மிக கடுமையான விளைவுகளை சந்தித்திருக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருக்கும்.

அந்த நேரத்தில், அரசு அந்த விஷயத்தில் அவ்வளவு பிடிவாதமாக இருந்திருக்க வேண்டிய அவசியம் இருக்கிறதா? இப்படி ஏராளமான விஷயங்களை பட்டியல் போட்டுக் கொண்டே போக முடியும். நோய்த்தொற்று ஆரம்பித்த காலத்தில் மருத்துவ பணியாளர்களுக்கு தனிநபர் பாதுகாப்பு உபகரணங்களை உடனடியாக வழங்க வேண்டும். அதில் பற்றாக்குறை இருக்கிறது என்கிற விஷயம் தொடர்ச்சியாக ஊடகங்கள் மூலமாகவும் எதிர்கட்சிகள் அறிக்கைகள் மூலமாகவும் சில மருத்துவ பணியாளர் சங்கங்களின் கோரிக்கையாகவும் வந்து கொண்டே இருந்தது. அனைத்தும் சரியாக இருக்கிறது என்பதைத்தான் அரசாங்கம் திரும்பத் திரும்ப பேசிக் கொண்டே இருந்தது. பிப்ரவரி மாதம் 12ஆம் தேதி தமிழ்நாட்டின் நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்த திரு. ஓ.பன்னீர்செல்வம் அவர்கள், தனது பட்ஜெட் உரையில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார் “அதாவது தேவையான பாதுகாப்பு உபகரணங்களை எல்லாம் நாங்கள் வாங்கி வைத்து விட்டோம். அனைத்தும் சரியாக இருக்கிறது. அனைவரும் தயாராக இருக்கிறார்கள்.”

ஆனால் அதே பிப்ரவரி மாதம் 20ஆம் தேதி ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி முதுநிலை மருத்துவ மாணவர்கள் முகக்கவசம் உள்ளிட்ட தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் போதுமான அளவிற்கு கொடுப்பதில்லை. அதனால் தங்களுடைய உடல்நலம் பாதிக்கப்படும் நிலை இருக்கிறது என்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போதைய சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் அவர்களே அதை உடனடியாக கவனிப்பதாக அவர்களிடம் வாக்குறுதி அளித்து விட்டு சென்றார். ஆனால் மே மாதம் வரையிலும் அந்தப் ‘போதுமானது’ என்பது தட்டுப்படவே இல்லை. அதன் காரணமாகத்தான் இப்போதும் நீங்கள் பார்க்க முடியும் ராஜீவ்காந்தி மருத்துவமனையில் முதுநிலை மருத்துவ மாணவர்கள் 60 பேர் குறைவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

அந்தக் கல்லூரியின் டீன் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார். பல துறைத்தலைவர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். வரிசையாக பல இடங்களில் இதுபோன்று நடந்திருக்கிறது. அரசு அன்று இதைக் கேட்டு இருந்தால் இத்தனை பிரச்சனை இருந்திருக்காது. நோயாளிகளில் ஒருவருக்கு அல்லது பொதுமக்களில் ஒருவருக்கு தொற்று ஏற்படுவது போன்றதல்ல மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும், மருத்துவ பணியாளர்களுக்கும் ஏற்படும் நோய்த்தொற்று. அவர்களில் ஒருவருக்கோ சிலருக்கோ பலருக்கும் நோய்த்தொற்று ஏற்படுகிறது என்றால் ஏற்கனவே, பற்றாக்குறையில் இருக்கும் இந்த பணியாளர்கள் எண்ணிக்கை மேலும் பாதிக்கப்படும். நோயாளிகளுக்கு சிகிசை அளிப்பதில், கவனிப்பதில் சிக்கல் ஏற்படும்.

எந்த வேலையையும் செய்யாதவருக்கு ...
kanagaraj cpim

இதையெல்லாம் மனதில் வைத்துக் கொண்டதால் நோய்த் தொற்று பரவ ஆரம்பித்த ஆரம்ப காலத்திலேயே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போன்ற அமைப்புகள் அரசியல் கட்சிகள் தமிழக அரசுக்கு ஒரு வேண்டுகோளை வைத்தனர். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கைக்காக கடந்த ஆண்டு இறுதியில் மருத்துவர்கள் தமிழகம் முழுவதும் போராடிக் கொண்டிருந்தார்கள். அரசாங்கம் அவர்களுக்கு அவர்களது போராட்டத்திற்கு செவிசாய்க்கவில்லை. அந்தப் போராட்டத்தில் உறுதியாக வென்றதற்காக பல மருத்துவர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு ஊர்மாறுதல் செய்யப்பட்டார்.

கடுமையான சூழலில் இருக்கிறது ஒரு வாரம் பணி செய்கிறவர்கள் அடுத்த ஒரு வாரம் தனிமைப்படுத்தலுக்கு செல்ல வேண்டியதிருக்கிறது. எனவே அவர்களுக்கு போதுமான ஓய்வும் கிடைப்பதில்லை. இதையெல்லாம் கவனத்தில் கொண்டு இப்படி வெளியூருக்கு பழிவாங்குதல் ஆக மாறுதல் செய்யப்பட்டவர்களை சென்னைக்கு கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தியதை தமிழக அரசு பொருட்படுத்தவே இல்லை.

தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரணமான சூழலால் வேறுவழியின்றி ஊர் மாற்றம் செய்தவர்களை திரும்பவும் சென்னைக்கு கொண்டு வந்ததுள்ளனர். இதை ஆரம்பத்திலேயே செய்திருந்தால் இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனத்தை சிகிச்சையில் செலுத்தியிருக்க முடியும். இதேபோன்று பாதுகாப்பு உபகரணங்கள் சம்பந்தமான கோரிக்கையை எழுப்பிய அல்லது முகநூலில் பகிர்ந்த மருத்துவர்கள் உடனடியாக பணி மாறுதலுக்கு உட்படுத்தப்பட்டார்கள். பிறகு தனிநபர்கள் முயற்சியாலும் பொதுமக்கள், ஊடகங்கள் அரசின் இந்த நடவடிக்கை குறித்து விமர்சனங்கள் எழுந்தது.

அப்படி ஒரு மருத்துவர்தான் தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் டாக்டர் ராஜா, தினேஷ் திருவாரூருக்கு மாறுதல் செய்தார்கள். பிறகு அந்த மாறுதல் ரத்து செய்யப்பட்டது. ஒரு மாத காலத்திற்குள் விஜயபாஸ்கர் அவர்கள், அவரைப் பாராட்டி ஒரு ட்விட் போட்டேன். இந்த குறைவான காலத்தில் எப்படி ஒருவரை இவர்களால் காப்பாற்ற முடிந்தது என்பது இன்னொரு முக்கியமான அம்சம்.

அரசு எல்லா நேரமும் தனக்குத் தானே தட்டிக் கொடுத்துக் கொண்டு எல்லாம் நன்றாக இருக்கிறது.எல்லாம் சௌக்கியமே ஆல் இஸ் வெல். எங்களை அவர்கள் பாராட்டினார்கள். இவர்கள் பாராட்டினார்கள். நாங்கள் முன்னணியில் இருக்கிறோம் என்று சொல்லிக்கொண்டே இருந்தது. ஒவ்வொரு நாளும் நிலைமை மோசமாகிக் கொண்டே இருந்தது. ஆனாலும், அரசு தன்னைப்பற்றி சுய தம்பட்டம் அடிப்பதை ஒருபோதும் நிறுத்திக் கொள்ளவே இல்லை. சில நேரங்களில் உண்மைகளை மறைப்பதற்காக உணர்ச்சிப்பூர்வமாக பேசுவதை அமைச்சர்களும் மற்றவர்களும் முன்வைத்தார்கள்.

Tamil Nadu announces 'full' lockdown in Chennai, other parts as ...

ஆரம்பம் முதல் அரசின் அணுகுமுறையில் இருந்த கோளாறு இன்று நாம் சந்திக்கும் எல்லா பிரச்சினைகளுக்கும் அடிப்படையான காரணம் என்பதை சொல்ல முடியும். முதலாவதாக அரசாங்கம் ஊரடங்கு என்று அறிவித்தபோது திடீரென்று அறிவித்ததால் ஒரே நாளில் ஏறத்தாழ ஒன்றரை லட்சம் பேர் கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்ல புறப்பட்டனர். அதற்கு முன்பு தீபாவளி பொங்கல் போன்ற நேரங்களில் காணப்படும் கூட்டங்களுக்கு இணையாகவும் அதைவிட அதிகமாகவும் பேருந்துகளில் அவர்கள் பயணம் செய்தார்கள். இது ஒரு பெரும் பிரச்சனை.

அடுத்ததாக, காய்கறி விற்பதை தடுக்க முடியாது. ஒரு காய்கறி மார்க்கெட்டை மூடி விட்டீர்கள். அதனால் கடும் விலை ஏற்றமும், தேவையற்ற குழப்பங்களும் ஏற்படும். ஆனால் அதே சமயம் கண்காணிப்பது சோதனைகளை அதிகப்படுத்துவது தேவையான வசதிகளை செய்வது என்பதை அரசாங்கம் கடைசிவரை தள்ளிப்போட்டு வந்தது.

கோயம்பேடு மார்க்கெட்டை பொறுத்தளவில் அதனோடு தொடர்புடைய கிரமம் வரை எவ்வித பரிசோதனையும் நடைபெறவில்லை. மார்க்கெட்டில் இருந்த பொதுக் கழிப்பறைகளை கூட உரிய முறையில் பராமரிக்கப்படவில்லை. சென்னை உட்பட பல இடங்களுக்கு கொரோனாவை பாதுகாப்பாக அனுப்பி வைத்துவிட்டு பிறகு கோயம்பேடு மார்க்கெட் மூடப்பட்டது. அடுத்ததாக ஊரடங்கு காலம் முழுவதையும் தமிழக அரசாங்கம் வீணடித்தது என்றே சொல்ல வேண்டும்.

கேரளாவில் ஊரடங்கு காலத்தை முழுமையாக பயன்படுத்திக் கொண்டார்கள். ஒவ்வொரு வார்டு வாரியாக அனைத்து கட்சியினரையும் கொண்ட குழு அமைத்தார்கள். அந்த குழு பாதிக்கப்பட்ட கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் முழு அதிகாரம் படைத்ததாக விளங்கியது. அனைத்து கட்சியினரும் இணைந்து இருந்த காரணத்தினால் அதிகமாக யார் சேவை செய்வது என்பதில் போட்டி ஏற்படுமே தவிர ஒருவருக்கொருவர் எதிராக நிற்கிற பிரச்சனை இல்லாமல் போனது.

ஊரடங்கு காலத்தைப் பயன்படுத்தி மக்கள் அனைவரும் வீட்டில் இருக்கும்போது அறிகுறிகள் அல்லது வேறு ஏதேனும் அடிப்படையில் நோயாளிகளை கண்டறிந்து சோதனைக்கு உட்படுத்துவது என்பதை அவர்கள் செயல்படுத்தினார்கள். சோதனை மட்டுமே அனைத்தையும் சாதித்து விடாது என்ற போதிலும் ஒருவர் நோய்த்தொற்றுக்கு ஆளானவரா இல்லையா என்பதை அறிய முடியும்.

இந்தப் பின்னணியில் பரிசோதனையை நடக்கிறபோது குடும்பங்களோடு ஒரு உரையாடலை நடத்தி எப்படியெல்லாம் நோய்த் தொற்றில் இருந்து தப்பிக்கலாம் என்ற விழிப்புணர்வை அவர்களால் உருவாக்க முடிந்தது. அனைத்துக் கட்சியினரையும் சேர்ந்த மூன்றரை லட்சம் தொண்டர்களை அவர்கள் உருவாக்கி விட்டார்கள். அந்த தொண்டர்கள் மூலமாக ஒவ்வொரு செய்தியும் கீழே எடுத்துச் செல்லப்பட்டது.

Tamil Nadu man without travel history tests positive for ...

தமிழகத்தில் நகர்ப்புறங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் கிடையாது. இன்றைக்கும் கூட கிராமப்புறங்களில் நோய் தடுப்பு அல்லது நோய் பரவல் தடுப்பு சிறப்பாக செய்யப்படுகிறது என்று சொல்ல முடியும். கிராம நிர்வாக அலுவலர் அதேபோன்று ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ஒன்றிய கவுன்சிலர்கள், இவர்களெல்லாம் பெரிய பங்களிப்பை செலுத்துகிறர்கள்.

நோய் பாதிப்புக்குள்ளான ஒருவரைப் பற்றிய தகவல், டீக்கடைகள், மளிகை கடைகாரருக்கு தெரிந்தாலும்,அதை உடனடியாக அரசுக்கு தெரிவிக்கப்படுகிறது. வெளியூர்களில் இருந்து வருகிறவர்களைப் பற்றிய விவரத்தையும் உடனடியாக சம்பந்தப்பட்ட துறைக்கு தெரிவிப்பதை ஒரு கடமையாக அவர்கள் வைத்திருக்கிறார். தமிழகத்தில் நகர்ப்புறங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் கிடையாது. இதனால் முழுமையாக அவர்களால் கண்டுபிடிப்பதில் பிரச்சினை இருக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் இருந்தாலும் கூட கிராமத்திற்கும் நகரத்திற்கும் இருக்கக்கூடிய அந்த வேறுபாடு இருக்கத்தான் செய்யும். இந்த நோய்தொற்று பரவலை தடுப்பதில் உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாத இடங்களில் அனைத்துக்கட்சி குழு அமைந்திருந்தால் அது ஒரு முக்கியமான பங்காற்றி இருக்க முடியும்.

அடுத்ததாக, மருத்துவமனை அல்லது பரிசோதனை ஏற்பாடுகள் பொதுவான மக்களை தங்களை பரிசோதனைக்கு உட்படுத்துவது என்பதிலிருந்து தள்ளிவைக்கிறது. கிராமப்புறங்களில் இருப்பவர்களை பரிசோதனைக்கு உட்படுத்தி, அதன் முடிவு தெரிகிற வரை, கும்பலாக அனைவரையும் ஒரே இடத்தில் தங்க வைக்கின்றனர். அதில், கொரோனா பாதிப்பு உள்ளவரும் இருக்கிறார். இல்லாதவரும் இருக்கிறார். பரிசோதனை முடிவு நெகட்டிவ் என்று வந்த பிறகு, இல்லாதவரை வீட்டுக்கு அனுப்புகிறார். இது என்ன விதமான அணுகுமுறை. இதேபோன்று நோய்த்தொற்றுக்கு பாதிக்கப்பட்ட ஒருவருடைய குடும்ப உறுப்பினர்களை பரிசோதிப்பதும், அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதிலும் ஆரம்பத்தில் மிகப்பெரிய சுணக்கம் இருக்கிறது. குளத்தூர் சசிகலா இதற்கு ஒரு உதாரணம்.

இதைப்போன்ற தனியார் மருத்துவமனைகள் தனியார் மருத்துவ கட்டமைப்புகளை அரசு உடனடியாக தன்வசப்படுத்தி இருக்க வேண்டும். தேவை என்றால் அவர்களுக்கு ஓரளவு நிவாரணம் கொடுத்து கூட எடுத்திருக்கலாம். இன்றைக்கு வரையிலும் அதை செய்யவில்லை. அடுத்ததாக 25 சதவீத படுக்கைகள் அரசு ஒதுக்கிய இடங்களாக கருதப்பட வேண்டும். முதலமைச்சர் ஒருங்கிணைந்த காப்பீட்டுத் திட்டத்தின் அடிப்படையில் சிகிச்சை பெறுபவர்களுக்கு அது ஒதுக்கப்பட வேண்டும் என்றெல்லாம் சொல்லப்பட்டது. பிரச்சினை என்னவென்றால் இன்றைக்கு வரையிலும் அதை நிர்வகிக்கும் பொறுப்பு தனியார் மருத்துவமனைகள் இடமிருக்கிறது. இதன் காரணமாகவே அவர்கள் தாங்கள் அனுமதிக்கிற நோயாளிகளை அனுமதித்துவிட்டு மற்றவர்களை திருப்பி அனுப்புகிற பிரச்சனை இருக்கிறது.

ஒற்றைச்சாளர முறையில் (சிங்கிள் விண்டோ சிஸ்டம்) இடங்களை ஒதுக்குவது என்று முடிவு செய்திருந்தால் பாதிக்கப்பட்டோர் மிகப் பெரிய அளவில் அலைக்கழிப்புக்கு ஆளாக மாட்டார்ள். இதன் காரணமாக தனியார் மருத்துவமனையில் இடம் கிடைக்காதவர்கள் வீட்டிலேயே இருந்து பார்த்துக்கொள்கிறோம் என்று போவதை தடுத்து இருக்க முடியும்.

COVID-19 lockdown: Tamil Nadu CM announces concessions for tenants ...

இப்போதும்கூட பரிசோதனைகள் அரசால் முழுவதும் செய்ய முடியவில்லை. இந்தப் பின்னணியில் அரசாங்கம் ஆரம்பத்தில் 4700 ரூபாய் என்று ஐசிஎம் ஆர் நிர்ணயித்த கட்டணம் போதாது என்று கிரண் மஜூம்தார் போன்றவர்கள் பெரிதாக அலட்டிக் கொண்டார்கள். இப்போது 2700, 2000 ரூபாய்க்கு பரிசோதனை செய்யப்படுகிறது. இதனை கணக்கில் எடுத்துக் கொண்டு தமிழக அரசாங்கம் இந்த பரிசோதனை கட்டணத்தை குறைத்திருக்க வேண்டும். அவ்வாற செய்திருந்தால் மத்தியதர வர்க்கம் உயர் மத்தியதர வர்க்கத்தினர் தனியார் மருத்துவமனைகளில் பரிசோதித்துக் கொண்டு இருப்பார்கள். இதன் காரணமாக அரசு மருத்துவமனைகளில் இருக்கக்கூடிய நெருக்கடியும் சிரமம் குறைந்திருக்கும். இப்போதும் கூட அரசாங்கம் தனியார் மருத்துவ கட்டமைப்பை அப்படியே பயன்படுத்துவதற்கு ஏன் தயங்குகிறது? ஒரு பேரிடர் காலத்தில் கூட உதவாத ஒரு கட்டமைப்பு ஒரு நாட்டில் இருக்கக் கூடும் என்றால் அந்த கட்டமைப்பு இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன?

அதே போன்று பல மருத்துவக்கல்லூரிகளில் ஆரம்பத்தில் மிகக் கடுமையான பிரச்சினையாக உணவு இருந்தது. உணவு பிரச்சனையால் ஒரு மருத்துவக்கல்லூரி முதல்வர் தூத்துக்குடிக்கு மாற்றப்பட்டார். இப்படியான சம்பவங்கள் ஏராளமாக சொல்லமுடியும். அதேபோல இறப்பு எண்ணிக்கை சொல்வதில் ஏற்பட்ட குளறுபடிகள் நடக்கின்றன. அதை சரி செய்கிறோம் என்றார்கள். அதற்கு ஒரு குழு அமைத்தார்கள். பத்து நாட்கள் ஆகிவிட்டது இன்றுவரை அவர்களால் அதை கண்டுபிடித்து செல்ல முடியவில்லையா? இது என்ன மாதிரியான அணுகுமுறை?

அதேபோன்ற ஒட்டுமொத்தமாக பரிசோதனையை சொல்லாதீர்கள். தேதி வாரியாக, மாவட்ட வாரியாக சொல்லுங்கள். ஒவ்வொரு மாவட்டத்திலும் எவ்வளவு பரிசோதனை நடத்தப்பட்டது என்று சொல்வதன் மூலமாகதான் துல்லியமாக கணக்கிட முடியும். பரிசோதனை எவ்வளவு செய்யப்பட்டிருக்கிறது என்பது ஒரு முக்கியமான தரவு. செய்யப்பட்ட பரிசோதனைகளில் எவ்வளவு பேர் பாசிட்டிவ் என்று கண்டுபிடிப்பது அடுத்த முக்கியமான தரவு. பாதிக்கப்பட்டவர்களில் வயது, சமூகநிலை, பொருளாதார நிலை, கிராமமா? நகரமா?, பாலினம் போன்ற முக்கியமான அம்சங்களையெல்லாம் கணக்கில் கொண்டால்தான் எந்தப் பகுதியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று அரசாங்கம் முடிவு செய்யமுடியும். அரசு இன்றுவரை அதை செய்ய மறுக்கிறது.

நோய் தொற்றுக்கு ஆளானவர்கள் குணமடைவதற்கு எவ்வளவு காலம் ஆகும் என்பதை அரசாங்கம் சொல்லி கொண்டே வந்திருக்கிறது. பரிசோதனை அதிகரித்திருக்கிறது என்பதை பெருமையாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். பாதிப்பு 10,000, 20,000 என உயர்வதற்கான கால அளவை ஒப்பிட்டு பைத்தியக்காரத்தனமாக பேசுகிறார்கள். அடிப்படையான பிரச்சினை என்ன? இது நடக்கக்கூடும் இதைப்பற்றி யான அணுகுமுறை எப்படி இருக்க வேண்டும்?

ஒன்று, போதுமான மருத்துவ பொருட்கள் இருக்கிறதா, மருத்துவ வசதிகள் இருக்கிறதா, மருத்துவர்களும் மருத்துவப் பணியாளர்களும் இருக்கிறார்களா என்பதை உத்தரவாதப்படுத்த வேண்டும்.

இரண்டாவது, பரிசோதிப்பது, எந்தப் பகுதியினரை அதிகமாக பரிசோதிப்பது, பாதிக்கப்பட்டவர்களுக்கு எப்படி சிகிச்சை அளிப்பது? நோய்த்தொற்று ஏற்பட்ட அவர்களுடைய நெருங்கிய தொடர்புகளை எப்படி கண்காணிப்பது? நோய்த்தொற்று வேகத்தை கணக்கில் கொண்டு அரசு மற்றும் தனியார் கட்டமைப்புகள் போதுமான அளவுக்கு உருவாக்கப்பட்டிருக்கிறதா? இவற்றை அரசு கவனத்தில் கொண்டிருக்க வேண்டும்.

Spread of COVID-19 in Tamil Nadu largely under control: CM ...

எந்தவொரு அரசாங்கமும் 100 சதவீதம் எந்தப் பிழையும் ஏற்படாமல் செய்ய முடியாது. ஆனால், ஒரு கூட்டு முடிவுக்கு உட்படுத்தி செய்தால், இத்தகைய பாதிப்புகளை அரசாங்கத்தால் குறைக்க முடியும். தமிழக அரசு திட்டமிட்டு பல்துறை நிபுணர்கள், அரசியல் கட்சிகள், அமைப்புகளிடம் கருத்து கேட்பதை உதாசீனப்படுத்தி வந்தது. எல்லாம் எமக்குத் தெரியும் என்கிற இறுமாப்போடு இருந்து வருகிறது. இப்பது நம்பிக்கை அடிப்படையில் ஆரூடம் சொல்கிறார்கள்.இப்போதாவது தன்னுடைய தவறுகளை திருத்திக் கொண்டு அரசாங்கம் காதுகளைத் திறந்து வைக்க வேண்டும். கண்களைத் திறந்து வைக்க வேண்டும். 24 மணி நேரமும் வாயை மட்டும் திறந்து எல்லாம் நன்றாக இருக்கிறது என்று சொல்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

அப்போதுதான் இனிமேலாவது பாதிப்புகளையும், இழப்புகளையும் குறைக்க முடியும். இல்லையென்றால் முதலமைச்சர் சொல்வதுபோல கடவுள்தான் காப்பாற்ற வேண்டியிருக்கும். இல்லாத ஒன்றின்மீது பழியை போட்டு தன்னுடைய இயலாமையை மறைப்பதை தவிர அரசு வேறென்ன செய்கிறது

Article

குழந்தைகளுக்குச் சத்துணவு: விரைந்து செயல்படுமா தமிழக அரசு? – தேனி சுந்தர் ..

  உச்ச நீதிமன்றத்தில் நீதியரசர் அரவிந்த் போப்டே தலைமையிலான அமர்வு தானே முன்வந்து விசாரித்த, கொரனா காரணமாக முன்கூட்டியே விடுமுறை...