archiveTamil Nadu

Article

தமிழகத்தில் ‘அசெம்பிளிங்’ தொழில்: உலகமய வர்த்தகப் போக்குகளிலிருந்து பெற்ற சில கருத்துருக்கள் – C. வீரமணி, P.G. பாபு (தமிழ் மொழிபெயர்ப்பு : அஷ்வத்.கி.ரமேஷ்)

 

தமிழ்நாட்டில் புதிய தொழில்துறை முதலீடுகளை ஈர்ப்பதற்கான காரணம் என்னவாக இருக்கவேண்டும்? கடந்த சில ஆண்டுகளில் தடையிலா வாணிகத்திலிருந்து ஒதுங்கியிருப்பது பொதுப்போக்காக ஆகியிருக்கும் பட்சத்தில், – பழமொழியொன்று சொல்லுவது போல, மற்றவர்கள் எல்லோரும் வெளியேறும் நேரத்தில் களத்தில் இறங்குவது –  தமிழ்நாட்டிற்கு நல்லதாக அமையக் கூடும். இப்போதிருக்கும் சூழ்நிலையில், அநேகமாக அனைவருடைய கவனமும் உள்நோக்கி இருக்கையில், ’உலகத்திற்காகத் தமிழகத்தில் இறுதி உற்பத்தி’ என்பதற்கான நேரம் வந்துள்ளது.

குறிப்பாக, உலகப் புவிஅரசியல் மாறிவரும் தற்போதைய சூழலில்—உலகின் தொழிற்கூடமான சீனா எதிர்ப்புகளின் இலக்காக மாறி இருக்கும் நிலையில்—இதற்கான வாய்ப்புகள் மிகுந்திருக்கின்றன. எதிர்காலத்தில் சீனாவை மட்டுமே சார்ந்திருப்பதற்குப் பதிலாகத் தத்தம் விநியோகச் சங்கிலித் (supply chains) தொடர்களைப் பரவலாக்கிக்கொள்ள வேண்டும் என்கிற உணர்வு பன்னாட்டு நிறுவனங்களிடையே (MNEs) பெருகி வருகிறது (Javorcik, 2020). கோவிட்-19 பெருந்தொற்றிற்கு முன்பும் கூட, தங்களுடைய விநியோகச் சங்கிலித் தொடர்களை ஆசியாவின் ஏனைய பகுதிகளுக்கு இடமாற்றவேண்டுமென்கிற உந்துதலைச் சில பன்னாட்டு நிறுவனங்களுக்கு  ஏற்படுத்தியிருந்தது அமெரிக்க – சீன வர்த்தகப் போர் (Amiti et al., 2019).

  • * Indira Gandhi Institute of Developmental Research, Mumbai

  • # Madras Institute of Development Studies, Chennai.

உலக மதிப்புச் சங்கிலிகளில் (global value chains) ஏற்படக் கூடிய மாற்றங்கள், உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களை இறுதி உற்பத்தி நடவடிக்கையில் பொருத்தியமைத்தலுக்கானப் (Assembling) பெரு மையமாகிய சீனாவின் இடத்தைப் பிடிக்க இந்தியாவுக்குச் சந்தர்ப்பமளிக்கின்றன; இது இந்தியாவின் திறம்-குறை உழைப்பாற்றலுக்கேற்ப லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தரக்கூடியது. அதற்குத் தகுந்த கொள்கைகளின் மூலம் இந்த வாய்ப்புகளைத் தமிழ்நாடு பயன்படுத்திக்கொள்ள முயற்சிக்கலாம்.

Dr P G Babu new Director of MIDS – IndustrialEconomist

ஏன் தமிழ்நாடு?

தேவையான சமூக மற்றும் பொருளாதாரக் கூறுகளைத் தமிழ்நாடு கொண்டிருக்கிறது. முதலாவதாக, 45 வயதுக்குட்பட்டவர்கள் மக்கள்தொகையில் 70% வகிப்பதன் மூலம் கணிசமான மக்கள்தொகை ஈவுவிகிதத்தை நமது மாநிலம் பெற்றுள்ளது.  51% ஆண்கள் 49% பெண்கள் என்று பாலின விகிதமும் ஏறத்தாழ சமமாக இருக்கிறது. கிட்டத்தட்ட 53% குடும்பங்கள் ஊரகப் பகுதிகளில் குடியிருக்கின்றன.

படிப்பறிவுள்ளோர் விகிதம் கிட்டத்தட்ட 86% இருக்க, பெண்கள் படிப்பறிவு விகிதமும் 80% ஆக இருக்கின்றது. மக்கள்தொகையில் பதினைந்து விழுக்காட்டினர் இளங்கலை பட்டப்படிப்பையும், அதற்கு மேற்பட்டும் நிறைவு செய்திருக்கின்றனர்; நான்கு விழுக்காடு பட்டயப் படிப்பைப் பெற்றிருப்பதோடு, மக்கள்தொகையில் மூன்றில் இரு பங்கினர் உயர்நிலைப் பள்ளிப் படிப்பைப் பயின்றுகொண்டோ அல்லது நிறைவுசெய்தோ இருக்கின்றனர்.

மாநிலத்தின் வேலையின்மை விகிதம் 3 விழுக்காட்டினை யொட்டியிருக்கிறது; மக்கள்தொகையில் 45% பணிபுரியும் நிலையில், 52% உழைப்பாளர் பங்கேற்பு இல்லாதவர்கள்; பணிபுரிவோரில் ஆண்கள் 63 விழுக்காடும், பெண்கள் 27 விழுக்காடும் ஆவர். மக்கள்தொகையில் 21% ஈடுபட்டுவரும் தனியார் துறையில் ஊதியமளிக்கும் பணிகள் பெரும்பான்மையான பணிவகையாக உருவெடுத்துள்ளது; இதைத் தொடர்ந்து (வேளாண்) நாட்கூலி வேலைகள் 19 விழுக்காடும், சுயதொழில் (வேளாண்துறை சாராதவை) 14 விழுக்காடும் ஆகும். ஊரகப் பகுதிகளில், மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் விவசாயக் கூலி வேலையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மக்களின் விருப்பங்களை எடுத்துக் கொண்டால், மாநிலத்தின் 50% குடும்பங்கள் வரும் 5 ஆண்டுகளில் தங்களுடைய வருமானம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கின்றனர். ஊரகக் குடும்பங்களைக் காட்டிலும், நகர்ப்புறக் குடும்பங்களே தங்களுடைய எதிர்கால வருமான உயர்வைக் குறித்து அதிக நம்பிக்கையோடு இருக்கின்றன.

C. Veeramani

உழைப்பாளர் பங்கெடுப்பில், ஜனவரி 2016இல் இருந்து சீரான சரிவு இருந்து வருவதென்பது, பாபு, குமார் மற்றும் சிங் (2020) ஆகியோர் இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையத் (CMIE) தரவுகளைக் கொண்டு  நிகழ்த்திய பகுப்பாய்விலிருந்து வெளிப்படுகிறது. ஏப்ரல் 2020இன் கண்டிப்பான ஊரடங்கின்போது தமிழ்நாட்டின் வேலையின்மை விகிதம் மிகவும் மோசமடைந்தது. மே 2020இல் ஊரடங்கு தளர்த்தப்பட்டபோது இந்நிலைமையில் பெரிய திருப்பமொன்று பதிவானது. மே 2020இல், உழைப்பாளர் பங்கெடுப்பு விகிதமானது, குறைந்த வீதத்தில் ஆயினும்—குறைவது தொடர்ந்தது.

நகர்ப்புறப் பகுதிகள், ஆண்கள் மற்றும் உயர்கல்வி பயின்றோரிடையே வேலையின்மை விகிதத்தின் அதிகரிப்பு இன்னும் துரிதமாயிருக்கிறது. கல்லூரிப் பட்டதாரிகளைவிட இடைநிலையளவில் பள்ளிப்படிப்புள்ளோர் அதிகப் பாதிப்படைந்திருப்பதோடு, உழைப்பாளர் பங்களிப்பு சரிவது தொடரும்போதிலும் கூட—இவர்களுடைய வேலை மீட்பும் காலந்தாழ்ந்திருக்கிறது. பெண்களையும் கல்லூரிப் படிப்பில்லாதோரையும் உழைப்பாளர் பங்கெடுப்பில் மீண்டும் கொண்டுவருவதற்குச் சிறப்பு கவனம் செலுத்தவேண்டிய அடைப்படைத் தேவை இருக்கிறது.

(முதல் நான்கு பத்திகளில் குறிப்பிடப்பட்டிருக்கும் தரவுகள் Census 2011 மற்றும் MIDS–DES–SRC’ Tamil Nadu Household Panel Survey Pre-Baseline Summary, 2018–19, Draft Report submitted to Government of Tamil Nadu’ ஆகிய ஆவணங்களிலிருந்து எடுக்கப்பட்டுள்ளன.)

ஆக மொத்தம், பொதுத்தர அளவையில் 3-4% என்று மிகக் குறைவாகவே இருக்கும் வேலையின்மை விகிதமானது பிரச்சனை கிடையாது. குறைவான உழைப்பாளர் பங்கெடுப்பு வீதமும் வேலைத் தரமுமே உண்மையானச் சிக்கல். நாட்கூலி வேலைகளிலும், முறைசாரா துறையிலும் பணிபுரிவோரில் பெரும்பாலானோர் குறைந்த கூலியும், குறைந்த ஆக்கத்திறனும், குறைந்த அளவிலான பணிப் பாதுகாப்பும் பெற்றிருக்கின்றனர். மாநிலத்தின் மக்கள்தொகை அமைப்பினையும், மக்களின் வருமான உயர்வு குறித்த எதிர்பார்ப்புகளையும், உழைப்பாளர் பங்கெடுப்பு வீதமானது (அதிலும் குறிப்பாகப் பெண்களிடையே) குறைவாக இருக்கும் நிலையினையும் கொண்டு பார்த்தால், முறைசார் துறையில் உயர்ந்த கூலி வீதத்தில் தரமான வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவது இன்றியமையாததாகிறது.

‘நெட்வொர்க்’ சார்ந்த ‘அசெம்பிளிங்’ தொழில் (Assemble of network products), இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் தற்போதிருப்பதைவிட நல்ல வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும் ஆற்றல் படைத்தது. கிழக்காசிய நாடுகளும் தங்களுடைய வளர்ச்சிப் பாதையின் தொடக்கங்களில் இதையே செய்தன. ஒப்பீட்டளவில் குறைந்த திறனுடைய மக்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதில் இத்திட்டம் உதவி புரிந்தது. பெண் உழைப்பாளர்களின் பங்கெடுப்பு மிகவும் அதிகமுள்ள நாடுகளுள் கிழக்காசிய நாடுகளும் இடம்பெறுவன (Fontana, 2009). தமது ஏற்றுமதியில் 80 விழுக்காட்டிற்கும் மேலாக ஜவுளித்துறை இருந்துவரும் நிலையில், வங்கதேசத்திற்கும் இது பொருந்தும். ஜவுளித் துறையின் மதிப்புச் சங்கிலியில், இறுதி வடிவமைத்தலில் தனித்தேர்ச்சியுடையது வங்கதேசம்; இந்தியாவிலிருந்தும் பாகிஸ்தானிலிருந்தும் மூலப் பொருட்களை வங்கதேசம் பெற்றுக் கொள்கிறது. வங்கதேசத்தின் ஆடைத் தொழிற்கூடங்களில் 80 விழுக்காட்டிற்கும் மேலான தொழிலாளர்கள் பெண்கள் ஆவர்.

‘நெட்வொர்க்’ சார்ந்த தொழில்கள்

‘நெட்வொர்க்’ தொழிலில் தலைமை வகிக்கும் பன்னாட்டு நிறுவனங்களால், தங்களுடைய ‘உற்பத்தியாளர்-சார்ந்த’ உலக உற்பத்திகளுக்கு உட்பட்டு, உலக அளவில் அலகுபிரிக்கப்பட்டுக் கட்டுப்படுத்தப்படும் உற்பத்திச் செயன்முறைமையை உடையவை. பெரிய அளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கிட, உதிரிப் பாகங்களை இறக்குமதி செய்து அவற்றைப் பொருத்தி இறுதிவடிவமைப்பு அளிப்பதன் மூலம், உழைப்பு மிகுந்த ’நெட்வொர்க் தொழிலில்’ திட்டமிட்டுத் தனித்தேர்ச்சி அடைவது இதில் அடங்கும். இதன் அடிப்படைக் கருத்தினை படம் 1 மற்றும் படம் 2 ஆகியவற்றிலிருந்து புரிந்துகொள்ளலாம்.

படம் 1 ’இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தின் ஒரு பகுதியாக ‘இந்தியாவில் அசெம்பிளிங்’ (Assemble in India) திட்டத்தினால் பெறும் ஆதாயங்கள்: ஒரு கருத்தாக்கக் கட்டமைப்பு

படம் 2: இறுதிவடிவமைத்தலிலிருந்து கிடைக்கும் ஆதாயத்திற்கு எடுத்துக்காட்டு: சீனாவில் Apple iPod மற்றும் Iphone 7 இறுதிவடிவமைத்தல்

 

iPod மதிப்புச் சங்கிலிக்குள், இறுதிவடிவமைப்பதில் சீனா தனித்தேர்ச்சிப் பெற்றிருக்கிறது; அதற்கான உதிரி பாகங்களும் இறக்குமதி செய்யப்படுகின்றன. 2008இல் $144ஆக மதிப்பிடப்பட்ட இறுதிவடிவமைக்கப்பட்ட iPodஇன் தொழிற்சாலை விலையில், சீனாவின் மதிப்புக் கூட்டல் வெறும் $4 மட்டுமே (தொழிற்சாலை விலையில் 3%). ஆப்பிள் விற்பனை செய்த 54.83 மில்லியன் iPodகளில் கிட்டத்தட்ட எல்லாவற்றையும் சீனா தான் பொருத்தியமைத்தது; இதன் விளைவாக சீனாவின் மொத்த உள்நாட்டு மதிப்புக் கூட்டல் $219 மில்லியனாக இருந்தது.

Iphone 7 பொருத்தியமைத்தல் மூலம் வெறும் 8.46 (அமெரிக்க)டாலர்களை மட்டுமே சீனா ஈட்டுகிறது. ஆனால், சீனாவின் மொத்த மதிப்புக் கூட்டல் மிகப் பெரிது ($8.46 × உலகில் விற்பனையாகும் மொத்த iPhoneகளின் எண்ணிக்கை). iPod மற்றும் iPhone ஆகியவை இரண்டு எடுத்துக்காட்டுகள் மட்டுமே. இதுபோன்று ஆயிரக்கணக்கான பண்டங்களுக்குச் சீனா இறுதிவடிவமைத்தலின் மையமாக உருவெடுத்தது.

மோட்டார் ஊர்திகள் மற்றும் கைப்பேசிகள் என, ஏற்கனவே ’இந்தியாவில் இறுதிவடிவமைப்போம்’ திட்டத்தின் இரண்டு வெற்றிக்கதைகளைக் கொண்டது இந்தியா. மின்னணுப் பொருட்களிலும் மின்பொறியியலிலும்கூட தன் இடத்தை மேலும் விரிவாக்கிக் கொள்ளும் ஆற்றலுடையது. கைப்பேசிப் பொருட்களைப் பொறுத்தவரையில், நோக்கியா ஆலையிலிருந்து கற்றுக்கொள்வதற்குத் தமிழ்நாட்டிற்குச் சில படிப்பினைகள் இருக்கலாம்.

வெற்றிக்கதை 1: இந்தியாவில் கைப்பேசி இறுதிவடிவமைத்தல்

உலகஅளவில், 2018ஆம் ஆண்டின் கைப்பேசித் தயாரிப்பில் சீனாவைத் தொடர்ந்து இரண்டாவது இடத்திலிருந்த வியட்நாமை, உலகப் பங்களிப்பில் 11 விழுக்காட்டுப் புள்ளிகளோடு இந்தியா வீழ்த்தியது. $230 பில்லியன் மதிப்புள்ள தொழிலை முடுக்கிவிடும் வகையில், 2025ஆம் ஆண்டிற்குள்ளாக ஏறத்தாழ 1.25 பில்லியன் கைப்பேசிகளைப் பல்வேறு அலகுகளில் தயாரிக்கும் ஆற்றலுடையது இந்தியா (India Cellular & Electronics Association and McKinsey, 2018). 2013க்கும் 2017க்கும் இடைப்பட்ட காலத்தில், இந்தியாவின் கைப்பேசி இறக்குமதிகள் US$4.47 பில்லியனிலிருந்து US$3.31 பில்லியனுக்குக் குறைந்த வேளையில், தொலைப்பேசிப் பொருட்களுடைய உதிரிப் பாகங்களின் இறக்குமதியானது US$1.34 பில்லியனிலிருந்து US$9.41 பில்லியனாக நிலையாக அதிகரித்தது. அதே நேரத்தில் கடந்த மூன்றண்டுகளில் தொலைப்பேசிப் பொருட்களின் ஏற்றுமதியும் குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்துள்ளது. இந்தப் போக்கானது, இந்தியா, கைப்பேசிப் பொருட்களின் இறுதிவடிவமைத்தல் மையமாக உருவெடுத்த நிகழ்வோடு சீராகப் பொருந்துகிறது.

வெற்றிக்கதை 2: உலக மதிப்புச் சங்கிலியில் இந்திய தானியங்கு ஊர்தித் தொழில் தன்னை இணைத்துக்கொண்டதிலிருந்து சில படிப்பினைகள்

 2000த்தின் தொடக்கம் முதலே, இந்திய மோட்டார் ஊர்தித் தொழில்துறையானது—அரைநூற்றாண்டு காலத்திற்கும் மேலாகத் தன்னுடைய வழக்கமான உள்நாட்டுச் சந்தைக்காக உற்பத்திச் செய்வதிலிருந்து விலகி உலக உற்பத்தியோடு ஐக்கியமாகி, ஒரு குறிப்பிடத்தக்க உருமாற்றத்திற்கு உள்ளாகியிருக்கிறது. சிறு மகிழுந்துகளின் பிரதான இறுதிப் பொருத்தியமைத்தல் மையமாக இந்நாடு உருவெடுத்துள்ளது (Athukorala & Veeramani, 2019). தயாரிப்பு முழுமைபெற்ற அலகுகளில் இந்தியாவின் ஏற்றுமதியானது, 2001இல் US$225 மில்லியனிலிருந்து 2017இல் US$8.8 பில்லியன்களாக உயர்ந்தது; அதே வேளையில், உதிரி & பாகங்களின் ஏற்றுமதியும் இவ்விரண்டு ஆண்டுகளுக்கிடையே US$408 மில்லியனிலிருந்து US$5.5 பில்லியனாக அதிகரித்தது. 2017இல், US$5.4 பில்லியன் மதிப்பிலான உதிரி & இதர பாகங்களின் இறக்குமதிக்கு ஒப்பாக, பொருத்தியமைக்கப்பட்ட ஊர்திகளின் இறக்குமதி மதிப்பு US$1 பில்லியனில் இருந்தது. இந்தியாவின் மோட்டார் ஊர்திப்பொருள் ஏற்றுமதியில் பொருத்தியமைக்கப்பட்ட மோட்டார் வண்டிகளே பெருவாரியாக இருக்கும் நிலையில், மோட்டார் ஊர்திப் பொருட்களின் மொத்த இறக்குமதியில் உதிரி மற்றும் இதர பாகங்களே பெரும்பாலானவை. இந்தப் போக்கானது, மோட்டார் ஊர்திப் பொருட்களின் பொருத்தியமைத்தல் மையமாக இந்தியா உருவெடுத்த நிகழ்வோடு சீராகப் பொருந்துகிறது.

சுங்கவரி நேர்மாற்றம் (Tariff inversion)

இப்படி வாய்ப்புகள் இருப்பதனால் மட்டும் அவற்றை அடைந்துவிட முடியும் என்று சொல்லமுடியாது. இவ்வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள, இடுபொருட்கள் சந்தை, வணிகக் கொள்கைகள் மற்றும் தொழில் நடத்தும் சுமூகநிலை ஆகியவற்றில் பரந்துபட்ட சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்வது முக்கியம். குறிப்பாக, நேர்மாற்று சுங்கவரி (inverted tariff) மற்றும் உள்நாட்டுத் தொழிற்பாதுகாப்பு (protectionism ) ஆகியவற்றை எதிர்கொண்டாக வேண்டும். உதிரிப் பாகங்களின் வரிவீதத்தைக் காட்டிலும் தயாரிப்பு முழுமையுற்றப் பண்டத்தின் இறக்குமதி வரி வீதம் குறைவாக இருந்தால் அது நேர்மாற்றுச் சுங்கமாகும். அப்படிப்பட்ட அமைப்பொன்று இறக்குமதி செய்யும் நாட்டின் சம்பந்தப்பட்ட உற்பத்திச் செயல்முறையை போட்டியற்றதாக்கிவிடும். இந்தியாவின் ‘நெட்வொர்க்’ தொழிலில் நேர்மாற்றுச் சுங்கம் இருக்கிறதா என்பதைக் கீழ்வருமாறு கணக்கிட்டு அறியலாம்:

தொழில்துறை ஒன்றின் நேர்மாற்றுச் சுங்கம்

= அத்தொழில்துறையில் உள்ளீடுகளுக்கான சுங்கவரியின் நிறையிட்ட சராசரி


    அத்தொழில்துறையில் உற்பத்திக்கான சுங்கவரியின் நிறையிட்ட சராசரி

இவ்விகிதம் 1க்கு அதிகமாக இருந்தால் சுங்கவரி நேர்மாற்றம் இருப்பதாகப் பொருள். உள்ளீட்டு (input tariff)-வெளியீட்டு (output tariff) அட்டவணைகளைப் பயன்படுத்தி வரையப்பட்டுள்ள படம் 3 மற்றும் அட்டவணை 1 ஆகியவை இதைத் தெரிவிக்கின்றன. இதை மேலும் அடிக்கோடிட்டுக் காட்டும் வகையில், சுங்கவரி நேர்மாற்றத்தில் இந்தியாவை சீனாவுடன் ஒப்பிடுகிறது படம் 3.

படம் 3: நேர்மாற்றுச் சுங்கவரி: சீனாவுடன் ஒப்பீடு

அட்டவணை 1: ‘நெட்வொர்க்’ பொருள்களில் நேர்மாற்றுச் சுங்கவரி 

Source. C. Veeramani & Anwesha Basu (forthcoming). Protectionism, tariff inversion and assemble in India: Contradictions of trade policy (IGIDR Working Paper). Indira Gandhi Institute of Development Research.

தமிழ்நாட்டிற்கான முன்னோக்குப் பாதை

தமிழ்நாடு எந்தெந்தத் தொழில்துறைகளின் மீது கவனம் செலுத்த வேண்டும்? உழைப்பு மிகுந்த தொழில்களில் நமக்கிருக்கும் ஒப்பீட்டுச் சாதகத்தினையும், வளர்ந்துவரும் உழைப்பாளர்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கித்தரும் நோக்கத்தினையும் வைத்துப் பார்த்தால், ஏற்றுமதி வளர்ச்சிக்கும் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தவும் பேராற்றல் கொண்டுள்ள இரு வகையான தொழில்கள் உள்ளன (Ministry of Finance, 2020; Veeramani & Dhir, 2016).

முதலாவதாக, தமிழகத்தின் மரபுசார்ந்த குறைந்த திறமையும் உழைப்புமிகுதியும் கொண்ட தொழில்களான ஜவுளி, ஆடை, பொம்மைகள் மற்றும் தோல் பொருட்கள் (காலணிகள் உட்பட) ஆகியவற்றில் இன்னும் பயன்படுத்தப்படாத ஏற்றுமதிக்கான ஆற்றலிருக்கிறது. வாங்குபவர்-சார்ந்த குழுக்களால் இத்தொழில்களின் உலக மதிப்புச் சங்கிலிகள் கட்டுப்படுத்தப்படுகின்றன; அதனுள் தலைமைவகிக்கும்  வளர்ந்த நாடுகளை அகமாகக் கொண்ட நிறுவனங்களானவை, வடிவமைப்பு, வணிக அடையாளப்படுத்தல், மற்றும் சந்தைப் படுத்தல் ஆகிய உயர் மதிப்புக் கூட்டுச் செயற்பாடுகளில் கவனம் செலுத்துவன. உள் ஒப்பந்த ஏற்பாடுகள் மூலம், பொருளுற்பத்தியானது வளரும் நாடுகளிலுள்ள நிறுவனங்களால் மேற்கொள்ளப்படுகிறது. வால்மார்ட் (Walmart), நைக் (Nike) மற்றும் கார்ஸ்டாட் (Karstadt) ஆகியவற்றின் உற்பத்திப் பின்னலமைப்புகள் இதன் எடுத்துக்காட்டுகளாகும்.

இரண்டாவதாக, ‘நெட்வொர்க்’ தொழில்சார் பொருட்களின் இறுதிப் பொருத்தியமைத்தலில் பெருமையமாக உருவெடுக்கும் பேராற்றல் தமிழ்நாட்டிற்கு உள்ளது. உற்பத்தியாளர்-சார்ந்த குழுக்களுக்குள், ஆப்பிள் (Apple), சாம்சங் (Samsung) மற்றும் சோனி (Sony) போன்ற பெரிய பன்னாட்டு நிறுவனங்களால் இத்தொழில்களுடைய உலக மதிப்புச் சங்கிலிகள் கட்டுப்படுத்தப்படுகின்றன. பொதுவாக, தொடக்கம் முதல் நிறைவு வரை ஒரே நாட்டில் இப்பண்டங்கள் உற்பத்தியாவதில்லை; மாறாக, நாடுகள் ஒவ்வொன்றும், பொருளுற்பத்தித் தொடரின் குறிப்பிட்ட பணிகளிலோ படிநிலைகளிலோ தனித்தேர்ச்சிப் பெற்றிருப்பன. உற்பத்திப் பின்னலமைப்பிற்குள், உற்பத்திச் செயல்முறையின் குறிப்பிட்ட உறுப்புப்பகுதிகளில் நாடுகள் ஓவ்வொன்றும் தனித்தேர்ச்சிப் பெறுவன; இத்தனித்தேர்ச்சியானது அந்தந்த நாடுகளின் ஒப்பீட்டுச் சாதகங்களைச் சார்ந்திருக்கும். சீனாவைப் போன்ற தொழிலாளர்கள் மிகுந்த நாடுகள், திறம்குறைவானதும் உழைப்பு-மிக்கதுமான—பொருத்தியமைத்தல் போன்ற உற்பத்திப் படிநிலைகளில் தனித்தேர்ச்சியடைவன; அதேநிலையில், பணமுள்ள நாடுகள் முதல் மற்றும் திறன் மிகுந்த—ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுச் செயற்பாடுகளைப் போன்ற படிநிலைகளில் தனித்தேர்ச்சிப் பெறுவன. ஆக, உற்பத்தியில் திறமையும் அறிவும் மிகுந்த படிநிலைகளை பெருநிறுவனங்கள் உயர்வருமானத் தலைமையகங்களில் (எ.கா. அமெரிக்க ஐக்கியம், ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான்) தக்கவைத்துக் கொண்டு, பொருத்தியமைத்தல் போன்ற செயற்பாடுகளை மட்டும் கூலி குறைந்துள்ள நாடுகளில் (எ.கா. சீனா, வியட்நாம்) இருத்தி வைக்கின்றன. பொதுத்தரப் பன்னாட்டு வணிக வகைப்பாட்டு மொழியின் (Standard International Trade Classification—SITC nomenclature) அடிப்படையில், உலக உற்பத்திப் பகிர்வு பெருமளவில் நிலவுகின்ற ஆறு வகைப்பட்ட ‘நெட்வார்க்’ தொழில்சார் பொருட்களை ஆராய்ச்சியாளர்கள் இனங்கண்டிருக்கிறார்கள் (அட்டவணை 2இல் காண்க).

மொத்தத்தில், 2018இல் உலக ஏற்றுமதியில் ‘நெட்வொர்க்’ தொழில்சார் பொருட்கள் ஏறத்தாழ 30% வகித்தன; அதில் அதிகபட்சமாக 10.4% அளவிற்கு மின்பொறியின் பங்களிப்பாகும். ‘நெட்வொர்க்’ தொழில்சார் பொருட்களின் மொத்த வணிகத்தை, உதிரிகள் & பாகங்கள் மற்றும் பொருத்தியமைக்கப்பட்ட இறுதிப் பொருள்கள் என அதன் இரு பிரதான உள்வகைகளாகப் பிரிக்க முடியும் (அட்டவணை 2இல் காண்க).

அட்டவணை 2: ‘நெட்வொர்க்’ தொழில்சார் பொருட்களின் உலக ஏற்றுமதிகள்

Source. C. Veeramani & Garima Dhir. 2019b. Dynamics and determinants of fragmentation trade: Asian countries in comparative and long-term perspective (IGIDR Working Paper No. WP-2019-040); Ministry of Finance. 2020. Creating jobs and growth by specializing to exports in network products (Chapter 5). In Economic survey 2019–20. Government of India.

‘நெட்வொர்க்’ தொழில்சார் பொருள்களின் உலக ஏற்றுமதிகள், 2000ஆம் ஆண்டில் US$ 2.01 டிரில்லியனிலிருந்து 2018ஆம் ஆண்டில் US$ 5.41 டிரில்லியனுக்குச் சீராக அதிகரித்தன. இந்த அதிகரிப்புக்கு முக்கியக் காரணம், US$ 1.11 டிரில்லியனிலிருந்து US$ 3.93 டிரில்லியனுக்கு உயர்ந்த பொருத்தியமைக்கப்பட்ட இறுதிப் பண்டங்களாகும். உலகின் உற்பத்திப் பொருட்களின் ஏற்றுமதியில், இவை சராசரியாக 42% வகிப்பன. மொத்த ஏற்றுமதியில் பொருத்தியமைக்கப்பட்ட இறுதிப் பொருள்கள் ஏற்றுமதியின் சராசரிப் பங்களிப்பு 2000 முதல் 2016ஆம் ஆண்டு வரை கிட்டத்தட்ட 59% அளவிற்கும், கடந்த ஈராண்டுகளில் (2017, 2018) மட்டும் 72% அளவிற்கும் உயர்ந்துள்ளது. ‘நெட்வொர்க்’ தொழில்சார் பொருள்கள் ஏற்றுமதியில் ஆசியாவின் சராசரிப் பங்கு 2000ஆம் ஆண்டில் 37%இலிருந்து 2018இல் 51%ஆகச் சிறப்பாக அதிகரித்துள்ளது; இதேவேளையில் ஐரோப்பா மற்றும் அமெரிக்கா ஆகியவற்றின் பங்களிப்புகள் சரிந்துள்ளன. ஆசியாவின் மொத்த ஏற்றுமதிகளில் பெருமளவு கிழக்காசியாவையும், அதைத் தொடர்ந்து தென்கிழக்காசியாவையும் சேரும். ஆசியாவின் மொத்த ஏற்றுமதிகளில் ஆசியாவின் ஏனைய பகுதிகளின் பங்கு (தெற்கு, மத்திய மற்றும் மேற்கு ஆசியா ஆகியவை உட்பட) வெறும் 3% மட்டுமே ஆகும்.

இளம் மக்கள்திரளின் அமைப்பையும், ஊதியம் அதிகமுள்ள வேலைகளைத் தேடும் மக்களின் முனைப்பையும் கருதி, ’உலகிற்காக தமிழ்நாட்டில் பொருத்தியமை’க்கும் திட்டத்தை ஆராய்ந்து செயல்படலாம். வணிகக் கொள்கை மத்திய அரசின் அதிகார வரம்பிலிருப்பதும், நேர்மாற்றுச் சுங்கவரிகளைக் கையாள—சுங்க வரி வீதங்களை மாற்றியமைக்கும் நிலையில் மாநில அரசுகள் இல்லை என்பதும் உண்மையே. ஆயினும், ஏற்றுமதி செய்யும் நோக்கில் இறக்குமதி செய்யப்படும் இடையினப் பண்டங்களுக்காக, சுங்கத் தீர்வைகளற்ற ஏற்றுமதி செயலாக்க மண்டலங்களை (Export Processing Zones) மாநில அரசுகள் அமைத்துத் தரலாம். தொழிலாளர் சட்டங்களில் தளர்வுகளையும் இம்மண்டலங்கள் வழங்கவேண்டும்.

நீண்ட கடற்கரைப் பகுதியைக் கொண்டு, கிழக்காசியா மற்றும் ஆசியக் குழும நாடுகள் ஆகியவற்றுடனான உற்பத்திப் பின்னல்களுடன் நன்றாகத் தன்னை இணைத்துக் கொள்வதற்கு வசதியாகத் தமிழ்நாடு அமைந்துள்ளது. தேவையான வசதிகளுடன் நன்றாக இயங்கக்கூடிய ஏற்றுமதிச் செயலாக்க மண்டலங்களை அமைப்பது தவிர, மாநிலத்தின் பிற பகுதிகளுடனும், நாட்டின் மற்ற பகுதிகளுடனுமான இம்மண்டலங்களின் இணைப்புகளை மேம்படுத்துவதிலும் தமிழ்நாடு முதலீடு செய்யவேண்டும். சேவையிணைப்புச் செலவையும், தமிழ்நாடின் உற்பத்திப் படிநிலைகளைப் பிறநாடுகளினுடையவற்றுடன்—குறிப்பாக கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவுடன் இணைக்கும் செலவினையும் குறைப்பதில் இம்மாநிலம் முதலீடு செய்யவேண்டும்.

குறிப்பிடப்பட்டுள்ள கட்டுரைகள்:

Beata Javorcik. 2020. Global supply chains will not be the same in the post-COVID-19 world. In Richard Baldwin & Simon J. Evenett (Eds.), COVID-19 and trade policy: Why turning inward won’t work. CEPR Press.

Mary Amiti, Stephen J. Redding, & David Weinstein. 2019. The impact of the 2018 trade war on U.S. prices and welfare (NBER Working Paper No. 25672). National Bureau of Economic Research.

P.G. Babu, Vikas Kumar, & Poonam Singh. 2020. ’Employment and Covid-19: Trends and issues in Tamil Nadu’. MIDS Occasional Policy Paper (Covid-19 Series), No. 11, Madras Institute of Development Studies.

Marzia Fontana. 2009. The gender effects of trade liberalization in developing countries: A review of the literature. In Maurizio Bussolo and Rafael E. De Hoyos (Eds.), Gender aspects of the trade and poverty nexus: A micro-macro approach. Palgrave Macmillan.

Ministry of Finance. 2020. Economic survey 2019–20. Government of India.

C. Veeramani & Garima Dhir. 2016. India’s export of unskilled labour-intensive products: A comparative analysis. In C. Veeramani & R. Nagaraj (Eds.), International trade and industrial development in India: Emerging trends, patterns and issues. Orient Blackswan.

Article

வேலைவாய்ப்புகளுக்காக தமிழ்நாட்டில் தொழிற்பேட்டைகளைத் தக்கவைத்தல் (திருப்பூரிலிருந்து கிடைத்த சில கொள்கைப் பாடங்கள்) – எம். விஜயபாஸ்கர் (தமிழில் தா.சந்திரகுரு)

சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம் கோவிட் -19 நிலைமைகளை முன்னிட்டு தொடராகப் பல கட்டுரைகளை வெளியிட்டு வருகிறது. இதில் வேலைவாய்ப்புகளுக்காக...
Article

தத்துவராயர் அடிச்சுவட்டில் ஒரு பயணம் – தமிழ்நாட்டின் வேதாந்த மூலகர்த்தர்: ரெங்கையா முருகன்

  மனோன்மணியம் கோடகநல்லூர் சுந்தரசுவாமிகள் குறித்து தமிழகத்திற்கு பெரிய அறிமுகம் தேவையில்லை.அவரது குரு கோடகநல்லூர் சுந்தர சுவாமிகள். சுந்தரம் பிள்ளைக்கு...
நேர்காணல்

நேர்காணல்: தமிழ்நாட்டிற்குள் நுழைவதற்கு பாஜக தன்னையே மாற்றிக் கொள்ள வேண்டியிருக்கும் – கலையரசன் (தமிழில் தா.சந்திரகுரு)

  பாரதிய ஜனதா கட்சியின் ஹிந்துத்துவ சித்தாந்தம் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் கவர்ச்சிக்கு எதிரான எதிர்ப்பில், இந்திய மாநிலங்களுக்கிடையே...